கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 8,286 
 
 

இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ரகுராமன், மிகுந்த சோர்வுடன் வீட்டின் காலிங் பெல்லை அமுக்கினார்.

கதவைத் திறந்த அவர் மனைவி வசுமதியின் முகம் வாடி இருப்பதை எளிதில் புரிந்துகோண்டு, “என்ன வசு, இன்னிக்கு ரொம்ப டல்லா இருக்க… முகத்துல சுரத்தே இல்லையே?” என்றார்.

“ஆமாங்க… நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்….உங்க கிட்ட சொன்னா திட்டுவீங்க, சொல்லாமலும் இருக்க முடியாது.”

“நீ தப்பு பண்றதோ, நான் திட்றதோ இந்த வீட்டுக்கு புதுசா என்ன, சும்மா சொல்லு.”

“நம்ம வீட்டு பக்கத்து வீட்டின் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்ல ஒரு பையன் இருக்கான். அவன் பேர் செந்தில். போன மாதம் புதுசா சிமெண்ட் பூசுன அந்த பில்டிங் மேல ஒரு பெரிய ரப்பர் டியூப்னால போர்வெல் தண்ணிய பீச்சியடிச்சுகிட்டிருந்தான்… நம்ம வீட்டு ஸம்ப்ல தண்ணியில்ல… அதனால நான் டாங்கர் தண்ணி ஆர்டர் பண்ணாம, அந்த பையனை, நம்ம வீட்டு ஸம்ப்ல தண்ணீர் ரொப்பச் சொல்லி… அவன் கையில் இருனூறு ரூபாய் பணம் கொடுத்தேன்.

“…….”

“இதே மாதிரி, அடிக்கடி நம்ம வீட்டுக்கு தண்ணீர் வாங்கிக் கொண்டு, அவனுக்கு இருனூறு ரூபாய் கொடுத்தேன். இன்னிக்கு பில்டிங் ஓனருக்கு இது தெரிஞ்சு, அந்த செந்தில வேலைய விட்டு விரட்டிட்டாரு… எனக்கு மனசே சரியில்லைங்க.”

“எனன வசு, உனக்கு அறிவிருக்கா? பக்கத்து வீட்டு ஓனர், நம்மப் பத்தி என்ன நெனப்பாரு? பூமி பூஜைக்கு நம்மள கூப்டாரு, நாமளும் போனோம். அவரும், அவர் வீட்டம்மாவும் நம்மள எவ்வளவு மரியாதையுடன் நடத்தினாங்க? ச்சே. உன்னால நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்?”

“வாட்டர் டாங்கர்னா நானூறு ரூபாய்.. பையனுக்குன்னா இருனூறுதானேன்னு சிக்கன கணக்குப் போட்டு தப்பு பண்ணிட்டேன்.”

ரகுராமன் மிகுந்த கோபத்துடன் ஒன்றும் சாப்பிடாது, தன் பெட்ரூமினுள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.

ரகுராமன் சென்னையில் உள்ள ஒரு பெரிய அமெரிக்கன் மல்டி நேஷனல் ஐ.டி. கம்பெனியில் ஹெச்.ஆர் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் சீனியர் வைஸ்-ப்ரஸிடெண்ட்.

மாதம் பிறந்தால் லட்சக் கணக்கில் சம்பளம். மிகவும் கண்டிப்பானவர். தனது புதிய வித்தியாசமான அணுகுமுறையினால் சுறு சுறுப்பான, வேகமான திறமையாளர்களை ஆதரித்து, திறமையற்றவர்களையும், சோம்பேறிகளையும் களையெடுப்பதில் சமர்த்தர். தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நேர்மையாக முடிவெடுக்கும் சுதந்திரம் அளிப்பவர். அதே சமயம், தாரள மனசும்,
அவசியமான தேவைகளுக்கு உதவி செய்யும் எண்ணமும் உடையவர்.

ஆனால், வசுமதி சிக்கனம் என்கிற பெயரில் விலை மோரில் வெண்ணை எடுப்பவள். படு கஞ்சம். காய்கறியிலிருந்து, கோலமாவு வரை பேரம் பேசி பேசியே வியாபாரிகளை விரட்டியடிப்பவள். தன் மனதில் தான் ரொம்ப கெட்டிக்காரி என்ற நினைப்பு வேறு. ஒரு நாள் சமைத்துவிட்டு, அதை நான்கு நாட்கள் ப்ரிட்ஜில் வைத்து ரகுராமனுக்கு பரிமாறுபவள். தனக்கு மரியாதைக்கு வைத்து ஓதிக் கொடுத்த புடவைகளை, அடுத்தவர்களுக்கு விற்று காசாக்கிக் கொள்பவள். ரகுராமனின் கம்பீரத்துக்கும், பரந்த மனசுக்கும், நேர்மைக்கும் அடிக்கடி தர்ம சங்கடத்தை ஏற்படுத்துபவள்.

அவர்களின் ஒரே மகன் டூன் ஸ்கூலில் படித்துவிட்டு, தற்போது ஐ.ஐ.எம் அகமதபாத்தில் மேனேஜ்மெண்ட் படித்துக் கொண்டிருக்கிறான்.

மறு நாள் காலை… ஏழரை மணிக்கு, செந்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் வசுமதியைப் பார்க்க வந்தான். வேறு வேலை கேட்டு மனைவியுடன் சேர்ந்து வீட்டின் முன்பு உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான். வசுமதி ஆடிப்போனாள். இது இவ்வளவு சீரியஸ் ஆகும் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அனால், ரகுராமன் சமாளித்துக் கொண்டு, தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்து தன் அலுவலகத்தில் குணசேகர் என்பரைப் போய் பார்க்கச் சொன்னார். அவன் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு மனைவியுடன் கிளம்பிச் சென்றான்.

குணசேகர் அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர். அவரிடம் சொல்லி செந்திலை ஹவுஸ் கீப்பிங் ஏஜன்ஸியின் மூலமாக தன் கம்பெனியிலேயே சேர்த்து விட்டார் ரகுராமன்.

மினிமம் வேஜஸ் ரூல் படி செந்திலுக்கு நல்ல சம்பளம், ஈ.எஸ்.ஐ., பி.எ•ப்., குரூப் இன்ஷ¥ரன்ஸ் என ஏகப்பட்ட சலுகைகள். வசுமதிக்கு ரொம்ப சந்தோஷம்.

ஆனால் ரகுராமன், தன் மனைவி செய்த தவறுக்கு, பக்கத்து வீட்டு பில்டிங் ஓனரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டார்.

நடுவில் ஒரு நாள் வசுமதி, “செந்திலின் மனைவியை நம்ம வீட்டு வேலைக்கு வச்சிகிட்டா என்ன? அவனுக்கு நீங்கதான நல்ல வேல போட்டுக் கொடுத்தீங்க…அதுக்கு பதிலா சம்பளம் இல்லாம நம்ம வீட்ல அவ வேலை செய்யட்டுமே..” என்றாள். ரகுராமன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

எட்டு மாதங்கள் சென்றன. ரகுராமன் அலுவலக விஷயமாக ஒரு பத்து நாட்கள் அமெரிக்கா சென்றுவிட்டு அன்று காலைதான் வீடு திரும்பியிருந்தார்.

அன்று மாலை நேரம், வசுமதி அவரிடம் வந்து, “என்னங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா? நீங்க அமெரிக்கால இருந்தப்ப, நம்ம செந்தில உங்க ஆபீஸ் குணசேகர் வேலைலருந்து எடுத்திட்டானாம்…..செந்திலும் அவன் மனைவியும் நேத்து நம்ம வீட்டுக்கு வந்து அழுதாங்க….அவன் பொண்டாட்டி நிறை மாத கர்ப்பிணி வேற. அதெப்படி உங்கள கேட்காம நீங்க சேர்த்துவிட்ட ஒருத்தர, அதுவும் உங்க கீழ வேலை செய்யற ஒருத்தன் வேலைய விட்டு துரத்தலாம்? ” ரகுராமனை உசுப்பேத்தினாள்.

ரகுராமன் அமைதியாக, “காரணமில்லாம குணசேகர் எதுவும் செய்ய மாட்டார். நேர்மையான முடிவைத்தான் எடுத்திருப்பார். நான் குடுத்த ட்ரெயினிங் அப்படி” என்றார்.

“உங்களுக்கு சமர்த்து சாமர்த்தியமே போறாதுங்க… நீங்க சீனியர் வைஸ்-பிரஸிடெண்டா, இல்ல அவனான்னு எனக்கு தெரியல”

ரகுராமன் தனக்குள் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டார்.

அடுத்த அரை மணி நேரத்தில், குணசேகரிடமிருந்து ரகுராமனுக்கு மொபைல் அழைப்பு வந்தது. அருகில் வசுமதி இருந்ததால் ஸ்பீக்கரை ஆன் செய்து மொபலை எடுத்தார்.

“குட் ஈவ்னிங் ரகு … எனக்கு நாளைக்கு பர்த் டே. அதனால கோவிலுக்கு போயிட்டு, இரண்டு மணி நேரம் லேட்டா ஆபீஸ¤க்கு வருவேன். பை த பை, நீங்க ஹவுஸ் கீப்பிங்ல சேர்த்துவிட்ட செந்தில வேலைய விட்டு எடுத்திட்டேன். ஜஸ்ட் உங்க இன்ப்ர்மேஷனுக்கு சொன்னேன்.”

“உன் பர்த் டேக்கு ஆல் த பெஸ்ட் குணா… என்ன பண்ணான் அந்த செந்தில்?”

“நம்ம எம்ப்ளாய்ஸ¤க்கு தினமும் ஆபீசுக்கு வர்ற ஐந்து லிட்டர் வாட்டர் பாட்டில்களை செக்யூரிட்டியுடன் சேர்ந்து திருடி வெளில வித்து பணம் பண்ணியிருக்கான் ரகு. எங்கொயரி வச்சு விசாரிச்சேன் அவங்க உண்மைய ஒப்புக்கிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்காங்க.. செந்திலையும், செக்யூரிடியையும் வேலைய விட்டு உடனே தூக்கிட்டேன்.”

” ஓ, வெரிகுட், குணா.”

“நீங்க விருப்பப்பட்டா வேற கம்பெனிக்கு அதே ஹவுஸ் கீப்பிங் ஏஜன்ஸி மூலமா அவன அனுப்பலாம்….”

“நோ,நோ, நீ செஞ்சது ரொம்ப சரி குணா. திருடர்களுக்கும், பொய்யர்களுக்கும் நாம உதவியே செய்யக் கூடாது குணா. நமக்குத்தான் கெட்ட பெயர் வரும்.”

தொடர்பைத் துண்டித்தார்.

வசுமதி, “என்னங்க… பாவம்ங்க அவன், வேற கம்பெனி மூலமா ஏதாவது செய்யுங்க அவன் பொண்டாட்டி கர்ப்பினிங்க” என்றாள்.

“அவ கர்ப்பமானது அவர்களோட தனிப்பட்ட விஷயம்… உன்னுடைய அனுதாபத்தை பெறுவதற்காக ஒரு தலையணையை அவ வயித்துல வச்சுகூட கட்டியிருப்பான் அந்தத் திருடன்… அவன் குற்றம் பண்ண ஆரம்பிச்சதுக்கு ஒருவிதத்துல நீதான் முக்கியமான முதல் காரணம்… திருட்டுத்தனமா பணம் சம்பாதிக்கச் செய்து அவன் மனச கெடுத்ததே நீ தான்…அவன் மறுபடி இங்க வந்தான்னா ஒரு வாய்த் தண்ணிகூட அவனுக்கு நீ தரக்கூடாது … இனிமே செந்தில் விஷயத்தை என்னிடம் பேசி என் நேரத்தை வீணாக்காத வசு, எனக்கு அருவருப்பா இருக்கு.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *