கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 3,941 
 
 

(1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மந்திரத்தினால் ஒருவனை நீண்டகால நோயாளியாக்கலாம்; சிந்தனையை மாற்றலாம், இழந்த சிந்தனையைப் பெறவைக்கலாம்; பெரிய அற்புதங்களைச் செய்யலாம் என வாதிடப்படுகிறது…

நான், ஒரே இறைவன் என்ற மேலான ஏகத்துவக் கொள்கையில் பூரண விசுவாசி. ஆவதும் அவனாலே; அழிவதும் அவனாலே என்ற தத்துவம் எனக்குத் தெரியும், பார்பப்பகம்மன் பான்

நான் கூறப்போகும் இச்சம்பவத்தை இப்பொழுது நினைத்தால் ஒரு பக்கம் சிரிப்பும், ஒரு பக்கம் வேதனையும் தான் வருகிறது.

…அன்று அடுத்த வீட்டில் ஒரே அமர்க்க ளம். பொழுது போக்குக்காக நாவலொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், அடுத்த வீட்டில் என்ன நடக்கிறதென்பதை அறிய நாவலை வைத்து விட்டு வாசலில் வந்து அமர்ந்து கொண்டேன்.

அடுத்த வீடு. அதுதான் கைறுதாத்தா வீடு. அவர் மகள் பௌசியாவிற்கு வயிற்று வலியாம். எவ்வளவோ கைமருந்து செய்தும் நிற்கவில்லையாம். ஓதிப்பார்க்க லெப்பையைக் கூட்டிக் கொண்டு வரச் சென்றிருக்கிறார்களாம்.

பக்கத்து வீடுகள் அல்லவா? அடுத்த வீட்டில் நடைபெறுகிற யாவும் எங்கள் வீட்டு வாசலில் நின்று பார்த்தால் தெரியும்,

எனினும், நான் வந்து ஒரு மாத காலத்தில் அப்பெண்ணை ஒரு முறைதான் கண்டுள்ளேன். கட்டுக் குலையாத உடற்கட்டு – மட்டு மட்டான உயரம் – உருண்ட முகம் – திரண்ட சதைப் பிடிப்பான கழுத்து – விரிந்த அறிவு நிரம்பிய பார்வை. இப்படி அழகு நிரம்பிய அடுத்த வீட்டுப் பெண் போடும் கூச்சல்…. ஐயோ பாவம் போய்ப் பார்ப்போம் என ஆவல் உந்தியது.

எங்கள் வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் வெளியூர் போய்விட்டனர். புதியவன் நான் எப்படிப் போவேன்? சங்கோஜப் பட்டுக் கொண்டு வாசலில் நின்றேன்.

பௌசியாவின் வாப்பா சம்சுதீன் நானார். அப்பொழுதுதான் லெப்பையை கூட்டிக் கொண்டு வந்தார். லெப்பை தண்ணீர்க் கோப்பை ஒன்றை வைத்துக் கொண்டு ஓதினார். பின், இஸ்ம் இரண்டு தட்டு எழுதிக் கொடுத்து விட்டு சம்சுதீன் நானாவை வெளியே கூட்டிக் கொண்டு வந்தார்.

“பாருங்கோ சம்சுதீன், நான் எனக்குத் தெரிந்ததைச் செய்தேன். அது சும்மா வந்த வலியல்ல. ஒரு செய்வினை. செய்வினைக்கு வேலை செய்யுங்கோ ….. நான் வாரன்.”

‘வயிற்று வலிக்கு ஓதிப்பார்த்து, இசுமைக் கொடுத்து விட்டு செய்வினை என்கிறாரே?…. என்ன – மடமை!’ என நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது ஜௌபர் நானா வந்தார்.

ஜௌபர், சம்சுதீன் நானாவின் மச்சான். கைறு தாத்தாவின் தம்பி. ஜௌபர் நானா வந்ததும் மூவருக்குமிடையே குசுகுசுப் பேச்சு. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சிறிது நேரத்தில் மூவரும் அவசர அவசரமாக கிளம்பிச் சென்றனர்.

இவர்கள் எங்கே செல்கின்றனர்? என்பதை எனக்கு ஊகிக்க முடிந்தது. ஜௌபர் நானாவுடன் அல்லவா செல்கின்றனர். மண்டை நோவுக்கும் மந்திரம் போடும் மனுஷன் அல்லவா? மந்திரக்காரனை நாடிச் செல்கின்றனர் என்பதனை ஊகித்துக் கொண்டேன்.

என் ஊகம் பிழையாகவில்லை . சில மணி நேரங்களின் பின் கைறுதாத்தா யாரையோ திட்டுவதை உணர முடிந்தது.

காது கொடுத்துக் கேட்டேன். என்ன வசை மொழி? எப்படி எழுதுவேன் அந்த அலங்கார வார்த்தைகளை?

எனினும் அவர் பேச்சின் சாராம்சத்தை நான் கூறுகின்றேன். பௌசியாவுக்கு ஒரு கலியாணம் பேசியுள்ளனர். இதைப் பொறுக்க முடியாத யாரோ அவர் குடும்பத்தாரின் உதவியுடன் சூனியம் செய்து உண்ணக் கொடுத்துள்ளார்களாம். அது இப்பொழுது பௌசியாவின் வயிற்றிலிருந்து கொண்டு வலியைக் கொடுக்கிறதாம். இதை அவர்கள் போய்க் கேட்ட மந்திரவாதி சொன்னானாம்.

வெளியே சம்சுதீன் நானா நின்று கொண்டிருந்தார். நான் அவர் அருகில் நின்றேன்.

“சம்சுதீன் நானா…. ” என்றேன்.

சம்சுதீன் நானாவின் கற்பனை கலைந்தது. அப்பொழுதுதான் நான் வந்திருப்பதை உணர்ந்தார்.

இயநானும் அவரும் வெளிவராந்தாவில் வந்து அமர்ந்தோம். அங்கு அவர் மைத்துனன் நௌபர் இருந்தார். யாருடனும் பேசாத கட்டுப் பெட்டி மனுஷன் அல்லவா!…… அதற்கேற்றாப் போல ஒரு சின்ன முறுவல். அவ்வளவுதான்.

“பாருங்க துரை”…. (இப்படித்தான் என்னை இப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.) “எங்கள் குடும்பமே எங்களுக்கு பகை….இந்த சின்னப் பிள்ளைக்குப் போய் சூனியம் செய்திருக்கிறார்களே… நாங்கள் இப்பொழுது சின்னறால கட்டடியனிடம் சென்று பார்த்தோம். அவன் மைப்போட்டுப் பார்த்தான். என் மகளுக்கு சூனியம் செய்து வயிற்றுக்குள் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து குடியெழும்பிப் போக வீட்டுக்கும் சூனியம் செய்திருக்கிறார்கள். இவர்கள் தலையில் இடி விழ. திருப்பி வெட்டுவோம். பெரிய தொவில் ஒன்று வைக்கப்போறன். இன்று இரவு சின்னறால கட்டடியன் வருவான். அதற்கு முன் அவசரமாக கொஞ்சம் சாமான்கள் தேட வேண்டும்.”

சம்சுதீன் நானா பட வெனக் கதைத்துக் கொண்டு போனார். ஏனெனில் மைபோட்டுப் பார்த்து உண்மை கூறுகிறார்களாம். என்ன மடமை! மை போட்டுப்பார்த்து மறைந்த செய்திகளைக் கூறுவதாய் இருந்தால் இன்று எத்தனையோ விஷயங்களைக் கண்டு பிடிக்க முடியும்! சி.ஐ.டி. அதிகாரிகள் தேவையில்லை. நீதிமன்றம் தேவையில்லை.

“மை”க்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா? நீதிமன்றத்தில் சிக்கலான வழக்குகள் பல இருக்கின்றன. மை பார்த்தால் சுமுகமான முடிவு காணலாம். அரசாங்கத்துக்கு தெரியாதா? ஏன் வீணாக செலவுகள் செய்ய வேண்டும்? அட…. பாவமே! இப்படியும் எம் மனிதர் ஈமானைப் பறிகொடுக்கிறார்களே?

என் அபிப்பிராயத்தைக் கூறியிருப்பேன். பயமாக இருந்தது.

சம்சுதீன் நானா ஏதோ பழைய கதைகளைக் கூறி: தன் ஆத்திரங்களைக் கொட்டியிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஷைத்தான் தனக்கு சாதகமான சமயத்தில் வேதத்திலிருந்து உபதேசம் செய்யக் கிளம்புவது போல இருந்தது அவர் பேச்சு.

அன்று இரவு எட்டு மணி இருக்கலாம். இஷா தொழுகைக்குப் பின் இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்ட நான் வெளிவராந்தைக்கு வந்தேன். சம்சுதீன் நானா வீட்டில் ஒரே பரபரப்பு. – சின்னறால மந்திரவாதி சூனியப் பேயை ஓட்டப் போகிறான். ம் அதற்காக தடபுடலாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

தென்னம் பாளை, குலையோடு கூடிய வாழை மரம். மாவிலைத் தோரணம், ஓலைகளால் வேயப்பட்ட அழகிய சிறிய கூடாரம். இவைகள் வீட்டு முன்றிலில் அழகாக வைக்கப்பட்டுள்ளன. வெசாக் காலங்களில் காணும் அபூர்வக் காட்சிகள் அங்கு காணக் கிடைக்கின்றன.

வீட்டு வராந்தையில் வாழை மரத்தினால் செய்யப்பட்ட அழகிய கூடாரம். அதனுள் அழகாக மாவினால் செய்யப்பட்ட ஒரு பொம்மை. அது தான் சூனிய தெய்வம்!

வெள்ளைப் புருவம். கிருதா மீசை. கோரைப் பற்கள். கையிலே வாள். இது தான் சூனியக் கடவுளின் தோற்றம். ‘அல்லாஹ்…. முஸ்லிம்கள் இப்படி ஈமானை அடவு வைக்கிறார்களே! – இவர்களுக்கு நன்னம்பிக்கை அளிப்பாயாக!’ என மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.

இரவு ஒன்பது மணி….தொவில் ஆரம்பம்.

அடடே! தொவில் என்ன எனக் கூறவில்லையே… 1 அது தான் காஃபிர்கள் பேயோட்டும் முறை. அத்துடன் வணக்கத்துக்குரிய விழாவில் அதை அவர்கள் மதிக்கின்றனர். – கடவுளின் அனுக்கிரகமும் அதற்கு உண்டாம்.

இறந்த மிருகத் தோளின் ஓலம்…. (ஆச்சரியப்பட வேண்டாம்…..அது தான் ‘டும்..டும்’) மேளம் முழங்குகிறது. மந்திரவாதி ஏதோ பாடுகிறான்.

அப்பொழுது நோயாளியைக் கூட்டி வந்து வாழைமர கூடாரத்தினுள் அமர்த்துகின்றனர். வயிற்றை பிடித்தபடி பௌசியா அமர்ந்திருக்கிறாள்.

பௌசியாவைச் சுற்றி பலவித மலர்கள். வீட்டைச் சுற்றி ஒரே கூட்டம்.

பேயோட்டம் ஆரம்பமாகிறது. பாடும்…. டும்…மேளம் முழங்குகிறது. காட்டு மிராண்டித்தனமான நடனமொன்று ஆரம்பமாகிறது. பக்கவாத்தியமாக சில பேர் ஆமாம் போடுகின்றனர்.

காட்டு மிராண்டித்தனம் உச்ச நிலையை அடைகிறது. எதிரே பேய் ஓட போடப்பட்டிருந்த சாம்புராணிப்புகை சுற்றியிருந்தவர்களைக் கூட பேயாட வைக்கிறது.

சுவீர்…களீர்…

படுபாவி மந்திரவாதி, ஈரமற்ற கருணையற்ற, அந்த மந்திரவாதி கடின நெஞ்சுடன் பௌசியாவை கைப்பிரம்பால் விளாசுகிறான். கிறீச் எனக் கதறி ஓலமிடுகிறாள்.

என் கண்களில் நீர் மல்கியது.

“அஹ் ஹஹ… ஹா….எங்கிட்ட பலிக்காதுடா. இப்பொழுதே போய்விடு. உனக்கு ஒரு கோழி பலியிடுகிறேன். சூனிய தெய்வமே நீ கருணை செய்வாய்” என மந்திரவாதி ஏதோ உளறினான்.

தொடர்ந்தும் ஆட்டம் … டும்…டும்….டும்…

கர்ணகடூரமான பொய் முகமொன்றை அணிந்து கொண்டும், இலைகுலைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டும் கையில் நெருப்புப் பந்தத்துடன் ஒருவன் ஆடுகிறான். ஆடிக்கொண்டே தாயத்தொன்றை பௌசியாவுக்குக் கொடுக்கிறான்.

எப்படியோ இரவு பன்னிரண்டு மணியளவில் களைப்பும், பயமும், வேதனையும் ஒன்று சேர பௌசியா தூங்குகிறாள். எல்லோரும் சேர்ந்து அவளை உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

“சூனியப் பேய் விடைபெற்று விட்டான். இனிப் பயமில்லை ” மந்திரவாதி கூறுகிறான்.

விடிய விடிய ஒப்பாரியும், டும், டும், டும் மேளமும்…. நான் எத்தனை மணிக்குத் தூங்கினேன் என்று எனக்கே தெரியாது.

அடுத்த நாள் காலை ஒன்பது மணியிருக்கலாம். பௌசியாவின் அலறல் எனக்குக் கேட்டது. இரவு தானே சூனிய தெய்வத்துக்கு லஞ்சம் கொடுத்து – இல்லை நேர்ச்சை கொடுத்து – அனுப்பி விட்டார்கள். இப்பொழுது எந்த தெய்வம் வந்து பிடித்திருக்கிறது? இப்படி நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது கார் ஒன்று வந்து நிற்கிறது..

வராந்தாவுக்கு வந்து பார்த்தேன். அன்வர்தீன் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் செல்கிறான். சிறிது நேரத்தில் பௌசியாவை அழைத்துக்கொண்டு வந்து காரில் அமர்த்துகிறான். கைறுதாத்தாவும் காரில் ஏறிக்கொள்கிறார். கார் போய் விடுகிறது. அன்வர்தீன் பௌசியாவின் சகோதரன். தப்லீகில் ஈடுபட்டு இஸ்லாத்துக்கு விரோதமான அறிவற்ற விஷயங்களை ஆணித்தரமாக எதிர்ப்பவன். வியாபார நோக்கமாக வெளியூர் சென்றிருந்தவன் எப்பொழுது வந்தான் எனத் தெரியாது. இப்பொழுது தங்கையை அழைத்துக்கொண்டு டொக்டரிடம் செல்கிறான். இப்பொழுதான் என் மனத்துக்கு நிம்மதி

பிற்பகல் ஒரு மணி இருக்கும். கார் வருகிறது. அன்வர்தீன் மட்டும் காரிலிருந்து இறங்கி வருகிறான். நான் அன்வர்தீனை அணுகி விஷயத்தை அறிந்து கொண்டேன். தங்கை ஆஸ்பத்திரியில் துணைக்கு உம்மா நிற்கிறாராம். பின்னேரம் சென்று பார்க்கலாம் என்றான்.

பின்னேரம் நானும் அன்வர்தீனும் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அங்கே பௌசியா கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. பக்கத்தில் கைறுதாத்தா இருந்தார். சுயநினைவு வர சில நேரம் செல்லும் என்பதை அறிந்து கொண்டேன்.

அன்வர்தீனும், அவன் உம்மாவும் அழுது அழுது பேசிக் கொண்டிருந்தனர். நான் அதில் பங்கு பற்றாமல் ஒவ்வொரு கட்டிலையும் நோட்டமிட்டேன்.

ஒவ்வொரு கட்டிலிலும் எக்ஸ்ரே நெகடிவ் படமொன்றும், நோயின் விபரங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

நான் பௌசியாவின் கட்டிலில் இருக்கும் நோயின் விபரங்களை வாசித்துப் பார்த்தேன்.

அவசரமாக ஒபரேஷன் செய்யப்பட வேண்டிய குடல் வளரி நோய் என எழுதப்பட்டிருப்பதை மட்டும் வாசித்தேன். மேலும் விபரங்கள் புரியவில்லை .

யா அல்லாஹ்…..என்ன அறிவு கெட்ட சமூகம்! கண்ணிருந்தும் குருடர்களாக….இன்னும் சிறிது தாமதித்தால் அநியாயமாக ஒரு உயிர் பலி போய் இருக்குமே. நோய்க்கு மருந்து இருக்கும் போது எல்லாம் மந்திரம் என எண்ணுகிறார்களே. என்ன மௌட்டீகம்! நம் சமூகம் இந்த அவல நிலையை எப்பொழுது கைவிடும்?

“நம்பிக்கையுடன் விசுவாசம் கொண்டு நேர்மையாக வாழ்ந்து வருபவர்களுக்கு எங்கு திரும்பினும் அன்பே ஆலிங்கனம் செய்யுமாறு அல்லாஹ் ஆக்கிவிடுகிறான் (19-26)” என்ற திருக்குர்ஆன் திருவசனம் அலையும் என் மனதுக்கு அமைதியைத் தந்தது.

– இன்ஸான் – 1967.10.20, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *