சூழ்ச்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 2,689 
 
 

“பைரவிய வேலைக்கு அனுப்ப வேண்டாம் சித்தி. நான் காலேஜ்க்கு அனுப்பி படிக்க வைக்கிறேன். ஆனா நான் சொல்லற காலேஜ்ல, சொல்லற கோர்சுல தான் சேரனம்” என்றான் தன் தாயின் தங்கை பெரியாவிடம் கரிமுத்து.

கரிமுத்து மீது பெரியாவுக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. படிப்பு ஏறவில்லை. ஒழுங்காக ஓரிடத்தில் வேலை செய்யமாட்டான். வேலை செய்து சம்பளம் வாங்கினாலும் டாஸ்மார்க் கடை வாசலே கதியாய் கிடந்து சம்பளத்தை கரைத்து விட்டு “சித்தி… சித்தி… நூறு கொடு போதும். சம்பளம் வாங்கி கொடுக்கிறேன்” என்பான்.

அம்மாவை இழந்த பையன் என்பதால் கொடுத்து விடுவாள். ஆனால் இதுவரை திருப்பி கொடுத்ததில்லை.

“ஏண்டா உன்ற பேச்சை நம்பி எப்படி என்ற பொண்ண காலேஜ்க்கு அனுப்பறது? உன்ற பேச்ச தண்ணில தான் எழுதோனும். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு” என்றாள் பெரியா.

“அம்மா சும்மா தொன, தொனன்னு பேசாதே. அண்ணன் ஆசைப்படறதை இந்த தங்கச்சி நிறைவேற்றி வைப்பாள்” என்றாள் உறுதியுடன் பைரவி.

கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே பணக்கார பெண் தீரா, பைரவிக்கு தோழியாகி விட்டாள். அவள் தினம் ஒரு காரில் வருவதைக்கண்டு ஏங்கிய பைரவி கரிமுத்துவிடம் சொன்னாள்.

சொன்ன அடுத்த நாள் முதல் கரிமுத்துவுக்கு பொரிதட்டியது. கரிமுத்து ஒரு பணக்கார தோற்றத்துடன் காரில் பைரவியை கொண்டு வந்து விடுவதும், போவதும் பைரவிக்கே ஆச்சர்யமாக இருந்தது.

“யாரடி இவன்…? பார்க்க தனுஷ் மாதிரி இருக்கான்…? லவ்வரா..?” என்றாள் தீரா.

“ஐஐயோ அவன் என் பெரியம்மா பையன்டி. அண்ணன்” என்றாள்.

“அப்படியா..? லைக், லவ்வரோன்னு நினைச்சுட்டேன். சாரிடி” என்ற தீரா,

கரிமுத்துவை பார்த்து தனது பளிச்சென்ற பற்களைக்காட்டி சிரித்து வைக்க, அவன் ஆகாயத்தில் இறக்கை கட்டி பறந்தான்.

அடுத்த நாள் காரில் செல்லும் போது கரிமுத்து சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியிலிருந்து விடுபட மிகவும் சிரமமாகிவிட்டது பைரவிக்கு.

“பைரவி உன்ன இந்த காலேஜ்ல நான் சேர்த்துனதே தீராவை காதலிச்சு கல்யாணம் பண்ணி செட்டிலாகனம்னுதான். அவ பணக்கார அப்பனுக்கு ஒரே பொண்ணு. நூறு கோடி சொத்து. அவள கல்யாணம் பண்ண கோடி கோடியா பணம் இருக்கனம். இல்லே கேடிக்கே கேடியா இருக்கனம். முதல் நிலை என்கிட்ட இல்ல. அதான் இரண்டாவத தேர்ந்தெடுத்தேன். செத்துப்போன என் அம்மாவோட பத்து பவுன் காசுமாலை நான் தான் திருடி வச்சுட்டு திருட்டு போயிடுச்சுன்னு நம்ப வச்சேன். நகை போன கவலைல அம்மா போனது எனக்கு சாதகமா போச்சு. அத வித்து இந்த பழைய கார் வாங்கினேன்.

நீ தான் எப்படியாவது தீராவோட நான் பழக உதவனம். இதுக்காகத்தான் உன்ன இங்க பணங்கட்டி படிக்க வைக்கிறேன். இன்னைக்கு சாயங்காலம் காலேஜ் விட்டதும் நம்ம கார்ல வ.உ.சி பார்க் போகலாம்னு கூப்பிடு” என்று வில்லனாக சிரித்தான்.

காரை விட்டு இறங்கிய பைரவி பதில் சொல்லாமல், திரும்பி கூட பார்க்காமல் கோபத்துடன் கல்லூரிக்குள் சென்றாள்.

அடுத்த நாள் கரிமுத்து உள்ளே செல்ல பைரவியின் வீட்டு கதவு திறக்க மறுத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *