கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 3,537 
 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு இன்னும் உறக்கம் வரவில்லை. நெஞ்செல்லாம், நினைவு முட்களின் நிரடல். விரிந்தே கிடக்கும் திண்ணைச் சாக்குக் கட்டில், இந்த நோஞ்சான் ஆகுருதியை எப்போது வேண்டுமானாலும் சிரமமின்றி, தாங்கிக் கொள்ளும். இடுப் பில் சுள் என்ற வாதை வலி. இந்த உபாதை அடிக்கடி சொல்லிக் கொள்ளாமலே உடம்பை அவஸ்தைப் படுத்தும். சோர்ந்த கண்களால் முற்றத்து இருளை, வெறிக்கிறேன். எதிரே அடர்ந்த மாமரம், இராட்சதன்போல், அசைகிறது.

மல்லாந்து கிடந்தபடியே, ஆகாயத்தை நோட்டமிட்டேன். தொடுவானம் மேகத் திட்டுகளோடு துவண்டு கிடக்கிறது. வெள்ளி உறங்கியும், விழித்தும், மங்கிச் சுடர்ந்தன. ஷவ்வால் மாதத்து இளம் பிறை, ரம்மியமாக உலா வந்தது. தலைய ணைக்குக் கீழே இருந்த பிரார்த்தனை மாலையை, கை பிரியத்தோடு எடுத்துக் கொண்டது. விரல்கள் ஒவ்வொன்றாய் காய்களை நகர்த்தின.

சுபஹானல்லாஹ்! என் இதழ்கள் இடைவிடாது இறைநா மம் மொழிய, மனம் ஆன்மீக சுகத்தில் திளைத்தது. இப்போ தெல்லாம் பிரார்த்தனையும், இறைநேசிப்பும் எனக்குப் பிடித்த மான கைங்கரியங்கள். மூப்புக்குள் தள்ளப்பட்ட பலருக்கு இவை உடன்பாடு உடைய சங்கதிகள்தான்.

அப்படியென்ன பெரிய வயது எனக்கு. ஜூன் இருபத்தி மூன்றுக்கு அறுபத்தியிரண்டு அவ்வளவுதான்! இடுப்பு ஏன் இப்படி வலிக்கிறது? மரணம் எப்ப வரும்? ….. ம், எப்போது வேண்டுமானாலும் வரட்டும். வாழ்க்கை அதனோடு முரண் பட்டு விலகினாலும் வயோதிபம் வரவேற்றுத் தான் ஆகவேண் டும் அதை. இந்த உலகம் ஒரு அர்த்தமுள்ள பரவசத்திற்காக மட்டுமே இயங்குகிறது. இப்படியொரு சங்கல்பம் என் யௌவ்வன காலத்தை ஆக்கிரமித்திருந்தது. அவை வெறும் பூஜ்ஜியங்களே! இங்கு எதிலும் அர்த்தமில்லை. எல்லாம் பனிபோர்த்திய இரவுகள்.

இந்த அறுபது ஆண்டு வாழ்ந்து பார்த்த அனுபவங்கள் பலவற்றைத் துல்லியமாய் உணர்த்தியதுண்டு. ஆனால் இந்த உடலுக்கு ஏதாவது ஒரு கவசத்தை போட்டுக் கொள்ளலாம். மனதிற்கு கடிவாளம் இட்டு வெற்றி கண்டவன் யார்?

பள்ளிக்கூட அதிபராய், குடும்பத் தலைவனாய், சமூக ஊழியனாய், எல்லாமுமாக, வாழ்ந்தாகி விட்டது. ஐந்து வாரிசு கள். ஆறு பேரப்பிள்ளைகள், என்று குடும்ப விருட்ஷம் கிளை பரப்பிப் பரந்தாலும், மனம் மட்டும் வசப்படாத வாழ்க்கைக் காக ஏங்குகிறது. என் மனைவி ஆமீனா ஏன் இப்படி மாறிப் போனாள்? பழைய நினைவுகளின் வருடல் மட்டும், அந்தராத் மாவை அள்ளிக் கொண்டு விடுமா?

வாழ்வின் மேடு பள்ளங்களை, அவள் என்னோடு ஓடிக் களைத்து, உடல் தளர்ந்து, இன்று ஆஸ்மா நோயில் ஷீணித்து விட்டாள். ஆமீனாவைப்பற்றி நினைக்கும்போது என் உள்ளுணர்வுகளில் சொந்தக்காயங்களே எஞ்சி நிற்கிறது.

உறக்கமின்மையும், இடுப்புவலியும், இன்னுமேன் என்னை துன்பப்படுத்துகிறது. இப்ப நேரம் ஒரு மணியைத் தாண்டியிருக்குமா?… ஆமினா, மருந்தெண்ணை தடவினால், வலி குறையலாம். ‘யா அல்லாஹ்!’ சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மூக்குத்தூள் டப்பாவை எடுத்து விரல்களால் சிறிது கிள்ளிக் கொள்கிறேன்.

‘உச்… சே…!’ மேல்நோக்கி இரண்டு முறை இழுத்ததும் நாசித்துவாரம் சிலிர்த்து உறைக்கிறது. விட்டமின் மாத்திரை விழுங்கினாற்போல், உடலில் புது உற்சாகம் கிளர்கிறது. திறந்திருந்த ஜன்னலினூடே வீட்டின் உட்புறத்தை விழிகளால் துளாவிப் பார்க்கிறேன். மேசையில் சிமினி விளக்கு உற்சாக மின்றி எரிகிறது. கைகால்களை நீட்டி, பாயில் நிர்விசாரமாக உறங்கும் ஆமினாவை அர்த்த சிரத்தையுடன் பார்க்கிறேன்.

பக்கத்தில் பேரன் சுருண்டு கிடக்கிறான். உள் அறையில் மகனும் மருமகளும் உறங்கிப் போயிருப்பார்கள். இவள் எப்படித்தான் மாறிப் போனாள். முன்பு என்மீது காட்டிய நெருக்கம் இப்போது இடைவெளிப் பட்டுப் போனது ஏன்? உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருக்கம் இப்போது ஏன் இல்லை . ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல், புருஷன்பால் பெண் வைத்திருக்கும் அன்பும், தாம்பத்திய பிடிப்பும் அறுந்து போகுமா?

பேத்தி – பேரன், மருமகன், மருமகள் என்ற புது ஒட்டுறவுகளால், கணவனைப் பற்றிய கரிசனை வற்றிவிடுமா? ஐம்பதுக்கு மேல், பெண், சரீரமாயையிலிருந்து அன்னியமாகி விடுவாளா? வாழ்வின் இனிமைகளை அடைவதற்கு வயதுகள் தடையாவதில்லை, என்று படித்திருக்கிறேன்.

சே…! இவை பெண்ணுக்குப் பொருந்தலாம். ஆணுக்கு… இளமை எப்பொழுதும் மனதில் இருக்கும். எண்ணச் சுழற்சியி லிருந்து விடுபட நினைக்கிறேன். முடிந்தால்தானே? குறட் டைச் சுகத்தில் திளைத்திருக்கும் எனது இணையை மீண்டும் கனிவோடு பார்க்கிறேன். ஓசையின்றி எழுந்து உள்ளே சென்று மேசையிலிருந்த, தண்ணீர் குவளையை கையில் எடுக்கிறேன். தாகம் தணிகிறது. அடி நெஞ்சில் ஏதோவொன்று குறுகுறுக்கி றது.

மீண்டும், உறங்குகிறவனை வெறித்துப் பார்ப்பதில் என்ன லாபம்? தடித்த சரீரமுள்ளவர்களுக்கு உறக்கத்தில் பலத்த குறட்டை ஒலி தவிர்க்க வியலாதது. இந்த குறட்டைச் சுகபோகிகளை தொட்டெழுப்பினால், உடன் விழித்துக் கொள் வார்கள். இது என் சொந்த அனுபவம்.

ஆமினாவைத் தொட்டெழுப்ப, கை துறுதுறுக்கிறது. உடலைத் தொட்டதும், குறட்டை தடைபடுகிறது. கூடவே உறக்கக் கலக்கத்தின் சிறு முனுமுனுப்பு. உடலை நெளித்து கண்களை திறந்து பார்க்கிறாள் அவள்.

‘சரியான முதுகு வலி….? கொஞ்சம், எண்ணெய் பூசி விட்டா …?’ என்றேன் சுருதி தளர்ந்த குரலில்.

அவள் எண்ணெய் குப்பியை தேடி எடுத்துக் கொண்டு ஆறுதலாக வரட்டும். முன்வாசலுக்கு வந்து திண்ணைக் கட்டி லில் சுருண்டு கொள்கிறேன். மீண்டும் நினைவுச் சிதறல்களின் கைகோர்ப்பு. நினைவு தீட்சண்யத்தில் நிழல் விரிகிறது. அது ஒரு அந்திப் பொழுது.

பகல் உணவருந்தி விட்டு அசருக்கு பாங்கு சொல்லும் வரையில், குட்டித் தூக்கம் போடுவது அன்றாட வழக்கம். வெளியில் பேச்சு சத்தம், செவியை நிறைத்ததினால், அது சாத்தியமாகவில்லை. முற்றத்து மரத்தடியில் பாய்விரித்து, மாதர் மகாநாடொன்று நடந்தது.

ஆறு பெற்றும் அழகு குறையாத முன்வீட்டுக்காரி, துவக்க உரை. அறுபதைத் தாண்டிய பக்கத்து வீட்டுக் கிழவி, உரத்த தொனியில் வெட்டி முறித்தாள். ஒரு தெருவைத் தாண்டி வந்திருந்த, இளவட்டமொன்று அடிக்கடி ஆங்கில சொற்களை யும் கலந்து பேசி, தனது படிப்பு வாசனையை பறைசாற்றி னாள். ஆமினாவும் தன் பங்கிற்கு இடைக்கிடை அபிப்பிராயம் சொன்னாள்.

‘அமெரிக்காவில் ஒரு பொம்புள மாப்பிள்ளையோட அனியாயம் பொறுக்க ஏலாம மைகத்தியால … வெட்டி வீசிட்டாளாம்!’ பேப்பர்ல போட்டீக்கி’. கண்களை பெரிதாக்கி அதிசயம் ஒன்றை புட்டு வைத்தாள் ஒருத்தி.

‘அப்பிடி நடந்தும் போதா! ஆம்புள ஷைத்தான்கள் பாடம் படிக்க’ ஆறு பெற்றவள் யார் மீதோ பழி தீர்த்துக் கொண்டாள்.

‘எங்கட பள்ளிவீதி கதீஜாக்கு ஒன்பதாவது கெடச்சிருக் காம்!’

ஆமினா காற்றை வேறு திசைக்கு மாற்ற விழைந்தாள்.

‘அவளுக்கென்ன? இன்னம் பெற, ஏதும் கருங்காலிக் கட்டமாதிரி உடம்பு!’

‘எங்கட அவரு, வெளிநாடு போவப் போற! என்னையும் புள்ளகளையும் பிரிஞ்சி எப்படித்தான், ஈக்கப் போறாரோ?’ அடுத்த தெருக்காரியின் அங்கலாய்ப்பு இது!

‘நாலு நாளையே, பொறுக்க ஏலாத படகள், ரண்டு வருஷம், நாலு வருஷம், எண்டு, வெளிநாட்டுல ஈக்கியது, புதினந்தான்’. எதிர் வீட்டுக்காரி தத்துவமொன்றை உதிர்த்து விட்ட நிறைவில் சிரித்தாள்.

‘இந்த ஆம்புளகளுக்கு வயசு போவப் போவத்தான் பைத்தியம்கூட. எங்கட தீன் கெழவனுக்கு நடக்கவும் சீவ னில்ல. புதிய மாப்பிளை எண்டு, மனசில நெனப்பு!’ கிழவி அனுபவ யதார்த்தங்களை அப்படியே அள்ளிவைத்தாள். பெண்களின் கூட்டுச் சிரிப்பில், வேலியோர மரங்கள் அசைந்து குலுங்கின.

எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. வழக்கத்திற்கு மாறாக, பள்ளிக்கு, பாங்கு சொல்வதற்கு முன்பே புறப்படத் தயாரானேன்.

‘நாங்க பேசின எல்லத்தையும் மாஷ்டர் கேட்டுக் கொண் டிருந்த போல’ கிழவி கேலி செய்தாள். ‘நாங்க, துனியாவில நடக்காததையா சென்ன?’ என்றாள் ஒருத்தி.

இவர்களுக்கு கொஞ்சம் உறைப்பாக ஏதாவது சொல்ல வேண்டும் போல், இருந்தது எனக்கு.

‘நான் மிஃராஜ், போனபோது சுவர்க்கம், நரகம், இரண்டை யும் கண்டேன். நரகில் பெண்கள் அதிகமாக இருந்து வேதனைப் படுவதைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஏன் சொன்னார்கள் தெரியுமா?’

பெண்கள் தங்கள் வாயினாலும், மனசினாலும், அதிகமான பாவத்தை சுமக்கிறாங்க!

வம்பளத்த வாய்கள், மௌனித்து ஓய்ந்தன. அன்று கிழவி சொன்ன சிலேடையான வார்த்தைகளை, இப்போது நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஆமினா முதுகில் எண்ணெய் தேய்த்துவிட வலி குறை வது போலவும், இதமாகவும் இருப்பதை உணர்ந்தேன். ஊன் றித் தேய்த்ததில், அவளுக்கு சுவாசம் முட்டியது.

‘தூக்கமே போவுதில்ல! சனியன் பிடிச்ச வாதையால’ இது நான்.

‘ஏண்டயும், மொளங்கைய உசிப்பஏலா நோவு!’ – இது அவள்.

‘கைய நீட்டுங்க! நான் எண்ணை , பூசுறேன்!’

கைகளை அழுத்தித் தடவினேன். அது அவளுக்கு இத மாக இருந்திருக்க வேண்டும். வலிகண்ட இடம் மட்டுமல்ல! அதற்கு மேலும் கீழும் ஸ்பரிஸத்தில், கணங்கள் கரைந்தன. அது ஏதோ ஒரு யாசிப்பாகவும், சமிக்ஞையாகவும், இருந்திருக் கலாம். கிரகிப்பு விஷயத்தில் ஆணைவிட பெண்ணுக்கு நுட்பம் அதிகம். என் அத்துமீறிய வருடல் அவளுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும்!

‘சுபஹ்…, தொழ…, இருக்கிய…!’

‘விடிய நான் எழும்பி, தண்ணியெடுத்துத் தாரேன். நீங்க சூடி காட்டினா, இரண்டு பேருக்கும் குளிக்கலாம்.’ நடு இரவின் சீதளக்காற்று உடலைத் தழுவிச் சென்றது. எங்கோ தொலைவில் சேவலொன்று நேரங்காலம் பிசகி, கூவித் தொலைத்தது. முற்றத்து மரத்திலிருந்த ராப்பட்சி படபட வென்று சிறகடித்து விட்டு, வேறு கிளைக்குத் தாவியது. குளிரையும் மீறி எனக்கு வியர்த்துக் கொட்டியது. அசதியுடன் கண் அயர்ந்தேன்.

கப்பிக் கிணற்றிலிருந்து கிறீச் கிறீச் சென்று தண்ணீர் அள்ளும் ஓசை கேட்கிறது. விடியற்காலையில் சுகமான நித்தி ரையில் ஆழ்ந்திருக்கும் அக்கம் பக்கத்தினரை பிரக்ஞையில் ஆழ்த்து ஒலி. நான் சிரமத்தோடு தண்ணீர் இறைத்து ஊற்றுகி றேன். ஆமினா சருகு, சுப்பல்களைக் கூட்டி விறகாக்கி அடுப்பை பற்ற வைக்கிறாள். இருவரும் ஒன்றாக ஸ்நானம் செய்து எத்தனை நாட்கள்! உடம்பில் லேசான சுடுநீர் பட்டால் ‘உற்சாகமாய் இருக்காதா? விடியல் கருக்கலில் புகைத்திட்டுகளுக்கு நடுவில் நின்று அவள் பிரயத்தனப் படுகிறாள்.

இப்போது, அல்லது, இன்னும் சிறிது நேரத்தில் சுடு தண்ணீ குளியல் முடியலாம். பிறகு? ஒழுச் செய்து குறித்த நேரத்தில் அல்லாஹு அக்பர் என்று தொழுகைக்கு நின்றால், உடலும் உள்ளமும் பரவசப்படும்.

இது என்ன? கண்கள் ஏன் கூசுகிறது? சுள் என்று சூரியக்கதிர், முகத்தில் அடித்துச் சுடர்கிறது. நன்றாக விடிந்து விட்டதா? பேத்தி வந்து குரல் கொடுக்கிறாள்.

‘அப்பா ! எழும்புங்க, கோப்பி ஆறுது!’

சரிதான் சுடுதண்ணிக் குளியல் சங்கதியெல்லாம், விடிய லில் படர்ந்த கனவா? அசிரத்தையுடன் முற்றத்துத் தரையை பெருக்கினாள் ஆமினா. முகத்தில் அசாதாரண வெறுப்பும் கவலையும் இழைந்தது. நான் கனிவோடு அவளைப் பார்த்தேன்.

‘சுபஹ் தொழுகை, மண்ணாய் பெயித்திட்டுது!’ என் முகத்திலறைந்தாற்போல் முனுமுனுத்தாள். குற்ற உணர்வின் வேதனையில், கோப்பியை மென்று குடித்தேன்.

– 18.12.1994, வீரகேசரி – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *