கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 9,106 
 
 

கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது.

புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது.

‘மச்சுப்படி யேறி இவ்வளவு தூரம் வரவா போகிறாள் என்று இங்கேயே வந்து ஒளிஞ்சுக்கிடுதயாக்கும். நானும் வந்து பத்துநாளா எதிர்த்த வீட்டில நடமாடிக்கிட்டிருக்கேன். தலையே தென்படலை’–லோகா மதினி உள்ளேயே வந்து விட்டாள்.

தேசிகன் பதறினது போல, இலேசாகப் படிந்திருந்த புல்லாங்குழல் எச்சியை உடுத்தின சாரத்தில் தேய்த்துக் கொண்டு கட்டிலை விட்டுப் படக்கென எழுந்தான். கட்டிலில் படுத்தவாறு பீடியை நசுக்கி நசுக்கி கைக்கெட்டின தூரம் எல்லாம் கட்டிலின் அடியில் கரும்புள்ளி, பக்கவாட்டில் கட்டில் கால் முழுவதும் பீடி, சிகரெட் தழும்புகள், கொடி, மடக்கு நாற்காலி, ஜன்னல் கதவு என்று சட்டையைத் தேடினது பார்வை.

‘அண்ணா அந்த வட பக்கத்துக் கதவுல தொங்குது’ லோகா முகத்தால் காட்டிச் சொன்னதும் எழுந்து அவன் போட்டுக் கொண்டு வரும்போது–

‘பிள்ளைகள் எல்லாம் என்னமா இருக்கு. ஆஸாத் பயில்வான் மாதிரி’ என்று மறுபடி சொன்னாள். குரலில் மிகுந்த துயரம் இருந்தது. அவனுடைய மெலிவும் தனிமையும் ஒதுங்கலும் கேள்விப் பட்டுத் தாங்க முடியாமல் தான் வந்திருக்கிறான்.

‘எப்ப மதினி வந்தீங்க?’

‘எப்ப வந்தேனா. நாளைக்குக் காலம்பற போப்போறேன். வந்து சனிக்கிழமையோட ரெண்டு வாரமாகப்போகுது. புள்ளைகளுக்கு நாலாம் தேதி பள்ளிக்கூடம் திறக்குல்லா”

‘புள்ளைகள்ளாம் நல்லாருக்கா…மதினி’ இதைக் கேட்பதற்காக முகத்தைத் தேடி நிமிர்ந்த தேசிகனைச் சரியாக வாங்கி அந்த வினாடியிலேயே நிறுத்திக் கேட்டாள்.

‘நீ எப்படி இருக்க முதல்லே?’

‘அதுதான் இருக்கம்லா’, தேசிகனுக்குச் சட்டென்று கண்கள் நிறைந்து விட்டது. எழுந்திருந்து அவன் ஜன்னல் பக்கம் போகும்போது, நடை சொடக்குப் போட்டது. வாரப் பத்திரிகையொன்று காலில் பட்டு குப்புறச் சரிந்தது.

எதிர்த்த வீட்டுக்கு கலியாணம் ஆகி வந்து எட்டு வருஷம் ஆயிற்று என்றாலும், லோகா இந்த மச்சு ஜன்னல் பக்கம் பகலில் வந்ததில்லை. ஒரு தடவை கல்யாணம் ஆன புதிதில் இந்த வளவுப் பெண் பிள்ளைகள் எல்லோருமாக ராத்திரி இந்த ஜன்னலுக்குப் பக்கமாக உட்கார்ந்து தேவராஜன் கெளரி கச்சேரி கேட்டிருக்கிறார்கள். இன்னோர் நாள் இதே மாதிரி தசராவுக்குக் கும்பக் குடம் பார்த்தார்கள். அது இதுக்கு நேரே, கீழே, தெருவை ஒட்டிய நாலாம் கட்டு ஜன்னல் வழியாக.

வெயில் நேரத்தில், தெருவின் மேல் பக்கம் கடைசி வரை தெரிந்தது. தெரு பம்ப். முருங்கை மரத்து ஆயா வீடு. கந்தையாப் பிள்ளை வீடு. முக்குத் திரும்புகிற இடத்தில் மில்லுப்பிள்ளை வீட்டுக் குதிரை வண்டி ஷெட். எல்லாம் பளிச்சென்றிருந்தது. கச்சேரி வாசல் சோப்புக் காய் மரம் சீட்டுக்கட்டுக்கிளாவர் மாதிரி நின்றது. பச்சைக் கிளாவர் கோட்டிக்காரச் சொக்கனைக் காணோம். இவனையும் இவன் தாடியையும் பிடரி முழுவதும் வழிகிற தலைமுடியையும் பார்த்தால் கோட்டிக்காரன் மாதிரி தான் இருக்கிறான்.

‘என்ன தேசீ, சர்வீஸ் கமிஷன் எழுதப் போறயா ?’ மேஜை மேல் கவிழ்ந்திருந்த புத்தகத்தை எடுத்தபடி லோகா கேட்டாள்.

‘ஆமா. அஞ்சு வருஷமா எல்லாப் பரீட்சையும் எழுதி எழுதி ஆர்டர் வந்து குவிஞ்சுட்டுது. இதையும் எழுதீருவோம்னு படிக்கேன். கலெக்டர் நாற்காலியை நான் பரீட்சை எழுதட்டும்ணு காலி பண்ணி வச்சிருக்காங்களாம்’

லோகாவைப் பார்க்காமல், இன்னும் ஜன்னல் கம்பியின் துரு ஏறிய திண்மையில் விரலைச் சுண்டிக் கொண்டிருந்தான். நாலு கம்பியிலும் விரல் வேகமாக வழிந்து ஒரு இசையின் துவக்கம் போலச் சப்தம் மறுபடி மறுபடி எழுந்தது. இந்த இயக்கத்திற்கு சம்பந்தமில்லாது ஓடுகிற ஒரு கசந்த நாடா போல அவனுடைய பேச்சிருந்தது. இந்த இசைதான் இவனைத் தாங்கி முட்டுக் கொடுத்து வருகிறதா சாயாமல் ?

லோகா வரும்போது வாசித்த புல்லாங்குழல் நன்றாகவே இருந்தது. இந்தப் பத்து நாட்கள் நிறைய மத்தியானங்களில் அவள் இதைக் கேட்டு விட்டாள்.

அல்லும் பகலும் இதே கதிண்ணு கிடக்கான். ஏதோ நம்மளால் ஏண்டதைப் படிக்க வச்சோம். பாட வச்சோம். அது அது ஒரு வழியைப் பார்த்தது. கரையேறிப் போச்சுண்ணு இருந்தால் அல்லவா நமக்கு நிம்மதி. மூத்ததை வச்சுக்கிட்டு இளையதைக் கட்டி கொடுத்தது மாதிரி இவன் இப்படி அஞ்சு வருஷமா வேலையில்லாமல் திகைச்சு நிக்கான். சின்னவனுக்குப் படிப்பு முடிஞ்சுதும் ரெடியாய் வேலை கிடைச்சுப் போயிட்டான். இதுக்கு நாம என்ன பண்ண முடியும். ஏதோ வேலையை நாமதான் மடியில் கட்டி ஒளிச்சு வச்சிருந்தது மாதிரியும் அவனுக்குக் கொடுக்காமல் இளையவனுக்கு உள்ளங்கையிலே பொத்தி எடுத்துக் கொடுத்துட்டதாயும் அவனுக்குத் தோணுது….என்ன பண்ண’

தேசிகனுடைய அம்மாவுக்கு எப்போதுமே நீளமான பேச்சு தான். தொழுவத்துக்கு வைக்கோல் போடும்போது பார்த்தாலும் கல்யாண வீட்டுப் பந்தியில் பக்கத்தில் உட்கார்ந்தாலும் வாசலில் வந்து நிற்கிற குரங்காட்டிக்குச் சோறுபோடும் போதும் இதே நீளாமான பேச்சுத்தான். லோகாவைப் பிடித்துப் போனதற்குக் காரணம் கூட லோகா கொஞ்சம் எல்லோரிடமும் மடமடவென்று பேசுகிறதாலும் இருக்கலாம்.

‘அல்லும் பகலும் வயலு வரப்புண்ணு காத்துக் கிடக்கிற அவுகளுக்கு நெல்லு விலை புல்லு விலைத் தவிர வேறு வெளிப் பழக்கம் ஜாஸ்தி கிடையாது. அப்படியும் அவுக எப்படியும் போண்ணு உதறியும் விட்டிரலை. உன்னி உன்னிப் பார்க்கத்தான் செய்தாக. ஆனா இவன் என்னமோ எல்லோரும் இவனைக் கழுவிக் கவிழ்த்திட்ட மாதிரியே நினைக்கான். அவனைச் சொல்லியும் குத்தமில்லை. இளைப்புக்காரன் மாதிரி நடக்கவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் அப்படியொரு அவஸ்தை தான் இது’

லோகாவை முன்னால் வைத்துக் கொண்டு இப்படி தேசிகனிடம் பேசுவது போலவும் தேசிகன் பதில் சொல்லுவது போலவும் பேசிக் கொண்டே போவது கூட ஒரு வடிகால்தான். வேறு ஒன்றும் முடியாவிட்டாலும் கேட்டுக் கொண்டாவது இருப்போம் என்று கதவில் லோகா சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

கதவில் கார்த்திகைக்கு அடித்த மாக்கை அடையாளம் பழுப்பாகிக் குங்குமத்துடனிருந்தது. கைரேகை மாதிரி விரல்களை விரித்துப் பதித்திருந்த மாக்கையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டு முன்று கோடாக வழிந்திருந்ததைச் சுரண்டிச் சுரண்டித் திருத்தமாக்கினாள்.

‘உங்க வீட்டுத் தம்பி கிட்டேயும் சொல்லு. ஏதாவது அவன் காரியமா ஒரு ஏற்பாடு பண்ண முடியுதாண்ணு பார்ப்போம். நாலு பேரா நாலு திசையில் முயற்சி செஞ்சோம்னா பத்தில் ஒரு காரியம் விடியாதா ? வேலைன்னு ஒரு இடத்திலே உட்கார்ந்தால்தான் ஒரு நல்லது கெட்டதுன்னு இவனை நம்பிச் செய்ய முடியும். வயசும் ஆகி விட்டுதுல்லா?’.

லோகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.’மொதல்லே வேலைக்கு இல்லியா வழி பண்ணனும். அதை விட்டுட்டுக் கல்யாணத்தைப் பற்றி ஆரம்பிச்சிட்டாங்க’

‘என்ன பண்ண. சின்னவன் வேலைக்குப் போயிட்டாண்ணு தெரிஞ்சதும் நாலஞ்சு பொண்ணு வீட்டில இருந்து சொல்லி வந்துட்டாங்க. நிறையச் செய்கிற கொள்கிற இடமாகவும் இருக்கு. என்னத்தையும் ஒரு பேருக்கு இரு நூறு முன்னூறு சம்பாதிச்சாக் கூட முன்னனை பின்னனையா ரெண்டு பேருக்கும் கல்யாணம் வச்சிரலாம். என்ன இருந்தாலும் சின்னவன் யோகம் தனிதான். அது இவனுக்கு வராது.’

லோகாவுக்கு கேட்க கேட்கச் சங்கடமாக இருந்தது. தேசிகன் காதிலும் இதெல்லாம் விழத்தான் செய்யும். இத்தனை வருஷம் சும்மா இருப்பது; தனக்கு முன்னே தம்பி வேலைக்குப் போனது. தம்பிக்குப் பெண் சொல்லி வருவது இவை எல்லாவற்றையும் விடப் பெற்றவளே யோகத்தைப் பற்றிப் பேசுவது அவனுக்கு எவ்வளவு துயரம் தருவது. லோகாவுக்கு தேசிகனைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிற புல்லாங்குழல் சத்தத்தையே நூலேணி மாதிரிப் பற்றிக் கொண்டு மேலே போய்ப் பார்த்து விடலாம்.

‘தேசி மேலே தானே இருக்கான்?’ லோகா எழுந்திருந்தால். அடுப்பங்கரையிலிருந்து ஒரு ஏணிப்படி மச்சுக்கு உண்டு என்பதால் உள்பக்கம் போக லோகா ஏற்பட்டதைத் தடுப்பது போல.

‘வெளிப்படி வழியாப் போ. இங்கே பூட்டியிருப்பான். பூட்டிக்கிட்டு இருட்டுற வரைக்கும் தொண்டை தண்ணி வற்றுகிற மாதிரி இதையே ஊதிக்கிட்டிருப்பான்’ தேசிகனின் அம்மாவும் எழுந்திருந்தாள்.

இதைக் கேட்டதும் லோகாவுக்கு எரிச்சலே வந்து விட்டது. பேசியது போதும் என்று தோன்றியது. படியேறுவதற்காக வெளியே வந்தாள்.

டானா மாதிரி மேல் நோக்கி மடங்குகிற கல் படிகள் படியில் காரை பெயர்ந்த இடங்களில் எல்லாம் நெல் மணி புகுந்து கிடந்தது. அறுப்பு முடிந்த போதெல்லாம் ஒரு தனிஒயரில் கரண்ட் இழுத்து பல்பு போட்டு மூட்டைகளை மேலே கொண்டு போவதை லோகா கல்யாணம் ஆகிவந்த சமயம் ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறாள். அந்த ராத்திரியிலும் மூட்டையை ஏந்தின முதுகுகளில் வியர்வை வழியும். முகம் என்கிற உறுப்பே இல்லாதது போலக் குனிந்து மூட்டைக்குக் கீழே முதுகும் கால்களும் மட்டுமே தெரிய மேலே போகும். லோகாவுக்கு மேல் தேசிகனை பற்றிய கவலையெல்லாம் கனமாக இருந்து மூட்டையாக அழுத்த, அவள் பெருமூச்சுடன் மேலே வந்து கதவைத் தள்ளியதும்தான் புல்லாங்குழல் நின்றது.

‘தேசீ, புல்லாங்குழல் வாசிப்பு, ரொம்ப நல்லாருக்கு’

‘கிண்டல் பண்ணுறீங்களா மதினி?’

‘கிண்டல் பண்ணுகிறதுக்கு யாராவது இப்படி மச்சுப் படியேறியா வருவாங்க?’

தேசிகன் ஜன்னலை விட்டுத் திரும்பினான். மறுபடியும் மளுக்கென்று கண் நிறைந்தது. பார்வை ஒரு நிமிஷம் ஜொலித்தது. மேஜையில் டிரான்சிஸ்டர் பக்கம் இருந்த புல்லாங்குழலைக் கையில் எடுத்து உருவித் துடைத்தான். வாசிக்கப் போவது போன்ற ஒரு நிமிடத்தை அருகில் கொண்டு வந்துவிட்டு வாசிக்காமல் மேஜையில் வைத்தான். குழல் சற்று உருண்டு தீப்பெட்டி தடுக்கி நின்றது.

‘முதல்லே அண்ணங் கிட்டச் சொல்லி ஒரு வேலை பார்த்துக் கொடுங்கள் மதினி’

‘இப்படி உட்கார்ந்து பேசேன் தேசி’

லோகா சுவரில் சாய்ந்து கீழே உட்கார, தேசிகன் அந்த அழகான உறுதியான பழங்காலத்து தேக்கு நாற்காலியில் உட்கார்ந்தான். நாற்காலியின் திசை ஒரு புறமும் இவன் உடம்பு ஒரு புறமுமாகத் திரும்பியிருக்க நிலைக் கண்ணாடியில் பிரதிபலித்த தேசிகனின் உருவம் நிரம்பச் சோகம் தருவதாக இருந்தது.

‘ப்ரைவேட் கம்பெனியில் ஏதாவது ஏற்பாடு பண்ணினால் செய்வியா ? சம்பளம் அதிகம் எதிர் பார்க்கமுடியாது’

‘சம்பளத்தைப் பத்திக் கூட ஒண்ணுமில்லை. நம்மளை நடத்துகிற முறை தான் சகிச்சுக்க முடியலை. ஒரு மொசைக் கம்பெனியிலே சேர்ந்தேன்….கிளார்க்குன்னு தான் பேரு,’ஏ…போய் நாலு டா வாங்கிக் கிட்டு வந்திருடே’ ண்ணு முதலாளி சொல்வாரு. அதையும் செய்யத்தான் செய்தேன். செய்யாமல் இல்லை. ஆனால் டா வாங்கிக் கொடுக்கறதே பொழைப்பா எத்தனை நாளைக்கு வேலை பார்க்க முடியும்…? அஞ்சு வருஷம் சும்மா இருந்ததே இருந்தாச்சு. கடைசி அட்டெம்ப்டா இந்த சர்வீஸ் கமிஷன் பரீட்சையை வச்சிருக்கேன். தயார் பண்ணிக்கிட்டும் இருக்கேன். எம்.எல்.ஏ, எம்.பி.ண்ணு ஆளுக்கு ரெண்டா அதையும் கொத்திக்கிட்டுக் போயிட்டாங்க என்றால் நமக்கு கடைசியில ஒண்ணும் நாதியிருக்காது’–கறுத்து நீலமான கீழுதடு பேச்சில் அதிகமாகப் பிதுங்கிப் பிரிந்து அசைந்தது. ஒரே சீராக இல்லாமல் கொஞ்சம் கன்னத்துப் பக்கமும் முகவாயிலும் மட்டும் சிலும்பல் சிலும்பலாகத் தாடி முளைத்து ஒரு வினோதமான நிழலை முகத்தில் தருவித்திருந்தது.

‘அதுக்காக நாம படிக்காம இருக்க முடியுமா. தொடர்ந்து படிச்சிக்கிட்டு வா. நான் அத்தான் கிட்டேயும் சொல்லுதேன். எங்க பொள்ளாச்சி அண்ணாச்சிக்கிட்டேயும் சொல்லுதேன். நடக்கிறது நடக்கட்டும்.’

‘அதான், இந்த அஞ்சு வருஷமாத் தான் நடந்து கிட்டு இருக்கே. புதுசாவா இனியும் எதுவும் நடக்கப்போவுது சொல்லிக் கொண்டே’ம்ஹ்உம்’ என்று தேசிகன் சிரித்தான். ஒரு பெரு மூச்சுப் போலவும் எதையோ விழுங்கி திணறி தொண்டையில் சிக்கி நிற்பது போலவும் எல்லாம் அந்தச் சின்ன முனகலான ஒலி கேட்டு லோகாவை இம்சித்தது.

இந்த இம்சைக்கு மத்தியில், இதற்குச் சம்பந்தமே அற்றது போன்ற ஒரு ஞாபகம் பீறிட்டு வர லோகா சற்று மலர்ந்து கேட்டாள்.

‘என்ன தேசீ, அன்னிவர்சிக்கு வாழ்த்து அனுப்பிக்கிறதையெல்லாம் நிறுத்திட்டா? தேதியைக் கரக்டா ஞாபகம் வச்சு, நீ ஒருத்தன் தான் மறக்காம அனுப்புவே’

சந்தோஷமான ஞாபகங்களைப் பின்னோக்கிப் பார்க்கத் தடையாக இருந்த அகழியொன்றைத் தாண்டி விட்டது போல் தேசிகன் இதைக் கேட்டதும் மெளனமாக இருந்தான். முகத்தின் இறுக்கம் தளர்ந்து கொண்டே வந்து ஒரு மிகக் குறைந்த சிரிப்பின் முடிச்சைத் தட்டி நின்றது.

’27 ஆகஸ்ட்’ என்று மட்டும் கூறினான். மறுபடி கேட்டான்.

‘உங்க சிஸ்டர் காலேஜை முடிச்சிட்டாங்க இல்லை?’

‘யாரு பாலாவா? ரெண்டாவது வருஷம்தானே எழுதியிருக்கா?’ கதவைத் திறந்து கொண்டு இந்த அறைக்குள் வந்தவுடன் தேசிகனின் முகத்திற்கும் இப்போதைய முகத்திற்கும் உள்ள மாறுதலைப் பார்த்தபடியே லோகா எழுந்திருந்தாள்.

‘ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டேன்’–மறுபடியும் லோகா அந்த ஜன்னல் பக்கம் வந்து நின்று தெருவைப் பார்த்தாள். பளீர் என்கிற வெய்யிலில் தெருவே அசையாமல் நின்றது. முக்கு பம்ப்பின் மேல் ஒரு காக்கை இருந்து கத்த கீழே தேங்கின தண்ணீரிலும் பாசியிலுமாக அமிழ்ந்து கிழட்டு நாய் நாக்கு தொங்கப் படுத்திருந்தது.

‘தைரியமா இரு தேசீ’

தேசிகன் சிரித்தான்.

‘இதையும் விட்டிர வேண்டாம்.’ லோகா மேஜை மேல் இருந்த கனமற்ற அந்த மூங்கில் குழலைக் கையில் எடுத்தாள். அதே கவனத்துடன் மறுபடி வைத்தாள்.

தேசிகன் ஒப்புதலாக அதற்கும் சிரித்தான்.

‘வாசிக்கிறதே வாசிக்கே கதவையெல்லாம் திறந்து வச்சுக்கிட்டு வாசி’ லோகா சொல்லிக் கொண்டே கதவுப் பக்கம் போனாள். விடை கொடுக்கிறது போலத் தேசிகன் சற்று முன்னகர்ந்து நின்றான். பாதி திரும்பின நிலையில் தேசிகனையும் பார்த்து முகம் காட்டின படி.

‘காற்று, வெளிச்சம் மனுஷங்க இதெல்லாம் எப்பவுமே முக்கியமானதில்லையா?’ என்று ஒவ்வொரு படியாக இறங்க ஆரம்பித்தாள்.

தேசிகன் கதவைப் பார்த்தான். பாதி அடைத்தது போலவும் பாதி திறந்தது போலவும் ஒரே நேரத்தில் தோன்றும்படியாக அது உட்பக்கம் சாய்ந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *