கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,949 
 
 

‘மதுரை 20 கி.மீ’. ஊரை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தான் செல்வம். காலையில் வாங்கிய அடி இன்னும் முதுகில் வலித்தது. அல்லது வெறும் தோன்றலா தெரியவில்லை. ‘மதுரையில எறங்கி ஊருக்குத் திரும்பப் போயிரலாமா’ யோசித்தான். சட்டை பாக்கெட்டில் இருந்த காசை எடுத்து கால்சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு பேருந்தின் சன்னலோரம் தலை சாய்த்தான். விழிக்கும்போது தாம்பரம் வந்திருந்தது.

விடியலிலேயே பரபரப்பாகிவிட்ட சென்னையை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கையில் இங்கே காணாமல் கரைந்து போய்விடலாம் எனும் நம்பிக்கை வந்தது. ‘நீ எனக்குப் பொறந்தவன்னா இப்டி செஞ்சிருப்பியால?’ அப்பாவின் கோபக் குரல் வாகன சத்தத்தில் கரைந்து போனது.

“தம்பி கோயம்பேடு வந்துடுச்சு. தனியாவா வந்த?” பக்கத்து சீட்காரர் தலைவாரிக் கொண்டே கேட்டார்.

“இல்ல. அண்ணாச்சி பின்னால இருக்காவ.” பொய் சொல்வதே இனி பாதுகாப்பானது.

“இதுக்கு முன்னால சென்னை வந்திருக்கியா?”

“இல்லண்ணாச்சி இதான் மொதோ தடவ.”

சாயங்காலம்வரை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றினான். ‘மனம் மாற்னா ஊருக்கு பஸ் ஏறிரலாம்’.

மனம் மாறுவதாயில்லை. அப்பாவை நினைக்க நினைக்க இன்னும் தூரமாய் ஓடிப்போகத் தோன்றியது.

“தம்பி. என்னடா காலைலேந்தே இங்க சுத்துற.” விழித்துப் பார்த்தான். லத்தியால் தட்டியபடி போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.

“சார். இங்கன ஓட்டல்ல வேல பாக்கேன். இன்னைக்க்கு லீவு அதான்.”

“திருநெல்வேலியா?”

“நார்கோயில்.”

“பஸ்ஸ்டாண்ட்ல சுத்தாத. ரூமுக்கு போய் சேரு.”

பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தான். முதலில் வந்த பஸ்ஸில் ஏறினான்.
“பஸ் எங்க போது?”

கண்டக்டர் முறைத்தார். “ஒனக்கு எங்கப் போகணும்?”
“பஸ் ஸ்டாண்ட்”

“எஸ்டேட்டா?”

“ஆமா.” அவர் என்ன சொல்லியிருந்தாலும் ‘ஆமா’ சொல்லியிருப்பான்.

அம்பத்தூர் எஸ்டேட்டை அடையும்போது இருட்டியிருந்தது.

காலையில் பெரிய ஓட்டலில் சாப்பிட்டதில் ஐம்பது ரூபாய் காலியாகியிருந்தது. சின்ன ஹோட்டலில் இரவு சாப்பாடு. ‘மதுரை முனியாண்டி விலாஸ்’.

இரவு பயமுறுத்த ஆரம்பித்தது. ‘வீடு எத்தனை பாதுகாப்பானது?’

கொஞ்ச தூரம் நடந்துவிட்டு ஹோட்டல் பக்கம் திரும்பி வந்தான். ‘வீட்டுக்குப் போனா இன்னும் பயங்கர அடி கிடைக்கும்.’ பீரோல இருந்த காசு 3000த்தை எடுத்து வந்திருந்தான். ‘இப்ப போனா 2000த்த திரும்பத் தந்துரலாமோ?’

சாலையில் போக்குவரத்து குறைந்திருந்தது. கடைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. ‘மணி ரெம்ப இருக்குமோ?’

முனியாண்டி விலாஸ் மூடப்பட்டது.
“அண்ணே மணி எத்தன?”

“11:30”

ஹோட்டல் வெளியே இருவர் பாய் விரித்துக்கொண்டிருந்தனர்.
“அண்ணாச்சி. இங்க வேல கெடைக்குமா?”

“எந்த ஊருடா தம்பி?”

“நார்கோயில்.”

“இங்க என்ன பண்ற?”

“ம்… எனக்கு அப்பா அம்மா இல்லண்ணாச்சி.” தான் தனிமனிதன் என்பதில் ஒரு சுகம் தென்பட்டது. “ஊர்ல ஒரு கடையில வேல பாத்தேன். இங்க வந்துர்லாம்னு வந்துட்டேன்.”

பொய் சொல்வதுதான் இனி பாதுகாப்பானது.

“என்ன வேல பாத்த?”

“சிப்ஸ் கட இருக்குல்லா? அங்க பார்சல் கட்றது?” சரளமாக தனக்கு பொய் சொல்லவருகிறது என்பதில் தைரியமடைந்தான்.

“பேரென்ன?”

“செல்வம்.”

“ஆங்?”

“செல்வமண்ணாச்சி.”

“இங்க எடுபிடி வேலதான் கெடைக்கும்.”

“போதும் அண்ணாச்சி.”

“காலைல மொதலாளிட்ட சொல்லிட்டு சேந்துக்க.”

“சரி. இப்ப இங்கன ஒறங்கவா?”

“இப்டி படுத்துக்க.” தலைக்கு சுருட்டி வைத்திருந்த லுங்கியை தரையில் விரித்தார்.

அதற்குப் பிறகான உரையாடல்களில் பொய்களால் தனக்கென ஒரு புது அடையாளத்தை உருவாக்கிக்கொண்டான். அந்தப் புது பொய்யான செல்வத்தின் அப்பா சிறு வயதிலேயே இறந்திருந்தார். அப்பாவும் நடராஜன் மாமாவப் போல பனை ஏறும் தொழில் செய்தவர். அம்மா செல்வி அத்தையப் போல தீக்குளித்தாள். பள்ளித்தோழன் மகேசப் போல இவனும் தாத்தா வீட்ல கஷ்டப் பட்டு வளர்ந்திருந்தான். வளனைப் போல நாகர்கோவில் கடையில் வேலைபார்த்திருந்தான். இன்னும் ஊரில் உள்ளவர்களின் கதையெல்லாம் தன் கதையாக்கிக்கொண்டான்.

மறுநாள் முதல் ஹோட்டலில் வேலை. வேலை வாங்கித்தந்த சக்தி அண்ணனிடம் மீதமிருந்த பணத்தை கொடுத்து வைத்தான்.
“டேய் அண்ணாச்சின்னாத அண்ணேன்னு சொல்லு. நான் அண்ணாச்சியில்ல.”

“எங்கூர்ல பெரியாள அப்டித்தான் அண்ணாச்… அண்ணே கூப்டுவோம்.”

“ஒனக்கு மொதல்ல பேசச் சொல்லித்தரணும்போலியே.”

காலை ஐந்துமணிக்கு எழுந்து காய்கறி வெட்டிவிட்டு. ஒரு குளியல். 7 மணி முதல் சமையல்கட்டில் உதவி.

“சக்தி, சின்னப் பசங்கள வேலைக்கு சேக்கக்கூடாது. நீ சொல்றேன்னுதான் சேத்தேன். கிச்சன உட்டு வெளிய அவன் தல காட்டாமப் பாத்துக்க.” முதலாளி தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மாலை 4 முதல் 5 வரை ஓய்வு. மீண்டும் 5 துவங்கி இரவு 11 வரை சமையல் கட்டில். வாரம் ஒருநாள் விடுமுறை. தினம் 11 மணிக்கு காலைஉணவு 4 மணிக்கு மதிய உணவு 11 மணிக்கு இரவு உணவு. உணவு விடுதிகளில் வேலை பார்ப்பவர்கள் ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை என்பதை புரிந்துகொண்டான்.

வேலை கடினமாக இருந்தாலும் வீட்டுப்பாடம் எழுதுவதைவிட எளிதாய் தோன்றியது செல்வத்துக்கு.

ஒரு வாரத்திலேயே வீட்டை முற்றிலும் மறந்திருந்தான். அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் மறக்கவில்லை. “நீ எனக்குப் பொறந்திருந்தேன்னா..”

இருவாரங்களில் சக்தியிடம் பலமுறை அடி வாங்கியிருந்தான். வாச்மேன் சிவா சொன்னார்,”சக்திட்ட அடிவாங்கிட்டியா? இனி வளந்துடுவ. அவனுக்கு புடிச்சாத்தான் அடிப்பான். புடிகலேன்னா பேசக்கூட மாட்டான்.”

மூன்று வாரங்களில் புது வாழ்க்கை இயல்பாகியிருந்தது. பக்கத்து ‘அண்ணாச்சி’ கடை பழக்கமாகிவிட்டது.
“அவருக்கு ஊரு நாமக்கல்லாம். ஏண்ணே அவ்வாள அண்ணாச்சீங்கிய?”

“இங்க மசாலா சாமான் விக்கிறவங்களையெல்லாம் அண்ணாச்சின்னுதான் சொல்றாங்கடா.”

தியேட்டருக்கு தனியே போகப் பழகிக்கொண்டான். இரவுக் காட்சிகளில் முன்வரிசைகள் முழுவதும் இவனைப்போன்றவர்களால் நிரம்பியிருந்தது.
“எங்க கடைக்கு வேலைக்கு வாரியால?” திருநெல்வேலிக்கார அண்ணன் கேட்டான்.

“சக்தி அண்ணன் உடாது.” பெருமிதமாய் பதிலளித்தான்.

புதுப்புது நண்பர்களும், அவர்களின் கதைகளும் சுவாரஸ்யம் தந்தன. நாட்கள் கடப்பதையே உணரவில்லை செல்வம்.

அன்று வழக்கம்போல சமையல்கட்டில் நின்றுகொண்டிருந்தான். மதிய சாப்பாடு முடிந்துவிட்டிருந்தது.
“டேய்…” சக்தி அழைப்பது கேட்டது. சமையல் கட்டிலிருந்து தலை வெளியே வரக்கூடாது எனும் சட்டத்துக்குட்பட்டு உள்ளிருந்தே குரல் தந்தான்.
“அண்ணே…”

“கல்லாவுக்கு வாடா.” சமையல் கட்டிலிருந்து எட்டிப்பார்த்தான். ஹோட்டலில் ஒரே ஒரு கஸ்டமர் உட்கார்ந்திருந்தார். கல்லாவுக்கு வந்தான்.

ஹோட்டல் கதவருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். கசங்கி அழுக்கான சட்டை, உட்காரும் இடத்தில் வட்டமாய் அழுக்கு படிந்த வேட்டி. கையிடுக்கில் வியர்வைபட்டு தோலுரிந்த தோல்பை. கலைந்து, பல நாளாய் வெட்டப்படாத தலைமுடி. பின்னாலிருந்து செல்வத்தால் அவரை முழுதாய் பார்க்க இயலவில்லை.

“அண்ணாச்சி. இவனா பாருங்க?” சக்தி அவரைப் பார்த்துக் கேட்டான். வந்தவர் திரும்பி செல்வத்தை பார்த்தார்.

செல்வம் அவரை பயத்துடன் பார்த்தான்.

தடுமாறி அடியெடுத்து நெருங்கி வந்து செல்வத்தின் தோளில் கையை வைத்தார். இப்போது அவர் கண்களில் நீர் நிரம்பியிருந்தது செல்வத்துக்கு தெளிவாகத் தெரிந்தது. வேகமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டார். கண்ணீர் வழிந்தோடியது.

“ஆ..ஆ…ஐயோ ஆ”

கையிலிருந்த தோல்பை கீழே விழுந்தது. அவர் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

“ஆ… அம்மா.. ஆ.” சத்தமாய் அழுதுகொண்டே மண்தரையென்றும் பாராமல் கீழே அமர்ந்தார், வீழ்ந்தார் என்றே சொல்லலாம்.

செல்வம் அவரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணே …” சக்தி அவரை அழைத்தான்.

“ஐயோ…ஆண்டவா.” தொடர்ந்து தலையில் அடித்துக்கொண்டார்.

“டேய் சக்தி என்ன நடக்குது இங்க? ஆள் யாரு?” வெளியே போயிருந்த கடை முதலாளி திரும்பிவந்தார்.

“சார் இவரு..” சக்தி தயங்கினான். “பையன் ஊர்லேந்து ஓடி வந்துட்டானாம். நம்ம செல்வத்தோட பேரச் சொன்னாரு அதான்.. இங்க…”

“சார் எந்திரிங்க. இங்க பெஞ்சல் உக்காருங்க.” முதலாளி அவரை எழுப்பி பெஞ்சில் உட்கார வைத்தார்.

செல்வத்தை காட்டி,”நம்ம பையனா சார்?” என்றார்.

வந்தவர் அழுகையை நிறுத்தவில்லை. கைகளில் இயலாமையால் ஏதேதோ செய்கைகள் செய்தார்.
“டேய் இது யாருடா?” செல்வத்தை பார்த்து கேட்டார் முதலாளி.

செல்வம் வந்தவரையே முறைத்துக்கொண்டிருந்தான்.

“டேய் சார் கேக்குறார்ல? சொல்லு.” செல்வம் கையை ஓங்கினான்.

“தம்பி அவன அடிக்காதப்பா”. புதியவர் அழுகைக்கு மத்தியில் பேசினார்.

செல்வத்தின் கண்கள் பனித்திருந்தன.

“சார் எனக்கு அப்பவே சந்தேகம். இவன் ஓடிதான் வந்திருப்பாண்ணு. சரி எங்கயாவது போய் என்னதும் ஆயிரக்கூடாதேண்ணுதான் இங்க சேத்தேன். சக்தி சொன்னேனேப்பா மாத்து துணியில்லாம வந்திருக்கான் இவன் ஓடிதான் வந்துருக்கான்னு.” முதலாளி சக்தியை முறைத்தார்.

“சார். இவன் என் பையன் இல்ல சார்.” விசும்பலோடு சொன்னார் புதியவர். எல்லோரும் அமைதியாயினர். “இவனில்ல. எம் பையன் ஒரு மூணு மாசத்துக்கு முன்னால நான் அடிச்சிட்டேன்னு ஓடி வந்துட்டான். ஐயா. எம் புள்ளையத் தேடி நான் போகாத எடமேயில்ல. மெட்ராஸ்ல இருக்க கடையிலெயெல்லாந் தேடிட்டேன்யா. சுத்தி சுத்தி என் உயிரெல்லாம் போச்சு. ஐயோ எம் புள்ள எங்க கடந்து கஷ்டப்படுதோ? எம்புள்ள உசுரோட இருக்கா இல்லியாண்ணே தெரியலியே. ஐயோ.” மீண்டும் குரலெடுத்து அழுதார்.

“ஒரு கொறையும் வச்சதில்ல எம் புள்ளைக்கு. ஒருநா பட்னி கெடந்ததில்லையே. அவன் எப்டி சார் தனியா…? ஐயோ அவன் ஆத்தா புள்ளைய பறிகுடுத்துட்டு சாவக் கெடக்கா. அவன் தங்கச்சி ரெண்டும் அழுதுட்டே இருக்குங்க. ஊரே துக்கத்துல கெடக்குது. ஒருநாளும் இல்லாம அண்ணைக்கு அடிச்சுட்டேனே. பாவி.. பாவி.” தலையில் அழுந்த அடித்துக்கொண்டார்.

பெரியவர்கள் யாரும் இப்படி அழுது பார்த்ததில்லை செல்வம். ஹோட்டலின் முன்பாய் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. இவர் எதற்காக அழுகிறார் என்பதை புரிந்துகொள்ள அதிக நேரம் தேவைப்படவில்லை. பெருந்துக்கங்கள் சந்தோஷங்களைப் போலவே விரைவில் தொற்றிக்கொள்கின்றன.

“எம் பையம்பேரு செல்வன் தம்பி. இந்தப் புள்ள யார் பெத்த புள்ளையோ?” சக்தியை பார்த்து,”தம்பி நீங்க செல்வம்னு சொன்னதும் எம் பையன் பேரத்தான் தப்பா சொல்றீங்கன்னு நெனச்சேன். சாகக் கொடுத்தாலும் போகக் கொடுக்கக்குடாதுன்னு சொல்லுவாங்க. ஐயோ என் புள்ளைய எங்க போயி தேடுவேன்”

“சார் அழாதிங்க. ஒண்ணும் ஆகாது. பையன் வந்துருவான்.” முதலாளி ஆறுதலாய் சொன்னார். “சக்தி தண்ணி குடுப்பா. சார் இங்க சாப்பிடுங்க. போலீஸ்ட சொல்லியாச்சா?”

அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பியபின்தான் செல்வத்தை தேடினான் சக்தி.

செல்வம் கோயம்பேட்டிலிருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தான்.

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *