சொந்த வீடும் சமையல் மாமியும்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 6,058 
 
 

சொந்த வீடும் சமையல் மாமியும்உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக சமையல் மாமிக்கு ஃபோன் போட்டேன். அடைத்துக் கிடந்த வீட்டைத் திறந்ததும் கப்பென்று முகத்தில் அறைந்தது புழுக்க வாடை. காற்றாடத் திறந்து கிடந்தால் அழுக்கு வீடு கூட நாற்றமடிக்காது. வீட்டிற்குள் சூரிய ஒளி பட்டால் ஆரோக்கியம்.

ரிங் போனது. யாரும் எடுக்கவில்லை. மாமி சமையலில் பிஸி. ஹால் ஜன்னலைத் திறந்தேன். உதித்த சூரியனின் ஒளிக் கீற்றுகள் சரேலென்று உள்ளே பாய்ந்தன. என் வீட்டிற்கு அழகே அதுதான். காம்பவுண்ட் சுவரில் நடந்து கொண்டிருந்த பூனை, ஆள் வந்தாச்சா? என்பது போல் திரும்பிப் பார்த்து பம்மியது. அந்த வீட்டுக்குள் வந்து விட்டால் மனதில் ஒரு நிம்மதி. கோயிலுக்குள் நுழைந்தது போல உணருவேன். அந்த நம்பிக்கையே எனக்கு பலம்.

நான் அங்கு குடி வந்தபோது எதிர் வீடு மட்டும்தான். நல்லவேளை எங்கோ தள்ளி ஒரு வீடு என்றில்லாமல்! ஐம்பதடிக்குள் இருந்த கிணற்றுத் தண்ணீர் இன்று நானூறு அடிக்குப் போய் விட்டது. நெருக்க நெருக்கமாய் வீடுகள் மண்டி விட்டன. மாலையானால் எதிர் வீட்டு நண்பர் வாசல் லைட்டைப் போட்டு வைத்துக் கொள்கிறார். இரவு பத்து, பத்தரைக்கு அணைக்கிறார். வெறும் நண்பரல்ல அவர். உடன்பிறவா சகோதரர்.

வீடு இன்றுவரை பாதுகாப்பாய்த்தான் இருந்து கொண்டிருக்கிறது. பெயர்த்து எடுத்துக் கொண்டா போய் விடுவார்கள்? எங்கெங்கோ திருட்டு, கொள்ளை என்று கேள்விப்படுகிறோம். ஆனால், எதுவும் எங்கள் வீட்டைப் பாதித்ததில்லை. இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
அந்தத் தெருவிலேயே மாடி கட்டாத வீடு எங்கள் வீடுதான். பார்க்க சாதாரணமாய்த்தான் இருக்கும். எப்படி ஒரு அரசு ஊழியரை சாதாரண வேட்டியும், சட்டையுமாய் உருவகித்து உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியுமோ அது போலத்தான் அவன் கட்டிய வீடும்…! பங்களாவா தூக்கி நிறுத்த முடியும்?

ஒன்றுமில்லாத இந்த ஏழை வீட்டில் கன்னம் வைத்துத் திருட வந்து அநியாயமாய் ஏமாந்து போயிருப்பானே… பாவம்… என்று திருடனுக்காகப் பரிதாபப்பட்டு உட்கார்ந்து அழுதாராம் திருலோக சீதாராம். கேள்விப்பட்டிருப்பீர்களே? அவர் ஒரு பாரதி விஸ்வாசி. அவரின் வாரிசாய்த் தன்னை நினைத்துக் கொண்டு உயிரோடிருக்கும் வரை வருடந்தோறும் பாரதிக்கு திதி நிறைவேற்றிய பெருந்தகை அவர்.

ஒன்று சொல்லலாம். திருடன் புத்தகப் பிரியனாய் இருந்தால் நிறையப் புத்தகங்களை வேண்டுமானால் அள்ளிக் கொண்டு போகலாம். திருடிக் கொண்டு போய் வைத்துப் படிக்கலாம். படிப்பவன் திருடமாட்டான் என்று சொல்ல முடியுமா என்ன? அல்லது திருடுபவன் படிக்க மாட்டான் எனலாமா?

தனிமையும் அமைதியும் நிரம்பி வழிய, அந்த வீட்டில் உட்கார்ந்து தலையணை தடிமனுக்கு எவ்வளவு புத்தகங்களைப் படித்து முடித்திருக்கிறேன்!
‘‘நாங்க இந்தப் பகுதிக்குக் குடி வந்து பத்து வருஷத்துக்கும் மேலாச்சு மாமா… உங்களத் தெரிஞ்சிக்கவே இல்லையே..?’’ என்று சொல்லிக்கொண்டேதான் அறிமுகமானாள் சமையல் மாமி. பெயர் இந்திரா.

‘‘ஏது மாமா… இவ்வளவு புத்தகம் வச்சிருக்கேள்…? நா எடுத்துண்டு போகட்டுமா? படிச்சிட்டு அடுத்தாப்ல நீங்க ஊருக்கு வரச்சே திருப்பித் தரேன். சரியா? எங்காத்து மாமா புஸ்தகப் பிரியராக்கும்…’’ என்று சொல்லி சமையல் மாமி முதலில் ஆசையாய் வாங்கிக்கொண்டு போன அந்தப் புத்தகங்களின் பெயர் ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ மற்றும் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’

‘‘அந்தக் காலத்துல அக்ரஹாரம் பூராவும் வீட்டுக்கு வீடு போட்டி போட்டு இவரோட கதைகளப் படிப்பா தெரியுமோ…? ஜெ.யோட ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ படிச்சிருக்கேளோ? அற்புதமான நாவலாக்கும்! அந்த கதாபாத்திரத்தை என்னமா வடிச்சிருப்பார்…? ஓர் உலகம்தானே… ஒரு உலகம்னு எப்படி கேட்க… அதுக்கு தன்னோட முன்னுரைல அப்படியொரு அழகான விளக்கம் தந்திருப்பார்! என்ன ஒரு தன்னம்பிக்கை தன் எழுத்து மேலே..?

எங்காத்து மாமா கதைகளெல்லாம் எழுதுவார் தெரியுமோ? ‘விகடன்’, ‘கல்கி’, ‘கலைமகள்’னு அந்தக் காலத்துல ஏகமா வந்திருக்கு! பரிசெல்லாம் கூட வாங்கியிருக்கார். ‘அன்னம்’ங்கிற பேர்ல நீங்க பார்த்திருப்பேள். ரிடையர்ட் ஆனப்புறம் இன்னும் நிறைய எழுதுவார்னு பார்த்தா உடம்புக்கு வந்துடுத்து. முன்ன மாதிரி எழுத முடிலை…’’

இந்த வீட்டுக்கு வந்தாலே மாமியின் நினைப்பும் அலை மோதும். அவ்வளவு நினைவுகளைப் பொதிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. மறுபடி ஃபோன் செய்தேன். எதிர்முனையில் அந்தக் கனிவான குரல். ‘‘மாமா, வந்துட்டேளா… சந்தோஷம். இன்னைக்கு ஒரு நாளைக்குப் பொறுத்துக்குங்கோ… பதினொண்ணுக்குள்ள கொண்டு வந்துடறேன். நாளைலேர்ந்து ஒன்பதுக்கெல்லாம் டாண்னு வந்துடும்!’’

மாமியிடம் எனக்குப் பிடித்ததே இந்தப் பேச்சுதான். அந்தப் பணிவான பதில் நம் வாயை அடக்கி விடும். நாலு நாட்களோ அல்லது ஒரு வாரமோ அங்கிருந்தால் மாமிதான் சமையல். சாதம் மட்டும் நாம் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மூன்று காய்கள், ரசம், சாம்பார், மோர் என்று வந்துவிடும்.

எழுபது ரூபாய் வாங்கினாள். மாமி கொண்டு வரும் கூட்டு, கறி, சாம்பார், ரசம் இவைரெண்டு வேளைக்கு வரும். வயிற்றுக்கு எந்தக் குந்தகமும் பண்ணாது. அதற்கு உத்தரவாதம். குக்கரில் சாதம் கொஞ்சம் அதிகமாய் வைத்துக் கொண்டு விட்டோமானால் ராத்திரி
சாப்பாடும் கழிந்து போகும்.

கோயிலுக்கு அன்னதானம், முதியோர் இல்லம், பால்வாடி குழந்தைகள் என்று அவ்வப்போது சில விஷயங்கள் செய்யும் வழக்கம் எனக்கு உண்டு. அது அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டது. வேலைக்குப் போனதிலிருந்து அப்பா திவசம், அம்மா திவசம் என்று முதியோர் இல்லத்திற்குச் சென்று கொடுத்து விடுவேன்.

இருபத்தைந்து, முப்பது பேர் இருக்கிறார்கள் என்றால் மதியம் ஒரு வேளைச் சாப்பாடுக்கு புக் பண்ணி பணம் கட்டி விடுவேன். ‘உன் மனம் பூராவும் நல்லவைகளைப் போட்டு நிரப்பி விடு’ என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல் முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்று, மாமியின் சாப்பாடு அத்தனை ருசி என்று சொல்லிவிட முடியாது. ஒன்று புளிப்பு அதிகமாயிருக்கும். அல்லது உப்பு. சமயங்களில் ரெண்டும். காரமும் விண்ணென்று தெறிக்கும்தான்.

‘‘எனக்கும் வயசாயிடுத்து மாமி… உப்பு, புளி, காரம் வள்ளிசாக் குறைச்சிடுங்கோ…’’ சொல்லி விடுவதுதான். எதுவும் மாறியதில்லை.
‘‘ஆகட்டும் மாமா… நாளைலேர்ந்து குறைச்சே போடறேன்…’’ எப்பொழுது என்ன சொன்னாலும் எதைக் கேட்டாலும் அந்தப் பதிலிலுள்ள அடக்கம் என்னை பிரமிக்க வைக்கும். இத்தனைக்கும் மாமிக்கும் எனக்கும் அதிக வயசொன்றும் வித்தியாசமிருக்க வாய்ப்பில்லை. அந்தப் பேச்சே என்னைக் கட்டிப் போட்டிருந்தது.

‘‘வாழைக்காயே எனக்கு ஆகாது மாமி… ஞாபகம் வச்சிக்குங்கோ. மதியம் சாப்பிட்டேன்னா… ராத்திரி இடுப்பு பிடிச்சிண்டிடும். என் உடம்பு வாகு அப்டி. அம்புட்டு வாயு. அதனால அத மட்டும் மறந்தும் எனக்கு வச்சிடாதீங்கோ…’’

‘‘ஓ… அப்டியா! இது தெரியாமப் போச்சே நேக்கு. மன்னிச்சிக்குங்கோ மாமா. இன்னைக்கு அமாவாசை ஆச்சே… வாழைக்காய் வைக்கணுமேன்னு ஒரே நெனப்பா பண்ணிக் கொண்டு வந்துட்டேன். பொறுத்துக்குங்கோ. இனிமே கண்ணுலயே காட்ட மாட்டேன்…’’
மனிதன் இதமான வார்த்தைகளுக்காகத்தானே ஏங்கி நிற்கிறான்.

‘‘மாமா… சித்த வந்து கதவைத் திறக்கிறேளா…?’’ வாசலில் குரல். ஓடிப் போய் பூட்டிய கதவைத் திறக்கிறேன். மாமியிடம் ஒரு சரியான சாப்பாட்டுக் கேரியர் கூடக் கிடையாது. தலையாட்டிக் கொண்டேயிருக்கும். ‘அடுக்குகளை அணைத்துப் பிடித்து மேலே துளைக்குள் இடைச் செருகும் கனமான ஸ்பூன் தொலைந்து போச்சு’ என்று நீண்ட ஆணியைச் செருகியிருந்தாள். அடுக்குகளும் நசுங்கியிருந்தன. முடிந்தால் ஊர் செல்வதற்குள் ஒரு நான்கடுக்குக் கேரியரை வாங்கி இந்த முறையாவது மாமிக்கு பரிசளிக்க வேண்டும்.

‘‘பொதினாத் துவையல் வச்சிருக்கேன். அடிஷனலா ரெண்டு வேளைக்கு தாராளமா வரும். நாளைக்கு வேறே சட்னி செய்து கொண்டு வரேன். போயிட்டு வரட்டுமா?’’ சொல்லிவிட்டுக் கிளம்பிய மாமி, ‘‘பார்த்தேளா… மறந்துட்டேன். இந்தாங்கோ உங்க புஸ்தகம். ரெண்டு பேருமே படிச்சிட்டோம். தி.ஜானகிராமன் வச்சிருக்கேளா? மாமா கேட்கச் சொன்னா. அவரோட கதைகளெல்லாம் என்னைக்கும் ஜீவிதம்னு சொல்லி, ஞாபகமா வாங்கிண்டு வான்னா!’’

கொட்டித் தீர்த்த மழை போலப் பொழிந்து குளிர வைத்துவிட்டு மாமி போய்க் கொண்டிருந்தாள். மனசு படு சுத்தம் போலும். நல்லதையே பேசுவது என்று பிரதிக்ஞை செய்திருப்பார்களோ என்னவோ? இல்லையென்றால் இத்தனை இனிமையாய் வார்த்தைகள் வருமா?
முதல் வேலையாக அவர்கள் கேட்ட தி.ஜா.ரா.வின் புத்தகங்களை எடுத்து வைப்பதற்காக அறையினுள் பிரவேசித்தேன்.

ஒருவேளை அவர்களின் இந்த ஆழ்ந்த இலக்கிய ரசனைதான் புடம் போட்டது போல இத்தனை மென்மையாய் அவர்களை மாற்றியிருக்கிறதோ…?
எனக்கு ஏனோ சட்டென்று மனதில் இப்படித் தோன்றியது. கலையழகும் ஆழமுமிக்க இலக்கியம் மனித மனங்களை மென்மைப்படுத்தி, மேன்மைப்படுத்தும்தானே…!

– பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email

1 thought on “சொந்த வீடும் சமையல் மாமியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *