கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 9,315 
 
 

அழுதுகொண்டிருக்கிறது பூ.
பூ அழுதால் தேன்.
பாலன் அழுதால் தேவை பால்.

இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது கன்னங்களில். பாடசாலைவிட்டு பலமணி நேரங்களாகியும் அவளை அழைத்துப்போக தாய் தந்தையோ உறவோ தேடிவரவில்லை. அதை குழந்தை எதிர்பாத்திருப்பதாகவும் தெரியவில்லை. காதைக்கடிக்கும் குளிரால் கன்னங்கள் அப்பிள் போல் சிவந்து கிடக்கிறன.

அந்தவழியால் வந்து பாடசாலைத்தாதி அவளிடம்;

”கரீனா!! இன்னும் நீ வீட்டுக்குப்போகவில்லையா? யாரும் கூட்டிப்போக வரவில்லையா? பாடசாலை முடித்த பலமணி நேரமாகிவிட்டதே. ஓடு வீட்டை”…

”இல்லை….”

”நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போய் விடவா”..

”இல்லை”

காரில் இருந்து இறங்கிவந்த தாதி;

”உனக்கு என்ன பிரச்சனை அம்மாவுக்கு போன் பண்ணவா”?

”இல்லை. . . சனி ஞாயிறுகளில் நான் அப்பாவிட்டைதான் போகவேணும்”

”படு குளிராக இருக்கிறது. நான் உன்னை உன்னப்பாவிடம் கூட்டிப் போகிறேன் வா”

”இல்லை. . . எனக்கு அங்கு போகவிருப்பமில்லை. அப்பாவின் காதலி இன்று அவரிடம் வருவார். அவர்கள் கொஞ்சி குலாவிக் குதூகலமாக இருப்பார்கள் என்னை என் அப்பாவே கவனிக்க மாட்டார். குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் எனது அறையில்தான் தனியே இருக்க வேண்டும். அதைவிட நான் இங்கேயே இருந்து விடுகிறேனே”

”இதை நீ உன் அம்மாவிடம் சொன்னாயா?”

”ஆம் அவவும் தனது கணவனுடன் (அதாவது தத்தெடுத்த தந்தையுடன்) அவர் சொற்கேட்டே நடப்பா. அவரின் குழந்தைகள், என் அரைஅண்ணர்கள் வருவார்கள். அம்மாவுக்கு இப்போதுதான் ஒரு தங்கைச்சிப்பாப்பா பிறந்திருக்கிறாள். அவளைப்பார்ப்பதற்கே அம்மாவுக்கு நேரம் போதாது”
”நின்று கொள் நான் உன் அப்பாவுக்குத் ரெலிபோன் பண்ணுகிறேன்” என்றபடி கரீனாவின் தந்தையுடன் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் தந்தை;

”நான் கரீனாவின் பாடசாலை தாதி பேசுகிறேன். கரீனா அழுதபடி பாடசாலை வளவினுள் நிற்கிறாள். குளிர் அதிகமாக இருக்கிறது இன்னும் சிலமணித்தியாங்கள் இப்படியே நின்றால் குழந்தை செத்துவிடுவாள்”
”கரீனாவுக்கு என்வீட்டுக்கு வரத்தெரியும். நான் என்காதலியை அழைத்து வரப்போகிறேன். நான் திருப்பி வரப்பலமணித்தியாலங்கள் செல்லும். செத்தால் சாகட்டும். அல்லது அவளின் தாயுடன் தொடர்பு கொள்ளுங்கள்” பதில் எதையும் எதிர்பார்க்காது தொலைபேசி துண்டிக்கப்படுகிறது.

தாதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கரீனாவின் தாய்க்குத் தொலைபேசி எடுத்தாள்.

”கலோ நான் கரீனாவின் பாடசாலைத் தாதி பேசுகிறேன். கரீனா அழுதபடி பாடசாலை வளவினுள்தான் நிற்கிறாள். அவளை அழைத்துப்போக யாரும் வரவில்லை. அவளின் தந்தையுடன் தொடர்பு கொண்டேன் அவர் வெளியிடத்தில் நிற்பதாகக் கூறுகிறார். நான் கரீனாவை இப்படியே விட்டுவிட்டுப்போக இயலாது”

”ஐயோ அவள் இன்னும் தகப்பனிடம் போகவில்லையா. அவளுக்குத் தனியாகப் போகத் தெரியுமே. அவளிடம் வீட்டுத்துறப்பும் உள்ளதே. கோட்டு உத்தரவுப்படி அவள் இன்றில் இருந்து திங்கள் வரை தகப்பன் வீட்டில்தான் இருக்க வேண்டும். கரீனா என்னிடம் வரவியலாது. கணவனின் மூத்ததாரத்து இரண்டு பையன்களும்; இங்கே தான் சனி ஞாயிறு தங்குவார்கள். இவர்கள் வீட்டை இரணகளமாக்கி விடுவார்கள். கரீனாவால் அவர்களைத்தாங்க முடியாது. தயவு செய்து கரீனாவை தந்தையின் வீட்டில் விட்டு விட முடியுமா?”

”சரி முயற்சிக்கிறேன்” தொலைபேசி துண்டிக்கப்படுகிறது.

”நான் உன்னை உன் அப்பாவின் வீட்டில் விட்டு விடுகிறேன் வா”

“நான் வரமாட்டேன்…எனக்கு அங்கு போக விருப்பமில்லை”அடம்பிடிக்கிறாள் “நான் அம்மா அப்பாவிடம் போக விரும்பவில்லை. இரண்டு வீடுகளிலும் அன்னியன்போலவே வாழ்கிறேன்”

அவள் அன்னியமானவள் அல்ல அன்னியமாக்கப்பட்டவள்.

தாய் இன்னொரு ஆடவனுடன் அவனது தேவைகளைத் திருப்திப்படுத்தவும். அவனோ தன்பிள்ளைகளையும் தாயிடன் பிறந்த பிள்ளையையும் அதாவது தனக்குப்பிறந்த பிள்ளைகளில் தானே பாசமாக இருப்பான். இவள் இரண்டு வீடுகளிலும் வேண்டப்படாதவளாக மூன்றாவது நபர்போலவே வாழவேண்டி இருக்கிறது. குழந்தைகளுக்குத் தேவை அன்பு, பாசம், அரவணைப்பு. தனது தாய்தந்தையர் மற்றவர்களுடன் கூடிவாழ்பதை எந்தப்பிள்ளைகளும் ஏற்பதில்லை. மனம் என்றும் எனது அம்மா எனது அப்பா என்றுதானே துடிக்கிறது. அன்பும் அரவணைப்பும் கிடைக்காத குழந்தைகள் அதைத்தேடியே அலைந்து பருவமடையமுன்னரே பாசம் காட்டும் யாருடனும் கூடத் தொடங்கி விடுவார்கள். தைத்தொழில் நாடும் நாடுகளில் இயந்திரமாக்கப்பட்ட வாழ்வில் பணம் மட்டும்தானே தயாரிப்பாக அமைகிறது.

தந்தையோ இன்னெரு பெண்ணுடன் கும்மாளம் போடுவதை எந்தக்குழந்தைதான் விரும்பும். நவீன மேற்குலகில் தொலைகாட்சிகள்தானே பிள்ளைகளைப் பராமரிக்கின்றன. இப்பிள்ளைகள் நாளை வளர்ந்து வரும்போது பெற்றோரை எப்படி பாதுகாத்துப் பராமரிப்பர். அன்பு பாசத்தை அள்ளிக் கொடுக்கவேண்டிய பெற்றோரோ தமது உணர்வுகளுக்கும், சுயநலங்களுக்கும், விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதங்களாலும் பிரிந்து செல்லும்போது பாதிக்கப்படுவது பாலகர்கள் தானே.

என்ன செய்வது என்று அறியாத தாதி

“அப்போ என்ன செய்யப்போகிறாய்”

போக்கிடம் தெரியாத பிள்ளை

“இப்படியே குளிருள் இருந்து சாகப்போகிறேன் என்னை விட்டுவிடுங்கள்”

குழந்தையை இறுகக் கட்டி அணைத்த தாதி

“ஐயோ கடவுளே! இந்த வயதில் இப்படி ஒரு எண்ணமா? தேவதை போல் இருக்கும் நீ வேண்டாப்பிள்ளையா? எத்தனைபேர் பிள்ளை இல்லை என்று தவம் கிடக்கிறார்களே. நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக் கூடாதாடீ.”

“நான் உங்களுடன் வரட்டா. நீங்கள் என்னில் அன்பாக இருக்கிறீர்கள் தானே”

எவ்வளவு நம்பிக்கை. வெளுத்தது எல்லாம் பால் என்று எண்ணும் உள்ளம். எவ்வளவு வெறுப்பு இருந்திருந்தால் இந்தப்பாலகி பெற்றோரை மறுத்திருக்கும்.

“நீ என்னுடன் வரலாம், ஆனால் வாழ இயலாது. அதற்குச் சட்டம் இடம்கொடுக்காது”

“அப்போ நான் யாருடன் வாழலாம் என்று சட்டம் சொல்கிறது”

“அம்மா அப்பாவுடன்”

“அம்மா அப்பா என்னில் அன்பாக இல்லாதபோது நான் அன்பான கடவுளிடம் போவதுதானே முறை”

தாதி மீண்டும் கரீனாவை இறுக அணைத்துக் கொண்டாள். கடவுளின் குழந்தைகளுக்கு இப்படி ஒருநிலையா? காதல் அடுத்தகாதல் பற்றிக் கூறும் கிறிஸ்தவத்தை அடிப்படைச் சட்டமாகக் கொண்ட எமது நாட்டுக் கொடியில் சிலுவை கூடச் சரிந்துதானே கிடக்கிறது. பணக்காரநாடு என்று பெருமை கொள்கிறோமே பாசம். . என்ன விலை? இவளை நான் கூட்டிச்சென்றால் பிள்ளையைக் கடத்தி விட்டேன் என்று சட்டம் கழுத்தை நெரிக்கும். யாருக்கும் பதில் சொல்ல இயலாதவளாகவும் கரீனாவை அந்த இடத்தில் விட்டுவிட்டுப் போனாலும் சட்டம் அவளை கழுத்தில் பிடிக்கும். இருதலைக் கொள்ளி எறும்பாக எப்படி பிள்ளையைத்தனியே அந்த இருண்ட நேரத்தில் விட்டுப்போக முடியும்? மனதுக்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக கண்ணில் அரும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

“கரீனா வா. . . என்னுடன் வா”

“எங்கே? உங்களின் வீட்டுக்கா, சட்டம் சொல்லும் இடத்துக்கா”

“ஆம் அங்கே உன்னைப் போன்ற பலகுழந்தைகள் இருக்கிறார்கள். நீ அவர்களுடன் விளையாடலாம், கதைக்கலாம், ஆடிப்பாடலாம், உன்னை அவர்கள் வடிவாகப் பார்த்துக் கொள்வார்கள். நானும் உன்னை வந்து அடிக்கடி பார்ப்பேன். என்னிடம் நீ விருந்தாளியாக அடிக்கடி வரலாம்”

கரீனாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தாதியைப் பாய்ந்து கழுத்தில் தாவி இழுக அணைத்துக் கொண்டாள். இருந்த போதிலும் தாய்பாசம் நெஞ்சை உறுத்தியிருக்க வேண்டும்

“நான் அங்கே போயிருந்தால் அம்மா கவலைப்படுவா அல்லவா, திங்கட்கிழமை அம்மா என்னைத் தேடுவா அல்லவா”

“அம்மா விரும்பினால் உன்னை அங்கே வந்து பார்க்கலாம். உனக்கென்று ஒரு தனியறை, விளையாடப் பிள்ளைகள், இன்னும் இன்னும்….”

“சரி அப்ப நாங்கள் அங்கேயே போவம்”

தாதி பிள்ளையை குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போது மாலை 6மணி. பதியவேண்டிய பத்திரங்களைப் பதிந்து விட்டு குழந்தைகள் தங்கியிருக்கும் வரவேற்பறைக்குச் சென்றபோது இவளின் வயதுடைய பலபிள்ளைகள் இருந்தார்கள். ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளில் ஒரு ஆபிரிக்க பெண்குழந்தை ஒடிவந்து கரீனாவின் கையைப் பிடித்து அழைத்துப்போனது. கரீனா தாதியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணமே போகிறாள்.

“நாங்கள் திங்கள் கிழமை பாடசாலையில் சந்திப்போம்” என்று கூறியபடி கரீனா கையசைத்தாள். அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்மணி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் நீங்கள் போட்டு வாருங்கள் என உறுதியும் அழித்தாள்

பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் சுமந்த உணர்வுடன் தாதி திரும்பும் போது அவள் கண்களில் மாரி பொழிந்தது. கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள். கரீனா அந்த ஆபிரிக்கப்பிள்ளையுடன் சிரித்துக் கலகலப்பாக விளையாட ஆரம்பித்தாள். நாளைப்பற்றியே கவலைப்படாத சின்னஞ்சிறுசுகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தன. சோகத்தைச் சுமந்தவர்களுக்குத்தான் அதன் வலியும், சுமையும் தெரியும் என்பதை அந்த ஆபிரிக்கக்குழந்தை சுட்டிக்காட்டியது.

குழந்தைக்காப்பகம் நாட்கள் நகர புதிய வரவுகளை ஏற்பதற்காக பிள்ளைகளை பராமரிக்க விரும்புபவர்களிடம் ஒப்படைப்பர். நாளை அந்தச் சின்னச்சிட்டு கரீனா இனி யார் யார் கைகளிலே. . . ? எங்கெங்கோ…? கைமாறிப்போகிறது அன்பு பாசம் உறவு. தனித்து வளர்கிறதே தோப்புக்கள். எதிர்காலம் தெரியாத ஏக்கத்துடன் அந்த உருண்டையான நீலவிழிகள் காலத்துக்காய் காத்திருக்கிறன.

– 09.12.2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *