செல்லாக்காசு!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 8,257 
 
 

அன்று திங்கட்கிழமை! செல்வம் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கையில் அவன் மனைவி லதா ஆரம்பித்துவிட்டாள். என்னங்க! பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்? நீங்க பாட்டுக்கு கிளம்பிப் போனா எப்படி? நேத்தே சொன்னேன் இல்லை?

செல்வம் அமைதியாக லதாவை பார்த்தான்! எவ்வளவு? என்றான்.

ரெண்டுத்துக்கும் சேர்த்து இருபத்தி இரண்டாயிரம் ஆவுது?

என்னது?

ஏன் இப்படி மலைச்சி போய் நிக்கறீங்க? நாம என்ன உங்க ப்ரெண்ட் மாதிரி இண்டர்நேசனல் ஸ்கூல்லயா நம்ம பசங்களை சேர்த்து இருக்கோம்? சாதாரண மெட்ரிகுலேசன் ஸ்கூல்தான்! இதுக்கே இப்படி திகைச்சு போய் நின்னா எப்படி? அப்புறம் சொல்ல மறந்துட்டேனே? மளிகை தீர்ந்து போச்சு! பால்காரன் நேத்தே பணம் கேட்டான்.

செல்வம் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்! அம்மா தாயே! இன்னும் எதாவது பாக்கி இருக்கா?

இருக்கு! ஆனா இதுக்கே இங்கே வழியைக் காணோம்! அவனவன் லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறான்! நீங்க என்னடான்னா? சம்பளத்துக்கும் வழி இல்லை! கிம்பளமும் வாங்க மாட்டேங்கிறீங்க! நல்லா பாத்து வச்சார் எங்க அப்பா மாப்பிள்ளையை! வருவாய்த்துறைடீ! நல்ல வருமானம் வரும்னு! என்று நொடித்தாள்.

என் மாத வருமானமே ஒரு இருபத்தி நாலாயிரம்தான் வரும்! அதில் பிடிப்பு எல்லாம் போக கையில் ஒரு இருபத்தி சொச்சம் வரும்! இவள் இந்த மாதம் சொல்லும் கணக்கை பார்த்தாள் கையை கடிப்பது என்ன? கடித்து விழுங்கியே விடும் போல! நான் திகைத்து நிற்பதை பார்த்த அவள் என்ன அப்படி இஞ்சி தின்ன குரங்காட்டம் முழிக்கிறீங்க? நாளைக்குத்தான் ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள்! நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது பணத்தை ஏற்பாடு பண்ணுங்க! என்றாள்.

நான் மவுனமாய் வண்டியை ஸ்டார்ட் செய்து அலுவலகம் கிளம்பினேன். அவள் சொன்னது போல வருவாய்த்துறைதான். ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவிதான். லஞ்சம் புரண்டோடும் துறைதான். ஆனால் இதுவரை நான் ஒரு பைசா கூட கைநீட்டி வாங்கியது கிடையாது. நியாயமான கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து விடுவேன். அதே சமயம் யாராவது காசு பணம் என்று வந்து நின்றால் துரத்தி விடுவேன்.

வேலையில் சேரும் போதே என் தந்தை கூறிய வார்த்தைகள்! வருவாய்த்துறை! கவனம் இருக்கட்டும்! ஜாக்கிரதையா நடந்துக்கோ! காசு பணத்துக்கு ஆசைப்பட்டியோ! நீ நல்லா இருந்தாலும் பின்னாலே உன் பசங்க கஷ்டப்படும்! யாருடைய வயித்தெரிச்சலையும் கொட்டிக்காம ஒழுங்கா வேலை பண்ணு என்று அறிவுரை கூறினார்.

என்னுடன் பதவியில் சேர்ந்தவர்கள் எல்லாம் எடுத்ததெற்கெல்லாம் பணம் வாங்கி கொண்டு சம்பளத்தை விட கிம்பளம் இரண்டு மடங்கு வாங்கி வீடு மனை என்று வாங்கி குவித்து விட்டனர். அலுவலகத்தில் எனக்குப் பெயரே செல்லாக் காசு! யோவ்! அவன் கிட்ட ஏதாவது இல்லீகல் விசயத்தை கொண்டு போய் மூக்குடைபட்டு வந்து நிக்காதீங்க! பையன் காந்தி வீட்டுக்கு பக்கத்துவீடு! நேர்மை நியாயம் நீதின்னு தத்துவம் பேசுவான். அவனால நம்ம பொழப்பும் நாறுது என்று பேசுவர்.

மற்றவர்கள் தவறை நான் என்ன செய்ய முடியும்! முடிந்தவரை சொல்லிப் பார்ப்பேன்! என்னிடம் ஏதாவது கையெழுத்துக்கு வரும்போது அந்த தகவல் சரியா என்று பார்ப்பேன் சரியில்லை என்றால் மறுத்து நிராகரித்து அனுப்பி விடுவேன். இதனாலேயே பல முறை பல இடங்களுக்கு பந்தாடப்பட்டு கடைசியில் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

சிந்தனை செய்தபடியே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். நாளை ஸ்கூல் பீஸிற்கு என்ன செய்வது? என்ற சிந்தனையில் வேலை ஓடவே இல்லை! அப்போதுதான் அந்த பெரியவர் அங்கு வந்து சேர்ந்தார். என்னை பார்த்து வணக்கம் சொன்னார். என்னங்க என்ன விசயமாய் வந்திருக்கீங்க? என்று கேட்டேன்.

அவர் பையினுள் கை விட்டு சில ஆவணங்களை எடுத்துக் காண்பித்தார். இது நம்ம நிலங்க! பக்கத்துலதான் அந்த கான்வெண்ட் இருக்குது. நம்ம நிலத்தை கேட்டாங்க! நமக்கு உழுதாதாங்க சோறு! சோறு போடற தாயை விற்க முடியாதுன்னு சொல்லிட்டேங்க! இதோ பாருங்க நான் நாற்பது வருசமா அந்த நிலத்துக்கு கிஸ்தியெல்லாம் கட்டி வரேங்க! அவங்க திடீர்னு வந்து அவங்க நிலம்னு சொல்றாங்க!

அது எப்படின்னு கேட்டதுக்கு நிலத்தை நான் வித்திட்டதா சொல்றாங்க? நீங்கதான் விசாரித்து சொல்லனும். என் தாயை எனக்கு காப்பாத்திக் கொடுக்கணும் என்றார் கண்கலங்க அவரது ஆவணங்களை சரிபார்த்தேன். கடைசியாக இந்த ஆண்டு வரை கிஸ்தி எல்லாம் செலுத்தி இருந்தார். தாய்பத்திரம் சொத்து ஆவணம் எல்லாம் சரியாக இருந்தது. எல்லாம் சரியாக இருக்கும் போது அவர்கள் எப்படி நிலத்தை தனது என்று சொல்கிறார்கள்?

நான் விசாரிக்கறேன் பெரியவரே! கவலைப் படாதீங்க! நாளைக்கு நான் உங்க இடத்துக்கு வந்து பார்க்கிறேன் என்றேன். அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.

அன்றைய பொழுதை எப்படியோ கழித்தேன். இரவு வீடு திரும்பியதும் லதா நச்சரித்தாள்.

என்ன பீஸீக்கு பணம் ரெடி பண்ணிட்டீங்களா?

பணமா? அது என்ன மரத்துலயா காய்க்குது? பறிச்சு எடுத்து வர? ஆமா! நம்ம பசங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சா என்ன? இப்ப அங்கேயும் இங்கிலீஷ் மீடியம் வந்துருத்து இல்லே! என்றேன்.

என்னது கவர்மெண்ட் ஸ்கூலா? என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை கேலி பண்ணுவாங்க?

அவங்க கேலி பண்ணா என்ன? வேலை மட்டும் கவர்மெண்ட் வேலை வேணும்னு கேக்கறாங்க படிப்பு மட்டும் கவர்மெண்ட் ஸ்கூல்ல வேணாமா? நம்ம தலையிலே நாமே மண்ணை அள்ளி போட்டுக்கறோம்! நாம எல்லாம் இப்படி கான்வெண்ட் மோகம் கொண்டு அலையறதாலேதான் அவன் நம்மகிட்ட கொள்ளை அடிக்கிறான்.

இந்த வியாக்கியானத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை! பணம் கிடைச்சுதா இல்லையா?

இல்லை என்று தலையசைத்தேன்!

துப்புக்கெட்ட மனுசன்! தானும் பொழக்க மாட்டாரு! மத்தவங்களையும் பொழைக்க உட மாட்டாருன்னு உங்க ப்ரெண்ட் சொன்னது சரியாத்தான் இருக்கு!

அவன் ஏன் இங்க வந்தான்? அதான் நம்ம பசங்க படிக்குதே ஸ்கூலு! அந்த ஸ்கூலை ஒட்டினாப்பல நிலம் இருக்காம்! அத அந்த ஸ்கூல் காரங்க ஆக்ரமிப்பு பண்ணிகிட்டு இருக்காங்கலாம்! நிலத்து ஓனர் அப்ஜெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்காராம்! அது உங்க சரவுண்டிங்கல்ல தான் வருதாமே! பார்த்து கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி கான்வெண்ட்டுக்கு சாதகமா நடந்துகிட்டா நம்ம பசங்களுக்கு இந்த வருசம் ப்ரியாவே சீட் தருவாங்களாம்!

ஓ! அப்படியா சங்கதி! என் பசங்களுக்கு ஒரு அப்பாவியை அடிச்சி கல்வி வேணாம்! நான் ரூல்ஸ் படிதான் நடப்பேன்.

தானாவும் பொழைக்க தெரியாது! சொல்லிக் கொடுத்தாலும் செய்யமாட்டீங்களா?

முடியாது! நான் நேர்மையா நடந்துக்கிட்டாதான் நாளைக்கு நம்ம பசங்க நல்லா இருப்பாங்க!

இப்படி நீங்க முரண்டு பிடிச்சிகிட்டு நின்னா அவங்க எதிர்காலம் பாழாத்தான் போகும்!

நான் கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன்! கெட்டா போயிட்டேன்! நல்லாதான் இருக்கேன்! வறட்டு கவுரவுத்தாக என் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன்! அந்த பெரியவர் வந்து கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கார்! நான் அவர் கொடுத்த எல்லா ஆவணங்களையும் பார்த்துட்டேன்! நாளைக்கு லேண்டை பார்க்க வேண்டியதுதான் பாக்கி! ஆல் மோஸ்ட் எல்லா விசயமும் அந்த பெரியவருக்குத்தான் சாதகமா இருக்கு! அதை மாத்தமுடியாது.

பாவி மனுசா! பிள்ளைங்களோட எதிர்காலத்தை பாழடிக்கிறியே!

நான் மவுனமாய் திரும்பி படுத்தேன்.

மறுநாள், அந்த பெரியவரின் நிலத்தை போய் பார்த்தேன்! அந்த பள்ளி விதி மீறி அவருடைய நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டு இருப்பது அப்பட்டமாய் தெரிந்தது. அவருடைய புகாரில் நியாயம் இருந்தது. எனவே அவருக்கு சாதகமாய் ரிப்போர்ட் தயாரித்து அது அவருடைய நிலம்தான் என்று சான்று கொடுத்துவிட்டேன்.

அந்த பெரியவர் என் காலில் விழ வந்தார். ஐயா! நீங்க என் தெய்வம்! என் தாயை காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க! உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ண போறேனே தெரியலையே! என்றார் கண்கலங்கி!

இதோ பாருங்க பெரியவரே! நான் என் கடமையத்தான் செஞ்சு இருக்கேன்! நீங்க கொடுத்த ரிஜிஸ்டர்ஸை வச்சு நிலம் உங்களுடையதுன்னு விசாரிச்சு உண்மைய சொல்லியிருக்கேன்! அவ்வளவுதான்! நீங்க பயப்படாதீங்க! இன்னும் ரெண்டு நாள்ல அவங்க இடத்தை காலி பண்ணலைன்னா திரும்பவும் ரிப்போர்ட் பண்ணி அவங்க அத்து மீறலை கிளியர் பண்ணிடலாம்! என்று சொல்லி அனுப்பினேன்.

வீட்டிற்கு வந்தேன்! தெருவே பரபரப்பாக இருந்தது! கும்பல் கும்பலாய் கூடி இருந்தார்கள்! அந்த தெருவில் தான் என் சக பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டின் முன் ஏகப்பட்ட கும்பல்!

என்ன ஆச்சு! ஏன் இப்படி கூடி இருக்கிறீங்க?

அந்த வீட்டுல ஒரு ஆர்.ஐ இருந்தாருல்ல!

ஆமா! என் கூடத்தான் ஒர்க் பண்றாரு!

அவரை ஒரு லாரிக்காரன் அடிச்சிட்டு போயிட்டான்! கை கால்ல எல்லாம் பலத்த அடி!

அட பாவமே! உள்ளே ஓடினேன்.

அங்கே கை கால் முகமெல்லாம் கட்டுக்களுடன் அந்த ஆர்.ஐ.

அவள் மனைவி புலம்பிக் கொண்டு இருந்தாள். எல்லாம் ஊர் சாபம்! எல்லாத்துக்கும் காசு காசுன்னு காசு மேல குறியா இருந்தீங்களே! பாத்தீங்களா? உங்களாலாலெ பாதிக்கப்பட்டவங்க சாபம் என்ன பண்ணுத்துன்னு! ஏதோ நல்ல காலம்! உசுரோட வந்தீங்களே! இனிமேயாவது திருந்துங்க! என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அங்கே என் மனைவியும் நின்று கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்தேன். ஓடி வந்து கட்டிக் கொண்டாள். நாளைக்கு நம்ம பசங்களை கவர்மெண்ட் ஸ்கூல்லேயே சேர்த்து விடலாங்க! என்றாள்!

நான் அவளை அர்த்தமுடன் பார்த்தேன்!

– இந்தக் கதை கொலுசு மின்னிதழ் டிசம்பர் 2017ல் பிரசுரமானது.

1993ல் எனது முதல் சிறுகதை கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. பின்னர் ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் 2011 முதல் தளிர் என்னும் வலைப்பூவில் (thalirssb.blogspot.com) எழுதி வருகின்றேன். பாக்யா, தி.இந்து. ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், கல்கி போன்ற இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள், குட்டிக்கதைகள் எழுதி வருகின்றேன். நன்றி!

Print Friendly, PDF & Email

1 thought on “செல்லாக்காசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *