செகண்ட் ஹேண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,544 
 
 

சுமதி! சுமதி! நித்யா அக்கா என்னைக் கூபிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நான் கண்ணாடியில் பார்த்தபடி சுடிதாரில் ஷாலைப் பின் குத்திக்கொண்டிருந்தேன். இந்த சுடியும் கூட என் அக்காவினுடையதுதான். எப்போதும்போல பத்திரப்படுத்தி வைத்திருந்து அம்மாவால் எனக்கு தரப்பட்டது. தீபாவளி, என் பிறந்த நாள் ஆகிய தினங்களில் மட்டுமே எனக்கு புத்தம்புது ஆடைகள் கிடைக்கும். நான் அணிந்து கொள்ளும் மற்ற எல்லா ஆடைகளும் என் அக்காவினுடயதுதான்.

இதே மாதிரியே அக்கா விளையாடிய பொம்மைகள், நடைவண்டி,போன்ற அனைத்தும் அடுத்த குழந்தைக்கு உபயோகமாக இருக்கும் என்று பத்திரப்படுத்தி வைத்திருந்து எனக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அப்பாவுக்கு செலவை மிச்சப்படுத்திவிட்டதாக அம்மாவுக்கு ஏக மகிழ்ச்சி. அதையே அம்மா இன்றுவரை கடைபிடித்து வருகிறாள்.எனக்காக, எனக்கே எனக்கென்று அனைதும் புதியவைகளாக கிடைக்காதா என ஏங்கினேன்.

“என்ன சுமதி? கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். பதிலே காணோம். என்ன யோசனையாம்?” என அக்கா கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள். அக்கா நித்யாவுக்கு அடுத்த வாரம் திருமணம். அவள் காதலித்தவரையே மணக்கப்போகிறாள். ஒருதலைக் காதல் என்பது புரியாமல் எவ்வளவு மகிழ்சி அவளுக்கு? ஒரு வாரத்திற்குப் பிறகு எங்களை எல்லாம் விட்டு விட்டுப் போய்விடுவாள். என் கண்கள் பனித்ததை அவள் பார்த்துவிடாமல் இருக்க திரும்பிக்கொண்டேன்.

அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன். அக்காவை மணமுடிக்கப் போகிற சிவா எனக்கு மிக மிக பரிச்சயமானவர். சொல்லப்போனால் நானும் சிவாவும் உயிருக்கு உயிராக காதலித்தவர்கள். இருவர் கண்களும் காதலைப் பேசிக்கொண்டதுடன், கைகள் இணைத்து, பிரிவதே இல்லை என்று சத்யம் செய்துகொண்டோம். அதே நாளில்தான் அக்கா என்னிடம் வந்து சிவாவின் மேல் தனக்கிருந்த காதலைக் கூறினாள். முதலில் அதிர்ச்சி. தீர யோசித்து, நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

செகண்ட் ஹேண்ட் விவகாரம், பூதாகரமாக என் மனதை ஆக்கிரமித்திருந்ததால், என் காதல் இரண்டாவது இடத்தைப்பிடித்தது. அக்காவின் மேல் எனக்கிருந்த பாசமும் பெரும் பங்கு வகித்தது. முடிவில் நான் மனதில் உறுதியாக தீர்மானம் செய்தேன். அக்காவுக்கு என் காதலை செகண்ட் ஹாண்டாக பரிசளிக்கப் போகிறேன். இப்பொழுது என் இதழ்க்கடையில் திருப்திக்கான புன்னகை மலர்ந்தது.

அடுத்த நாளே சிவாவை சந்தித்தேன். அமெரிக்காவிற்குப் படிக்கப் போக வேண்டும் என்ற என் ஆசையைத் தெரிவித்தேன். “சிவா! நீ கிடைக்காவிட்டால் அக்கா கல்யாணமே செய்துகொள்ள மாட்டாள். அது எனக்கு சந்தோஷத்தை தருமா? அவள் உன் மேல் வைத்திருக்கும் காதல் தெரிந்தபின்பும் நான் உன்னை மணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ முடியுமா? அக்காவோடு உன் கல்யாணம் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்”.என்றெல்லாம் கூறி கடைசியில் சிவாவை சம்மதிக்க வைத்தேன். அப்பாவிடமும் எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைத்தேன்.

கல்யாணம் கலகலப்புடன் நடந்தேறியது. அடுத்துவந்த மாதத்திலேயே நான் அமெரிக்காவிற்குப் புறப்பட்டுவிட்டேன். காலம் வேகமாக உருண்டொடிவிட்டது. வருடம் ஒன்று கடந்து போனது.

அந்நாட்களிலெல்லாம் ஒவ்வொரு நினைவிலும் அக்காவை மனதார வாழ்த்தினாலும், சில நேரங்களில் “நீ எனக்கு கொடுத்த யூஸ்ஸூடு சாமான்களைவிட நான் உனக்கு கொடுத்துள்ள மணவாழ்க்கை மிகப்பெரியது அக்கா. சிவா என்னைத்தான் காதலித்தார்.” என்றெல்லாம் நினைத்து எனக்குள் இருந்த தியாக உள்ளத்தை எனக்கு நானே பாராட்டிக் கொள்வேன். அடுத்த நிமிடம் காதல் தோல்வியில் உருகி உருக்குலைவேன்.

எத்தனையோ நாட்களாக முயற்சித்த விடுமுறை கிடைத்தது. அக்காவுக்கு.குழந்தை பிறக்கப் போகிறது. என்னால் அக்காவிற்கு பரிசாக தரப்பட்ட வாழ்வின் வசந்தத்தில் விளைந்த முத்தான முத்தை நேரில் பார்க்கப் போகிறேன். இதோ மகிழ்ச்சியுடன் இந்தியாவுக்குப் புறப்பட்டு விட்டேன்.

வீட்டு வாசலில் டாக்சி நின்றது. வாசலில் பெரும் கூட்டம். ஏன்? என்ன இது? உள்ளே ஓடினேன். அங்கு ஹாலில் அக்காவின் பிரேதம் பூமாலையுடன் கிடத்தப்பட்டிருந்தது. எல்லொரும் கதறகதற பிரேதம் எடுத்துச்செல்லப்பட்டது. மயங்கி கீழே விழ இருந்த என்னை குழந்தையை கையில் வைத்திருந்த சிவா தாங்கி பிடித்தான். குழந்தையின் கைகள் என் சுடியைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தது. அந்த சுடியும்கூட அக்காவினுடையதுதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *