கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2024
பார்வையிட்டோர்: 1,075 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நகரத்திற்கு வெளிப்புறத்தில் பச்சைப்பசேல் என்று அடர்ந்து செழித்து நீண்டு வளர்ந்திருந்த பெரு மரங்களும், முட்புதர்களும், சிறு குன்றுகளும் நிறைந்த பெருங்காடு. நெடுந் தொலைவுக்கு அப்பால் அக்காட்டின் எல்லைக் கோடாக அந்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. காட்டாறு. அதில் தண்ணீர் வற்றியதை எவரும் கண்டதில்லை. ஏனெனில், அதற்குப் பாலம் இல்லை. பாலம் கட்ட வேண்டிய அவசியமில்லை யென்று அரசினர் தீர்மானித்திருக்க வேண்டும்.

என்றாலும், அவ் ஆற்றின் அக்கரையில் ஒரு சிறு கிராமம் இருந்தது. வெளி உலகுத் தொடர்பற்ற கிராமம் கிணற்றுத் தவளைகள்தாம் அக்கிராம மக்கள். அவர்கள் கிராமம் சிறிது; தேவையும் சிறிது. அதே போல் அவர்கள் கல்வியறிவும் சிறிதாகவே இருந்தது. ஆனால் மூட நம்பிக்கை களோ அசைக்க முடியாதபடி ஆலமரத்து வேர் போல் பலமாக அவர்கள் மனத்தில் வேரூன்றியிருந்தன. இந்தக் கிராமத்தில்தான் புனிதவதி வசித்து வந்தாள்.

புனிதவதிக்கு நாற்பது வயதிருக்கும். அவள் அழகு குறையாமல்தான் இருந்தது. ஒடித்து மடியில் கட்டிக்கொள்ளும் கீரைத் தண்டுப் போல் ஒல்லியாக இருந்தாள். ஆனால், பாவம், அவள் விதவை. 20 வயதுள்ள தனது ஒரே மகனின் பராமரிப்பில்தான் காலத்தைத் தள்ளி வந்தாள்.

ஆம். காலத்தைத் தள்ளினாள் அவள். ஏன்? அவள் வாழ்வில் சுகமில்லை. கணவனை இழந்த காரிகையாக இருந்தால் என்ன? கண்ணெனப் போற்றிக் காக்கும் கட்டிளங் காளையான தன் மகன் இருக்க அவளுக்கு என்ன கவலை! அதுதான் அவளுக்கும் விளங்காத மர்மமாக இருந்தது. திடீர் திடீரென்று அவள் உள்ளத்தில் சோகம் மூண்டெழும், படிப்படியாக அது அதிகரித்து அவளை அணு அணுவாகச் சித்திரவதை செய்யும். பிறகு திடீரென்று மறைந்துவிடும். இது ஏன்? கணவன் இறந்த போது அவள் அளவு மீறித் துக்கப்பட்டது உண்மையே. காலம் அதைக் கரைத்துவிட்டது. இப்போது அவளுக்கு அந்தக் கவலையில்லை. உணவுக்கும் உடைக்கும் பஞ்சமில்லை. தனது மகன் கண்ணுங் கருத்துமாக தனது தேவைகளைப் பூர்த்தி செய்துவிடுகிறான். குடியிருக்கும் அக்குடிசையோ பரம்பரைச் சொத்து. அப்படியிருந்தும் அவரவர்க்கு எதனால் கவலைகள் தோன்றுகின்றன! யோசித்து யோசித்துப் பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. தலைவலிதான் மிஞ்சியது.

காலம் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. தனக்கு ஏற்படும் இந்த அர்த்தமற்ற கவலைகளை அவள் மகனிடம் கூறியதில்லை. அவன் ஏன் கவலையடைய வேண்டுமென்று எண்ணினாள் போலும். தன் மனத்திற்குள்ளேயே அடக்கி வைத்துப் புழுங்கிக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மாலை. மேற்றிசைக் கதிரவன் ஒளியில் அவ் ஆறு பளபளவென்று பிரகாசித்தது. தூரத்தில் சிறு படகு ஒன்று மெதுவாக வருவது தெரிந்தது. இது அக் கிராமத்திற்குப் புதுமையான நிகழ்ச்சி. எப்போதாவது இப்படி ஏதாவது தட்டுக் கெட்டு அவ்வாற்றில் படகுகள் தென்படும். அவைகளும் அக்கிராமத்தை சட்டை செய்யாது தம் வழியே சென்றுவிடும். இன்றும் அப்படித்தான் அந்தப் படகும் வந்து கொண்டிருந்தது.

புனிதவதி அந்தப் படகைக் கண் கொட்டாது கவனித்தாள். சட்டென்று அவள் உள்ளத்தில் ஒரு யோசனை உதித்தது. ஆம். இதுவே தக்க தருணம். அவள் மகன் இரவு 8 மணிக்கு மேல்தான் இல்லந் திரும்புவான். குடிசைக்குள் ஓடி, ஒளித்து வைத்திருந்த ஏதோ ஒரு பொட்டலத்தை அவசரமாக எடுத்துக்கொண்டு ஆற்றங் கரைக்கு ஓடி வந்தாள்.

இப்போது மாலை மங்கிவிட்டது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்ற ஆரம்பித்துவிட்டன. படகும் ஆடி அசைந்து கொண்டு அவள் குடிசைப் பக்கமாக வந்தது. கவிந்து வரும் இருளில் அப்படகில் இருப்பவர் புகையுண்ட சித்திரம் போல் காணப்பட்டனர். படகோட்டியுடன் இளங்காதலர் இருவர் உல்லாசமாக உரையாடிக் கொண்டு வந்தனர். புதுமணத் தம்பதிகள் போலும். பெண் உற்சாக மிகுதியால் அடிக்கடி குதூகலமாக, ‘களுக்’ ‘களுக்’ கென்று சிரித்துக் கொண்டிருந்தாள். ஆடவன் அவளுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் உரையாடிக் கொண்டிருந்தான்.

ஆயிற்று. இன்னும் சில நிமிஷ நேரத்தில் அப்படகு புனிதவதியின் குடிசையைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விடுவதா? புனிதவதி தன் கையிலுள்ள பொட்டலத்தைப் படகை நோக்கி வீசியெறிந்தாள். அது அந்தப் படகுக்கு அருகில் தண்ணீரில் விழுந்தது. அது சிறு ஒலியை எழுப்பிற்று. ஆனால் காதல் போதையில் இருந்த அந்த இளங் காதலர்கள் அதைக் கவனிக்கவில்லை. கவனித்திருந் தால், தங்கள் படகின் பக்கத்தில், ஆற்றுத் தண்ணீரில் ஒரு கொத்து தலை மயிர், புனிதவதியின் நகரங்கள், சக்கரங்கள் வரைந்த துண்டுக் கடிதம் முதலியவை மிதந்து கொண்டிருப்பதையும், அழுகிய முட்டை, எலுமிச்சம் பழம், மண்டையோடு, பச்சரிசி முதலியவை தண்ணீரில் அமிழ்ந்து போனதையும் கண்டிருப்பார்கள். படகு போய்விட்டது. புனிதவதி திருப்தியுடன் குடிசைக்குத் திரும்பினாள்.

காலம் மிகவும் விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. புனிதவதிக்கு இப்போது அந்த வியாதி – ஆம், திடீரென்று கவலை தோன்றும் வியாதி வருவதில்லை. அவள் உடம்பு தேறி வந்தது. தன் தாய் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பது கண்டு மகன் பூரித்தான். ஓராண்டு கழிந்தது.

ஆனால், பாவம், இந்த நிலை நீடிக்கவில்லை. ஒரு நாள் புனிதவதி இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்தாள்: “கடவுளே, நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். அந்தச் சூனியக்காரியின் பேச்சைக் கேட்டு ஏமாந்து போனேனே! அவள் மந்திரித்துக் கொடுத்த பொருள்களை அந்தப் புதுமணத் தம்பதிகள் முன் வீசியெறிந்ததால் என் வியாதி நீங்கினது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த மந்திரித்த பொருட்கள் அந்தப் பேதைப் பெண்ணுக்கு என் வியாதியைத் தந்துவிடும் என்று சொன்னாளே! ஐயோ, இல்லற இன்பத்தில் முதல்படி எடுத்து வைக்கும் அப்பாக்யவதிக்கா இந்தக் கடுஞ் சோதனை! ஓரளவு வாழ்க்கைத் துன்பங்களை அனுபவித்த நானே அந்த வியாதியைச் சகித்துக் கொள்ள முடியவில்லையே! அந்தச் சிறுபெண் எவ்வாறு சகிப்பாள். பிறர் துன்பத்தில் நான் வாழ்வதா. அந்தோ! என்ன மதியீனம்! பிறரை வாழ்விக்க நாமே வலிய துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று என் தந்தை சொல்வாரே! அந்த அறிவுரை எனக்கு ஏன் மறந்து போயிற்று! என் சுய நலந்தானே அதை மறக்கடித்தது. ஐயோ! இதோ என் மனக்கண் முன் அந்தப் பெண் படுந்துயரம் தெரிகிறது. ஆ! அவள் எவ்வளவு மன வேதனைப்படுகிறாள். காரணமில்லாமல் அவள் கண்ணீர் விடுவதைக் கண்டு அவள் காதலன் கலங்குகிறான். அவள் துக்கத்திற்கு இருவராலுமே விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ, இருவருமே கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கு யார் காரணம்? பாவி, பாவி, பெரும் பாவி. நான்தான்…..நான்தான் காரணம். இப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டியதில்லை. ஆனால்..ஆனால் என் வியாதியை அவள் ஏற்றுக்கொண்டது போல் அவள் இப்போது படும் துன்பத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாதே. அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ?-ஆம். எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். இனி ஒரு கணமும் என்னால் வாழ்ந்திருக்க முடியாது…” இவ்வாறு பலபல பிதற்றிக் கொண்டு அவ் ஆற்றில் குதித்துவிட்டாள் புனிதவதி. காட்டாறு அவளைத் தன் மடியில் ஏந்திக்கொண்டது. பிறகு உயிரற்ற அவளுடலைச் சுமந்து கொண்டு ஆடி அசைந்து சென்றது.

அதே சமயத்தில் அந்த இளங் காதலர்கள் ஒரு புதுப்படகில் இதே இடத்திற்கு வந்தார்கள். அதே சிரிப்பும் கொம்மாளமும் இப்போதும் காணப்பட்டது. “அன்பே, ஓராண்டுக்கு முன்னர் இந்த இடத்தில் இந்தக் குடிசையைக் கண்டது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?” என்று அந்தப் பெண் கேட்டாள். “கண்மணி, ஞாபகமில்லாமலென்ன! நேற்று வந்தது போலவே இருக்கிறது. எவ்வளவு விரைவாக ஓராண்டு கழிந்துவிட்டது. இவ்வாண்டில் நமது காதல் வாழ்வுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. அதன் பலன்? இப்போது உன் வயிற்றில்…” என்ற அவன் வாயை, “போங்கள் உங்கள் குறும்பு இன்னும் போகவில்லை” என்று செல்லமாக மூடினாள் அந்த இளம் கர்ப்பிணி.

(ஆங்கிலக் கதையொன்றைத் தழுவியது)

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *