கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,372 
 
 

தாத்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஆகி விடுவார் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது, கவலையில் ஆழ்ந்து விட்டான் ரமேஷ். அப்பாவின் அப்பா, இது நாள் வரை

தன் பாதுகாப்பில் இருந்தார். ஆனால் இப்பொழுது ரமேஷுக்கு அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைகழகத்திற்கு விரிவுரையாளராக அழைத்திருக்கிறார்கள். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அவனுடைய படிப்பு, தகுதி. உழைப்பு, அவன் சமர்ப்பித்த கட்டுரைகள், ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவனை எங்கள் பல்கலை கழகத்தில் பணிக்கு வாருங்கள் என்று கூப்பிடுகிறார்கள்.

தாத்தா அவனை பொறுத்த வரை கடவுள். இராணுவத்தில் முப்பது வருடம் பணி புரிந்துவிட்டு ஓய்வு பெற்றவுடன் பாட்டியுடன் தனியாக வசித்து வந்தார். பாட்டி இறந்த பின் இவன் அப்பா, தனியாக தாத்தாவை விடாமல் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டார்.ஆனால் விதி இவனின் அப்பா, அம்மாவையும் ஒரு விபத்தில் பலி கொடுக்க, அடுத்து என்ன செய்யலாம் என்று திகைத்துக்கொண்டிருந்த போது, தாத்தாவே இவனை தேற்றி கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

,இவன் ஹையர் செகண்டரி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நேரம்.எதிர்பாராதவிதமாக இவனின் அப்பாவும், அம்மாவும் ஒரு கல்யாண விசேசத்துக்கு சென்னை சென்றவர்கள், கல்யாணம் முடிந்து திரும்ப வரும்பொழுது இவர்கள் வந்த காரின் ஓட்டுநர் சற்று கவனக்குறைவானதால் மரத்தில் மோதி அங்கேயே இறந்து விட்டார்கள்.

தேர்வு முடிவுகள் இவனை மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் தேச்சி பெற வைத்திருந்தது. இருந்தாலும் அப்பா, அம்மாவின் எதிர்பாராத மரணம் இவனை நிலைகுலைய செய்திருந்தது.

தாத்தா அது வரை அந்த குடும்பத்தில் இருந்து ஒதுங்கி இருந்தவர், தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் இவனை கல்லூரி செல்ல தூண்டினார். இவருக்கும் ஓய்வூதியம் வந்து கொண்டிருந்தது. மகனும், மருமகளுக்கும் வரவேண்டிய பணித்தொகை வந்ததையும், வங்கியில் போட்டவர், ஒரு வேலைக்காரியை மட்டும் ஏற்பாடு செய்து கொண்டார்.

அவளும் காலையில் இருந்து இரவு வரை இருந்து எல்லா வேலைகளையும் செய்து விட்டு வீட்டுக்கு செல்வாள். இரண்டு வருடங்களில் அவள் கணவனும் இறந்து விட்டதால் குழந்தைகள் எதுவும் இல்லாத்தால் தன் ஜாகையை இங்கேயே மாற்றி வந்து விட்டாள்.

அது தாத்தாவுக்கும், ரமேஷூக்கும் வசதியாகிவிட்டது.

வருடங்கள் ஓட ஆரம்பித்து விட்டது. பத்து வருடங்கள் ஓடி விட்டது. இவனும் ஆராய்ச்சி படிப்பு வரை முடித்து விட்டான். போன வருடம் வரை துணைக்கு இருந்த வேலைக்காரியும் உலகை விட்டு போய் விட்டாள். இப்பொழுது தாத்தாவின் பாடுதான் சிரமமாகி விட்டது, அந்த வேலைக்காரி இருந்தவரை தாத்தாவை நன்கு கவனித்து கொண்டாள்.

இப்பொழுது புது வேலைக்காரி போட்டிருப்பதால் இவன் ஒவ்வொன்றையும் எடுத்து சொல்ல வேண்டி இருக்கிறது.

மற்ற வேலைகளை, தனியாக சமாளித்துக்கொள்ள முடிந்துவிட்டது. தாத்தாதான் பாவம்,வயதின் மூப்பு அவரை பாடாய் படுத்துகிறது..

இந்த நேரத்தில்தான் இவனுக்கு இப்படி ஒரு அழைப்பு. இந்த பல்கலைக்கழகம் பேரும் புகழும் பெற்றது. நல்ல எதிர்காலமும் இதில் சேர்ந்தால் கிடைக்கும் என்று நண்பர்கள் உற்சாகப்படுத்தினார்கள்.இவனுக்கு கண்டிப்பாக போய் சேரவேண்டும் என்று மனதில் பதிந்து விட்டது. ஆனால் தாத்தா? அவரை எப்படி இந்த வயதான காலத்தில் தனியாக விட்டு விட்டு போவது.

நண்பர்கள், உறவுகள் எல்லோரிடமும் ஆலோசித்தான். உறவுகள் அவனுக்கு பெண் கொடுத்து உறவு கொள்ள தயாராக இருந்தனவே தவிர வயதானவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியது. நண்பர்கள் ஆலோசனைகளை வாரி வழங்கி தன் கடமை முடிந்ததென விலகிக்கொண்டார்கள்.

அடுத்த வாரம் திங்கள் கிழமைக்குள் முடிவு சொல்ல வேண்டும் என்று அங்கிருந்து சொல்லிவிட்டார்கள்.இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. ரமேஷூக்கு தலை சுற்றியது. ஆசை இருக்கிறது. தாத்தா இடைஞ்சலாய் இருக்கிறார், நினைக்கும்போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

சற்று தள்ளி இருக்கும் நண்பனை பார்க்க அவன் வீட்டுக்கு சென்றான்.நண்பனும் இவனுடன் படித்தவந்தான். இவனை வரவேற்று, இவனின் ஆஸ்திரேலிய அழைப்புக்கு முதலில் வாழ்த்து சொன்னான்.

ச்..என்று சோகமாக ஒலித்த வார்த்தைகள் அவன் நண்பனை யோசிக்க வைத்தது.

ஏன் ரமேஸ் சலிப்பா சொல்றே?

இல்லே எனக்கு ஆசை இருக்கு, அங்க போய் சேரணும்னு, ஆனா தாத்தா இருக்கறாரே?

என்ன பண்ணறது?

சரி விடு, அவனை சமாதானப்படுத்திய நண்பன், தன்னுடைய தாய் தந்தையரிடன் இவனை அறிமுகப்படுத்தினான். அவர்கள் வீட்டில் இரண்டு மணி நேரம் இருந்ததே தெரியாமல்

பேசி சிரித்து மகிழ்ந்து வீடு வந்தான்.

தாத்தா இவனை எதிர்பார்ப்பது போல, சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருந்தார்.இப்பொழுதெல்லாம் சாய்வு நாற்காலி,இல்லாவிட்டால் படுக்கை. புதிதாய் வந்திருக்கும் வேலைக்காரி அவரை கவனித்து கொள்கிறாள். வெறும் திரவ உணவுதான் உண்கிறார். வேலைக்காரி வீட்டோடு இருப்பதால் சமையலையும் பார்த்துக்கொள்கிறாள்.மற்ற வேலைகளுக்கு அவ்வப்போது ஆட்கள் வந்து போவார்கள்.

இவன் தாத்தாவின் அருகில் வந்து அவரை மெல்ல தொட்டான். அவர் அவன் கையை இறுகப்பற்றி ஏதோ சொல்வது போல வாயை திறந்தார். ஆனால் வயதின் தளர்ச்சியால் அவர் குரல் உயரவில்லை. புதிதாக போட்டிருந்த வேலைக்காரியிடம் தாத்தாவை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொலி விட்டு முன்னறைக்கு வந்தான்.

மாலை ஆறு மணி இருக்கும், அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்தவன் ஆச்சர்யப்பட்டான், அவன் காலையில் சென்றிருந்த நண்பனின் பெற்றோர்கள் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

வாங்க அங்கிள், அழைத்தவனை புன்னகையுடன் ரமேசைஅணைத்துக்கொண்டே உள்ளே வந்த நண்பனின் அப்பா, உங்க தாத்த எங்கே இருக்கிறார்? சிரித்துக்கொண்டே கேட்டார். உள்ளுக்குள்ளதான் இருக்கறாரு, என்று அவர்களை அழைத்துக்கொண்டு தாத்தாவின் அறைக்கு கூட்டி வந்தான்.

அவர்கள் இருவரும் சாய்வு நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருந்த தாத்தாவின் கால்களை தொட்டு வணங்கினர். பின் ரமேஷ் உன் பிரண்டு எல்லாத்தையும் சொன்னான், உன்னோட பிரச்சினையும் சொன்னான். நாங்க ஒண்ணு கேட்போம், தப்பா நினைச்சுக்காதே

பீடிகையுடன் சொன்னவரை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.

நாங்க உங்க தாத்தாவை கூட்டிட்டு போய் பாத்துக்கறோம், சொன்னவர்களை வியப்பும் ஆச்சர்யமுமாய் பார்த்தான்.

என்ன ரமேஷ் திகைச்சு நின்னுட்டே, நீ தப்பா நினைக்கலையின்னா, இப்பவே எங்க கார்ல கூட்டிட்டு போயிடறோம்,அதில்லை சார், திடீருன்னு இப்படி கேட்டதுனால என்ன சொல்றதுன்னு திகைச்சு நின்னுட்டேன், உங்களுக்கு சிரமமா இருக்குமே என்று இழுத்தான்.

இல்லே ரமேஷ், நான் உன் வயசுல இருக்கும்போது என்னுடைய வேலை விசயமா

நானும் இவளும் வெளியூரெல்லாம் சுத்துனோம். அதனால என்னுடைய பேரண்ட்சை எங்களால கவனிக்க முடியாமயே போச்சு. அந்த குற்ற உணர்ச்சி ரொம்ப காலமா எங்களுக்கு இருக்கு. அதுவும் இப்ப எங்களோட பையன் வளர்ந்து எங்காவது வெளியே போனான்னா மனசு

வருத்தப்படுது. இப்படித்தான எங்கப்பாவுக்கும், அம்மாவுக்கும் இருந்திருக்கும். அதுக்கு பிராயசித்தமாவாவது உங்க தாத்தாவை அவர் வாழ்நாள் வரைக்கும் நாங்க பாத்துக்கணும்னு

முடிவு செஞ்சோம். இதுல உனக்கொண்ணும் ஆட்சேபனை இருக்காதுன்னு நினைக்கிறேன். அவர் சொல்லி முடிக்கவும் ரமேசின் மனம் துணுக்குற்றது. அப்படியானால் நாமும் நம்முடைய வேலை விசய்மாகத்தானே தாத்தாவை தொந்தரவாக நினைக்கிறோம். சார் ஒரு நாள் டைம் கொடுங்க சார், அதுக்குள்ள முடிவு பண்ணி சொல்லிடுறேன். அவர்களை கையெடுத்து கும்பிட்டவன், நன்றியுடன் அவர்களை வழி அனுப்பினான்.

இரவு படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கோண்டிருந்த ரமேஷின் மனசில், தாத்தாவை கவனிக்க தான் இந்தியாவில் இருக்க வேண்டி இருக்கிறதே என்று நினைத்து கொண்டிருந்த ரமேஷ் இப்பொழுது தான் அவரை இடைஞ்சலாக நினைத்ததற்கு வெட்கப்பட்டான். இந்த வாய்ப்பு இல்லாவிட்டால் அடுத்த வாய்ப்பு வராமலா போகும், தாத்தாவை அவரது இறுதி காலத்தில் கவனிக்காமல் வேலை என்று ஓடி விட்டால் நண்பனின் பெற்றோர் போல் தாமும் குற்ற உணர்ச்சியில் வாழ்நாள் முழுவதும் துன்பப்படவேண்டும். அடுத்த முறை வெளி நாடு செல்வதை பற்றி யோசிப்போம், இப்போது வேண்டா, என்று முடிவு எடுத்தவன் அடுத்த நிமிடம் நிம்மதியாய் உறங்கினான்.

காலை சீக்கிரமே எழுந்துவிட்ட ரமேஷ் தன் தாத்தாவின் நினைவாகவே படுத்ததால் காலையில் அவரை பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அவர் அறைக்கு சென்று தாத்தாவை பார்த்தான். இரவு அவரை படுக்க வைத்த நிலையிலேயே படுத்திருந்தார்.”தாத்தா என்று அன்புடன் தொட்டான். உடல் சில்லிட்டிருந்தது. .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *