சொல்வதெல்லாம் உண்மை!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 6,587 
 
 

எம்பேரு தேவி! நா படிக்காதவ! பள்ளிக்கூடம்ன்னா‌ என்னன்னே தெரியாது!

ஆனா கைநாட்டுன்னு நினச்சிடாதீங்க! எங்க குமார் பையன்தான் எங்கையைப்பிடிச்சு கத்துக் குடுத்தாப்பல! தேவிக்கு ஒத்தக்கொம்பா , இரட்டக் கொம்பா?

எனக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கிறீங்க! இன்னக்கெல்லாம் இருந்தா ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு???

பெரியவன் குமார்! போன வருஷம் பள்ளிக்கூடம் முடிச்சான்! கருத்தா படிப்பான்! ஆனா ஒத்தக்கால்ல நின்னு என்னமோ சேல்சாமில்ல!

ஒரு வீடு வித்துக்குடுத்தா இவ்வளவுன்னு கமிஷனாம்! தொலையுதுன்னு விட்டுப்புட்டேன்!

அடுத்தது ராஜிப்பொண்ணு! பார்க்க நல்லாருக்கும்! நல்லாவும் படிக்கும்! நல்ல கலரு! எட்டாவது!

கடோசி பிரபு! படிப்பே ஏறல!

நானு வேல பாக்குற ஐயர் வீட்டு அம்மாதான் கண்டு பிடிச்சு சொன்னாங்க!

“தேவி! அவன திட்டாத! அவனுக்கு படிக்க முடியாது! டீச்சர்ட்ட சொல்லு! அவங்களுக்கு புரியும்”
இப்போ இன்னோரு பள்ளிக்கூடம் போறான்!

இவங்களுக்கெல்லாம் அப்பா இல்லியான்னு கேக்காதீங்க!

என்ன மாதிரி வீட்டு வேல செய்ய வரவங்க புருஷன் கலெக்டர் உத்தியோகமா பாப்பாங்க?

குடிதான்! குடிச்சுப்போட்டு பொண்டாட்டிக்கும் பெத்த பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாம பொண்ணு மார்ல கைய வைக்கிற பேமானிங்க! அந்தக் கதையே இப்போ வேண்டாம்!

நாங்க பழைய குப்பம், அதான் அடையாரு பாலத்தண்ட இருந்திச்சில்ல , அதுல குடியிருந்தோம்!

பதினஞ்சு வருஷம் முன்னாடி சுனாமியா பினாமியா , இந்த கடலு பொங்கி உள்ள வந்திச்சில்ல! அப்படியே குடிசையோட சாமான் முச்சூடும் அடிச்சுட்டு போயிருச்சு!

முக்கியமா ரேஷன் கார்டு! நாங்க செத்தாலும் பரவால்ல! ரேஷன் கார்டு வேணுமே!!!!!!!!

பிரபு அப்போதான் “எம்புஸ்தகம் … புஸ்தகம்ன்னு அழுவுறான்!

கவருமென்டு ஒரு வருஷத்தில இழுக்கடிச்சு அவுஸிங் போர்டுல வீடு குடுத்தாங்க! குடிசையில் காத்தாச்சும் வந்திச்சு! ஒரு ரூம்பு! எல்லாமே உள்ளாரதான்!

நாலு வீடு வேல செய்யுறேன்!! காலேல ஏழு மணி வரைக்கும் தான் இந்த வாழ்வு! அப்புறம் சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் நான் பங்களாவாசி!

இரண்டு வீட்டு சாவி எங்கையிலதான்!

முதல்ல கோமதியம்மா வீடு!

அவுங்க தர காப்பி உள்ள போனாத்தான் வேலையே ஓடும்! கோலம் போடுற ஒரே வீடு!

வீட்ல அம்மாவும் அப்பாவும் தான்! நான் அப்படித்தான் கூப்பிடுவேன்! யாரும் கிடையாது!

பாத்திரம் தேச்சு , வீடு பெருக்கி துடச்சா போதும்! துணியை அப்பாவே மிசினில் போட்டு காய வச்சிடுவாரு!

மடிச்சுக் குடுத்தா போதும்! ரொம்ப பேச்சே கிடையாது! எழரைக்கு நுழஞ்சு எட்டரைக்கு வெளியே இருப்பேன்!!!!!!

நேர பீரீத்தியம்மா வீடு! சாவி எங்கிட்ட! சின்ன ப்ளாட்டுதான்! நுழயியில ஒரு மாதிரி இருக்கும்!

ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க! சிறு வயசு!போட்டது போட்டபடி கிடக்கும்!

ஆனா ப்ரீத்தியம்மா கண்டிஷனா சொல்லிருச்சு! ‘தேவி! வந்ததும் டிபனை சாப்பிட்டுப்புறம்தான் வேலை பாக்கணும்! இல்ல நிறுத்திடுவேன்! ‘

தமிழ் நல்லா வராது! இந்தி போல! ஆனா புருஷன் நல்லா தமிழ் பேசுவாரு! இரண்டு பேரும் தங்கம்!

‘ஒண்ணுமில்லாட்டி பிரட் டோஸ்ட் பண்ணிக்கோ ‘! வீட்ல இல்லாத மிசின் இல்லை! அதுதான் எல்லாம் சொல்லிக் குடுத்திச்சு!

‘மிசினெல்லாம் பார்த்து பயப்படாத தேவி ‘ன்னு சொல்லிட்டு சிரிக்கும்! எப்படியும் வெளிய வர பத்து மணியாயிடும்!

பத்து மணியிலிருந்து மூணு மணி வரைக்கும் ஒரே வீடு ராதாம்மா வீடு!

ஒரு ரூம்பிலிருந்து அடுத்த ரூம்பு நடக்கையிலே மூச்சு வாங்கும்! தரை கண்ணாடி மாரி மின்னும்!

பாட்டியம்மா மட்டும் தான் வூட்டுல! மக வீடு! மருமகன் பெரிய வேல! மாசத்தில பத்துநாள் இருப்பாரு போல! ராதாம்மா காலைல போனா மூணு மணிக்குதான் வருவாங்க!

பேரனும் பேத்தியும்….

அர்ஜூன் காலேஜூ படிக்குது! ஸோனூ பள்ளிக்கூடம்! ரெண்டும் நல்ல வளத்தி! அப்பா போல!

பாட்டியம்மா நல்ல கெட்டி! மலையாளம் தான் தெரியும்! சமைக்க ஒரு அம்மா! டிரைவர் புருஷோத்தமன்!

நானும் வீடு பெருக்கித் தொடச்சு , தூசி தட்டி மிசின்ல துணி துவைக்கணும்! மதியம் ஒரு மணிக்கு நல்ல சாப்பாடு எல்லாருக்கும்!

மூணு மணிக்கு பாட்டியம்மாவுக்கு டீ போட்டுக் குடுத்தா முடிஞ்சுது வேல!

ராதாம்மா மூணு மணிக்கு வந்துதான் சாப்பிடுவாங்க! பிளாஸ்க்கில டீ ஊத்தி வச்சிடுவேன்!

யாரும் ரொம்ப பேச மாட்டாங்க! பசங்க வந்தாலும் ரூம்புல போய் கதவ சாத்திக்குங்க! ஆனா ஏதாவது வேணுன்னா மரியாதையாத்தான் கேப்பாங்க!

மூணு வூட்டு கதைய கேக்கயிலேயே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குதே! வேல செய்யுற எனக்கு எப்படியிருக்கும்! யோசிச்சு பாருங்க!

சித்ராம்மா வீட்டுக்கு போனா கால நீட்டி உக்காந்திடுவேன்!

சித்ராம்மா மாரி ஒருத்தர நானு பாத்ததேயில்லை! என்னோட சொந்தக்கத ….சோகக்கதை …

எல்லாத்தையும் பொறுமையா கேப்பாங்க! பெரிய படிப்பெல்லாம் படிச்சவங்க!

அந்த ஐயா போய் நாலஞ்சு வருசமாச்சு! இரண்டு பொண்ணுங்க!

வெளி நாட்டுல படிக்குதுங்க! வந்திச்சிங்கன்னா

‘தேவி! உக்காரு! எப்படி இருக்க! ன்னு ஆசயா பேசுவாங்க! சித்ராம்மா எம் மொகத்த பாத்தே கண்டு பிடிச்சுடுவாங்க!

‘என்ன தேவி! ராத்திரி தூங்கலயா?! அடிச்சானா?’

சில நாளைக்கி ‘நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம்! பேசாம படு!’

யாராச்சும் இப்படி சொல்வாங்களா??

வூட்டு சாவி ஒண்ணு எங்கிட்ட! எப்ப வேணா வரலாம் , போலாம்!
ஆறு மணிக்குள்ள வூட்டுக்கு போயிருவேன்!

வீட்ல ஏண்டா நொழயிரோம்னு இருக்கும்!

‘உப்பில்ல! புளியில்ல! ரேஷன் வாங்கல! இல்ல பாட்டுதான்! விடுங்க! புருஷன் சரியாருந்தா இந்தத் கதையே இருக்காதே!

நா சொல்ல வந்ததே வேற!

நா ஒரு வீட்டு சமாசாரத்த இன்னொரு வீட்ல சொல்ற ஆளே இல்ல! மொதல்ல யாருக்கு கேக்க நேரம்?

முந்தி ஒரு வீட்ல வேல பாத்தேன்! ப்ரீத்தியம்மா வரதுக்கு முந்தி! பேரு கமலாம்மான்னு ஞாபகம்!

வம்புன்னா வம்பு! வேல செய்யவே விடாது!

‘கோமதியம்மாக்கு கொழந்தையில்லயா?

‘சித்ராம்மா பசங்க ஏங்கல்யாணம் முடிக்கல? ‘

‘ராதா என்ன வேலை பார்க்கிறா? ஏன் வீட்டுக்காரர் அடிக்கடி ஊருக்குப் போறாரு ?’

ஒரு நா கூட எங்கஷ்டத்த கேட்காது!
சித்ராம்மாக்குத் தெரிஞ்சவங்க தான்!

நாலு பேருமே ஒரே தெரு தான்!

ஒரு நா இரண்டு பேருக்கும் பெரிய சண்டையே வந்திருச்சு!

அன்னைக்கு என்ன ஆச்சோ! எம்புத்திய செருப்பாலதான் அடிக்கணும்!

‘ராஜிப்பொண்ணு சமஞ்சதும் எங்கண்ண பையன் கட்டிக்கிறேன்னு ஒத்தக்காலுல்ல நிக்கிறான்!”…அப்பிடின்னேன்…’

ஏந்தான் சொன்னோமோன்னு தோணிச்சு!

“உங்களுக்கெல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராதா ? உம்புருஷன்தான் சரியில்லையே! பொண்ணுக்கு என்ன அவசரம்?

நாளக்கி அதுவும் அடிச்சான் , ஒதச்சான்னு வந்து நிக்கணுமா!

எம்பொண்ணுகிட்ட கல்யாணம்ங்கிற பேச்சேடுத்தால் அறஞ்சிடும்!

நீமட்டும் பதினஞ்சு வயசுக்கு முன்ன ராஜிக்கு கல்யாணம் வச்சே , நானே வந்து கல்யாணத்த நிறுத்துவேன்!!!!!!

கமலாம்மா பேசிட்டே போறாங்க!

“அம்மா நிறுத்துங்க! உங்கள் மாதிரி பொண்ண காபந்து பண்ண எங்களால் முடியாது!

குடிகார புருஷனோட தனியாக வயசுப் பொண்ணை விட்டுட்டு வயத்தில நெருப்ப கட்டிட்டு வேலக்கி வரேன்! சும்மா வாய்க்கு வந்த படி பேசாதீங்க!”

நா பொறப்பட்டு போய்க்கிட்டே இருந்தேன்!

அடுத்த நாள் கமலாம்மா வீட்டுக்கு போவல! நின்னுட்டேன்!

ஆளுமேல் ஆளு விட்டாங்க! நா ரோசக்காரி! சம்பளமாவது ஒண்ணாவது!

சித்ராம்மாகிட்ட சொல்லியிருப்பாங்க போல! நா எல்லாத்தையும் சொன்னேன்! அப்பத்தான் மனசு சரியாச்சு!

கதையே இனிமேதான்!

ராதாம்மா பசங்க இரண்டு பேர்னு சொல்லியிருக்கேன்!

எல்லாத்துக்கும் தனி பெட் ரூம்!

அர்ஜூன் லீவு விட்டா பொழுதன்னிக்கும் பிரண்டுகளோட ஒரே பாட்டும் டான்ஸூம்தான்! பொண்ணுங்க கூட வருவாங்க! ஒரு பொண்ணு சிகரெட் கூட பிடிக்கும்.

பிரிஜ்ஜிலேருந்து சாப்பிட எடுத்துட்டு போகும்! அவுங்க அப்பா குடிக்கிற சமாசாரம் எல்லாம் ஒரு ரூமில அழகா அடுக்கி வச்சிருப்பாரு!

அர்ஜூன் ஒண்ணோ ரண்டோ பாட்டில் எடுத்துக்கிட்டு போறதைப் பாத்திருக்கேன்! கண்ணாடி கிளாஸ் , ஐஸு எல்லாமே ரூமுக்கு போகும்!

ராதாம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா?

ஒரு நா பாட்டியம்மா கிட்ட கேட்டேன்! அவங்களுக்குத் தான் தமிழ் பேச வராதே!

‘யெஸ்… யெஸ்…! கண்டில்லா , கேட்டில் லான்னு வை….! கை மீறிபோச்சு தேவி’ …ன்னு அழுதுட்டாங்க!!

ஸோனு அதுக்கும் மேல! சின்ன பேண்டும் சட்டையும் போட்டுகிட்டு தினம் ஒரு பையனோட கார்ல சுத்திட்டு வரும்!

சித்ராம்மாகிட்ட கூட சொல்லமாட்டேன்!

ஒரு பொண்ணு மட்டும் அடிக்கடி வரும்! எனக்கு அத எங்கேயோ பார்த்த ஞாபகம்! ஆனா ஏழெட்டு மாசமா காணோம்!

நடுவில ராஜி வயசுக்கு வந்திருச்சு! பதினஞ்சு நாள் வேலைக்கே போல! ராதாம்மா , பாட்டியம்மா வந்து இரண்டாயிரம் ரூபா குடுத்தாங்க! சித்ராம்மா ஒரு செயினும் , ஜிமிக்கியும் போட்டாங்க!

மொய்ப்பணம் , மாமனுங்க சீரெல்லாம் சேத்து கிட்டத்தட்ட அம்பதாயிரம் இருக்கும்! செலவு போக பத்தாயிரம் நின்னிச்சு!

ராஜிக்கு ஒரு ஜோடி கம்மலும் கொலுசும் எடுத்துக் குடுத்திட்டேன்! அண்ணனும் கல்யாணம் பேச்ச ஆரம்பிச்சிட்டாரு! ராஜிக்கும் இஷ்டம் போல!

குமாரு தங்கச்சிக்கு ஒரு மோபைலு வாங்கிக் குடுத்தான்!

பிரபு மேற்கொண்டு படிக்க முடியாதுன்னிட்டான்! ஒரு கார் மெக்கானிக் கடையில குமார் தான் சேத்து விட்டான்!

திரும்பி வேலைக்கு போக சலிப்பா இருந்திச்சு! இரண்டு நாளைக்கெல்லாம் சுறுசுறுப்பு வந்திடுச்சு!

ப்ரீத்தியம்மா முழுகாம இருக்குது!

“சாயங்காலம் மறுக்க வருவியா தேவி ?”ன்னு கேக்கையில கஷ்டமா இருந்திச்சு!

“இல்லம்மா! ராஜி வயசுக்கு வந்தப்புறம் நானே வீட்டுக்கு சீக்கிரம் போறேன்னு சொல்லிட்டேன்!

“என் வீட்டு பக்கத்தால பாப்பு இருக்குது! வேல கேட்டுக் கிட்டே இருக்கு! ரொம்ப நல்ல பொண்ணு! கேட்டுப் பாக்கிறேன்னு சொன்னேன்!

பாப்பு எங்க காலனிலதான் இருக்கு! கமலாம்மா வீட்டை விடும்போது வேல தேடிக்கிட்டு இருந்திச்சு!

சரி பாவம்ன்னு சொன்னேன்! கிண்டிக் கிளறி கேட்டாலும் ரொம்ப வச்சிக்காதன்னும் சொல்லியிருந்தேன்!

‘இது பத்தலக்கா! இன்னொரு வூடு இருந்தா சொல்லுன்னு சொல்லிச்சு! பாத்து நாளாச்சேன்னு போனேன்!

“அக்கா! நானே உங்களப் பாக்க இருந்தேன்! நீங்களே வந்திட்டிங்க!”

‘என்ன விசயம் பாப்பு?’

‘அக்கா! நா சொல்ற விஷயம் ரொம்ப ரகசியம்! யாரு கிட்டயும் மூச்சு விடாதீங்க!’

‘சொல்லு பாப்பு! ‘

“நம்ப கமலாம்மா இருக்காங்கல்ல! அவுங்க இரண்டாவது பொண்ணு கீர்த்தி தெரியுமா ?

ஸ்கூல் படிக்குதே! செவப்பா , சுருட்ட முடியா இருக்குமே! அது யாரோடவோ பழகிட்டு இரண்டு மாசம் வயத்தில வாங்கிட்டு வந்திருக்கு! அதுக்கே தெரியல!

அம்மாதான் போய் யாருக்கும் தெரியாம கலச்சிட்டு வந்திருச்சு! நாதான் கூட மாட ஒத்தாச செஞ்சேன்! கைய பிடிச்சு சத்தியம் வாங்கிக்கிச்சு!

மூவாயிரம் ரூபாய் கொடுத்திச்சு! யாருன்னு மட்டும் அம்மாகிட்ட கூட சொல்லவே மாட்டேனிடுச்சு!

எனக்கு மனசுக்கே சரியில்லக்கா! உங்கிட்ட மட்டும் சொல்லணும்னு தோணிச்சு! “நீயும் யாருகிட்டையும் சொல்லிடாதக்கா!

‘எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு! சத்தியமா சொல்லமாட்டேன்!

மறக்காம ப்ரீத்தி அம்மா வீட்டுக்கு போயிடு! பாவம் மாசமாயிருக்கு!

வீட்டுக்கு வந்து படுத்தவதான்!

தலவலி மண்டைய பொளக்குது!
இப்போ எல்லாமே புரிஞ்சு போச்சு!

அர்ஜூன பாக்க வர பொண்ணு கீர்த்தி தான்! அதான் என்னப்பாத்ததும் மொகத்த திருப்பிக்கிச்சா ??

கமலாம்மாவப் பாத்து நாக்க பிடுங்கற மாரி நாலு கேள்வி கேக்க‌த் துடிக்குது!

‘ஏம்மா! உம்பொண்ணு கல்யாணத்த நிறுத்த என்னாலையும் முடியும்! ஆனா நிச்சியம் செய்யமாட்டேன்! எடுத்தோம் கவுத்தோம்னு எங்கள பாத்து இனிமே பேசாதீங்க!

எங்க வூடுங்கள்ள எது நடந்தாலும் அது தெருவுல நடக்கிற கூத்து மாதிரி! யார் வேணா பாக்கலாம் ‌! கேள்வி கேக்கலாம்!

ஆனா உங்க வூடுங்கள்ள நடக்கிற சமாசாரமெல்லாம் ஏஸி ரூம்புல , நாலுபேர் மட்டும் பாக்குற , சினிமா மாரி! வேற யாருக்கும் தெரியாது!!

ஆக மொத்தத்தில கதை ஒண்ணுதான்!

ராஜிக்கு கல்யாணம் முடிச்சாச்சு! அண்ணா பையன் பாபுவேதான்! நல்லா வச்சிருக்கான்! குமாருக்கும் முடிச்சிடலாம்னு இருக்கோம்!

பிரபு தொழில் நல்லாவே கத்துக்கிட்டான்!

வூட்டுக்காரர கேக்கிறீங்களா‌! இப்போ வந்தோமா ,சாப்பிட்டோமா, படுத்தோமான்னு இருக்காரு!

இன்னும் எவ்வளவு நாளைக்கோ!

கோமதியம்மா காலு ஆபரேசன்! நாந்தான் கூட இருந்தேன்!

ப்ரீத்தியம்மாவுக்கு ஆம்பளப்பிள்ளை! அப்பிடியே அம்மாதான்! ஸாரு ஒரு மாசம் லீவு போட்டுட்டு எப்படி பாத்துகிட்டாரு! குடுத்து வச்சிருக்கணும்!

அர்ஜூன் சிங்கப்பூருக்கு போயிடிச்சு! பாட்டியம்மா போயி மூணு மாசமாச்சு!

ஸோனுவும் ராதாம்மாவும்தான்! சனிக்கிழமைல பாட்டும் கூத்தும் தான்!

ஒண்ணு மட்டும் புரிஞ்சுகிட்டேன்!

ஏழையோ பணக்காரனோ! ஊர் பஞ்சாயத்து நமக்கு வேண்டாம்! நம்ம பஞ்சாயத்தை ஊருக்கும் கொண்டு போக வேண்டாம்!

புலிய பாத்து பூன சூடு போட்டுகிட்டா ?

படுத்தா நல்லா தூங்கணும்! காலையில‌ வேலக்கி எழுந்திரிச்சு போவலேன்னா யாரு கஞ்சி ஊத்துவாங்க??? வரட்டா…!!!!

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *