தாம்பத்யம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 888 
 
 

டாக்டர் கைலாசம் அவர்களின் மல்லிகை மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ஓர் அறையில், கனமான தேகம் கொண்ட, நடுத்தர வயது அரசியல் பிரமுகர் செங்குட்டுவன் அன்பன், தலையில் கட்டுடன் கட்டிலில் படுத்திருந்தார். தலையணை அருகில் ஒல்லியான உடல்வாகு கொண்ட அவரது உதவியாளன் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். செங்குட்டுவன் அன்பன், கண்ணாடி அணிந்து, நாளிதழ் ஒன்றின் இணைப்பு புத்தகத்தைப் புரட்டினார்.

‘படிக்கற காலத்துல ஒழுங்கா படிக்கல’ என்றான் ரமேஷ்.

‘யாரை சொல்ற’ கேட்டார் செங்குட்டுவன் அன்பன். ‘எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் அண்ணே’ என்றான் ரமேஷ். ‘மைண்ட் வாய்ஸ் வெளில வராம பார்த்துக்க’ என்றார் செங்குட்டுவன் அன்பன்.

மூடியிருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் கம்பீரமான தோற்றம் கொண்ட டாக்டர் கைலாசம்.

டாக்டர் பேசினார் ‘சார். ஒங்களுக்கு ஒண்ணும் இல்லை. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம். கீழே ஒங்க கேடர்ஸ் திரண்டு இருக்காங்க. வர்ற போற ஜனங்களுக்கு கஷ்டம் அதனால.. …’ தயக்கத்துடன் இழுத்தார் டாக்டர்.

‘சாரி டாக்டர். இப்பவே அவங்கள கலைஞ்சு போக சொல்றேன்’ என்ற செங்குட்டுவன் அன்பன் ரமேஷைப் பார்த்தார். அவரது குறிப்பை அறிந்து தொண்டர்களிடம் பேசுவதற்காக ரமேஷ் அறையை விட்டு வெளியேறினான். ‘தாங்க்ஸ் ‘ என்று கூறி விட்டு டாக்டர் கைலாசம் அறையை விட்டு வெளியே சென்றார்.

சற்று நேரத்தில், கதவைத் திறந்து கொண்டு, மிடுக்கான இளம்பெண் – உதவி காவல் ஆணையர் பவானி உள்ளே வந்தார். அருகில் இருந்த சிறிய ஆசனத்தில் அமருமாறு சைகை செய்தார் செங்குட்டுவன் அன்பன். பவானியின் பின்னால் ஒடிசலான இரண்டு இளம்பெண்கள் நின்று கொண்டிருந்தனர். கீழே சென்றிருந்த ரமேஷும் திரும்பி வந்து நின்றான்.

செங்குட்டுவன் அன்பன் பேசினார் ‘வணக்கம் மேடம், எல்லாருக்கும் அன்பனா இருக்கணும்னு தான் என் பேரை செங்குட்டுவன் அன்பன் ன்னு மாத்தி வெச்சிருக்கேன். என்னைத் தாக்க வந்தவன் யாரு? எப்பவுமே ஆளுங்களோட வாக்கிங் போவேன்… இன்னிக்கு பார்த்து இந்த ரமேஷ் கூட வரலை….’

‘சாமியும் ஒங்க மனைவியாரோட தாலி பாக்கியம் தான் சார் ஒங்கள காப்பாத்தி இருக்கு’ என்றார் பவானி.

‘கூட சேர்ந்து இல்லாத மனைவியின் தாலி பாக்கியம் என்னைக் காப்பாத்திச்சா?’

செங்குட்டுவன் அன்பனின் முகம் மாறியது. அதை கவனிக்காத பவானி, ‘கூட இல்லாமல் போனாலும் அக்காவோட மாங்கல்யம் ஒங்கள காப்பாத்தி இருக்கு’ என்றார்.

செங்குட்டுவன் அன்பன் பேச்சை மாற்றினார் -‘என்னோட பர்சனல் கதைய விடுங்க. இந்த பொண்ணுங்க யாரு?’

பவானி சொன்னார் ‘இந்த யங் கேர்ள்ஸ் – ரஞ்சனா நிரஞ்சனா – டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்துறாங்க. இவங்க தான் காலைல பார்க் ல ஒங்கள அவன் தாக்க வந்தப்ப காப்பாத்தினாங்க. ஒங்கள அவன் கிட்ட இருந்து காப்பாத்தும் போது நீங்க தடுமாறி விழுந்து தலைல அடிபட்டுடுச்சு…. மயக்கம் ஆயிட்டிங்க…நான் இந்த ஆஸ்பத்திரியில் ஒங்கள சேர்த்தேன் ‘

செங்குட்டுவன் அன்பன், அந்த இளம்பெண்களை நன்றியுடன் பார்த்தார். அவர்கள் இருவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். வணக்கம் என்ற செங்குட்டுவன் அன்பன், பவானியைப் பார்த்து ‘அவன் யாரு பிடிச்சுட்டிங்களா?’

‘பிடிச்சுட்டோம் சார். அவன், இந்திரா நகர் ராஜு. கண்டிப்பான ஜெயிலர் சுந்தரத்தை தாக்கப் போறதா பொது வெளியில் பேசிகிட்டு இருக்கான்னு இவங்க தான் தகவல் கொடுத்தாங்க. சுந்தரம் சாரை அலர்ட் பண்ணி பாதுகாப்பும் கொடுத்தோம். ஆனால், நீங்க அச்சு அசலாக அவரைப் போலவே இருக்கறதுதானால ஒங்களுக்கு அலர்ட் பண்ணி இருக்கணும்…. மன்னிக்கனும். ‘

‘என்ன சிறை அதிகாரி சுந்தரம் என்னை மாதிரியே இருப்பாரா? அவரோட படம் வைச்சு இருக்கீங்களா’ என்றார் செங்குட்டுவன் அன்பன்.

நிரஞ்சனா, அவளுடைய மொபைலில் படத் தொகுப்பில் இருந்த சுந்தரத்தின் புகைப்படத்தைக் காட்டினாள்.

‘என்ன ஆச்சரியம் என்னை மாதிரியே இருக்காரு அவரைத் தாக்கறதா நினைச்சு என் மேல பாய்ந்துட்டானா?’ என்றார் செங்குட்டுவன் அன்பன்.

‘நீங்க இந்த பொண்ணுங்களுக்கு நன்றி சொல்லணும். சுந்தரம் சார் கிட்ட இந்த சம்பவத்தை சொன்னேன்.. என்னால அவருக்கு ஆபத்து வந்திடுச்சே வருத்தப்பட்டாரு ஒங்கள வந்து பார்க்கறதா சொன்னாரு’ என்றார் பவானி.

‘நன்றி வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்’ என்று இளம்பெண்களைப் பார்த்துக் கூறினார். செங்குட்டுவன் அன்பன். ‘சரி வரோம் சார் கெட் வெல்’ பவானி விடை பெற்றார். இரு இளைஞிகளும் அவரிடம் தலையசைத்து விடை கூறி பவானி பின்னால் சென்றனர்.

ரமேஷ், அவருடைய தலையணை அருகில் வந்து நின்றான்.

‘அண்ணே அந்த பொண்ணுங்க உங்கள காப்பாத்தி இருக்காங்க என்ன கொடுக்கப் போறீங்க…’ என்றான் ரமேஷ்.

‘அதான் நன்றி ஆசீர்வாதம் ன்னு சொல்லிட்டேன் இல்லை’

‘இப்படி அல்வா கொடுத்தே பழகிட்டிங்க.. எவ்வளவு தொகை அனுப்பணும்னு சொல்லுங்க அவங்க கூகுள் பே நம்பர் வாங்கிட்டேன்’ என்று செல்போனை நீட்டினான் ரமேஷ்.

‘பொண்ணுங்க நம்பர கரெக்டா வாங்கிடுவியே’ என்று கூறி விட்டு மொபைலை வாங்கிப் பார்க்கத் தொடங்கினார் செங்குட்டுவன் அன்பன்.

அப்போது மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் பருமனான தேகம் கொண்ட, உயரமான நடுத்தர வயது பெண்மணி. அவர் செங்குட்டுவன் அன்பனின் மனைவி சரஸ்வதி. கதவருகே நின்றபடியே கணவரைப் பார்த்தார்.

ரமேஷ், செங்குட்டுவன் அன்பனின் தோள்களைத் தொட்டான்.

மொபைலில் இருந்து விடுபட்டு நிமிர்ந்து பார்த்து வா என்று மெல்லிய, தழுதழுத்த குரலில் பேசினார் செங்குட்டுவன் அன்பன். அவருடைய மனைவி, கட்டிலின் அருகில் வந்து நின்றார்.

ரமேஷ் அறையை விட்டு வெளியே சென்றான்.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *