கதீஜா பேட்டை, கமிசன் வியாபாரி, ஏழெட்டு கடைக்கு சொந்தக்காரர் ‘செளகத் அலிக்கு’ அன்று இரவு தூக்கம் வரவிலை. அங்கும் இங்கும் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறார். அடிக்கொருதரம் “யா அல்லாஹ்” கூறி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்.
மனசாட்சி வேறு “அரே செளகத்” இப்படி பண்ணிட்டியே, சொன்ன சொல் பிரகாரம் நடக்காத மனுசன் என்ன மனுசன்? அதுவும் “ஹஜ்”க்கெல்லாம் போயிட்டு வந்த பெரிய மனுசன் நீ. உன்னைய நம்பித்தானே அந்த சீனிவாசன் அத்தனை முறை கண்டிப்பா அந்த கடைய எனக்கு கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டு போனான். நீ என்ன சொன்னாய்?
தம்பி உங்கப்பா இந்த இடத்துல கடை வச்சு ஒழுங்கா வாடகை கொடுத்துட்டு இருந்தான். வியாபாரமும் நல்லா போயிட்டிருந்தது, ஏதோ போதாத காலம் நஷ்டமாச்சு. அவனும் இந்த உலகத்தை விட்டு போய் சேர்ந்துட்டான், இப்ப அவர் மகன் நீ வந்து கேக்கறே, உனக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்கப்போறேன். நீ ஒரு வாரத்துல அட்வான்ஸோட வா. இப்படி அவ்வளவு தூரம் உறுதி சொன்ன, பெரிய மனுஷன் நீயே இப்படி நடந்து கிட்டா மத்தவங்க எல்லாம் எப்படி நடந்துக்குவாங்க. மனசாட்சியின் குத்தல் தாங்காமல் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
இப்படி நம்பிக்கையாய் சொன்னவர் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் சம்பந்தி அதுவும் பொண்ணை எடுத்தவர் வந்து நிற்கிறார். என்னோட மாப்பிள்ளைக்கு அந்த கடைய விட்டுக் கொடு வாடகையெல்லாம் கரெக்டா கொடுத்துடுவான். பொதுவாகவே ‘செளகத்’ சொந்த பந்தம் பார்க்காத ஆள்தான் காரணம் வரவு செலவுகள் சரியாக வராது என்று தெரியும், இதனால் தள்ளியே நிற்பார். அதற்காக சம்சாரம் “பீவி”யிடம் ‘பேச்சும்’ வங்கிக்கொள்வார். “பீவி” யின் சுற்றத்தார் ஒருவரும் அவரை நெருங்க முடிவதில்லை. கோபத்துடன் “பீவி” அவரை பார்த்து “நீர் என்ன மனுசன்? சொந்தத்துக்கு துளியூண்டு தரமாட்டேனெங்கிறீர்”வாய்ப்பு கிடைக்கும்போது அவ்வப்பொழுது வெடித்து விடுவாள். ஆனாள் “செள்கத்” அதுக்கெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்து பீவியை குளிர்வித்து விடுவார்.
அவரை பொருத்தவரை வியாபாரம், வரவு கணக்கு சரியாக இருக்க வேண்டும். ‘நான் உன்னை ஏமாற்ற மாட்டேன், நீ என்னை ஏமாற்ற முயற்சிக்காதே’. இதுதான் அவரது மந்திரம், அது நல்லபடியாகவே இது வரை நடந்து கொண்டிருக்கிறது இந்த மார்க்கெட் கமிசன் பிசினஸ், ஏழெட்டு கடைகள் கட்டியிருக்கிறார், அதில் வரும் கடை வாடகை, இப்படி ஓடிக்கொண்டிருக்கிறது, பெரிய அளவில் சம்பாத்தியம் வரவில்லை என்றாலும் மூணு பொண்ணுகளை கட்டி கொடுத்து கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தால் நிம்மதியாய் காலையில்தான் எழும் ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார் அல்லா. அதில்தான் இப்படி ஒரு சிக்கல் வந்து அவரது தூக்கத்தையே கெடுத்து விட்டது.
அந்த கடையில் ஒன்றில்தான் சீனிவாசனின் அப்பா “முட்டை கடை” ஒன்று வைத்திருந்தார். நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. இடையில் அவருக்கு உடம்பு முடியாமல் போய் வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதத்திலேயே செளகத்தின் குணம் தெரிந்து காலி பண்ணி விட்டார்கள்.
அதற்கப்புறம் வேறொரு ‘பார்ட்டியிடம்’ வாடகைக்கு விட்டார். அது ஆரம்பத்திலேயே நொண்ட ஆரம்பித்து விட்டது. வாடகை சரியாக வரவில்லை. ஒரு வருடத்தில் கடையை காலி செய்ய சொல்லி விட்டார். அது தெரிந்து மீண்டும் சீனிவாசன் வந்து வாடைகைக்கு கேட்டான். பையனுக்கு இருபது வயது தான் இருக்கும். படிப்பு ஒன்றும் அவ்வளவு இல்லை, என்றாலும் அவ்வப்போது அப்பாவின் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தவன்தான். அப்பா உடல் நிலை சரியில்லாமல் அவரை ஆசுபத்திரிக்கு கூட்டி போய் வர சரிவர வியாபாரத்தை கவனிக்க முடியாமல் போய் விட்ட்து. அப்பாவும் காலமாயிட்டார், பையன் மறுபடி வியாபாரத்தை தொடங்க நினைக்கிறான். இவருக்கும் அவனுக்கு கொடுப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. அதில்தான் இப்ப பெரிய சிக்கல் வந்து அவர் சொந்த்த்தின் பக்கம் சாய வைத்து விட்டது.
மறு நாள் சீனிவாசன் வந்து “பாய் உங்க ஆளுன்னு அவருக்கு கொடுத்திட்டீங்க இல்லையா?” இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தால் என்ன பதில் சொல்வது, இது வேறு மனசை படாத பாடு படுத்தியது.
“ஓய் தூங்காமல் என்ன புரண்டு புரண்டு படுத்துகிட்டிருக்கிறீர்” உள் அறையில் படுத்திருந்த மனைவி “பீவி” இவரது கட்டில் கிரீச் சத்த்த்தில் தூங்க முடியாமல் சத்தம் போட்டார்..
இவருக்கு மனைவி மேல் கோபம் எல்லாம் உன்னாலதான் என்று சொல்ல வாய் துடித்தது, வேண்டாம் அப்புறம் இந்நேரத்துக்கு இரண்டு பேரும் சண்டை போட்டு கொண்டிருக்க வேண்டும். “யா அல்லாஹ்” சொல்லியவாறு அப்படியே படுத்துக்கொண்டார்.
காலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது செளகத்துக்கு, ஆனால் விழித்தவர் ஏண்டா விழித்தோம் என்ற எண்ணம் உடனே வந்து விட்டது, காரணம் அவர் எப்பொழுது விழிப்பார் என்று எதிரில் இருந்த ஸ்டூலில் “பீவி”கொடுத்த காப்பியை குடித்துக்கொண்டு காத்திருந்தான் சீனிவாசன்.
அவன் எதிரில் படக்கென்று கண்ணையும் மூட முடியாது, சரி எழுவோம், காலையிலேயே எனக்கு “வாக்கு தவறியவன்” என்ற வார்த்தை கேட்க அல்லா நினைத்திருந்தால் நாம் என்ன பண்ண முடியும்? எழுந்து கட்டிலிலேயே உட்கார்ந்தவர், வா தம்பி, குரலில் அவ்வளவு பலகீனம்.
“பாய்” பையனின் குரலில் அவ்வளவு மென்மை..மெல்ல கண்ணை துடைத்து அவன் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தில் பார்த்தார்.
“என்னை மன்னிச்சிருங்க பாய்! நான் அம்மாவை கூட்டிட்டு ஊருக்கே போலாமுன்னுட்டு முடிவு பண்ணிட்டேன். அங்க எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கு, போய் விவசாயத்தை பார்க்கலாம் அப்படீன்னு நினைக்கிறோம். அதுதான் உங்க கிட்டே வந்து சொல்லிட்டா கடைய வேற யாருக்காவது வாடகைக்கு கொடுப்பீங்கன்னு நேரத்துலயே வந்துட்டேன்”.
வானம் பல பலவென விடிந்தது. செளகத்தின் மனமும்தான். ‘யா அல்லாஹ்’ இத்தனை வருசம் கட்டி காப்பாற்றிய பழக்கத்தை அப்படியே காப்பாற்றி விட்டாய்!
மனம் நிறைய மகிழ்ச்சியுடன் பையனை அருகில் அழைத்து ‘அல்லாஹ்’ உனக்கு யாதொரு குறையும் வைக்கமாட்டான். போய் நல்லபடியா அம்மாவை பார்த்துக்கொண்டு ஒரு கல்யாணத்தையும் செய்து மனைவியுடன் சந்தோஷ்மா இரு.
அவரது குரலில் தென்பட்டது மகிழ்ச்சியா? நிம்மதியா?
எதுவோ “ஆசிர்வாதம்” மட்டும் மனமார அவனுக்கு கொடுத்தது உண்மை.