திருடனாய் வந்த பரமாத்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 1,392 
 
 

அந்த ஏரியாவில் பங்களாக்கள் அதிகமாக இருந்த குடியிருப்பில் அடிக்கடி கொள்ளை நடப்பதாக வந்த புகார்கள் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த வண்னம் இருந்தன..

இரவு நேரம் தன் மனைவியிடம் இனிமேல் வாழ்வதில் எந்த லாபமுமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான் ஏழுமலை. ஏழுமலையின் மனைவி யமுனா, தன் கணவனிடம் அதுக்காக தற்கொலை பண்ணிக்க முடியுமா? என்று கேட்டாள்.

அதையே சட்டென்று பிடித்துக்கொண்டான் ஏழுமலை, வேற வழியில்லை யமுனா, இப்பவே எல்லாம் கடன்ல போயிடுச்சு. நாளைக்கே கூட இந்த பங்களாவை சீல் வச்சுடலாம், அதுக்கப்புறம் இந்த முகத்தை எப்படி வெளியில காட்டுவேன், புலம்பினான் ஏழுமலை.

ஏங்க தெரிஞ்சுதான் பேசறீங்களா? நமக்கு இரண்டு குழந்தைக இருக்கு, அதுக இப்பத்தான் படிச்சுகிட்டு இருக்காங்க, இப்ப போயி சுத்த கோழையாட்டம் பேசறீங்க, கணவனிடம் காரசாரமாய் பேசினாள் யமுனா.

அவன் எதற்கும் அசராமல் அதை பற்றியே பேசிக்கொண்டிருக்கவும், யமுனாவுக்கு பயமாகி விட்டது. இந்த கோழை ஏதேனும் செய்தாலும் செய்து விடுவான். இப்பொழுது இவனை எப்படி வேறு வழிக்கு திருப்புவது என்று தெரியாமல் திகைத்தாள் யமுனா.

போனை எடுத்து தன் அப்பா, அம்மாவிடமோ, அல்லது இவன் பெற்றோர்களிடமோ பேசலாம் என்றால் உள்ளே போய் செல்லை எடுத்து பேச வேண்டும். அதற்குள் இந்த கிறுக்கன் கதவை அடைத்து கொண்டு ஏதாவது செய்து கொள்வானோ? நேரம் மணியோ பதினொன்றுக்கு மேல் இருக்கும்.

சரி முதல்ல வந்து படுங்க, அப்புறம் மத்ததை பத்தி யோசிக்கலாம் அவனை கையை பிடித்து இழுத்தாள். அவன் இடத்தை விட்டு நகராமல் யோசனையுடனே நின்றான். யமுனாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகள் உள் அறையில் தூங்கி கொண்டிருந்தார்கள்.

பின் புறம் “தொம்” என்ற சத்தம் கேட்டது, யாரோ உள் புறமாக குதிக்கும் சத்தம், அந்த நேரத்தில் திகிலை வரவழைப்பதற்கு பதிலாக யமுனாவுக்கு ஒரு தைரியத்தையே கொடுத்தது. ஏங்க யாரோ பின்னாடி காம்பவுண்டுகுள்ள குதிச்ச மாதிரி இருக்கு யாருன்னு பாருங்க. கணவனை உசுப்பினாள்.

வாட்ச்மேனுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை என்று மூன்று மாதத்திற்கு முன்னரே நிறுத்தியிருந்தார்கள். ஏழுமலைக்கு அந்த நேரத்திலும் சின்ன சிரிப்பு வந்தது. நாம வாழ்க்கையை முடிச்சுக்கலாமுன்னு நினைக்கற போது நம்ம கிட்டே பணம் இருக்குன்னு எவனோ திருடன் வந்துருக்கான். மெல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்து சிறிது தூரம் நடந்து வந்து பின் கதவில் காதை வைத்து ஒட்டு கேட்டான். மனித நடமாட்டம் தெரிந்தது. அவன் பின்னாலே வந்த யமுனாவுக்கும் அந்த சத்தம் கேட்டது.

ஏழுமலை மெல்ல திரும்பி “போனை எடுத்து வா” சைகையிலேயே காட்டினான்.

யமுனா திரும்பி அறைக்குள் இருக்கும் போனை எடுக்க நினைத்து திரும்பினாள். அங்கே. முகத்தில் ஒரு துணியை கட்டிக்கொண்டு ஒருவன் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். எப்படி நுழைந்தான்? திகைத்து வாய் உலர்ந்து நின்றார்கள் ஏழுமலையும், யமுனாவும்.

நட..அவன் கத்தியிலேயே சைகை காட்டி அவர்களை நடத்தி சென்றான். குழந்தைகள் படுத்திருந்த அறைக்குள்ளேயே அவர்களை நடத்தி சென்றவன் அவர்களை பக்கம் பக்கமாய் நாற்காலியில் உட்கார சொன்னான். “ சத்தம் போடக்கூடாது” இங்கிருந்து யாராவது வாயை திறந்தீங்கன்னா, அப்புறம் உசிரு உங்களோடதா இருக்காது, சரி பீரோ சாவி எங்க வச்சிருக்கே? அவன் குரலை வேண்டுமென்றே கடூரமாய் பேசுவது போல் இருந்தது. ஆனால் செய்கையோ எதற்கும் அஞ்சாதவன் என்பது போல் இருந்தது.

தற்கொலை தற்கொலை என்று பேசிய ஏழுமலையோ பயத்தில் வாய் திறக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த யமுனாவுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தாலும் அவன் இப்படி ஊமையாய் பயத்துடன் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் குபீரென்று சிரிப்பு பொங்கி வந்தது. தன்னை மீறி சிரித்து விட்டாள். எதிரில் நின்று அவர்களை மிரட்டிக்கொண்டிருந்த திருடனோ இவள் சிரிப்பை கண்டு திகைத்து நின்றான்.

‘ஏய்” எதுக்கு சிரிக்கறே? அவன் குரலில் சற்று பயம், இவள் வேறு ஏதாவது செய்து மற்ரவர்களை வரவழைத்து விட்டாளோ?

தன்னை மீறி சிரித்து விட்ட யமுனா, இவனது மிரட்டலை கேட்டவுடன், தான் இந்த நேரத்தில் சிரித்தது தவறோ என்று சற்று தடுமாறினாலும், உடனே தன்னை தைரியப்படுத்திக்கொண்டு, போனா உயிர்தானே என்று முடிவு செய்தவள் மீண்டும் சிரித்து “ஏம்ப்பா அசைஞ்சா எங்களை கொன்னுவேன்னு சொல்றே? இன்னும் கொஞ்ச நேரத்துல நீ வராம இருந்திரியிருந்தியினா இந்த ஆள் தானே தற்கொலை பண்ணியிருப்பாரு, எங்களையும் செய்ய சொல்லி வற்புறுத்தியிருப்பாரு. நல்ல வேளை

அதுக்குள்ளே நீ வந்துட்டே, எங்களையும் காப்பாத்திட்டே. இப்ப பாரு நீ மிரட்டின உடனே உயிருக்கு பயந்து எப்படி உட்கார்ந்திருக்காரு, இதை பார்த்தா சிரிப்பு வருமா வராதா? குரலை சகஜமாக்கி கொண்டு சொன்னாள்.

அவள் சொன்னதை கேட்டவன் சற்று திகைத்து “தற்கொலையா? இந்த ஆளா? எதுக்கு? அவனின் கேள்வியில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

ஏங்க எதுக்கு பயந்து வாயை மூடி கிட்டு இருக்கறீங்க? அவன் கிட்டே சொல்லுங்க, திடீரென்று இவள் தன்னை பேச சொல்லுவாள் என்று எதிர் பார்க்காத ஏழுமலை, சற்று தடுமாறினான். பின்னர் சமாளித்துக்கொண்டு எல்லாம் போச்சுப்பா, இப்ப நான் கடன் காரன் ஆகிட்டேன். நான் நடத்துன பிசினஸ் கூட்டாளிங்க, ஏமாத்திட்டாங்க. சொல்லும்போதே கண்களில் கண்ணீர் வர பேசாம என்னை கொன்னுடுப்பா, உனக்கு புண்ணியமா போகும், முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதான். இவனின் அழுகை யமுனாவுக்கு வெறுப்பாய் இருந்தது. அவனை முறைத்தாள்.ச்சு.. இப்ப எதுக்கு அழுகறீங்க? தைரியமா இருங்க.. அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…சடீரென்று ஏழுமலையின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அந்த திருடன்.

கஸ்மாலம், வெக்கமாயில்லே, அழுவறான், பொட்டச்சியாட்டம். எதுக்குடா அழுவணும், இப்ப என்ன நடந்து போச்சுன்னு அழுவறே? ஏண்டா எடுத்ததுக்கெல்லாம் சாகணும்னா இந்த உலகத்துல எத்தனியோ பேர் செத்திருப்பானுங்கடா, ஏண்டா உன் கடன் நீ உயிரோட இருந்தியின்னாதான அவனுங்களுக்கு திரும்ப கிடைக்கும், நீ செத்து போயிட்டியின்னா, உன்னைய விட்டுட்டு உன் குடும்பத்தை புடுச்சுக்க மாட்டானுங்களா?

அதுக்காக அவங்களையும் சாக சொல்றியா? போடா பேமானி, நாளைக்கு என்னடா பண்ணிடுவானுங்க, இந்த வீட்டை விட்டு போக சொல்லுவானுங்க, போகட்டும், இதென்ன நீ மட்டும் தான் இதை சம்பாரிச்சியா? இது போனா இன்னொன்னு, திருடன் சாவகாசமாய் தன்னுடைய முகமூடியை கழட்டி வைத்து விட்டு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

பார்த்தா என்னைய விட பெரியவனா இருக்கறே ! குழந்தைங்க வேற இருக்குது.

என்னைய பாரு, கரணம் தப்புனா மரணம், இல்லை ஜெயில், அதுக்காக நான் என் தொழிலை நடத்தாமயா இருக்கேன். இப்ப கூட எப்ப வேணா போலீஸ் வரலாம், அதுக்கெல்லாம் பயந்தா இந்த உலகத்துல வாழ முடியாது.

ஏழுமலை சகஜமாகியிருந்தான், நாளைக்கு கடங்காரங்க வந்து கடனை திருப்பி கொடுன்னா நானும் என் குடும்பமும் என்ன பண்னறது.

திருடன் சத்தமாய் சிரித்தான், விழுந்து விழுந்து சிரித்தவன் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு ஏண்டா பேமானி, நாளைக்கு உனக்கு ஒண்ணு ஆயிபோச்சுன்னா இந்த உலகம் ஓடி வந்து உனக்கு உதவி பண்ணுமா? நீயே தான் முயற்சி பண்ணி எந்திரிக்கணும். இப்ப என்ன உன் பிரச்சினை? நாளையே கடன்காரங்க வந்து உன்னைய சுத்திக்குவாங்க அப்படித்தானே பயப்படறே? இரு. தங்கச்சி போய் உன் புருசன் போனை எடுத்தா?

யமுனா சென்று போனை எடுத்து திருடனிடம் தர, அவன் கடன்காரங்க நம்பரையும், பேரையும் சொல்லு? அவன் ஒருவன் நம்பரையும் பேரையும் சொல்ல இவன் அந்த நம்பருக்கு போனை போட்டான். ரிங்க்….போய் கொண்டிருந்தது..சட்டென்று போன் எடுக்கும் சத்தம் கேட்டது, தூக்க கலக்கத்தில் ஹலோ..யாரு? பின் நிதானித்து ஏழுமலையா? என்ன இந்த நேரத்துல?

ஏழுமலை இல்லடா கஸ்மாலம், அவன் இந்த இடத்துல தூக்குல தொங்கினு இருக்கான், பக்கத்துல லெட்டர் வச்சிரிக்கான். எடுத்து படிச்சா உன் பேர் நம்பர் போட்டிருக்கான், உனக்கு பணம் கொடுக்கணும், நாளைக்கே கொடுக்கலியின்னா மானம் மருவாதியை வாங்கிடுவேன்னு மிரட்டியிருக்கான்னு போட்டிருக்கான், என்ன பண்னறது? அப்படியே போலீசுக்கு போயிடட்டா?

ஐயோ..அப்படி எல்லாம் போயிடாதே? அவன் எங்க தூக்கு போட்டிருக்கான்? தயவு செய்து அந்த லெட்டரை எடுத்து மறைச்சுடு, நான் சும்மாத்தான் மிரட்டுனேன், நீ எங்கிருக்கே? தயவு செய்து சொல்லு? உனக்கு என்ன வேணும்? அவன் உனக்கு எவ்வளவு தரணும்? அதுல பாதியாவது எனக்கு வந்துடணும் சரியா?

கிட்டத்தட்ட மூன்று பேர்களிடம் பேசி ஒரு தொகையை நிர்ணயம் செய்தவன், சரி

மூணு பேருக்கு பணம் தரவேண்டியிருக்குன்னு மூணு லெட்டர் எழுது,

ஏழுமலை அவசர அவசரமாக எழுதி கொடுக்க, சரி வா, அவனுங்க வீட்டை காட்டு,

ஏழுமலை வெளியே வந்து தன் காரை எடுக்க, காரில் ஏறி உட்கார்ந்த ஏழுமலை, ரோட்டுக்கு கார் வந்ததும், திருடன் மெல்லிய சீட்டி அடித்தான், உடனே தனித்தனியாக புதரிலிருந்து மூன்று பேர் எழுந்து வந்தனர். அவர்களையும் காரில் எற்றிக்கொண்டவன், நீ போய்ட்டே இரு, அதுக்குள்ள நம்ம பசங்களுக்கு மேட்டர் என்னன்னு சொல்லிடறேன்.

ஏழுமலை ஒவ்வொரு இடமாக நிறுத்த திருடன் ஒவ்வொருவரை அனுப்பி பணத்தை பெற்று கொண்டு அந்த கடிதத்தை கொடுத்து விட்டு வந்தான். அதுவரை மறைவாக காரை நிறுத்தி வைத்துவிட்டு பணம் வாங்கி வந்த பின்னால் அவனையும் ஏற்றிக்கொண்டு அடுத்தவனின் வீட்டுக்கு பறந்தது. கடைசியில் பணம் கொடுத்தவன் மட்டும் சற்று முரண்டு பிடிக்க பணம் வாங்க சென்றவன் உடனே போனை எடுத்து “வாத்தியாரே போலீசுகிட்டே இன்பார்ம் பண்ணிடு” போனை அணைத்தவன் கையில் சத்தமில்லாமல் பணத்தை திணித்தான்.

கார் வீடு வந்து சேர்ந்த பொழுது ஏறக்குறைய மணி மூன்றுக்கு மேல் ஆகி விட்டது. சரி நாங்க வர்றோம், விடைபெற்ற நால்வரையும் பார்த்து இந்த பணம் உங்களுது, நீங்களே வச்சுக்குங்க?

அவர்கள் இதெல்லாம் நமக்கு சரிப்படாது, நாளைக்கு முதல்ல போய் போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்துடு, என் கைப்பைய காணோம், அதுக்குள்ள என் செல்லு, அப்புறம் நாலைஞ்சு லெட்டர் வச்சிருந்தேன், கொஞ்சம் தொகைகளும் இருந்துச்சு, அப்படீனு சொல்லிடு. உன் செல்லை தூக்கி ஆத்துலயோ கிணத்துலயோ கொண்டு போய் போட்டிடு.அது வரைக்கும் போனை எடுத்துடாதே. இப்பவே உன் வீட்டுல கிணறு இருந்துச்சுன்னா அதுல போட்டிடு. அப்புறம் நாளைக்கே அவங்களுக்கு பணத்தை கொடுக்காதே சந்தேகம் வரும், மத்தபடி உன் சாமார்த்தியம்,தயவு செய்து இனிமேல் குடும்பத்தை வச்சிகிட்டு இந்தமாதிரி தப்பை பண்னாதே.

அவர்கள் வெளியே சென்று இருளில் மறைவதை பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஏழுமலையும், யாமினியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *