கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 11,910 
 
 

அக்கா பற்றிய அந்த அதிர்ச்சித் தகவலை மாமாவிடம் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வேன்? கேட்ட அந்தக் கணத்திலிருந்து உள்ளே நொறுங்கிக் கிடக்கிறேன். ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும். கனத்த மனசுடன் அக்காவின் ஊருக்குப் பஸ் ஏறினேன். அக்கா வீடு சென்னை வேளச்சேரியில். நாங்கள் இருப்பது திருப்பத்தூரில். நான் போனபோது அக்கா மாத்திரை போட்டுக் கொண்டு படுத்திருந்தாள். கொஞ்ச நாளாகவே கடுமையான வயிற்று வலியாம். இப்போது உதிரப்போக்கு கண்டிருக்கிறது என்று சொன்னாள். உபரியாய் ப்ரஷரும் படுத்தியெடுக்கிறது.

அக்காவுக்கு ரெவின்யூவில் எழுத்தர் பணி. மாமா ஆசிரியர். பி.ஜி.அசிஸ்டென்ட். அவருக்கு சர்க்கரை வியாதி. ரத்தத்தில் சர்க்கரை அளவு பி.பி.330 மி.கி. குறைப்பதற்காக மாத்திரைகள், டயட்டிங், வாக்கிங், யோகா என்று போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் குறையவேயில்லை.

சோதிடம்அக்காவிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாமாவைத் தேடிக் கொண்டு பின்பக்கம் சென்றேன். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவரைக்கொடி சடைசடையாய்க் காய் பிடித்திருந்தது. கோடியில் பலா மரம் நாலைந்து பிஞ்சுகள் விட்டிருந்தது.

“”வா… வா… என்னாப்பா? வீட்ல எல்லாரும் சவுக்கியமா?”

“”உம்..”

“”சரீ… பையன் ஜாதகத்தை அனுப்பி வெச்சேனே கிடைச்சுதா? புரபசர் என்ன சொல்றார்? ஜெகனுக்குக் கல்யாண ப்ராப்தம் வந்துட்டுதாமா? பொண்ணு எந்தப் பக்கம் அமையுமாம்?”

மவுனம் சாதித்தேன். வாயைத் திறந்தால் அழுகை வந்துவிடும் நிலை. எப்படிச் சொல்லப் போகிறேனோ? அக்காவின் பையன் ஜெகன் சாஃப்ட்வேர் என்ஜினீயர். பெங்களூரில் வேலை செய்கிறான். அவனுக்குக் கல்யாண வேளை வந்துவிட்டதா? என்று சோதிடம் கேட்கப்போய்தான் இந்தச் செய்தியை தாங்கிக் கொண்டு வந்து நிற்கிறேன். நாங்கள் போய் சிமென்ட் திண்ணையில் உட்கார்ந்தோம்.

“”என்னப்பா பேசமாட்டேன்ற?”

பேச்சு வரவில்லை. அழும் கட்டத்திற்கு வந்துவிட்டேன். கண் விளிம்பில் நீர் கோர்க்க ஆரம்பித்துவிட்டது. மாமா கவனித்துவிட்டார்.

“”என்ன… என்னப்பா? சொல்லு”

“”ஜெகனுக்கு இப்ப நேரம் சரியில்லையாம்..”

“”சரி வுட்ருவோம். மேலைக்குப் பார்த்தாப் போச்சு”

“”அதில்லை. இன்னும் நாலு மாசத்தில ராகு கேது பெயர்ச்சி இருக்காம்”

“”சரி”

“”அதுக்குள்ளே கொள்ளி போட வேண்டிய விதி இருக்காம் ஜெகனுக்கு”

சொல்லும்போதே விசும்ப ஆரம்பித்துவிட்டேன். மாமா ஒரு நிமிடம் விளங்காமல் திகைத்து நின்றுவிட்டார்.

“”யாராம்?”

“”அக்..கா.. தா” மேலே பேசமுடியாமல் அழுகை வெடிக்க, அந்த நேரம் எங்களைத் தேடிக் கொண்டு அக்கா வந்துவிட, நான் எழுந்தோடிப் போய் பாத்ரூமுக்குள் நுழைந்து வெளியில் வந்தேன். அக்காவும், மாமாவும் போய்விட்டிருந்தனர். எதுவும் இல்லைபோல் உள்ளே நுழைந்து சிறிது நேரம் பேசிவிட்டு, அக்கா சொல்லச் சொல்லக் கிளம்பி விட்டேன். இங்கேயிருந்தால் முகத்தைப் பார்த்தே அக்கா விஷயத்தை என்னிடம் கறந்துவிடுவாள். ஒரு கட்டத்துக்கு மேல் என்னாலும் மறைக்க முடியாது.

கிளம்பி வெளியே வந்தபோது மாமா நெருங்கி வந்து ரகசியக் குரலில், “”நாலு மாசத்துக்குள்ளேன்னா சொன்னாரு?” என்றார்.

“”ம்”

“”உன் அக்காகிட்டே மூச்சுவிடாதே. ஏன் ஒருத்தர்கிட்டேயும் சொல்லக் கூடாது. ரகசியம்..” சொல்லும்போதே கண்கலங்கினார். உடனே சுதாரித்துக் கொண்டு,””சரிப்பா, விதிக்கு என்ன பண்ண முடியும்? பையன் கல்யாணத்தைச் சுருக்கா முடிக்கணும். காஞ்சிபுரம் பொண்ணையே முடிச்சிடலாம்ப்பா. வேற யோசனை வேண்டாம். ஜாதகப் பொருத்தம் நல்லா இருக்கு. நல்ல குடும்பம். சட்டுபுட்டுன்னு முடிக்கணும்”

“”சரி, சில விஷயங்களை சீக்கிரமே செட்டில் பண்ணணும். பேங்க் டெபாசிட்களைப் பேர் மாற்றம் செய்தாகணும். புரபஸர் சொல்றதுதான் சென்ட் பர்ஸண்ட் அப்படியே நடக்குதே!”

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் மனைவியின் மரணம் பற்றிய செய்திக்கு இவருடைய பாதிப்பு இவ்வளவுதானா? இருபத்தேழு வருஷங்கள் ஒன்றாய் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் மனைவியின் பிரிவுக்கு அவர் துடிக்கவில்லை. என்ன மனுஷன் இவரு? பணம் மட்டுமே குறியாய் எல்லா டெபாசிட்களையும் தன் பெயருக்கு மாற்றிவிடப் பறக்கிறார் பார்.

நான் உள்ளுக்குள் அழுது கொண்டு இருக்கிறேன். உடன் பிறப்பு. துக்கத்தை வீட்டில் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. உடனே ஒப்பாரி வைத்து ஊருக்குத் தெரியும்படி செய்து விடுவார்கள். அப்புறம் அது அக்காவின் காதுகளுக்குப் போய்ச் சேரும் அபாயம் இருக்கிறது. ஐயோ! அக்கா! உன்னை முழுசாய் நாங்கள் இழந்துவிடுவோமோ? அக்கா…

“”யோவ்..யோவ்.. டுபாக்கூரு…என்னா? உங்க ஆளுங்க எல்லாருமே லூசுங்களா இல்லை புத்தி மட்டா? ஒரு ஜோஸ்யக்காரன் சொன்னதுக்கா இவ்வளவு ரியாக்ஷன் காட்றீங்க? அப்படின்னு நீங்க கேட்கிறது எனக்குக் கேட்குது சார்” இப்ப என்னா கடைசியிலே சோதிடம் பொய்யின்னு இந்தக் கதையை முடிக்கப் போற அதான? என்று யூகம் பண்ணிக் கேட்கும் கெட்டிக்கார மதியூகிகளும் உங்களில் இருக்கிறீர்கள், தெரியும்.

இதற்கு என் பதில் உங்களுக்கு ஜோதிடம் பற்றிய அனுபவங்கள் குறைவு என்பதுதான். உங்கள் கருத்து பொத்தாம் பொதுவானது. முரட்டடி. நாங்களும் ஒரு காலத்தில் உங்களுக்கு மேலே கிண்டலடித்துச் சிரித்தவர்கள்தாம்.

தொண்ணூற்று மூன்று மில்லியன் மைல்களுக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனையும் ஆளுகிறதாம். அவன் விதியைத் தீர்மானிக்கிறதாம். இந்த முட்டாள் மக்கள் நம்புவதற்குத் தயார் என்றால் கற்பனைக்கா பஞ்சம்? என்று சிரித்தவர்கள்தாம். ஆனால் இன்றைக்கு? பெüர்ணமி அன்று மட்டும் கடல் கொந்தளிக்கிறதே? அது ஏன்? சூரியனில் எப்போதெல்லாம் பெருசாய் கரும்புள்ளிகள் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் மனிதனுக்கு மனிதன், நாட்டுக்கு நாடு சண்டை சச்சரவுகள் அதிகமாகின்றன என்று ஓர் ஆய்வு சொல்கிறதே அதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்டு உங்களைத் திணறடிப்போம். இந்த அளவுக்கு எங்கள் சிந்தனைகளில் மாற்றம் வந்ததற்குக் காரணம் என் நண்பர் பேராசிரியர் நாகராஜ், அவருடைய சோதிடக் கணிப்புகள்தான் எங்களையெல்லாம் இப்படிப் புரட்டிப் போட்டுவிட்டன. இத்தனைக்கும் அவர் ஒன்றும் தொழில்முறை சோதிடர் அல்ல. இயற்பியல் பேராசிரியர். ஆராய்ச்சியாளர்.

சோதிடம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்று ஆராயவே சோதிடத்தில் இறங்கியவர். கடந்த ஏழெட்டு வருடங்களில் அவர் கணித்துக் கூறிய சோதிட பலன்கள், எங்கள் குடும்பங்களில் அப்படியே பலிதமாகியிருக்கின்றன.

மாமாவின் அண்ணன் மகள் வனிதாவை டாக்டருக்குப் படிக்க வைக்க ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். ரொம்பவும் பிரயத்தனப்பட்டார்கள். வனிதாவும் நன்றாகப் படிப்பாள். “இல்லை, இவளுக்கு ஆசிரியர் தொழில்’ என்று நாகராஜ் சார் சோதிடம் சொல்லியிருந்தார். கடைசியில் அதுதான் நடந்தது. வனிதா பி.எஸ்சி., பி.எட்.!

அடுத்ததாக அக்காவின் பையன் ஜெகனை எப்படியும் டாக்டராக ஆக்கிவிடுவது என்று கங்கணம் கட்டினார்கள். நம் பரம்பரைக்கு ஒரு டாக்டராவது இருக்கவேண்டும் என்பது கனவு. “இவன் என்ஜினியர்’ என்றார் நாகராஜ். கடைசியில் அண்ணா யுனிவர்சிட்டியில்தான் சீட் கிடைத்தது.

என்னுடைய மகள் தாரணி பத்தாம் வகுப்பு படிக்கும்போதே “இவள்தான்யா டாக்டர்’ என்றார் நாகராஜ் சார். சென்னை, ஸ்டான்லியில் தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். கெட்ட விஷயங்களிலும் அவர் கணிப்புகள் சரியாக இருந்திருக்கின்றன. மாமாவின் அண்ணன் மகள் வனிதாவை சென்னையில் வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.

அவள் ஜாதகத்தைப் பார்த்த நாகராஜ் சார், “”வருத்தமாயிருக்கிறது. இது நஷ்ட ஜாதகம். இவள் விதவை ஆவாள் என்று எங்களிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னார். எண்ணி ஆறு மாசத்திற்குள் அது நடந்து விட்டது. மாப்பிள்ளைக்கு முப்பத்து மூணு வயசிலேயே மாசிவ் ஹார்ட் அட்டாக். போய்விட்டார். எல்லாரும் நிலை குலைந்து போய்விட்டோம். அவளுக்கு மறுமணம் உண்டு. உடனே ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். மூன்று வருடங்களுக்குள் இரண்டுமே நடந்து முடிந்துவிட்டன. திருப்பத்தூரில்தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்.

அந்தப் பேராசிரியர்தான் இப்போது என் அக்காவின் விதி பற்றி சோதிடம் சொல்லியிருக்கிறார். நாங்கள் அழாமல் என்ன செய்ய? அந்த வாரக் கடைசியில் மாமா, வீட்டின் பின்புற விசாலமான காலிமனையில் வீடுகட்ட பூமி பூஜை போடப் போவதாக வனிதா மூலம் எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார். அவர் வேகமான செயல்திட்டத்தில் இறங்கிவிட்டது தெரிகிறது. நாங்கள் போயிருந்தோம். ஜெகன் கூட வந்திருந்தான். முன்னைக்கு இப்போது சதை போட்டிருந்தான். லேசாக தொப்பை விட்டிருக்கிறது.

பீர் அடிப்பான் போல. ஒரு ரெண்டு மாசத்திற்கு முன்னால் அக்காவின் பெயரில் வீடு கட்ட கவர்மென்ட் லோன் அப்ளை பண்ணியிருந்தாள். எனக்குத் தெரியும். அடுத்த வருஷக் கடைசியில்தான் லோன் சேங்ஷன் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது மாமா அவசர அடியாக உள்ளே நுழைந்து அங்கங்கே கையூட்டுகளை இறைத்து லோன் வாங்கி வந்துவிட்டாராம். வனிதா சொன்னாள். அக்கா போனில் புலம்பித் தள்ளுகிறாள்.

“”சொன்னா கேக்க மாட்டேன்றார்டா. வீட்டைச் சீக்கிரம் கட்டி முடிக்கணுமாம். ரெண்டு மாசம் லீவு போட்டுட்டு சுத்தறார்டா. அப்படி என்ன அவசரம்? இருக்கிற வீட்டுக்கு என்னா கேடு? சர்க்கரை அதிகமாகி அப்பப்ப மயக்கம் வந்து படுத்துக்கிறார். அதுக்கு வைத்தியம் பண்றதை விட்டுட்டு இது என்னா வேலை? சொன்னா, “எல்லாம் தெரியும் போடீ’ன்றார். நெட்டி கேட்டா கண்டபடி திட்றது. முந்தாநாளு என்னை இழுத்துப் போயி எம்பேர்லயும் அவர் பேர்லயும் நாலு நாலு லட்சங்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுக்க வெச்சார். ஏன்? எதுக்கு இப்ப? கேட்டா அடிக்க வர்றார். ”

அக்கா கண்ணை கசக்குகிறாள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? அவருடைய சமீபகால நடவடிக்கைகளை வைத்து ஒரு மாதிரி அவர் திட்டங்களைக் “கெஸ்’ பண்ண முடியுது. இன்றைக்கு ஆபிஸ் வேலையாக சென்னைக்குப் போயிருந்தேன். அப்படியே அக்கா வீட்டிற்குச் சென்றேன். அக்கா சோர்வுடன் உட்கார்ந்திருந்தாள். உதடுகள், முகம் எல்லாம் ரத்த சோகையில் வெளுத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

மேல் மூச்சு இரைக்கிறது. மாமா இதுபற்றியெல்லாம் சிந்தனையின்றி செங்கல், சிமெண்ட், இரும்பு, ஜல்லி என்று சீரியஸôக கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காவின் விதி பற்றி தெரிந்திருந்தும் இவ்வளவு அலட்சியப்போக்கு என்றால், அவருடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. அக்காவின் சாவை வைத்து எப்படியெப்படி பணம் பண்ணலாம். இதுதான் நோக்கம். இந்த சாவு மூலம் வாங்குகிற வீட்டுக் கடன் முழுசாய்த் தள்ளுபடியாகிவிடும். வீடு நிகரமாய்க் கைக்கு வந்துவிடும். இன்ஷூரன்ஸ் தொகை நாலு லட்சம் கிடைக்கும். எனக்கு ஆத்திரமாயிருந்தது.

“”மாமா, எங்கக்காவுக்கு எவ்வளவு நாளா ப்ளீடிங் போய்க்கிட்டிருக்கு? என்னா கவனிச்சீங்க?எங்காவது பெரியாஸ்பிடலுக்கு கூட்டிப் போயி வைத்தியம் பார்க்கிறதை வுட்டுட்டு உள்ளூர்ல சுரைக்கா வைத்தியம் பண்ணிக்கிட்டிருக்கீங்களே. வாணாம் வுட்ருங்க. நான் கூட்டிப் போயி வைத்தியம் பார்த்து, சொஸ்தமானப்புறம் அனுப்பி வைக்கிறேன்.”

பொரிந்து தள்ளி விட்டேன். அவர் கோபிக்கவில்லை.

“”உனக்குத் தெரியாதுப்பா, பத்துநாளா சென்னையில் பில்ராத் ஆஸ்பிட்டல்ல தான் பார்த்துக்கிட்டு வர்றோம். இப்ப பரவாயில்லை. கருப்பையை எடுக்கணுமோன்னு பயந்தோம். வேண்டாமாம். மருந்து மாத்திரைகளிலேயே சரியாயிடுமாம்” சொல்லிவிட்டு அவசரமாக பாக்கெட்டிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார்.

“”என்னது மாமா?”

“”காம்போஸ் மாத்திரை. கொஞ்சநாளா ரொம்ப படப்படப்பா இருக்கப்பா”

சோதிடம் கேட்டுக்கொண்டு வந்து நாலு மாதம் முடியப் போகுது. அக்காவுக்கு உதிரப் போக்குச் சரியாக, உடம்பு சற்றுத் தேறி வருகிறது. ப்ரஷர் மட்டும் குறையவில்லை. கூடியிருக்கிறது. அதுதான் டேஞ்சர். வீட்டு வேலை சற்றேறக்குறைய முடிந்துவிட்டது. மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடி கட்டடம். மார்பிள் தரை. கதவு, சன்னல்கள் எல்லாம் வேங்கை மரம். ஒயரிங், ப்ளம்பிங் எல்லாம் ஓவர். வீட்டின் உள்பக்கம் கலர் வாஷும், வெளிப்பக்கம் “ஒயிட் வாஷ்’ ஒரு கோட் மட்டும் முடிந்திருக்கிறது. அப்பப்பா! என்ன வேகம்? மூணு மாசத்தில் வீட்டையை முடிச்சிட்டாரே மாமா!

கிரகப் பிரவேசத்தையும், ஜெகனின் திருமண நிச்சயதார்த்தத்தையும் ஒன்றாய் வைத்துவிட்ட செய்தியைச் சொல்லும் பத்திரிகையுடன் மாமா வீட்டுக்கு வந்தபோது, நாகராஜ் சொன்ன நாலுமாதக் கெடு முடிந்து பத்து நாட்கள் ஆகிவிட்டிருந்தன. உள்ளூர எனக்குப் பயம் குறைந்திருந்தது. மாமா மட்டும் இன்னும் சற்று நெர்வஸôகவே இருந்தார். இருவரும் தெருத் திண்ணையில் போய் உட்கார்ந்தோம்.

என் மனைவியும் அம்மாவும் சமையற்கட்டில் பிஸியாக இருந்தார்கள். வந்திருக்கும் மாப்பிள்ளைக்கு விருந்து தயாராகிறது.

“”கண்டம் தாண்டிப் போச்சு மாமா”- குதூகலத்துடன் சொன்னேன்.

“”ஆமாம்பா… ஆனா ஒரு ரெண்டு மாசம் போனாத்தான் கியாரண்டியாச் சொல்லலாம்”

“”இல்ல மாமா, ராகு, கேது பெயர்ச்சி நடந்துபோச்சி இல்ல? இனிமே பலப்படாது. நல்ல வேளை அக்காவுக்கு வந்த கண்டத்தப் பத்தி இங்க வீட்ல யார்கிட்டேயும் மூச்சி விடல”

மாமா புரியாத மாதிரி பார்த்தார்.

“”என்னது அக்காவுக்குக் கண்டம்?”

நாகராஜ் சார் சொன்னதைச் சொன்னேன். “”ஜெகன் நாலு மாசத்துக்குள்ளே தன் அம்மாவுக்குக் கொள்ளி வைப்பான்…”

“”டேய்… டேய்… என்ன என்ன சொன்ன? அப்படியா சொன்ன நீ? உன் அக்கா தாலி அறுப்பாள்ன்னு… அப்படித்தானே சொன்னே நீ ”

“”மாமா…மாமா… இல்ல மாமா இல்ல. அப்படி நெனைச்சிட்டியா நீ? மாமா ”

மாமா தலையைப் பிடித்துக் கொண்டார். உஸ்… உஸ்…. என்று வாயில் பெருமூச்சுவிட்டார். அவர் தோளில் ஆதரவாகக் கை வைத்தேன். என் கையைப் பற்றிக் கொண்டார்.

“”அவளைத் தனியா வுட்டுட்டுப் போயிடறமேன்னு ராத்திரியெல்லாம் அழுதிருக்கேன். எல்லாத்தையும் அவ பேருக்கு மாத்தி, ஹவுஸ் லோனைக் கூட எம் பேருக்கு மாத்திக்கிட்டு, அவசர அவசரமா வீட்டைக் கட்டி… எப்பப்பா… எம்மாம் டென்ஷன்?”

மாமா முகத்தைப் பொத்திக் கொண்டார். இந்த நாலு மாசமாக உள்ளே அடைத்து வைத்திருந்த துக்கத்தின் இறுக்கம் நெக்குவிட குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அந்த அப்பழுக்கில்லாத நல்ல மனிதரைத் தப்பா நினைத்ததற்கும், முதல் முறையாகப் பொய்த்துப் போய்விட்ட நாகராஜ் சாரின் ஜோஸ்யத்திற்காகவும் நானும் அழுதேன்.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *