மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம் செய்து கொண்டிருந்தார்கள். என்
பார்வை கோவிலின் அருகேயிருந்த மைதானம் நோக்கிச் சென்றது.தள்ளுவண்டியில் வியாபாரம் மும்முரமாக
நடந்து கொண்டிருந்தது.உள்ளேயிருந்து என் மனைவி”என்ன வேடிக்கை பாக்கறேள்? என்றவாறே வந்தாள்.
ஒண்ணுமில்ல,நம்ம ஹரியோட தள்ளுவண்டி வியாபாரத்தப் பாத்துண்டிருக்கேன்.என்னமாத்தான் வியாபாரம்
பண்ணறான்!
”ஆமாம்,ரொம்ப நன்னா வியாபாரம் நடக்கறது.பக்கத்தில ஒரு எடம் வாங்கியிருக்கானாம்.சீக்கிறமே அங்க
ஒரு கேண்டீன் ஆரம்பிக்கப்போறானாம்.அவன் அம்மா சொன்னா.” என்றாள் என் மனைவி.
ஹரியின் அம்மா சுந்தரிமாமி இந்த ஊருக்கு இப்பத்தான் வந்தது போலிருக்கு.அதுக்குள் எவ்வளவு மாற்றங்கள்!சுந்தரி மாமி இந்த ஊருக்கு கணவர் லக்ஷ்மண ஐயரோடும் நாலு குழந்தைகளோடும் வந்தாள்.குழந்தைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்று மாமிக்கு ரொம்ப ஆசை.அவர்,சமையல் எடுபிடி வேலைகளுக்குப் போவார்.சில சமயம் ஹோமம்,ஜபம்,திவசம் போன்ற விசேஷங்களுக்கும் போவார்.மாமி ரொம்ப கெட்டிக்காரி.வந்த புதிதில் அரிசிஅப்பளாம், உளுந்து அப்பளாம் இட்டுக் டுத்தாள்.ஹரியின் அப்பா வீடுகளில் கொண்டு போய் அப்பளக் கட்டுகளைக் கொடுத்துவிட்டு வருவார்.
ஹரியை ஒன்பதாம் வகுப்பில் சேர்ப்பதற்காகத்தான் கிராமத்திலிருந்து பாளையங்கோட்டைக்கு வந்தாள்.அடுத்த பெண் விஜி ஏழிலும்,கோபியை ஆறிலும், சாரதாவை மூணாவதிலும் சேர்த்தாள்.ஆனால் ஹரியைத்தவிர எல்லாக் குழந்தைகளுமே நன்றாகப் படித்தார்கள்.ஹரிக்கு அவ்வளவாக படிப்பில் நாட்டம் செல்லவில்லை.மாமிக்குக் கூடமாட அப்பளம் காயவைப்பதிலும் பாக்கிங் செய்வதிலும் மிஷினுக்குச் சென்று வருவதிலும் உற்சாகமாக வேலை செய்வான்.என் மனைவிக்கு உதவி செய்ய மாமி வருவாள்.சமையல் வேலைக்குத்தானே வந்திருக்கிறோம்.வேறு வேலைகளை ஏன் செய்ய வேண்டும் என்றுநினைக்க மாட்டாள்.ஈரத்துணிகள் இருந்தால் உடனே உலர்த்துவாள்.ரேஷன் கடைக்குப் போகும் போதும் வேறு கடைகளுக்குப் போகும் போதும் ஏதாவது வேண்டுமா என்று கேட்டு வாங்கி வருவாள்.போஸ்ட் ஆபீஸ் போனாலும் ஏதாவது வேண்டுமா என்று கேட்பாள்.இப்படி அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு மாமி உதவி செய்ததால் மாமி ரொம்பவும் பாபுலராகி விட்டாள்.இதற்கிடையில் ஒரு கிரைண்டர் வாங்கி மாவும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள்.விஜி கொஞ்சம் பெரியவளாகி விட்டதால் அவள் உதவினாள்.மெள்ள மெள்ள அந்தத்தெருவில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் சுந்தரி மாமி தான் சமையல் என்றானது.
சுந்தரி மாமி ஆசைப்பட்டதுபோல் ஹரிக்கு படிப்பு ஏற்வில்லை.பத்தாவது,பன்னிரண்டாவது இரண்டிலுமே இரண்டு வருஷத்தான்.இனிமேல் படிக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.அவனுக்கு சமையல் கலையில் நாட்டமிருந்தது!
மாமி எங்களிடம் வந்து ரொம்பவே வருத்தப்பட்டாள்.”மாமி, அவனுக்கு இஷ்டம் இல்லை என்றால் கட்டாயப் படுத்தாதீர்கள்.அவனுக்கு எதில் நாட்டம் இருக்கிறதோ அதில் ஈடுபடச் சொல்லுங்கள்”விஜி நல்ல மார்க்கு வாங்கியிருக்கா.அவளை மேலே படிக்க வையுங்கோ”.பொண்கொழந்தைக்கு மேல படிக்க வைக்கணுமான்னு நெனைக்காதேங்கோ.அவளை ஹிந்தியும் டைப்பும் கூட படிக்க வையுங்கோ”.அவளை சாரதா காலேஜில் சேர்த்தாள்.விஜியின் மார்க்குகளைப் பற்றி கேள்விப்பட்ட விஜியின் அத்தை அவள் படிப்புச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னாள்.விஜியின் பஸ்,புத்தகச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
ஒரு நாள் மாமியும்,ஹரியும் வந்து”மாமா,ஒங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.அப்பா கூட சமையல் வேலைக்குப் போனதில எனக்கு சமையல் வேலை நான்னாவே பிடிபட்டிருக்கு.இப்படியே சமையல் வேலைக்குப் போறதும்போறும்னு தோணறது. நானே சொந்தமா ஒரு தள்ளு வண்டில வியாபாரம் பண்ணினா என்னன்னு தோண்றது.எதுத்தாப்ல இருக்கற மைதானத்திலஒரு தள்ளு வண்டிக்கடை போட்டா நன்னா வியாபாரம் ஆகும்.இங்க பக்கத்தில கடையோ ஹோட்டலோ இல்லை.அப்பாவும் வெளில வேலைக்குப் போக வேண்டாம்.கோபி ஸ்கூலுக்குப் போகும் முன்னாலேயும் சாயங்காலம் ஸ்கூல்ல இருந்து வந்தப்பறமும் கூடமாட கடைல இருக்கலாம்” என்றான்
“மாமி,எங்க அண்ணா பையன் இவன்கூட வேலைக்குப் போயிண்டிருக்கான்.இவா ரெண்டுபேரும் சேர்ந்து தான் இப்படி யோஜனை
பண்னியிருக்கா.நான்தான் ஒங்ககிட்ட கேட்டுண்டு செய்யலாம்னு சொன்னேன்’
”நல்ல,ஐடியா! அப்பொ எங்களுக்கெல்லாம் சுடச்சுட நல்ல டிபன் கெடைக்கும்னு சொல்லு.”
”மாமி,நான் மொத மொதல்ல மாவறச்சுக் குடுக்கணும்னு சொன்ன போது நீங்க தான் கிரைண்டர் வாங்க முன் பணம் கொடுத்தேள்.
அதே மாதிரி தையல் மிஷின் வாங்கவும் பணம் தந்தேள்”.
”அதுக்கென்ன இப்போ,நீயுந்தான் கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் குடுத்திட்டயே’.
“இப்பொ தள்ளூவண்டி வாங்கணும்.கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்கள் காஸ் அடுப்பு காசரோல்,எல்லாம் வாங்கணும்.ஏழாயிரம் எட்டாயிரம் ஆகும்னு தோணறது.பாங்கில லோன் கேட்டாத் தருவாளா?இப்பொ சின்ன சின்ன விசேஷங்களுக்கு அம்பதுபேர் அறுபதுபேர்களுக்கு சமையல் செய்து தருவேளான்னும் கேக்கறா.என்ன சொல்லறதுன்னு தெரியல.நீங்கதான் எப்படியாவது ஏற்பாடு பண்ணித்தரணும். ஒங்களத்தான் மலபோல நம்பியிருக்கேன்.ஒங்க கை ராசியான கை.” என்று மூச்சு விடாமல் பேசினாள்சுந்தரி மாமி.
”தாராளமா செய்யலாம்.சுய தொழில் செய்யறத இப்பொ கவர்ன்மெண்டும் என்கரேஜ் பண்ணறது.அதனால பாங்க் லோன்
ஒண்ணும் பெரிய விஷ்யமில்லை.ஜமாய்ச்சுடுவோம்” என்றேன்.ஒரு நல்ல நாளில் ஹரியும் அவன் மாமாபையன் ராஜாமணியும் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.காலையில் பொங்கல்,பூரிமசால்,உளுந்துவடை,இட்லி சட்னி,சாம்பார்! மாலையில் சப்பாத்தி,குருமா,பருப்புவடை,தோசை என்று மைதானத்தில் வியாபாரம் சூடு பிடித்தது.மைதானம் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக இருந்ததால் வியாபாரம் கொடி கட்டிப்பறந்தது.சுந்தரிமாமியின் கைமணமோ,ஹரியின் வாய்ச்சாதுரியமோ,கார்களிலும் ஆட்ட்டோக்களீலும் அந்த வழியாகச் செல்பவர்கள் ஹரியின் வண்டிக்கருகில் நிறுத்தி பார்சல்கள் வாங்கிக்கொண்டு போனார்கள்
ஹரியின் அப்பா கடைகளுக்குப் போய் சாமான்கள் வாங்குவதும் வீட்டில் சாமான்கள் தயார் செய்வதுமாக பிஸியாகிவிட்டார்.ஒரே சமயத்தில் மூன்று கிரைண்டர்கள் ஓடுவதால் அவர் ரொம்பவே பிஸி.இப்பொழுதெல்லாம் மாமி ஒருத்தியால் சமாளிக்க முடியாததால் ஊரிலிருந்த தன் அண்ணா,மன்னி இருவரையும் அழைத்துவந்து வீட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இடம் போதவில்லையென்று பெரிய வீட்டிற்கு மாறி விட்டார்கள்.பாத்திரம் தேய்க்கவும் இரண்டு பெண்கள் வரு¢கிறார்கள்.
ஹரியின் வியாபார வளர்ச்சியைப் பார்த்த பாங்க் மானேஜர் லோன் தர முன்வந்ததால் ஒரு ஆட்டோவும் வாங்கி விட்டான்.
விசேஷ வீடுகளுக்கு ஆட்டோவில் சாப்பாடு போகிறது.எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபடுவதால் எல்லாம் சாத்தியமாகிறது.விஜிக்கு
நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து சென்னையில் லேடீஸ் ஹாஸ்டலிலிருக்கிறாள்.
யோஜித்துக் கொண்டே யிருந்ததில் சுந்தரிமாமி, மாமா,ஹரி மூவரும் வந்ததைக் கவனிக்கவில்லை.ஹரியின் அப்பா தான் பேசினார்
”சார்,இங்க வாய்க்கால் பாலம் ஸ்டாப் பக்கத்தில ஒரு எடம் வெலைக்கு வந்தது.அங்க நிரந்தரமா கடை போட்டா தேவலைன்னு ஹரி சொல்லறான்.நீங்க ஊர்ல இல்லாததால ஒங்ககிட்ட கேக்க முடியல.பாங்க் மானேஜர் கிட்ட போய்க் கேட்டோம்.அவரும் லோன்
தரேன்னு சொல்லிட்டார்.எல்லாம் நீங்க ஆரம்பிச்ச நேரம்.ரொம்ப நன்னாப் போயிண்டிருக்கு.இப்பத்தான் நாள் பாத்துட்டு வறோம்.அடுத்த வெள்ளிக்கிழமை நாள் நன்னாயிருக்கு.நீங்களும் மாமியும் வந்து பூஜைல கலந்துண்டு எங்கள ஆசீர்வாதம் பண்னணும்”என்றார் பரவாயில்லயே,ஹரியின் அப்பா கூட இவ்வளவு நன்றாகப் பேசுகிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.
”அப்ப ஹரி, இந்தத் தள்ளுவண்டி வியாபாரம் அவ்வளவுதானா?என்றேன்
”அதெப்படி விடமுடியும்? இங்கயிருக்கற ரெகுலர் கஸ்டமர்கள விடமுடியுமா? எங்க அப்பாவும் மாமாபையனும் காண்டீன கவனிச்சுப்பா.நானும் மாமாவும் தள்ளு வண்டிய கவனிச்சுப்போம்.என்ன மாதிரி இன்னும் நாலு பசங்க வரப்போறா.மொதல்ல ஆரம்பிச்ச நடை பழகின தள்ளு வண்டிய மறப்பேனா? என்றான் ஹரி.
– ஜூன் 2007