கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 9,979 
 
 

அன்று விடுமுறை நாள் சீலன் பாடசாலை செல்லவில்லை. இன்றைக்கு தாத்தாவுடன் நல்ல விளையாட்டுத்தான் என நினைத்துக்கொண்டு வெளியே வந்த சீலன் தாத்தா வழமையா இருக்கும் இடத்தில் காணவில்லை. தாத்தாவை எழுப்புவதற்காக பாடுத்திருக்கும் அறைக்குச் சென்றான். அங்கு தாத்தாவை காணாததால் அலறிக் கொண்டு ‘அம்மா அம்மா ……தாத்தாவைக் காணோம்….தாத்தாவை காணோம்…’ என கத்திக் கொண்டு ஓடிவந்தான்.

கிணற்றடியில் வேலைபார்த்துக் கொண்டுடிருந்த பங்கையம் சீலன் அலறிக் கொண்டு வருதை கண்டு ‘என்ர கத்திறா உங்கதான் இருப்பார் தேடிப்பார்’ என கூறிவிட்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினாள்.

சீலன் எங்கு தேடியும் தாத்தாவை காணவில்லை. பங்கையமும் தாத்தாவை தேடத் தொடங்கினாள். எங்கு தேடியும் தாத்தாவை காணாதபடியால் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரஞ்சோதியிடம் சென்று ‘எங்க உங்க அப்பாவை விடியல இருந்துகாணோம்’ எனகூறிக் கொண்டு பரஞ்சோதியிடம் சென்றாள்.

‘எங்க போயிருக்க போறாரு உங்க தான் இருப்பார் நான் தோட்டத்துக்கு வரேக்க கிணற்றடியில் நின்றவர்’ என சொல்லிக் கொண்டு கிணற்றடிக்கு ஓடிச்சென்று கிணற்றை வடிவாக பார்த்து விட்டு ‘அப்பாடா!’ என பெருமூச்சு விட்டுக் கொண்டு வந்தான்.

தாத்தாவுக்கு தொண்நூறு வயசாகுது பொம்பிளப் பிள்ளைகளோடு இருக்க விருப்பமில்லாமல் தன்னுடைய கடைசி மகனுடன் சங்கடங்கள் இன்றி சந்தோஷமாகவே இருந்தவர். தீடிரென காணவில்லை என்றவுடன் பரஞ்சோதிக்கு ஒன்றும் புரியவில்லை.

தகவல் அறிந்து பரஞ்சோதியின் இரண்டு சகோதரிகளும் ஓடிவந்தனர். அவர்கள் வரும் போதே படலையில் இருந்து பரஞ்சோதியையும் அவன் மனைவியையும் திட்டிக்கொண்டே வந்தனர்.

‘அப்பாவை நாங்கள் வைத்துப் பார்க்கிறோம் என்று கேட்டாலும் விடமாட்டாய், இப்ப நீயும் அந்த மனுசன கடைசிக் காலத்தில ஒழுங்க பார்க்காமல் அலைய விட்டுட்டியே’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு வந்தனர்.

‘அப்படி ஒன்றுமில்லை நீங்க சும்ம கத்தாம இருக்கிறியலே’

எங்க போயிருப்பாரு என்று யோசித்துக்கொண்டே தனது சேட்டை அணிந்து கொண்டு வெளியே சென்று விசாரித்துப் பார்க்க கிளம்பினான்.

‘நீ ஒன்றும் சொல்லாட்டியும் உன்ர மனுசி என்ன சொன்னாளோ வருத்தகார கிழவன் எங்க போச்சுதோ’ என முத்த சகோதரி புலம்பினாள்.

அவர்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாது தனது சைக்கிலை எடுத்துக்கொண்டு யாரையாவது விசாரித்து பார்ப்போம் என செல்ல ஆயத்தமான்.

ஆத்துப்பரக்க ஒடிவந்தார் முத்த சகோதரியின் புருசன் ‘உங்க எல்லா இடத்திலையும் விசாரிச்சிட்டன் மாமாவை யாரும் காணல என்றிராங்கள்;;” என கூறிக் கொண்டே மாமரத்த்தின் கீழ் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தார்.

பரஞ்சோதிக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘என்னட இது வெள்ளன கிணற்றடியில் நின்ற மனுசன் எங்க போயிருப்பார்’. விசயம் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் படையெடுத்து வந்தனர்.

பரஞ்சோதி வீடு மரணவீடு மாதிரி காட்சியளித்தது.

மதியமாகியும் தாத்தவைபற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

அங்கு வந்தவர்கள் ”போன வருசமும் பக்கத்து ஊரில ஒரு வயதுபோன கிழவன் வீட்டிலேஇருந்து வெளிக்கிட்டு எங்கையோ போனவர்தான் இன்னும் அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை’ என புதுப்புது மர்மக்கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர்.

இஞ்ச பாரு பரஞ்சோதி இது விளையாட்டில்ல எதுக்கும் ஒருக்க போலீஸ்சுக்கு போய் ஒரு கம்பிளைன்ட கொடுக்கிறது எதுக்கும் நல்லது’ என அயல்வீட்டு கந்தசாமி சொன்னார்.

‘இல்ல அண்ணை இரவு வரைக்கும் ஒருக்க பார்த்திட்டு காலமைக்கு போலீசுக்கு போவம்’

‘சரி சரி எதென்டாலும் உன்ர விருப்பம் நான் சொல்லுறத சொல்லிட்டன்’ எனக் கூறிக்கொண்டே கந்தசாமி வெளிக்கிட்டார்.

ஒன்றும் புரியவில்லை சந்தோஷமாக பேரனுடன் இரவெல்லாம் விளையாடிக் கொண்டிக் கொண்டு அவனுக்கு கதைகளைச் சொல்லிக் கொண்டு நல்லா இருந்த மனுசன் ஏன் திடிரென இப்படி செய்தது என பரஞ்சோதியும் பங்கையமும் குழம்பிக்போய் இருந்தனர்.

வெளிநாட்டில் இருந்து தொலைபேசிகள் வந்துகொண்டு இருந்தது ‘என்ன தாத்தாவ காணமாம்’ ‘மச்சானை ஏதும் பேசினியலே’ ‘அண்ணனை வைச்சு உங்களால பார்க்க கஷ்ரமென்றால் சொல்லுங்கோ’ என தாத்தாவின் உற்றார் உறவினர்கள் பலரும் இதுவரையில்லாத பாசம் கணைகளை பரஞ்சோதி மீதே செலுத்தினர்.

இந்த நேரம் பார்த்து பரஞ்சோதியின் சகோதரிகளும் ‘உன்னால நாங்களும் திட்டுவேண்ட வேண்டி இருக்கு’ என்றாள்.

சூரியன் மறைந்து மம்மல் பொழுதில் மூன்றுஇராணுவத்தினர் பரஞ்சோதி வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.

‘ஏய் இது பரஞ்சோதி வீடுதானே’ என குறைத்தமிழில் கேட்டான் ஒருவன். ‘ஓம் ஐயா…ஓம் ஐயா….’என படலையை அடைந்தனர் பரஞ்சோதியும், மச்சானும்.

‘சதாசிவம் யாரு’

‘எங்கட அப்பா தான் சேர்’

‘ஏய் உங்க அப்பா அக்கடி எங்க ஹெம்புக்கு வாராறு கனநாளா சொல்லிபாத்திட்டம் இப்ப அவர பிடிச்சு எங்க ஹெம்பில வைச்சிறுக்கம் ரெண்டு பேர் எங்க கூடவந்து கூட்டிட்டு வாங்க இதுதான் கடைசியா இருக்கனும், இனி வந்து இப்படியெல்லாம் சொல்லமாட்டோம்’ என அரைகுறையாக சொல்லிமுடித்தான்.

‘சரி ஐயா சரி’

எனக் கூறிக்கொண்டு பரஞ்சோரியும் மச்சானும் ஓட்டோ ஒன்றை பிடித்துக்கொண்டு இராணுவத்தின் பின்னே சென்றனர்.

இராணுவ ஹெம்பில் எதோ பறிகொடுத்தது போல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சதாசிவம்.

இருவரையும் அழைத்து அந்த இராணுவ ஹெம்பின் பொறுப்பதிகாரி எச்சரிக்கை கொடுத்துவிட்டு சதாசிவத்தை அனுப்பி வைத்தான்.

‘ஏன் அப்பா உனக்கு இந்த வயசில வேண்டாத வேலை, நாங்க எவ்வளவு பதறிப்போனம்’ சதாசிவம் ஒன்றும் பேசாமல் ஓட்டோவுக்குள் ஏறியமர்ந்து கொண்டார்.

‘அட சாகிறதிக்கிடையில இன்றைக்காவது என்ற காணிய பார்ப்பம் என்றால் அதுவும் சரிவராமல் போச்சு இனியெப்ப தான் பார்க்கபோறேனோ இவங்கள் எப்பதான் போய் தொலையப்போறாங்களோ’ என சித்தித்தவாறே ஓட்டோவுக்குள் அமர்ந்திருந்தார்.

வீடு வந்ததும் எல்லோரும் படலைக்கு ஓடி வந்தனர்.
சீலன் தாத்தா தாத்தா என அழைத்தவண்ணம் தட்டி எழுப்பினான். சதாசிவம் எழுந்திருக்கவேயில்லை.

அவருடைய கடைசி அசை நிறைவேறாமலே போனது. அவரால் இனியாருக்கும் கஷ்ரமில்லை குறிப்பாக யாழ்ப்பாணம் வலிவடக்கில் சதாசிவத்தின் தோட்டத்துக் காணியில் முகாமிட்டுள்ள இராணுவத்துக்கும் தான்.

– 2014.09.28 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *