சுற்றுலா….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 7,582 
 
 

‘ராத்தோவ்’

பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும் காலில் அணிந்திருந்த வெள்ளைச் சப்பாத்துக்கள் கதவு மூலையிலும் வீசியெறியப்பட்டன.

‘டே! என்ன பொட்ட இப்பிடி ஓடி வாறா? இன்னும் ஒனக்குச் சின்னப் பொட்டையண்ட நெனப்பாக்கும்’ எனக் கறுவியபடியே அவளைப் பார்க்கிறேன். இரட்டைப் பின்னல் கட்டி பள்ளிக்கு அனுப்பியபோது எவ்வளவு சின்னதாய் இருந்தவள் இந்த இரண்டு மூன்று வருடங்களில் என்னையும் விட உயரமாய் பருவ வயதிற்கேயுரிய மினுமினுப்போடு எப்படி வளர்ந்து விட்டாள்..?

‘ராத்தோவ்! ஸ்கூலால டுவர் போகப்போறாங்களாம். வாற கெழமைக்குள்ள காசு கொண்டு வரச்சொல்லி…’ அவளுக்கு மூச்சு வாங்கியது. ‘இதான் நாங்க போற எடமெல்லாம்….! இந்தா பாரு!’ என்று புத்தகத்துக்குள்ளிருந்து இரண்டு தாள்களை நீட்டினாள்.

‘ஓகோ! அப்ப போறதெண்டு நீங்களே முடிவு செஞ்சிட்டீங்களாக்கும்’ என்றவாறே வாங்கிப் பார்த்தேன். அதிலே நமது இலங்கைத் தீவின் படம், ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு போகுமிடங்கள் சிவப்பு மையினால் வரையப்பட்டிருந்தது. படங்களோடு முக்கியமான இடங்களின் சுருக்கமான விபரங்களும் தரப்பட்டிருந்தன.

‘பொறவு? எங்கட ஒம்பதாம் வகுப்புப் எல்லாரும் போவுதொளு தெரியுமா? வாப்பாக்கிட்ட நா சொல்லிக்கிறேன். மச்சான்ட ட்ரவலிங் பேக்கைத்தான் கொண்டு போகணும். எங்க அந்த நடையன் றியாஸ் பெயல்? நம்மட கெமராவக் கொண்டு போய் யாருட்டயோ குடுத்திக்கான். கெதியாக் கொண்டு தரச்சொல்லு’

அவள்பாட்டுக்குப் பேசிக்கொண்டே போனாள்.

இன்றைய பெண்களுக்குத்தான் எவ்வளவு தைரியமும் சுதந்திரமும். இதே பிராவ்தா படிக்கும் இதே பாடசாலையில்தான் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நானும் படித்தேன். பத்தாம் வகுப்பில் நானிருந்தபோது இதே போலவே எங்கள் பாடசாலையில் கல்விச்சுற்றுலா செல்லத் தீர்மானம் செய்த நிகழ்வுகள் என் நினைவில் நிழலாடியது.

1990ல் மூதூரில் குழப்பம் வந்தது எல்லோருக்கும் தெரியும். அன்று ஊரே உயிருக்குப் பயந்து இடம்பெயர்ந்தோடியது. அப்போது கூட ஊரைவிட்டுப்போக வசதியில்லாத குடும்பம்தான் எங்களுடையது. வாப்பாவுக்கு லொறியில் வேலை. மத்தியானம் சாப்பிட்டு விட்டு மா மரத்தின் கீழ் பீடி புகைத்துக் கொண்டிருக்கும்போது திடீரென அந்தப் பழைய லொறி வந்து புகைவிட்டபடி இரைச்சலுடன் வாசலில் வந்து நிற்கும். உடனே வாப்பா பதறியடித்து ஓடிப்போய் ஒருபழைய சாரனையும் சேட்டையும் மடித்தெடுத்துக்கொண்டு உம்மாக்கிட்ட சொல்லிவிட்டுப் பொய் விடுவார்.

அப்போது ‘வாப்பா நானும் வரயா வாப்பா?’ என்று லொறியில் அவர் வேலைக்குப் போகும் போதெல்லாம் கேட்பேன். என்னுடைய கண்களில் இருக்கும் ஏக்கம் புரியாமல், ‘இல்லம்மா! இன்னொரு நாளைக்கி கூட்டிப் போறம்மா…நல்ல புள்ளையில்லியா?’ என்று தாடி முள்குத்த கன்னத்தில் கொஞ்சிவிட்டு லொறியில் ஏறிப்போவார். ஒருநாள் அல்லது இரண்டுநாள் கழித்து சாமத்தில் அதே பழைய லொறி வந்து வாப்பாவை இறக்கி விட்டுப் போவதும் திண்ணையில் படுத்துக் கிடக்கும் என் தலையை இடது கையால் வருடிக்கொடுத்துக்கொண்டே அவர் சாப்பிடுவதும் சிறிது நேரத்தில் உம்மா சுடுநீர் வைத்து அவரது உடம்பு முழுக்க ஒத்தடம் கொடுப்பதுவும் எனக்கு மெலிதாக நினைவிருக்கின்றது.

அப்போதெல்லாம் வாப்பா ஊர் ஊராகப் போய் வருகின்றார் என்று மட்டும்தான் நான் நினைத்திருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் லொறியில் ஏறும்போதும் அடுத்த தடவை என்னைக் கூட்டிச் செல்வதாகத்தான் கூறிச் செல்வார். ஆனால் ஒருநாள் கூட அவரால் என்னைக் கூட்டிச்செல்ல முடிந்ததில்லை.

சின்ன வயதிலிருந்தே நான் மூதூரை விட்டு வெளியே போனது கிடையாது. இதனால் வெளியூர் செல்வதென்றாலே கொள்ளை ஆசை எனக்கிருந்தது. என் பேராவலைக் கிளறிவிட்டது எங்கள் பாடசாலையின் கல்விச்சுற்றுலாத் திட்டம்.

எப்படியோ உம்மாவைக் கெஞ்சி மன்றாடிச் சம்மதிக்க வைத்தேன். பக்கத்து வீட்டு ஜெஸ்மினா சின்னம்மாவுக்கு நெல்லுக் குற்றிக் கொடுத்து சேர்ந்தது கொஞ்சம் சில்லறை. நோன்புப் பெருநாளுக்கு இல்யாஸ் மாமா அனுப்பிய சல்வாரை சத்தமில்லாமல் – சற்றுக் கவலையோடுதான் – கூடப்படிக்கின்ற ஒரு நண்பிக்கு விற்றேன். அப்படியும் ஒரு 150 ருபா குறைந்தது.

வேறுவழியில்லை. ‘டுவர் போய் வந்த பிறகு ஒருநாளைக்குக் கணக்குப் பார்த்து வைத்து விடலாம்’ என்ற தைரியத்தில் புஹாரி கந்தூரிக்கு சேர்த்து வைத்த உண்டியலை வாப்பாவுக்குத் தெரியாமல் திறந்து சில்லறைக்குற்றிகளுக்குப் பதிலாக கறள் ஆணிகளைப் போட்டு வைத்தேன்.

இவ்வளவு கஷ்டப்பட்டு காசு சேர்த்து ஏழைப் பெண்கள் நாங்கள் சுற்றுலாச் செல்லும் ஆசையில் காத்திருந்தபோதுதான் ஊரிலுள்ள சில ஆண்களுக்கு எமது பெண்கள் பாடசாலையின் கலாசாரம் பற்றிக் கவலை கண்டது.

அதுவரையில் வளர்ந்த பெண்பிள்ளைகள் நாங்கள் பாடசாலை போகும்போதும் வரும்போதும் குறுக்கும் மறுக்கும் சைக்கிளிலும் நடையிலும் பின்னால் இழுபட்டுத் திரிகின்ற காவாலிப் பையன்களெல்லாம் பெண்கள் பாடசாலையின் கல்விச் சுற்றுலா பற்றி அறிந்ததும் ஒரே இரவில் பெண்கள் எங்களது கலாசாரக் காவலர்களாயினர். வயசுக்கோளாறு முற்றி காதல் கடிதம் கொடுப்பதற்கு ஆள் தேடியலையும் தறுதலைப் பயல்களெல்லாம் பெண்கள் பாடசாலை சுற்றுலாச் செல்வதனால் சேதமாகப் போகும் எங்கள் கற்புகளைக் காப்பாற்றுவதற்காக பாவம் இரவிரவாய் பசைவாளியோடு அலைந்தார்கள்.

மறுநாள் பாடசாலை மதில்சுவர் முழுவதும் சுவரொட்டிகள் முளைத்தன. அவற்றுள் சுற்றுலாவுக்குப் பெண்பிள்ளைகளை அழைத்துச் சென்றால் அப்படிச் செல்லும் மாணவிகளின் மானங்களைக் கப்பலேற்றுவதாகக்கூட ஒரு மிரட்டல் சுவரொட்டி இருந்தது. படிக்கும் பெண்கள் எங்களது மானம் எல்லோருக்கும் அத்தனை சுலபமான விடயமாகிப் போனது.

அதுவரைக்கும் என்னைச் சுற்றுலாவுக்கு விடுவது என்ற முடிவிலிருந்த வாப்பா ஜும்மாத் தொழுகைக்குப் போய் வந்த பிறகு கொஞ்சம் இழுக்கத் தொடங்கினார். என்பக்கமிருந்த உம்மாவும் கூட, ‘நம்ம வசதியில்லாத ஆக்கள்..நாளைக்கு யாராவது என்னமும் சொல்லிட்டா என்ன பொட்ட செய்யிறது? டே! நீ ஏம்பொட்ட இப்ப கத்துறா?’ என்று சொல்லத் தொடங்கினா.

என் நெடுநாளையக் கனவு கண்முன்னே சிதையப்போவது கண்டு நான் கதறியழ ஆரம்பித்தேன். அப்போது என்னைத் தேற்றுவது போல வாப்பா சொன்னார், ‘அது அந்தப் பள்ளிக்கூடத்திலய ஒண்ணு ரெண்டு பேருக்கு டுவர் போறது புடிக்கயில்லயாம்….! நீ கத்தாத! 20 வருசமா போகாத டுவரை இவகமட்டும் செய்யேலுமா? அது எப்படியும் இந்த முறையும் டுவர் போகாது. எதித்து நிக்கிற பாட்டியும் லேசப்பட்ட ஆக்களில்ல!’

ஆனால் வாப்பாவின் அத்தனை அனுமானங்களையும் பொய்யாக்கி சுவரொட்டிகள் மற்றும் பசைவாளிகள் உட்பட எல்லா எதிர்ப்பபுகளையும் ஏறிமிதித்துவிட்டு திட்டமிட்டபடி கிளம்பியது எங்கள் பெண்கள் பாடசாலையின் சுற்றுலா பஸ்!

‘அடேய்! சுற்றுலா செல்வது என்னடைய பிள்ளை. அவளின் மானத்தைப் பற்றிச் சுவரொட்டி ஒட்டுவதற்கு நீ யாரடா?’ என்று தைரியமாகத் தட்டிக்கேட்டு இரண்டு பேரின் பல்லைப் பெயர்க்கக் கூடிய ஒரு தகப்பனோ அல்லது சகோதரனோ இல்லாமல் போய்விட்ட எங்களைப் போன்ற மாணவிகளால் புறப்படும் பஸ்ஸையும் குதூகலிக்கும் பிள்ளைகளையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அன்று!

‘ராத்தோவ்!’

காதுக்குள் கத்தினாள் பிராவ்தா. ‘என்ன அந்த நாள் ஞாபகம் போகுதோ? சோத்தைப்போடு! உடுப்பு அயன் பண்ணக்குடுக்கப் போகணும்.’

ஒரு வாரம் கழிந்து விடியற்காலையில்..

பிராவ்தாவின் உடுப்பு பேக்கையும் சாப்பாட்டுப் பார்சலையும் தூக்கிக் கொண்டு சுற்றுலா செல்லும் பஸ் நிற்குமிடத்தை நோக்கி நடந்தேன். கூடவே பேசிக் கொண்டு வந்தாள் பிராவ்தா.

‘பாவம் ராத்தா நீ! நேத்து ராவு எல்லா விசயத்தையும் சொல்லி முடிச்சிட்டா. நீ படிக்கிற காலத்தில சந்தோஷமா ஊர் பார்க்க ஏலாமப்போயிட்டு உனக்கு. இனி ஒன்ன மச்சான் கூட்டிப்போறண்டாலும் அவருக்குக் கொழும்பு மருதானையையும் லொஜ்ஜையும் வுட்டா வேற ஒரு எடமுந் தெரியாது!’

‘டே! கொஞ்சம் சும்மா வரமாட்டியா?’ என்று அதட்டினேன்.

‘அது சரி ராத்தா, அவ்வளவு கூத்தும் காட்டி ஒன்னையெல்லாம் டுவர் போவாமா ஆக்கின ஒத்தiனையாவது காட்டித் தர மாட்டியா நீ?’ என்று கேட்டுக் கொண்டே பின்னால் வந்து கொண்டிருந்தாள் பிராவ்தா.

பாடசாலையை நெருங்கியதும் பஸ்ஸைச் சுற்றி மாணவிகள் கும்பலும் அவர்களைக் கூட்டிவந்த உறவினர்களுமாக ஒரே இரைச்சலாக இருந்தது. பஸ்ஸினுள் ஏறி பிராவ்தாவை ஒரு சீற்றில் இருத்திவிட்டு இறங்கத் தீர்மானித்துத் திரும்பியபோது, ‘இந்தாங்க! இந்த தண்ணிப்போத்தலை அந்தா அதுல ஏஎல் படிக்கிற என்ட மகளுக்கிட்ட கொஞ்சம் குடுத்திருங்க!’ என்று பஸ்ஸிற்கு வெளியே நின்று யன்னலினூடாக என்னிடம் நீட்டியவரை யாரென்று பார்த்தேன். எனக்கு சிரிப்பதா அழுவதாவென விளங்கவில்லை. ஏனோ பசை வாளியும் சுவரொட்டிகளும் நினைவுக்கு வந்தன எனக்கு.

என் தங்கை சற்று முன் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், ‘பிராவ்தா, நீ என்னமோ கேட்டியே அப்ப! இப்ப கொஞ்சம் வெளியே எட்டிப்பாரு!’ என்றேன் நான்.

– பெப்ரவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *