கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 7,054 
 
 

புதுவீட்டுக்கு வந்து நான்கைந்து நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைய வீட்டில் ஒட்டுமொத்தப் பொருள்களையும் ஒரு வண்டிக்குள் ஏற்றி வைக்கவும் நம் வீடு இவ்வளவுதானா என்ற எண்ணம் வந்தது. என் மனைவி, கையில் என் மகனைப் பிடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தவள், நான் என்ன யோசிக்கிறேன் என்று யூகித்துவிட்டவள் போல, ‘தும்ப அலட்டிக்கபேடா’ என்று சொல்லிவிட்டுப் போனாள். எதிர்வீடு, பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, வெளியில் ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். என் வீட்டுக்கென ரகசியங்களே இனி எதுவும் இல்லை என்னும் அளவுக்கு வீடே வெளியில் வந்துகொண்டிருந்தது. அங்கே உட்கார்ந்திருந்தவர்கள் யார் மேலும் பட்டுவிடாமல் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டிருந்தாள் என் அம்மா. அன்றைக்கு ஆடி அமாவாசை. அப்பா இந்த வீட்டில்தான் இறந்தார். அப்பா இறந்ததும் அம்மாவின் மடி ஆசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இந்த வீட்டுக்கு வந்ததும்தான் எனக்குக் கல்யாணம் ஆகியது. கல்யாணம் ஆனதும்தான் என் அம்மா என்னுடன் வந்து இருந்துகொண்டாள். எனக்கு மகன் பிறந்தான். வேறொரு நல்ல வேலை கிடைத்தது. இந்த வீட்டை விட்டுப் போவதில் அம்மாவுக்கு அத்தனை இஷ்டம் இல்லை. அடிக்கடி ‘சம்படவாங்க மனெ’ என்பாள்.

பழைய வீட்டுக்கு வந்த புதிதில் பக்கத்தில் பிராமணர்கள் யாருமே இல்லை என்ற குறை அம்மாவுக்கு நிறைய இருந்தது. ‘நாவு மதுரைலி இல்லவா, பிராம்புரு தாரு இத்துரு’ என்றேன். நாள் கிழமைக்கு கஷ்டமா இருக்கு என்பாள். நாள் கிழமை என்றால் உடனே எதாவது ஒரு மாமிக்கு வெற்றிலை பாக்கு கொடுத்துவிடவேண்டும் அம்மாவுக்கு. நான் கல்யாணம் செய்துகொண்ட புதிது என்பதால் எனது வாழ்க்கை கிட்டத்தட்ட எங்கள் படுக்கையறைக்குள்ளேயே முடிந்துவிடும். என் அம்மாதான் ஒட்டுமொத்த வீட்டையும் தாங்கிக் கொண்டிருப்பதான தோற்றம் சட்டென அங்கே ஏற்பட்டுவிட்டது. அது உண்மையும்கூட. அது ஒரு சிறிய அபார்ட்மெண்ட்; நான்கே வீடுகள். யாரும் யாருடனும் அதிகமாகப் பேசமாட்டார்கள். அம்மா வந்ததும்தான் இதெல்லாம் மாறியது என்பது எனக்கே தெரிந்திருந்தது. காலையில் எழுந்து உட்கார்ந்து பேப்பரில் ஒரு வரி விடாமல் படிப்பாள். வீட்டு வாசலுக்கு முன்னே உட்கார்ந்துகொண்டு, வெளிச்சம் விழுமாறு வீட்டு வெளிக்கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, தலையில் நரை விழுந்த அந்த ஒடிசலான தேகம் பேப்பர் படிப்பதை யார் பார்த்தாலும் சட்டென ‘பாவம் மாமி’ என்ற எண்ணம் வந்துவிடும். ‘பாவம் மாமி’ என்றுதான் மெயிண்டனென்ஸ் அம்மாள் அவளே வந்து பழக்கப்படுத்திக் கொண்டாள்.

மெயிண்டனென்ஸ் அம்மாளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் வீட்டில் ஏதோ ஒரு சூன்யம் குடிகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். அவளது கதை இன்னதென்று நான் கேட்டுக்கொண்டதில்லை. ஆந்திராக்காரப் பெண்மணி என்பது மட்டும் எனக்குத் தெரியும். பிரதீப் என்ற ஒரு பத்து வயதுப் பையன் அங்கும் இங்கும் ஓடுவான். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். அம்மா வந்து ஒரு வாரத்துக்குள்ளாக மேல்வீடு, கீழ்வீடு, பக்கத்து வீடு என எல்லா வீட்டின் கதைகளையும் எங்கள் வீட்டு அறையில் கொட்ட ஆரம்பித்தாள். அப்பா இருக்கும்போதே அம்மாவுக்கு உலகம் என்பது குழந்தைகள்தான். எனக்குக் கல்யாணம் ஆகும்வரை நான் உலகம், எனக்குக் கல்யாணம் ஆனதும் என் பையன்தான் உலகம். இவைதான் அவளுக்கு முக்கியம். அப்பா இறந்ததும் குழந்தைகள் தவிர யாருமே தேவையில்லை என்னும் அளவுக்குப் போய்விட்டாள். ஆனால் ஊர்க்கதைகள் பேசவேண்டும் என்றால் என் அம்மாவும் என் மனைவியும் சேர்ந்துகொள்வார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அதில் ஆர்வம் வந்துவிட்டது.

மெயிண்டனென்ஸ் வீட்டு அம்மாளுக்கும் 60 வயது இருக்கும். நெற்றியில் சிறியதாக விபூதி இட்டிருப்பாள். வீட்டில் பரம்பரை பரம்பரையாக ஏதோ ஒரு வியாதி இருக்கிறதாம். அவர்கள் வீட்டில் எந்த ஆண்பிள்ளையும் 40 வயதுக்கு மேல் தங்குவதில்லை. இப்போது வீட்டைச் சுற்றிச் சுற்றி வளையவரும் பிரதீப்பைப் பார்க்கக் கொஞ்சம் பாவமாக இருந்தது. பின்னாளில் அவர்களிடம் அம்மா நன்றாகப் பழகத் தொடங்கியதும் என் அம்மா அந்த அம்மாளிடம், ‘உங்க பேரனுக்கு ஒண்ணும் ஆகாது, நன்னா இருப்பான்’ என்று சொல்லும்போதெல்லாம், அந்த அம்மாளின் முகத்தில் ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவும்.

மாடி வீட்டில் ஒரு மாமி. மாமியின் முகம் எப்போதுமே கொஞ்சம் கோபத்தால் தூக்கிக்கொண்டிருப்பது போலத்தான் எனக்குத் தோன்றும். அம்மா வந்த நான்கு தினங்களில் மாமி ரொம்ப நல்ல மாதிரி என்று எங்களிடம் சொன்னாள். ‘நாள் கிழமைன்னா கூப்பிட்டு வெத்தலை பாக்கு கொடுக்க ஒருத்தியாவது வேண்டாமா’ என்றாள். அந்த மாமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசும்போது ‘கன்னடம் பேசற பிராமணா, ரொம்ப அலட்டிக்குவா, ரொம்ப பண்ணுவா’ என்று சொல்லவும், மறுநாளே, ‘அந்த மாமி எப்பவும் முகத்தை தூக்கி வெச்சிக்கிட்டு இருக்காடா, புருஷனோட பேச்சுவேற இல்லயாம், இவளுக்கு வெத்தலை பாக்கு கொடுத்துட்டாலும்…’ என்று சொல்லிவிட்டாள் அம்மா.

இப்படியான ஒரு தினத்தில், முன்வீட்டில் இன்னொரு குடும்பம் குடிவந்தது. வீட்டை விலைக்கு வாங்கிக் குடிவருகிறார்கள். அவர்கள் அன்றுதான் குடி வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் எப்போதும் போல் காலையில் என் பைக்கை எடுக்க வெளியே சென்று பார்த்தால், பைக்கை எடுக்க முடியாதபடி அதற்குப் பின்னே இரண்டு பைக்குகள் நின்றிருந்தன. ‘என்ன இப்படி பைக்கை நிறுத்துறாங்க’ என்று சண்டை போட்ட பின்புதான் தெரிந்தது, புதியதாகக் குடிவந்தவர்கள் அப்படி நிறுத்தி இருக்கிறார்கள் என்று. அவர்கள் வந்த முதல்நாளே சண்டை போட்டிருக்கவேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். அம்மாவும் என்னைத் திட்டினாள். ‘எதக்க ஈங்க முசுடா இத்தி’ என்றாள். ‘வீட்டை விலைக்கு வாங்கி வர்றாங்க, ஒரு கிரகப் பிரவேசம் கூடவா செய்யமாட்டாங்க?’ என்றேன். நான் அடிக்கடிச் சொல்லும், ‘அடுத்தவங்க விஷயம் நமக்கெதுக்கு’ என்பதை இப்போது அம்மா சொன்னாள்.

அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாகவே புதிதாக வந்த மாமியின் வீட்டுக்கதைகள் எங்கள் வீட்டுக்குள் வர ஆரம்பித்தன. எனக்கும் ஆர்வம் வரத் தொடங்கிவிட்டதால் நானும் சில கேள்விகள் கேட்டேன்.

‘அன்னைக்கு நான் பைக் எடுத்துட்டுப் போகும்போது வெளிய பைக்கை நிறுத்தியிருந்தானே, அவன் யாரு?’

‘அவந்தான் மூணாவது புள்ளையாம். மூணு பசங்க, மூணு பேருக்கும் கல்யாணம் ஆகலை.’

‘என்னது மூணு பேருக்கும் ஆகலையா? மூணாவது புள்ளையே தடித்தாண்டவராயன் மாதிரி இருக்கானே…’

‘நீ இல்லியா உனக்குக் கல்யாணம் ஆகும்போது… அதெல்லாம் உடல்வாகு.’

‘இப்ப இது ரொம்ப முக்கியமா?’

என் மனைவி உள்ளேயிருந்து சிரித்துக்கொண்டே வந்தாள்.

‘என்ன சிரிப்பு?’

‘ரெண்டு பேரும் தமிழ்ல பேசிக்கிறதைக் கேட்கவே சிரிப்பா வருது’ என்றவள், ‘அதுன பிடுறி, ஆ மாமிய எரடு கிட்னினு ஃபெய்லியர்த்த’ என்றாள்.

எனக்கு திக்கென்று இருந்தது. மாமியை நினைத்துப் பார்த்தேன். உடல் மெலிந்து, தலை வெளுத்து, நடக்க முடியாமல் நடந்துவரும் உருவம் என் கண்ணில் வந்தது. நெற்றியில் தீர்க்கமாகக் குங்குமம். கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டும். தலையில் வெளுத்துப்போன ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள். மாமியின் மூன்று பையன்களும் நல்ல நிலையில்தான் இருந்தார்கள். இந்த வீட்டைக்கூட விலைக்கு வாங்கித்தான் குடி வந்திருக்கிறார்கள். ஆனாலும் என்னவோ மாமி மஞ்சள் கயிறு மட்டுமே அணிந்திருந்தாள். ‘ஏனே மாமி ஈங்க ரிப்பன் ஓய் கட்டிந்தாள’ என்றேன் மனைவியிடம். ‘ஊர்லி தா தா மாமி ஏனு ஏனு ஆக்கிந்தாளத்த நோடாதுத்தான் நிம்ம கெலசவா’ என்றாள்.

மறுநாள் வேலைக்குப் போகும்போது, ஒடுங்கிய தேகத்தில் பால் நிறத்தில் பூணூல் நெளிய, நெற்றி நிறைய பட்டை இட்டுக்கொண்டு, இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, எங்கள் சிறிய அபார்ட்மெண்ட்டுக்கு வெளியில் இருந்த துளசி மாடத்துக்கு மாமா பூஜை செய்துகொண்டிருந்தார். நான் வண்டியை எடுக்க ஏதுவாக, தனது வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டார். சிரிக்கவும் செய்யாமல் கோபமாகவும் இல்லாமல் மாமா என்னைப் பார்த்தார். ‘இல்லை மாமா, நீங்க பூஜை பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு, வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துகொண்டேன். எதாவது நல்ல நாள் என்றால், என் அம்மாதான் அந்த துளசி மாடத்துக்கு பூஜை செய்து நைவேத்யம் செய்வாள்.

துளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம். கழிவு நீர் போனதும், மீண்டும் துளசியை பழைய இடத்துக்கே கொண்டு வருவோம். ‘ஐயோ பாப்பா துளசி அம்மனோரு, அவுளு நம்ம கைலி சிக்கிண்டு படா பாடு’ என்பேன். அடிக்கடி இப்படி ஆகி, மனதில் வேதனை பரவவும், துளசி மாடத்தை அபார்ட்மெண்ட்டுக்கு வெளியில் ஒதுக்குப்புறமாக வைத்துவிட்டு, தினமும் தண்ணீர் மட்டும் ஊற்றிவிட்டு, நல்ல நாள்களில் மட்டும் பூஜை செய்ய ஆரம்பித்தாள் என் அம்மா.

அந்த மாமா வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்ததும் துளசி மாடத்துக்கு தினமும் பூஜை நடக்க ஆரம்பித்தது.

அம்மா எழுந்து குளித்துவிட்டு ஒரு செம்பில் நீர் எடுத்துக்கொண்டு போய், அவள் பங்குக்கு துளசிக்கு ஊற்றிவிட்டு, துளசி மாடத்தில் மிதக்கும் நீரை தலைக்குத் தெளித்துக் கொள்வாள். ‘அம்மா, ஈங்க ஆளாளுய நீர் ஆக்கிதற, துளசி அழுகிடோத்த’ என்று நான் சொல்வதைக் காதில் வாங்கவே மாட்டாள். என் பையன் நடக்கப் பழகியதும், அம்மாவுக்குப் பதில் அவன் தினமும் நீர் ஊற்றத் தொடங்கினான். சிறிய அழகிய வெண்ணிற வெற்றுடம்பு தெரிய, எப்படியோ சீரில்லாமல் கட்டிக்கொண்ட துண்டு தடுக்க, அதை அவிழவிடாமல் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, முகமெல்லாம் சிரிக்க, மற்றொரு கையில் செம்பு நீருடன் அவன் நடக்கும் காட்சியைப் பார்த்து அபார்ட்மெண்ட்டில் அத்தனை பேரும் சிரிப்பார்கள். புதிதாக வந்த ‘கிட்னி ஃபெய்லியர்’ மாமி என் மனைவியிடம் ‘கிருஷ்ண விக்ரஹம்டி’ என்று சொல்லுவாள். மாமா பூஜை செய்துவிட்டுத் தரும் பழத்துக்காக என் மகனும் அங்கேயே காத்துக்கொண்டிருப்பான். அவர் வாழைப்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அவனிடம் ‘பேக்கா பேடவா’ என்று சொல்லுவார். அவன் சிரிப்பான்.

நேரங்காலமில்லாமல் அந்த மாமிக்கு சீரியஸ் ஆகிவிடும். உடனே எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். ரத்தத்தை மாற்றுவார்கள். குற்றுயிரும் கொலையுயிருமாக மாமியைத் தாங்கிக்கொண்டு மாமா வருவார். என் மனைவிதான் மாமியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று உட்கார வைப்பாள். அன்று மாமிக்கும் மாமாவுக்கும் சாப்பிட எதாவது வீட்டில் இருந்து கொடுத்துவிடுவாள். மாமி ஒருநாள் என் மனைவியிடம், ‘ஒரு வாய் காப்பி தர ஆளில்லைடி முன்னமெல்லாம். நீ நன்னா இருப்ப’ என்றாள். மாமியின் இந்த நிலையை வாராவாரம் பார்த்து, மாமியை ஒரு செல்லப் பிள்ளையாகவே பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் அபார்ட்மெண்ட்காரர்கள். ஒருநாள் அந்த மெயிண்டனென்ஸ் கிழவி, ஒரு சேரில் மாமியை உட்கார வைத்து தலை பின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். என் அம்மா அருகில் கீழே உட்கார்ந்திருக்க மூன்று கிழவிகளும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னவோ ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அடிக்கடி எங்கள் வீட்டிலிருந்து பலகாரங்கள் எல்லாம் மாமி வீட்டுக்குப் போக ஆரம்பித்தன. நான் என் மனைவியிடம், ‘அவங்க சமைக்கலைன்னா பரவாயில்லை, நம்ம வீட்டுலேர்ந்தே கொடு’ என்று சொல்லியிருந்தேன். ‘தும்ப பாசம் பொங்குவாங்க இத நன்ன கூசுய’ என்றாள். மூன்று மகன்களும் தினமும் இரவு வயிறு முட்டக் குடித்துவிட்டு வந்து சத்தம் இல்லாமல் மாடியில் சென்று படுத்துக்கொள்வார்கள். மாமியின் தலைமீது இடி விழுந்தாலும் அவர்களுக்குக் கேட்காது. எதாவது உதவி என்றால் மாமா ஓடி வந்து என் அம்மாவிடமோ என் மனைவியிடமோதான் கேட்பார். எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு சின்ன இடைவெளி இருந்துகொண்டேதான் இருப்பதாகத் தோன்றியது. இது பிரமையா உண்மையா என்பது தெரியவில்லை.

என் மனைவி அடிக்கடி ‘அந்த மாமா மாதிரி வராது’ என்பாள். சொல்லும்போதே அவள் கண்களில் நீர் கோக்கத் தொடங்கும். ‘மாமிய ஒரு வேலை செய்யவிடறதில்லை, எல்லா வேலையும் இவர்தான், வீட்டைப் பெருக்கி மொழுகி, சமைச்சு பாத்திரம் கழுவி, யார் செய்வா’ என்பாள் என் அம்மாவிடம். எனக்கு என்னவோ குற்ற உணர்ச்சியாக இருக்கும். என்னிடம்,‘நான் நீவு இதறாங்க மாடலாத்த ஹேளலா, நெஜவா ஹேளுத்தான, மாமவாங்க பரது’ என்பாள்.

வீட்டைக் காலி செய்யவேண்டும் என்ற எண்ணம், எனக்குக் கல்யாணம் ஆன நாள்முதல் இருந்துகொண்டுதான் இருந்தது. வீடு காணவில்லை என்பதுதான் காரணம். பக்கத்திலேயே ஓர் இடத்தில் நல்ல வீடு வாடகைக்கு வரவும், இந்த வீட்டைக் காலி செய்யலாம் என்று சட்டென முடிவெடுத்துவிட்டேன். அம்மாவுக்கு என்னவோ போலிருந்தது. மெயிண்டனென்ஸ் அம்மாள் அழுதே விட்டாள். ‘என்ன இப்படி திடீர்னு’ என்றாள். அப்புறம் அவளே ‘நீங்களும் கல்யாணம் ஆன நாள்லேர்ந்து சொல்லிக்கிட்டுதான் இருந்தீங்க’ என்றாள். சட்டென, ‘எங்களையெல்லாம் மறந்துடாதீங்க, நானெல்லாம் யார்கிட்டயும் இப்படி பழகினதில்லை, அழுததுமில்லை’ என்று சொல்லி அழுதாள். எனக்கு என்னவோ போல் இருந்தது.

அந்த மாமாவுக்கும் மாமிக்கும் துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது. ‘இனிமே யார்டி சேவையும் மோர்க்குழம்பும் பண்ணித் தருவா’ என்றாள் மாமி. எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஆடி அமாவாசை நல்ல நாள் என்பதால் அன்றே வீட்டைக் காலி செய்யமுடிவெடுத்தோம். ’ஆடில போலாமா’ என்று கேட்டாள் மெயிண்டனென்ஸ் அம்மாள். ‘எங்களுக்கு ஆடி அமாவாசை பொறந்தாலே ஆவணி பொறந்தாப்லதான்’ என்றாள் அம்மா. என் மனைவியும் நானும் புது வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் இருந்தோம். இப்படி பழகியவர்களை விட்டுவிட்டுப் போகிறோமே என்ற வருத்தமும் நெஞ்சில் ஓர் ஓரமாக இருந்தது. அம்மா அவ்வப்போது விசும்பினாள். ‘ஏன்மா நீ ஈங்க அழுத்தி’ என்றேன். ‘நான் பாட்டுக்கு அழறேன், போறது பாட்டு போவோம், ஒனக்கென்ன’ என்று சொல்லிவிட்டாள்.

‘நீங்க எதுவும் செய்யவேணாம், நாங்களே எல்லாத்தையும் தூக்கிடுவோம்’ என்றார்கள் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் இருந்து வந்தவர்கள். அத்தனையையும் வண்டியில் ஏற்றிக்கொண்டார்கள். ‘ஆடி அமாவாசை, எங்காத்துலதான் சாப்பிடணும்’ என்று மாமா கட்டாயமாகச் சொல்லிவிட்டார். ‘என் அம்மா மட்டும் சாப்பிடட்டும், நாங்க இன்னொரு நாள் வர்றோம்’ என்று சொல்லிவிட்டோம். மாமாதான் சமைத்திருந்தாராம். வெண்டைக்காய் சாம்பார், வாழைக்காய் புட்டு, ரசம், அப்பளம். என் அம்மா மெயிண்டனென்ஸ் அம்மாளிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள், ‘இவன் பாட்டுக்கு ஆடி அமாவாசை அன்னைக்கு வீடு மாத்துறேன்னு சொல்லிட்டான், நல்லவேளை அவர் வீட்டுல சாப்பிட முடிஞ்சது, இல்லைன்னா கண்ட கடைல சாப்பிட்டிருக்கணும்’ என்று.

ஒருவழியாக எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு, மெயிண்டனென்ஸ் அம்மாளுக்கு விடை சொல்லிக்கொண்டு, பிரதீப்புக்கு டாட்டா சொல்லிவிட்டு, மாமிக்கும் மாமாவுக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுக் கிளம்பினோம். மாமா, ‘நன்னா இருப்பேள்’ என்றார். மாமி மையமாகச் சிரித்தாள். நான் வண்டியின் பின்னால் பைக்கில் வர, என் அம்மா, என் மனைவி, என் மகன் மூவரும் கால் டாக்ஸியில் செல்வதாகத் திட்டம். கால் டாக்ஸி கிளம்பவும், என் அம்மா, ‘ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்’ என்று கத்தினாள். என் மனைவியிடம், ‘ஓ, ஓயி ஆ துளசி மாடன தொக்கண்டு பா, மர்த்தே ஹோய்ட்டே, ஒள்ள வேள’ என்றாள். என் மனைவி துளசி மாடத்தைத் தூக்கிக்கொண்டு கொண்டுவரவும், கால் டாக்ஸி கிளம்பியது.

ஒருவழியாக புது வீட்டில் செட் ஆகிக்கொண்டிருந்தோம். மெயிண்டனென்ஸ் அம்மாள் தினத்துக்கு இரண்டு முறை ஃபோனில் கூப்பிட்டு அழுதாள். என் அம்மாவுக்கும் துக்கம் வரும். ‘எங்க போயிட்டோம், பக்கத்துலதான இருக்கோம், எப்ப வேணா பாத்துக்கலாம்’ என்பாள். அன்றும் அப்படித்தான் எப்போதும்போல் மெயிண்டனென்ஸ் அம்மாள் அழைத்ததாக நினைத்தேன். ஆனால் என் அம்மா அதிகம் பதறியது போலத் தோன்றியது. ‘ஏன்மா, ஏனாய்த்து’ என்றேன். ‘ஆ கிட்னி ஃபெய்லியர் மாமி ஓயிட்டுளுந்த்தயோ’ என்றாள். எனக்கு பக்கென்று இருந்தது. என் மனைவி உடனே, ‘சே, மாமாத்தான் ஐயோ பாப்பா, கூசாங்க மாமின நோடிண்ட்ரு, தாரு மாடுவுரு’ என்றாள்.

நாங்கள் காலி செய்துகொண்டு வந்த மறுநாள் மாமிக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. கொஞ்சம் சீரியஸ் ஆகவும், ஐசியூவில் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். நேற்று இறந்துவிட்டாள். நான், ‘நல்லவேளை, அந்த கண்றாவியை நாம அங்கிருந்து பாக்கலை. மாமி போய் மாமாவைப் பாக்கவே கஷ்டமா இருந்திருக்கும்’ என்றேன். அம்மாவும், ‘நீ ஹேளாதுனு சரித்தான்’ என்று தலையை ஆட்டினாள்.

ஞாயிற்றுக் கிழமை மாமாவிடம் துக்கம் கேட்க, நானும் அம்மாவும் என் மகனும் கிளம்பினோம். மாமா வீட்டுக்குள் நுழையும்போது அம்மாவுக்கு கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்துக்கொண்டுவிட்டாள். நான் ஓரமாக நின்றிருந்தேன். அம்மா உள்ளே நுழையவும் மாமா பெரிய சத்தத்துடன் ‘இப்படி பண்ணிட்டாளே மாமி, என்னைய தனியா விட்டுட்டுப் போயிட்டாளே’ என்று கதறி அழுதார். ஓர் ஆண் அழும்போது என்னவோ செய்தது. எங்கே எனக்கும் கண்ணீர் வந்துவிடுமோ என்று பயந்து வெளியில் வந்து நின்றுகொண்டேன். வெளியில் நின்றிருந்த மெயிண்டனென்ஸ் அம்மாள், ‘எப்படி இருக்கீங்க?’ என்றாள். உள்ளே அம்மா மாமாவுக்கு என்னவோ ஆறுதல் சொல்வது காதில் கேட்டது. இரண்டு நிமிடங்கள் கழித்து உள்ளே சென்றேன். என் பையன் வீட்டுக் கதவின் ஓரமாக மிரட்சியுடன் நின்றிருந்தான். நான் உள்ளே வரவும் என் கையைப் பிடித்துக்கொண்டான். மாமியின் மூன்று மகன்களும் சோஃபாவில் உட்கார்ந்து என்னவோ படித்துக்கொண்டிருந்தார்கள். மாமா ஒரு மாதிரி தேற்றிக்கொண்டு என் பையனை அருகில் அழைத்தார். அவன் மாமாவின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டான். ‘என்னடா நியாபகம் வெச்சிண்டிருக்கியா மறந்துட்டியா?’ என்றார். அவன் அப்படியே அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘வாழைப்பழம்னு வந்து நிப்பியே, மாமி தருவாளே’ என்றார். சட்டென்று குரல் தளுதளுக்க ‘உங்க பாட்டி அந்த துளசி மாடத்தை இங்கயே விட்டுட்டுப் போயிருக்கலாம், மாமி மனசு ஆறவே இல்லை’ என்றார். பெரிய அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தேன். அடக்கமுடியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

(முற்றும்)

சில தமிழ் அர்த்தங்கள்:

தும்ப அலட்டிக்கபேடா – ரொம்ப அலட்டிக்காத

சம்படவாங்க மனெ – சம்படமாட்டம் வீடு

நாவு மதுரைலி இல்லவா, பிராம்புரு தாரு இத்துரு – நாம மதுரைல இல்லியா, பிராமணர்கள் யார் இருந்தாங்க

எதக்க ஈங்க முசுடா இத்தி – ஏண்டா இப்படி முசுடா இருக்க

அதுன பிடுறி, ஆ மாமிய எரடு கிட்னினு ஃபெய்லியர்த்த – அதை விடுங்க, அந்த மாமிக்கு ரெண்டு கிட்னியும் ஃபெய்லியராம்

ஏனே மாமி ஈங்க ரிப்பன் ஓய் கட்டிந்தாள – ஏண்டி மாமி இப்படி ரிப்பன் போய் கட்டியிருக்கா

ஊர்லி தா தா மாமி ஏனு ஏனு ஆக்கிந்தாளத்த நோடாதுத்தான் நிம்ம கெலசவா – ஊர்ல எந்த எந்த மாமி என்ன என்ன போட்டுக்கிட்டு இருக்கான்னு பார்க்கிறதுதான் உங்க வேலையா

ஐயோ பாப்பா துளசி அம்மனோரு, அவுளு நம்ம கைலி சிக்கிண்டு படா பாடு – ஐயோ பாவம், துளசி அம்மன், அவ நம்ம கைல சிக்கிக்கிட்டு படற பாடு

அம்மா, ஈங்க ஆளாளுய நீர் ஆக்கிதற, துளசி அழுகிடோத்த – அம்மா, இப்படி ஆளாளுக்கு தண்ணி ஊத்தினா, துளசி அழுகிடப்போகுது

பேக்கா பேடவா – வேணுமா வேண்டாமா

தும்ப பாசம் பொங்குவாங்க இத நன்ன கூசுய – ரொம்ப பாசம் பொங்குறமாதிரி இருக்கு என் குழந்தைக்கு

நான் நீவு இதறாங்க மாடலாத்த ஹேளலா, நெஜவா ஹேளுத்தான, மாமவாங்க பரது – நான் நீங்க இப்படி பண்ணலைன்னு சொல்லலை, நெஜமா சொல்றேன், மாமாவாட்டம் வராது

ஏன்மா நீ ஈங்க அழுத்தி – ஏம்மா நீ இப்படி அழற

ஓ, ஓயி ஆ துளசி மாடன தொக்கண்டு பா, மர்த்தே ஹோய்ட்டே, ஒள்ள வேள – போ, போய் அந்த துளசி மாடத்த எடுத்துக்கிட்டு வா, மறந்தே போயிட்டேன், நல்ல வேளை

ஏன்மா, ஏனாய்த்து – என்னம்மா, என்னாச்சு

ஆ கிட்னி ஃபெய்லியர் மாமி ஓயிட்டுளுந்த்தயோ – அந்த கிட்னி ஃபெய்லியர் மாமி போயிட்டாளாம்டா

சே, மாமாத்தான் ஐயோ பாப்பா, கூசாங்க மாமின நோடிண்ட்ரு, தாரு மாடுவுரு – சே, மாமாதான் ஐயோ பாவம், குழந்தையாட்டம் மாமிய பாத்துக்கிட்டார், யார் பண்ணுவா

நீ ஹேளாதுனு சரித்தான் – நீ சொல்றதும் சரிதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *