கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 2,942 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

அத்தியாயம்-21

அரைமணி நேரம் கழிந்தது. அந்த வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வித்யாபதி இறங்கினான். ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்த ரத்னா “இந்திரா! சீதாபதி வந்து கொண்டிருக்கிறான்” என்றாள். அதைக் கேட்டதும் கட்டில்மீது சோர்வுடன் படுத்திருந்த இந்திரா எழுந்து கொண்டாள்.

வித்யாபதி உள்ளே வந்தான். அவன் முகம் கலவரமடைந்திருந்தது. உள்ளே வந்ததும் கட்டில்மீது அமர்ந்திருந்த இந்திராவைப் பார்த்ததும் அவன் கண்களில் கொஞ்சம் நிம்மதி தோன்றியது. இந்திராவை அவன் ஒன்றுமே கேட்கவில்லை. இந்திரா நன்றாகத்தான் இருக்கிறாள். பின்னே ரத்னா ஏன் அப்படிப் போன் செய்தாள்? இந்திராவுக்கு உடம்பு சரியில்லை என்றும், அழுது கொண்டிருக்கிறாள் என்றும் உடனே கிளம்பி வரச்சொல்லிவிட்டு மறுபேச்சுக்கு இடமின்றி சட்டென்று போனை வைத்துவிட்டாள். வித்யாபதி எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தயங்கவும் இல்லை. மேனேஜரிடம் “வேலையாய் போகிறேன். நேரத்தோடு நான் வரவில்லை என்றால் பூட்டிக் கொண்டு நீங்கள் போய்க் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு மேஜை டிராயரை பூட்டிவிட்டு கிளம்பி வந்துவிட்டான்.

ஆட்டோ என்னதான் வேகமாக போய்க் கொண்டிருந்தாலும் அவனுக்கு ஊர்ந்து செல்வதாகவே தோன்றியது. அவன் உள்ளம் அம்பாய் ஊடுருவிச் சென்று இந்திராவை மனக்கண்ணால் பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தது. இந்திராவுக்கு என்னவாகிவிட்டது? தனிமையைத் தாங்க முடியாமல் ஏதாவது வேண்டாத காரியத்திற்குத் துணிந்துவிட்டாளா? கடவுளே.. இந்திராவை மறுபடியும் தான் உயிரோடு பார்க்க முடியுமா? தான் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இந்திராவின் தனிமை நீங்காது என்று அவனுக்குத் தெரியும். ஆட்டோ அந்த வீட்டின் முன்னால் நின்றதும் வீட்டிற்குள் நுழைந்து கட்டில்மீது கைகளை பின்னால் சாய்த்துக் கொண்டு சோர்வுடன் உட்கார்ந்திருந்த இந்திராவைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு மூச்சு வந்தது. மனதில் ஏற்பட்ட பயத்தினால் திக்கு முக்காடிக் கொண்டிருந்தவன் சாதாரண நிலைக்குத் திரும்பினான்.

வித்யாபதியின் முகத்தில் தென்பட்ட கலவரத்தை, இந்திராவை சாதாரண நிலையில் பார்த்ததும் தோன்றிய ஆச்சரியத்தை உணர்ந்த ரத்னா தவறு செய்துவிட்டவள் போல் “இப்பொழுதே வருகிறேன்” என்று பொதுவாக சொல்லிவிட்டு உள்ளே நழுவிவிட்டாள்.

வித்யாபதி அறையில் நடுவில் நின்றபடி இன்னும் இந்திராவையே பார்த்துக் கொண்டிருந்தான். இந்திரா கட்டிலை விட்டு எழுந்து வந்தாள். “வித்யா! உன்னை ரொம்ப கலவரப்படுத்தி விட்டேன் இல்லையா? என்னை மன்னித்துவிடு.” தள்ளாடி கீழே விழப்போன இந்திராவை அவன் சட்டென்று பிடித்துக் கொண்டான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவனுக்குப் பற்றிக்கொள்ள ஆதாரம் கிடைத்தாற்போல் இந்திரா அவன் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். தலை சுற்றுவது போலிருந்தது அவளுக்கு. கால்கள் தள்ளாடின. தானே அவனை நெருங்கினாளோ இல்லை அவன்தான் அவளை நெருங்கி அணைத்துக் கொண்டானோ தெரியவில்லை. அடுத்த வினாடி அவன் அணைப்பில் கட்டுண்டுக் கிடந்தாள்.

“இந்தூ!” அவன் தலையை வருடினான்.

“நான் உன்னைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பைத்தியம் போல் அப்படி கடிதம் எழுதிவிட்டேன். என்னை மன்னித்து விடுவாயா?”

“அப்படிச் சொல்லாதே.”

“என்மேல் கோபம் இல்லையே?”

“கோபமா? உன்மீதா? பைத்தியம்தான் நீ” அவன் சிரிப்பில் அன்பு கலந்திருந்தது.

”உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஆவேசம் அதிகம் என்று.”

“இது எவ்வளவு சங்கடங்களை உருவாக்கிவிட்டது என்று இப்பொழுதாவது புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன்.”

”வித்யா! எனக்கு எதுவும் தெரியாது. என்னைக் குற்றம் சொல்லாதே ப்ளீஸ்.”

“நான் உன்னை எதுவும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். போதுமா?”

இந்திராவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அவன் அருகில் இருக்கும் போது எத்தனையோ பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், எதற்கும் அவசரப்படக் கூடாது என்றும், அவனைத் தொந்தரவு செய்யாமல் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தோன்றும். ஆனால் அவன் கண்மறைவானதுமே அந்த யோசனைகள் எல்லாம் எங்கேதான் போய் மறைந்துவிடுமோ தெரியவில்லை. அவனை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவனை இனிமேல் பார்க்கவே முடியாதோ என்ற அச்சம் ஏற்படும். பொறுமை நசிந்து போய்விடும். தான் அவனுக்கு சங்கடத்தை விளைவிப்பது தெரிந்தாலும் தொந்தரவு செய்யாமல் இருக்க முடியவில்லை அவளால். அது அவனுக்குப் புரிந்தால் நன்றாக இருக்கும். அவன் ரொம்ப நல்லவன். தனக்காக எதையும் பொறுத்துக் கொள்வான். அது அவளுடைய அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டத்தை அவள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

“இந்தூ! நீ தைரியமாக இருக்கப் பழகிக்கொள்.” அன்புடன் வெளிவந்தது அவன் வார்த்தை.

“என்னால் முடியவில்லை.”

“பழக்கப்படுத்திக்கொண்டால் வராத வித்தை எதுவும் இல்லை.”

“எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது வித்யா.”

”ஏன்?”

“என்னை விட்டு நீ விலகிப் போய் விடுவாயோ என்று. அப்போ நான் எதற்காக வாழணும்?”

“நான் உயிரோடு இருக்கும் வரையில் அந்த நாள் வரவே வராது. போதுமா? இல்லாததைப் பற்றி நடக்காததைப் பற்றி ஏன் இப்படி யோசித்துக் குழம்புகிறாய்? உன் உடம்பைப் பார்த்துக்கொள்.”

ஆமாம். தான் திடமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடம்பு சரியாக இருக்கும். ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கையில் தனிமையை எதிர்த்து நிற்க முடியும். எல்லாவற்றுக்கும் ஆரோக்கியம் முக்கியம். அதனால் தான் அசிரத்தையாக இருக்கக் கூடாது. நினைத்துக் கொண்டாள் இந்திரா.

அதற்குள் இந்திராவின் அக்கா வந்துவிட்டாள். அறையின் நடுவில் ஒருவருடைய அணைப்பில் மற்றொருவர் ஒரே கொடியைப் போல் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது.

“இந்திரா!” உருமுவது போல் வந்தது அவள் குரல்.

இந்திராவைவிட வித்யாபதிதான் அதிகமாக திடுக்கிட்டாற்போல் இந்திராவை சட்டென்று விட்டு விட்டான்.

இந்திராவின் அக்கா வேகமாக உள்ளே வந்தாள். “இந்திரா! உனக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? நடு வீட்டிலேயே என்ன இந்த நாடகம்? அக்கம் பக்கத்தார் பார்த்தால் வேறு வினை வேண்டுமா? உன்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். என் மூஞ்சியில்தான் காறித் துப்புவார்கள். அக்காவுக்குத் தெரிந்துதான் இந்த நாடகம் நடக்கிறது என்பார்கள். என்னால் தெருவில் தலையைக் காட்ட முடியுமா? இப்பொழுதே நடைபிணமாக கிடக்கிறேன் நான்.”

இதற்கு முன்பாக இருந்தால் இந்திரா ஏதாவது பதில் சொல்லியிருப்பாளோ என்னவோ? இப்பொழுது பேசவும் தெம்பு இருக்கவில்லை. தானும் வித்யாபதியும் நெருக்கமாக இருந்த காட்சியை அக்கா பார்த்து விட்டாளே என்ற வெட்கமும், தடுமாற்றமும் அவளை அலைக்கழித்தன.

இந்திராவின் அக்கா வித்யாபதியின் பக்கம் திரும்பினாள். “உனக்காவது வெட்கம் மானம் இருக்க வேண்டாமா? நீ என்னவோ பெரிய இடத்துப் பெண்ணை மணந்துகொண்டு செலவந்தர் வீட்டு மருமகனாக காரில் சுற்றிக் கொண்டு இருக்கிறாய். இந்திராவின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாய். கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி ஆசை காட்டி அவளை நட்டாற்றில் மூழ்கடித்துவிட்டாய். இப்பொழுதாவது இவளை விட்டுத் தொலையேன்? நீயா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறாய் இவளை? அவ்வளவு காதலித்ததாக புலம்பிக் கொண்டிருப்பவன் கல்யாணம் ஏன் செய்து கொள்ளவில்லை என்று கேட்கிறேன். இவள் உனக்கு வேண்டும். அவ்வளவுதான். ஏன் எங்க வீட்டுக்கு வந்து எங்கள் மான மரியாதையை தெருவுக்கு இழுக்கிறாய்?” இந்திராவின் கையைப் பற்றி அவன் பக்கம் தள்ளினாள். “போ. அழைத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போய் உன் மனைவியின் எதிரில் கட்டித் தழுவி முத்தம் கொடுத்துக்கொள். துணிச்சல் இருந்தால், ஆண் பிள்ளையாக இருந்தால் அந்தக் காரியத்தைச் செய். போ, அழைத்துப் போ.” அவள் கத்தல்களைக் கேட்டு அக்கம் பக்கத்தார் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள்.

“இவளை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தலையெழுத்திற்கு நான் எவ்வளவு அவஸ்தை படுகிறேன் என்று அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். என் தங்கை இப்படிப் பட்டவள் என்று தெரிந்தால் நாளைக்கு என் மகளுக்குக் கல்யாணம் எப்படி நடக்கும்? வெட்கமில்லாமல் அப்படிப் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே? இந்திராவிடம் உனக்கு பிரியம் இருந்தால் அவளை இப்பொழுதே உன்னுடன் அழைத்துப் போய்விடு. கல்யாணம் செய்துகொண்டு குடித்தனம் செய்வாயோ, நாலு நாள் வைத்துக் கொண்டு மோகம் தீர்ந்ததும் விஷத்தைத்தான் கொடுப்பாயோ. என் வீட்டில் ஒரு நிமிடம் கூட வைத்துக் கொள்ள மாட்டேன். போங்கள் இருவரும். என் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டாம்.” மூச்சிரைத்தால் நிறுத்தினாள்.

வித்யாபதி சிலையாய் நின்றுவிட்டான். இதயத்தில் அவமானப் புயல் வீசிக் கொண்டிருந்த போது, அதைத் தாங்கிக் கொண்டு நிற்கும் ஆலமரத்தைப் போல் காட்சியளித்தான். இந்திராவைப் பார்த்தன். “இந்தூ! வா போகலாம். பெட்டியை எடுத்துக்கொள்.”

அக்கா செய்த அவமானத்தை விட அவன் வார்த்தைகளைக் கேட்டு மூளை குழம்பினாற்போல் நின்றுவிட்டாள் இந்திரா.

“நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். போகலாம் வா. ரத்னா! இந்திராவின் பெட்டி எங்கே இருக்கு? கொண்டுவா.’

ரத்னா அங்கே வந்தாள். “வித்யாபதி! உங்களுக்கு மூளை கலங்கிவிட்டதா? அக்கா சத்தம் போட்டதில் தவறு என்ன இருக்கு? வீட்டிற்குப் போய் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். நீங்க திருமணம் ஆனவர். இந்திராவை விட்டு விலகியிருப்பது உங்களுக்கும் அவளுக்கும் இருவருக்குமே நல்லது. உலகததாரின் பழிச்சொற்களுக்கு முன்னால் அக்கா சொன்ன வார்த்தைகள் ஒன்றுமே இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது போய் விடுங்கள். தயவு செய்து போய் விடுங்கள்.”

அவன் இந்திராவைப் பார்த்தான். “இந்தூ! என்னுடன் வருவாயா மாட்டாயா?” அவன் குரல் திடமாக ஒலித்தது,

இந்திரா பைத்தியம் பிடித்தவள் போல் பார்த்தாள்.

“இந்திராவால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்போ அவள் யோசிக்கும் நிலையில் இல்லை. நீங்கள் போய் விடுங்கள். அக்காவின் கணவர் ஆபீசிலிருந்து வரும் நேரமாகிவிட்டது. அவர் வந்தால் ரொம்ப ரகளையாகிவிடும்.” வேண்டுகோள் விடுப்பது போல் சொன்னாள் ரத்னா.

வித்யாபதி மெதுவாக திரும்பிப் போய்விட்டான். இந்திரா சூனியத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“சீ… சீ. என்னுடைய தவறுதான். நான் போன் பண்ணாமல் இருந்திருக்கணும்” என்று நினைத்துக் கொண்டாள் ரத்னா.

“நான் சொன்னால் என் வாய் பொல்லாதது என்றாகிவிடும். அவளுடைய நன்மையை விரும்பிகிறவள் என்பதால் அப்படிப் பேசினேன். ஊராருக்கு என்ன வந்தது? இதெல்லாம் என் தலையெழுத்து. ஒரு பக்கம் அவரிடம் பேச்சுக் கேட்டுக் கொள்ள முடியாமல் கிடந்து சாகிறேன்.” இந்திராவின் அக்கா மூக்கைச் சிந்திப் போட்டாள்.

“நீங்க சொன்னதில் எந்த தவறும் இல்லை அக்கா. நீங்க சொல்லாவிட்டால் அவளுக்கு யார் எடுத்துச் சொல்வாங்க?” என்றாள் ரத்னா.

“தெரியாதவர்களுக்கு சொல்லலாம். தெரிந்தும் செய்பவர்களுக்கு சொல்லி என்ன லாபம்?” பழிப்பது போல் சொன்னாள் இந்திராவின் அக்கா.

ரத்னா இந்திராவின் தோளில் கையை வைத்தாள். “இந்தூ! நானும் உனக்குச் சொல்கிறேன். அக்கா சொன்னதில் தவறு எதுவும் இல்லை. இதற்கு முன்னால் வித்யாபதிக்கும் உனக்கும் எத்தனை ஆழமான காதல் இருந்தாலும் சரி. இப்பொழுது அவன் திருமணமானவன். கல்யாணம் ஆன நபருடன் உறவு வைத்துக் கொள்ளும் எந்தப் பெண்ணுமே சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க முடியாது. நம் கண் முன்னாடியே எத்தனையோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். காதலைவிட, கல்யாணத்தைவிட வாழ்க்கைதான் நமக்கு முக்கியம். நீ இந்த புதைகழியிலிருந்து வெளியில் வா. அக்காவிடம் கொஞ்சம் கூட கோபம் கொள்ளாதே” என்றாள்.

இந்திரா பதில் பேசவில்லை. எல்லா வார்த்தைகளும் காதில் விழுந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் விட அக்கா செய்த அவமானத்தை வலுக்கட்டாயமாக மென்று விழுங்கிய வித்யாபதியின் முகம்தான் அவள் கண்முன்னால் நிழலாடியது.

இந்திராவால் அதை மறக்கவே முடியவில்லை. அவனால் இந்த அவமானத்தை சகித்துக்கொள்ளத்தான் முடியுமா? வாழ்க்கையில் இனி தன் முகத்தை ஏறிட்டுத்தான் பார்ப்பானா?

அத்தியாயம்-22

வித்யாபதி வீட்டுக்கு வந்தான். சீதா விழித்துக் கொண்டுதான் இருந்தாள். வந்து கதவைத் திறந்தாள். ஒரு முறை வித்யாபதியை கூர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் இப்பொழுதுதான் வீடு நினைவுக்கு வந்ததா? என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது. சீதா வாயைத் திறந்து எதுவும் பேச மாட்டாள். ஆனால் அவள் பார்வையில் ஆயிரக்கணக்கான பொருள் பொதிந்திருக்கும்.

உடைமாற்றிக் கொண்டு வந்து தன் அறையில் உட்கார்ந்தான். சீதா வாசற்படியில் வந்து நின்றாள். “சாப்பிட வாங்க” என்றாள். அவள் அவன் அறைக்குள் வரமாட்டாள். அவன் இல்லாத நேரத்தில் சீதாதான் எடுத்து வைப்பாளோ அல்லது வேலைக்காரித்தான் ஒழித்து வைப்பாளோ தெரியாது. அறை மட்டும் எப்பொழுதும் பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு துப்புறவாக இருக்கும்.

“உங்களைத்தான்.” சீதாவின் குரலில் பொறுமையின்மை தெரிந்தது.

“எனக்கு பசியில்லை” என்றான் அவன்.

“எனக்கு ரொம்ப பசிக்கிறது.”

“நீ சாப்பிடு.”

“தனியாக சாப்பிடுவதாக இருந்தால் எப்பொழுதோ சாப்பிட்டிருப்பேன்.”

அவன் மௌனமாக எழுந்து வந்தான். சீதா சாமர்த்தியமாக அவனுக்கு விதிக்கும் தண்டனைகளில் இதுவும் ஒன்று. அவன் வரையிலும் சாப்பிட மாட்டாள். ஒருக்கால் அவன் சாப்பிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டால் தானும் சாப்பிடமாட்டாள்.

ஒரு முறை இப்படித்தான் நடந்தது. அவன் இரவு சாப்பிடவில்லை. மறுநாள் ஆபீசில் வேலை இருந்ததால் வீட்டுக்கு வர முடியவில்லை. சீதா நினைவு தப்பி விழுந்து விட்டதாகவும், டாக்டர் வந்திருப்பதாகவும் தாய் தெரிவித்ததும் அவன் வீட்டிற்கு வந்தான். டாக்டர் சீதாவுக்கு எந்த கொளாறும் இல்லையென்றும், சாப்பிடாததால் எற்பட்ட பலவீனத்தால் நினைவு தப்பி விட்டது என்று தெரிவித்தார். அவ்வளவு பலவீனமாக இருந்த போதிலும் சீதா வித்யாபதி சாப்பிட்ட பிறகுதான் சாப்பிட்டாள்.

அன்று இரவு தாய் அவனை கன்னாபின்னாவென்று திட்டித்தீர்த்தாள். “உனக்குக் கொஞ்சம் கூட புத்தியில்லை. எதற்காக அந்தப் பெண்ணை இப்படி துன்புறுத்துகிறாய்? திருமணம் ஆவதற்கு முன் அந்த இந்திராவிடம் ஏதோ பிரியம் இருந்தது என்றே வைத்துக்கொள். திருமணம் ஆன பிறகும் என்ன இது? நாளையோ மறுநாளோ சீதாவின் அப்பா அம்மா ஊரிலிருந்து வருவார்கள். என் மகள் ஏன் இப்படி இளைத்துவிட்டாள் என்று அவர் கேட்டால் என்னவென்று பதில் சொல்லுவேன்?”

“என்னை என்னம்மா செய்யக் சொல்கிறாய்?” அவன் இயலாமையுடன் பார்த்தான்.

“என்ன செய்வதாவது? நேரத்தோடு வீட்டுக்கு வா. அந்தப் பெண்ணுடன் சேர்ந்து சாப்பிடு. சினிமா, டிராமா என்று எங்கேயாவது அழைத்துக் கொண்டு போ. பாவம் அந்தப்பெண். அதைவிட வேறு என்ன கேட்கப் போகிறாள்?”

அன்று முதல் வித்யாபதி சீதாவுடன் சேர்ந்து சாப்பிடுவதை தன்னுடைய நித்திய கடமைகளில் ஒன்றாக பழக்கப் படுத்திக் கொண்டான். அதனால்தான் இப்பொழுது உடனே எழுந்து வந்தான்.

இருவரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டார்கள். சீதா அவனுக்கு பரிமாறிக் கொண்டே கேட்டாள். “இந்திராவை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்களா?”

“ஊம்.” சுருக்கமாக சொன்னான்.

“நீங்க போய் பார்த்துவிட்டு வந்தீங்களா?” ரொம்ப சாதாரணமாக கேட்பது போல் தோன்றினாலும், அந்தக் குரல் துறுவிக் கேட்பது போல் ஒலித்தது.

“போனேன்.” அவன் தயக்கமின்றி பதில் சொன்னான்.

சீதா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அதற்கு மேல் உரையாடல் தொடரவில்லை. சில சமயம் சீதாவுக்குத் தோன்றும். பெரும்பாலான ஆண்கள் இது போன்ற விவகாரங்கள் இருந்தால் மறைத்து வைக்கத்தான் முயற்சிப்பாளர்கள். பொய் சொல்லி மனைவியின் முன்னால் அப்பாவியாய் நடிக்க முயலவார்கள். வித்யாபதியிடம் அந்த மாதிரி போலித்தனம் எதுவும் இல்லை. அவனிடம் ஏதாவது கேட்கணும் என்றாலே அவளுக்கு அச்சமாக இருக்கும். ஏன் என்றால் விவரம் தெரிந்து கொள்வதற்காக தான் ஏதாவது கேட்பாள். அவள் வெளிப்படையாக சொல்லும் பதிலைக் கேட்கும் போது வேதனைத்தான் எற்படும். அதை மௌனமாக ஜீரணித்துக்கொள்ள அவளால் முடியவில்லை.

சீதாவுக்கு சமீபகாலத்தில் தோன்ற தொடங்கியது. தான் அவனை உடலலளவில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறாள். ஆனால் என்ன பயன்? அவன் மனம் இங்கே இருந்தால்தானே? எத்தனை நாட்கள் இப்படி? என்ன செய்வது? இந்திரா விஷயத்தில் அவன் தன்னிடமிருந்து எதையும் மறைப்பதில்லை. கொஞ்சம் கூட தயங்காமல் தான் இந்திராவுக்காக செய்யும் காரியங்களை, அவளைப் பார்க்க போன சமயத்தைச் சொல்லிவிடுகிறான். சில சமயம் அவன் நடித்தால், தன்னிடம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சீதாவுக்குத் தோன்றியது.

சீதா அவன் சாப்பிடும் போது கடைக்கண்ணால் அவன் சரியாக சாப்பிடுகிறானா அல்லத வேண்டாத வெறுப்புடன் சாப்பிடுகிறானா என்று கவனிப்பாள். பசியுடன் சாப்பிடுவதை, தான் பரிமாறியதை ஒதுக்காமல் சாப்பிடுவதை கவனித்த பொழுது மனதிற்கு கொஞ்சம் சமாதானமாக இருந்தது.

சிலசமயம் சீதாவுக்கு தன்மீதே கோபம் வரும். தனக்கு என்ன குறைச்சல் என்று அவனுக்காக ஏங்க வேண்டும்? அவனுடன் சண்டை போட்டுவிட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டு விட்டால்தான் என்ன?

சீதாவுக்கு பயமாக இருந்தது. விவாகரத்தா? தந்தையின் மான மரியாதை என்ன ஆவது? இன்னாரின் மகள் கணவனை விவாகரத்து பண்ணி விட்டாள் என்றால் உலகம் குத்திக் காட்டி பேசாதா? போகட்டும். அதற்கும் தான் அஞ்சப் போவதில்லை. வித்யாபதியைப் போன்ற மற்றொரு நபர் தனக்குக் கிடைப்பான் என்ற உறுதி இருந்தால் இந்த நிமிடமே தான் அவனை விட்டு விலகத் தயார். யார் இருக்கிறார்கள்? சல்லடை போட்டு சலித்தாலும் அவனைப் போன்ற ஆண்மகன் கிடைக்கவே மாட்டான்.

அது நினைவுக்கு வந்ததும் சீதாவுக்கு ரோஷம் பொங்கிக் கொண்டு வரும். தான் எதற்காக அவனை விட்டு விலக வேண்டும்? அவன்மீது தனக்கு முழு உரிமை இருக்கிறது. சீதா தலையணையில் தலையை முட்டிக் கொண்டாள். உரிமையை வைத்துக் கொண்டு தன்னால் என்ன செய்ய முடியும், ஆளே தனக்கு சொந்தம் ஆகாத போது.? சீதாவுக்கு ஒரு விஷயம் மட்டும் நன்றாகப் புரிந்தது. இந்திரா அவனுக்கு மிகவும் அபூர்வமானவள் என்று தான் பொறாமைப்படக் கூடாது. அவனுக்கு பிரியம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். அதற்குக் கொஞ்சம் காலம் ஆனாலும் சரி. அவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மனதை வேறு திசையில் செலுத்த முடியவில்லை அவளால்.

மேற்கொண்டு படிக்கலாமா என்றால் படித்துவிட்டு என்ன பயன் என்று தோன்றுகிறது. நல்லபடியாக திருமணமாகிவிட்டது. கணவன் குழந்தைகள் என்று தன் வாழ்க்கை பூந்தோட்டமாக இருக்கப் போகிறது என்று நினைத்துவிட்டாள். ஆனால் இந்தத் திருமணம் தன் வாழ்க்கையை சிக்கலாக்கிவிடும் என்று கனவிலும் அவள் நினைக்கவில்லை.

சீதாவால் எந்த முடிவுக்கு வர முடியவில்லை. அவளுடைய சுபாவம் பழமை மற்றும் புதுமையின் கலவையாக இருந்தது. கணவனை விட்டுவிட்டு தனியாக இருக்க வேண்டும். அல்லது வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பு சீதாவின் மனதில் ஏற்பட்டது. ஆனால் அவள் வளர்ந்த சூழ்நிலை, பண்பு அவளை பின் வாங்கச் செய்து கொண்டிருந்தது. பொறுமையுடன் குடித்தனத்தை சீர்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, ஆவேசத்தில் பானையைத் தூக்கி போட்டு உடைத்தாற்போல் நாசமாக்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.

நாளாவட்டத்தில் சீதாவுக்கு வித்யாபதியிடம் பிரியம் கூடியது. இந்திராவை மறக்கும்படி செய்துவிட்டால் அவன் நல்ல கணவனாக இருப்பான். சீதாவுக்கு துக்கமாக இருந்தது. அவள்தான் எத்தனை துரதிரஷ்டசாலி? அவனைக் கல்யாணம் மட்டுமே செய்து கொள்ள முடிந்தது அவளால். அவனுடைய காதலை பெறமுடியாமல் போய்விட்டது. இந்திரா என்றால் அவனுக்கு உயிருக்குச் சமம். அப்படி உயிரையும் கொடுக்கக் கூடிய நபர் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் திருமணம் ஒரு பொருட்டே இல்லை. இந்தத் திருமணத்திற்கு மதிப்புதான் என்ன? காதலுக்கு முன்னால் திருமணம் என்ற சடங்கு சூரியனுக்கு முன்னால் தீவிட்டியைப் போன்றதுதான்.

சீதாவுக்கு சிறுவயது முதல் எந்தப் பொருளாக இருந்தாலும் வேண்டும் என்று நினைத்தால் அதை அடைந்து தீர வேண்டியதுதான். சீதாவுக்கு ரோஷம் தலை தூக்கினாலும், தனிநபராக வித்யாபதியின் மதிப்பு புரிந்த போது அவனை விட்டு விலகக் கூடாது என்று தோன்றியது.

ஒருக்கால் அவனைத் துறக்க நேர்ந்தால் அந்த ஏமாற்றம் வாழ்நாளெல்லாம் அவளைத் துரத்திக் கொண்டே இருக்கும். அந்தக் குறையை எதனாலும் நிவிர்த்தி செய்ய முடியாது. அதனால் சீதா போராடுவதற்கு முடிவு செய்தாள்.

அத்தியாயம்-23

தனிமையை மௌனமாக அனுபவித்துக் கொண்டு நிம்மதியாக இருக்கவிடாமல் இந்திராவுக்கு மற்றொரு பிரச்னை வந்து சேர்ந்தது. அக்கா அவளுக்காக ஒரு வரனைக் கொண்டு வந்தாள். அவன் மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆக இருக்கிறான். பெயர் சக்கிரபாணி. இந்திராவை அவனுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு பிரியப் படுகிறான். அக்கா இந்திராவை உலுக்கி எடுத்தாள். “இந்திரா! இதுதான் என்னுடைய கடைசி முயற்சி. இந்த கல்யாணத்திற்கு நீ சம்மதிக்கப் போகிறாயா? அல்லது என் வீட்டை விட்டுவிட்டுப் போகிறாயா? ஏதோ ஒன்றை நாளை மாலைக்குள் முடிவு செய்.”

இந்திரா கவலையில் மூழ்கினாள். இந்த சோதனையிலிருந்து எப்படி மீளுவதென்று விளங்கவில்லை. அக்கா ரொம்ப பிடிவாதமாக இருந்தாள். ரத்னாவும் அக்காவின் பக்கம் சேர்ந்துகொண்டு விட்டாள்.

“இந்தூ! இன்னும் ஏன் அதையே பிடித்துக் கொண்டு இருக்கிறாய்? அவன் எப்படியும் அந்நிய மனுஷன் ஆகிவிட்டான். நீ அவனுடன் சேர்ந்திருப்பது என்பது நடக்காத காரியம். நீ என் பேச்சைக் கேள். அக்கா சொன்னதுபோல் இந்த வரனை பண்ணிக் கொள். அவனுக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. நம்மிடம் பிரியம் வைத்திருப்பவர்களை பண்ணிக் கொண்டால் வாழ்க்கை நிம்மதியாக கழிந்துவிடும்.

இந்திராவுக்கு ரத்னாவின் வாரத்தைகள் மூளையில் ஏறவேயில்லை. “ரத்னா! அவனுக்கு வித்யாபதியின் விஷயம் தெரியுமா தெரியாதா?” என்று கேட்டாள்.

“தெரியாது என்று நினைக்கிறேன்.”

“பின்னால் தெரிய வந்தால் என் உயிரை எடுத்துவிடுவான். முன்கூட்டியே சொல்லச் சொல்லி அக்காவிடம் சொல்.”

அன்று மாலையில் அக்கா மலர்ந்த முகத்துடன் சொன்னாள். “இந்தூ! உனக்கு அந்த சந்தேகமே வேண்டாம். அவனிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவனுக்கு ரொம்ப பரந்த மனசு. அதைப் பொருட்படுத்தவில்லை. இந்தக் காலத்தில் கல்யாணத்திற்கு முன்னால் இதெல்லாம் சகஜம்தானே என்றான். ரொம்ப நல்லவனாக தெரிகிறது.”

இந்திராவுக்கு சந்தோஷம் ஏற்படவில்லை. மேலும் எரிச்சல்தான் வந்தது. சக்ரபாணி தன்னிடம் இந்த விஷயத்தைப் பேசி ஆறுதலாக ஏதாவது சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அக்கா சொன்னதுமே அவன் சமாதானமடைந்துவிட்டது இந்திராவுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

“நான் வேலையை விட்டுவிடப் போகிறேன் என்று சொல்லு அக்கா” என்றாள்.

“என்ன பேச்சு இது? தங்கமான வேலையை விட்டுவிடுவதாவது? ஏன் விடணும்?” என்றாள்.

“உனக்குத் தெரியாது அக்கா. உள்ளத்தாலும் உடலாலும் நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். அதிலிருந்து என்னை மீட்கும் நபர்தான் எனக்குத் தேவை. அந்த நபர் வித்யாபதியைத் தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்க மட்டார்கள் என்பது என் நம்பிக்கை. என்னைப் பண்ணிக்கப் போகிற நபரிடம் ஒளிவு மறைவின்றி நான் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன். என்னைப் புரிந்துகொள்ளக் கூடிய நல்லிதயம் படைத்தவனாக இருந்தால் வித்யாபதியிடம் சொல்லிவிட்டு தொலைவாகப் போய் விடுகிறேன்.”

“திரும்பவும் அவனைப் பற்றிய பேச்சு எதற்கு? உனக்கு எப்போதும் அவனுடைய நினைப்புதான். அவனைப் பார்த்துவிட்டு அதே கண்ணோட்டத்தில் மற்றவர்களையும் எடைபோட்டால் எப்படி? இந்த உலகில் யாருமே அடுத்தவர்களைப் போல் இருக்க மாட்டார்கள். தோற்றத்தில், திறமையில் ஏதாவது வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். வேலைக்குப் போகமாட்டாளாம் என்று அவனிடம் நானே சொல்லிவிடுகிறேன். அவனே சம்மதிப்பான்” என்றாள்.

மறுநாள் இந்திரா ரத்னாவின் வீட்டிலிருந்து வந்த போது அக்காவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. குழந்தையை அனாவசியமாக திட்டியபடி காதைத் திருகிக் கொண்டிருந்தாள். அவளுடைய சுபாவமே அப்படித்தான். ஏதாவது எரிச்சல் ஏற்பட்டால் அதை குழந்தையிடம் காட்டுவாள். இந்திரா இதற்காக அக்காவிடம் பல தடவை சண்டை போட்டிருக்கிறாள். நயமாக எடுத்துச் சொல்லவும் முயற்சி செய்தாள். பலன்தான் இருக்கவில்லை.

இந்திரா மௌனமாக தன் அறைக்கு வந்து உட்கார்ந்தாள். அவள் ரொம்ப சந்தோஷமாக வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு இந்த ஊருக்கு டிராஸ்பர் ஆகிவிட்டது. ரத்னாவிடம் வித்யாபதி தெரிவித்திருக்கிறான். இரண்டு மூன்று நாட்களில் ஆர்டர்ஸ் வந்துவிடும். இந்திராவுக்கு வித்யாபதிக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. வித்யாபதி தனக்காக எப்படி தவித்துக் கொண்டு இருக்கிறானோ, அவனுடைய காதல் தன்னை எப்படி வாழவைக்கிறதோ, தனிமையில் இருக்கும் போது அவன் நினைவுகள் தனக்கு எப்படி துணையாக இருக்கிறதோ எல்லாம் மனம் விட்டு எழுத வேண்டும். கடிதம் எழுதினால் அவனுடன் பேசுவது போலவே இருக்கும்.

இந்திரா கடிதம் எழுத உட்கார்ந்தாள். அன்று அக்கா அவமானம் செய்த பிறகு அவன் மறுபடியும் கண்ணில் படவில்லை. அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. ரத்னா குளியல் அறையில் கால்வழுக்கிவிட்டதில் ஏற்பட்ட சுளுக்கினால் ஆபீசுக்குப் போகவில்லை. முன்னைப் போல் ரத்னா வித்யாபதியைப் பற்றி பேசுவதில்லை. ஏதாவது கேட்டால் “அவன் இப்போ உன்னுடைய வித்யாபதி இல்லை, சீதாவின் பதி. இன்னொருத்தின் கணவன்மீது ஆசை வைத்திருக்கும் எந்தப் பெண்ணும் வாழ்க்கையில் முன்னேறியதில்லை. அதனால் நீ அவனைப் பற்றி நினைப்பதை விட்டுவிடு. நானும் வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். அவனிடமிருந்து விலகியிருக்க போகிறேன்” என்றாள்.

இந்திரா பெருமூச்சுடன் எழுந்துகொள்ளப் போனாள்.

“உனக்கு இந்த ஊருக்கே திரும்பவும் மாற்றல் ஆகிவிட்டது. வேறு பிராஞ்சுக்கு போட்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் மாற்றல் உத்தரவு வந்துவிடுமாம்” என்றாள ரத்னா.

இந்திரா விருட்டென்று ரத்னாவின் பக்கம் திரும்பினள். “யார் சொன்னார்கள்?” “வேறு யார்? அந்த சீதாபதிதான். மதியம் என்னை பார்ப்பதற்காக வந்தான்.” “வித்யாபதி வந்தானா?” இந்திராவின் முகத்தில் நிறம் மாறியது.

”ஆமாம் இந்தூ! எனக்கத் தெரியும். அவன்தான் முயற்சி செய்து இந்த ஊருக்கு மாற்றிவிட்டான். அதற்காக அவன் எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டானோ அதுவும் எனக்குத் தெரியும். ஆனால் இது அவ்வளவு நல்லது இல்லை என்று இப்போ தோன்றுகிறது. நீ வேறு ஊருக்குப் போனாலாவது அவனை மறக்க முடியுமோ என்னவோ?”

“அப்படிச் சொல்லாதே ரத்னா! உனக்கு வித்யாபதியிடம் மதிப்பு இல்லையா?” “இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் அவனைவிட நீ எனக்கு முக்கியம். நான் உன்னுடைய சிநேகிதி.” ரத்னா இந்திராவின் கை மீது கையை வைத்தாள். “இந்தூ! அவன் மனைவி சீதா இருக்கிறாளே, அவளுக்கு அவன் என்றால் உயிர். அவனை அந்தப் பெண் விட்டுவிட மாட்டாள். நான் சொல்வதை நீ புரிந்துகொள்.”

இந்திரா வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டாள். ரத்னா சொன்னது பாதி சந்தோஷத்தையும், பாதி வேதனையுமாக இருந்தன.

தனக்கு வேலை இங்கே மாற்றல் ஆனதற்கு வித்யாபதிதான் காரணம் என்று தெரிந்த போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் ரத்னா சீதாவைப் பற்றிப் பிரஸ்தாபித்ததும் இதயம் பாரமாகிவிட்டது.

வித்யாபதிக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தாள். “அன்புள்ள வித்யா” என்று தொடங்கினாள். அதற்குள் அக்கா அங்கே வந்தாள். அவள் கையில் மடித்து வைத்திருந்த உடைகள் இருந்தன. அவற்றை அலமாரியில் வைத்துக் கொண்டே “உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஆகும் யோகம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றாள்.

“அந்த மட்டும் உண்மை என்றால் நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை” என்றாள் இந்திரா.

“எண்ணங்கள் எப்படியோ புத்தியும் அப்படித்தான் இருக்கும். உன் எண்ணம் அப்படி இருப்பதால்தான் உன் தலையெழுத்தும் அப்படி இருக்கிறது. வேலையை விட்டுவிடும் பட்சத்தில் நீ அவனுக்கு வேண்டாமாம்.”

“ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிடு.”

“நீ அந்த வார்த்தையைச் சொல்லுவாய் என்று எனக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் உனக்காக இல்லை, எனக்காக என்பது போல் இருக்கு உன் தோரணை. இப்பொழுதே சொல்லி விடுகிறேன். நீ வேலைக்குப் போகத்தான்வேண்டும். அவனைக் கல்யாணம் செய்து கொண்டுதான் ஆக வேண்டும்.” அருகில் வந்துகொண்டே சொன்னாள்.

“இந்திரா சட்டென்று “அன்புள்ள வித்யா” என்று எழுதியிருந்த எழுத்துக்களை உள்ளங்கையால் மறைத்தாள். பொறுமை நிறைந்த குரலில் சொன்னாள். “வேலைக்குப் போகிறேன் அக்கா. கல்யாணம் மட்டும் வேண்டாம்.”

“ஏன்? எதற்காக? எதற்காக என்று கேட்கிறேன்.”

“எனக்குக் கல்யாணமோ வேலையோ ஏதாவது ஒன்றுதான் தேவை.”

“வித்யாபதியைப் பண்ணிக் கொள்வதாக இருந்த போது வேலைக்குப் போகிறேன் என்றுதானே சொன்னாய்?”

“அந்தச் சூழ்நிலை வேறு.”

“இப்போ என்னவாகிவிட்டது?”

“உனக்குத் தெரியாது அக்கா. சக்ரபாணி என்னைப் பண்ணிக் கொள்வதாகச் சொல்வது எனக்காக இல்லை. என் வேலைக்காக. அவன் வித்யாபதி விஷயத்தில் சமாதானமானதற்குக் காரணம் பெருந்தன்மை இல்லை. பணத்தின் தேவைக்காக.” “வாயை மூடு. உனக்கு எல்லாமே கோணல் புத்திதான்.” “உள்ளதைத்தான் சொல்கிறேன் நான்.”

“நீ சக்ரபாணியைப் பண்ணிக்கொள்ளப் போகிறாயா இல்லையா?” “மாட்டேன்.”

“எல்லாமே உன் இஷ்டம்தானா? இப்பொழுதே சொல்லிவிட்டேன். நீ இவனைப் பண்ணிக் கொண்டால் சரி. இல்லாவிட்டால் என் வீட்டில் இருக்க வேண்டியதில்லை. இந்தத் திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாயோ இல்லை வீட்டை விட்டுப் போகிறாயோ முடிவு செய்துகொள். உண்மையாகத்தான் சொல்கிறேன். இது வெறும் பேச்சு இல்லை. இது என் வீடு. என் வீட்டில் இருப்பவர்கள் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வளவுதான்.” அக்கா அறையைவிட்டுப் போய்விட்டாள்.

இந்திரா சிலையாய் உட்கார்ந்துவிட்டாள். வித்யாபதிக்குக் கடிதம் எழுத வேண்டும் என்ற உற்சாகம் நசிந்துவிட்டது. அன்புள்ள வித்யா என்று எழுதியிருந்தற்கு அடியில் கோடுகளை போட்டபடி யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

“இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கிறாயா அல்லது வீட்டை விட்டுப் போகிறாயா?” அக்காவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

எவ்வளவு ஆதரவற்ற வாழ்க்கை? அக்கா தன்னை ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாள்? சில காரணங்களினால் தனக்கு திருமணத்திடம் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கல்யாணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண்ணால் வாழ முடியாதா?

அத்தியாயம்-24

ஒரு வாரம் கழிந்துவிட்டது. இந்திரா வேலையில் மறுபடியும் சேர்ந்தாள். இங்கே மாற்றல் கிடைத்துவிட்டதில் கடுகளவும் சந்தோஷம் இருக்கவில்லை. சக்ராபாணியை மணப்பதற்கு சம்மதிக்காததால் அக்கா கோபத்தில் பேசுவதை விட்டுவிட்டாள். அக்காவின் விட்டேற்றியான நடத்தையைப் பார்க்கும் போது இந்திராவுக்கு சொல்லொண்ணாத வருத்தம் ஏற்பட்டது.

வித்யாபதியின் ஜாடையே தெரியவில்லை. தினமும் அவன் தனக்காக வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திராவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவனுக்குத் தன்மீது கோபம் வந்துவிட்டது போலும். அக்கா திட்டியதும் அவன் தன்னை அவனுடன் வரச்சொல்லி அழைத்த போது போகாதது அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டதோ? இந்திரா கவலைப்பட தொடங்கினாள். அவனை ஒரு முறை சந்தித்து தன் மனதில் இருக்கும் வேதனையை சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியும் ஒருமுறை அவன் ஆபீசுக்கு போன் செய்தாள். யாரோ போனை எடுத்தார்கள். கரகரப்பான குரலில் வித்யாபதி இல்லை என்று சொன்னதுடன் நிற்காமல் “நீங்க யார்? என்ன வேலை?’ என்று கேள்வி கேட்டார்கள். இந்திரா போனை வைத்துவிட்டாள். ரத்னாவுக்கு காதிபண்டாரில் வேலை கிடைத்துவிட்டது. அவள் மூலமாக வித்யாபதியின் செய்திகள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அவனுக்கும் தனக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டாற்போல் இருந்தது. அது நாளுக்கு நாள் வளரந்து கொண்டிருந்ததே தவிர குறையவில்லை

மேஜையின் முன்னால் ஏதோ நினைப்பில் உட்கார்ந்திருந்த இந்திராவிடம் பியூன் வந்து போன் வந்திருப்பதாக சொன்னான். இந்திரா பற்று இல்லாதவள் போல் எழுந்து வந்தாள். வங்கி வாடிக்கையாளர்கள் ஏதாவது தகவல் தெரிந்து கொள்வதற்காக போன் செய்வது வழக்கம்தான்.

“ஹலோ!” குரலில் எரிச்சல் தென்பட்டுவிடாமல், பழக்கப்பட்ட குரலில் சொன்னாள்.

”ஹலோ!”

இந்திரா திடுக்கிட்டாற்போல் நிமிர்ந்து நின்றாள்.

“இந்தூ” மறுமுனையிலிருந்து வித்யாபதியின் குரல்.

“வித்யா!” நம்பமுடியாதவள் போல் அழைத்தாள்.

“நான்தான்.”

‘இத்தனை நாளாக எங்கே போய்விட்டாய்?”

“என்னவாகி இருக்கும் என்று சொல்லு பார்ப்போம்.”

“மனைவியுடன் ஏதாவது ஊருக்குப் போயிருப்பாய் என்று நினைத்தேன்.” “மை காட்!”

“ஏன் என்றால் நீ ஊரில் இருந்தால் என்னைச் சந்திக்காமல், குறைந்த பட்சம் போன் பண்ணாமல் இருக்க மாட்டாய். சொல்லு எங்கே போயிருந்தாய்?”

“எங்கேயும் போகவில்லை.”

“எங்கேயும் போகவில்லையா? நான் நம்பமாட்டேன்.”

“உண்மைதான் இந்தூ! நான் எங்கேயும் போகவில்லை. எனக்கு ஜுரம் வந்துவிட்டது.”

“என்னது?”

“ஆமாம் ஜுரம் வந்துவிட்டது. என்னால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை. கடிதம் எழுதி உன்னிடம் தரச்சொல்லி வேலைக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதைக் கொண்டு போய் நேராக சீதாவிடம் கொடுத்துவிட்டான்.”

“என்ன?” இந்திராவின் குரலில் ஆவேசம் காணாமல் போய்விட்டது. “ரகளை ஏதாவது நடந்ததா?” கிணற்றிலிருந்து பேசுவது போல் கேட்டாள்.

“ஆகாமல் இருக்குமா சொல்லு. சாரி இந்தூ.”

“நான்தான் உன்னிடம் சாரி சொல்லணும்.”

“நீயா? எதுக்கு?”

“அன்று அக்கா அப்படிப் பேசியதற்கு உனக்குக் கோபம் வந்து விட்டதோ என்று.”

மேஜைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மேனேஜர் குரலை கணைத்துக் கொண்டார். பைல்களை ஓசைப்படுத்திக் கொண்டே எடுத்து வைத்தார்.

இந்திரா இந்த உலகத்திற்கு மீண்டுவந்தாள். அது ஆபீஸ் என்றும், பக்கத்தில் மேனேஜர் இருக்கிறார் என்றும், அவர் காதுகளை தீட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் நினைப்பு வந்தது.

வித்யாபதி சொல்லிக் கொண்டிருந்தான். “கோபம் வரவில்லை இந்தூ! அன்று ஏதோ ஆவேசத்தில் சொல்லிவிட்டேனே ஒழிய அவ்வளவு தூரம் யோசித்துப் பார்க்கவில்லை. நீ செய்ததுதான் சரி. எப்படி இருக்கிறாய்?”

“நன்றாகத்தான் இருக்கிறேன்.”

“மாலையில் ஆபீசிலிருந்து போகும்போது வந்து சந்திக்கிறேன்.” சட்டென்று போனை வைத்துவிட்டான்.

“ஹலோ… ஹலோ…” என்றாள். திடீரென்று உரையாடலைத் துண்டிப்பானேன்? யாராவது வந்திருப்பார்களோ?

வெளியில் வரும்போது மேனஜர் மூக்குக் கண்ணாடி வழியாக விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பது தென்பட்டது.

அன்று பைலில் எல்லாம் தவறாக பதிவு செய்து மேனேஜரிடம் வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்டாள். “இதோ பாரும்மா. இது வங்கி. பணத்துடன் சம்பந்தப்பட்ட வேலை. சொந்த விவகாரங்களை மூளையில் வைத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

இந்திரா பதில் பேசவில்லை.

வெளியில் வந்தாள். அங்கே பஸ்ஸ்டாப் அருகில் வித்யாபதி நின்றிருந்தான். இந்திரா மக்கள் நடமாடும் சாலை என்பதையும் மறந்துவிட்டு ஓட்டமெடுத்தாள்.

அத்தியாயம்-25

வித்யாபதியை நெருங்கியதும் இந்திரா சட்டென்று அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவன் ரொம்ப இளைத்துவிட்டிருந்தான். முகத்தில் சோர்வு தென்பட்டது. அவனைப் பார்த்ததும் இந்திராவின் விழிகளில் கிர்ரென்று நீர் சுழன்றது.

“வித்யா! ரொம்ப ஜுரமாக இருந்ததா?” என்றாள். இல்லையென்பது போல் அவன் தலையை அசைத்தான். அருகில் இருந்த டாக்சியைக் காட்டி “ஏறு” என்றான். மறுபேச்சு பேசாமல் இந்திரா ஏறிக்கொண்டாள். வித்யாபதியும் ஏறிக்கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்து கதவைச் சாத்தினான். “போகட்டும்” என்றான் டிரைவரிடம்.

“எங்கே?” என்றாள் இந்திரா.

“ஓரிடம் என்று இல்லை. எங்கே இறங்கணும் என்று தோன்றுகிறதோ அங்கே இறங்கிக் கொள்ளலாம். டாக்சிக்காரனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்” என்றான்.

இந்திரா சந்தோஷமாக பார்த்தாள். தாயின் கையைப் பற்றிக் கொள்ளும் சிறு குழந்தையைப் போல் அவன் கரத்தைப் பற்றியிருந்தாள். அவன் கை சற்று மெலிந்து, பலம் குறைந்திருப்பது தெளிவாக உணர முடிந்தது. இந்திராவின் கண்களில் நீர் பொங்கி வந்தது. தனக்கு உடல்நலம் சரியாக இல்லாதபோது அவன் எத்தனை செய்தான்? யாருக்கும் பயப்படவில்லை. என்ன நடக்கும் என்று யோசிக்கவில்லை. அவனுக்கு ஜுரம் வந்தால் அவளால் என்ன செய்ய முடிந்தது? இந்திரா இன்னொரு கையையும் அவன் கையின் மீது பதித்தாள். அவனுக்கு தான் படும் வேதனை புரியுமா என்று தோன்றியது

இந்திராவின் மனதைப் புரிந்து கொண்டாற்போல் அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். ‘இந்தூ! உனக்கு செய்தி சொல்லி அனுப்பணும் என்று ரொம்ப தவித்தேன். சாத்தியப்படவில்லை. எனக்கு சுயநினைவே இருக்கவில்லை. அதென்ன ஜுரமோ, அதென்ன தலைவலியோ நரகவேதனைதான். அத்தனை ஜூரத்திலும்கூட உன்னைச் சந்திக்க முடியவில்லையே என்ற ஏக்கம்தான்.”

இந்திராவின் குரல் கம்மிவிட்டது. “எனக்குத் தெரியாது. தெரிந்தால் என்னை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஓடி வந்திருப்பேன். உனக்கு அவ்வளவு ஜுரமாக இருந்தால் யார் பார்த்துக் கொண்டார்கள்? அம்மாவா?”

“இல்லை, சீதா.”

இந்திரா சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்க்கத் தொடங்கினாள். “அவனுக்கு ஜுரம் வந்தது” என்ற வருத்தம் அவள் மனதிலிருந்து வெள்ளம் வடிந்தாற்போல் மெதுவாக நீங்கத் தொடங்கியது. சீதா அவனுக்கு பனிவிடை செய்தாளா? ஆம், அவள்தானே அவன் வாழ்க்கைக்கு அதிகாரி. சீதா செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? அவனுக்கு ஜுரம் வந்தது தனக்குத் தெரியவில்லை, ஒத்தாசையாக இருக்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாளே ஒழிய தெரிந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும்? தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத இயலாமை இன்னும் மோசமானது இல்லையா? தான் அந்த வீட்டிற்குப் போக முடியுமா? போனால் மட்டும் சீதா வாசற்படியை ஏற விடுவாளா?

வித்யாபதி இந்திராவின் கையை அழுத்திக் கொண்டே சொன்னான். ‘உன்னிடம் ஒரு நல்ல செய்தியைச் சொல்லத்தான் வந்தேன்.”

”என்னது?” பற்றற்ற குரலில் கேட்டாள்.

“ஹவுசிங் போர்டில் நீ எப்பொழுதோ பணம் கட்டியிருந்தாய் இல்லையா. அந்த வீடு உனக்கு அலாட் ஆகியிருக்கிறது. விரைவிலேயே அதற்கான காகிதங்கள் உனக்கு வந்து சேரும்.”

இந்திரா விருட்டென்று திரும்பிப் பார்த்தாள். “உண்மையாகவா?” என்றாள். ””உன்னிடம் என்றைக்காவது பொய் சொல்லியிருக்கிறேனா?”

“இல்லை இல்லை. உண்மையாகவா வித்யா? வீடு எனக்கு அலாட் ஆகியிருக்கிறதா? மைகாட்!” இந்திரா அவன் பக்கம் திரும்பினாள். “உனக்கு எப்படி தெரியும்? யார் சொன்னார்கள்?” நம்ப முடியாதவள் போல் உற்சாகத்துடன் கேட்டாள்.

“எனக்கு தெரியவந்தது.”

“எப்படி? யார் சொன்னார்கள்? சொல்லேன்.” உரிமையுடன் அவன் தொடையில் தட்டினாள்.

“சீதாவின் சித்தப்பா சொன்னார்.”

“சீதாவின் சித்தப்பாவா?”

“ஆமாம். சீதாவின் சித்தியின் கணவர், ஹவுசிங் போர்டில் செகரெட்ரியாக இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் சாப்பிட வந்தார். பேச்சுவாக்கில் வீடு அலாட்மெண்ட் பற்றிய பேச்சு வந்தது. யாராவது அப்ளை செய்திருந்தால் சொல்லச் சொல்லி சொன்னார். உன் பெயர், அப்ளிகேஷன் நம்பர் எல்லாம் எழுதிக் கொடுத்தேன். வீடு கட்டாயம் கிடைத்துவிடும் என்று சொன்னார். இன்று மதியம் போன் செய்து வீடு அலாட் செய்திருப்பதாகவும், நாளை பேப்பர்களை அனுப்புவதாகவும் தெரிவித்தார்.”

இந்திராவின் முகத்தில் படர்ந்த சந்தோஷம் என்ற சந்திரனை ஏமாற்றம் என்ற கரு மேகமானது மறைத்தாற்போல் இருந்தது. சீதாவின் சித்தப்பா மூலமாக வீடு கிடைத்ததா? இந்திராவின் மகிழ்ச்சி பாதி ஆவியாகிவிட்டது.

‘”சீதாவுக்குத் தெரியுமா?” தாழ்ந்த குரலில் கேட்டாள்.

தெரியும் என்பது போல் தலையை அசைத்தான். “நான் சீட்டில் பெயர் எழுதி அவரிடம் கொடுத்தேன். சீதா என்னிடம் நேராக கேட்கவில்லை. அவளுடைய சித்தப்பா சீட்டியை பர்ஸில் வைத்துக் கொள்ளப் போன போது “யாரது?” என்று கேட்டு வாங்கிப் பார்த்தாள்.”

“என்ன சொன்னாள்?”

“என்ன சொல்லப் போகிறாள்? எதுவும் சொல்லவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேன்.”

இந்திரா பெருமூச்செறிந்தாள். எதுவும் சொல்லவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே? சீதா கட்டாயம் சண்டை போட்டிருப்பாள். வித்யாபதி சொல்ல மறுக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

டாக்சி சாலைகளில் முகவரி தெரியாத கடிதம் போல் சுற்றிக் கொண்டே இருந்தது.

“காபி குடிக்கிறாயா?” வித்யாபதி கேட்டான். இந்திரா தலையை அசைத்தாள். வித்யாபதி டாக்சியை ஹோட்டல் அருகில் நிறுத்தச் சொன்னான். மீட்டரைப் பார்த்ததும் இந்திராவுக்கு பகீர் என்றது. நிறையவே ஆகியிருந்தது. அவள் பர்ஸை திறக்கப் போன போது வித்யாபதி தடுத்துவிட்டு சட்டைப் பையிலிருந்து பர்ஸை எடுத்து தானே தந்து விட்டான். இந்திராவுக்கு அந்த நிமிடம் டாக்சியில் உட்கார்ந்து ஊர் சுற்றிய சந்தோஷம் பறந்தோடி விட்டாற்போல் இருந்தது.

இருவரும் ஹோட்டலுக்குள் வந்தார்கள். இந்திரா ஆஸ்பத்திரியில் இருந்த போது வித்யாபதி சொன்னது நினைவுக்கு வந்தது. “வீடு இல்லாவிட்டால் என்ன? வெளி உலகம் எல்லாம் நம்முடையதுதான். எங்கே வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்ளலாம்” அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை? ஃபாமிலி ரூமில் உட்கார்ந்து கொண்டார்கள். வித்யாபதி சர்வருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாம் இப்படி வந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன?” என்றாள் இந்திரா.

“ஆமாம், ரொம்ப நாட்களாகி விட்டன” என்றான் அவன்.

அதற்குள் சர்வர் வந்தான். குலாப்ஜாமூன், மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான். இந்திராவுக்கு மிகவும் பிடித்தமான மசாலா தோசையை விண்டு அவளுக்கு ஊட்டிவிடுவது வித்யாபதிக்கு ரொம்ப பிடிக்கும். இந்திராவுக்கு பழைய நினைவுகள் வந்து விட்டன. அவளுக்கு சம்பளம் கிடைத்ததும் இங்கே வந்து விடுவார்கள். வித்யாபதி அதிகமாக செலவழிக்க விடமாட்டான். சிக்கனத்தைப் பற்றி சொற்பொழிவு ஆற்றுவான். “இந்தூ! நம்மில் பலபேருக்கு பணத்தை எப்படி பயண்படுத்துவது என்று தெரியாது. ஜாக்கிரதையாக செலவு செய்தால் நெருக்கடி வர வாய்ப்பு இல்லை. உதாரணமாக வீட்டு பர்னிசரையே எடுத்துக் கொள். நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அடுத்த வீட்டில் இருக்கும் பொருள் நம் வீட்டிலும் இருந்தாக வேண்டும் என்று, வெண்டாத பொருட்களை எல்லாம் வாங்கிப் போடுவோம். சில வீடுகளைப் பார்த்தால் தேவையற்ற சாமான்களுடன் நிறைந்திருக்கும் தெரியுமா? அதே போல் உடைகளும்…”

“என்னவோப்பா. எல்லாமே கணக்காய் இருக்கணும் என்று நீ எண்ணுகிறாய். எல்லோருக்கும் அந்த அளவுக்கு மூளை இருக்க வேண்டாமா?” இந்திரா சொல்லுவாள். “மூளை இல்லாததால்தான் சங்கடங்களை வரவழைத்துக் கொள்கிறார்கள்.” வித்யாபதி புதுப்பது விஷயங்களைப் பற்றி சொல்லும் போது கண்களை அகலவிரித்து கேட்டுக் கொண்டிருப்பாள்.

அந்த நாட்கள்தான் எவ்வளவு நன்றாக இருந்தன? இருவரின் உரையாடலில் எவ்வளவு எதிர்பார்ப்பு? எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள்! நம்பிக்கை! எப்போதும் கல்யாணத்தைவிட குடித்தனம் இருக்கப் போகும் வீட்டைப் பற்றி, குழந்தைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்தைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதே இல்லை. ஏன் என்றால ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டாற்போல் இருவருக்குமே தோன்றியது.

அவனும் மௌனமாக இந்திராவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்திருக்கும் போலும். அவன் கண்களிலும் அதே கேள்வி தென்பட்டது. அந்த நாட்கள் எங்கே காணாமல் போய்விட்டன?

அதற்குள் கதவு திறந்து கொண்ட சத்தம் கேட்டது. இருவரும் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள். ஸ்பிரிங் டோரைத் திறந்துகொண்டு பருமனாக இருந்த நபர் ஒருவர் உள்ளே வந்தார். அவரைத் தொடர்ந்து மனைவி, நான்கு குழந்தைகளும் வந்தார்கள். அவர்களும் பருமனாகத்தான் இருந்தார்கள். ஷாப்பிங் போய் விட்டு வருகிறார்கள் போலும். எல்லோருடைய கைகளிலும் பாக்கெட்டுகள் இருந்தன. வித்யாபதியைப் பார்த்ததும் அவர் புருவம் உயர்த்தி, கண்களை விரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே “ஹலோ! சீதாபதி” என்று வித்யாபதியின் கையைப் பற்றி குலுக்கிவிட்டு மனைவியின் பக்கம் திரும்பி “இதோ பார்த்தாயா நம் சுந்தரியின் மருமகன், பெயர் சீதாபதி” என்றான்.

“இல்லை. என் பெயர் வித்யாபதி” என்றான் வித்யாபதி பணிவுடன்.

அவர் கண்களை அகலமாய் விரித்துப் பார்த்தார். “என்ன? உன் பெயர் சீதாபதி இல்லையா? பின்னே எல்லோரும் சீதாபதி என்று சொன்னார்களே? நான் உண்மையில் சீதாபதிதான் என்று நினைத்துவிட்டேன். வித்யாபதியா? ஓஹோ… சீதாவின் கணவன் என்பதால் சீதாபதி என்று அழைக்கிறார்களா? ஓஹோஹோ..” என்று வயிறு குலுங்கச் சிரித்தார். “அது அப்படித்தான். என் பெயர் ராமநாதன். ஆனால் எங்க மாமியார் வீட்டில் யாருக்கும் என் பெயர் தெரியாது. சாவித்திரியின் புருஷன் என்பார்கள். இவள்தான் என் மனைவி சாவித்திரி. இவர்கள்தான் எங்கள் வீட்டு வானரப்படை” என்று மனைவி குழந்தைகளை அறிமுகப்படுத்தினார்.

அவர்களுடைய பெயர்களை சொன்னதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வித்யாபதியின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய படிப்பு மற்றும் புத்திச்சாலித்தனத்தைப் பற்றி விலாவாரியாகச் சொல்லத் தொடங்கினார். அது முடிந்த பிறகு “பிசிநெஸ் எப்படி இருக்கிறது? நீ வந்த பிறகு நன்றாக போய்க் கொண்டிருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உன் மாமனார், மாமியார் ஊருக்குப் போய் எவ்வளவு நாள் ஆச்சு? இன்னும் வரவில்லையா? அது போகட்டும். இந்தப் பெண் யார்?” இந்திராவை ஏற இறங்க நோட்டமிட்டுக் கொண்டே கேட்டார்.

“என்னுடைய கசின். பெயர் இந்திரா. வங்கியில் வேலை பார்க்கிறாள்” என்று அறிமுகம் செய்து வைத்தான். இந்திரா வணக்கம் தெரிவித்தாள். வங்கியில் வேலை என்றதும் அவர் கண்களை விரித்து அப்படியா என்பது போல் தலையை அசைத்தார். “கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார். இந்திராவைப் பார்த்தால் இன்னும் கல்யாணம் ஆனாற்போல் தெரியவில்லை.

“இன்னும் இல்லை.” அதைச்சொல்லும் போதே வித்யாபதியின் முகம் சிவந்துவிட்டது.

இந்திரா தலையைத் திருப்பிக் கொண்டு சுவற்றில் இருந்த ஓவியத்தைப் பார்க்கத் தொடங்கினாள். சர்வர் வந்து டிபன் தட்டுகளை வித்யாபதி இந்திராவின் முன்னால் வைத்தான்.

ராமநாதனும் தன்னுடைய தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தோசையை ஆர்டர் செய்தார்.

இந்திரா வித்யாபதி சாப்பிடத் தொடங்கினார்கள்.

“இந்தப் பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? என் அண்ணாவின் மகன் ஒருத்தன் இருக்கிறான், பி.காம். பாஸ் செய்திருக்கிறான். இன்றோ நாளையோ அவனுக்கும் வங்கியில் வேலை கிடைத்துவிடும். கல்யாணத்தை முடித்து விடலாம் என்று பார்க்கிறோம். நல்ல வரனுக்காக தேடிக் கொண்டிருக்கிறோம்.” இந்திராவைப் பார்த்துக் கொண்டே சொன்னார். ‘அவனுக்கு வேலைக்குப் போகிற பெண்தான் வேண்டுமாம்.” அவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி இருப்பதாகத் தெரியவில்லை.

“குழந்தைகளுக்கு ஸ்கூல் திறந்துவிட்டார்களா?” வித்யாபதி பேச்சை மாற்றினான்.

“என்ன பள்ளிகளோ என்னவோ.” அவர் பள்ளிக்கூடத்தைப் பற்றி வசைபாடத் தொடங்கினார். “டொனேஷன்கள், பீசுகள் என்று செலவு செய்வதைத் தவிர குழந்தைகளுக்கு பாடம் எங்கே சொல்லித் தருகிறார்கள். மறுபடியும் ட்யூஷன் அது இது என்று நாம் திண்டாட வேண்டிதுதான். என் குழந்தைகளிடம் நான் சொல்லிவிட்டேன். எல்லோரும் முதல் ரேங்க் தான் வாங்கியாகணும். இரண்டாவதாகக் கூட வரக் கூடாது. வந்தால் கொன்று போட்டு விடுவேன்.”

இந்திரா தோசையைப் பாதி சாப்பிட்டு மீதியை விட்டுவிட்டாள். வித்யாபதியும் சரியாக சாப்பிடவில்லை. சர்வர் வந்தான். “காபி வேண்டாம்” என்றாள் இந்திரா.

“எனக்கும் வேண்டாம். பில்லைக் கொண்டு வா” என்றான் வித்யாபதி.

சர்வர் பில்லைக் கொண்டு வந்ததும் கொடுத்துவிட்டு எழுந்து நின்றான்.

ராமநாதன் விதயாபதியைப் பார்த்து “வீட்டுக்கு வருகிறேன். சீதாவைக் கேட்டதாகச் சொல்லு” என்றார். அவர் வித்யாபதியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை மட்டும் இந்திராவின் மீதுதான் இருந்தது. அந்தப் பார்வை இந்திராவுக்கு மட்டுமே இல்லை வித்யாபதிக்குக் கூட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்திராவின் நடை உடை பாவனையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“அப்பப்பா! செத்துவிட்டேன். நம் நேரத்தை எல்லாம் வீணாக்கிவிட்டார்” என்றாள் இந்திரா வெளியே வந்ததும்.

“என் உயிரை எடுக்க எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.” வித்யாபதியும் சலித்துக் கொண்டான்.

“சினிமாவுக்குப் போகலாம் வித்யா! அங்கேயாவது நிம்மதியாக மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கலாம்” என்றாள் இந்திரா.

“சினிமாவை யாரால் பார்க்க முடியும்?”

“ஒ.கே. பழைய சினிமா ஏதாவது இருந்தால் பார்ப்போம்.”

இருவரும் அருகில் இருந்த சினிமா ஹாலுக்குப் போனார்கள். பழைய சினிமா ஓடிக் கொண்டிருந்தது. வெளியில் கார்கள், ஸ்கூட்டர்கள் அதிகமாக இல்லை. அதாவது கூட்டம் இல்லை. அப்பாடா என்று நினைத்துக் கொண்டாள் இந்திரா. இருவரும் உள்ளே போனார்கள். சினிமா தொடங்கி ரொம்ப நேரமாகிவிட்டது. ஹீரோ ஹீரோயின் முதல் சந்திப்பில் வழக்கம் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வித்யாபதி இந்திராவின் கையைப் பற்றி ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றான். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். முதலில் இருட்டில் ஹாலில் ஹாலில் இருந்த மக்கள் தென்படவில்லை. கண்களுக்கு அந்த இருட்டு பழக்கப்பட்டு விட்ட பிறகு மங்கலான அந்த வெளிச்சத்தில் மக்கள் புலப்பட தொடங்கினார்கள்.

இந்திரா திடீரென்று குரலை தாழ்த்துக் கொண்டு “வித்யா! எழுந்துகொள். போய் விடுவோம்” என்றாள்.

“ஏன்? என்னவாகிவிட்டது?” பதற்றத்துடன் கேட்டான்.

“அதோ… முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் பெண்மணி எங்கள் பக்கத்து வீட்டு மாமி. நம்மைப் பார்த்துவிட்டால் அக்காவிடம் சொல்லி விடுவாள்.”

வித்யாபதி உடனே எழுந்து கொண்டான். இருவரும் வெளியே வந்து விட்டார்கள். டாக்சி, ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை. இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் போது கறுப்பு பியட் கார் ஒன்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து வெளியே தலையை நீட்டிய இளைஞன் ஒருவன் “மிஸ்டர் சீதாபதி! நடந்து போறீங்களே? கார் என்னவாச்சு?” என்று கேட்டான்.

வித்யாபதி குழப்பத்துடன் பார்த்தான். “காரா? டிரைவர் வரவில்லை.”

“வாங்க. நான் டிராப் செய்கிறேன்.” நட்புடன் பார்த்துக் கொண்டே சொன்னான். ””நோ தாங்க் யூ.'” மரியாதையுடன் மறுத்தான்.

“பரவாயில்லை வாங்க.” பின்கதவைத் திறந்தான்.

“நாங்கள் நடந்து போய்க் கொள்கிறோம்.”

“நோ… நோ… நீங்கள் நடந்து போவதைப் பார்த்தும் லிப்ட் கொடுக்கவில்லை என்றால் எனக்கு பாவம் வந்து சேரும். சீதா காதில் விழுந்துவிட்டால் என் கழுத்தைப் பிடித்து நெறித்துவிடுவாள். நீங்க எங்கே இறங்க வேண்டும் என்று சொன்னால் அங்கே இறக்கி விடுகிறேன். சரிதானே?”

அவன் விடுவதாக இல்லை. வித்யாபதி இந்திராவின் பக்கம் பார்த்தான். போகலாம் என்பது போல் பார்த்தாள் இந்திரா. காரில் ஏறும் முன் இந்திராவை அறிமுகப்படுத்தி வைத்தான். “என்னுடைய கசின், இந்திரா. இந்தூ! இவன் பானுமூர்த்தி. எங்க பிசிநெஸ் பார்ட்நரின் மகன்” என்று அறிமுகப்படுத்தினான். அவன் பண்பு கலந்த முறுவலை உதிர்த்தான். அவன் கண்கள் ஒரு வினாடி இந்திராவை கூர்ந்து கவனித்தன. அந்தப் பார்வை தன்னைத் துளைப்பது போல் இந்திராவுக்குத் தோன்றியது.

அவன் டிரைவ் செய்து கொண்டிருந்தாலும் கண்ணாடி வழியாய் வித்யாபதியை, இந்திராவைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

இந்திரா குடியிருக்கும் தெருமுனையில் அவர்களை இறக்கிவிட்டான். “வீடு எங்கே? வாசலில் டிராப் செய்கிறேன்” என்றான்.

“வேண்டாம் வேண்டாம். இங்கேயே இறங்கிக் கொள்கிறோம்” என்றாள் பதற்றத்துடன்.

அவன் அவர்களை இறக்கிவிட்டுப் பொய்விட்டான்.

“நான் இனி போய்க் கொள்கிறேன்” என்றாள் இந்திரா.

“குட் நைட் இந்தூ” என்றான்.

இந்திரா வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் சொன்னாள். “பார்த்தாயா வித்யா! ஆஸ்பத்திரியிலிருந்து நான் டிஸ்சார்ஜ் ஆகும் அன்று நீ என்ன சொன்னாய்? இந்த உலகம் விசாலமானது, நாம் எங்கே வேண்டுமானாலும் சந்தித்துக் கொள்ளலாம் என்று. இப்போ புரிந்ததா, உலகம் எவ்வளவு சிறியது என்று? நமக்கு தனிமை எங்கே கிடைக்கும் சொல்லு?”

வித்யபாதி இந்திரா சொன்னதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. தொலைவிலிருந்த பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்ஸைப் பார்த்ததும் அவன் “நான் கிளம்புகிறேன் இந்திரா. இந்த பஸ் அந்தப் பக்கம் போகும்” என்றான். “பஸ்ஸில் எதற்கு? ஆட்டோவில் போய்க்கொள்.”

“ஆட்டோ எதற்கு? பஸ்தான் வந்துவிட்டதே. இரண்டு ரூபாயுடன் போய் விடலாம்.” அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே பஸ் வந்து நின்றது. ‘குட்நைட் இந்திரா” அவன் சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டான். பஸ் நிறைய மக்கள் கூட்டம். கூட்டத்தில் கலந்துவிட்ட வித்யாபதி இந்திராவின் கண்களுக்கு தென்படவில்லை. கையை அசைப்பதற்கு உயர்த்திய இந்திரா சந்தேகத்துடன் நின்றுவிட்டாள்.

இந்திரா விட்டுக்கு வந்ததும் கட்டிலில் சரிந்தாள். ரொம்ப களைப்பாக இருந்தது. வித்யாபதியைப் பார்த்த சந்தோஷம் சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

இந்திராவுக்கு அன்று மாலையில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் கண்முன்னால் நிழலாடின. அவனை சந்தித்தவர்கள் எல்லோரும் சீதாவைப் பற்றித்தான் பேசினார்கள். அந்த ராமநாதன் “சீதாபதி” என்று விளித்த விதம் நினைவுக்கு வந்தபோது இந்திராவுக்கு உடலில் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் அருவெறுப்பாக இருந்தது.

இந்த ரீதியில் போனால் அவனும் தானும் சந்தித்துக் கொள்வது சாத்தியம்? தன்னுடைய வாழ்க்கை என்னவாகும்? வித்யாபதிக்கு தன்னிடம் அன்பு கொஞ்சம்கூட குறையவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த அன்பு தனக்குக் கொஞ்சம் கூட சந்தோஷத்தைத் தரவில்லையே? இதற்கு முடிவுதான் என்ன?

வித்யாபதி சீதாவிடமிருந்து விடுதலை பெற்று வந்தால் தவிர இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. நாளை தானே அவனிடம் கேட்டு விடுவாள். நாளைக்கு அவன் வருவானா? பாழாய் போன பஸ் உடனே வந்துவிட்டதால் திடீரென்று கிளம்பிவிட்டான். அடுத்த நாள் பற்றி எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆட்டோவில் போகச் சொன்னால் கேட்டுக் கொள்ளவில்லை. வித்யாபதி தொடக்கத்திலிருந்தே அப்படித்தான். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பான். அவனுக்காக எதுவும் செலவழிக்க மாட்டான். கேட்டால் “என்னால் கஷ்டப்பட முடியும்” என்பான். அடுத்த தடவை பார்க்கும் போது சீதாவை விட்டு விட தயார்தானா என்று அவனிடம் கேட்க முடிவு செய்தாள்.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *