கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,509 
 
 

“அம்மா , தபால் ….!”

தபாற்காரன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அழைத்தான்.

“அப்பா எழுதியிருப்பார்! இந்த விடுதலைக்கு இங்கேயே வந்துவிடு என்று!”

கையிலிருந்த புத்தகத்தை அப்படியே மேசையிற் போட்டுவிட்டு, எழுந்து தெருக்கதவை நோக்கி ஒல்கி ஓசித்து, நடந்தாள் ராஜலட்சுமி.

“சே! அப்பாவினுடைய கடிதம் நேற்றுத்தானே வந்தது. இன்றைக்கும் எதற்காக அவர் எழுதப்போகிறார்!”

“ஒருவேளை யாராவது சினேகிதிகள் எங்கேயேனும் வரும்படி- வந்து சந்திக்கும் வண்ணம் – கேட்டு எழுதி யிருக்கலாம்”

“அப்படியென்றாலும் எனக்கு யாரிருக்கிறார்கள்? — –சிநேகிதி என்ற பெயரில் ….!”

“தங்கம்!- அவள் போன மாதங்கூட என்னைப் படம் பார்க்க – யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலே வந்து சந்திக்கும்படி எழுதியிருந்தாளே! இந்த முறையும் அப்படித் தான் ஏதாவது … அழைப்பிதழ் வந்திருக்குமோ!”

“அல்லது அத்தான்? எத்தனையோ நாட்களாகிவிட் டன. அவர் எனக்கு ஏன் எழுதப்போகின்றார்? – எல்லாம் முடிந்த பின்பும் என்னை ஏன் திரும்பிப் பார்க்கப்போகிறார்!”- எண்ணங்கள் கரை புரண்டோடின. தனது ஆலிலை போன்ற உதரத்தை மெதுவாக வருடிக்கொண்டாள் அவள்.

தபாற்காரனை அணுகியதும் அவளின் நினைவுத் தொடர் அறுந்தது.

“உங்களுக்கு ஓர் அழைப்பிதழ்…!”

தபாற்காரன் வார்த்தையை முடிக்கவில்லை. அவளின் மீது அவனுடைய பார்வை விழுந்ததும், பேச்சுத் தடைப் பட்டது.

நழுவிக் கீழே விழுந்து , உடலின் முழு அழகையும் வெட்ட வெளிச்சமாகக் காட்டப்போன தாவணிச் சேலை யை மேலே இழுத்து – தோளை மூடினாள்.

அவன் தன்னை யேபார்த்துக்கொண்டு நிற்கிறான், என் மறதும் அவளின் கண்கள் நிலத்தைச் சரணடைந்தன ……… இமைகள் பல தடவைகளாக வெட்டி, வெட்டி மூடின … காற்றிலே, எண்ணம்போல அலைந்து திரிந்த தனது கேசச் சுருள்களை ஒதுக்கிவிட்டுக்கொண்டே ”அழைப்பிதழ்’என்று அவன் சொன்ன அந்தப் பத்திரத்தை வாங்கினாள், ராஜலட்சுமி.

“யாருடையதாக விருக்கும்?”

கண்ணிலே இனம் புரியாத கேள்வி குறிபோட்டது. அழைப்பிதழை வாங்கும்பொழுதே தென்றலிலே சலசலக் கும் பூங்கொடிபோல, அவளுடைய மெல்லிய கரமும் சிறிது நடுங்கத்தான் செய்தது.

இதயத்தின் துடிப்பு ! அதனைப் பிரதிபலிப்பன போலக் கண்ணிமைகளின் படபடப்பு…

தபாற்காரன் பத்திரத்தைக் கொடுத்துவிட்டு, மீண் டும் அவளுடைய அழகை ஒருமுறை ரசித்துவிட்டு, சிட் டைப்போலச் ‘சைக்கிளி’ற் பறந்துவிட்டான்.

இரண்டு கைகளின் விரல்களும் அந்த அழைப்பிதழைப் பற்றியிருந்தன… தபாற்காரன் போன திசை வழியே கண்களும் சிறிது சென்று மீண்டன.

பருவத்தின் துடிப்பு அந்தப் பார்வையிலேயிருந்தது. செயலுக்குச் செயல் என்பது போல, அவள் வந்து கொண்டிருந்தபொழுது அவளைத் தபாற்காரன் இமை கொட்டாமற் பார்த்து, நின்றானே!… பார்வையா அது?

கட்டுக்குலையாத பட்டுப்போன்ற மேனியி லிருந்து வழிந்தோடும் அழகை அவனும் பருகினான்! இதிலே தவறு தான் என்ன?

ராஜலட்சுமியும் அவனை ஒருமுறை பார்த்து வைத் தாள் … அதிலும் தவறில்லையே! …….. பருவம் நிறைந்து— தளம்புகிறது! அதன் பளபளப்பிலே எவருடைய முக மும் பிரதிபலிக்கத்தானே செய்யும்?

தபாற்காரன் மட்டுமா அப்படிப் பார்த்தான்? அவள் பாடசாலையை நோக்கி அன்ன நடை பயின்று போகும் பொழுதும், வரும்பொழுதும்–எதிர் வீட்டு ஐந்து நிரம் பாத சிட்டுப் பையனிலிருந்து– தெருக்கோடியில் வெற்றி லைக் கடை வைத்திருக்கும் கிழவனுங்கூடத்தானே பார்க் கிறார்கள் … ஏன்? வேலிப் பொட்டுக்களினூடாக அவள் மேல் எறியப்படும் விழிவேல்கள் தாம் எத்தனை?… அந்தப் பார்வைளில்தான் எத்தனை பொருள்கள்?

‘யாருக்குத் திருமணம்?’ ராஜலட்சுமியினுடைய கண்கள் மேலட்டையிலிருந்த குத்துவிளக்கு–சருவம்– மாவிலை – தேங்காய் – கொண்ட படத்தைக்கண்டுவிட்டன.

திருமண அழைப்பிதழ்தான் எனக்கேன் வர வேண்டும்? ‘நான்’ குடும்பசமேதரராய்ச் சென்று மணமக்களை ஆசீர்வாதஞ் செய்யத் ‘தகுதி’யற்றவளல்லவா? தகுதியென்று அப்படி எதுவுமில்லை! எனக்கு இன்னமுந் திருமணம்-பலரறிய – ஆகவில்லையே!…..

“திருமணம்!” என்ற நினைவினால் ராஜலட்சுமியின் கன்னங்கள் கோவைக் கனிகள் போலச் சிவந்துவிட்டன! செவ்விதழ்களின் ஓரங் களில் இளநகை ஒன்று மின்னலைப்போலத் தோன்றி மறைந்தது. மார்பகம் ஒருமுறை உயர்ந்து பதிந்தது.

அவ்வளவும் ஏக்கத்தின் சாயல்கள் என்று சொல்ல முடியாது! இன்பத்தின் பூரிப்பு! எதிர்கால எண்ணங்க ளின் – கற்பனையின் – ஊற்றுக்கள் ! அவற்றுக்கான அறி குறிகள் தாம் அவளிடந்தென்பட்டன.

ராஜலட்சுமி அந்த அழைப்பிதழைத் திறந்து பார்த் தாள்?……

பிள்ளையார் சுழியுடன் தொடங்கியிருந்த அதனை அவ ளால் வாசிக்கமுடியவில்லை … கன்னி மனம் கேட்டால் தானே? அவ்வளவு அவசரம்!

பொது ஓட்டமாக அவளுடைய காந்தம் பாய்ச்சுங் கண்களிரண்டும், பெரிய எழுத்திலே பொறிக்கப்பட்டி ருந்த மணமகனின் பெயரைக் கவ்வின!

“ஐ… ய்யோ !” நெற்றி நரம்பு புடைத்தெறிந்தது.

அந்த விசையால் இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே வருவது போன்று நெற்றியிலிருந்து வியர்வை சிந்தியது. கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தங்கச் சங் கிலியுடன் முத்து, முத்தாக விழுந்துகொண்டிருந்த அந்த வியர்வைத் துளிகள் போட்டி போட்டன…..

உடம்பெல்லாம் ஒரே வியர்வை.

ஆடைகளுடன் அது மிகவும் ஐக்கியமாக ஒன்றி உறைந்தது.

ஏன் அப்படியெல்லாம் வியர்த்துக்கொட்ட வேண்டும்?

நெற்றியிலே யாரோ எதிர்பாராமல் தடிகொண்டு அடித்த பிரமை, ஏன் ஏற்படவேண்டும்? அவளைத் தவிர ஏனைய பொருள்கள் எல்லாம் அவளைத் தனியே விட்டு, எங்கேயோ ஓடிப்போவன போன்று-ஏன் ‘தலைகர்ணமா க’ச் சுழல வேண்டும்?

ராஜலட்சுமி நிலை தடுமாறி நிலத்திலே விழப்போ னாள்! நல்ல காலம்! கம்பிக்கதவு அவளுக்கு உதவியது. ஒரு கையாற் கதவின் நிலையைப் பற்றிக்கொண்டு, மறு கையிலிருந்த அந்த அழைப்பிதழைப் பார்த்தாள், அவள்.

‘ஆம்! சந்தேகமேயில்லை, அவரேதான். அதே முகவரி …. அதே பட்டம்…ஏன்? முதலெழுத்துக்கூட அதேதான்!’

எழுந்த ஐயம் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது! ஆனால் உள்ளத்திலே வீசிய புயல் … அடங்கவில்லை- மறை யவுமில்லை. பதிலாக – ஒரே சோகப்புயல் பேய்க்காற்றாக வீசிக்கொண்டிருந்தது.

கண்களிலே ஓடிக் கன்னங்களையே கறுக்க வைத்தி ருந்த நீரின் உருவில் வெளிவந்த இரத்தத்தைத் துடைத் தாள், அவள் !

அவளுடைய விரல்கள் முகத்துடன் ஒன்ற மறுத்தன. – நெஞ்சத்தின் துடிப்புக்கு ஏற்றாற்போல, அவை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தன.

‘நானே என் கண்ணீரை எப்படித் துடைப்பேன்? இனி வாழ்நாள் முழுவதும் …ஐ…ய் …யோ!’

ராஜலட்சுமியினால் மேற்கொண்டு எதையும் நினைக்க முடியவில்லை .

‘கண்ணீர் துடைத்த கரம், என்று யாருமில்லையே! …. அப்பா!—என்னுடைய கவலைகளை எப்படி அறியப்போகி றார்? அவரால்தான் எனக்கு என்ன செய்ய முடியும்? அவர் அங்கே! நான் இங்கே!’

அடி மனதில் எழுந்த உணர்ச்சிகளையும் மீறிக் கொண்டு, கட்டு மீறிச் சிதறும் நீர்த்துளிகளைப் போல நினைவில் இந்தச் சொற்கள் மின்னி மறைந்தன.

”துரோகி!” வந்த ஒருபெருமூச்சுடன், இந்தவார்த்தையும் புறப்பட்டுக் காற்றுடன் கலந்தது, உள்ளுக்குள்ளேயே குமுறிக் குமுறி, கடைசியிற் ‘படார்!” என்ற பேரொலி யுடன் வெடிக்கும் உயிர் எரிமலை போல

“யாரோ கல்யாணஞ் செய்துகொள்ளப் போகிறார் கள்! அதற்காக நீ ஏன் இப்படி அழவேண்டும்?” கையிலே திருமண அழைப்பிதழுடன் நின்றுகொண்டிருந்த ராஜலட் சுமியை யாராவது கண்டால் இப்படித்தான் கேட்பார் கள்.

ஆம்! அவள் ஏன் அழவேண்டும்? உலகத்தையே வெறுத்து ஓடி மறைய – ஏன் துடிக்கவேண்டும்?

நன்றாகப் பொருந்தித் துடிப்பை அப்படியே பறை யடிக்கும் அவளுடைய எரிமலர்ப் பவள அதரங்கள், அகல விரியப்பிணைப்பு அறுபட்டது!

நினைவுத் திரையில் அவனுடன் இதுவரையும் கொண் டிருந்த இணைப்பும் அறுந்துவிட்டது, போன்ற பிரமை! ….

“ஐ…ய் – யோ! நான் என்ன செய்வேன்?”- ஏங்கித் தவிக்கும் ஓர் அபலையின் தீனக் குரல், காற்றினால் அடித்துக்கொண்டு போகப்பட்டது. மெல்லிதாக வீசி, அவளு டைய வெம்மையைத் தணிக்க வேகமாக வீசிக்கொண் டிருந்த காற்றாவது, அந்தச் செய்தியைக் கொண்டுபோய் அவனுடைய காதிலே போட்டாலென்ன?

ராஜலட்சுமி தலைமயிர்க்கூட்டங்களுக்குள் தனது கை களைப் புதைத்தாள் ……

அவளுக்கு இனிப் புகலிடம் எங்கே ? முதுமையின் வாசலை எப்படிப் பிடித்து, அதனுள் நுழைந்து கொண் டிருக்கும் அப்பாவா? அம்மாவை அவள் பிறந்ததுடன் பறிகொடுத்துவிட்டு, அம்மாவின் இடத்தையும், அப்பா வின் இடத்தையும் தெய்வம் போல இருந்து காத்த அப் பாவால் இனிமேலும் என்ன செய்ய முடியும்?

ராஜலட்சுமி மதிலுடன் முகத்தை முட்டி, முட்டி வடிந்துகொண்டிருந்தாள். நெஞ்சம் உருகிக் கண்களை வாசலாக்கி- கண்ணீராகிப் பாய்ந்து கொண்டிருந்தது. அந்த நெஞ்சில் நிறைந்திருந்த ஓவியங்கள் எல்லாம் கரைந்து – இரத்தக்கண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது, காட்சிகள் மறைந்தன. நெஞ்சில் முதன் முதலாக இடம் பிடித்தவரின் உருவமுமே அற்றுப்போகும் வண்ணம் அழு தாள் – அழுதுகொண்டேயிருந்தாள்.

பூகம்பத்தின் போது பொங்கும் கடலலைகள் மரம், தடி, செடி, கொடி, மாக்கள், மக்கள் என்று சொல்லப் பட்ட அத்தனை அஃறிணை – உயர்திணைப் பொருள்களை யும் அள்ளிக்கொண்டு புரளுமாமே!. அதேபோல அவளு டைய உள்ளத்தின் குமுறலாற் கண்ணீர், எல்லா இன்ப நினைவுகளையும் … கட்டிய கோட்டை … கனவுகள் …. அத் னையையும் அடித்து வந்து கன்னங்கள் ….மணிக்கழுத்து ….. மார்பகம்… எல்லாம் உறையவிட்டது!

விரல்களினிடையே விளையாடிக் கொண்டிருந்த அழைப்பிதழை மறுபடியும் பார்த்தாள். அதரங்கள் ஒன் றையொன்று கவ்வின. உமிழ்நீர் தொண்டைக் குழியை யும் பிய்த்துக் கொண்டு சென்று பெருங்குடலில்வீழ்ந்தது.

“திருநிறை செல்வன் – க. சிவநாதன், பி.ஏ.ஒணர்ஸ்”

“ம்!” – வெறுப்பின் சாயல் அவளுடைய முகத்திலே மிளிர்ந்தது.

‘இந்தப் பெயரை நினைத்து எத்தனை நாட்கள் இன் பங் கொண்டாடியிருப்பேன்! ….. இனி எந்தப் பெயரைச் சொல்லி மகிழப்போகிறேன்?… அவருக்கென்ன? அவரோ ஆண்பிள்ளை! அவர் ராஜா மாதிரிக் கல்யாணம் செய்யப் போகிறார் ! நான் … நான்? ஓர் அபலை – பெண்! வாழ்க்கைப்படவும் முடியாது; வாழவும் முடியாது! எதை என்னாற் செய்ய முடியும்?… வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும், இந்த உலகத்திலே எப்படி வாழ்வேன்! …. இருந் தால் … ஐ ..ய்…..யோ… வீண் பெயர்… தெய்வமே!” மறு படியும் பார்த்தாள் :

‘ம்! … ஒணர்ஸ் என்று போட்டுவிட்டவுடன் மட்டும் வால் நீண்டுவிடாது- பண்பு – படிப்பு உயர்ந்துவிடாது. அதற்கேற்ப நடக்கவுந் தெரியவேண்டும்!’

கால்கள் தோற்றன – கண்கள் சென்ற வழியே கால் கள் திரும்பி விறு விறென நடை போட்டன.

தாயைக் கண்டதும் ஓடித் தாவியணைக்கும் பிள்ளையைப்போல, அசைந்து ஆடி – வீசிக்கொண்டிருந்த கடற் காற்று அவளுடைய அங்கங்கள் எல்லாவற்றையுந் தொட்டு விளையாடியது. போதாமல்- அவளுடைய ஆடை களையும் அப்புறப்படுத்தத் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தது. இந்தக் கண்ணில் நிறைந்த காட்சியைக்கண்டு, கடற்கன்னி வெட்கம் எதுவுமில்லாமல் அலைக்கரங்களாற் கைகொட்டிச் சிரித்தாள்.

ராஜலட்சுமியிடம் வந்து குடிபுகுந்த விரக்தி எல்லையை மீறியது.

‘இந்தக் கடற்கரையோரத்தில் தானே! -‘ அவளால் தொடர்ந்து அந்த இன்பசுக வேளைகளை நினைத்துப் பார்க் கவே முடியவில்லை.

‘கண்ணே ராஜி! என்னுடைய அப்பா சீதனம் என்று பார்க்கிறார் … அப்படியிருந்தாலும் உம்மை நான் கைவிட வேமாட்டேன்! …… நீரோ படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறி- ஆசிரியையாகவும் மாறிவிட்டீர். எனக்கு இன்னும் ஓராண்டு காலம்…!”

‘அதற்கென்ன குறைச்சல்?’

“மூன்று மாத லீவு விட்டிருக்கிறார்கள் …. உம்முடன் இப்படிக் கொஞ்சிக் குலாவத்தானே?”

”ஊஹீம்!”

“பேராதனைப் பூங்காவிலே நடத்தியது போதாதோ? அப்பா வீட்டிலே இல்லையென்ற துணிவுதானே உங்க ளுக்கு! இல்லையா?” “உமக்கு மட்டும் என்னவாம்?” இருவரும் கொல்லென்று சிரிக்கின்றனர்.

அவள் மறுபடியும கடலலைகளைப்பார்த்தாள். அவை -யும் அவளைக் கண்டு எள்ளி நகையாடுவது போன்ற நினைப்பு.

“ஏஎ! இப்படித்தான் முதலில் சிரித்தீர்கள்! இப் பொழுது மட்டுமென்ன, ஊஉம்!”

‘என்னைப் போல அபாக்கியவதி யாருமில்லை. பல்க லைக் கழகத்தாரின் உதவியுடன் ஒருவாறு படித்தேன்; பட்டம் பெற்றேன், ஆசிரியையும் ஆகிவிட்டேன். ஆனால் ….ஆனால்? கல்விச் செல்வத்தைப்போல என்னிடம் பொரு ளிருக்கிறதா? இல்லை… அதுதான் ஒரே ஒரு குறை-‘

அவள் தன்னையே ஒரு முறை கீழ்நோக்கிப் பார்த்தாள் ….

“உம்மைப்போன்ற அழகியை இந்த உலகத்திலேயே நான் காணவில்லை. பிரம்மாவின் திலோத்தமை நீர்”
எபோதும்! போதும்! உங்களுடைய வர்ணனை!”

“ஆமாம்! வாய்ப்பந்தலுக்கு மட்டும். எதுவித குறைவும் இல்லை… சொன்னமொழி மட்டும் தப்பலாம்!”

பெண்மை ஒருமுறை விம்மியது.

“என்னைவிட அவரை மயக்கியவள் …. செல்வதி …… பாக்கியசாலி. அவள்… அவள்?”

ராஜலட்சுமி அந்த அழைப்பிதழில் -சிவநாதனுடைய பெயரை அடுத்துக் காணப்பட்ட பெயரைப்பார்த்தாள் …

“த…ங்…க…ம்!”- கடலலைகளையும்விட அவளுடைய அலறல் பெரிய தாகக் கேட்டது. துன்பத்தைக்கண்டு அஞ் சும் பேதையுள்ளத்தின் ஓலம் உள்ளுக்குள்ளேயே எண்ணங்களை, மனக்கோட்டைகளை – உருவாக்கியிருந்த பருவத்தின் வெடிப்பு…..

ராஜலட்சுமியினால் மேலும் பொறுக்க முடியவில்லை…. அவசரம் அவசரம் அவளை ஆட்கொண்டது!

‘யார் அனுப்பியது? அவரா? அவளா?”

‘அவள் தான்! அவளே தான்! சிநேகிதி என்ற பெயரில் அனுப்பியிருக்கிறாள்; அவளுக்கு எது விளங்கும்? முதலிலே அவர் என்னுடைய கரம் பற்றிக் காதற்கதைகளை என் காதுகளிற் பேசிவிட்டார் என்பதை, என் தங்கம் எப்படி அறியப்போகிறாள்? அறிந்து தான் அவள் என்ன செய் வாள்? எதைத்தான் செய்யமுடியும்? ஆண்கள் மட்டும் காதலிப்பார்கள் – இன்பம் கொண்டு பின் கைவிடுவார் கள் … பணக்காரியோ, ஏழையோ எந்தப் பெண்ணுக் கும் மானம் – கற்பு- என்றலை இருக்கத்தானே செய்கின்றன?’

“தங்கம்- நீ அதிர்ஷ்ட சாலியடி — பாக்கியசாலி – நீ வாழவேண்டும் ! நன்றாக வாழவேண்டும்!”

குட்டைபோலக் கலங்கிய உள்ளத்தில் – அங்கே ஊறிய உணர்ச்சி வெள்ளத்தில்- மீன் குஞ்சுகள் துள்ளி னாற்போல, இந்த வார்த்தைகள் துள்ளி வெளிவந்தன. ‘தங்கம் வாழவேண்டும் ‘ என்று அவள் மனப்பூர்வமாக விரும்பினாள், என்பதைக் கண்களின் அடிவாரத்தில் துளித்த கண்ணீர்த் துளிகளும், பவளவாயிற் பாதிவரை வந்து திரும்பிய முத்தார முறுவலும் எடுத்துக் காட்டின.

‘நான் தான் மோசஞ் செய்யப்பட்டுவிட்டேன்! என்னுடன் வாழவதை அவர் விரும்பவில்லை”

‘ஏன் விரும்பவில்லை? படித்த நாட்களிற் பாதி நாட் கள் உன்னுடன் தானே வாழ்ந்தார்! ஒரு நாளில் அரை நாளாவது உன்னைக் காணாமல் – கண்டு கதையாமல் – சேட்டைகள் செய்யாமல் அவருடைய பொழுதுபோனதா?….’ – மனச்சாட்சி கொன்றது.

“ஐ….ய் … யோ !”

‘அவருடைய அப்பா பெரிய வக்கீல்! … அதற்கேற்பப் பொருள் வேண்டும்!… அதற்கு டாக்ரரின் மகள் தங்கம் தானே சரி…. ஓர் ஏழை வயிற்று மகள் நான்!’ வாய்விட்டு அலறினாள் அவள்!

‘காதல் காதல் … காதல் … இந்தமூன்று எழுத்துக் களும், பணம்…பணம்… என்பதால் எப்படித்தான் மறைக் கப்படுகின்றனவோ?’-அறிவு அவளைக் கேட்டது.

‘என் கதி எப்படியாகுமோ? தெய்வமே!’ இரண்டு கைகளையும் மார்பிலே வைத்து வேண்டினாள்.

கடலோரத்தில் நின்றுகொண்டிருந்த அவளுடைய பாதங்களைக் கடலலை வந்து நனைத்துக் குளிர்மையை ஊட்டிவிட்டு ஓடியது, வயதுக்கு மூத்தவர்களை ஒளிந்து, ஒளிந்து வந்து அன்பாக அடித்துவிட்டு ஓடும் மழலைச் செல்வத்தைப்போல …! “சில்! …” – அதனை மெருகு படுத்தி இளந் தென்றலும் வீசியது.

அவள்?… அவள்? ….. நெருப்பைப் மிதித்துவிட்டவள் போலத் துள்ளி நகர்ந்தாள். “இன்பம்! தூ!”

ராஜலட்சுமியின் கண்கள் மறுபடியும் கையிலிருந்த அழைப்பிதழைப் பார்த்தன. படித்தன. அவளையும் அறி யாமல் எண்ணங்கள் எதையோ உருவாக்கின …

ஓய்ந்த புயல் மீண்டும் உறுமுவதுபோன்ற காட்சி. சிறிது தணிந்திருந்த நெஞ்சமும் விம்மி விம்மி …. கவலைக் கடலின் அலைகளைப் பொங்கவைத்தது. மெய்யின் விதிர்ப்பு !

“நீர் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை, ராஜி!”

“காரியத்திற்காகவா?”

“இல்லை ராஜி! என் அப்பா என்ன? கடவுளே வந்தாலும்..”

“நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்! ……. பிரிந்தால் உயிர் வாழவும் மாட்டேன்!-”

‘இப்படித்தானே அவர் சத்தியஞ் செய்துகொடுக்க – நான் திடசங்கற்பஞ்செய்து கொண்டேன்! … நான் வாழத்தான் வேண்டுமா? ஊதாரி என்ற பெயர் எடுக்கத்தான் வேண்டுமா? – பள்ளிக் கூடப் படிப்பித்தல் வேலையை விட்டு விட்டு, அப்பாவுடன் கொட்டாஞ்சேனை யிற் போய் நின்றால் ..’

“நீ ஏன் வாழவேண்டும்? உன் கணவர் சிறுபிள்ளை தான் என்பதை நீ அறியமாட்டாயா– என்ன? நீ திருமணஞ்செய்துகொண்டவள்! அப்பா ஊரிலில்லாத காலங்களில் உன் காதலனை எத்தனை நாட்களாக உன் வீட்டிலே தங்கவைத்தாய்? அப்படிப்பட்டவரே மறந்த பின்பு……. நீ வாழ்ந்தாலும் – இறந்தாலும் எல்லாம் ஒன்று தான்! –‘ மனச்சாட்சி அவளை நிலைகுலையச் செய்தது. பழையபடி இன்பநினைவுகளை மீட்டு, சித்திரவதை செய்தது. வேதனைத் தீயில் விட்டிற் பூச்சியாக விழுந்து தவித்தாள் …. வெந் தாள் …… நொந்தாள்.

‘நானும் அவரைப்போல் மறுமணஞ் செய்து கொண்டால் …!’ ஆபாசங்கள் நிறைந்த அசட்டு நினைவு.

‘சே! எந்தத் தமிழ்ப் பெண்ணுஞ் செய்யத் துணிய மாட்டாள் ! அவர் ஆண்!… நீ-? – உன்னுடைய இப்போதைய நிலை? அவர் வைத்தியசாலைக்கு வருவாரா? வந்து கையெழுத்திடுவாரா? அப்படியானால் தங்கம் …? அவ ளின் கதி? …. நீ மறுமணஞ் செய்ய நினைத்தாலும் உன்னை யார் தான் மணக்கப்போகிறார்கள்?…..

அளிக்கும் பரிசா இது?…’ – வயிற்றிலே நெருப்பைக் கட்டிச் சுமப்பது போன்ற நினைப்பு.

அதைத் தணிக்க ஒரே வழி..! ‘ஐ …ய் …யோ !’

கடல் தெய்வம் அலைகளை மாலையாக்கி- தாலியாக்கி -அவளுடைய ஆரக்கழுத்திலே இட்டது; அலைகள் தந்த இன்பத்தில் அவள் மிதந்து கொண்டிருந்தாள்.

முகிற் கூட்டங்களுக்கிடையே மிதந்து ஓடும் பால் நிலாவைப் போல, ராஜலட்சுமியின் அழகு முகமும் அலை களினிடையே மறைந்து – மிதந்து – சென்று கொண்டிருந் தது. அதிலே–

நீதி தேடியலைந்த ஓர் அபலையின் உள்ளத்திலே எழுந்த சோகப்புயலின் சுவடு தானும் இல்லை.

– கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

அங்கையன்: ‘அங்கையன்’ என்ற புனைப் பெயரில் ஒளிந்துள்ள அ. கைலாசநாதன், மண்டைதீவைச் சார்ந்தவர்; யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரி இவர் படித்த பாடசாலை. ‘கதம்பம்’ முதலிய பத்திரிகைகளில் சிறுகதை கள் எழுதியுள்ள இவர், கவிதை பாடக்கூடியவர்; ஓவியத் திலும் ஓரளவு பரிச்சயமுண்டு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *