வெளிநாட்டிலிருக்கும் மகன் சேந்தனிடமிருந்து வந்த கடிதத்தை, இரண்டாவது தடவையாக வாசித்துப் பார்த்தாள் சரஸ்வதி.
“அன்புள்ள அம்மா அறிவது! நீங்கள் இவ்விடம் வருவதற்கான, ஏற்பாடுகளெல்லாம் செய்திருக்கிறேன் . தாமதிக்காமல் புறப்படுங்கள். கொழும்புக்கு வந்து என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தியுங்கள். அவன் பாஸ்போட் மற்றும் எல்லா அலுவல்களும் செய்து உங்களை என்னிடம் கூட்டிக் கொண்டு வந்து சேர்ப்பான். உடனடியாக நீங்கள் உவ்விடமிருந்து புறப்பட்டால் தான் அடுத்த மாதத் தொடக்கத்தில் வரும் என் மகன் பிரணவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேரலாம். அம்மா இம்முறையும் இந்தப் பயண ஏற்பாட்டை நீங்கள் தட்டிக் கழித்து விட்டால் இனி நான் உங்களுக்குக் கடிதமே போடமாட்டன்”
இப்படிக்கு,
அன்பு மகன் சேந்தன்.
கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள் சரஸ்வதி. இதற்கு முன்னும் பலதடவை அவளைத் தான் இருக்கும் இடத்துக்கு வரும்படி அவன் கடிதம் எழுதியிருக்கிறான். அப்போதெல்லாம் கடிதத்தை வாசித்து விட்டு
“உந்த வெளிநாட்டுப் பயணமும் வெளிநாட்டு வாழ்க்கையும் எனக்குச் சரிப்பட்டு வராது. சிவனே என்று இந்த மண்ணிலேயே இருந்திட்டுப் போவம்” என்று சொல்லிக் கடிதத்தை வைப்பாள் சரஸ்வதி.
இம்முறையோ அப்படி, அலட்சியப்படுத்தி விடாமல் மகன் எழுதியிருக்கும் ஒரு விஷயம் அவளை யோசனையில் ஆழ்த்திவிட்டிருக்கிறது.
“அம்மா இம்முறையும் இந்தப் பயண ஏற்பாட்டை நீங்கள் தட்டிக் கழித்து விட்டால்
“இனி நான் உங்களுக்குக் கடிதமே போடமாட்டன்”
இப்படி எழுதியிருக்கிறான் மகன். அவனுடைய குணம் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.இருபத்தைந்து வயது வரை , அவளோடு கூட இருந்து வளர்ந்தவன்.
அவன் ஒன்றை நினைத்து விட்டானென்றால் அவனைப் பிறகு மாற்றவே முடியாது. இம்முறை அவள் போகாவிட்டால் அவன் நிச்சயமாய் கடிதம் போடமாட்டான்.
ஒரேயொரு மகன். இருபத்தைந்து வயதில் வெளிநாட்டுக்குப் போனவன் பிறகு ஒரு தடவை கூடத் தாயைப் பார்க்க வர முடியவில்லை கடிதம்தான் அவர்களிடையே இருக்கும் ஒரேயொரு தொடர்பு அதுவும் நின்று விட்டால் பிறகென்ன உறவு?
நினைத்துப் பார்க்கச் சரஸ்வதிக்கு நெஞ்சில் கலக்கமாக இருந்தது.
.”இந்த முறை எப்பிடியும் போகத்தான் வேணும் போலை கிடக்கு” தனக்குள் முணு முணுத்தாள்.
சமையலறையிலிருந்து மகள் கெளரி எட்டிப் பார்த்தாள்.
“என்னம்மா? ஏதும் குடிக்க வேணுமே?
“இப்ப அதொன்றும் வேண்டாம். நீ இஞ்சை வா பிள்ளை” கெளரி தாயிடம் வந்தாள்.
“இந்தா! சேந்தன்ரை கடிதத்தை வாசித்துப் பார்”
கடிதத்தை வாசித்து விட்டுக் கெளரி சொனாள்.
“அம்மா! அண்ணன்ரை பிடிவாதம் உங்களுக்குத் தெரியுந்தானே! நீங்கள் போகாட்டால் இனிக் கடிதமும் போடமாட்டார்”
“நான் போக நினைச்சாலும் உன்னை விட்டிட்டு எப்படியெடி போறது?”
கெளரி ஒன்றும் புரியாமல் தாயின் முகத்தைப் பார்த்தாள்.
“நான் என்ன குமர்ப் பிள்ளையே என்னை விட்டிட்டுப் போறதிலை உங்களுக்கென்ன தயக்கம்?”
இப்ப கொஞ்ச நாளாய் நீயும் உன் புருஷனும் அடிக்கடி மனஸ்தாபப்படுறது வாதாடுறதுமாய் இருக்கிறியள். நான் இடையிலை நின்று விலக்குத் தீர்க்கிறபடியால் ஏதோ இழுபட்டுக் கொண்டு போகுது பிள்ளை! அவர் பெரிய படிப்பெல்லாம் படிச்சவர். அவர் சொல்லுறது நன்மைக்காய்த்தான் இருக்கும். நீ அவர் சொல்லுறபடி செய்து ஒற்றுமையாய் இரு பிள்ளை”
அம்மா! ஆத்திரத்தோடு தாயை நோக்கினாள் கெளரி.
“அம்மா! அவருடைய மடத்தனத்தை நீயும் சரியெண்டு சொல்லுறதை நினைக்க எனக்கு ஒரே ஆத்திரமாய்க் கிடக்கு. நான் அதைச் சரியென்று ஏற்க மாட்டன்”
கெளரி தாயுடன் கோபித்துக் கொண்டவளாய் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். சரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.
கெளரியும் நல்லவள். அவளது கணவன் சங்கரனும் மிக நல்லவன் தான் அவர்கள் இருவரும் தேனும் பாலுமாய் , இல்லறம் நடத்தி கொண்டு இருந்தவர்கள். குழந்தை வளர்க்கும் விடயத்திலே தான் அவர்களிடையே பெரிய கருத்து வேற்றுமை தோன்றியது.
பிள்ளை வளர்ப்பிலே அவன் கடைப்பிடிக்கச் சொல்லும் முறை, அவளுக்குப் பிடிக்கவில்லை “இதென்ன புதுப் பாட,ம் என்று , அவள் முரண்பட்டு நிற்பதால் அவர்களிடையே அடிக்கடி மனஸ்தாபங்களும் சச்சரவுகளும் ஏற்பட்டுக் குடும்பத்தில் அமைதியில்லாமல் போய் விட்டது.
பட்டதாரியான சங்கரன் அரசாங்க நிறுவனமொன்றில் பெரிய பதவி வகிப்பவர். உத்தியோக விஷயமாக இடைக்கிடை வெளிநாட்டுக்குப் போய் வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும் அந்த வாய்ப்பில் பல்வேறு, மேலைத் தேச நாடுகளுக்கும் போய் வந்திருக்கிறார்.
மனைவியையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் வசதியும் அவருக்கு இருந்தது. வெளிநாட்டிலே தங்கி உழைக்கக் கூடிய வாய்ப்பும் இருந்தது ஆயினும் ஒரு தடவை கூட, அவர் மனைவியைக் கூட்டிக் கொண்டு போனதுமில்லை தான் அங்கே தங்கி உழைக்க நினைத்ததுமில்லை.
கடமையின் காரணமாக்த் தனியாகவே போய்க் கடமை முடிந்த உடனே திரும்பி விடுவார்.
அவருடைய பெற்றோர் , வயோதிப நிலையில் இருக்கின்றனர். வயதான காலத்திலே அவர்களுக்கு ஆதரவளித்துப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர். சங்கரன் தான் சொந்த ஊரில் இருக்கும் போதெல்லாம் வயதான பெறேறோருக்குத் தினசரி என்னென்ன செய்ய வேண்டுமோ ,, அத்தனையும் தானே போய்ச் செய்வார்.
தான் வெளிநாட்டுக்குப் போகும் போது அந்தப் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார் கெளரியும் அவரது விருப்பப்படி மிக அக்கறையோடு மாமன் மாமிக்கு வேண்டிய கடமை செய்வாள்.
தன் பெற்றோரை ஆதரவற்றவர்களாக்கி விடக்கூடதென்ற ஒரே காரணத்துக்காகத்தான் சங்கரன் மனைவியைத் தன்னுடன் வெளிநாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை அவர் நினைத்தால் , மனவியோடு உல்லாசமாய் வெளிநாடெல்லாம் சுற்றி வரலாம்..
தான் கூட இருந்து பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் தான் வெளிநாட்டுக்குப் போகும் நேரங்களில் மனைவி அந்தக் கடமையைச் செய்ய, வேண்டும். இந்த எண்ணத்தில்தான் அவர் குடும்பத்தோடு வெளிநாடு போனதுமில்லை.
தான் உத்தியோக விஷயமாகப் போகும் போது தாமதிக்காமல் திரும்பி விடுவார். அவர் தன் பெற்றோரை , எவ்வளவு அன்பாய் அரவணைத்துப் பாதுகாத்து வந்தாரோ, அதே போலத் தம் ஊர்ப் பழக்க வழக்கங்களிலும் பற்றுக் கொண்டிருந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் கு”ழந்தை பிறக்குமுன்பே மனைவியிடம் சொல்லி விட்டார்.
“குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுத்து வளர்க்க வேண்டும் புட்டிப் பால் வேண்டாம் . தாய்ப் பால் தான் எல்லாவித ஆரோக்கியத்துக்கும் நல்லது” என்று
கெளரி! தாயின் அன்பும் அரவணைப்பும் குழந்தைக்கு எப்போதும் இருக்க வேணும் குழந்தைக்குப் பக்கத்திலேயிருந்து கவனிக்கிறது தான் உன்ரை முக்கிய வேலை, மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் என்று மனைவியிடம் சொவார்,
இப்படியெல்லாம் சொல்லிக் கெளரியைக் குழந்தைகளை விட்டுப் பிரியாமல் பக்கத்திலேயே இருக்கச் செய்தவர்., முதல் தடவை வெளிநாட்டுக்குப் போய் வந்த பிறகு வேறுவிதமாகச் சொல்லத் தொடங்கி விட்டார்.
“மேலை நாடுகளில் குழந்தை வளர்க்கும் முறை மிகச் சுலபமாய்த் தெரியும் அது ஒரு நல்ல முறைதான். நாங்களும் அந்த முறையைப் பின்பற்ற வேணும்” என்று சொன்னவர் வீட்டில் அதைச் செயல் படுத்தவும் தொடங்கி விட்டார்.
மாமன் மாமிக்குப் பணிவிடை செய்வதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் , அவருடன் ஒத்துப் போகும் கெளரிக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை பிணங்கிக் கொண்டாள்.
சங்கரன் மேலை நாட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தான் வேலை நிறுவனத்துக்காக, சில விஞ்ஞான விஷயங்களை நேரில் அறிந்து கொண்டு வரப் போனவர், அவர்கள் குழந்தை வளர்க்கும் முறையையும் கற்றுக் கொண்டு வந்தார்.
மேலை நாட்டில் தெரிந்து கொண்டு வந்த, விஞ்ஞான விஷயங்களை வேலைத் தளத்தில் பயன்படுத்தியவர், அங்கு பார்த்த குழந்தை வளர்க்கும் முறையை வீட்டிலே நடைமுறைப் படுத்த ஆரம்பித்தார்.
அவரின் மூத்த மகன் குகனுக்கு ஐந்து வயதாகிறது, அடுத்தது பெண் குழந்தை ஸாம்பவி, ஒரு வயதாகும் கைக் குழந்தை.
குழந்தை அழுவதைக் கெளரி தாங்கிக் கொள்ள மாட்டாள்..தொட்டிலில் கிடக்கும் குழந்தைஅழுதவுடனேயே அவள் தன் கை வேலையை விட்டு விட்டு ஓடிப் போய்த் தூக்குவாள்.
“வேண்டாம் கெளரி! குழந்தைத் தூக்க வேண்டியதில்ல.. அது அழுது போட்டுக் கொஞ்ச நேரத்தில் ஓய்ஞ்சிடும் மேல் நாடுகளிலை போய்ப் பார் குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய ஆகாரத்தை கொடுத்து வேண்டியதை செய்து விட்டு, அதன் பாட்டில் விடுவார்கள் அழுதால் ஓடிப் போய்த் தூக்குவதில்லை குழந்தை அழுதால் ஒன்றும் குறைந்து விடாதாம் அவர்களைத் தம்பாட்டில் வாழக் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்குவார்கள்” என்று பிரசங்கம் செய்வார்.
தகப்பனாயிருந்தும் அழுகிற குழந்தையைத் தூக்கவேண்டாமென்று தடுக்கிறாரே” என்று ஆத்திரப்படுவாள் கெளரி.
“நாங்கள் எங்கடை வழக்கப்படிதான் , குழந்தையை வளர்க்க வேணும். மேலை நாட்டுக்குக்காரரைப் பார்த்துச் செய்ய வேணுமே?” கெளரி கோபமாய்க் கேட்டாள்.
“ஏன் செய்யக் கூடாது? எவ்வளவு பணத்தைச் செலவழித்து அவங்கடை விஞ்ஞானப் புதுமைகளைக் கற்று வரச் சொல்லி எங்கடை நிறுவனம் என்னை வெளிநாட்டுக்கு அனுப்புது ,அந்த விஷயங்களைச் செயற்படுத்துகிற மாதிரி இதையும் செய்தாலென்ன?”
அவர் விட்டுக் கொடுக்காமல் வாதாடுவார்.அவள் ஏற்கவே மாட்டாள் குழந்தையை எந்நேரமும் தூக்கி வைத்திருப்பாள், அவர் தடுப்பார் வாக்கு
வாதம் வளரும் சண்டை வரும் அவள் அழுவாள், மனஸ்தாபப்படுவாள் சரஸ்வதி தான் நடுவில் நின்று சமாதானப்படுத்துவாள்.
இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல மேல் நாடுகளில் குழந்தைகளைக் குழந்தைகள் காப்பகம் என்ற மாதிரி ஓரிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டுப் பகலில் பெற்றோர் வேலையைக் கவனிக்கப் போய் விடுவார்களாம் ., அப்படி விடுவதால் வித்தியாசமான பல முகங்களோடு பழகக் குழந்தைகளுக்கு எதற்கும் பயப்படாத தன்மை ஏற்படுமாம் .அதைச் சொல்லித் தன் குழந்தையையும் பகலில் எங்காவது விடுவதற்கும் ஆயத்தம் செய்தார்.
“நான் விட மாட்டன்” என்று கெளரி பிடிவாதமாய் நின்றாள்.
அதற்கும் சண்டைதான்.
அவர்களின் மகன் குகன் முதலாம் ஆண்டில் படிக்கிற சிறு பையன். அவனைத் தனித்தே பள்ளிக்கூடம் போய் வர விடுவார். பின்னேரங்களில் எங்காவது போய் , விளையாடிவிட்டு வா என்று அனுப்புவார். அப்படிதானாம் மேல் நாடுகளில்,சிறு பையனாக இருக்கும் போதே சுதந்திரமாகத் திரிய விடுவார்களாம்
தன் மகனும் கட்டுப்பாடற்ற ஒரு சுதந்திரத்தை ,உணர வேண்டுமென்பதற்காக அப்படி அவனைத் தனித்துப் போய் வரவும் விரும்பியதைச் செய்யவும் விடுவதாகக் கெளரியிடம் சொல்வார்.
கெளரிக்கோ துளியும் பிடிக்கவில்லை. சரஸ்வதியோ மருமகன் மீது பெரிய மதிப்பு வைத்திருந்ததால் , அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டாள்.
அவர் சொல்கிறபடி செய் என்று மகளுக்குப் புத்திமதியும் சொல்வாள்., கெளரியோ கேட்பதாயில்லை.
அந்த நிலையில் தான் சரஸ்வதிக்கு மகனிடமிருந்து வெளிநாட்டுப் பயண அழைப்பு வந்திருக்கிறது. போகாவிட்டால் மகன் கடிதமே போடமாட்டான் கெளரியை இந்த நிலையில் விட்டுப் போகவும் அவளுக்கு விருப்பமில்லை. அவள் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்தாள்
இந்த முறை எந்தக் காரணத்தைக் காட்டியும் சேந்தனைச் சமாதானப்படுத்த முடியாது அவனுடைய தொடர்பு நீடிக்க வேண்டுமானால் எப்படியும் போயே தீர
வேண்டும். அவளுக்கு மகனிடம் போக வேண்டுமென்ற விருப்பமும் அடி மனதில் எழுந்து விட்டது அவளுடைய தவிப்பைப் பார்த்து விட்டுச் சங்கரன் சொன்னார்.
“மாமி! என்ரை பிள்ளைகள் கெட்டிக்காரனாய் நல்ல அறிவாளிகளாய் வரவேணுமெண்டதுக்காகத்தான் நான் சில முறைகளைக் கையாளுறன் கெளரியை நான் சமாளித்து வழிக்குக் கொண்டு வருவன், நீங்கள் யோசிக்காமல் புறப்படுங்கோ”
மருமகன் இப்படிச் சொன்ன பிறகு “கடவுள் துணை“ என்று தேற்றிக் கொண்டு பயணத்துக்கு ஆயத்தமானாள். எத்தனை பேர் வெளிநாடு போவதற்காகக் கொழும்பில் நெடுநாளாய்த் தவம் கிடக்கிறார்கள்.
சரஸ்வதிக்கோ மகனின் பணமும் மருமகனின் செல்வாக்கும் சேர்ந்து வேலை செய்ய வெகு சீக்கிரத்திலேயே மகனிடம் போய்ச்ச் சேர்ந்தாள்.
.மகனும் மருமகளும் அவளை நன்றாக உபசரித்தனர் தன் பிதுரார்ஜித பேரனின் அழகிலும் குளுமையிலும் டடி மம்மி கிராண்மா” என்று கொஞ்சுகிற மழலையிலும் மனதைப் பறி கொடுத்தாள். அவளுக்கு அந்நாட்டின் குளிர் சுவாத்தியம் வித்தியாசமான சூழ்நிலை இவை ஏதும் பெரிதாய்த் தெரியவில்லை.
பேரனின் பிறந்த நாளுக்குக் கணக்காய்த்தான் அவள் போயிருந்தாள். அவள் போய் ஐந்தாறு நாட்களில் பிறந்த நாள் வந்தது. தாயும் வந்து விட்ட மகிழ்ச்சியில் கோலாகலமாய் பிறந்த நாள் விழா செய்ய ஏற்பாடு செய்தான் சேந்தன்.
அவனுக்குத் தொழில் முறையிலேயே , நிறைய வெள்ளைக்கார நண்பர்கள் உண்டு. அவர்களிலே இளைஞர்களும் இருக்கிறார்கள் எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்தான் பெரிய பிரமாண்டமான மண்டபம் , விழாவுக்காக ஏற்பாடு செய்தான் .நடுவில் பெரிய மேடை. தாயையும் மேடையிலேயே இருக்க வைத்தான்.
பட்சண வகைகள் விதவிதமாய் இருந்தன .எத்தனை வகையான கேக் வடிவங்கள். எத்தனை போத்தல்கள் கிளாஸ்கள்.
புது விதமான உடையலங்காரத்தோடு சரஸ்வதியின் பேரன் கேக் வெட்டினான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தான் போட்டோ வீடியோக் கமெராக்கள் சுற்றிச் சுற்றிப் படம் பிடித்தன.
இவைகளில் மனம் லயித்து விட்டதில் மகள் கெளரியையும் அவளது பிரச்சனையையும் அடியோடு மறந்திருந்த சரஸ்வதி, விழாவுக்கு வந்திருந்த மனிதர்களைப் பார்த்தாள். அரைவாசிப் பேர் தமிழர்களாயிருக்கலாம் மிகுதி அந்நாட்டவர்கள்தான். அவர்களுடைய பழுப்பு நிறத் தலை மயிரும் சின்னச் சின்னக் கண்களும் , ரோஸ் வண்ண முகமும் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.
திடீரென்று அந்த மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி அவளது கவனத்தை ஈர்த்தது. அந்நாட்டவர்கள்தான் ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தபடி நெருக்கமாய் வந்த அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் அந்தக் காட்சி கொடுத்த தாக்கத்தினால் முணு முணுத்தாள் சரஸ்வதி.
“இதுகளுக்குப் பதினைந்து வயது இருக்குமோ? இவ்வளவு சனத்துக்கு முன்னாலை வெக்கப்படாமல் கை கோர்த்துக் கொண்டு வருகுதுகள்.”
அந்த ஜோடி இணைபிரியாமல் கைகோர்த்தபடியே ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சரஸ்வதிக்கு அவர்களைப் பற்றி அறிய ஆவலாக இருந்தது.
விருந்தினர்களை உபசரித்துக் கொண்டிருந்த சேந்தனைக் கூப்பிட்டாள் ”சேந்தன் அதிலை இருக்கிற இரண்டு பேரையும் பாரடா! கை கோர்த்துக் கொண்டு வந்தினம் . ஒட்டிக் கொண்டு இருக்கினம்“
தாயின் பேச்சைக் கேட்டுச் சிரித்தான் சேந்தன் “அம்மா! அவையள் லவ் பண்ணினமாக்கும் . சோடி போட்டுக் கொண்டு வந்திருக்கினம். படிக்கிற பிள்ளையள் இன்னும் எத்தனை பேர் சோடியாய் வருவினம் . இருந்து புதினம் பாருங்கோ!.” அவன் சொல்லி விட்டு விலக நினைத்தான். சரஸ்வதி விடவில்லை “சேந்தன்! இனிப் படிப்பு முடியத்தானே உவை கல்யாணம் முடிப்பினம்“
அவன் சிரித்தான் அம்மா! கல்யாணம் முடிக்கிறது நிச்சயமில்லை எத்தனை நாளைக்கு உவை சோடியாய் திரிவினம் என்பதும் தெரியாது. சில வேளை கொஞ்ச நாள் கழித்து அவன் வேறு ஒருத்தியோடை பழகுவான் . அல்லது
அவள் வேறை ஒருத்தனோடை திரிவாள். இந்த நாடுகளிலை இதெல்லாம் சகஜம் . அம்மா ! இதைப் பற்றிப் பெரிசாய் ஒருத்தரும் கதைக்க மாட்டினம்.”
சரஸ்வதி வாயடைத்துப் போய் இருந்தாள் சேந்தன் புதிதாய் வருகிறவர்களை வரவேற்க ஓடினான். வேறொரு ஜோடி வந்தது. அந்தப் பதினைந்து வயது ஜோடி போலவே இவர்களும் கைகோர்த்தபடி வந்தனர்.
“ ஐம்பது வயசும் இருபத்தைந்து வயசும் போலக்கிடக்கு” எரிச்சலோடு முணுமுணுத்த சரஸ்வதி மருமகளைக் கூப்பிட்டுக் கேட்டாள்.
பிள்ளை! அந்த சோடியைப் பாருங்கோ! மனுசன் கிழவனாய்க் கிடக்கு மனுசி இளமையாக் கிடக்கு இரண்டாம் தாரமோ?”
“மாமி! உங்கடை மகன்ரை சினேகிதன் தான் அவருக்கு இது மூன்றாம் தாரம் அவளுக்கு இரண்டாம் தாரம்”
“ எனக்கு விளங்கேலைப் பிள்ளை”
“ அவள் முதல் ஒருக்கால் கல்யாணம் செய்து டிவோஸ் பண்ணினவள். அவர் இரண்டு கல்யாணம் இரண்டு தரமும் டிவோஸ் பண்ணிட்டார். இப்ப இவளைக் கல்யாணம் செய்திருக்கிறார்.” விஷயத்தை விளக்கி விட்டு மருமகள் விலகினாள் தலை வலித்தது சரஸ்வதிக்கு வாந்தி வருவது போல் குமட்டியது.
அவள் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்து, அந்த இடத்திலேயே ஒரு விவசாயக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டுக் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற மனத் திண்மையோடு வாழ்ந்து கொண்Hடிருந்தவள், அவள் தன் புருஷனை முதலில் பார்த்தது மணவறையில் தாலி கட்டும் போதுதான்.
காலம் மாறி விட்டது நம்முடைய கடும் பிடிகள் தளர்ந்து விட்டன என்பதைத் தன் பிள்ளைகளின் கல்யாணத்தின் போதே அவள் அறிந்திருந்தாள். எனினும் இந்த வெளியுலகத்தின் அப்பட்டமான சுதந்திரத்தன்மையை அவளுக்கு ஜீரணித்துக் கொள்ள முடியாமலிருந்தது.
சரஸ்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை கண்களை ஓட விட்டு மகனைத் தேடினாள் மகனைக் காண்பதற்குள் திடீரென்று , மேடையில் ஒருத்தி ஏறி
நடனம் ஆடத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஓர் இளைஞன் வந்து அவளோடு கை கோர்த்து ஆடினான் அவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் போதே, சேந்தனும் மேடைக்கு வந்து ஆட ஆரம்பித்தான்.
மகன் ஆடுவதைப் பார்க்கச் சரஸ்வதிகுச் சங்கடமாக இருந்தது.
பதினைந்து வருடங்களுக்கு முன் ஊரிலே வைரவர் கோவில் திருவிழாவில் வேட்டி கட்டிக் கொண்டு பஞ்ச புராணம் பாடிய சேந்தனா இப்படி ஆடுகிறான்?
மேசையில் குவிந்து கிடக்கும் போத்தல்கள் கிளாஸ்களைப் பார்த்த போது அவளுக்கு மகனின் நிலை புரிந்து போயிற்று அவர்களது ஆட்டங்கள் பாட்டங்கள் முடிந்து வந்தவர்கள் விடை பெற்றுக் கொண்டு போயினர்.
சேந்தனும் மனைவியும் ஒவ்வொருவராய்க் கைகுலுக்கி, அனுப்பி விட்டுச் சரஸ்வதியிடம் வந்தனர் .”அம்மா! இனி வீட்டுக்குப் போவம்“
சேந்தன் தாயின் கையைப் பிடித்தவாறு கூட்டி வந்து காரில் ஏற்றினான். வீட்டுக்கு வந்தவுடனே தடித்த கம்பளியால் போர்த்துக் கொண்டு படுத்து விட்டாள் சரஸ்வதி படுத்தாலும் உறக்கம் வரவில்லை.
தன் மனக் குழப்பத்தை மகனுக்கோ மருமகளுக்கோ அவள் சொல்லவில்லை இந்த அந்நிய நாட்டுப் பிரஜைகளாகி இனி இந்த அந்நிய நாட்டில் தான் வாழப் போகிறோம் என்ற தீர்மானத்தோடு இந்தச் சூழலின் பழக்க வழக்கங்களோடு ஐக்கியமாகிக் கொண்டு வரும் அவர்களுக்குத் தன் குழப்பத்தைச் சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்தவள் ,இப்படியொரு பரிணாமம் ஏற்பட்டு விட்டது , இனி என்ன செய முடியும் என்று பெருமூச்சு விட்டாள்.
மகனப் பற்றியோ மருமகளைப் பற்றியோ அவளுக்குக் கவலயில்லை அவர்களின் மகன் பிரணவனை நினைத்துதான் அவள் குழம்பிப் போனாள் பிரவணன் என்ற பெயர் தான் சூட்டியது என்பதை நினைத்தபோது அவளுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது மருமகள் கர்ப்பிணியாக இருந்தபோது சேந்தன் எழுதியிருந்தான்.
“அம்மா! உன் மருமகளின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று சொல்லி விட்டார்கள். உன் பேரனுக்கு என்ன பெயர் வைப்பது?”
சரஸ்வதிக்கு மிக மகிழ்ச்சி பிரணவன் என்ற பெயர் வை அது எப்போதும் புதுமையாய் விளங்கக்கூடிய பெயராயிருக்கும் என்று பதில் எழுதினாள்.
“தன்னுடைய விருப்பப்படி பேர் வைச்சுக்கிடக்கு ஆனால் இவனுடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருக்குமோ? இந்த அந்நிய மண்ணிலே பிறந்து இப்படியொரு சூழலிலை வளரப் போகிற இவன்ரை குணங்கள் பண்புகள் இந்தச் சூழலை அண்டித்தானே இருக்கப் போகிறது. அவள் கற்பனை செய்து பார்த்தாள் திருமணம் செயப்போவது நிச்சயமற்ற நிலையில் இளமைப் பருவத்தில் கால் வைத்த உடனேயே சோடி தேடிக் கை கோர்த்துக் கொண்டு திரிந்து மேடையில் சோடியாய் நடனமாடி , ஒரு கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் இவர்களை போலத்தானே தன் பேரனும் வரப்போகிறான் என்று அவளுக்குத் தோன்றியது .பேரனைப் பற்றிய கவலையோடு இரவு கழிந்தது.
காலையில் எழுந்ததுமே சேந்தன் தாயைக் கவனித்து விட்டான்.
“அம்மா! ஏன் டல்லா இருக்கிறீங்க”? ஏதும் சுகவீனமோ?”
“ஒன்றுமில்லை“ என்று அவள் சமாளித்தாள். அவளை உற்சாகப் படுத்த விரும்பினான் சேந்தன்.
“சிறீலங்காவிலிருந்து தமிழ்ப் பேப்பர்கள் வந்திருக்கும். போய் வாங்கி வாறன் என்று சொல்லி விட்டுப் போனவன், நாலைந்து தமிழ் பத்திரிகைகள் வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான்.
ஒரு பேப்பரை எடுத்தாள் சரஸ்வதி.
மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தாள். முதற் பக்கம் வாசித்து முடித்து, இரண்டாம் பக்கம் திருப்பினாள் பெரிய எழுத்தில் தலைப்புப் போடப்பட்டிருந்தது.
“மேலை நாடுகளைக் கலக்கிக் கொண்டிருந்த எயிட்ஸ் நோய் தற்போது கீழைத் தேசங்களிலும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சிலர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் வாசித்தாள் சரஸ்வதி. அவளுக்கு வேதனையாயிருந்தது அருவருப்பாயிருந்தது மனம் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தது,
நேற்று இரவிரவாய் நடந்த ஆட்டங்களும் பாட்டங்களும் கைகோர்த்தல்களும், டிவோஸ் பண்ணுதலும் மீண்டும் மீண்டும் திருமணம் செய்தலும் இவையெல்லாம் அவள் நினைவில் வந்தன.
“இப்படியெல்லாம் வாழ்கின்ற மேலை நாடுகளில் எயிட்ஸ் நோய் இருக்கிறதென்றால் அதொறும் பெரிய விஷயமல்ல. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டோடு வாழ்கின்ற இலங்கை போன்ற இடங்களிலும் எயிட்ஸ் என்றால் என்ன இது?
அவளின் மனம் சலித்துக் கொண்டது இலங்கை என்றதும் திடீரென்று மகள் கெளரியும் அவள் பிரச்சனையும் பூதாகாரமாய் நினைவில் வர, ஏதோ ஆவேசம் வந்த மாதிரிப் பெரிய குரலில் “சேந்தன்”என்று கூப்பிட்டாள்.
“நான் பக்கத்தில் நிக்கிறன் ஏனம்மா சத்தமாய்க் கூப்பிடுறியள்?”
திகைப்போடு கேட்டபடி சேந்தன் தாயின் முன் நின்றான்,
“தம்பி! நான் உடனே இலங்கைக்குப் போக வேணும் அப்பிடி அவசரமாய் ஒரு அலுவல்இருக்குதடா தம்பி”
“அப்பிடி என்ன அலுவல் அம்மா?”
“உன்ரை அத்தான் சங்கரனுக்குக் கொஞ்ச நாளாய் ஒரு பைத்தியம் பிடிச்சிருக்கு தன்னுடைய பிள்ளைகளைக் கட்டுப்பாடில்லாமல் அவர்களின்ரை போக்கில் விட்டுச் சுதந்திரமாய் வளர்க்க வேணும் மேலை நாடுகளில் அப்படித்தான் அது இது என்று கெளரியோடை பெரிய சண்டை கெளரிக்கு அது பிடிக்கேலை நான் அவரை நல்ல மனுஷன் என்று நினைச்சதால், அவர் சொல்லுறது சரியெண்டு கெளரியைத்தான் ஏசுவன் .இங்கை வந்து பார்த்து இந்தக் கட்டுரையையும் வாசித்த பிறகுதானே அவர் நடத்திய பாடம் தவறான பாடம் என்று கண்டு கொண்டன்”
இப்ப எங்களுடைய ஆக்கள் படிப்பு தொழில் வாய்ப்பு என்று மேல் நாடுகளுக்கு வந்து போகத் தொடங்கியதில் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பழகினதோடு அவர்களைப் போல வாழவும் தொடங்கி விட்டினம் போலக் கிடக்கு அதின்ரை பெறுபேறுதான் எயிட்ஸ் நோய் கீழ் நாடுகளிலையும் வந்திட்டுதாம் மேல் நாடுகளிலையிருக்கிற நல்ல விஷயங்களைப் பின்பற்றலாம் ஆனால் இந்த வாழ்க்கை விஷயத்திலே எங்களுக்கு ஒரு வரைமுறை இருக்கு ஒரு ஒழுங்கு இருக்கு ஒரு கட்டுக்கோப்பு இருக்கு
எங்கடை வாழ்க்கை முறையின்படிதான் நாங்கள் வாழ வேணும். குழந்தைப் பருவத்திலிருந்தே எங்கடை பிள்ளைகளை அந்தப் பண்பாட்டோடு அந்தப் பழக்கத்தோடு பிணைத்தவர்களாய்வளர்க்க வேணும்.
“அதை விட்டிட்டுக் கட்டுப்பாடில்லாமல் அவர்களின்ரை போக்கில் விட்டுப் புது முறையில் குழந்தை வளர்க்கப் போறாராமென்ரை மருமகன். அது பெரிய தவறென்று நான் கெதியிலை போய் விளங்கப் படுத்தவேணும். நான் போறதுக்கு ஒழுங்கு செய் தம்பி”
ஒரு பெரிய விஷயத்தைப் பற்றித் தாய் சொல்கிறாள் என்பது சேந்தனுக்குப் புரிந்தது. சரஸ்வதியின் வேண்டடுகோளை அவன் மறுக்கவில்லை தாயை அனுப்பும் முயற்சியில் மும்முரமானான்.
வீரகேசரி 03.01.1999