செவ்வாய் தோஷம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 3,045 
 
 

சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத்தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

அவர்கள் மாயவரம் என்கிற மயிலாடுதுறை சென்று அங்கிருந்து அருகிலுள்ள திருக்கடையூர் சென்று அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தங்கள் “சஷ்டி அப்த பூர்த்தி” என்கிற அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை முன்னேற்பாடாக செய்ய ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை சோழன் எக்ஸ்பிரஸில் சென்று அதே இரவில் உழவன் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.

எழும்பூரில், அருகில் உள்ள பிளாட்பாரத்தில், தஞ்சாவூரிலிருந்து இரவெல்லாம் கண் விழித்து அர்த்த ராத்திரியில் ஊர் ஊராக சுற்றிவிட்டு அலுத்து களைத்து நின்றிருந்தது “உழவன் எக்ஸ்பிரஸ்”..

“நாளை காலை நாம் இந்த ரயிலில்தான் சென்னை திரும்புவோம்” என்று மனைவி ரமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் முரளி. அந்த ரயிலிலிருந்து முரளியும் ரமாவும் இறங்கி சென்று விட்டனர் என்பதை அறியாது!

சோழன் சோழ நாட்டிற்கு செல்ல சைரன் ஊதியவண்ணம் கிளம்பினான். வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர் என்றெல்லாம் நின்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

வழியெங்கும் வித விதமான மனிதர்கள் வித விதமான சிறுவர் சிறுமியருடன் வித விதமான பைகளை எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் தட்டுத்தடுமாறி அவரவர் இருக்கைகளில் அவசரம் அவசரமாக அமர்ந்துகொண்டு “அப்பாடா” என்று ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். முன்பெல்லாம் அவர் ஒரு பெரிய கிளிப் வைத்த கனரக அட்டையில் பயணிகள் சார்ட்களை வைத்துக்கொண்டு, கறுப்புக்கோட் அணிந்து கொண்டு தொந்தி, புட்டிக்கண்ணாடி யுடன் அனைவரது டிக்கட்களையும் “செக்” செய்து “டிக்” அடித்துவிட்டு ஒரு முறை அனைவரையும் அவரவர் அவரவர் வயதுப்பிரகாரம் இருக்கிறார்களா என்று அனுமானித்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட் செல்வார்.

நாமும் ரயில் ஏறுவதற்கு முன்பு கோச்சில் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் நம் பெயரும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, இருந்தால்,” ஐ. ஏ. எஸ்.” பாஸ் செய்த நிம்மதி உணர்வுடன் உள்ளே ஏறி அமர்வோம்.

இப்போதெல்லாம் காலம் மாறிப்போச்சு. பல வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டதால் இது ஒரு இன்ப அதிர்ச்சி முரளி தம்பதிக்கு.

சற்று இளைஞராக வெள்ளை பாண்ட், வெள்ளை ஷர்ட்டில் ட்ரிம்மாக கையில் ஏதோ” ஐ. பேட் “போல வைத்துக்கொண்டு, ரமா முரளி என்று பெயர் சொன்னவுடன் சம்மதத்துடன் நகர்ந்து விட்டார் அங்கிருந்து, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என்ற எந்த தரவுகளையும் கேட்காமலேயே!

பள்ளிக்கூடத்தில் மாவட்டக்கல்வி அதிகாரி வகுப்பு வாரியாக இன்ஸ்பெக்ஷன் முடித்து விட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும்போது “அப்பாடா! போய்ட்டார்”! என்று மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதுபோல, டிக்கட் பரிசோதகர் அந்தப்பக்கம் சென்றவுடன் அவரவர் தம் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்துவிட்டு தத்தம் மொபைல் குழந்தைகளுடன் “ஆளுக்கு பதினைந்து லட்சம் போடப்பட்டுவிட்டதா” போன்ற விஷயங்களை எதிர்பார்த்து போன்களை தடவத்தொடங்கினர்.

இதுவே முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு என்றால், வெளியே பார்க்கவேண்டிய ஊர்கள், மரம், செடி, கொடிகள், ஏரிகளையெல்லாம் பார்த்துக்கொண்டே, பக்கத்து சீட்டில் உள்ள மனிதர்களோடு பேச்சுக்கொடுத்து, உறவாடி, அவர்களின் பத்திரிக்கைகள், வாரஇதழ்களை கேட்டு வாங்கி படித்துக் கொண்டு , கொண்டு வந்த உணவு வகைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, இறங்கும் இடங்கள் வரும்போது ரயில் சினேகிதர்களாக இறங்கி மறைவர். சில நேரங்களில் நல்ல வரன், நல்ல வேலை வாய்ப்புகள் அமைவதுமுண்டு.

இப்போதெல்லாம் அருகிலுள்ளவர் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தாலே “மயக்க பிஸ்கட்” டாக இருக்குமோ என்று பயந்து அனைவரும் அந்தப்பக்கம் திருப்பியமர்ந்து கொண்டு விடுகின்றனர்.

ரமாவிற்கு செவ்வாய்க்கிழமை என்றால் ஆகாது. செவ்வாய் “வெறும் வாய்” என்பாள். முரளி சேல்ஸ் & மார்கெட்டிங் துறையில் பணி புரிந்ததால் தன் அனுபவத்தில் செவ்வாய் “வருவாய்” என்ற புரிதல்.

ரமாவிற்கு செவ்வாயன்று ஏதேனும் துளி அசம்பாவிதம் நடந்தாலே “எனக்கு அப்பவே தெரியும்” “ஏன்னா! இன்னிக்கு செவ்வாய்” என்று குறைப்பட்டுக்கொள்வாள்.

“ஒரு மனிதன் எண்பது வயது வரை வாழ்கிறான் என்றால் ஏறத்தாழ நாலாயிரம் செவ்வாய்க்கிழமைகளை அவன் வாழ வேண்டியிருக்கும்; அத்தனை செவ்வாயும் அபசகுனம் என்று சொல்ல முடியாது” என்று மனைவியை ஆற்றுப்படுத்துவார்.

இருந்தாலும் ரமா மனதில் ஏதோ உறுத்திக்கொண்டேயிருந்தது.

அப்பர் பெர்த்தில் அமர்ந்துகொண்டு விடாமல் வீடியோ கேம்ஸ் விளையாடும் மாணவன், அதைப்பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் பெற்றோர், “மசாலாவடை, பஜ்ஜி, கொய்யாப்பழம்,” என்று எதையெல்லாமோ விற்றுக்கொண்டு ஏ. சி. கம்பார்ட்மெண்ட் என்ற முக்கியத்துவமே இல்லாமல் அங்கும் இங்கும் அலைமோதி தலையில், இடுப்பில் சுமந்த கூடையுடன் விற்பனை செய்யும் ஏழை விற்பனை மகளிர் ;

வடை, பஜ்ஜி எல்லாம் எந்த எண்ணெயில் பண்ணினார்களோ, கொய்யாப்பழத்தை அலம்பாமலேயே எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட்டாள் ரமா, சிறு வயதில் அவளே இதையெல்லாம் அப்போது இப்படித்தான் சாப்பிட்டிருக்கிறாள் என்பதை மறந்து!

“இவர்கள் எல்லாம் எப்படி வீட்டை விட்டு ரயிலில் வெகுதூரம் டிக்கட் இல்லாமல் சென்று விற்பனை முடிந்து எந்த ரயிலில் திரும்பவும் ஊர் திரும்புவர்” என்று ரமா யோசனை செய்து கொண்டிருக்கும்போதே அவர்கள் கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த எதிர் ரயிலில் ஏறி மீண்டும் அங்கும் விற்பனை செய்து கொண்டே சொந்த ஊர் அடைந்து காணாமலானார்கள். “இன்க்ரீடிப்பிள் இந்தியா” என்று ரமா மனதுக்குள் உச்சரித்துக்கொண்டாள்.

மயிலாடுதுறை சென்று ஒரு காரில் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்திற்கு வரக்கூடிய விருந்தினருக்கு தேவையான ஹோட்டல் ரூம்கள், அவர்கள் சாப்பாடு, போன்றவற்றை பேசி முடித்துக்கொண்டு புரோகிதர் ஆபிஸ் சென்றனர்.

வழக்கம்போல எங்கும் ரமாதான் அனைத்தையும் முன்னெடுத்து உரையாடினாள். ரமா ஒரு ஆல்பா பெண்மணி என்பதால் முரளிக்கு அவ்வளவாக வேலையில்லை. போதாக்குறைக்கு அவருக்கு காது கேட்கும் திறன் மிகவும் குறைவு.

ரமா புரோகிதரிடம் அனைத்தும் பேசிகொண்டிருக்கும் போது அந்த ஆபீஸ் சுவரில் கடவுள் மறுப்பு திராவிட தலைவரின் பீமரத சாந்திக்கு (எழுபதாவது பிறந்த நாள்) அவரது துணைவியார் வந்து கலந்து கொண்ட வைபவத்தை அங்கிருந்த போட்டோ மூலமாக அவதானித்துக்கொண்டிருந்தார் முரளி.

அனைத்தையும் நல்லபடியாக செய்துவிட்டு ஒரு காரில் மீண்டும் மயிலாடுதுறை திரும்பியபோது இரவு மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் வரும்;

ஏறிப்படுத்தால் ஏ. சி. சுகத்தில் ஜாம் ஜாமென்று தூங்கி காலை ஏழு மணி அளவில் எழும்பூரில் இறங்கலாம் என்று இருவரும் நிம்மதியுடன் “வெய்ட்டிங் ஹாலில்” அமர்ந்து மொபைல் போனில் யதேச்சையாக ரிட்டன் டிக்கட் ரிஸர்வேஷன் தரவுகளைப்பார்த்தபோது இடி தாக்கியது போல அப்படியே உறைந்து அமர்ந்தாள் ரமா.

மனைவியின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புருவத்தை உயர்த்தி முரளி வினவ, ரமா தன் செல்பேசியை முரளியிடம் கொடுத்து சென்னை செல்லும் டிக்கட் விபரங்களை பார்க்கும்படி சைகை செய்தாள்.

முரளியும் டிக்கட் விபரங்களை பார்த்துவிட்டு சரியாகத்தான் இருக்கிறதே என்பதுபோல் மனைவியைப்பார்த்தார். திக்பிரமையிலிருந்து மீண்ட ரமா, ரயில் பயணத்தேதியை பார்க்கும்படி தழுதழுத்த குரலில் முரளியிடம் உளறினாள். முரளியும் மீண்டும் ரயில் நம்பர், கோச் நம்பர், பெர்த் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்று சந்தேகமாக பதிலளித்தார்.

“தேதியைப்பாருங்க” என்று தடுமாறினாள் மனைவி. தேதியைப்பார்த்து விட்டு “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி, கரெக்ட்தானே? என்று வினவினார்.

ரமா குழறிய குரலில் “அதுதான் தப்பு!” “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி காலை சோழனின் கிளம்பி எல்லா வேலையையும் முடித்துவிட்டு இப்ப ஊர் திரும்ப இருக்கிறோம்! ஆனால் ராத்திரி பன்னிரெண்டு மணிக்குப்பின்னால் இருபத்தி ஆறாம் தேதி பிறந்து விடுமே?

“இருபத்தி ஆறாம் தேதி என்றுதானே நாம் ரிசர்வ் செய்திருக்கவேண்டும்! நம் டிக்கட் 25 என்று இருக்கிறது! நம் டிரெயின் நேற்று இரவே இங்கு வந்து இன்று காலை சென்னை போய்ச்சேர்ந்து விட்டது”!

“இன்று காலை நாம் சோழனில் கிளம்பும்போது பக்கத்து பிளாட்பாரத்தில் உழவன் நின்றுகொண்டிருந்ததை பார்த்தோமல்லவா? அப்போதிருந்தே என் மனசு சரியில்லை! எங்கோ ஏதோ தப்புன்னு மனசு தத்தளித்தது “என்று விரக்தியுடன் முடித்தாள் ரமா.

இப்பொழுது முரளிக்கு ஷாக்! வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் இரவு 12 மணிக்குமேல் அடுத்த நாள் பிறந்து விடும் என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்திக்கொண்டு பிளைட் ரிஸர்வேஷன் செய்யும் நாம் உள்ளூர் ரயில் பதிவு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சியடைந்தார் முரளி.

இத்தனைக்கும் ரமாதான் “சோழன்”, “உழவன்” என்று பல ரயில்களைப் பார்த்துப் பார்த்து டிக்கட் பதிவு பண்ணினாள். முரளியும் அனைத்தையும் மேம்போக்காக பார்த்து விட்டு “சரியாக இருக்கிறது” என்று சொன்னவுடன் அவள் வங்கிக்கார்டில் பணம் செலுத்தி டிக்கட் பதிவை உறுதிப்படுத்தி க்கொண்டாள்.

தவறு என்பது இருவர் மீதுமே!

ரமா டென்ஷன் குரலில் “இதற்குத்தான் நான் செவ்வாய்க்கிழமையன்று இது போன்ற முக்கியமான விஷயங்களை செய்வதில்லை” என்று விரக்தியுடன் அலுத்துக்கொண்டாள். முரளிக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.

வீட்டு காரியங்களாகட்டும், இந்தியாவில் ஆபீஸ் செக்ரேட்டரி பணியாகட்டும், முரளி வெளிநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தபோது, ஒற்றை மனுஷியாக மகன் இன்ஜினியரிங் அட்மிஷன், அவன் ஆஸ்திரேலியா மேல்படிப்பு, அவனுக்கு வரன் தேடும் படலம், பின்னர் திருமண ஏற்பாடுகள், பின்னர் மெல்பெர்னில் பேரன் பிரசவம் என்று சிங்கக்குட்டியாக அனைத்தையும் தனி ஒருத்தியாக சாதித்திருக்கிறாள். ரமா ஒன் உமன் ஆர்மி!

முரளி வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்பி, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் தேனிலவு போன்ற விடுமுறையில் இந்தியா வந்து திரும்புவதோடு சரி!

இருந்தாலும் “மென் ஆர் ப்ரம் மார்ஸ், விமன் ஆர் ப்ரம் வீனஸ் ” (Men are from Mars, Women are from Venus) என்பதுபோல, செவ்வாய்க்கிழமை என்றாலே சற்று டென்ஷன்தான் அவளுக்கு!

அன்று பயணப்பதிவு செய்யும்போது, “இன்று செவ்வாக்கிழமை, வேண்டாம், நாளை புக் பண்ணலாம் ” என்று அவள் சொன்னதை மீறி அவளை வற்புறுத்தி ரிசர்வ் செய்ததை நினைத்து இப்போது வருத்தப்பட்டார் முரளி.

வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், பயணம் செய்யும்போது இது போன்ற தடாலடி அனுபவங்கள் நிறையப்பெற்றிருந்ததால், முரளி உடனடியாக ரெகவரி ஆகி செல்பேசி மூலம் இன்னும் சிலமணிநேரங்களில் வரவிருக்கின்ற , திங்கள்கிழமை மட்டும் ஓடும் அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் நல்ல வேளையாக அதே மூன்றடுக்கு ஏ. சி. யில் இடம் கிடைத்து வங்கி கார்டில் பணம் அனுப்பி டிக்கட் பெற்றபிறகுதான் ஏதோ அவள் மனசு கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.

இருந்தாலும், வழியெல்லாம், அனாவசியமாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீணாகிவிட்டதே என்ற கவலை அவள் முகத்தில்.

சில நேரங்களில் சில தவறுகள்! அந்தகாயம் ஆற சென்னை வாழ்க்கையில் இன்னும்சில மாதங்களாகும்.

ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகளில் செல்லாமல் ஆட்டோவில் சென்றும் இன்னும் சில விஷயங்களில் சிக்கனமாக இருந்தும் அந்த உழவன் எக்ஸ்பிரஸ் ஆயிரத்து ஐநூறு ரூபாயை மீட்க முடிவு செய்தாள் ரமா.

– மார்ச் 2024

Print Friendly, PDF & Email

1 thought on “செவ்வாய் தோஷம்

  1. வணக்கம். ஜெ.ஜெயகுமார் அவர்களின் செவ்வாய்தோஷம் கதை மிக நல்ல வகையில் பயண அனுபவத்தோடு பகுத்தறிவுச் செய்தியையும் பதிவு செய்தது படைப்பாளிக்கும் பதிவிட்ட தங்கட்கும் வாழ்த்தும் வணக்கமும்
    வளர்கவி கோவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *