தலை முறை நேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 6,655 
 
 

“சமர்த்தாக இருக்கணும். ஒழுங்கா ஸ்கூல் போகணும். நன்னா படிக்கணும். அம்மாவை படுத்த கூடாது ” வழக்கம்போல கோடை லீவிற்கு கிராமத்திற்கு வந்திருந்த பேரனுக்கு புத்தி சொன்னாள் பாட்டி.

ம்….ம் …பதில் சொல்லிக்கொண்டே பாட்டி மடியில் உறங்க ஆரம்பித்தான் ஏழு வயது சிறுவன் சாய்.

இதோ …… இரண்டு வாரம் ஆயிற்று அம்மா மற்றும் அக்காவுடன் மாமா வீட்டிற்கு வந்து. மறுநாள் அப்பா ரமேஷ் வந்தவுடன் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு ஊருக்கு கிளம்பினார்கள். இப்போது பாட்டியின் அறிவுரைகள் அம்மாவுக்கு “பசங்களை நன்னா கவனி ; அடிக்காதே ” என்றானது.

கிளம்பும்போது சாப்பாட்டு கேரியர் ஒன்றை, “இட்லியும், தயிர் சாதமும் வைத்து இருக்கேன். மத்தியானம் இரயிலில் சாப்பிட” என்று சொல்லிக்கொண்டே பாட்டி மற்ற பெட்டிகளுடன் கொண்டு வந்து வைத்தாள்.

ஏம்மா….விடியற்காலையில் எழுந்து இவ்வளவு சிரமம் உனக்கு ; கேன்டீன்ல வாங்கிக்கொள்ளலாம்; இல்லாவிட்டால் ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் என்றாள் அம்மா.

பெரியவர்கள் நீங்கள் இருவரும் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ ; இது குழந்தைகளுக்காக என்றாள் அக்கறையுடன் பாட்டி. எல்லோரும் ஊருக்கு கிளம்பினார்கள்.

இரயிலில் வந்து கொண்டு இருந்த போது என்னப்பா …. எப்படி இருந்தது இந்த விடுமுறை? என்றான் ரமேஷ் .

“ஜாலியா இருந்ததுப்பா. தினமும் பாட்டியுடன் குளத்திற்கு சென்று குளித்தோம்; கோவிலுக்கு போனோம் ; அக்கம் பக்கத்து நண்பர்களுடன் நிறைய விளையாடினோம். சாயங்காலங்களில் பீச்சுக்கு போவது போல இங்கே ஆத்தங்கரைக்கு போய் விளையாடினோம். பாட்டியுடன் பல்லாங்குழி ஆடுவது ; பாட்டியிடம் கதைகள் கேட்பது என்று நாட்கள் போனதே தெரியவில்லை”.

“அப்பா…. மாமா தினமும் ஆபீஸ் விட்டு வந்தவுடன், லீவு நாட்களில் எவ்வளவு தோட்ட வேலை செய்கிறார் தெரியுமா ? காய்கறி செடிகளைப் பற்றியும், பூச் செடிகளைப் பற்றியும் நிறைய விஷயங்கள் சொன்னாரப்பா. ஜிம் – க்கு போகாமலேயே மாமா எப்படி ‘ஃபிட்’ ஆக இருக்கிறார் என்ற ரகசியம் தெரிந்தது” என்று சிரித்தான் சாய்.

வயல்களுக்கு அழைத்து சென்று உளுந்து, பயறு அறுவடை செய்து சுத்தப்படுத்துவதை காண்பித்தார். படங்களாகவும், பாடங்களாகவும் பார்த்த விஷயங்களை நேரடியா பார்த்து தெரிந்து கொண்டது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. மாங்காய்கள், பலாப்பழம் பழுக்க வைத்து இப்போ நமக்கு ஊருக்கு எடுத்து செல்ல கூட கொடுத்திருக்கிறார்.

“அது சரி. இந்த நாட்களில் அதிகம் டிவி பார்த்திருக்க மாட்டிங்க; வீடியோ கேம் இல்லை.. கஷ்டமா இருந்ததா” .

“இல்லை ; இல்லை…. லீவு நல்லாதான் என்ஜோய் பண்ணினோம்” என்றனர் இருவரும்.

“நகரத்து எந்திர வாழ்க்கையில் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஒரு கூட்டுக்குள்ளேயே அடைந்து விட்ட மாதிரியான வாழ்க்கைதான் இப்போது. நீ சொன்ன இந்த இயற்கை சார்ந்த விளையாட்டுக்கள் எல்லாம் எனது சிறு வயது நினைவுகளாக மாறி விட்டன. நல்ல வேளை. லீவு நாட்களிலாவது உங்களுக்கு இந்த உற்சாகமான அனுபவங்கள் கிடைக்கிறதே; அதை நீங்களும்

ரசிக்கிறீர்களே. அதுவே எனக்கு சந்தோஷம்தான்.” என்ற ரமேஷின் குரலில் சற்றே ஏக்கம் மறைந்திருந்தது.

மதியம் இரயில் ஒரு ஜங்க்ஷனில் நின்றது; சரி. சாப்பிட்டு விடலாம் என்று டிபன் கேரியரை எடுத்தாள் அம்மா. கேன்டீனில் ரமேஷ் வாங்கி வந்த பூரி கிழங்கை சாய் கையில் கொடுத்து சாப்பிட சொல்லிவிட்டு, அப்பாவுக்கும் , பெண்ணுக்கும் இட்லிகளையும், தயிர் சாதத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

சாய் “அம்மா எனக்கு பூரி வேண்டாம். தயிர் சாதம் கொடு ” என்றான்.

“ என்ன அதிசயம்டா இது ; உனக்கு தயிர் சாதமே பிடிக்காதே; இப்படி சொல்கிறாயே ” என்று ஆச்சர்யப்பட்டாள் அம்மா.

“இதுவரை சாப்பிட்டதில்லை. ஆனால் இன்று பாட்டிக்காக சாப்பிடுவேன்”.

“ஓ …. பாட்டியின் ஸ்பெஷல் அட்வைஸ் போல…..

“அட்வைஸ் இல்லம்மா . அது பாட்டியின் அன்பு, அக்கறை” என்றான் பட்டென்று .

“நான் காலையில் பாட்டியுடனேயே எழுந்து விட்டேன். என்னுடன் பேசிக்கொண்டே பாட்டி குமுட்டி அடுப்பில் பாலில் சாதம் வேக வைத்து, தயிர் கலந்து, கடுகு, மிளகாய் , இஞ்சி, மாங்காய் கறிவேப்பிலை தாளித்து என்று மெனக்கெட்டு எவ்வளவு ஆசையாக செய்தார்கள் தெரியுமா? வயதான காலத்தில் பாட்டி நமக்காக இவ்வளவு அன்பும், அக்கறையுமாக செய்யும்போது அதை நாம் அலட்சியப்படுத்தலாமா ? இதை நான் வேண்டாம் என்றால் அது மிகவும் தப்பு. பாட்டிக்கும் , பாட்டியின் அன்பிற்கும் நான் கொடுக்கும் மரியாதை இதை சாப்பிடுவதுதான்” என்று தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்தான்.

“ஹேய்….. ஸ்கூல் திறந்தவுடன் முதல் நாள் மிஸ் கேட்பாங்க. லீவுல என்ன செய்தீர்கள்; புதிதாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று “

“நான் பூ தொடுக்க, கோலம் போட , பல்லாங்குழி, பாண்டி விளையாட கற்றுக்கொண்டேன். நீச்சல் கற்றுக்கொண்டேன் என்று சொல்வேனே” பட்டியலிட ஆரம்பித்த அக்கா. “நீ தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்தேன் என்று சொல்லு” கிண்டலடித்தாள்.

“சொல்வேனே; இதுவும் ஒரு நல்ல பழக்கம்தானே” என்றான் சாய்.

சிறுவனாக இருந்தாலும் அவனது பக்குவமான வார்த்தைகளையும், பரிவான செயல்களையும், பெரியோர்களை மதிக்கும் அவனது பாசத்தையும், கண்டு நெகிழ்ந்து போன ரமேஷ் அவனை தட்டிக் கொடுத்தான். வானுயர வளர்ந்தாலும் வேர்களை மறக்கக்கூடாது.மண்ணின் வாசமும், மனிதர்களின் நேசமும் மதித்து, நமது பாரம்பரியத்தையும் மறக்காது நடந்தால் , வரும் தலை முறைகளின் வாழ்க்கை தடம் மாறாது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

குழந்தைகள் நீங்கள் மட்டுமல்ல; நானும் கற்றுக்கொண்டேன். சின்னதோ, பெரியதோ அன்பான செயல்களுக்கு உடனடியான அங்கீகாரமும், பாராட்டுக்களும் கட்டாயம் கொடுத்தேயாக வேண்டும் என்பதை உன்னிடம் இருந்து தெரிந்து கொண்டேன் என்று மனதில் நினைத்துக்கொண்டு அம்மா கைபேசியை எடுத்து பாட்டியை அழைத்தாள்.

“அம்மா இப்போதான் சாப்பிட்டோம். தயிர் சாதம் ரொம்ப நன்னா இருந்தது” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *