சொந்த வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 5, 2013
பார்வையிட்டோர்: 34,178 
 
 

அரண்மனை மாதிரி வீடு என்பார்களே. அதுபோன்ற விசாலமான வீடு. பெரிய பெரிய அறைகள் இரண்டு கட்டு. முற்றம் கூடம் தாழ்வாரம் என்று தினம் ஒரு கல்யாணம் செய்யலாம். ஏன். அவர் பெரிய பெண்ணுக்கு நிஜமாகவே இந்த வீட்டில் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது.

அரண்மனை ஆனால் வேறொருவரின் அரண்மனை விட்டுப் போகும் காலம் வந்துவிட்டது. சொந்தக்காரன் போகச் சொல்லிவிட்டான்.

அவன் எப்போதோ போகச் சொல்லியிருப்பான்.

கார்த்திகேயன் “நான் சொந்தமா *ப்ளாட் வாங்கப்போறேன் சார். வாங்கினதும் அங்க போயிடுவோம். சீக்கிரமே ஏற்பாடாயிடும். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்குங்க. வாடகை வேணும்னாலும் சேர்த்துத் தரேன்.” என்று பேசி கடந்த ஐந்து மாதங்களாக ஆயிரம் ரூபாய் வாடகை தந்து கொண்டிருந்தான். இத்தனை பெரிய வீட்டுக்கு இந்த நாளில் ஆயிரம் ரூபாய் கூட பிச்சைக்காசுதான். ஆனால், பழைய வட்டாரம் “பாஷ் லொக்கா-டி” இல்லை. கட்டடமும் “ஹைதர் காலஃத்து வகை. ஆகவே. முன்பை விடக் கூடுதலான முந்நூறு ரூபாயை வீட்டுக்காரர் ஒப்புக்கொண்டு “வாய்தா” தந்திருந்தார்.

மேலும். இக் குடும்பத்துக்கு வெகு காலம் பழக்கப்பட்டவர். வீட்டைத் தரைமட்டமாக்கி அங்கு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி ஒவ்வொரு தளத்தையும் மூவாயிரம். நாலாயிரம் என்ற வாடகையில் கம்பெனிகளுக்கு விடுகிற திட்டத்தைச் சிறிது காலம் இவர்களுக்குத் தள்ளிப்போட இசைந்தார்.

இப்போது கார்த்திகேயன் *ப்ளாட் வாங்கி விட்டான். அடையாறுக்கு அருகே இடம். தற்கால பாணி வீடு. வாஷ்பேஸின். மேனாட்டு வகை *ப்ளஷவுட். சுவருக்குள் அமைந்த “வார்ட்ரோப்”. கண்ணுக்குத் தெரியாத மின் இணைப்பு கீஸருக்கு வசதி. மிக்ஸி. கிரைண்டர்களுக்குத் தயாராய் சாக்கெட்டுகள் என்று எல்லாம் உண்டு. புதிய காலனியின் நாகரிகச் சூழல் ஜன்னல்களைத் திறந்தால் “முடியைப் பிய்த்துக் கொண்டு போகிற” கடற்காற்று. கார்த்திகேயனை விடவும் அவனுடைய “டீன் ஏஜ்ஃ பெண் ஜோதிக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி உற்சாகம்.

“அப்பாடா. இனிமே வெக்கப்படாம என் பெரண்ட்ஸயெல்லாம் வீட்டுக்கு இன்வைட் பண்ணலாம்” என்றாள்.

நாகராஜன்தான் சோர்ந்து காணப்பட்டார். தம் அறையில் பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தார். பிள்ளை சொந்தமாய் வீடு வாங்குகிறான் என்ற மகிழ்ச்சி. பெருமை எல்லாம். ஆனால் வீடு என்ற சொல்-ல் உடனுக்குடன் மனசில் பதிந்தது. அவருக்குப் பழகிய வீட்டு இலக்கணம்தான். பெரிசு பெரிசாய் நிறைய அறைகள். விசாலமான உறைவிடம். காலார வீட்டுக்குள் இரண்டு சுற்று நடந்து வந்தாலே தேகப்பயிற்சி கிடைத்துவிடுகிற விஸ்தாரம்.

பால் காய்ச்சிக் குடிக்க உற்சாகமாய்க் குடும்பத்தின் ரோடு சென்ற அன்றுதான் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. *ப்ளாட் என்பதன் அர்த்தம் அவருக்கு மட்டும் தெரியாதா? *ப்ளாட்டும் வீடுதான் என்றாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கண்கூடாய் பார்க்கும் வரை ஏன் உணர்வில் பதிவாகவில்லை?

இது “இரு படுக்கையறை *ப்ளாட். பதினாலுக்குப் பத்தடி அறைகள். நடுவில் அதற்குச் சற்று சிறிய அளவில் பொது ஹால். அங்கு அடுக்கி அலங்கரிக்க மருமகளும். பேத்தியும் நிறைய நாகரிகப் பதுமைகள் வாங்கப் போகிறார்கள். இன்னும் சோபா செட்டும் டி.வியும் வேறு இருக்கிறது. பத்துப் பேரை சேர்ந்தாற்போல உட்காரவைத்து இலைபோட இடம் கிடையாது. ஒரு மூளையில் பெரிய அண்டாவின் அளவும் வடிவமும் கொண்ட. காது வைத்த. பித்தளைத் தொட்டியில் குரோட்டன்ஸ் வைக்க வேண்டுமென்று பேத்தி தீர்மானமாய்ச் சொல்லிவிட்டாள். இப்போதெல்லாம் அதுதான் பாஷனாம். சிநேகிதிகளை வீட்டுக்கு அழைக்கக் கூடியவர்களாக்கும் தகுதிகளில் அந்த அண்டாத் தொட்டியும் ஒன்று என்று தோன்றியது. பேத்திக்கு ஓர் அறை. மற்றொன்று மகனுக்கும் மருமகளுக்கும் முன்னால் இருந்த சின்ன வராந்தாவின் முனையில் மரத் தடுப்பால் அவருக்கு ஓர் அறை உருவாக்கிக் கொடுக்க கார்த்திகேயன் எண்ணியிருந்தான்.

“எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும் அப்பா. அங்கே நீங்க படிக்கிறதோ. ஓய்வெடுக்கிறதோ எல்லாம் செய்யலாம். வீட்டில் யார் வந்தாலும் போனாலும் உங்களுக்குத்
தொந்தரவு இருக்காது. உங்க ப்ரைவஸிக்கு இடைஞ்சல் இல்லை. நீங்களாய் இஷ்டப் பட்டா மத்தவங்களோடு கலந்துக்கலாம். ராத்திரியில் மட்டும் பாதுகாப்பாய் உள்ளே ஜோதி ரூமில்
படுத்துக்குங்க.”

மகன் நல்லவன். அவருக்கு வேண்டியதையெல்லாம் கவனித்துச் செய்கிறவன்.

“அதெல்லாம் சரிதான் கார்த்தி. ஆனா…..” என்று நாகராஜன் இழுக்கிறார். பால் காய்ச்சிக் குடித்துவிட்டு வீடு திரும்பிய அன்று மாலை.

“என்ன ஆனா?”

“ரொம்ப சின்ன இடமாயிருக்கேடா!”

கார்த்திகேயன் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

என்னப்பா சின்னது? நாம இருக்கறது நாலே பேர். நாளைக்கே ஜோதி கல்யாணமாகிப் போய்ட்டால் மூணு பேர்தான். நம்ம தேவைகளுக்கு அந்த ப்ளாட் போதாதா? இப்ப இந்த வீட்டுல பாதி இடம் பூட்டித்தானே கிடக்குது?”

ஒரு காலத்தில் இங்கே நிறைய மனுஷங்க புழங்கி இருக்காங்க. தெரியுமா? உங்கம்மா உயிரோடு இருந்தப்ப; உனக்கும் உன் அக்கா. தங்கச்சிகளுக்கும் கல்யாணமாகறதுக்கு முந்தி; நம்ம தூரத்து உறவுக்காரங்கள்லாம் இங்கே வந்து தங்கிப் படிச்சி கிட்டிருந்த காலத்துல.”

“அந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சுப்பா; இப்ப இந்த வீட்ல நாம நாலு பேர்தான்னு எத்தனை வாட்டி ஞாபகப்படுத்தணும்? முந்தி புழங்கின இடத்தில் முக்கால்வாசி இப்போ நமக்குத் தேவையில்லாம தட்டுமுட்டு சாமான்கள் போட்டுப் பூட்டி வச்சிருக்கோம். வீடு “ஹோ”ன்னு இருக்கு.

நீங்க ஒண்டி ஆளாய் உங்க ரூமில் கமலாவும் நானும் இன்னொரு ரூமில் ஜோதி மூணாவது மூளையில் ஒருத்தரையொருத்தர் தேடிக்கிட்டு கண்ணாமூச்சி ஆடலாம். அத்தனை காலி இடம்.”

“இவ்வளவு சாமான்களும் அந்த ப்ளாட்டில் எப்படிக் கொள்ளும்?”

“இவ்வளவு சாமான்களையும் யார் அங்க எடுத்துட்டுப் போகப் போறாங்க?”

நாகராஜன் திடுக்கிட்டார்.

“பூட்டி வச்சிருக்கிற சாமானெல்லாம் நமக்குத்தேவைப்படாதப்பா! பழைய மரச்சாமான்கள் கள்ளிப்பெட்டிகள்.  கட்டில்கள். யாருக்கானும் கொடுத்துடலாம். இல்லே வித்துடலம்.”

“யாரு வாங்குவாங்களாம். பழங்கால கிராமபோனும் உடைஞ்சுபோன ஊஞ்சப்பலகையும் மாதிரியான சாமான்களை?” என்றாள் மருமகள் இடையில்.

“சரியாய்ச் சொன்னே கமலா. இத பாருங்கப்பா. இதெல்லாம் சும்மா இடத்தை அடைச்சுக்கிட்டுத்தூசி சேர்த்துக்கிட்டு இருக்கற அநாவசியப் பொருள்கள்தான். நம்ம பர்னிச்சரையும் தான் பாருங்க. யானை யானையா சோபாக்களும் பீரோக்களும்! இதையெல்லாம் லாரி வச்சு மர்ரே கம்பெனிக்கு அனுப்பிச்சிட்டு லேசா. எளிமையா. ஆனா நாகரிகமான சோபா செட் வாங்கி நம்ம ப்ளாட் ஹால்ல போடப் போறேன்”.

“பீரோ…… பீரோக்களையுமா போட்டுடப் போறே?” என்றபோது நாகராஜன் குரல் லேசாய் நடுங்கியது.

பின்னே? இத்தனை பீரோக்களுக்கு அங்க இடம் எது?

“இந்த வீட்டுல ரூமூக்கு நாலு பீரோ. முக்கால்வாசி பூட்டியே கிடக்குது. சாவி எங்கேன்னு கூடத் தெரியாது. எந்தக் காலத்திலோ யாரோ உபயோகிச்சா இப்போ என்னப்பா? நம்ம தேவைக்கு ஒரு காட்ரெஜ் பீரோ. இன்னும் ஒண்ணு இருந்தா போதும். உங்களுக்குப் படிக்கிறதில் ஆசை. அதனால் உங்க புஸ்தகங்களுக்கு ஒரு சின்ன பீரோ. மத்தபடி பீரோ எதுக்கு? புது மோஸ்தர் கட்டடத்தில் பில்ட்-இன் வார்ட்ரோட் இருக்கு. சமையால் ரூமில் பில்ட்-இன் ஷெல்ப்கள் இருக்கு. வேற எதுக்கு
பீரோ.”

நாகராஜன் சிறிது நேரம் தலைகுனிந்து பேசாதிருந்தார்.

திடீரென்று சொன்னார். “இல்லடா கார்த்தி. இத்தனை சாமான்களையும் தூரப் போட்டுடறது சரின்னு தோணலே அந்த ப்ளாட் வேணாம்……”

“ரொம்ப அழகாயிருக்குப்பா. கோவாப்ரேடிவ் சொஸட்டியில் முதல் தொகை டௌன் பேமென்ட்
செஞ்சுபாலெல்லாம் காய்ச்சிக் குடிச்சிட்டு வந்தப்புறம், பாழடைஞ்ச வீடு மாதிரி இந்தப் பெரிய இடத்தைக் கட்டிக் கிட்டு ஆயுசுக்கும் கிடக்கணும்னுதான் உங்களுக்கு ஆசையா? எனக்கு அந்தத் தண்டனை கொடுக்காதீங்க?”

“இல்லேடா. நான் அப்படி சொல்லலே…..”

“நீங்க இருக்கணும்னு சொன்னாலும் வீட்டுக்காரர் இனிமே பொறுக்கமாட்டார். முப்பத்தோராம் தேதி நாம கிளம்பிப் போனதுமே ஒண்ணாந்தேதி காலையில் மம்முட்டி கடப்பாரையோட இங்க வாசல்ல ஆளுங்க வந்து நிக்கப் போறாங்க.”

“நான் இங்கேயே இருக்கணும்னு சொல்லலே கார்த்தி! அவ்வளவு சின்ன ப்ளாட் வேணாம்னுதான் சொல்றேன். கொஞ்சம் தாரளமாய் இடம் இருக்காப்ல பாரேன்….. இன்னும் நாலு பீரோ வைக்க முடியறாப்பல……”

“இந்த *ப்ளாட்டுக்கே எனக்கு அஞ்சு லட்சம் ஆகப் போகுது தெரியுமா? ஹவுஸ் லோன் வாங்கியிருக்கேனே. அதைப் பத்தி எத்தனையோ கவலை. இத்தனையும் தாண்டி ஏதோ நம்ம மகன் சொந்த வீடு வாங்கறேன்னு பாராட்டத் தெரியாட்டியும் குறை சொல்ல நல்லாத் தெரியுது.”

“கோச்சுக்காதேடா! நான் அதுக்குச் சொல்லலே….. ஏ கார்த்தி! கார்த்தி!”

அவர் கூவக் கூவ அவன் திரும்பிப் பாராமல் எழுந்து சென்றான்.

“சே. இந்த அப்பா! ஒவ்வொரு குடும்பத்தில் பிள்ளை அப்பனை அநாதரவாய்த் தெருவில் விட்டுவிடுகிறான். நான் அப்படியா? எவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்கிறேன். முழங்கால் மூட்டு வலியால் படி ஏற சிரமப்படப்போகிறாரே என்று கிரௌண்ட் *ப்ளோரில் இடம் வாங்கியிருக்கிறேன். இத்தனைக்கும் மாடியில்தான் இன்னும் நல்ல காற்று. தெரு இரைச்சல்களால் தொல்லை இல்லை. சே! பெற்ற தகப்பனாயிருந்தாலும் கொஞ்சம் நன்றியுணர்வு வேண்டும்…..”

நாகராஜன் நின்ற இடத்தில் வெகு நேரத்தில் வெகு நேரம் கல்லாய் இருந்தார். கார்த்தி கோபித்துக் கொண்டு விட்டான்.

இனி எதுவும் சொல்வதில் பயனில்லை.

அவர் மெல்லத் தம் அறைக்கு நடந்தார். அவருடைய பிரத்தியேக அறை. எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும்” என்றானே. இந்த அறையும் அந்த மரத்தடுப்பும் பொந்தும் ஒன்றா? மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு அறையைச் சுற்றி அவர் பார்வையை மெல்ல செலுத்தினார். இந்தப்பக்கம் மூன்று.அந்தப்பக்கம் மூன்று பீரோக்கள். பெரியவை.

ஒவ்வொன்றிலும் முட்ட முட்டப் புத்தகங்கள். பற்பல பொருள் பற்றி. தமிழ். ஆங்கிலம் வடமொழி.
எத்தனை காலமாய்ச் சேர்த்தவை! ஆண்டுகள் ஒன்றா இரண்டா! நாற்பது ஆண்டுகள் சேகரிப்பு.
இளமைப் பருவத்திலிருந்தே முளைவிட்ட ஆசை உத்தியோக காலத்தில் நிறைவு காண ஆரம்பித்தது. இரும்புச் சாமான்கள் நிறுவனம் ஒன்றில் இருபத்திரண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது மாதச் சம்பளம் இருநூற்றைம்பது ரூபாய். அதில் நூறு ரூபாயைப் புத்தகம் வாங்கவென்று எடுத்து வைத்து விடுவார். மிச்சத்தில் ஓர் ஆள் அதிக சிரமமின்றி வாழ முடிந்தது அந்தக் காலத்தில். எந்த நெருக்கடியிலும் அந்தப் பத்து ரூபாயைத் தொட்டதில்லை.அது புத்தகங்களுக்காக மட்டுமே.

பின்னால் நிலைமையும். சம்பளமும் உயர உயர புத்தகப்பணமும் உயர்ந்தது. “விலை இரண்டு அணா” என்று அச்சிட்ட உள்ளங்கையளவு தல புராணங்களிலிருந்து இப்போது இரண்டு மாதம் முன்பு புத்தகக் கண்காட்சியில் இரண்டு பாகங்களில் இந்திய வரலாற்று நூல் நூற்றெழுபது வரை ஆயிரத்தைந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவரை நட்புடன் பார்த்துக் கொண்டு இந்த பீரோக்களில் நிற்கின்றன.

ஒவ்வொரு பீரோவினுள்ளும் புத்தகங்களைக் கண்களால் கொஞ்சித் தடவினார். பிறகு திறந்து கைகளால் தடவினார். தொட்டுச் சீராட்டினார். தேவையானால் ஒருவேளை சோறுண்டு அவரால் வாழ முடியும். இரண்டே ஆடைகளை மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டு வாழ முடியும். பொந்து அறைக்குள் சந்தோஷ்மாய் வாழ முடியும். ஆனால் இந்தப் புத்தகங்கள் இல்லாமல் வாழ்வது……?

இவை யாவற்றையுமே முறை வைத்துக் கொண்டு ஒன்று விடாமல் திரும்பத் திரும்பப் படிக்கிறார் என்பதில்லை. மிகவும் பிடித்தவை என்று சில உண்டு. திரும்பத் திரும்பப் படிக்க வேறு சில. ஆண்டுக்கணக்காய்த் தொடப்படாமலேயே பீரோவுக்குள் தூசி படிந்து பழுப்பாகிக் கொண்டு வருவதும் உண்டு. அதற்காக அவற்றைத் துறந்துவிட முடியுமா? இந்த நூல்கள் அனைத்தும் அவர் வாழ்ந்த நாட்களின் சாட்சி. அவர் மனநிறைவின் ஸ்தூல அடையாளம். படிக்காத நேரங்களில் கூட அவற்றின் பின்னணியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது
சொந்த வீட்டில் இருப்பது போன்ற இதம் சுரக்கிறது.

ஒரு சின்ன பீரோவுக்குள் அடங்கும் அறைக்குத்தானே அனுமதி கொடுக்கிறான். மிஞ்சிப் போனால் நூறு புத்தகங்கள் தேறுமா? நூற்றைம்பது? இருநூறா? எவற்றைத் தேர்ந்தெடுப்பது எவற்றையெல்லாம் விடுவது? உன் உடம்பின் அங்கங்களில் இரண்டொன்று வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் வெட்டி எறி என்றால் என்ன பதில் சொல்ல? சுண்டுவிரலேயானாலும் வெட்டிவிட மனம் வருமா?

தட்டுமுட்டு சாமான்கள் போலவும். பழங்காலக் கட்டில் சோபாக்கள் போலவும் இவற்றை அநாவசியம் என்று தூக்கிப்போடுவதா?

பேத்தியிடம் புத்தக ஆசையை வளர்க்க அவர் பலதரம் முயன்றதுண்டு. ஆனால் அவர்களுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்த ஆர்வம் புத்தகம் படிப்பதில் இல்லை. “இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் தாத்தா உக்கார்ந்து படிப்பாங்க? போர். இந்தக் கதையைத்தான் விறுவிறுப்பாக பி.பி.சி.யில் சின்ன சீரியலாய்க் காட்டினாங்களே” என்பான்.

வண்ணப் படங்களைக் காட்டிச் சுவையூட்டப் பார்த்தால், “இதைவிட தத்ரூபமா இந்தக் காட்டு மிருகங்களைப் பத்தி ஒரு டாகுமெண்டரி வந்துதே டிவி.யில!” என்பாள்.

தலைமுறை இடைவெளி என்பது இதுதானா? அல்லது நான்தான் இந்த ஜெட் யுகத்தில் வாழவே தகுதியற்றவனாகி விட்டனோ? நானும் தூசி படிந்து பழுப்பாகி…….

புத்தகங்களைத் தொட்டுத் தடவிய விரல்கள் நடுங்கின. கண்களில் ஈரம் திசை கவித்தது.

என்ன செய்வான் என் புத்தகங்களை? ஏதாவது லைப்ரரிக்காவது நன்கொடையாய்த் தருவானா அல்லது கிலோவிற்கு இவ்வளவென்று பேரம் பேசி பேப்பர்காரனிடம்……முருகா!

உள்ளுக்குள் மௌனமாய் ஓர் அலறல் வெடித்தது. கண்முன் இருள் சூழ ஆரம்பித்தது தெரியும். உடல் தரையைத் தொட்டது தெரியாது.

மங்கல் மாங்கலாய். கருவளையங்களாய். கண்ணினுள் ஏதோ சுழற்சிகள். உரக்கக் கத்துவதுபோல் இருந்தது. முடிவற்ற பள்ளத்தின் இருளில் மௌனமாய் மூழ்குவது போலவும் இருந்தது. இது மகனின் முகம்தானே? ஆனால் அடையாறு ப்ளாட் அல்லவா இந்த முகத்தோடு சிரிக்கிறது? இன்னொரு பக்கம் அழுகையொறீ. பீரோக்களிறீருந்தா? கைகால்களை உதைத்துக் கொள்கிற அமைதியின்மை. மீண்டும் இருள்.

மீண்டும் மங்கலாய் ஒளி ஊடுருவல். வெள்ளத்தில் சிறிது சிறிதாய் நீச்சல் போட்டு மூச்சு வாங்க ஒருவாறு மெல்லத் தலையை நீர்மட்டத்திற்கு மேல் தூக்கி நிமிர்ந்தபோது எதிரே இருந்த முகம் ஒரு கணம் மங்கிக் குழம்பிப் பிறகு தெளிந்தது.

“அப்பா கண்ணை விழிச்சிட்டார்! கண்களை மலர்த்தினார். இப்போதுதான் தூங்கப் போய்க் கண் விழித்தது போல் இருந்தது. ஆனால் சுவர்க் காலண்டரில் மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

“அப்பா”

கார்த்திதான் எதிரில். கண்களை அசைத்தபோது பக்கத்து மேஜைமேல் ஏதோதோ பாட்டில்கள். மருந்துகள்.

“இப்போ எப்படிப்பா இருக்கு?”

கார்த்திகேயன் கை அவர் நெற்றியில் படிந்தது. “அப்பாடா. ஜுரம் இறங்கியிருக்கு.”

மருமகளின் முகம் நாற்காலியருகில் அவன் பின்னால் தோன்றியது. புன்னகையுடன்.

“கமலா. டாக்டருக்கு போன் பண்ணி அப்பாவுக்கு விழிப்பு வந்திடிச்சுன்னு சொல்லு.”

எனக்கு… இப்போது தந்தையும் மகனும் மட்டுமே.

“என்ன ஆச்சு கார்த்தி?” அவர் குரல் அவர் காதுக்கே வித்தியாசமாய் மெலிந்து ஒலித்தது. யாரோ எங்கிருந்தோ பேசுவதுபோல்.

“கடுமையான காய்ச்சல்ப்பா. நூத்துநாலு டிகிரி. கண் திறக்காம மயக்கம். மூணு நாளாச்சு. பயந்தே போய்ட்டோம்…டாக்டர் நல்லா இருக்கணும்.”

மூன்று நாட்கள். மீண்டும் காலண்டர் மேல் கண்கள் நினைவுகள் மெல்லப் புரண்டு கொடுத்தன. வீட்டைக் காலி செய்ய இன்னும் ஒன்பதே நாட்கள்…. கண்களுக்குள் உப்பு உறுத்தியது.

“மயக்கத்தில் ஏதேதோ பேசினீங்கப்பா.” அவன் குரலிலும் முகத்திலும் இரக்கம் குரல் தாழ்ந்தது.

“என்கிட்ட முதல்லயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கக் கூடாதா?”

கார்த்தி அவர் புறங்கை நரம்புகளை மெல்ல நீவிக் கொடுத்தான்.

“கவலைப்படாதீங்க. உங்கள் அத்தனை புஸ்தகங்களும் நம்மோட வரும். எப்படியோ நான் வச்சுக் கொடுக்கறேன்.”

வெளியறையில் மருமகள் டாக்டருக்கு டெலிபோன் செய்யும் குரல் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *