தவறுகள் தண்டிக்கும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 2,895 
 

ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை.

மனைவி, மக்கள்….. அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு மனைவி, மக்கள் தெரிகிறார்கள்.!!

முத்தம்மாளோடு இவன் சேர்ந்த பிறகு அவர்களை மறந்தே போனான்.

ரங்கநாதனுக்குத் திருட்டு, ஜேப்படி, வழிப்பறி… இது மாதிரி சட்டவிரோதமான தொழில். அவனுக்குச் சிறை ஒன்றும் புதிதல்ல.

முத்தம்மாள் தவறாமல் வாரம் ஒரு முறை சிறைக்கு வந்துவிடுவாள். கம்பிகளுக்கு அருகில் நின்று ஆறுதல் சொல்வாள்.

சென்ற முறைதான் அவள் வந்துவிட்டுச் சென்றபிறகு… இவர்கள் ‘ குட்டு ‘ உடைந்தது.

” யாரு ரங்கநாதா அது..? ….” போலீஸ்காரர் கணபதி கேட்டார். வாஞ்சையான மனுசன். மதிப்பிற்குரியவர்.

” பொஞ்சாதிங்க..ஏட்டைய்யா..! ”- தயக்கமில்லாமல் சொன்னான்.

” அது மாதிரி தெரியலையே..?! ” சந்தேகக் குரலில் சொன்னார்.

இந்த தடாலடியில் அவன் தடுமாறிப் போனான்.

” வ… வந்து…. வந்து….”

” உண்மையைச் சொல்லு…? ”

” சொல்றேன் ஏட்டைய்யா..! எனக்குக் சாக்கடைப் புத்தி. அங்கே இங்கேன்னு கையில அகப்பட்டத்தைச் சுருட்ட வேண்டியது. நினைச்சா வீடு. பெரும்பாலும் போலீசுக்குப் பயந்து தலைமறைவு. கையில காசு இருந்தா கண்ட கண்ட இடத்துல சாப்பாடு.. ஊர் மேயிறதையேத் தொழிலா வைச்சிருந்தேன். அப்படி மாட்டினவள்தான் இந்த முத்தம்மாள். ஒண்ணா சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டோம். பொண்டாட்டி , புள்ளைங்கள மறந்து…. இவளோட தனிக்குடித்தனம். வேலூர்ல தங்கிட்டேன். நானும், அவளும் தொழிலை மறக்கலை. கையில காசில்லேன்னா.. நானே ஆள் அழைச்சி வந்திருக்கேன். எங்களுக்கு இது அருவறுப்பாய்ப் படலை. எனக்குத் திருட்டு தொழில் மாதிரி… அவளுக்குப் ‘ பலான ‘ தொழில் அவ்வளவுதான். எனக்கு இவள் யோக்கியமா இருந்தா நான் அப்பப்ப சிறைக்குப் போகும்போதெல்லாம் இவளால குப்பைக் கொட்ட முடியாது. ” சொன்னான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கணபதி….

” உனக்கு எத்தினி புள்ளைங்க…? ”

” ரெண்டு பையன். ஒரு பொண்ணு..”

” எல்லாருக்கும் எத்தினி வயசு இருக்கும்..? ”

” எல்லாம் நண்டும் சிண்டுமாய் விட்டு வந்தது. தெரியல…”

” பிரிஞ்சி எத்தினி வருசம் ஆகுது..? ”

” தெரியல. கணக்கு வச்சிக்கலை. குத்து மதிப்பா பத்து வருசத்துக்கு மேல இருக்கும்..”

” நான் மனசுல பட்டதைச் சொல்றேன் . கேக்குறீயா…? ”

” சொல்லுங்க..? ”

” விடுதலையானதும் முத்தம்மாளை விட்டுடு..”

” ஏட்டைய்யா..!! ”

” பொண்ட்டாட்டி புள்ளைங்ககிட்ட போ. நீ செத்தா தாலியறுக்கிறவள் அவள்தான். கொள்ளி போடுற புள்ளைங்க முக்கியம். இரவல் சோறு என்னைக்கும் நிரந்தரமில்லே. நீ கை விட்டாலும் முத்தம்மாள் பொழைச்சுப்பாள். ஆனா உன் மனைவி மக்கள்..? ! ” கேட்டு அவனுக்குள் பொரியைக் கிளப்பினார்.

யோசித்தான். அவர் சொல்வது சரியென பட்டது.

சென்னை மந்தாரக்குப்பம் முன்னைவிட இப்போது அதிகம் மாறி இருந்தது. ரங்கநாதன் தன் இருப்பிடம் கண்டுபிடித்து குடிசை முன் நின்று…

” சிவப்பொண்ணு..! சிவப்பொண்ணு ! ” கூவி தன் மனைவியை அழைத்தான்.

இவன் குரல் கேட்டு அவள் வெளியில் வந்தாள்.

ஆளை அடையாளம் கண்டதும் முகம் மாறினாள்.

திக்கென்றது.

” தெ… தெரியலையா புள்ளே…? ” கேட்டான்.

” தெரியுது…!…”

” தெரியாத மாதிரி நிக்கிறே…? ”

” ஆமாம். ”

” ஏன்…??…”

” திரும்பிப்போயிடு.. ”

” சிவப்பொண்ணு…!!…” அதிர்ந்தான்.

” உறக்கக் கத்தாதே !. என் புருசன் முழிச்சுப்பான் ..” தாழ்ந்த குரலில் சொன்னாள்.

” சிவப்…! ”

” உஸ்..! உண்மையைச் சொல்றேன். நீ ஒருத்தியோட ஓடிப்போனதும் உடனே நான் வந்து ஒருத்தனோட குடும்பம் நடத்தலை. ரெண்டு மாசம்…. வருவேன்னு காத்திருந்தேன். வரவே இல்லே. ஏன்…? இருக்கியா, இல்லையான்னு தெரிவிக்காம, கண்டுக்காம இருந்தே. குழந்தைகளோட பசி, பட்டினி, … வேற வழி இல்லாம இந்த ஆளோட சேர்ந்து வாழறேன். இதுவரைக்கும் ஒரு குறையுமில்லாம காப்பாத்தறான் . புருசனை நம்பி அரசனைக் கைவிடுற காலம் மாறிப்போச்சு. இப்போ புருசனை நம்பி அரசனைக் கை விடுறதா இல்லே. கண்டவளோட குடும்பம் நடத்தி திரும்பி வர்றவனுக்கெல்லாம் இது நியாயமுமில்லே. ” சொன்ன சிவப்பொண்ணு….

அடுத்த வினாடி இவனிடம் எந்த பதிலையும் எதிர்பாராமல் மெல்ல கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றாள்.

‘ நியாயம்தானே ! ‘ – ரங்கநாதன் ஒரு வினாடி அப்படியே உறைந்து நின்றான்.

பின் மெல்ல திரும்பி நடந்தான்.

மனக்கண்ணில் முத்தம்மாள் தெரிந்தாள்.

தொடர்ந்து தவறு செய்ய அவன் மனம் தாயாராய் இல்லை. அதை அழித்து விட்டு….

‘ தொழிலைக் கை விட்டு இனியாவது எந்தத் தவறும் செய்யாமல் யோக்கியனாக வாழவேண்டும் ! ‘ நினைத்து தெளிவாக நடந்தான்.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)