1
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.
நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.
ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, ‘போதி’ மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.
பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.
குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.
பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.
சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.
பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.
பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார். பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.
இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.
2
அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.
“இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே” என்று நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.
அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.
செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, “வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.
“அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?” என்றார்.
“அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!” என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். ‘அவுக’ என்றது கடை முதலாளிப் பிள்ளையைத்தான்.
“தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?” என்று கேட்டாள்.
“எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு” என்று சிரித்தார் பிரமநாயகம்.
வழி நெடுக, ‘அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?’ என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.
“என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா” என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் – என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
3
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.
பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
வீட்டில் விளக்கில்லை. ‘உறங்கி இருப்பாள். நாளியாகலே…’ என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.
முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.
நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.
சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.
முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.
இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, “தண்ணி…” என்று கேட்டாள் செல்லம்மாள்.
“இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ” என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.
பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.
செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.
“நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?” என்றாள்.
பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.
திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.
செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. “அம்மா, அம்மா… நீ எப்போ வந்தே?… தந்தி கொடுத்தாங்களா…?” என்றாள்.
“ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?” என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும்.
“அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா … இவுங்க இப்படித்தாம்மா… என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப் போயிடுதாக… எப்ப ஊருக்குப் போகலாம்?… யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?… நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்… அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க.”
மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.
வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. ‘இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?’
மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.
நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.
செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.
என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, “என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.
பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.
“தலையை வலிக்கிறது” என்றாள் சிணுங்கிக் கொண்டே.
“மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.
“மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்” என்றார்.
“உம்” என்று கொண்டு கண்களை மூடியவள், “நாக்கை வறட்டுது; தண்ணி” என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.
“ஏந்திரியாதே; விளப்போறே” என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது” என்றாள்.
“பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது” என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், “உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?” என்றாள்.
“நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே” என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.
பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, “முருகா” என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.
பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.
அவர் திரும்பிவந்து “முருகா” என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.
“இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே” என்றார் பிரமநாயகம் பிள்ளை.
“மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது… சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை” என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
“அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?” என்றார்.
“வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்” என்றாள் செல்லம்மாள்.
“நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது.”
“ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது” என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.
மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.
“பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே” என்றாள்.
அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.
பல்லைத் தேய்த்துவிட்டு, “அப்பாடா” “அம்மாடா” என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.
பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, “பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே” என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க” என்றாள்.
“அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்” என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.
காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், “நீங்க என்ன சாப்பிட்டிய?” என்றாள்.
“பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்” என்றார்.
“வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?” என்றாள்.
“புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே!” என்று எழுந்தார்.
“அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்” என்றாள் செல்லம்மாள்.
வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.
அடுப்பங்கரையில் ‘சுர்’ ‘சுர்’ என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, “என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?” என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.
வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள்.
“போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர் வந்திருக்கிறார். ஏந்திரி” என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.
“இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்.”
“நீ ஏந்திரி” என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.
“நீங்க போங்க. நானே வருதேன்” என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.
வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.
“அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா, மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன்” என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.
“பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப் புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம் வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது” என்றாள் செல்லம்மாள்.
இந்தச் சமயத்தில் வெளியில், “ஐயா, ஐயா!” என்று ஒரு குரல் கேட்டது.
“என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு; நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா” என்று அனுப்பினார்.
“என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க” என்றாள் செல்லம்மாள்.
“அடெடே! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்” என்று மூட்டையை எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.
“விடியன்னையே மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு” என்று கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.
“எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன வெலையாம்?” என்றாள்.
“அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ” என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.
“கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்” என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.
வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.
4
அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.
அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.
“எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை” என்றாள் செல்லம்மாள்.
“உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்” என்றார் பிரமநாயகம் பிள்ளை.
அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. “கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?” என்றார்.
“எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்” என்று சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள்.
“இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்” என்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.
அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.
கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, “நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று வெளியே புறப்பட்டார்.
“சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது” என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.
அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும் விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.
அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார்.
வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால் கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.
அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. “ஸார்! உள்ளே யார் இருக்கிறது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.
“நல்ல சமயத்தில் வந்தீர்களையா!” என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.
“இப்போ என்ன?” என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது.
“ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்” என்றார்.
பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ‘ஸ்பிரிட்’ விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.
டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். “கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ” என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, “தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா; ஆஸ்பத்திரிதான் நல்லது” என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.
முன் தொடர்ந்த பிள்ளை, “எப்படி இருக்கிறது?” என்று விநயமாகக் கேட்க, “இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.
செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.
பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.
அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.
“தூ தூ” என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே” என்று கடிந்து கொண்டாள்.
“நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?” என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.
“நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.
“உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?” என்று மெதுவாகத் தடவிக்கொடுத்தார்.
“அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க” என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “அம்மையெப் பாக்கணும் போல இருக்கு” என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.
“நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன பிரமாதம்?” என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?
“ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க” என்றாள் செல்லம்மாள்.
“நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ” என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.
“வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி” என்றாள்.
“வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே வாந்தியெடுத்தது?” என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.
“நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது” என்றாள் மறுபடியும்.
“எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே” என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.
ஒரு விநாடி கழித்து, “பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்” என்றாள் செல்லம்மாள்.
“இதோ எடுத்து வாரேன்” என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.
“செல்லம்மா!” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.
பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.
“செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு” என்றார்.
“ஆகட்டும்” என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.
சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள்.
“ஏன், வெளக்கை…” – விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.
அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.
பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.
உடல்தான் இருந்தது.
வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன.
சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். “இனிமேல் ஆவது ஒன்றுமில்லை” என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.
அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது.
உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.
உடலை எடுத்து வந்தார். “செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!” என்று எண்ணமிட்டார்.
தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.
கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.
மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார்.
செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.
கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.
ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.
வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.
அருகில், “ஐயா!” என்றான் முனிசாமி.
“முதலாளி குடுத்தாங்க” என்று நோட்டுகளை நீட்டினான்; “அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்றான்.
“அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார்.
நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.
பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.
பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.
அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.
பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.
அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.
– கலைமகள், மார்ச் 1943