ஞானப் பார்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 12,035 
 

மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான்

நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல் மயமான நினைப்பே அடியோடு வரண்டு போய் தான் மரண இருட்டின் கோரமான விலங்குப் பிடியிலிருந்து விடுபட்டு விடுதலையாகிப் புது உலகிற்கு வந்து விட்டதாய் உணர்ந்தான்.

அக்கா பார்வதியென்றால் அவனுக்கு உயிர் அவளையே உலகமென்று

நம்பியிருந்த பால்ய வயதுக் கனவுகளோடு கூடிய இளம் வாலிபனாக

அப்போது அவன் இருந்தான் அக்கா கல்யாணம் முடித்த கையோடு தான் இந்த விபரீதத்தை அவன் எதிர் கொள்ள நேர்ந்தது அவளுக்கு வந்து வாய்த்த கணவனும் சரியில்லை மகா முரடன் அவன் கையால் அடிபட்டே அவள் மிக இளம் வயதில் உயிர் நீத்ததாக அம்மா புலம்பியழுததை அவனும் கேட்டுக் கொண்டுதானிருந்தான் அக்காவைத் தீயிட்டுக் கொளுத்த மயானம் வரை போய் வந்த பிறகு சீக்கிரமே லெளகீகமயமான வாழ்க்கைப் பற்றுக்களைத் துறந்து பூரண துறவுநிலை கொள்ள அவன் வைராக்கியம் பூண்ட போது ஐயா அவனை நெறிப்படுத்த எண்ணிச் சொன்னார்

மணி! இப்ப உனக்கு வாழ்கிற வயது சாமியாராகிறது அவ்வளவு லேசான விடயமா?அதுக்கு நீ முதலில் பக்குவப்பட வேணும் வாழ்ந்து கரை கண்ட பிறகு ஒரு வேளை இது சாத்தியப்படலாம் எனக்குப் பிறகு உன்னைத் தான் நான் மலை போல நம்பியிருக்கிறன் நீ படிச்சது போதும் எங்களுக்கென்று பரம்பரையாய் ஒரு தொழில் இருக்கல்லே அதை நீ முறையாய் பழக எத்தனை காலம் பிடிக்கும் .சித்த வைத்தியம் என்றால் சும்மாவா?”

“ஐயா! நான் அதை மறக்கேலை இப்பவே நாடி பிடிச்சுப் பார்க்கத் தெரியும் உங்கடை தொழிலையே நானும் செய்யிறன் ஆனால் என்னை இப்படியே விட்டிடுங்கோ நான் சாமியாராகவே இருந்திட்டுப் போறன்”

“எனக்கு ஆட்சேபணையில்லை கொம்மா இதுக்குச் சம்மதிக்க வேண்டுமே”

“என்ன சொல்லுறாய் சரசு?””

“மணி உது சரிப்பட்டு வராது இப்ப இருக்கிறது நீ ஒரு பிள்ளை தான். நீயும் சாமியாராய் போனால் எங்கடை வம்சமே அழிஞ்சு போன மாதிரித் தான். ஒருக்காலும் நான் இதுக்குச் சம்மதிக்க மாட்டன் ஏற்கனவே உனக்குக் கல்யாணம் ஆன மாதிரித் தான். உனக்கும் உன் மாமா மகள் பவானிக்கும் சின்ன வயதிலே போட்ட முடிச்சு. நீ மறந்தாலும் அவளை ஆர் மாத்துறது? நீ துறவியாய் போனால் அவள் பாவமல்லே நல்லாய் யோசிச்சுப் பார் “

“அம்மா! அக்காவை ஒரு பிணமாய் பார்த்த பிறகு வாழ்க்கையை நம்பவே என்னால் முடியாமலிருக்கு நான் எல்லா ஆசைகளையும் துறந்து பூரண சமாதி நிலை அடைஞ்ச மாதிரி என்னுள்ளே மனசு புதுப் பொலிவோடு விழிச்ச மாதிரி ஓர் ஒளிப் பிரவாகம் அணை உடைச்சுப் பாய்ஞ்சு கொண்டிருக்கு. இதையும் மீறிப் பவானியை என் மனசாலே நினைச்சுப் பார்க்க எனக்கு முடியேலை. உங்கடை ஆசைக்காக அவள் என்னைக் கட்டிக் கொண்டு சுகப்படுவாளா? சொல்லுங்கோ”

“காலப் போக்கிலே எல்லாம் சரி வரும் உன் மனசு மாறும் நீ முதலில் இப்படி விரக்தியாய் கதைக்கிறதை விட்டிட்டு பவானியை மனசார ஏற்றுக் கொண்டு கல்யாணத்துக்கு உடன்பட்டால் மற்ற வேலைகளை நாங்கள் பாக்கிறம் “

“சரியம்மா! நான் இதுக்கு சம்மதிக்கிறன் ஆனால் ஒன்று. மனசளவிலை நான் மாறுவேனோ தெரியேலை. அக்காவின் மரணத்தைக் கண்ட பிறகு உடம்பாலை வாழ்கிற வாழ்க்கையை என்னாலை கனவில் கூட நினைச்சுப் பார்க்க முடியேலை. இப்படியொரு நிலையிலை நான் பவானியை மணக்க நேர்ந்தால் அவளின் எதிர்பார்ப்புகளுக்கு, ஈடு கொடுத்து நான் வளைஞ்சு கொடுக்காட்டால் பெரும் விபரீதமாகி விடாதா? அது தான் எனக்கு யோசனையாக இருக்கு?”

“இதைச் சரி செய்கிற பெரும் பொறுப்பு உன்ரை கையிலைதானிருக்கு”

அவன் இதயம் கனத்த மெளனத்துடன் மேற்கொண்டு பேச விரும்பாமல் எழுந்து வெளியே வந்தான். கிழக்குப் பக்கமாக அடுக்களை வாசலுக்கப்பால் நீண்டதாக கீற்றுக் கொட்டகை. ஐயாவின் வைத்தியத் தொழில் அங்குதான் தினசரி அரங்கேறும். பெரிய அளவில் பணம் வாங்கி அவர் நாடி பார்த்து மருந்தெல்லாம் கொடுக்க மாட்டார். நோயாளிகள் இஷ்டப்பட்டுக் கொடுப்பதை பெரிய மனசோடு வாங்குகிற பழக்கம் அவரின் பிறவிப் பெருமை. இதை ஓரு தவமாக அவர் செய்து வருகிறார். எனினும் மிகவும் கஷ்டமான தொழில் அது மருந்துகள் தயாரிப்பதற்கென்றே கூலிக்கு ஆள் வைத்துக் கொண்டிருந்தார். அவரின் காலத்திற்குப் பிறகு ,அதை அழிந்து போக விடாமல் கொண்டு நடத்த வேண்டிய தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக அவன் மிகவும் பெருந்தன்மையோடு நினைவு கூர்ந்தான்..

ஐயா யாருக்கோ நாடி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சாதி வேறுபாடு பாராமல் எல்லோரோடும் சகஜமாக உறவாடுவார்.. அவரை நினைக்கும் போது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது பட்டை தீட்டிய வைரம் போல் பிரகாசிக்கும் அவரின் அந்த அன்பு நிலை தவறாத நற்குணங்கள், தன்னிலும் பிரதிபலிக்க வேண்டுமென அவன் விரும்பிய போதிலும், அவரைப் போல் இல்லற தர்மத்தைப் பேணி ஓர் சிறந்த குடும்பஸ்தனாகத் தான் மாறுவது எந்த அளவுக்குச் சாத்தியப்படுமென்று அவனுக்குப் புரியவில்லை தன் மீது ஆசையை வளர்த்து வீணாக ஏமாந்து போவதற்கே பவானி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதாய் அவனுக்கு உணர்வு தட்டிற்று.அதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவும் அவனுக்குத் துணிவு வரவில்லை

அவன் படிப்பை நிறுத்தி விட்டு ஐயாவுடன் சேர்ந்து வைத்தியம் பார்க்கத் தொடங்கிய மறு வருடமே அவனது கல்யாணம் பவானியுடன் அதி விமரிசையாக ஒப்பேறியது . அது முடிந்த கையோடு ஐயாவின் காலமும் முடிந்து விட்டது. அம்மா இப்போது அவன் நிழலில் தான். இரு உறவுகளைச் சுமக்க நேர்ந்த நிலையிலும், துருவ நிலையில் வாழ்க்கை பற்றிய அவனின் கண்ணோட்டம் பவானிக்கு எட்டாத வெகு தொலைவிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பதாய், அவனால் மிக நன்றாகவே உணர முடிந்தது. உடல் ரீதியாக அவளுடன் உறவு பூண்டால் குடும்பம் பெருகும். வாழ்க்கையை வெறுத்துத் துறவு மனப்பான்மை கொண்டு வாழ்கிற தன்னை இன்னும் அது வருத்துவதாகவே அமையுமெனக் கருதி , இரவில் அவனுடைய இந்த விலகல் நிலை, பவானிக்குப் பெரும் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அவளுடைய பொங்கி வடியும் உணர்ச்சியலைகளுக்கு, வடிகால் இப்போது அவனல்ல. அப்படியானால் அவளுக்கு என்ன வேண்டும்? அவளின் பசிக்குத் தீனி போட இரை தேடி அலைகிற அந்தக் கட்டறுந்த சுபாவத்திற்கு யார் பொறுப்பு?அவன் கண்மூடிச் சாமியாராக இருக்கும் வரை தான், இந்தப் பட்டினிப் போராட்டம் அவளுக்கு. அவள் எவ்வளவுதான் வயிற்றைக் காயப் போட்டுப் பட்டினி கிடந்தாலும், அவனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்ற நிலை தான்.

அம்மாவுக்கே அது புரிந்தது. பவானி இப்படி இரவில் பட்டினி கிடப்பது மணிமாறனுக்கு வேண்டுமானால் விளையாட்டாகப் படலாம். இந்த விளையாட்டே வினையானால் அவன் தான் சிலுவையில் தொங்க நேரிடும். வைத்தியம் பார்க்கவென்று சொல்லிக் கொண்டு, அந்நிய புருஷர்கள் தினமும் வந்து பவானியைத் தீக்குளிக்க வைக்கிற நிலைமையில் அவள் தான் என் செய்வாள். அவன் வெளியே போய் வருகிற தருணங்களில் கூட அது நடப்பதுண்டு. அவர்கள் வருவார்கள் சிலசமயங்களில் மருந்து கொடுக்கும் சாட்டில், அவள் அந்த இளைஞர்களோடு மிக நெருங்கிச் சகஜமாகப் பழகுவதுமுண்டு. அதிலும் பவானி பொன்மேனி தகதகக்கும் ஒரு தேவதை மாதிரி.. தீ பிடிக்கச் சொல்லியா தர வேண்டும். இதில் அணையாத கற்பு ஜோதியென்பது எந்த மூலைக்கு எடுபடும்? அம்மாவுக்கு மூச்சுத் திணறுகிற உயிர் நடுக்கமாக இருந்தது.. அவனும் இல்லறவழிக்கு வந்து திருந்துகிற வழியைக் காணோம். . காவியுடை தரிக்காத குறைதான். புலன்களடங்கிய முழுத் துறவி மாதிரி, அவனைப் பார்க்கிற போது வயிறு பற்றியெரிந்தது

இப்படி வருமென்று யார் நினைத்தார்கள்? முற்றும் துறந்த முனிவன் மாதிரித்தான் அவன் நிலைமை.. தொழில் செய்கிற நேரம் தவிர்ந்த மிகுதி நேரங்களில் அவன் பொழுது ஆன்ம ஈடேற்றத்தை மட்டுமே நாடுகின்ற தேடல் மிக்க தனிமையிலேயே வீண் பொழுதாகக் கழிவதைக் காணும் போதெல்லாம் அம்மாவுக்குப் பவானி பற்றிய கவலை ஒரு கழிவிரக்கமாக வந்து நெஞ்சைப் பதற வைக்கும்.. இதற்குப் பரிகாரமாக அவளைத் தீக்குளிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது பெரும் பாவமென்று அவளுக்கு உறைத்தது.. வாழ்க்கையை வெறுத்துத் துறவியாகவிருந்த அவனை நிர்ப்பந்தப்படுத்தி இழுத்து வந்து அவளைத் திருமணம் முடித்து வைத்ததை எண்ணிப் பெரும் ஆற்றாமையுடன் அம்மா கவலை கொண்டிருந்த நேரத்திலேதான் அந்த விபரீதம் அவள் கண் முன்னாலேயே ஒரு பயங்கர விபத்தாக நடந்தேறியது.

ஒரு தினம் பவானிக்குத் தலை சுற்றி மயக்கம் வரும் போலிருந்தது.. அதைத் தொடர்ந்து வாந்தி எடுக்கத் தொடங்கியவளைக் கண்டு ,அம்மா பதறிப் போனாள். அப்போது மணிமாறன் உணர்வுகள் மரத்துப் போன, ஒரு ஜடம் போல, பூஜை அறைக்குள் நிஷ்டை கூடித் தவம் செய்து கொண்டிருந்தான். வெளியே என்ன பிரளயம் நடந்தாலும் விழிப்பு வராத, ஏகாந்த நிலை அவனுக்கு. அவன் இப்படியிருக்க, இது எப்படி நேர்ந்ததென்ற திடுக்கீடு அம்மாவின் மனம் முழுக்கப் பெருந்தீயாய்ப் பற்றிக் கொண்டிருந்தது.. அப்படியிருக்கக் கூடாதென்ற பிராத்தனையுடன் பவானியிடம் சொன்னாள்.

“பயப்படாதை .பிள்ளை. சாப்பாடு செமிக்கேலை போலிருக்கு.. இஞ்சிபோட்டுத் தேத்தண்ணி வைச்சுத் தாறன். குடிச்சால். சத்தி நின்றிடும்”

அவள் மெளனமாக ஒன்றும் பேச வராமல், கண்கலங்கி இருட்டில் ஊனம் விழுந்த கதையாக, எதையோ வெறித்து நோக்குவது கண்டு மீண்டும் அம்மாவே பேச்சைத் தொடர்ந்தாள்.

“என்ன பிள்ளை யோசிக்கிறாய்?”

“மாமி எனக்கு நாள் தள்ளிப் போகுது” என்றவள் மேலே பேச வராமல் வாயைப் பொத்திக் கொண்டு அழும் குரல் காற்றோடு கலந்து கனத்த சப்த அதிர்வுகளுடன் நிஷ்டை கூடியிருந்த மணிமாறனத் தட்டியெழுப்பவே அவன் திடுக்கிட்டு விழித்தான்.. அவன் சுய நினைவுக்கு வர வெகு நேரம் பிடித்தது.. தன்னை மறந்து எழுந்து வெளியே வரும் போது, அம்மா வாசலில் அவனுக்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தாள்..

“என்னம்மா? இஞ்சை நடக்குது?”

“அது தான் நானும் கேட்கிறன்.. எல்லாம் கை நழுவிப் போன பிறகு என்ன கேள்வி கேட்கிறாய்?”

“அப்படியென்ன இஞ்சை கை நழுவிப் போச்சுதாம்? சொல்லுங்கோவம்மா:”

:”அதை என்ரை வாயாலை சொல்ல வேணுமே? சொல்ல நாக்கூசுதடா என்னெண்டு நீயே பவானியிடம் கேள்”

பவானி அதைக் கேட்டு விட்டுத் தாங்கவொண்ணாத் துயரத்துடன், கைகளால் முகம் மறைத்தபடி, அவன் முகம் பார்க்க விரும்பாமல் உள்ளே ஓடிமறைந்ததும் அம்மா அதைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.

“அவள் எப்படிச் சொல்வாள் தன் வயித்திலை மரம் முளைக்கப் போகுது என்று.. நீதான் பெரிய சாமியாராச்சே! அப்ப இந்த விதை எப்படி முளைச்சதென்று நான் கேட்கிறன். சொல்லு”

அவனுக்கு அம்மா வாய் வழியாகக் கட்டவிழ்த்து விட்ட பவானி பற்றிய அந்தத் திடுக்கிடும் புதிரின் விடை கண் திறந்த நேரத்தில் அவன் தன்னையே தேற்றித் தெளிவு பெற விரும்பியவனாய் மேற் கொண்டு எதுவும் பேச வராமல் மெளனம் கனத்து யோசனையுடன் வானத்தை வெறித்தான். “ நான் ஒரு பிரமச்சாரியாக இருக்க எவ்வளவு விரதங்கள் அனுஷ்ட்டித்திருப்பேன். அது மட்டுமா? உடல் முறிய யோகாசனம் வேறு செய்தேனே! இதொன்றும் அறியாமல் பவானி மறு துருவத்தில் தன் உணர்ர்ச்சிகளோடு போராடி ஜெயிக்க முடியாமல் தானே இப்படித் தீக்குளித்து, நிலை தவறிப் போனாள்.. இவளை இந்த நிலையில் மன்னித்து ஏற்றுக் கொள்வதே அவளை இனம் கண்டு கொள்ளாமல் நான் சாமியாராக இருந்ததற்கான ஓரு ஆயுள் தண்டனையாய் இதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.. அவள் வயிற்றில் பிறக்கப் போகிற குழந்தைக்கு நானே அப்பனாகவும் இருந்திட்டுப் போறன்… அவள் உணர்ச்சிகளை வாழ வைக்கிற எனக்கேற்பட்ட தார்மீகக் கடமையை மறந்து போன, , எனது இந்தப் பாவத் தீட்டிற்கு ஒரு தண்டனையாக மட்டுமல்ல ஓரு பரிகாரமாகவும் இதை நான் ஏற்றுக் கொள்கிறன்”

“என்ன யோசனை மணி? இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடுறியோ” என்று அம்மா எகத்தாளமாகக் குரலை உயர்த்திக் கேட்கிற போது அவன் கொஞ்சமும் பதட்டப்படாமல் ஆன்மாவையே அதன் வழியில் கண்டு விட்ட திருப்தி மாறாமல் முகம் ஒளி வீசச் சொன்னான்.

“அம்மா! இப்பவும் நான் தோற்றுப் போகேலை .என் முன்னால் வளர்ந்த இந்தத் தீயிலே புடம் போடப்பட்டு நிமிர்வு கண்ட பெருமையோடு சொல்லுறன் ”பவானியின் வயிற்றில் வளரப் போகிற இந்தக் குழந்தை என்னுடையதுதான்.. நான் தான் அப்பா என்று சொல்லுறேனே”

“சீ வாயைக் கழுவு. நீயும் ஒரு மனிசனே? என்று அம்மா அவன் உண்மை நிலையறியாதவளாய் கோபம் தலைக்கேறிக் கேட்கும் போது கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே கம்பீரமாக அவன் குரல் உயர்த்திச் சொன்னான்.

“அம்மா அந்த இருப்பை நான் மறந்து எவ்வளவோ நாளாச்சு”

அது புரியாமல் மேலும் மனம் குழம்பி அம்மா உதடு சுழித்துக் கொஞ்சம் அருவருப்போடு சொன்னாள்.

“என்னவோ போ! உன்ரை சாமிக் கோலமும் உன்ரை தத்துவங்களும். . எனக்கொன்றுமாய் விளங்கேலை உதை நீதான் மெச்ச வேணும்”

அதற்கு அவன்முகத்தில் பெருமிதக் களை மாறாமல் சொன்னான்.

“இதை நானல்ல உலகமே ஒரு நாள் எனக்குத் தலை வணங்கி என்னைக் கொண்டாடத் தான் போகுது”

இதை உள்ளிருந்து அழுகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த பவானிக்கு உடம்பெல்லாம் சிலிர்க்க, வெட்கத்தையும் மறந்து ஓடி வந்து அவன் கால்களைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போலிருந்தது.

இதை உள்ளிருந்து அழுகை மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த பவானிக்குஉடம்பெல்லாம் சிலிர்க்க, வெட்கத்தையும் மறந்து ஓடி வந்து அவன் கால்களைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போலிருந்தது

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *