கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 2,817 
 
 

பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8

“அதற்குப் பிறகு சாம்பு ஊருக்குப் போயிட்டான். அவன் ஊருக்குப் போய் சில வருடங்கள் கழித்து அவனுடைய அப்பா ஒரு நாள் மார்பு வலின்னு படுத்தவர் எழுந்திருக்கலை. .சாம்பு வந்தான். எல்லா வேலையையும் முடிச்சுட்டு என்னையும் கூட்டிண்டு அமெரிக்கா போனான். அப்ப நான் சொன்னேன், நான் செத்துப் போயிட்டேன்னா என் உடம்பில எந்தெந்த பாகம் நன்னாயிருக்கோ அது எல்லாத்தையும் தானம் பண்ணிடு, அப்பா போய் மறு நாள் தான் நீ வந்தே. தானம் குடுப்பதாயிருந்தால் உடம்பில் சூடு இருக்கும் போதே குடுக்கணும். மறு நாள் அவர் உடம்பு சில்லிட்டுப் போனதால ஒண்ணும் பண்ண முடியலை. .பழங்காலத்துல செத்த உடம்பை பின்னப் படுத்தக் கூடாதுன்னு யாருக்கும் உபயோகமில்லாம எரிச்சுடுவா. இப்ப ஜனங்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்குன்னு சொன்ன என்னிடம், ‘கவலைப்படாதே அம்மா, நீ சொன்னதையெல்லாம் செய்கிறேன்’ என்றான் சாம்பு. அப்புறம் என்னை அமெரிக்கா கூட்டி வந்துட்டான். நான் அமெரிக்கா வர்றதுக்கு முன்னாலே 6 கஜப் புடைவைக்கு மாறிட்டேன், ஏன்னா அங்க குளிர் தாங்காது. ஒரு சின்ன குக்கர் எடுத்துண்டு போயிருந்தேன்.

அமெரிக்கால அவா வீடு பெரிய வீடு. கார்த்தால எழுந்து எல்லாரும் வேலைக்குப் போயிடுவா. அங்க போய் என் பிள்ளை எல்லாம் பழகிண்டுட்டான். அவாள்ளாம் எல்லாம் சாப்பிடுவா. வீட்ல சமைக்கிறது கொறச்சல். ஏதோ சத்திரம் மாதிரி அவா அவா சாப்பிட்டுட்டு போயிடுவா. எனக்குன்னு தனி சமையல். வீட்ல ரொம்ப போரடிக்கும். நான் டிவியே கதின்னு உக்காந்திருப்பேன். லீவு நாளில கூட எல்லாரும் ஜிம், ஸ்விம்மிங்,னு கிளம்பிடுவா. வீட்ல  இருந்தாலும் தான் என்ன? ஆளுக்கொரு லேப் டாப், ஐ பேட்னு வெச்சுண்டு உக்காந்துடுவா. அப்படியே மிஞ்சி அவாள்ட பேசணும்னா நான் பேசற அரைகொறை இங்கிலீஷ் அவாளுக்குப் புரியாது. அவா பேசறது எனக்குப் புரியாது. வெளில காக்கா, குருவி சத்தம் கூட கேக்காது. மனுஷாளையே ரோட்டில பாக்கறது அபூர்வம். நாள் கிழமை அதாவது தீபாவளி, பொங்கல் எல்லாம் நம்மூரில களை கட்டும் இங்கே அதுவும் சாதாரண நாள் மாதிரி இருக்கும். எப்படா இந்தியா போவோம்னு ஆயிடுத்து. அதுவுமில்லாம அங்கே பெரிய சத்தம் வந்தாலோ அல்லது புகை வந்தாலோ அலார்ம் அடிக்கும். கொஞ்ச நாழி கழிச்சு போலீஸ்காரன் வந்துடுவான். ஒரு நாளைக்கு இவாள்ளாம் வெளியே போனப்பறம் நான் டிஷ் வாஷரிலிருந்து பாத்திரத்தையெல்லாம் எடுத்து வைக்கும்போது குக்கர் கை நழுவி கீழே விழுந்து பெரிய சத்தம். அலாரம் பயங்கரமா அலற ஆரம்பிச்சுடுத்து. போலீஸ்காரன் வந்துட்டான். உள்ளே வந்து பாத்தான், அவன் என்னவோ கேட்டான், எனக்கொண்ணும் புரியலை. குக்கரைக் காட்டி ஜாடையால் கீழே விழுந்ததுன்னு சொன்னேன். அவன் அட்ரஸ குறிச்சு வெச்சுண்டு போயிட்டான். எனக்கு அதனாலேயே சீக்கிரம் புறப்படணும்னு தோணித்து. சாம்பு கிட்டே சொன்னேன். அவன், அம்மா, உங்களுக்கு வயசாச்சு. அதனால தனியா போக வேண்டாம், கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ, நானே உங்களைக் கொண்டு விடறேன்னு சொன்னான். அதுக்கப்பறம் நான் அமெரிக்கா போகல. சாம்பு தான் வருவான் .இப்ப அவனுக்கும் வயசாச்சு,  ஃபோன்ல பேசறதோட  நிறுத்திக்கறான்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *