சுவர்க் கிறுக்கிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 7,152 
 
 

(இதற்கு முந்தைய ‘இசக்கியின் பள்ளிப் பருவம்’ படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

ஊர் சுவர்களில் தன்னைப்பற்றி நக்கல் செய்து கண்டபடி எவனோ எழுதிப் போட்டுக்கொண்டு திரிந்ததைப் பார்த்தபோது இசக்கிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது.

எழுதினது யாரென்று தெரிந்தால் வேகமாகப் போய் அவன் மண்டையை உடைக்கலாம். அர்த்த ராத்திரியில் அல்லவா பயந்தாங்கொள்ளிப் பயல்கள் எழுதிப் போடுகிறார்கள்.

பார்த்தான் இசக்கி… அவனும் ஒரு அடுப்புக் கரியை எடுத்தான். பட்டப் பகல்லேயே பயப்படாமல், ‘நீ நல்லவனா இருந்தா என்னை மாதிரி பட்டப் பகல்லேயே எழுது! பொம்பளை மாதிரி ஒளிஞ்சிகிட்டு ராத்திரியில எழுதாதே’ இதை பெரிசு பெரிசாக எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டான். மறுநாள் பொழுது விடிந்து பார்த்தால் இசக்கிக்கு பதில் எழுதப் பட்டிருந்தது.

“நீ கெட்டிக்காரனாக இருந்தால் நான் யார்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்…”

“கண்டுபிடிக்கதாண்டா போறேன்.. அப்ப பாரு ஒன் கையை ஒடிக்கிறேன்…” இசக்கி பதிலுக்கு எழுதினான்.

“ஓடிப்ப, ஓடிப்ப, அதுவரைக்கும் எங்க கை புளியங்கா பறிச்சுகிட்டு இருக்கும்…” “பாக்கத்தானே போறேன் அதை.”

எழுதியது போலவே இசக்கி அடுத்த ரெண்டாவது நாளே பார்த்து விட்டான். உத்தேசமாக நடு ராத்திரியில் எழுந்து நான்காவது கீழ்க்கடைத் தெருவில் ஒளிந்து நின்று கவனித்தபோது சுவரில் எழுதிப்போட மறைந்து மறைந்து வந்தான் பெருமாள்பிச்சை.. இசக்கி அவன் மீது பாய்ந்துவிட்டான். அவனின் அத்தனை வருச தீனி ஒவ்வொன்றும் பெருமாள்பிச்சையை ‘ஏண்டா எண்டா’வென்று கேட்டது. துரத்தித்துரத்தி அடித்தான் இசக்கி.

பெருமாள்பிச்சையால் புளியங்காயா, புளியம்பூ கூடப் பறிக்க முடியாது இனிமே; அந்த அளவுக்கு ரெண்டு முட்டிக் கையையும் பயங்கரமாக பேத்து விட்டான் பேத்து! பாவம் பெருமாள்பிச்சைப் பயல் நொண்டிப் பிச்சையாகி விட்டான். அவ்வளவுதான் எப்பவும் போல் பாளையங்கோட்டை ஊரே கூடிவிட்டது.

“பாத்தீகளா அந்த எமப் பய பிச்சையை எப்படிப் போட்டு அடிச்சிருக்கான்னு.. யாரும் அவன்கிட்டப் போயிடாதீங்க.”

“ஹனுமான் லங்காபுரியை தாக்கினமாதிரி தாக்கியிருக்கான்யா..

“பெருமாள்பிச்சைக்கும் நல்லா வேணும். ஒரு வாட்டி ஆசைக்கு எளுதிப் போட்டுட்டு கப்சிப்னு இருந்திருக்க வேண்டியதுதானே! சும்மா கொழுப்பு படிச்சி தினம் தினம் எளுதிப் போட்டுகிட்டு இருந்தா இசக்கிப் பயலும் மனுசனா மாடா பாத்துகிட்டே சும்மா கிடக்க…”

“எனக்கு ஒரு ஆச்சரியம்… இசக்கிப் பயலுக்கு எப்படி இவ்வளவு தூரத்துக்கு எளுதத் தெரிஞ்சுது?”

இவைகளெல்லாம் நடந்த பிறகும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு இசக்கி நடுத்தெரு பள்ளிக் கூடத்துக்குக் கிளம்பி விட்டானென்றால் அவனுடைய ஒரு மாதிரியான அறியாமையைப் பற்றி என்ன சொல்ல?

ஆனால் ஒண்ணு, பெருமாள்பிச்சைக்கு சரமாரியாக தர்ம அடி கொடுத்த இசக்கியிடம் ஊர்சனம் கொஞ்சம் உஷாராகிவிட்டது. அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்று சொன்னவன் வாய்க்கு சீனிதான் போடவேண்டும். அடி விழுந்த பிறகுதான் ஊர்வாயும் கொஞ்சம் அடங்கியது. இதற்குப் பிறகுதான் இசக்கிக்கு அண்ணாச்சி என்ற மரியாதையெல்லாம் கிடைக்கத் துவங்கியது..! அஞ்சாம் வகுப்பில் இசக்கியுடன் படித்த சில பயல்களே அவனை அண்ணாச்சி என்று பயந்துபோய் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அண்ணாச்சி அவர் பாட்டுக்கு பெருமாள்பிச்சைக்கு கொடுத்த பூசையைக் கொடுத்தால் யார் தாங்குவது.. !?

இப்போதுதான் ஒரு எதிர்பாராத விசயம் நடந்துவிட்டது. நடுத்தெருப் பள்ளிக் கூடத்து ஹெட்மாஸ்டர் அல்போன்ஸ் பிள்ளை சத்தம் போடாமல் ரிடையர்ட் ஆகிப் போய்விட்டார். புதிதாக வந்த டேவிட்பீட்டர், பத்தொன்பது வயசோ இருபது வயசோ ஆகிவிட்ட ஒரு பெரிய பையனை அஞ்சாம் க்ளாஸில் தொடர்ந்து வைத்திருக்க முடியவே முடியாதுன்னு சொல்லி டிசி கொடுத்து இசக்கியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அதற்குமேல் என்ன செய்வான் இசக்கி? எழுந்து வந்து விட்டான்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, சில வீட்டுச் சுவர்களில் ‘அஞ்சாம் வகுப்பு மாணவி ரம்யாவுக்கு கனகாம்பரம் பூ வாங்கிக் கொடுத்த புது ஹெட்மாஸ்டர் டேவிட்பீட்டர் ஒழிக’ என்று பெரிதாய் எழுதப் பட்டிருந்தது. நிறைய பேருக்குச் சந்தேகம் இசக்கி அண்ணாச்சிதான் எழுதிப் போட்டிருப்பாரென்று! ஒன்றிரண்டு பேர் இசக்கி அண்ணாச்சியிடம் ஜாடை மாடையாய் கேட்டுப் பார்த்தார்கள்.

தான் எழுதவே இல்லையென்று அண்ணாச்சி துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்தார்..! விட்டு விட்டார்கள். ஆனால் டேவிட்பீட்டர் அப்படி எழுதிப் போடப்பட்ட ஆறாவது நாள், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓட்டம்பிடித்து விட்டார்.

கேக்கணுமா பாளை ஜனங்கள் பேசுவதற்கு? ஊர் சத்தியமாக அது இசக்கி அண்ணாச்சியின் கைவரிசைதான் என்று நம்பியது. ஆனால் அதை நாலு பேருக்கு கேட்கும்படி யாரும் பேசிக்கொள்ளவில்லை. அது ஏன் என்பது எல்லோருக்கும் ரொம்பத் தெரிந்ததுதான்…!

இப்படியாக இசக்கிப் பாண்டியின் படிப்பு அஞ்சாம் வகுப்போடு நின்று போய்விட்டது. பூரணிக்கு மகனை என்ன செய்வதென்று தெரியவில்லை. கொஞ்சம் முதல் போட்டு சின்னக் கடை ஏதாவது வைத்துக் கொடுக்கலாமாவென்று யோசித்தாள். இசக்கியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு செட்டிகுளம் ஜோசியரிடம் போனாள்.

“இப்பக் கடைகிடை எதுவும் வச்சிக் குடுத்திராத… சல்லித்துட்டு தேறாது. அப்படி ஒரு மோசமான நேரம் இப்ப அவனுக்கு. கோச்சாரம் கொஞ்சம்கூடச் சரியில்ல. குரு விரயத்ல… ஆறு மாசத்ல ஜென்மத்துக்கு வேற வாறான். அட்டமச்சனி வேற. பிச்சிடும் பிச்சி! பேசாம பசார்ல யாரு கடையிலாவது சம்பளத்துக்கு சேத்துவிட்டுரு. ரெண்டு வருசத்துக்கு வியாபாரத்தையும் தெரிஞ்சிகிட்ட மாதிரியும் இருக்கும். ரெண்டு வருஷம் கழிச்சி சொந்தத் தொழிலை ஆரம்பிச்சுக் குடு. ஓஹோன்னு வருவான். பேரும் புகழுமா இருப்பான்….”

“கல்யாணம் சாமி?”

“ரெண்டு வருஷம் கழிச்சி தானா வரும். ஆனா ஒண்ணு. ஒன் மவனுக்கு ரெண்டுதாரம்..” பூரணி எழுந்து வந்துவிட்டாள். ஜோதிடர் ரெண்டுதாரம் என்று சொன்ன ஒண்ணைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மகனிடம் சொன்னாள்.

“சரியாப்போச்சு… நடுத்தெரு பள்ளிக்கூடத்ல இத்தனை வருசம் படிச்சிக் கிளிச்சிட்டே. இனிமே கடையிலே சேந்து கிளிக்கப் போறியாக்கும்?” கிண்டலடித்தான் கூடப் படித்த பவளக்காரன்.

“எங்களுக்குத் தெரியும், உன் சோலியைப் பாத்துகிட்டு போடா” என்றான் காட்டமாக இசக்கி.

“போகாட்டி என்னடா பண்ணுவ?”

“ஒன்னைப் பத்தியும் ஏதாவது சுவத்தில எளுதிப் போட்டுடுவேன், ஜாக்கிரதை…”

“ஏய் அப்ப நீதானே புது ஹெட்மாஸ்டர் பத்தியும் அப்பிடி எழுதிப் போட்டே?”

பவளக்காரன் சரியாகப் பிடித்து விட்டான். எங்கேயாவது இப்படி ஒரு விடப்பயல் இருப்பானா? தன் வாயாலேயே அநியாயமாக உளறிக்கொட்டி வைப்பானா? மாட்டிக்கொண்டு விட்டோமே என்று ஒரு நிமிசம் திரு திருவென்று இசக்கி முழித்தான். பேய் முழி. பிறகு பவளக்காரனைப் பாத்து “வெவ்வவ்வே..”என்று அழகு காட்டிவிட்டு வீட்டிற்குள் ஓடிப்போய் விட்டான். சும்மா இருப்பானா பவளக்காரன்? ஏற்கனவே கெட்டசாதிப்பயல் அவன்.! விடுவானா இவ்வளவு பெரிய விசயத்தை… தெரிந்தவர்களிடத்தில் எல்லாம் போய் ஓதி விட்டுவிட்டான்.

அதைக்கேட்டு நடுத்தரப் பள்ளிக்கூடத்து செயலாளர் இசக்கியை வரச்சொல்லி விசாரித்தார். தான் எழுதவே இல்லையென்று இசக்கி சாதித்துவிட்டான். எனினும் பள்ளிக்கூடச் செயலாளர் அவன் பேச்சை நம்பவில்லை. ஆனாலும், இல்லைன்னு சொல்ற பயலை என்ன பண்ண முடியும்? “இந்த செந்தூர்க்காரன் வேலையை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே..!” என்று ஒரு மிரட்டல் மிரட்டி அனுப்பிவிட்டார். அந்தச் செயலாளரை ஒண்ணுஞ் செய்ய முடியவில்லையே என்ற கோபத்துடன் இசக்கி வீடு திரும்பிவிட்டான். செயலாளரைப் பற்றி தெருச் சுவரில் ஏதாவது எளுதிப் போடலாமாவென்று ஒரு நிமிசம் அவனையும் மீறி ஒரு நினைப்பு இசக்கிக்குள் ஏற்பட்டது. ஆனாலும் ஏதோ ஒரு புத்திசாலித்தனம் அவனை அப்படி எழுத விடாமல் காப்பாற்றி விட்டது.

தப்பித் தவறி அவரைப்பற்றி மட்டும் எழுதியிருந்தால், அடிபட்டே செத்திருப்பான். பிழைத்தான் இசக்கி. ஆனால் பிழைத்துத்தான் என்ன செய்ய? பாளை வியாபாரிகள் எவரும் அவனுக்குத் தங்கள் கடையில் ஒரு சின்ன வேலைகூடப் போட்டுத்தர தயாராக இல்லையே..

அஞ்சாம் வகுப்பிலேயே மீசை முளைத்த இசக்கிப் பயலைத்தான் பிடிக்காதே அவர்களுக்கு! ஊருக்கு இளைத்தவன் ஆயிற்றே இசக்கி?

எப்படிப் பிடிக்கும்? அதுவும் இல்லாமல், நாளைக்கு வேலை கொடுத்த அவர்களைப் பற்றியே அசிங்கம் அசிங்கமாக கண்ட சுவரிலும் எதையாவது அந்தப் பயல் எழுதித் தொலைத்து விட்டால் என்ன பண்ணுவது? சந்தியில்ல சிரிச்சுப்போகும்! வேறு சிலருக்கு, வேறு மாதிரியான பயம் – வேலை தரமுடியாது என்று சொன்னாலே இசக்கி தங்களைப்பற்றி எதையாவது எழுதிப்புடுவானோவென்று. அவர்களைப் பற்றி எழுதுவதற்குத்தான் வண்டி வண்டியா விசயம் கெடக்கே..! ஆனா எழுதிப் போட்டுடுவான் என்பதற்காக வேலை கொடுத்து விடமுடியுமா? ‘அதெப்படி… என்னெத்தைப் பண்ணிப் புடுவான்னுதேன் பார்க்கலாமே’ன்னு சொல்லி வியாபாரிகள் ரெட்ணகால் போட்டு ஆட்டியபடி உட்கார்ந்திருந்தார்கள்.

பூரணி தெப்பத்து மேட்டைச் சுற்றி இருக்கிற அத்தனை வியாபாரிகளின் கடைகளிலும் ஏறி இறங்கிப் பார்த்துவிட்டாள். ஒருத்தர்கூட மசிந்து கொடுக்கவில்லை. சொல்லி வைத்த மாதிரி எல்லா வியாபாரிகளும் ஒரே பஞ்சப்பாட்டு பாடினார்கள். வெறுத்துப்போய் விட்டது பூரணிக்கு. இசக்கியை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப் பட்டபாடு மாதிரிதான் இருந்தது, அவனைக் கடையில் சேர்த்து விடுகிற பாடும்.

“கடையும் வேண்டாம், ஒரு புண்ணாக்கும் வேண்டாமென்று” சொல்லிவிட்டு இசக்கி லட்சுமண செட்டியார் கிணற்றுப் பக்கம் வட்டக் கெண்டை மீன் பிடிக்கப் போய்விட்டான். பாக்கிறதுக்கு வட்டக் கெண்டை பொம்பளைப் பிள்ளைகளின் அழகான அகலமான கண் மாதிரி இருக்கும். இன்றைக்குப் பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். அதுமாதிரி வட்டக் கெண்டையின் உடம்பு நடுவில் ஒரு கறுப்புப் பொட்டு இருக்கும். அந்தப் பொட்டுதான் பார்க்க அதைக் கண் மாதிரி காட்டும்.

லட்சுமண செட்டியார் கிணற்றில் வட்டக் கெண்டை அநியாயத்துக்குக் கிடக்கும் பள்ளிக்கூடம் லீவு விட்டுவிட்டால், ஊர்ப் பையல்கள் அத்தனை பேரும், வட்டக் கெண்டை பிடிக்க அந்தக் கிணற்றிலேதான் கூடிக் கிடப்பார்கள். இசக்கிக்கும் பொழுது போகணுமே! தினமும் பொழுது விடிந்ததும் கிளம்பிவிட்டான். பூரணிக்கோ என்ன செய்யறதுன்னு தெரியலை. மகனுக்கு ஏதாவது ஒரு நல்லவழி பண்ணி வைக்கணும். இந்த ஊர்க்கார சனங்களையும் உண்டு இல்லைன்னு ஆக்கணும். என்ன செய்யலாம்னு கிடந்து யோசித்தாள்.

இந்தக் கொழுப்புப் பிடித்த வியாபாரிகளுக்கு – கையில் துட்டு இல்லாத, சோத்துக்கே தாளம் போடுகிற, பெத்த தகப்பனும் இல்லாத ஒரு சாதாரண பனங்காட்டுப் பக்கம் இருந்து பிழைக்க வந்த குடும்பத்துப் பையன்தானே இசக்கி? அந்த எண்ணத்தை மாத்திட்டா? இசக்கி, கையில் துட்டு உள்ள பயல்தான் என்கிறதை ஊர்சனத்துக்குக் காட்டிட்டா? பதினைந்து நாள் யோசித்த பிறகு பூரணிக்கு ஒரு எண்ணம் மனசில் பளிச்சென்று தோன்றியது.

வீட்டிற்குள் ரொம்ப வருசமாய் புதைத்து வைத்திருந்த புருசனின் பணத்தை, மகன் இல்லாத நேரத்தில் தோண்டி பத்திரமாக எடுத்து அலமாரியில் இருந்த தன்னுடைய சேலைகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள். தெரிந்த கொத்தனார் ஒருவரைப் போய் கூட்டிக்கொண்டு வந்தாள். “தைப் பொங்கலுக்கு வீடு பூரா வெள்ளையடிக்கனுமா?” கொத்தனார் கேட்டுக்கொண்டே படியேறி வீட்டுக்குள் வந்தார்.

“இல்லை அண்ணாச்சி, மேல் மாடியில் ஒரு மச்சி எடுக்கணும்…”

“மச்சியா? அதுக்கு துட்டு தலைக்கு மேல வேணுமே தாயி.”

“பரவால்ல… மச்சி கட்டித் தந்திருங்க. அப்படியே வீடு பூரா நல்லா கொத்தி விட்டு, காரை பூசி வெள்ளையடிச்சு கதவு, நெலை, சன்னல் அம்புட்டுக்கும் வார்னிஷ் அடிச்சிப்பிடுங்க… பாத்தா புதுவீடு கணக்கா இருக்கணும். என்ன செலவானாலும் அதப்பத்தி கவலையில்லை…”

“…………………… ?”

“இந்த வீடு வாங்கி இருபது வருசமாகுது. வாங்கினப்ப அடிச்ச வெள்ளை அப்படியே பிசுக்குப் பிடிச்சி கெடக்குது. அதேன் முழுசா எல்லா ரிப்பேரும் பாத்து செலவோட செலவா மச்சியும் கட்டிரலாம்னு பாக்கறேன். என் மகனுக்கும் வயசாகுதே! ரெண்டு மூணு வருசம் தள்ளி அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா, அந்த மச்சி அவனுக்குப் பிரயோசனப் பட்டுட்டுப் போகுமே..”

“ஒன் பிரியம் தாயி, ஒன் பிரியம். நா எதுக்குச் சொன்னேன்னா நீயும் புருசன் இல்லாத மனுசி. படிப்பே ஏறாத ஒரு புள்ளைய வச்சிக்கிட்டு, ஏதோ வீட்ல கடையை வச்சி பொழச்சிகிட்டு வரே.. மச்சி கட்றேன் கிச்சி கட்றேன்னு சொல்லி ஆழம் தெரியாம காலை விட்டுரக்கூடாது பாரு. அதேன் சொல்றேன், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சிக்க…”

“யோசிச்சிட்டுதேன் அண்ணாச்சி உங்களைக் கூப்பிட வந்தேன்.”

“அப்ப செலவைத் தாங்கிப்பே?”

“ஆமா, எவ்வளவு ஆனாலும் தாங்கிப்பேன்.”

“கடன் கிடன் எல்லாம் வாங்கிக் கட்டாத…”

“நா போயி எங்கே கடனும் கிடனும் வாங்கப் போறேன். அதுவும் இந்த ஊர்ல? என் மவனுக்கு ஒரு வேலை தர மாட்டேங்கிறாக இந்த ஊர்க்காரக… நம்பி எனக்குக் கடன் குடுத்துடுவாகளோ?”

“இத்தனை வருசமா வெள்ளைகூட அடிக்காம பாழடைஞ்சி போய்க் கிடந்த வீட்டுக்கு இப்பத்தானா விமோசனம் வருது? பாரு தாயி, சீக்கிரமே ஒன் மகனுக்கும் நல்ல நெலைமை வரப்போகுது பாரு. அப்ப நெனைச்சிப்ப அன்னைக்கே கொத்தனார் சொன்னாரேன்னு.”

“ஒங்க வாக்கு பலிக்கட்டும் அண்ணாச்சி.”

சொல்லும்போதே பூரணிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். புருசனும் இல்லாமல் மகனுடன் இந்த வீட்டில் எத்தனை கஷ்டம் பட்டு விட்டாள்.. எத்தனை அவமானம், எத்தனை பரிகாசம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *