செய்யாமையாலும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 13,070 
 

“”உம்…, கடேசில நீ வந்து மாட்டிக்கிட்ட! விதி.. எல்லாம் விதி…” என்று, மயிலாளின் மனதைக் கிளறி விட்டுக் கொண்டே, வாளியில் ஊறிக் கிடந்த அழுக்குத் துணிகளை அள்ளிப் படித்துறையில் போட்டாள் சிவனி ஆச்சி.

துணிகளுக்குச் சோப்புப் போட்டுக் கொண்டிருந்த மயிலாள், சிவனி ஆச்சியை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு, மீண்டும் தனது பணியைத் தொடரலானாள்.

“”நீ நாகரீகமாச் சோப்புப் போடுத. நான் பழைய பஞ்சாங்கம். சலவைக்காரத்துல துணிகளை முக்கி, ஆத்தாங்கரை வரைல சுமந்துக்கிட்டு வந்து தொலைக்கிறேன். சோப்பு வாங்கக் காசு வேணுமே. உம்.., என்னோட வாணாளும் அந்தா இந்தான்னு நெருங்கிட்டு. காடு வா, வாங்குது. சோப்பு நாகரீகமெல்லாம் எனக்கெதுக்கு?” என்றபடியே துணிகளைத் துவைக்கலானாள் சிவனி ஆச்சி.

செய்யாமையாலும்பதிலேதும் கூறவில்லை மயிலாள்.

“”அதான பாத்தேன். வந்து வாச்சவளும் வாயில்லாப் பூச்சியா இருந்துட்டா, சவடால்ப்பய காட்ல சங்கநாதம்னு சொல்தாப்லல்ல ஆய்ப் போச்சு. நானும் இம்புட்டுப் பேசுதேன், நீ வாயத் தொறப்பனாங்கியே! எங்கிட்டப் பேசவே இம்புட்டு யோசனை பண்ணுத நீ, பால்பாண்டிப் பயல்ட்ட என்னத்தப் பேசிப் போடுவியாம். அதான் பய கொப்பேறி நிக்கிறான். தரையில கால் பாவமாட்டங்குது. ஏட்டி மயிலா, பேசணும்ட்டி, வாய் தொறந்து பேசணும்ட்டி…” என்றாள் சிவனி ஆச்சி.

இந்த முறை ஆச்சியை ஏறிட்டுப் பார்த்த மயிலாள், ஒரு புன்னகை செய்துவிட்டு, துணிகளை அலசலானாள்.

“”ஒங்காதொண்ணும் செவிடில்லையே! நான் சொல்றதெல்லாம் கேட்கத்தானே செய்யுது!”

“”ஆமாம், கேட்குது ஆச்சி” என்றாள் புன்னகையோடு.

“”அப்பாடி, ஒரு மட்டுக்கும் வாயத் தொறந்துட்டா. இனிப் பேச வச்சிறலாம். நல்லாக் கேட்டுக்கோ மயிலா. இந்தச் சுத்து வட்டாரத்திலே இருக்க எந்தக் குமரியும் பால்பாண்டிப் பயலைக் கட்டமாட்டேன்னுட்டாளுக. ஒரு ஊசக் குமரி கூடல்ல மாட்டம்ன்னு தறியாத்துப் பண்ணிப் போட்டா. நீயும் பயலோட குணம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டே. இனிம என்ன பண்ண முடியும்? சட்டியா, பானையா மாத்ததுக்கு. தாலி கட்டியாச்சே! பட்டுத்தான் தீரணும். ஏன்னா, பால்பாண்டி அப்டியாப்பட்ட மனுசன்ல்லா. அவனும், அவனோட வாயும் யாராலே தாங்க ஏலும்?”

தொண்டையைச் சற்றுக் கமறிக் கொண்டே, துணிகளை அலசி வைத்துக் கொண்டிருந்தாள் மயிலாள்.

“”போ, கடைசியிலே ஒன்னையும் ஊமையாக்கிப் போட்டானா? சரியான வாய்க் கொழுப்புப் பிடிச்ச பய. சொல்லை வச்சே சுட்டுத் தின்னுருவானே! கோபப்பட்டே கொன்னு போட்ருவானே” என்று கூறிக் கொண்டே ஓரக்கண்ணால் மயிலாளைப் பார்த்தாள் சிவனி ஆச்சி.

அவளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இதென்ன இவ உணர்வுகெட்ட ஜென்மமா இருக்கா. இவ்வளவு நேரமும் பால்பாண்டிப் பயலைப் பற்றிச் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டங்காளே! எருமை மாட்டு மேல மழை பேஞ்சது போல கல்லா இருக்காளே! அவனோட ஆழி வாய்க்குப் பயப்பட்டு ஊமை வேசம் போடுதாளோ? போடட்டும், போடட்டும் இவளை உசுப்பேற்றிவிடாமல் நான் ஓயப் போவதில்லை’.

தன்னுள் சபதமே போட்டுவிட்டாள் சிவனி ஆச்சி.

“”மயிலா, பொண்ணாப் பொறந்தா அடக்க ஒடுக்கம் தேவைதான். கட்ன புருசனுக்குப் பட்டுப் பணிஞ்சுதான் நடக்கணும். ஆனா அதுக்காக இப்படித் தரையோட தரையாய்க் கெடந்து, தன்மானம் பூராத்தியும் ஒட்டு மொத்தமா இழந்து போய்றக்கூடாது. அதிலியும் இந்த பால்பாண்டி மாதிரி நடக்கிற ஆம்பிளைகளுக்கு அடங்கிப் போகவே கூடாது. தோசை திருப்புதாப்ல திருப்பிப் போட்டுக் குடுக்கணும். அப்பதான் அகங்காரமும் திமிரும் அடங்கும். என்ன மயிலா நான் சொல்றது புரியுதில்ல? பதிலுக்குப் பதில் போட்டு வாங்கிரு. அப்பதான் சரிப்பட்டு வருவான்” என்று உபதேசம் செய்தாள்.

துணி அலசுவதை நிறுத்திவிட்டு, சிவனி ஆச்சியை நோக்கிப் புன்னகை செய்த மயிலாள், மறுபடியும் துணிகளை அலசலானாள்.

“சுர்’ரென்று கோபம் பீறிட்டது சிவனி ஆச்சிக்கு. தன்னை அலட்சியம் பண்ணுவதாக எண்ணினாள்.

இவ்வளவு நேரமும் மறுகி மறுகிச் சொன்ன பிறகும் இவள் வாயே திறக்கவில்லையே என்று ஆதங்கத்தோடு எண்ணினாள்.

மயிலாவுக்கு இந்த ஊர் புதியது. அதனால் பால்பாண்டியைப் பற்றிய முழுவிவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே கொஞ்சம் விவரம் கூறி எச்சரிக்கை பண்ணி உதவலாம் என்று எண்ணினாள்.

மயிலாவோ புன்னகை செய்து மழுப்புகிறாள். உருப்படியான பதிலேதும் கூறவும் இல்லை. மிகவும் பயந்த சுபாவம் போலிருக்கிறது என்று எண்ணியவள், மயிலாளின் மீது பரிதாபமான பார்வையை வீசினாள்.

“இவ இப்படி வாயத் தொறக்கவே பயப்பட்டாள்னா, பய கொப்பேறில்லா நிப்பான். விடக் கூடாது. மயிலாளுக்குப் புரியப் பண்ணணும். அப்பதான் இவ பொழைப்பா. இல்லாட்டி அந்தப்பய வாயாலியே இணுங்கி, இணுங்கிப் போட்ருவான். இவளுக்குச் சொல்லிக் குடுக்கணும். எதிர் வாயாட வைக்கணும்’.

தன்னுள் அழுத்தமாய்க் கூறிக் கொண்டாள்.

மயிலாள் மஞ்சளை உரைத்து முகம் பூராவும் பூசிக்கொண்டு ஆற்று நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தபோது, காலைச் சூரியனின் ஒளியினால் தக, தகவென்று மின்னினாள்.

“”புதுப் பொண்ணு மஞ்சக் குளிச்சாக்லன்னு சொலவடை. இப்ப நீ சிவசூர்யம்போல இருக்கே. எங்கண்ணே பட்டுரும் போல இருக்கேடி. எங்காலடி மண்ணை அள்ளிட்டு போய்த் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லு. ஒம்மாமியா தங்கமான மனுசில்லா. அவளுக்குப் போயி இப்படி ஒரு வாயாரி மகன்! ஹும்! மனுசன்ல்ல சேர்த்தியா அவன்? த் தூவ்!” என்று, வாய் நிறைய நீரை வைத்துக்கொண்டு துப்பினாள் சிவனி ஆச்சி.

கூடவே ஒரு பதற்றமும் ஏற்பட்டுவிட்டது.

“சே, அவன் பொஞ்சாதி முன்னாடியே இப்படித் துப்பிக் கழிச்சிட்டமே, என்னைப் பத்தித் தப்பால்ல நெனைச்சிருவா’ என்றுதான் பதறினாள்.

அவள் பதறியது சரிதான் என்பதுபோல, மயிலாளின் முகமும் நிறம் மாறிவிட்டது.

“”ஏன் ஆச்சி காறித் துப்பினீங்க? முன்னே கேவலமாய் வேற பேசுனீங்க. அவரு உங்களுக்கு என்ன கஷ்டத்தைக் குடுத்தாரு! ஏன் இப்படிச் செஞ்சீங்க?” என்று கேட்டாள். குரலில் நிதானமான கோபம் இருந்தது.

ஒரு கணம் திகைத்துத் திணறிப் போய்விட்டாள் சிவனி ஆச்சி. பிறகு சமாளிப்பாகப் பேசலானாள்.

“”நீ மனசுல ஒண்ணும் வச்சுக்காத மயிலாள். பொதுவாய் அவனோட குணக்கேடுகளைப் பத்தி நாலுபேர் கூடுறப்ப பேசுறதுதான். ஆதங்கப்படுறதுதான். அவன் எனக்கொரு கஷ்டத்தையும் தந்துறலே. ஆனா வீட்ல உள்ளவுகளைப் பாடாய்ப் படுத்திருவான். அந்தக் கோவத்துல, காறித் துப்பிட்டேன். வேணும்ன்னு செய்யலே. யதேச்சையாப் பண்ணிட்டேன் புள்ள. நீ அதைப் பெரிசு பண்ணாதே” என்று கூறிச் சமாளிக்க முனைந்தாள்.

ஆனால், மயிலாளுக்குக் கோபம்தான். ஆதங்கம்தான். இருக்கத்தானே செய்யும்.

ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு செய்து விட்டாளே தவிர, மயிலாளை வேதனைப்படுத்தும் எண்ணம் எதுவும் சிவனி ஆச்சியிடம் இல்லை. மயிலாளுக்கு ஆதரவாகப் பேசுகிற உத்வேகத்தில் பேசினாள். அது, திருகிக் கொண்டு விட்டது.

“”ஏட்டி மயிலா, என்னமோ என்னை அறியாம நடந்து போச்சுட்டி. மனசுல ஒண்ணும் வச்சுக்காத” என்று மீண்டும் சமாதானம் பண்ணப் பார்த்தாள்.

“”அதான் பண்ணி முடிச்சிட்டியளே! இனிம என்ன சொல்லக் கிடக்கு?” என்ற மயிலாளின் குரலில் கோபம்தான் மிகுந்து தெரிந்தது.

“”ஹும், நல்லது செய்ய ஆசைப்பட்டது தப்பாப் போய்டுச்சு. மறந்துரு மயிலா. பால்பாண்டிய மட்டும் கைமீற விட்றாத. அவன் லேசுப்பட்டவன் இல்லே”.

“”இது புருசன் பெண்சாதி விவகாரம். எல்லாம் நான் பாத்துக்கிறேன்” என்றாள் மயிலாள் வெடுக்கென்று.

“”சரிட்டி, சரிட்டி. நான் தலையிடலே. ஆளை விடு…” என்று சரணாகதி ஆனாள் சிவனி ஆச்சி.

கோபம் மாறாமலேயே குளித்துவிட்டுக் கிளம்பினாள் மயிலாள்.

“”சே! கோவிச்சுக்கிட்டில்ல போறா. நானும் தான் தப்புப் பண்ணியிருக்கேனே! பேசிட்டு விட்ருக்கணும். காறித் துப்பியிருக்கக் கூடாது. புருசனைக் காறித் துப்ப எவதான் சம்மதிப்பா? சே.. சே.. புத்தியக் கடன் குடுத்துப் போட்டேனே. அவ கேட்டது போல, அவ புருசன் எனக்கொண்ணும் கஷ்டமெதையும் தந்துறலியே. அவுக வீட்ல உள்ளவுகளை மானாங்கண்ணியாப் பேசுவான். பெத்தவுகளேன்னு யோசிக்காமப் பேசிப் போடுவான். அதான் இவளையும் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருன்னு சொல்லப் போனது! விதி, மயிலாள்ட்ட இன்னிக்கு வாங்கிக் கட்டணும்ன்னு இருக்கும்போது, விடுமா? ஆனாலும் சொல்ல நினைச்சதைச் சொல்லிட்டேன். கேட்டா நல்லாருப்பா. கேளாட்டி சீண்ரப்பட்டுட்டுப் போறா. ஊதுற சங்கை ஊதிட்டேன். விடியிறப்ப விடிஞ்சுட்டுப் போகுது…” என்று தன்னுள் கூறிக்கொண்டே கரை ஏறலானாள் சிவனி ஆச்சி.

“”மயிலா, இட்லி அவிச்சாச்சாம்மா?”

குரல் நொந்துவிடுமோ என்று பயந்துபோய்க் கேட்பது போல் மென்மையாக வினாவினாள் ஞானவடிவு.

“”பசிக்குதா அத்தே, இதோ இப்ப அவிச்சிருவேன். அதுக்கு முன்னாடி ஒரு லோட்டா காப்பித் தண்ணீர் தாரேன். பசி தாங்கும்” என்று மென்மையாகக் கூறினாள் மயிலாள்.

“”எனக்கொண்ணும் பசி இல்லேம்மா. பால்பாண்டி வர்ற நேரமாச்சே! வரும்போதே பசி பசின்னு ஆதாளியோடல்ல வருவான், சாப்பாடு ரெடில இல்லன்னா, ஆடிப் பூவெடுத்துப் போடுவானே. அவன் வாய்ல நீ அகப்பட்றக் கூடாதே. எனக்கு அவனோட ஆட்டம் பழகிப்போச்சு. நீ புதுசுல்லா. கண்டமேனிக்குப் பேசி உன்னை வருத்தப்பட வச்சிறக் கூடாதேன்னுதான் கேட்டேன்” என்றாள் ஞானவடிவு.

“”துணிகளைக் காயப் போட்டுட்டு இட்லி ஊத்துறேன் அத்தே. ஈரத்துணிகளைக் காயப் போடாட்டிப் புழுங்கி நாறிடும்” என்று கூறிவிட்டு உலரப் போடலானாள்.

“”மயிலா, அடுப்பிலே இட்லி ஊற்றி வச்சுட்டுக் காயப்போடு. அவன் இப்ப வந்திருவான் பாரு” என்றாள் ஞானவடிவு.

“”சரி அத்தே” என்றபடி அடுப்படிக்குள் அவள் நுழையவும், வெளியே மொபட் வந்து நின்றது.

“”ஐயோ வந்திட்டானே! இட்லி ரெடியாய் இல்லேன்னு அந்தப் புள்ளயப் பாடாப் படுத்திருவானே!” என்று பதற்றமுடன் புலம்பினாள் ஞானவடிவு.

அது அப்படியே ஆயிற்று.

“”ஏட்டி, சாப்பாட்டைக் கொண்டு வாட்டி” என்று கத்திக் கொண்டேதான் வீட்டினுள் நுழைந்தான் பால்பாண்டி.

“குடி கெட்டுச்சே!’ என்று மனதுள் புலம்பியவள்,

“”ஏம்பா பால்பாண்டி, சித்தப்பாகிட்டே அப்பா என்னவோ கேட்டுட்டு வரச் சொன்னாகளே, கேட்டியாடே?”

என்று கேட்டு, மகனின் கவனத்தைத் திசை திருப்ப முயன்றாள் ஞானவடிவு.

“”மனுசனுக்குப் பசில உசிர் போகுது. இப்ப இது ரொம்ப அவசியமில்லே. பேசாம வாயை மூடிட்டு இரு” என்று, பெற்றவளின் மீது எரிந்து விழுந்தான் அவன்.

“பயலைச் சித்த நாழி தாக்காட்டலாம்னு பாத்தா, பசி பசின்னு பறக்கானே. பாவம் மயிலா. வாயாலயே கொன்னுருவானே!’ என்று எண்ணமிட்டபடியே, சமையலறைப் பக்கம் பார்வையை நகர்த்தினாள்.

அங்கே புகைமண்டலமாக இருந்தது.

ஐப்பசி மாத அடைமழையில், விறகெல்லாம் ஒரே ஈரப்பதம்.

“”ஏட்டி சாப்பாட்டைக் கொண்டா” என்று கத்திக்கொண்டே, சாப்பிட வசதியாக அமர்ந்து கொண்டான்.

“”என்னல இது கெட்ட பழக்கம்? வெளில போய்ட்டு வந்தாக் கை கால் அலம்பாண்டமா?இதுல சாப்பிட வேற உக்காந்துட்டே. போ.., போய் அலம்பிட்டு வா”’ என்றாள் ஞானவடிவு.

“”அதெல்லாம் பொறவு. இப்ப பசிக்கி. மொதல்ல சாப்பிட்டாகணும் நான். சாப்பாடு வைட்டி” என்று கத்தினான்.

“பயலச் சித்த நேரம் தாக்காட்னா, அதுக்குள்ள இட்லி அவிஞ்சிருமேன்னு பாத்தா, பயல் கால்ல வெந்நியக் கொட்னாப்லல்ல பறக்கான். இப்ப அவ இட்லி கொணாந்து வைக்கலேன்னா, இவன் சாமில்ல ஆடுவான். துணி துவைப்பு அதிகம் போல்ருக்கு. அதான் லேட்டா வந்திருக்கா. பாடாப்படுத்துகானே மொரட்டுப் பய’ என்று இவள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவன் மறுபடியும் கத்தலானான்.

“”கொஞ்சம் பொறுமையாய் இரு பால்பாண்டி. அவ ஈர விறகோட கெடந்து அல்லாடுதா. இப்பம் வந்துருவாப்பா” என்று சமாதானம் பண்ண முயன்றாள்.

“”நான் வாற நேரம் தெரியுமில்லா. முந்தியே ரெடி பண்ண என்ன கொள்ளை? இந்தாக்ல எந்திச்சுப் போனம்ன்னா எலும்பை எண்ணிருவேன்” என்று கத்தினான்.

சமாதானமாகத் தான் எதையாவது சொல்லப் போனால், அவன் மேலும் எகிறிவிடக்கூடாதே என்கிற பயத்தினால் மௌனமாகிக் கொண்டாள் ஞானவடிவு.

அப்போது அடுப்படியை விட்டு வெளியே வந்த மயிலாள், “”சட்னி அரைக்கலே. மிளகாய்ப் பொடியை வச்சு இட்லி சாப்பிடுங்க” என்றபடியே இட்லித் தட்டை அவனுக்கு முன்பாக வைத்தாள்.

“”மொளகாப் பொடியத் தொட்டு மனுசன் இட்லி தின்பானாட்டி? சட்னி ஏன்டி அரைக்கலே?” என்று கேட்டான்.

“”அப்ப மொளகாப் பொடியத் தொட்டுச் சாப்டுதவுக எல்லாம் மனுசன்ங்க இல்லியா?” என்று மிக மிக மெதுவாகக் கேட்டாள் மயிலாள்.

“”என்னடி இப்ப திடீர்ன்னு வாய் நீளுது? நாக்கை இழுத்து வச்சு அறுத்துப் போடுவேன். ஆமாம்.”

“”வேற என்ன தெரியும் உங்களுக்கு? மனுசங்க செய்யக் கூடாததையெல்லாம் செய்துட்டிருக்கிற நீங்களும் ஒரு மனுசன்தானா? மனசுகளைக் கொலை பண்றதும் மனுசங்களைக் கொலை பண்றதும் வேற வேற இல்லே…”

“”ஏட்டி..!”

“”இப்படிக் கத்தித்தான் மனுசத்தன்மையை இழந்தே போய்ட்டீங்க.”

“”நிறுத்துடி. இந்தாக்ல இட்லித்தட்டை எத்திவிட்டேன்னா, ஏழு வீடு தாண்டிப் போய் விழும்.”

“”செய்ங்க. இப்பவே காறித் துப்பிட்டுதான் இருக்காங்க ஒங்களை. இதையும் செய்யுங்க, இனிமேல் மூஞ்சியிலேயே வந்து துப்பிட்டுப் போவாங்க”

“”ஏ செத்த நாயி, என்னத்தட்டி உளறுதே!” அவன் குரலில் ஒரு நடுக்கம்… அதிர்வு… யோசிக்கிறது போல மேலே அண்ணாந்து பார்த்து ஒரு நிமிடம் நின்றான்.

“”உளறலே, நிஜம்! காலம்பற ஆத்துல வச்சு ஒருத்தி ஒங்க புராணத்தப் பாடிக் காறித் துப்பிட்டா”.

“”எவடி அவ? அவளைச் சும்மாவா விட்டுட்டு வந்தே? யாருன்னு சொல்லு, அவ கொண்டையை அறுத்துக் கூறு போட்டுர்றேன்” மீண்டும் கோபம்.

“”அது பொறவு. மொதல்ல அவ ஏன் அப்படிச் செஞ்சான்னு யோசிங்க”.

“”ஒருத்தி என்னைக் காறித் துப்பினாளாம். அதுக்கு நீ கோபப்படலே அவள்ட்ட. இங்க வந்து காரணம் என்னன்னு என்னை யோசிக்கச் சொல்த…” என்றான். குரலில் இயலாமை தெரிந்தது.

“”ஆமா, யோசிச்சுப் பார்த்திராதீங்க. ஆத்திரப்படுங்க, கோவப்படுங்க. அதானே உங்களோட கேடே. இந்த ஊர்ல இருக்கிற ஒரு ஊசக்குமரிகூட ஒங்களைக் கட்டிக்கிடத் தயாராய் இல்லியாமே. அவ்வளவு நல்லபேரு ஒங்களுக்கு. பின்னே, பெத்தவங்களையே மரியாதை இல்லாம ஏசிப் பேசினா, யார்தான் மதிப்பாங்க? ஆணவத்தோட ஏசிப் பேசிட்டா ஆம்பிளை கிடையாது. அன்போட அரவணைக்கிறவன்தான் சரியான ஆம்பிளை. பசி, பசின்னு பறந்தீங்களே தவிர, வயசான அப்பாவும், அம்மாவும் சாப்ட்டாங்களான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா? அவ்வளவு சுயநலம்! ஒங்களைப்பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. ஒங்களைச் சுற்றி இருக்கிறவங்க, அண்டி வந்தவங்கன்னு மத்தவங்களைப் பத்தியும் யோசிங்க. அதாங்க மனிதத் தன்மை..”

மயிலாள் பேசப் பேச, பால்பாண்டி கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்படி அவன் செய்வது, இதுதான் அவனது வாழ்நாளிலேயே முதல் முறை.

இந்த முரட்டுக்காளையின் மனதில் பதியும்படியாக இதுவரை எவரும் அவனிடம் எடுத்துச் சொன்னதே இல்லை.

பெற்றவர்கள், பயந்துபோய் அவனிடம் வாயே திறந்ததில்லை. அவனும் தட்டிக்கேட்க ஆளில்லாமல் முரடனாகவே வளர்ந்து தொலைத்திருக்கிறான்.

இன்றைக்கு சிவனி ஆச்சி தூண்டிவிட்டதால்தான் மயிலாளே வாய் திறந்து பேசியிருக்கிறாள். இல்லையென்றால் இவ்வளவு நாள்களும் அவனது வசவுகளைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக இருந்ததுபோல இன்றைக்கும் இருந்திருப்பாள்.

பால்பாண்டியை யோசிக்க வைத்து விட்டாளே! இதில் சிவனி ஆச்சிக்கே முழுக் கிரீடமும். இப்போது அவளைக் கோபிக்கத் தோன்றவில்லையே அவனுக்கு.

பால்பாண்டி சடாரென்று எழுந்து முற்றத்திற்குப் போய், காலணிகளை அணிந்து கொண்டான்.

ஞானவடிவு பதறிப் போய்விட்டாள்.

கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் கிளம்பி விட்டானே என்று வேதனைப்பட்டாள்.

“”ஏல.. ஏ.. ஐயா பால்பாண்டி, சாப்டுட்டுப் போயம்ல. அதான் இட்லி கொணாந்துட்டாளே. வேணா இப்பவே சட்னி அரைக்கச் சொல்லுகேன்” என்று மகனைக் கெஞ்சினாள்.

“”மொளகாப் பொடி வச்சே அப்புறமாச் சாப்ட்டுக்கிறேன். முதல்ல அப்பாவும், நீயும் சாப்டுங்க. நானும் மயிலாளும் பொறவு சாப்டுதோம். இப்ப நான் ஆத்துலபோய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துர்றேன்…! ஏட்டி மயிலா, குளிக்கிற சோப்பைக் கொண்டா…” என்று அவன் கூறவும், வியப்பின் எல்லைக்கே போய் விட்டாள் ஞானவடிவு.

“”இதோ கொண்டு வர்றேங்க” என்ற மயிலாள், மான் துள்ளலாய் உள்ளே ஓடிப் போய், சோப்புடப்பா டவலுடன் வந்து, கணவனிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டவன்,

“”அப்பாவையும், அம்மாவையும் சாப்பிடச் சொல்லு. பசிச்சா நீயும் சாப்ட்ரு. ஒரு நிமிசத்துல வந்துர்றேன் குளிச்சிட்டு” என்றான்.

“”நீங்க வந்தப்புறம் சேர்ந்தே சாப்பிடுவோம்” என்ற மயிலாளை நோக்கி அவன் முறுவலித்தபோது, ஒரு கணவனின் காதல் அவளுக்கு முழுமையாய்த் தென்பட்டது முதன்முதலாக.

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *