தனியே தன்னந்தனியே..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,790 
 
 

யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்’ என்பார் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் என் நண்பர் சாந்தன்.

டால்டா என்றாலே வனஸ்பதி என்று ஆகிவிட்ட தைப் போல, டார்ட்டாய்ஸ் என்றால் கொசுவத்தி என்று இருப்பதைப் போல, 25 வருஷத்துக்கு முன்னால் வானொலி என்றால், ரேடியோ சிலோன் தான். அதைப் போல, ஸ்கூட்டர் என்றால் லாம்ப்ரெட்டாதான். பிற்காலத்தில், லாம்ப்ரெட்டா சுருங்கி லாம்பியாக ஆனபோதுதான் ஸ்கூட்டர் ஓட்டுகிற பேறு எனக்குக் கிட்டியது. கல்யாணமாகி ஒரு வருஷம் கழித்து, மாமனார் எனக்கொரு ஸ்கூட்டர் சாங்ஷன் செய்தார். எனக்கு என்றால், எனக்கே எனக்கு அல்ல! நான் டிரைவர். அவருடைய மகளை, அதான் என் பெண்டாட்டியைப் பின்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு திருநெல்வேலி யையும் பாளையங்கோட்டையையும் சுற்றிச் சுற்றி வர நியமிக்கப்பட்ட டிரைவர். அதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இருக்கவில்லை. தன்மானம்தான் கொஞ்சம் முரண்டு பிடித்தது. அது தன்மானமா வறட்டுக் கௌரவமா என்பதில் சந்தேகம் உண்டு.

உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்று என்னை இவள் தலையிலோ, இவளை என் தலையிலோ கட்டி வைத்துவிட்டார்கள். கொழும்பில், மாமா வீட்டில் மூணு கார் இருக்கிறது. அப்பா கார், அம்மா கார், பாப்பா கார். அப்பா, அம்மா, பாப்பா மூணு பேருக் கும் டிரைவிங் தெரியும். மூணு காருக் கும் சேர்த்து ஒரேயரு டிரைவர். புது மருமகனாய் மாமியார் வீட்டுக்குப் போன எனக்கும் டிரைவிங் தெரியும். ஹ..!

புதுமணத் தம்பதி ஊர் சுற்றிப் பார்க்க, பாப்பாக் கார் ஒதுக்கப்பட்டது. என்னைப் போன்ற சின்ன உருவத்துக்குச் சின்ன கார்தான் தோது! நிகாம்பு, பென்தொட்ட, கண்டி, சிலாபம் போன்ற பக்கத்து ஊர்களுக்குப் போய் வர எற்பாடானபோது, பெரிய வண்டி களில் ஒன்று எங்கள் பாவனைக்குத் தரப்பட்டது. காரோடு கார் சாரதியும்! காரில் போகிறபோது, டிரைவரின் பெயர் என்ன என்று இவளைக் கேட்டேன். ‘தெரியாது’ என்றாள் சர்வ அலட்சியமாய்.

”என்னது… தெரியாதா?”

”அதுக்கு ஏன் இப்படி வாயப் பொளக்குறீங்க? தெரியாதுன்னா தெரி யாதுதான்!”

”இவர் எத்தனை நாளா ஒங்ககிட்ட வேலைக்கு இருக்கார்?”

”மூணு வருஷம் இருக்கும்.”

”மூணு வருஷமா வேலை செய்யற வரோட பேர் தெரியாதுங்கற?!”

”அதுக்கென்னங்க இப்ப? ஒங்களுக்குப் பேச வேறவிஷ யமே கிடையாதா? இவர் எங்க டிரைவர். நாங்க எல் லாரும் இவரை டிரைவர்னு தான் கூப்பிடுவோம். நீங்களும் அப்படியே கூப்பிடலாம், புரிஞ்சுதா?”

டிரைவரை அவர், இவர் என்று இவள் மரியாதை யாகக் குறிப்பிடுவதே பெரிய விஷயம் என்றுதான் சமாதானம் செய்துகொண் டேன்.

சில சமயம் அந்தச் சின்ன காரில் நாங்கள் மட்டும் தனியாக ஊரைச் சுற்றிவரு கையில், கார் ஓட்டுவதற்கு எனக்குச் சர்வ சுதந்திரம் அருளிவிட்டுப் பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்துகொள் வாள். கொழும்பு நகர வீதிகள் எனக்குத் தெரியாததால் இவள் லெஃப்ட்,ரைட் சொல்லிக்கொண்டு வரு வாள். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ள அவளின் பொறுப்பு உணர்ச்சி இடம் தராது. அவங்க அப்பாவின் காரை, ஓட்டத் தெரியாமல் ஓட்டி நான் கெடுத்துவிடக் கூடாது இல்லையா! ஹாரன் அடிங்க, பிரேக் புடிங்க, இந்த இடத்துல ஓவர்டேக் செய்யாதீங்க, இவ்வளவு ஓரமாப் போகாதீங்க, கியர் சேஞ்ஜ் பண்ணுங்க… என்று இவள் செய்கிற அனத்தல் என் பொறுமையை ரொம்பவே சோதிக்கும்.

இந்த கார் கதை எல்லாம் 26 வருஷப் பழசு. இனி 25 வருஷப் பழைய ஸ்கூட்டர் கதைக்கு வருவோம். வண்ணாரப்பேட்டை ஏ.ஆர்.ஏ.எஸ். டெப்போ வில் என்னுடைய(?) லாம்பியை டெலிவரி எடுத்த தினம்தான் ஒரு பேருண்மை உறைத்தது… காரோட்டக் கற்றுக் கொண்டு இருந்தவன் ஸ்கூட்டர் ஓட்ட முறைப் படி கற்கவில்லை. இருந்தா லும் தியரி தெரியும் ஆதலால், மெக்கானிக் உதைத்துக் கொடுத்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டை எடுத்துவிட்டு, கியரை மாற்றி, ஆக்ஸலரேட்டரைக் கமுக்கமாய் முறுக்கி வண்டியைக் கிளப்பிக் கொண்டுபோனது ஒரு த்ரில்லாயிருந்தது. சின்ன வயசில் சைக்கிள் ஓட்டப் பழகிய புதுசில் இருந்த மாதிரியான த்ரில்! ரொம்ப சுலபமாய் லாம்பி எனக்கு வசப்பட்டது. ஆனால், இவளை வசப்படுத் துவதுதான் பெரிய பிரயத்தனமாக இருந்தது. இந்த ஸ்கூட்டர் இவளுடைய அப்பா வாங்கிக் கொடுத் தது. இதை துஷ்டர்களிட மிருந்து (நான் உள்பட) பாதுகாத்தருள வேண்டிய கடமையும் பொறுப்பும் தனக்கு இருப்பதாக நம்பிக்கொண்டு இருந் தாள்.

பேட்டை ஹிண்டு காலேஜில் பி.யூ.சி. படித்துக்கொண்டு இருந்த சித்தி பையன் ஒரு ரவுண்ட் போய்விட்டு வருவதாகக் கேட்டதும், ரொம்ப தாராளமாக சாவியை எடுத்துக் கொடுத்து வழியனுப்பி வைத்து விட்டேன். அவனுக்கு உருப்படியாக ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்கிற விவரம் எனக்குத் தெரியாது. அந்தப் பாவி என்ன செய்தான்… ஹாண்டில்பாரை நேராக வைத்து லாக் செய்துகொண்டு, இக்னீஷியனைப் போட்டு ஸ்டார்ட் செய்து, ஏறி உட்கார்ந்து த்ராட்டிலை முடுக்கினான். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திருப்ப முடியாத இக்கட்டில், பாலன்ஸ் செய்யச் சுதந்திரம் இல்லாமல், பயல் மூணே சென்டி மீட்டர் தூரத்தில் தொபுக்கடீர் என்று விழுந்தான். அவன் விழுந்தான் என்பதைவிட , ஸ்கூட்டர் விழுந்தது என்பதுதான் முக்கியம். தங்கமான அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்த மாதிரி இவள் பட் படார் என்று வெடித்துத் தள்ளிவிட்டாள். ‘யார் ஸ்கூட்டரை எடுத்து யார்கிட்டக் குடுத்தீங்க? உங்க காசு போட்டு வாங்கியிருந்தா இப்படிப் பொறுப்பில்லாம கண்டவனுக்கெல்லாம் தூக்கிக் குடுப்பீங்களா..?’ இத்யாதி இத்யாதி!

லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாகச் சவாரி செய்கிற போது சமர்த்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக்கொண்டு வருகிறபோது, தன் வேலை யைக் காட்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்னி ஷோவுக்குப் போகலாமென்று கிளம்பினால், பாதி தூரத்தில் ஆஃப் ஆகி விடும். வேகாத வெயிலில் ஸ்கூட்டரோடு நான் மல்லுக் கட்டிக்கொண்டு இருப்பேன். ஸைடு கதவைக் கழற்றி, பெட்ரோல் ஓட்டத்தைச் செக் செய்து, ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றித் தேய்த்துத் திரும்ப மாட்டி, உதையோ உதையென்று உதைத்து… இவள் ஓரமாக மர நிழலில் நின்று அர்ச்சனைகளை அள்ளித் தெளித்துக்கொண்டு இருப்பாள்.

பிறகு, சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது ஸ்கூட்டரும் எங்களோடு நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் பயண மானது. விசாலமான மவுன்ட் ரோடிலும், குறுகலான பாரிஸ் கார்னர் கிளைச்சாலை களிலும் நெரிசலான தி.நகரிலும் என்னைச் சுமந்துகொண்டு ஓடியிருக்கிறது. ஆனால், இவளையும் சுமந்துகொண்டு செல்கையில், என்னைக் காலை வாரிவிடுவதிலும் கவனமாக இருந்தது. இவளிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் வித விதமான, வித்தியாச மான, விசேஷமான வசவுகளைப் பெற்றுத் தந்த வாகனமாக இருந்தபோதிலும், அந்த ஸ்கூட்டரோடு எனக்கொரு பாசப்பிணைப்பு ஏற்பட்டுப் போனது.

பிற்காலத்தில், வெளிநாட்டு ராட்சசக் கம்பெனிகளின் கூட்டுத் தயாரிப்பில் அட்டகாசமான டூ வீலர்கள் சென்னைச் சாலைகளை ஆக்கிரமிக்கப் புறப்பட்ட பின், லாம்பி தயாரிப்பு நின்று போய், கம்பெனி காணாமலே போய் விட்டது. ஆர்ப்பாட்டமான புதிய வாகனங்களுக்கு இணையாக சாலையில் ஓடுவதற்கு லாம்பி சங்கோஜப்பட ஆரம்பித்தது. தாழ்வு மனப்பான்மையில் சங்க டப்பட்டுக்கொண்டு அடிக்கடி நோய்வாய்ப்பட்டது. அதோடு, எனக்கு ஆபீஸர் ப்ரமோஷன் கிடைத்து, ஆபீஸில் கார் லோன் போட்டு ஒரு மாருதி 800 வீட்டுக்கு வந்த பின், லாம்பியின் சேவை அதிகமாகத் தேவைப்பட வில்லையாதலால், அதற்கு வி.ஆர்.எஸ். வழங்கப்பட்டுவிட் டது. இந்த ஸ்கூட்டரைவிட வயதில் சிறியவனான என் மகன், இன்ஜினீயரிங் முடித்து, அமெ ரிக்காவுக்குப் பறந்துவிட்டான்.

‘இந்தச் சனியன் எதுக்குங்க இன்னமும் வாசலை அடைச்சுக் கிட்டு நிக்குது? வித்துத் தொலைக் கிறதுதானே?’ என்று இவள் ஒருநாள் கத்தியது ஸ்கூட்டரின் காதில் விழுந்திருக்க வேண்டும். ரொம்பச் சோகமாக இருந்தது. வாரத்துக்கு ஒருமுறை தூசி தட்டிக் குளிப்பாட்டி நிறுத்துகிறபோது, என்னை நன்றிப் பெருக்கோடும், அதே சமயம் பாவமாகவும் பார்க்கும்.

யானை இருந்தாலும் ஆயிரம், பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்கிற மாதிரி, லாம்பி ஆரோக்கியமாக இருந்த காலத் திலும் எனக்குத் திட்டு; நோய் வாய்ப்பட்ட காலத்திலும் திட்டு! நன்றாக இருந்த காலத்தில், இளமை முறுக்கில் கொஞ்சம் சேட்டைத்தனமாக நடந்துகொண்டு எனக்கு வசவு வாங்கிக் கொடுத்ததற்கு இப்போது இது விசனப்படுவது புரிந்தது. பரிவாகத் தட்டிக் கொடுப்பேன்.

டாடி மம்மியைப் பார்க்கிற ஆசை வந்து, இவள் ஒருநாள் கொழும்புவுக்குக் கிளம்பினாள். புறப்படுகிறபோது எச்சரித்தாள்… ”நான் திரும்பி வர்றப்ப இந்தச் சனியன் இங்க இருக்கக் கூடாது! சரியா? சும்மா தலையாட்டினா போறாது! பி சீரியஸ்!”

நான் சீரியஸ்ஸோ இல்லையோ லாம்பியின் நிலைமை ரொம்ப சீரியஸாக ஆகிவிட்டிருந்தது. அதைக் கருணைக் கொலை செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம்!

இரண்டு மெக்கானிக்குகளிடம் விசாரித்துப் பார்த்தேன். பேரீச்சம் பழத்துக்குப் போடலாம் என்று ஏகமனதாக அபிப்ராயப்பட் டார்கள். இவளும் ஊரில் இல் லாத சமயத்தில், அத்தனை பேரீச் சம் பழங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டு இருந்த சமயத்தில், விசாலமான கேரியர் வைத்த சைக்கிளில் வந்தவன், ”இத்த ஒரு ரேட் போட்டுஎடுத்துக்கலாமா சார்?’ என்றான். ‘ஆயிரம் ரூபாய்’ என்று அவனே ஒரு விலையையும் நிர்ணயம் செய்தான். ”ஒண்ணியும் வேலைக்காவாது சார்! எல்லாத்தையும் பார்ட் பார்ட்டா பிரிச்சு வித்தா, நமக்கு ஒரு நூறு ரூவா நிக்கும். ஐயாவுக்குத் திர்நவேலினு சொன்னாங்க. நமக்கும் அந்தப் பக்கந்தான் கொங்கராயக்குறிச்சி.பொழப்புக்காக மெட்ராஸ்ல வண்டி ஓடிக்கிட்டிருக்கு!”

மீன்பாடி வண்டியன்று அமர்த்திக்கொண்டு வந்தான். வண்டிக்காரனும் அவனுமாக ஸ்கூட்டரைத் தூக்கி வண்டியில் ஏற்ற பிரயத்தனப்பட்டபோது, நானும் கை கொடுத்தேன்.கனத்துக்கிடந்தன ஸ்கூட்டரும், மனசும்! ஆசையாக வளர்த்தகால் நடைச் செல்வத்தை அதன் சேவைக் காலம் முடிந்ததும்அடி மாட்டுக்குக் கொடுப்பதைப் போன்றதொரு சோகமும் குற்ற உணர்ச்சியும் மனசுக்குள் வியா பித்தன. என்னுடைய குட் ஓல்டு லாம்பி ஸ்கூட்டரின் உடம்பை வாஞ்சையோடு வருடிக் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். கண்கள் பனித்தன. பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றேன்.

ஒரு வருஷம் ஓடிப்போய் விட்டது. நேற்று, பொழுது போகா மல், போன வருஷத்து டைரியை எடுத்துப் புரட்டிக்கொண்டுஇருந்த போது, என் லாம்பியை அடி மாட்டுக்குக் கொடுத்த துயர நாள் நாளைய தேதிதான் என்பது தெரிய வந்தது. லாம்பி என்னிடமிருந்து பிரிந்து போன தருணத்தை நினைவுபடுத்திப் பார்த்துக் கொண்டு இருக்கையில் இவள் வந்தாள்.

”நீங்க என்ன யோசிக்கிறீங் கன்னு எனக்குத் தெரியும். சொல் லவா?” என்றாள்.

”ம்” என்றேன்.

”நாளைக்கு நமக்கு வெட்டிங் அனிவர்ஸரி! அதத்தானே நெனச் சுட்டிருக்கீங்க? ஆமா, போன வருஷம் அனிவர்ஸரிக்கு நான் கொழும்புல இருந்தேன். நீங்க இங்கே தனியா என்ன செஞ்சீங்க?”

உண்மையில், அன்றைக்குத் தான் நான் தனியனாய் ஆனேன் என்று சொன்னால், இவள் புரிந்துகொள்ளவா போகிறாள்?

– 19th மார்ச் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *