(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த குமாஸ்தாவுக்கு கெட்ட காலம். இல்லையென்றால், அந்தச் சமயத்தில், அவன் உள்ளே போயிருக்க மாட்டான். அலுவலகத்தில் நடந்த ஒரு பயங்கரமான மோசடி சம்பந்தப்பட்ட கோப்பை படித்துக் கொண்டிருந்த மானேஜர் ஏகாம்பரம், அவனைப் பார்த்ததும் “எஸ்.” என்று இழுத்தபோது, அவனுக்கு கைகால் இழுத்தன.
“சார். என்னை. பம்பாய்க்கு ஒரு மாதம் டூர் அனுப்பப் போவதாகக் கேள்விப்பட்டேன். என் குடும்பமே.நோயில் கிடக்கு. அதனால்.”
“அதனால். துரையை அனுப்பக் கூடாதோ? என்னமேன் நினைச்சுட்டே… யு ஆர் கோயிங்..”
மானேஜர் ‘பெல்லை’ அழுத்த, தலைமைக் குமாஸ்தா தலைதெறிக்க வந்தார்.
“இவரை பம்பாய்க்கு டூர் அனுப்பற ஆர்டரை டைப் அடிங்க. இப்பவே நான் கையெழுத்துப் போட்டாகணும்.”
“ஸார். நாளைக்குத்தான் ‘டிசைட் பண்ணப் போறதா சொன்னிங்க. டில்லியில் இருந்து கிளியரன்ஸ் கேட்கணுமுன்னு சொன்னீங்க.”
“சொல்றதைச் செய் மேன். பிரிங் தி ஆர்டர்”
தலைமைக் குமாஸ்தா போய்விட்டார். வெறுங்குமாஸ்தா, கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான்.
“டோண்ட்வேஸ்ட் மை டயம். நீ இப்போ இடத்தைக் காலி பண்ணல. உன்னை பெர்மனென்டா பம்பாய்க்கு மாத்திடுவேன்”
குமாஸ்தா இளைஞன் போய் விட்டான், பாத்ரூமிற்குப் போன மானேஜர் ஏகாம்பரத்திற்கு, அலுவலகப்பேச்சுக்கள் ஒரளவு கேட்டன.
“நீ ஒரு அசடுடா. அவரு மூட்ல இல்ல. போகாதடான்னு சொன்னேன். கேட்டியா.”
“இனிமே போனியன்னா, மவனே. பெர்மனென்டா… பம்பாய்க்கு போயிட வேண்டியதுதான். அவர், ஒண்ணு சொல்லிட்டார்னா. சொன்னதுதான். இனிமேல் அவரே நினைச்சாலும் மாற்ற மாட்டார்.”
“அவர் ஒவ்வொரு பிரச்சினையையும், தன்னோட தன்மானத்துக்கு விடப்படுற சவாலாய் நினைக்கிறவரு. அவருகிட்ட பேசி. விஷயத்த பாழாக்கிட்டியே.”
“அம்மாவுக்கு ஜூரம். ஒய்புக்கு டெலிவரி டயம். பசங்களுக்கு கட்டி. நான் போனால். குடும்பமே போயிடும்.”
“என்ன பண்ணுறது?. ஒரு மாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு போய்ட்டு வா. அவர் வைராக்கியம் வச்சா. வச்சதுதான். அவர் சொன்னால் சொன்னதுதான்.”
மானேஜர் ஏகாம்பரம், சுழற்நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். அலுவலகப் பேச்சுக்கள், அவருக்குப் பெருமையாக இருந்தன. அவர் ஒரு ‘டிஸ்ஸிபிளினேரியன்.
அவர் வாழ்க்கையில் சாதித்ததை நினைத்துக்கொண்டே இருக்காமல், நினைத்ததை எப்படி சாதிப்பது என்பதைப் பற்றியே நினைப்பவர். ‘உன்னை ஒழிச்சிக் கட்டுறேன், என்று வாயில் தெரிந்து வந்தாலும் சரி, தெரியாமல் வந்தாலும் சரி, அப்படிச் சொன்னதுக்காக, அதைச் செய்யாமல் விட மாட்டார்.
தலைமைக் குமாஸ்தா நீட்டிய ஆர்டரில் ஏகாம்பரம் கையெழுத்துப் போட்டார். குமாஸ்தாவின் நிலைமை, அவருக்கே இரக்கத்தைக் கொடுத்தது.”நோ.நோ. ஒன்றைச் சொல்லிட்டா. அதை நிறைவேற்றி ஆகணும்.”
ஏகாம்பரம், காரில் ஏறி வீட்டிற்குப் பறந்தார்.
ரமா, கதவை வேகமாக தள்ளிக் கொண்டு உள்ளே வந்தபோது, அவள் அக்காள், முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு, அவளை ஒரக்கண்ணால் பார்த்தாள். அம்மாக்காரி, அவளை எரித்து விடுவதுபோல் பார்த்துவிட்டு, நன்றாக இயங்கும் கவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு எட்டு.
“ஏண்டி லேட்டு”
“லேட்டாயிடுத்து”
“நான் ஏன் லேட்டுங்கறேன். நீயும் லேட்டுங்ற… ஏண்டி இவ்வளவு லேட்டு.”
“காலேஜின்னா ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உன்கிட்ட சொல்லணுமா..?”
“காலேஜின்னாவா. பீச்கன்னாவா.”
ரமா, திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள்.
“சொல்லுடி ஸ்பெஷல் கிளாஸ், பிராக்டிக்கல் வகுப்பு, மன்த்திலி டெஸ்ட் எல்லாம். பீச்சில்தான் நடக்குதா..?”
ரமா பதிலளிக்காமல், கவர்க்கடிகாரத்தை வெறித்துப் பார்த்தாள்.
“நான் கேட்டுக்கிட்டே இருக்கிறேன். நீ பாட்டுக்கு குத்துக்கல் மாதிரி நின்னா. என்னடி அர்த்தம்? சொல்லுடி. எவன் கூட. பீச்சுக்கு போனே?. பி.யு.சிக்குப் போய் ஆறு மாதங்கூட ஆகல. அதுக்குள்ள காதல் வந்துட்டோ.”
ரமா, கண்களை கவர்க் கடிகாரத்தில் இருந்து எடுத்து, அக்கா மீது வீசினாள். அக்காக்காரியும், தன் பங்குக்குக் கேட்டாள்.
“அம்மா கேக்கிறாள் பாரு. சொல்லேண்டி. இந்த வயசில பீச்க கேக்குதோ?. அப்பாவுக்குத் தெரிஞ்சா. அவ்வளவுதான். வீட்டை விட்டே துரத்திடுவார்.”
“சொல்லுடி. அவருவருமுன்னால் சொல்லிடு. அவருக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமோ. விஷயம், அவருக்குத் தெரியாமல் இருக்கிறதுக்கு, நான் பொறுப்பு.”
“எனக்குத் தெரியாமல் எதையும் வைக்க முடியாது.”
ஏகாம்பரம், கோபாவேசமாக உள்ளே நுழைந்தார். டையை அவிழ்த்து துார எறிந்தார். பூட்ஸ் கால்களால் தரையை உதைத்தார்.
“எல்லாத்தையும். வெளியில் கேட்டுக் கொண்டுதான் நின்னேன்.ஏய்.ரமா! எனக்கு விஷயம் தெரிஞ்சாகணும். பீச்சுக்கு யார்கடட போயிருந்தே? எவ்வளவு நேரம் இருந்தே. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.”
ரமா, பதிலளிக்கவில்லை. இப்போது அம்மாவையே வெறித்துப் பார்த்தாள். தாய்க்காரி, தவியாய் தவித்தாள். குறுக்கே பேசப்போன அவளை, ஏகாம்பரம் சைகையால் தடுத்துவிட்டு, ரமாவின் கண்களையே வெறித்துப் பார்த்தார். ரமாவின் கண்கள், லேசாக கழன்று ஒரே நிலையில் நின்றன. அப்படி நின்றால், அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தம். ஏகாம்பரம் அதட்டினார்.
“ஏய் ரமா. நான் சொல்றது காதில விழல.? எனக்கு, என்ன நடந்தது.தன்னு தெரிஞ்சாகணும். பீச்சுக்கு யார் கூட போனே?. சொல்லு.”
ரமா, அசைவதாக இல்லை. அவள், தன்னையே பார்த்துக் கொண்டாள்.
“சொல்லமாட்டே… ஆல்ரைட்… உன்னை சொல்ல வைக்கிறேன்.”
ஏகாம்பரம் உள்ளே போனார். ‘வாக்கிங் ஸ்டிக்கை’ கொண்டு வந்தார்.
“கடைசியா ஒரு சான்ஸ் தர்றேன்.சொல்விடு. சொல்றியா. இல்லியா.”
ரமா,நகர்வதாகத் தெரியவில்லை.ஏகாம்பரம் தயங்கவில்லை. ‘வாக்கிங் ஸ்டிக்கை’ எடுத்து, அவள் பாதத்தில் வைத்து அழுத்தினார். அழுத்தத்தை நிருத்தமால் அழுத்திக் கொண்டே இருந்தார். அம்மாக்காரிக்கு அழுகை வந்துவிட்டது. அக்காக்காரி அழுதே விட்டாள்.ஆனால் ரமா, காலைக்கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம்கூட நகர்த்தவில்லை. வாக்கிங் ஸ்டிக், அவள் பாதத்தைக் குடைந்து கொண்டிருந்தாலும், அவள் பாதம்தான் அதை குடைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
ஏகாம்பரம் பொறுமை இழந்தார். தான் ஒரு தந்தை என்கிற எண்ணம் போய், அவளிடம் எப்படியும் பதிலை வரவழைத்துவிட வேண்டும் என்ற உறுதி வலுவானது. வாக்கிங் ஸ்டிக்கை, அவள் பாதத்திலிருந்து எடுத்து, தலை முடிக்குள் விட்டார். ஸ்டிக்கை சுத்தச் சுத்த அவள் தலை தானாக சுழன்றது. அவளுக்கு நரகவலி எடுத்திருக்க வேண்டும். பாதத்திலும் ரத்தம் கொப்பளித்தது.
“விட்டுடுங்க… சொல்லிடுறேன்” என்று ரமா சொல்லவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டும், லேசாக முனங்கிக் கொண்டும், தலையில் கைவைத்தாள். அம்மாக்காரியால் பொறுக்க முடியவில்லை.
“நீங்க இவ்வளவு பெரிய அரக்கனாய் இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என் பொண்ணை விட்டுடுங்க… விட்டுடுங்க..”
ஏகாம்பரம், சுயநினைவு பெற்றவராய், ரமாவை விடுவித்தார். அவர் உடலெங்கும் வியர்வை. அவருக்கே கை வலித்தது.
“சொல்ல மாட்டே… சொல்ல மாட்டே “என்று கத்தினார். ரமாவும் “சொல்லமாட்டன்.” என்று சொல்லாமல் சொல்வதுபோல் அசையாமல் இருந்தாள்.
ஏகாம்பாரம் தலைவிரிகோலமாக உள்ளே போனார். பத்து நிமிடம் கழித்து, ரமாவின் பெட்டி படுக்கையோடு வந்தார்.
“நான் பெத்த கடனுக்காக இந்த பெட்டியை எடுத்துக்கோ. இன்னையில் இருந்து நீ என் மகள் இல்லே. அய்ந்து நிமிஷம் டயம். கொடுக்கிறேன். ஒண்ணு. நடந்தத சொல்லிடு. இல்லே வீட்டை விட்டு. நட.”
ஐந்து நிமிடம் ஆயிற்று. ரமா பதிலளிக்கவில்லை;
ஏகாம்பரம் பெட்டியை எடுத்து, வாசலுக்கு வெளியே வைத்தார். அம்மாக்காரியும் அக்காக்காரியும் கைகளைப் பிசைந்தார்கள். ஏகாம்பரம் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
“நான் சொன்னால் சொன்னதுதான். பீச்சுக்கு யார் கூட போனேன்னு தெரிஞ்சாகணும். இல்லன்னா. நீ. இந்த வீட்ல இருக்கக் கூடாது, இரண்டில் ஒண்ணு செய்.”
ரமா, இரண்டில் ஒன்றை செய்ய நினைத்தவள் போல் எழுந்தாள். பாவாடை, தாவணியை தட்டி விட்டுக் கொண்டாள். வெளியேறுவதற்கு ஆயத்தமாக பெட்டியைத் தூக்காமலே நடக்கத் துவங்கினாள். இதற்குள் அம்மாக்காரி, அவள் கையைப் பிடித்து நிறுத்திக் கொண்டே கணவரிடம் பேசினாள்.
“உங்க புத்திதான உங்க பொண்ணுக்கும் இருக்கும்? நீங்க. சொன்னால் சொன்னதுதான். இதுமாதிரி அவள் பிடிச்சா பிடிச்சதுதான். உங்களுக்குப் பிறந்தவள். உங்களை மாதிரி பிடிவாதமாகத்தான் இருப்பாள். உங்ககிட்ட யாரும் வலுக்கட்டாயமா எதையும் வாங்க முடியுமா? இந்த மூதேவியும் உங்கள் மாதிரியே பிறந்து தொலைச்சிருக்காள். எல்லாம் என் தலையெழுத்து.”
ஏகாம்பரம், புறப்படப் போன மகளை தடுக்கவில்லைதான். அதே சமயம், அவளை இழுத்துக் கொண்டு உள்ளறைக்குள் போன மனைவியையும் தடுக்கவில்லை. அவர் சொற்பிடி, அவருக்கே பற்பிடியாகி விட்டது.
இந்த அனுபவத்திற்குப் பிறகு ஏகாம்பரம், குமாஸ்தாவின் ‘டூர்’ ஆர்டரை ரத்து செய்வாரா அல்லது இதுவே ஒரு ‘காம்ப்ளெக்ஸாகி’ மேலும் கடுமையாக நடந்து கொள்வாரா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
– நாகமணி, 27-8-1980.
– தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை.