தங்க மீன்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 7,704 
 
 

எனக்கு வயது இருபது. எனக்குள் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற துடிப்பும் ஆசையும் அதிகமாகிவிட்டது.

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருடங்கள் படித்து, இப்பதான் +2 முடித்தேன். ஆனால் ரிசல்ட் இன்னமும் வரவில்லை. பரீட்சை எழுதின எனக்குத் தெரியாத ரிசல்டா?

சின்ன வயதிலிருந்தே கோலிவுட் என்னுடைய மனதில் ஒரு மாயாபஜார் போல் அழகுடன் பதிந்து கிடந்தது. அதற்கு முக்கியமான காரணம் தனுஷ் நடிக்கும் காதல் தூவப்பட்ட படங்கள்தான்.

‘துள்ளுவதோ இளமை’ சினிமாவிலிருந்து, நேற்று நான் பார்த்த ‘தொடரி’ வரை அவர் நடித்த காதல் காட்சிகள் எனக்குள் விசேஷமாகப் பதிந்து போயிருந்தன. தமிழ் சினிமாக்களில் தனுஷ் நடித்த கதாபாத்திரங்கள் என்னுடைய மனோவடிவங்களின் நிஜமான பிரதிபலிப்புகளாகவே எனக்குத் தெரிந்தன.

நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் தனுஷைத்தான் காதலித்திருப்பேன். அப்படிப்பட்ட மென்மையான கதாநாயகன் அவர். பணக்காரப் பெண்களிடம் அவருடைய காதல், அவரின் சோகம், அவருக்கே உரித்தான அப்பாவித்தனம் எல்லாமே என் மனதை மிகவும் தொட்டு விட்டிருந்தன.

தனுஷ் படங்களில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம், சோகக் காட்சிகளில் அவர் தான் காதலிக்கும் கதாநாயகிகளிடம் சென்று அவர்களின் ஏராளமான மார்பகங்களில், அப்பாவியான பாவனையில் தன் சாதுவான முகத்தைப் புதைத்துக் கொள்வார். அந்தக் காட்சியைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அதேபோல அழகிய பெண்களிடம் சென்று முகத்தைப் புதைத்துக்கொள்ள வேண்டும் என ஆசையாக இருக்கும்.

தனுஷுடன் நடித்த எல்லா கதாநாயகிகளுக்கும் என்னைப் பற்றி, என் பணக்கார குடும்பத்தைப் பற்றி நிறைய காதல் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். அவர்கள் அனைவரும் அழகிய தங்க மீன்கள். அதிலும் தமன்னா சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்ட மீன் என்றால் மிகையாகாது. ஆனால் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு பதிலும் வரவில்லை. நான் அது பற்றிக் கவலைப்பட மாட்டேன். என் காதலை அவர்களுக்குத் தெரிவித்து விட்டேன். அது போதும் எனக்கு.

‘வேலையில்லாப் பட்டதாரியில்’ தனுஷ் ஒரு ஓட்டை பைக்கை வைத்திருப்பார். கார் வைத்திருக்கும் அமலாபால் அவரிடம் மயங்குவது ஒரு தனி ஆவர்த்தனம். அதற்காகவே அந்தப் படத்தை பத்து தடவைகள் நான் பார்த்தேன்.

நான் தனுஷைவிட ஒல்லி. அவரைவிட கறுப்பு, ரொம்பக் குள்ளம். கறுப்பாக, குள்ளமாக நான் இருந்தாலும் என்னை நான் கண்ணாடியில் பார்க்கும்போது கர்லிங் முடியுடன் நான் நிச்சயமாக ரொம்ப அழகுதான்.

என் அப்பாவுக்கு நான் ஒரே பையன். இருப்பது பாளையங்கோட்டையில். படித்தது பாளை கிறிஸ்துராஜா உயர்நிலைப் பள்ளியில். அப்பாவுக்கு செங்கோட்டை அருகே இலத்தூரில் ஏராளமாக நில புலன்களும். கேரளா பார்டரில் காப்பித் தோட்டமும், ரப்பர் எஸ்டேட்டும் இருக்கிறது. அப்பாவுக்கு ஆசை நான் படித்து பெரிய டாக்டராக வர வேண்டும் என்பது.

அப்பாவிடம் என் நடிப்பு ஆசையைச் சொல்லி சென்னைக்குப் போக பணம் கேட்கவேண்டும். தரவில்லை என்றால், நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட வேண்டும். ஒரு முடிவுடன், அப்பாவிடம் சென்று நான் என் ஆசையைச் சொன்னேன்.

“உனக்கு பைத்தியம்தாண்டா பிடிச்சிருக்கு. நம்ம குலம் என்ன கோத்திரம் என்ன… குடும்ப அந்தஸ்து என்ன? பேசாம உன்னோட படிப்பை படிச்சு முடிச்சு ஒரு பெரிய டாக்டராக வழியைப் பார்ப்பியா… என்னமோ சினிமா கினிமான்னு உளறிகிட்டு இருக்கியே ! உன்னைப் பத்தி நான் என்னென்னமோ கனவெல்லாம் கண்டுகிட்டு இருக்கேண்டா. என் ஆசையில் அநியாயமா மண்ணை அள்ளிப் போட்டுடாதே. நம்ம பரம்பரையிலே யாருக்கும் வராத இந்த சினிமா ஆசை உனக்கு மட்டும் எப்படிடா வந்தது? போ…போய் வேணும்னா ரெண்டு சினிமா பார்த்துட்டு வந்து புஸ்தகத்தை எடுத்து வெச்சு ஒழுங்கா மரியாதையா படி…”

இது என்ன நியாயம். என்னுடைய ஆசையை நான் நிறைவேற்றிக் கொள்ளக் கூடாதாம்… ஆனால், இவருடைய ஆசையை மட்டும் நான் தப்பாமல் நிறைவேற்றி வைக்க வேண்டுமாம் ! இந்த லட்சணத்தில் ‘எப்படி நம்முடைய பரம்பரையில் யாருக்குமே வந்திராத சினமா ஆசை உனக்கு மட்டும் வந்தது?’ என்ற பெரிய கேள்வி வேறு…

அப்பாவுக்கு புரியாது. அவர்களெல்லாம் காப்பிச் செடிகள் ! நான் காப்பிச் செடிகளின் மத்தியில் வளர்ந்துவிட்ட ரோஜாச்செடி ! ரோஜாச் செடியில் என்ன பூ பூக்கும்? ரோஜாப்பூதானே பூக்கும்? அதெல்லாம் முடியாது, ரோஜாச் செடியிலும் காபிக் கொட்டைதான் காய்க்க வேண்டுமென்று சொன்னால், அதென்ன என்னிடம் நடக்கிற காரியமா?

இரண்டு நாட்கள் சாப்பிடாமல் அழிசாட்டியம் செய்தேன். அம்மா உருகினார்கள். அனால் அப்பா மசிந்தே கொடுக்கவில்லை. பாறைபோல் கரைக்க முடியாதவராகவே இருந்தார். அதற்காக கொழுந்துவிட்டு எரியும் என் ஆசைகள் வடிந்து போய்விடுமா என்ன? எந்த ஒரு நதியின் ஓட்டத்தையும் ஒரு பாறை குறுக்கே நின்றா தடுத்து நிறுத்திவிடும்? அதைச் சுற்றிக்கொண்டு அழகாக அல்லவா நதி அதன் பாட்டுக்கு ஓடும்!

நதியின் இயல்பே அது என்றால், என்னுடைய ஆற்றில் வெள்ளம் வேறு வந்துவிட்டது ! என் ஆசை வெள்ளம் அப்பாவின் லாக்கரை உடைத்து ஒரு வழி பண்ணிவிட்டுக் கிளம்பிவிட்டது !

சொல்லாமல் கொள்ளாமல் ஒரு லட்சம் பணமாக எடுத்துக் கொண்டு, சென்னை கிளம்பிவிட்டேன். முதலில் ஏதாவது ஒரு சினிமா ஸ்டூடியோவில் ஒரு சின்ன வேலை கிடைத்தாலும் போய் ஒட்டிக்கொண்டு அப்புறம் படிப்படியாக முன்னேறிக் கொள்ளலாம்..

தங்கிக் கொள்ளவும், சாப்பாட்டுக்கும் பணம் நிறைய செலவழியும். பணம் தீர்ந்தவுடன், கஷ்டப்பட வேண்டும். எத்தனையோ பெரிய நடிகர்கள் ஆரம்ப காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே தாளம் போட்டவர்கள்தானாமே? என்னுடைய சரித்திரமும் அந்த மாதிரியே இருந்து விட்டுப் போகட்டும்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.ஸி பயணம் நன்றாகத்தான் இருந்தது. உடனே தொடரியில் தனுஷ் தங்க மீனிடம் பண்ணும் குறும்புகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதைத் தொடர்ந்து எதோ ஒரு படத்தில் தனுஷுக்கு காஜர்அகர்வால் துப்பாக்கி சுடச் சொல்லித் தருகிற காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கம்போல் அப்பாவி கிராமத்தானாக அந்தப் படத்தில் வருவார்…துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது என்று காஜர்அகர்வால்
கற்றுத் தரும்போது அவரது மார்பகத்தில் தனுஷின் முழங்கைகள் பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் அவருக்கு அதை உணரத் தெரியாது. அத்தனை அப்பாவி. எனக்கும் பெண்களிடத்தில் அந்த மாதிரி அப்பாவி இளைஞனாக நடந்து கொள்ளவே விருப்பம். முரடன் போலெல்லாம்
பெண்களிடம் நடந்து கொள்ளக் கூடாது. அவர்கள் மென்மையானவர்கள்.

ரயில் சென்னை வந்ததும் ஒரு நல்ல ஹோட்டலில் ஏசி ரூம் எடுத்துக் கொண்டேன். நன்றாகக் குளித்துவிட்டு காலை உணவு வயிறார சாப்பிட்டேன்.

நெல்லையிலிருந்து அப்பா என்னை மொபைலில் தொடர்பு கொண்டு கெட்ட வார்த்தைகளில் திட்டினார். அம்மா அழுதாள்.

அன்று வடபழனி சென்று அங்கு ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு சிறிது நேரம் நின்றேன். உள்ளே நுழையப் பார்த்தபோது அங்கு இருந்த செக்யூரிட்டி என்னை தடுத்து விரட்டினான். அதைத் தொடந்து ஒரு மாதம் ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்தேன். என்னை எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வதங்கிப் போனேன்.

அன்று காலை எலியட்ஸ் பீச்சில் போய் உட்கார்ந்தேன். பத்துமணி வாக்கில் மிளகாய்த்தூள் தடவி ஒரு சுடவைத்த சோளத்தை வாங்கி கொறித்துக் கொண்டிருந்த போது, திடீரென அந்தச் சூழல் பரபரப்படைந்தது. பெரிய பெரிய டப்பா மாதிரியான வேன்களில் இருந்து, மிக மோசமான ஒப்பனைகளுடன் பெண்களும் ஆண்களுமாய் நாற்பது, அம்பது பேர் இறக்கப்பட்டார்கள். அவர்கள் கசா முசாவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டு வெயிலில் காத்திருந்தார்கள்.

மேலும் மேலும் பல வண்டிகளில் தொடர்ச்சியாக பொருட்கள் வந்து சேர்ந்தபோதுதான் இதெல்லாம் சினிமா படப்பிடிப்பிற்கான ஆயத்தம் என்பது எனக்குப் புரிய, நான் சுறுசுறுப்பானேன். பொதுமக்கள் ஏராளமாக கூடிநின்றனர். போலீஸ்காரர்களும் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர். கழைக்கூத்தாட்டம் நடப்பது போன்ற காட்சியை படமாக்க அந்த சினிமா யூனிட் தயாராகிக் கொண்டிருந்தது.

மேகம் இல்லாவிட்டாலும்கூட இயக்குநர் அடிக்கடி வானத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஒப்பனை செய்துகொண்டு தயாராய் காத்திருந்த ஆண்களும், பெண்களும் ஆட்டு மந்தையாக நடத்தப் பட்டனர்.

ஒருவர் “சைலன்ஸ்” என்று கத்தினார். “ஸ்டார்ட், காமிரா, ஆக்ஷன்” என்று கத்திய சிறிது நேரத்தில் “கட் கட்” என்று கத்தி தலையில் அடித்துக் கொண்டார்கள். அவசரமும், பதட்டமும், எரிச்சலும் எங்கும் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அடிக்கடி வாட்சில் டைம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன இது, இப்படித்தான் இருக்குமா சினிமாவுலகம்?

அப்போது படகு போன்ற ஒரு பெரிய கார் வந்து நிற்க, நரிக்குறத்தி வேடத்தில் முழு ஒப்பனையுடன் ஒரு நடிகை காரைவிட்டு இறங்கினார். தூரத்தில் நின்ற எனக்கு அது யார் என அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னருகில் நின்ற இளைஞனிடம் அது யார் எனக் கேட்டேன்.

அவன் என்னை இளக்காரமாகப் பார்த்துவிட்டு, “இதுகூட தெரியலையா? தமன்னா” என்றான்.

என்னால் நம்பமுடியவில்லை. திரையில் மூங்கில் தளிர் போல காட்சியளிக்கும் அந்த தமன்னாவா இது? கூட்டம் முண்டியடித்து தமன்னாவைப் பார்க்க பாய்ந்தோடியது, அனேகமாக என்னைத் தவிர.

சற்றுநேரத்தில் இன்னொரு படகுகார் வர, அதிலிருந்து நரிக்குறவர் வேடத்தில் இறங்கியவர் எனதருமை தனுஷ். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. கும்பல் ஓடிச்சென்று அவரைச் சூழ்ந்தது. அவர்களை போலீஸின் தடியடி சிதறச் செய்து, விரட்டி விரட்டியடிக்கப்பட்டனர். என் மனம் ‘தனுஷ் தனுஷ்’ என அடித்துக் கொண்டாலும், போலீஸிடம் அடிவாங்குவதற்கு நான் கண்டிப்பாக தயாரில்லை.

தனுஷுக்கும், தமன்னாவுக்கும் காட்சியை விளக்கினர். பிரத்தியேகமாக நிழல் உண்டாக்கப்பட்டு ரிப்ளெக்டர் உதவியுடன் அவர்கள் வெயிலில் நிற்கிற பாவனையில் காமிரா சுழன்றது. அவர்கள் இருவரையும் தவிர சினிமா சம்பந்தப்பட்ட அனைவரின் முகத்திலும் அயர்வும், வியர்வையும் தெரிந்தன.

அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் இருவரும் ஒரே ஏசி காரில் ஏறிச் சென்றுவிட்டனர்.

நான் சற்று தூரத்தில் என்னுடைய இடத்திலேதான் நின்று கொண்டிருந்தேன். எனக்கே என்னுடைய மனத்தன்மை முழுமையாக அப்போதுதான் தெரிந்தது. என்னை நானே நன்றாகப் புரிந்துகொண்ட தருணம் அது. இப்படிக் கும்பலோடு கும்பலாகவெல்லாம் என்னால் என் கெளரவத்தை விட்டுவிட்டு எந்த நடிகர் நடிகையையும் பார்ப்பதற்காக ஓட முடியாது. நான் போஷாக்குடன் சொகுசாக வளர்க்கப்பட்ட ஒரு அகந்தை உள்ள ஆள்.

திரைப்படக் கலாரசனை கொண்ட ஒரு கலாரசிகனாகத்தான் என்னை அடையாளம் காட்டிக்கொண்டு எந்த ஒரு நடிகையையும் என்னால் அணுக முடியுமே தவிர – அதுவும் தனிமையில் – இம்மாதிரி வெறி பிடித்த கும்பலோடு கோவிந்தாகவாக ஓடிப் போய் பார்ப்பதெல்லாம் சரிப்படாது எனக்கு.

ஒரு ரசிகன் என்கிற அளவில்கூட என்னால் தனுஷை நெருங்க முடியாமல் போயிருந்த அவலம் என்னைச் சுட்டது. எனக்குத்தான் தனுஷ் இமாலய மனிதர். அவருக்கு நான் கூச்சல்போட்டு, போலீஸிடம் தடியடி வாங்கிய இந்தக் கும்பலில் ஒருவன்தான். நான் அவருக்கு வெறும் ஜீரோ.

‘சினிமா பார், தப்பில்லை; சினிமா உலகத்தை மட்டும் கனவிலும் நிமிர்ந்து பார்க்காதே’ என்று என் மனத்தில் நினைத்துக்கொண்டு சோர்வடைந்தேன்.

இரண்டு நாட்கள் சென்னையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பினேன்.

அம்மாவும், அப்பாவும் என்னை கட்டிக்கொண்டு அழுதார்கள்.

மறுநாள் அப்பா என் அறைக்கு வந்து என்னைக் கட்டித் தழுவி, “உன் எதிர்காலம் உனக்கு எப்படி வேணுமோ, அப்படி நான் அமைத்துத் தரேண்டா. நீ என்னை ஒரு நல்ல நண்பனா நெனச்சுக்கோ” என்றார்.

“தமிழ்சினிமா ஆசை இன்னமும் என்னை அலைக்கழிக்கிறது அப்பா” நான் கெஞ்சலுடன் சொன்னேன்.

“நானும் அந்தக் காலத்துல சிவாஜி, ஜெமினி, எம்ஜியார் படங்களெல்லாம் மாய்ந்து மாய்ந்து பார்த்தேண்டா…. எனக்குள்ளும் சினிமா ஆசை நிறைந்து கிடந்தது. சிறிய வயதில் இந்த ஆசை எல்லாருக்கும்தான் இருக்கும். ஆனால் சினிமா வேறு, சினிமாவைத் தயாரிக்கிற உலகம் வேறு. ஒரு உண்மையைச் சொல்கிறேன். கவனமாய்க் கேள். சினிமாவில் சினிமா உலகம் கிடையவே கிடையாது. அதேபோல சினிமா உலகத்தில் சினிமாவும் கிடையாது.”

“புரியுதுப்பா”.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

1 thought on “தங்க மீன்கள்

  1. அருமையான கதை. சினிமா மோகம் கொண்டு அலையும் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கதை.
    ஜனனி ராம்நாத் – திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *