தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 6,469 
 

இரவு தூங்கி எழுந்ததும் மனம் ஆடை களைந்திருந்தது. ‘இப்படியே ஷவர் முன்னால் நின்றால் ஒரு தெளிவு கிடைக்கும்’ என்று நினைத்தான் கதிரேசன். உஷாவும் ராகேஷும் இன்னும் எழவில்லை. ஷூ அணிந்தபடி நடைப்பயிற்சி கிளம்பினான். ஐந்தே நிமிடங்களில் மனக்குரங்கு அலைபாய்ந்து பேன் பார்க்கத்தொடங்கியிருந்தது. இன்னமும்கூட ராகேஷ் நடந்துகொள்ளும் விதத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

16 வயதாகிறது. இந்தப் பதினாறு வயதில் கதிரேசன் பைக் ஓட்டக்கூடக் கற்றுக்கொண்டதில்லை. ஆனால் ராகேஷ் வெப்சீரிஸ், வித்தியாசமான செயலிகள், ஆன்லைனில் விநோதமான தளங்கள் என்றிருக்கிறான். இதெல்லாம்கூட அவனுக்குப் பெருமையாகத்தான் இருந்தன. ஆனால் அந்த கிராப் வெட்டிய பெண் பிள்ளையுடன் அவன் கூச்சநாச்சமின்றிப் பழகுவதைப் பார்க்கும்போதுதான் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. தொட்டுத் தொட்டுப் பேசுகிறார்கள். அவள் இவன் கன்னத்தைக் கிள்ளுகிறாள். இவன் அவள் முதுகில் தட்டுகிறான். ஒரே ரூமில் மணிக்கணக்கில் லேப்டாப் முன்பு அருகருகே அமர்ந்து நேரம் செலவழிக்கிறார்கள். அன்று அவள் பர்த் டே என்பதற்காக கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறான் ராகேஷ். கதிரேசனால் இன்னும் அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம்கூட இயல்பாகப் பேச முடிந்ததில்லை. அதிலும் சியாமளா வந்து அலுவல்ரீதியாகத்தான் ஏதாவது பேசினால்கூட, மனதுக்குள் ஒரு பதற்றத்துடன்தான் பேச முடிகிறது.

“என்னடா ஒரு பொண்ணைக் கட்டிப் பிடிக்கிறே, வீட்டுல அப்பா, அம்மால்லாம் இருக்கோம்!”

“இதில என்னப்பா இருக்கு? ஹக் பண்ணுறதுல என்ன தப்பிருக்கு?” என்கிறான் ராகேஷ்.

இவனுக்கு பிக்பாஸில் ஹக் என்ற பெயரில் கட்டிப்பிடித்துக்கொள்வதைப் பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருக்கும். ஓரக்கண்ணால் ராகேஷைப் பார்த்தால் அவன் இயல்பாக டிவி பார்த்துக்கொண்டிருப்பான். கதிரேசன் தியேட்டருக்கு சிறுவயதில் படம் பார்க்கப் போகும்போது முத்தக்காட்சிகள் வந்தாலே முகத்தைத் தாழ்த்திக்கொள்வான்.

ஒருநாள் தனியாக ராகேஷைக் கூட்டிக் கொண்டுபோய்ப் பேசினான். ஆனால் அவன் பேசியதைப் பார்த்தால் ஏதோ கதிரேசன்தான் குற்றவாளி என்ற தொனி தெரிந்தது.

“இதில என்னப்பா இருக்கு?” என்றுதான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்கிறான். அதுவே கதிரேசனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

“சரி, ரெண்டுபேரும் மணிக்கணக்கா என்ன சாட் பண்ணிக்கிறீங்க? வீட்ல பேசினது பத்தாதுன்னு ஃபேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸப்னு…”

“அப்பா இதெல்லாம் அவங்கவங்க பர்சனல். நான் உங்க போனை வாங்கி என்னைக்காவது பார்த்திருக்கிறேனா?” என்றான் ராகேஷ்.

கொஞ்சநாளாக இந்தக் குழப்பத்தினூடே மோனிகாவின் நினைப்பு வந்துபோனது கதிரேசனுக்கு. இப்படி ஹக் பண்ணும் காலத்தில் பிறந்திருக்கலாம் என்று நினைத்தான். இரண்டாண்டுகளாக மோனிகாவை உருகி உருகிக் காதலித்ததில் அவளது ஹேர் பின், கசக்கிப்போட்ட பஸ் டிக்கெட், கொலுசு மணி, காதோரத்து நீண்ட மயிர்க்கற்றை, அவளுக்குக் கொடுக்காமல் வைத்திருந்த காதல் கடிதம் ஆகியவைதான் மிச்சம். அவள் சரவணனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தபோது பேய்மழை கதிரேசன் தலையில் பெய்ததைப்போலிருந்தது. சரவணன் நண்பன்தான் என்றபோதும் அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதற்குப்பிறகும் மோனிகா கதிரேசனுடன் இயல்பாகப் பேசிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் இவனுக்குத்தான் அவளிடம் பேசும்போது, ஏதோ கோயிலில் தீக்குழி மிதிப்பதைப்போலிருந்தது. கல்லூரி முடிந்தபிறகு மோனிகா என்ன ஆனாள், சரவணன் என்ன ஆனான், இருவரின் காதல் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இப்போது ஃபேஸ்புக்கில் மோனிகாவைத் தேடிப்பிடிக்கலாம் என்று தோன்றியது. அதுவும்கூட அவனுக்குத் தானாக வந்த யோசனையில்லை. ப.பாண்டி, மகளிர் மட்டும் படங்களைப் பார்த்தபோதுதான் ‘இதை முயன்றால் என்ன’ என்று தோன்றியது. கூடவே ‘காலம் தனக்கு முன்னால் எவ்வளவோ தூரம் முன்னே ஓடியிருக்கிறது. அதனால்தான் ராகேஷ் நம்மை மதிப்பதில்லையோ’ என்றும் குழப்பிக்கொண்டான்.

மறுநாளிலிருந்து மோனிகாவை ஃபேஸ்புக்கில் தேடத்தொடங்கினான். நூற்றுக்கணக்கில் மோனிகாக்கள் வந்து குவிய, திகைத்துப்போனான். மோனிகா என்பது தேசியப்பெயர் போல. மோனிகா சாட்டர்ஜி, மோனிகா அர்ஜூன் சர்மா, மோனிகா கிருஷ்ணன் உன்னி என்று மொழி கடந்த மோனிகாக்கள். அவற்றில் தமிழ் மோனிகாக்களை மட்டும் வடிகட்டிப் பார்க்கத் தொடங்கினான். பல மோனிகாக்கள், இவன் காதலித்த மோனிகாவைவிட அழகாக இருந்தார்கள். ஆனால் அதற்காக மோனிகாவை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?

அந்த மோனிகா உயரத்திலும் முகச்சாயலிலும் நடிகை அர்ச்சனாவை நினைவுபடுத்துபவள். ஆனால் அர்ச்சனாவைவிட நிறம் கூடுதல். டிவியில் ‘ஓ வசந்த ராசா’ பாடல் பார்க்கும்போதெல்லாம் நீர்க்குமிழியாய் உள்ளிருந்து மோனிகா எழுவாள். எப்படி இத்தனை மோனிகாக்களுக்கு மத்தியில் அந்த மோனிகாவைக் கண்டுபிடிப்பது. வாரக்கணக்கில் அதிலேயே மூழ்கித் தேட ஆரம்பித்தான். இந்தக் கடலில் யார் அவள்? ஆழத்தில் இலை விரித்த செடியா, வாய் பிளக்கும் சிறுமீனா, பெயர் தெரியா கடல் விலங்கா? இந்த மோனிகா தேடலில் சில ஆபாசப் பக்கங்களும் வந்தன. அரைகுறை ஆடையுடன் வந்த மோனிகாக்களைப் பார்த்ததும் ‘ரசிக்கலாமா, புனிதமான காதலுக்கு இழுக்கா’ என்று குழம்பிப்போனான். பிறகு கொஞ்சம் ஏற்றும் கொஞ்சம் தவிர்த்தும் மோனிகாவைத் தேடத்தொடங்கினான். இடையில் எதற்கும் இருக்கட்டும் என்று சில மோனிகாக்களுக்கு நட்பழைப்பு விடுத்தான். இரண்டு மோனிகாக்கள் அதை ஏற்றுக் கொண்டதும் அவர்கள் உள்பெட்டியில் போய் ‘ஹாய்’ என்றான். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.

மூன்றுவாரத் தேடலுக்குப் பிறகு அவனுக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்தன. இணையத்தில் ஆண் நண்பர்களைக் கண்டுபிடிப்பதைப்போல பெண் நண்பர்களைக் கண்டுபிடித்துவிட முடியாது. எல்லாப் பெண்களும் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றுவதில்லை. மேலும் திருமணமானதும் தன் பெயருக்குப் பின்னால் கணவன் பெயரை இணைத்துக் கொள்கிறார்கள். எனவே கதிரேசன் காதலித்தவள் இப்போது யாரின் மனைவி என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். பாலைவனத்து அலுப்பு உடல்மீது அழுத்தியது. அப்போது ஒரு நூல் அவன் நக இடுக்கில் மாட்டியது. அவள் வகுப்பில் படித்த ஆண்களைப் பிடித்தால் அதன்மூலம் அவளைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. முதலில் கதிரேசன் தன் வகுப்பில் படித்த ஆண்கள் மற்றும் பெண்களின் நண்பர்கள் பட்டியலில் மோனிகாவோ அவளுடன் படித்தவர்களோ மாட்டுவார்களா என்று தேடத்தொடங்கினான். அந்தத் தேடலில்தான் சில மாதங்களுக்குப் பிறகு ‘மோனிகா சரவணன்’ என்ற பெயர் கிடைத்தது. முகப்பில் சின்ட்ரெல்லா தேவதை படம் இருந்தது. நட்பழைப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும், அவனுக்குக் குழப்பம் தீரவில்லை.

இன்பாக்ஸில் ‘ஹாய்’ என்றான். மூன்று நாள்களுக்குப் பிறகு, ‘எப்படியிருக்கே கதிர்?’ என்று அவளிடமிருந்து பதில் வந்ததும் பரவசமானான். உடல் எடையும் வயதும் குறைந்ததைப்போலிருந்தது.

“நல்லாருக்கேன். நீ எப்படியிருக்கே?” என்று பதில் அனுப்பி, அவளும் நலமாக இருப்பதான பதிலைப் பெற்றுக்கொண்டான். இரண்டு நாள்கள் கழித்துதான் “உண்மையிலேயே நீ சரவணனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” என்று கேட்டான். அவள் ஒரு ஸ்மைலியை அனுப்பிவிட்டு, “இல்லை கதிர். அவனுக்குத்தான் காலேஜ் முடிஞ்ச மூணுமாசத்திலேயே சொந்தக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்களே, இவர் வேற. ஆனா இவர் பேரும் சரவணன்தான்” என்றாள்.

“யூ ஆர் லக்கி மோனிகா.”

“இல்லை கதிர். நான் அன்லக்கி. கல்யாணமாகி ஒரு வருஷம் நல்லாத்தான் இருந்தாரு. குழந்தை பிறக்கலைங்கவும் ஆளே மாறிட்டாரு. வாரத்துக்கு மூணுநாள் குடிக்கிறாரு. நிறைய பொண்ணுங்களோடு தொடர்பு இருக்கு.”

“நீ கேக்கலையா?”

“கேட்டேன். ஆனா கேக்காமலே இருந்திருக்கலாம். கேட்ட அன்னையில இருந்து எனக்கு அடி, உதை. அவன் அடிக்கடி வெளியூர் போயிட்டு வரும்போதெல்லாம் லிப்ஸ்டிக் கறை, புது பெர்ஃப்யூம் வாசம் இருக்கும். ஒருதடவை சட்டை பட்டனில் நீளமான முடி சிக்கியிருந்தது.”

அவர் அவனாக மாறியிருந்ததைக் கதிரேசன் கவனித்தான்.

“நான் சந்தேகப்படறேன்னு தெரிஞ்சதும் அதை மறைக்க அவர் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டார். முதல்ல ஃபேஸ்புக்ல போட்டோ வெச்சிருந்தேன். இந்தப் பிரச்னைக்குப் பிறகுதான் எடுத்துட்டேன்” என்றாள் மோனிகா.

நாள்தோறும் உரையாடல் நீண்டுகொண்டே போனது. கணவன் தனக்கு இழைக்கும் கொடுமையின் காயங்களைக் கீறிக் கீறிக் காட்டிக்கொண்டிருந்தாள் மோனிகா. அவளுக்கு ஆறுதல் சொல்வதே கதிரேசன் பணியானது.

ஒருபுறம் ஆழமான வருத்தமிருந்தாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோஷமும் இருக்கத்தான் செய்தது. அது தவறு என்று அவன் கலாசார மனம் சொன்னதால் அதை விரட்டி விரட்டியடிக்கத் தொடங்கினான். ஆனாலும் அது அவ்வப்போது வந்து அவனுக்குப் போக்குக்காட்டியது. ஒருநாள் மோனிகா தனது புகைப்படத்தை அவனுக்கு அனுப்பினாள். பேரழகின் வசீகரம் குறைந்திருந்தது. அன்றலர்ந்த மலர் போலிருப்பாள். ஆனால் இப்போது ஒரு பெரிய காய்கறி மார்க்கெட்டில் நுழைந்தால் காலில் மிதிபடும் காய்கறிகளைப்போல் இருந்தாள்.

“என்னோட பிரச்னையவே பேசிக்கிட்டி ருக்கேன். உன் குடும்பத்தைப் பத்திச் சொல்லு” என்ற மோனிகாவிடம் தன் குடும்பத்தைப் பற்றிச் சொன்னதுடன், தொப்பை அவ்வளவாகத் தெரியாத, தன் குடும்பத்துப் புகைப்படங்களையும் அனுப்பிவைத்தான்.

“உன்னைமாதிரி ஒரு ஹஸ்பண்ட் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்” என்று மோனிகா பதில் அனுப்பினாள்.

‘விண் சொர்க்கமே பொய் பொய், என் சொர்க்கம் நீ பெண்ணே’ என்று இடையிலிருந்து பாடல் ஒலித்தது. கண்களை மூடிக்கொண்டான். ‘இதழ் நீரைத்தூவு’ என்று தன் புறங்கையில் முத்தம் தந்தாள் அர்ச்சனா.

சிலநாள்கள் எந்தத் தொடர்புமில்லை. இவன் அனுப்பிய எந்தச் செய்திகளுக்கும் கேள்விகளுக்கும் எந்தப் பதிலும் வரவில்லை. சரியாக இவன் எண்ணியதில் 11 நாள்களுக்குப் பிறகு மோனிகாவிடமிருந்து பதில் வந்தது. கணவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதில் பெரும் விபத்து. மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தச் செய்தியைப் பார்த்ததும் அவள் விடுதலையு ணர்வுடன் இதை அனுப்பியதாகக் கதிரேசனுக்குத் தோன்றியது. இவனுக்கும் நிம்மதியில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன. ஆழமான பெருமூச்சை இழுத்து வெளியேற்றினான்.

அன்றைய இரவு கதிரேசனுக்கு வலிப்பு வந்தது. கண்கள் செருகி, கைகால்களை வெட்டத்தொடங்கினான். உஷாவும் ராகேஷும் பயந்துபோனார்கள். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதும் கதிரேசனிடம் பெரிய மாற்றங்கள். திடீரென்று பதற்றமாவதும் பலநாள்கள் இருவரிடமும் பேசாமல் மௌனத்தில் ஆழ்வதுமாக இருந்தான். ராகேஷ்தான் தன் நண்பனின் தந்தை என்று உளவியல் நிபுணரிடம் அழைத்துச்சென்றான். அவர் கதிரேசனின் மனதைப் பாதாளக் கரண்டியால் அலசியபிறகு உஷாவைத் தனியாக அழைத்துப் பேசினார்.

“உங்க ஹஸ்பண்ட் ஒரு தனியான உலகத்தில் இருக்கார். அவர் காலேஜ் கிரஷ் மோனிகாங்கிற பொண்ணோட ஃபேஸ்புக் ஃபிரெண்டா இருக்கிறதாகவும், அவளை ஹஸ்பண்ட் கொடுமைப்படுத்துறதாகவும் சொல்றார். ஆனா அவர் பாஸ்வேர்டு வெச்சு அக்கவுன்ட்டை ஆராய்ஞ்சு பார்த்தா அது ஃபேக் ஐடி. அதை ஆரம்பிச்சிருக்கிறவரும் உங்க ஹஸ்பண்ட்தான். அதுமட்டுமல்லாம மோனிகா ஃபேக் ஐடி ஃபிரெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் எல்லா ஃபேக் ஐடியையும் இவரே உருவாக்கியிருக்கார். மொத்தம் 36 ஐடி. அவருக்கு இப்போது தேவை மனசுவிட்டுப் பேசுறது, இயல்பான வாழ்க்கை, உலகம் பத்திப் புரிஞ்சுக்கிறது. நீங்க இது எதையும் அவர்கிட்ட கேட்டுக்காதீங்க. செவ்வாய், வியாழன் ரெண்டுநாள் கிளினிக் கூட்டிட்டு வாங்க.”

காலையில் போனை நோண்டியபடி நிமிர்ந்து பார்த்த ராகேஷ் அதிர்ந்துபோனான். இவனுடைய ஷார்ட்ஸை அணிந்தபடி பல் துலக்கிக்கொண்டிருந்தார் கதிரேசன்.

“அப்பா, அது என் டூத் பிரஷ்ப்பா.”

– ஆகஸ்ட் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *