(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சுபா, அந்த நாற்காலிய எடும்மா….ஆ……ங் அங்கதான் போடு……அந்த டேபிள்ல இருக்கறத எல்லாம் எடுத்து ஓரமா வையி……. ராதா ……. டிஃபன் எல்லாம் மணக்றாப்ல இருக்கட்டும்…… அப்றம் ஏதும் ஆவக்கூடாது” வீடு அல்லோலகல்லோலப்பட்டது. அடுத்த வீட்டுக்காரர்கள் எல்லோரும் கண்களை அகல விரித்து, வாசலிலிருந்து எட்டி எட்டிப் பார்த்தனர். காரணம், சுபாவின் அப்பா, மிகுந்த கோபக்காரர்.
“அப்பா, அப்பா யாரோ வாசல்ல கார்லருந்து எறங்குறாங்கப்பா”
“என்னம்மா…… ஆ ங் வந்துட்டாங்களா…இதோ வர்றேன்” வேகமாக வாசலுக்கு வந்தவர், “வாங்க…….வாங்க….. காரை அப்டி ஓரமா நிறுத்துப்பா” வரவேற்று வழி செய்தார்.
இவ்வளவும் சுபாவின் பெண் பார்க்கும் படலத்துக்குத்தான். முதலாவதாக வந்தது இந்த இடம்தான். பையன் பி.ஈ., படித்துவிட்டுப் பொதுப்பணித்துறையில் வேலை செய்கிறான். பெயர் சுந்தர பாண்டியன். பெயருக்கேற்ப அழகுதான்.
பெற்றோருடன் வந்தவன், அமர்ந்தவுடன் வீட்டை ஒரு நோட்டம் விட்டான். ‘சுபா’ சுமாரான அலங்காரத்துடன் வந்தாள். அவள் மேல் வைத்த கண்ணை, சுந்தர் எடுக்கவேயில்லை.
“பாக்க அழகாத்தான் இருக்காங்க. நமக்கேத்த ஒயரம். வெளியே போனா பொருத்தமான ஜோடின்னு சொல்றாமாதிரி அமைவாங்க. ம்ம் (ஏதோ கணக்குப் கணக்குப் போட்டுப் பார்த்தபடி) வேலையும் நல்ல வேலைதான். பிறகென்ன, நாம் நல்லா வரலாம்” என்று நினைத்தபடி மகிழ்ந்தான். அவனது அம்மா, அப்பா இருவரும் மகனைப் பார்க்கிறார்கள்; மகனது முகத்தில் தெரிந்த ‘பளிச்’ வெளிச்சத்தில் மனம் மகிழ்கிறார்கள்.
சுபா உள்ளே சென்று விட்டாள். அவள் தன் “பரவாயில்லை. மனத்திற்குள், எல்லாரும் பாக்க நல்லவங்களாத்தான் தெரியுறாங்க. மாப்பிள்ளையும் பாக்க ஓரளவு சுமாராவே இருக்கார்” என்று மனத்தை முதலில் எடை போட்டுவிட்டு, பிறகு முகத்தை எடை போட்டாள். இடையே ஒரு சிறிய கல்யாணக் கனவும் வந்து செல்லாமல் இல்லை.
மாப்பிள்ளையின் தாய், சேலையை போர்த்திக்கொண்டு, மிகவும் பதவிசாக “லௌகீகம் பத்திப் பேச ஆரம்பிக்கலாமா?” என்று கணவனுக்கு அன்புக் கட்டளையைக் கண்ணால் இட, அவரும் சுபாவின் அப்பாவுடன் அதுபற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.
“நீங்க பொண்ணுக்கு என்ன போடுவீங்க?”
“ஏதோ எங்களால ஏண்டது போடுவோம், நீங்க எவ்ளவு எதிர்பாக்றீங்கன்னு சொன்னா நல்லார்க்கும்”
“அம்பது பவுன் நகை; பத்தாயிரம் ரொக்கம்; மீதி சாமான்கள்லாம் உங்க இஷ்டத்ததுக்கு ஏத்தா மாதிரி பண்ணுங்க”
வருங்கால மாமியார் ‘பட்ஜெட்’ போட, அடுத்த அறையிலிருந்து சுவரோடு சுவராகிவிட்ட, சுபா திடுக்கிடுகிறாள். பற்களை மெல்லக் கடிக்கிறாள்; கைகளைப் பிசைகிறாள்; கால்கள் ஓர் இடத்தில் நிற்க முடியாமல் தவிக்கிறாள். முதன்முதலாக நேரில் கண்டவள்,
அந்தப் பெண்மணியை ஒரு வார்த்தையாவது உறைக்கும்படி கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள்.
வருங்கால மாமியார் பெண்ணின் ஜாதகத்தைப் பற்றிக் கூறுகிறாள். “உங்க பொண்ணுக்கு நல்ல ஜாதகம். ஏழுல் குரு இருக்கான்; ரேவதி நட்சத்திரம் வேற. ……எங்களுக்கு இதனாலகூட இந்த எடத்தை விட மனசில்ல” என்று ஆதங்கத்துடன் கூறுகிறாள்.
டிபன் சாப்பிட்டார்கள்; வந்தவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த சுபாவின் பெற்றோர், சற்றே மனக்கவலையுடன் அமர்ந்தனர். மின்விசிறியை ஓடவிட்டனர், வீட்டிலிருந்தவர்கள்.
மனத்துக்குள் பொருமிக் கொண்டிருந்த சுபா, “ஏம்பா…இப்டிலாம் போட்டுதான் எங்கல்யாணம் நடக்கணுமா? தெரிஞ்சிருந்தா எவனையாவது நல்லவனா பாத்து ‘லவ்’ பண்ணியிருப்பேன்” என்றாள். அப்பாவோ “என்னம்மா பண்றது? நீ நல்லா இருந்தாதானே எங்களுக்குச் சந்தோஷம்! அதுக்காக எதுன்னாலும் செஞ்சுதான் ஆகணும்” என்றார்.
எப்படியோ, நிச்சயதாம்பூலம் வரை சென்றாகிவிட்டது. நிச்சயதாம்பூலமும் நல்ல முறையில் முடிந்தது.
சுபாவுக்குப் போட வேண்டிய நகைகள் முதல் சீர் வரை அனைத்தும் செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம். சுபா ஓரளவு மகிழ்ச்சியுடன்தான் இருந்தாள்.
அன்று…
சுபாவின் வருங்கால மாமியார் சொல்லியனுப்பியதாக, ஒரு செய்தி வந்தது. “கல்யாணம் நடந்த ஒரு வாரத்துக்குள்ள மாப்ளைக்கு ஒரு யமஹா மோட்டார் சைக்கிள் புதுசா வாங்கித் தரணும். அத்தோட, கல்யாணத்தை ரொம்ப கிராண்டா வித் ரிஸப்ஷனோட பண்ணனும், வந்தவங்களுக்குத் தாம்பூலத்துக்குத் தேங்காய் தந்து அனுப்பணும்”. கேட்ட அப்பாவோ சோபாவில் தலை சுற்றியவாறு அப்படியே உட்கார்ந்தார்.
“அடக் கடவுளே….எப்டியோ முடிஞ்சிடும்னு இருந்தா….த் தொடர்கதை மாதிரி நீண்டுட்டே போவுதே …”அனைவரும் முகமெல்லாம் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.
சுபா மாலையில் வேலைக்குச் சென்றுவிட்டு வருவது பக்கத்து வீட்டின் இலேசான கம்பிவேலி மூலம் தெரிந்தது. வீட்டின் கம்பிக்கேட்டைத் திறந்தவள், வீட்டுக்கு முன் உள்ள போர்ட்டிகோவில் எல்லாரும் அமர்ந்திருப்பது கண்டாள். “என்ன பெரீய்ய ஆலோசனை?” என்றாள்.
“ஒண்ணுமில்லே என்று அப்பா ஈனஸ்வரத்தில் இழுக்க, அம்மா அத்தனையையும் அருவிபோல் துரிதகதியில் கொட்டினாள். சுபா, நடந்ததை அறிந்தாள்; அவ்வளவுதான்,
“என்னன்னு நெனச்சிட்ருக்கான் ங்க…எதோ உங்களாலதாம்பா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன், இப்ப நிச்சயம் கூட ஆயாச்சு… இனுமே எவனும் கட்டிக்கமாட்டான்னு நெனச்சிட்டு இத்தனையும் பண்றாங்க…நான் அப்போகூட ஒன்னும் வர்றவனோட செலவுல வாழணும்னு கட்டாயம் கட்டாயம் இல்ல…எனக்குன்னு வேலை ஒன்னு இருக்கு; இப்டி ஒன்னொன்னா கேக்றவங்க நாளைக்கு கல்யாணம்னா, இன்னிக்கு, இன்னும் பத்து சவரம் வேணும்; வைங்கன் னு சொல்வாங்க. அப்போ என்னா பண்ணுவீங்க?” சிறியவள் பெரியவரைத் தன் கேள்வியில் சிக்க வைத்தாள்.
“சொல்றேன், நல்லாக் கேட்டுக்கங்க…ப்பா…எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்! இதுவரைக்கும் செலவானது எல்லாம் போவட்டும்…இனிமே எவனாவது பொண்ணுன்னு கேட்டு வந்தா, அப்பா, நல்லவனா இருந்தாக் கட்டிக்கறேன்; அவனும் இவன மாதிரியே கேட்டான்னா, கல்யாணத்துக்கே ஒரு ‘டாட்டா’ சொல்லிடுவேன்” என்றவள், ‘டக்டக்’கென்று ஓசையெழுப்ப ஆக்ரோஷமாக நடந்து சென்றவள், மறுமொழிக்கு அங்கே இடமில்லை இடமில்லை என்று சொல்லாமல் சொல்வதைப்போலச் செருப்புகளை உதறிவிட்டு உள்ளே சென்றாள்.
– 1986, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.