கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,509 
 
 

கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள்தொடங்குவது இப்படியே.

பல் விளக்கி தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் தயாராகி இருக்கும்.

இன்றைய முதல் வேலை, டாக்டர் செக்-அப். காலை எட்டரை மணிக்கு அப்பாயின்மென்ட்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பார்த்து, மாத்திரைகள் வாங்கி வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தோடு கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைச் சோதித்தறிய வெறும் வயிற்றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சாம்பிள் கொடுத்து விட்டு வரவேண்டும். தேநீர் தண்ணீர் ஏதும் உள்ளே போகாமல், இன்று வெறும் வயிறோடு போக வேண்டும்.

காரைப் பார்க் செய்துவிட்டு, மருத்துவமனை வரவேற்பறையில், இன்சூரன்ஸ் கார்ட் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி, கைக்கடியாரத்தில் நேரத்தைப் பார்த்தான். எட்டு இருபது.

டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை. கொண்டு போயிருந்த நாவலை, அடையாளம் வைத்திருந்த பக்கத்தில் இருந்து தொடர்ந்தான். படிப்பில் லயிக்க முடியாமல் பார்க்கிங் கட்டணம் குறித்த எண்ணம் குறுக்கிட்டுக் கொண்டிருந்தது.

அபுதாபியில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணம் அமுலுக்கு வந்து ஒரு நான்கு ஆண்டுகள் இருக்கும். அதற்கு முன்னாள் காரை எங்கும் இலவசமாக நிறுத்திவிட்டுப் போய் வரலாம். ஆனால், இப்போது ஒரு மணி நேரத்திற்கு இரண்டு திர்ஹாம்கள் வீதம் நிறுத்தப்படும் கால அளவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு, பார்க்கிங் டிக்கட் காரின் முன் பகுதியில் வைக்கப்பட வேண்டும். ஒரு முழு நாள் நிறுத்துவதற்கு 15 திர்ஹாம்கள் செலுத்த வேண்டும். அங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் டிக்கட் இயந்திரத்தில் தேவையான நேரத்திற்கான நாணயங்களை செலுத்தி, பார்க்கிங் டிக்கட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். கைவசம் நாணயங்கள் இல்லாதவர்கள் கைபேசி வழியாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

பார்க்கிங் டிக்கட் இல்லையென்றால், செலுத்த வேண்டிய பைன் தொகை இருநூறு திர்ஹாம்கள்.

இரண்டு நான்கை மறந்தால் இருநூறு. பெரும்பாலும் மக்கள் பைன் கட்ட நேர்வது, இரண்டு நான்கை மறப்பதால் அல்ல. பார்க்கிங் கட்ட வேண்டும் என்பதை மறப்பதால். கைபேசியில் பேசியபடியே காரை நிறுத்திவிட்டு அலுவலகம் போய் அங்கிருந்தே பார்க்கிங் தொகையை கைபேசி வழியாக செலுத்தி விடலாம் என்று நினைத்துப் போன பிறகு, வேலை நெருக்கடிகளால், மறந்து போவது இப்படி…

முரளியின் அலைபேசி ஒரு ஒளியோடு ஒளிர்ந்தது. ரிமைன்டர். நேற்றைக்கு செலுத்திய 15 திர்ஹாம்கள் இன்றைக்கு காலை 9 மணியோடு முடிகிறது. 9 மணிக்கு மேல் 10 நிமிடங்களுக்குள் அடுத்த நாளுக்கான கட்டணம் 15 திர்ஹாம்கள் செலுத்தப்படவேண்டும். முன்கூட்டியே செலுத்தவும் முடியாது.

ஒன்பது மணிக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நினைவில் இருந்தவனை கடந்து முரளி பார்க்க வேண்டிய டாக்டர் அவரது அறைக்குள் போனார், இவனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையோடு.

இவன் முறை வந்து உள்ளே அழைக்கப்படுவதற்குள் முரளி கைபேசி வழியே பார்க்கிங் கட்டணத்தை செலுத்தினான்.

மருத்துவர் அறைக்குள் போவதற்குள், இன்னொரு அறையில் ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான கருவியின் பட்டை இடது கையில் கட்டப்பட்டது. முரளி மறக்காமல் தனக்கு மிகப்பிடித்தமான சினிமாப் பாடலொன்றை உள்ளுக்குள் ஹம் செய்ய ஆரம்பித்தான்.

அந்த முறையும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தது. டாக்டர் எழுதித் தந்த மருந்து சீட்டோடு பார்மசிக்கு வந்தவனுக்கு அப்போதுதான் டெஸ்டுக்காக வெறும் ரத்தம் மட்டுமே எடுக்கப்பட்டது ஞாபகம் வந்தது.

அங்கிருந்தே மருத்துவரை கைபேசியில் அழைத்தான். கடந்த இரண்டு மூன்று முறைகள் ரத்த அளவில் பெரிய மாறுதல் (ஏற்றம்) இல்லாததால் ரத்தம் மட்டும் கொடுத்தால் போதும் சிறுநீர் சாம்பிள் தேவையில்லை என்று டாக்டர் சொன்னதை கேட்டபின்பே மனம் சமாதானமாயிற்று முரளிக்கு.

பார்மசியில் அடுத்த இரண்டு மாதங்களுக்கான மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அடுத்திருந்த ஒரு ஓட்டலில் காலை டிபனை சாப்பிடும்போதுதான் அன்றைக்கு ஆபீசில் நடக்க உள்ள முக்கியமான மீட்டிங் ஒன்று நினைவுக்கு வந்தது.

அலுவலகத்தினுள் நுழைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இருக்கையில் போய் அமர்ந்து மீட்டிங் போக தேவையான டாகுமென்ட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த முரளியிடம் வந்த அவன் பாஸ் பாண்டே “கன்க்ராட்ஸ் முரளி பன்னிரண்டரை வருடங்கள் முடித்ததற்கு” என்றார்.

இதை எப்படி தான் மறந்து போனோமென்று யோசித்துக் கொண்டிருந்த முரளியை அலுவலகத்தில் இருந்த சின்ன மீட்டிங் ரூமிற்கு அழைத்துக்கொண்டு போனார். மீட்டிங் டேபிளைச் சுற்றி உடன் வேலை செய்யும் அனைவரும் சூழ, நடுவில் வட்ட வடிவ கேக் வைக்கப்பட்டிருந்தது.

கேக்கை கட் பண்ணிய முரளியை “ஏதாவது பேசு” என்று பாண்டே சொல்ல, இன்னும் ஐந்து நிமிடத்தில் தான் போக வேண்டிய மீட்டிங் பற்றி சொன்னான் முரளி. “இந்த கமிட்மென்ட்தான் முரளியின் சக்சஸ்” என்ற பாண்டேவின் பேச்சில் ஒரு கலகலப்பு எழுந்தது அறையில்.

ஒரு துண்டு கேக்கோடு தன் இருக்கைக்கு வந்தவன் அதைச் சாப்பிட்டவாறே, எடுக்க வேண்டிய மற்ற பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு மீட்டிங் அறையை நோக்கி விரைந்தான்.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட கூட்டம், வழக்கம் போல், அடுத்த கூட்டத்தில் மீண்டும் தொடருவோம் என்ற முடிவோடு கலைய, சோர்வோடு இருக்கையில் வந்து அமர்ந்தான்.

பேஸ் புக்கில் நுழைந்து, அன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, வெளியில் வந்தான்.

வீட்டுக்கு வரும்போது மறக்காமல் கொண்டு வர வேண்டுமென்று இளைய மகன் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. கூகுளில் தேடி விராட் கோலி, ரஹானே படங்கள் இரண்டு மூன்றை பிரிண்ட் எடுத்து பேக்கில் வைத்தான். அவ்வப்போது மாறும் விளையாட்டு இப்போது கிரிக்கட் வீரர்களின் படங்கள் சேகரிப்பதில் வந்து நிற்கிறது.

போன மாதம் வருடாந்திர விடுமுறையில் சென்னை போயிருந்தபோது, கிரிக்கட் அட்டாக்ஸ் என்று வீரர்களின் புகைப்படங்கள் கொண்ட கார்டுகளாய் வாங்கிக் குவித்தான். அபுதாபியிலும் அதை வாங்கித் தா என்றவனின் நச்ச்சரிப்புகளைத் தவிர்க்க முரளி ஆரம்பித்து வைத்ததுதான் இந்த விளையாட்டு.

மாலையில் ஏதாவது ஒரு ஓட்டலில் டின்னர் என்ற மனைவியின் முன்னறிவிப்பு நினைவில் வர, வீட்டுக்கு கிளம்பினான்.

பிளாட் நெருங்குகையில் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

ஹெட்செட் பொத்தானை ஆன் செய்து வீட்டை நெருங்கிக் கொண்டிருப்பதைச் சொன்னான். மகனோடு கீழே இறங்கி வருவதாகச் சொன்ன மனைவிக்காக பிளாட் கட்டிடத்தை ஒட்டியபடி காரை ஓரங்கட்டினான்.

வந்தவுடன் ஏதாவது மாலுக்குப் போய் விளையாடலாம் என்று சொல்லப்போகும் மகனை எங்கே கூட்டிப்போகலாமென்று யோசித்துக் கொண்டிருந்தவனை நோக்கி, “அப்பா” என்று கத்தியபடி காரை நோக்கி ஓடி வந்தான் மகன்.

மால் ஒன்றில் ஒன்றரை மணி நேரம் விளையாடி விட்டு, டின்னருக்காக ஓட்டலில் நுழைந்து உட்கார்ந்தார்கள்.

வழக்கத்துக்கு மாறாக எடுத்தவுடன் “முதலில் எல்லோருக்கும் ஸ்வீட்” என்றாள் மனைவி.

“எதுக்கும்மா இன்னிக்கு ஸ்வீட் முதல்ல” என்ற மகனிடம்,

“இன்னிக்கு மம்மிக்கு பர்த் டே, அதுக்குத்தான்” என்றாள் மனைவி, முரளியைப் பார்த்தபடி.

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *