கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,958 
 
 

(2015ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20

அத்தியாயம்-11

“என்ன சொல்கிறான் உன் மகன்?” மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டே கேட்டார்.

“எதைப்பற்றி?”

“வேறு எதைப் பற்றி? மாமியார் வீட்டுக்குப் போய் இருப்பதைப் பற்றி.”

சுபத்ரா பதில் பேசவில்லை. மௌனமாக அவருக்கு ரசம் பரிமாறினாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன். கேட்டதற்கு பதில் சொல்லாமல் இடித்த புளியைப் போல் சும்மாயிருந்தால் என்ன அர்த்தம்?” கோபமாக கேட்டார்.

“என்ன சொல்லப் போகிறான்? இது ஏதாவது புது விஷயமா என்ன? அவன் அந்த வீட்டிற்குப் போக மாட்டேன் என்று அன்றைக்கே சொல்லிவிட்டான்.”

”அவ்வளவுதானா? தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டானாமா?”

“அவனுக்கு விருப்பம் இல்லாத போது எப்படி கட்டாயப்படுத்துவது? அவன் என்ன சின்ன பையனா மிரட்டி வழியில் கொண்டு வருவதற்கு.”

“அப்போ இந்த கேலிக்கூத்தை வாயை மூடிக்கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கணுமா?

“அவன் மனதைப் புரிந்துகொள்ளாமல் இந்தத் திருமணத்தைப் பண்ணி வைத்தது நம் தவறுதான் என்று தோன்றுகிறது.”

“வாயை மூடு. எல்லாம் உன்னால்தான். அவனை நயமாகவோ மிரட்டியோ எதையும் சொல்ல மாட்டாய். இதோ இந்த சாப்பாட்டின் மீது ஆணையாக சொல்கிறேன். அவன் மரியாதையாக மாமியார் வீட்டுக்குப் போவானா மாட்டானா? அவன் போகாதவரையில் நான் இந்த வீட்டிற்கு வரமாட்டேன். ஒரு வாய்கூட சாப்பிட மாட்டேன். தெரிந்ததா? உன் மகனிடம் சொல்லு. நான் கவனிக்கவில்லை என்று நினைத்துவிட்டானா? அவன் அந்தப் பெண்ணுடன் பேசுவதே பாவம் என்பது போல் நடந்து கொள்கிறான். நாம் அநியாயமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டோம். சீதாவுக்கு என்ன குறைச்சல்? லட்சணமாக இருக்கிறாள். கண்களில் ஒற்றிக்கொண்டு யார் வேண்டுமானாலும் பண்ணிக்கொள்வார்கள். என்ன சொன்னாலும் கேட்டிருப்பார்கள். அந்தப் பெண்ணின் தலைவிதி. இவனுக்கு வந்து வாய்த்தாள். கடவுள் தங்கத் தட்டில் விருந்துச் சாப்பாடு தந்தால் சாப்பிடத் தெரியாமல் தள்ளிவிடுகிறான்.”

மூர்த்தி வேண்டுமென்றே உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்தார். அப்படி கத்துவதில் இரண்டு விதமான லாபங்கள் இருந்தன. ஒன்று மகனை விரட்டுவது. இரண்டாவது தங்களுடைய தவறு எதுவும் இல்லை என்று சீதாவுக்கு மறைமுகமாக தெரியப்படுத்துவது. வித்யாபதியை அந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் தாங்கள் எவ்வளவு துடியாக இருக்கிறோம் என்று சீதாவுக்குத் தெரியவேண்டும்.

சுபத்ரா அலுத்துக் கொண்டாள். “ஏன் கத்துறீங்க? மருமகள் இருக்கிறாள். காதில் விழுந்து வைக்கப் பொகிறது.”

“விழட்டுமே? இதில் ரகசியம் என்ன இருக்கு? உள்ளதுதானே பேசுகிறேன். என் வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது. பாவம் அந்தப் பெண்! இவனைக் கட்டிக் கொண்டு என்ன சுகத்தை அனுபவித்துவிட்டாள்? ஐஸ்வரியத்திற்கு இடையே செல்லமாக வளர்ந்த பெண். இந்த வீட்டிற்கு வந்து போதும் போறாததுமான வசதிகளுடன் எதற்காக அவஸ்தைப் படுகிறாள்? அவனுக்காகத்தானே? அந்த ஞானம் கூட அவனுக்கு இல்லையே?”

அடுத்த அறையில் சீதாவும், முன் அறையில் வித்யாபதியும் மூர்த்தியின் கத்தல்களை கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். சீதாவின் விழிகளின் நீர் சுழன்றது. மாமனார் எவ்வளவு நல்லவர் என்று தோன்றியது. முன் அறையில் வித்யாபதி இருந்ததால் நின்றுவிட்டாள். இல்லாவிட்டால் அந்த நிமிடமே போய் மாமனார் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் போல் தோன்றியது. தன்னுடைய வேதனை பெரியவர்களுக்காவது புரிந்தது. அதுவே போதும் என்று நினைத்தாள்.

“மனைவியை அழைத்துக் கொண்டு போய் மாமியார் வீட்டில் இருக்கப் போகிறானா அல்லது என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறானா என்று இப்பொழுதே அவனிடம் நீ போய் கேள்”

“நன்றாக இருக்கு. இப்பொழுதேவா?” என்றாள் சுபத்ரா.

“ஆமாம். இப்பொழுதே.”

“அவன் மதியம் போனவன் இப்பொழுதுதான் வீட்டுக்குத் திரும்பி வந்தான்.”

அதைக் கேட்டதும் அவர் இன்னும் கொதித்துப் போனார். “மதியம் போனவன் இப்பொழுதுதான் திரும்பி வந்தானா? எங்கே போயிருப்பான்? அந்த இந்திராவிடம் தான் போயிருப்பான். அவனுக்குக் கொஞ்சமாவது புத்தியிருக்கா? இப்பவே சொல்லிவிட்டேன். அவன் இங்கேயே இருப்பதாக ஏன் சொல்கிறான் தெரியுமா? இஷ்டம் வந்தது போல் அந்தப் பெண்ணுடன் சுற்றுவதற்காகத்தான். இங்கே இருந்தால் நினைத்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே போகலாம் வரலாம். அங்கே போனால் அந்தப் பாச்சா பலிக்காது.”

“சும்மா சும்மா அந்த இந்திராவை ஏன் இழுக்கிறீங்க?” சுபத்ரா சலித்துக் கொண்டாள். கணவருக்குக் கோபம் வந்தால் நல்லது பொல்லாதது தெரியாது. தொடக்கத்திலிருந்தே அப்படித்தான். வீட்டு விவகாரங்களை பொருட் படுத்தமாட்டார். ஆனால் யாராவது வீட்டில் இருந்தால் மனைவி குழந்தைகள் மீது நாட்டாமை செலுத்துவார். சுபத்ராவுக்கு வித்யாபதி இப்படி நடந்து கொள்வது பிடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக மருமகளுக்கு முன்னால் மகனைத் தாழ்த்திப் பேசினால் அவளுக்கு அவனைக் கண்டால் இளக்காரம் ஏற்பட்டுவிடும் என்பது அவள் பயம்.

ஆனால் மூர்த்திக்கு அதைப் பற்றிய அக்கறையே கிடையாது. அவருக்கு சீதா இந்த வீட்டில் இருப்பதில் விருப்பம் இல்லை. சீதா அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மகன் அவளுடன் அங்கே இருக்கணும். அப்படி இருந்தால்தான் நாலுபேருக்கு முன்னால் அவருக்கு மதிப்பு. பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்தும் மகன் காரில் சுற்றாமல் நடந்து போவதையும், முன்னைப் போலவே இருப்பதையும் பார்த்தால் அவருக்கு எரிச்சலாக இருந்தது. அனுபவிக்கத் தெரியாத தத்திப்பயல் என்று ஆத்திரமடைந்தார். மகன் செல்வந்தர் வீட்டு மருமகனாகி வறுமைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு சப்போர்ட் ஆக இருப்பான் என்று அவர் ஊகித்துக் கொண்டதெல்லாம் வெறும் கனவாகிவிட்டது.

சுவாமிநாதய்யரிடம் சொல்லி அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திராவை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார். ஆனால் இந்திரா பிடிவாதக்காரி. லீவ் போட்டு இங்கேயே இருந்தாளே தவிர வேலையில் சேருவதற்குப் போகவில்லை. இப்பொழுது இருவருக்கும் வேண்டிய அளவுக்கு நேரம் இருக்கிறது. சீ.. சீ1 என்ன குழந்தைகள்! சொன்ன பேச்சை கேட்டு சந்தோஷமாக இருந்து கொண்டு பெற்றோரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளாமல் வேண்டாத பிடிவாதங்கள் என்று நினைத்தார்.

என்னவானாலும் சரி மகனை மாமனார் வீட்டுக்கு அனுப்பி விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார். அதனால்தான் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக மனைவியிடம் எரிந்து விழத் தொடங்கினார். குழந்தைகளை திட்டினார். மனைவியைக் கடிந்துகொண்டார். இறுதியில் சாப்பாடும் போது தன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டார்.

சுபத்ராவுக்கு சங்கடமாக இருந்தது. ஒரு பக்கம் கணவர். இன்னொரு பக்கம் மகன். சொன்னால் அவன் புரிந்துகொள்ள மாட்டான். கணவருடைய வாயை அவளால் கட்டுப்படுத்த முடியாது.

“இன்னும் உட்கார்ந்துண்டு இருக்கிறாயே? போய் கேள் அவனை?”

“என்னவென்று கேட்கட்டும்?” இயலாமயுடன் பார்த்தாள்.

”ஆயிரம் தடவை சொல்லணுமா? மாமியார் வீட்டுக்குப் போவானா இல்லை என்னை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல்கிறானா?”

“கேட்கிறேன். முதலில் சாப்பிடுங்கள்.”

“முதலில் கேட்டுவிட்டு வா.”

“நன்றாகத்தான் இருக்கு உங்க ரகளை.”

“அதோ அந்த பேச்சுத்தான் வேண்டாம் என்கிறேன்.”

சுபத்ரா எழுந்து போனாள்.

கட்டிலில் படுத்திருந்த வித்யாபதி எழுந்துகொண்டு உடைகளை மாற்றிக் கொண்டிருந்தான். ஷர்ட் பித்தான்களை போட்டுக் கொண்டிருந்தவன் தாயைப் பார்த்ததும், அவள் எதுவும் சொல்லும் முன்னாலேயே பதில் சொல்லிவிட்டான். “அம்மா நான் இந்த வீட்டை விட்டுப் பொகிறேன். மற்ற விஷயங்களை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே போய்விட்டான்.

“வித்யா! டேய் வித்யா” தாயின் கூக்குரலை அவன் கேட்டுக் கொள்ளவே இல்லை. திரும்பிப் பார்க்காமல் இருளில் கலந்துவிட்டான். சுபத்ரா கல்லாய்ச் சமைந்துவிட்டாள்.

அறைக்குள்ளேயிருந்து சந்தடி கேட்டது. சீதா மளமளவென்று தன் உடைகளை எடுத்து பெட்டியில் திணித்துக்கொண்டாள். அவன் வீட்டை விட்டுப் போய்விட்டான். அப்படி என்றால் தான் அவனுக்கு தேவையில்லை என்றுதானே அர்த்தம்? எவ்வளவு அவமானம்? சீதாவுக்கு ரோஷத்தை விட துக்கம்தான் அதிகமாக இருந்தது.

பத்து நிமிடங்களில் சாமான்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்ட சீதா அறைக்குள் வந்து கேட்டாள். “மாமா! எனக்காக டாக்சி வரவழைத்து தருவீங்களா?”

“எங்கேம்மா போகணும்?” அவர் கலவரமடைந்தார்.

“அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறேன்.”

“இப்பொழுதா? இந்த இரவு நேரத்திலா?”

“எத்தனை இரவானாலும் பரவாயில்லை. நான் இனி இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். இரு என்று நீங்களும் தயவு செய்து கேட்காதீங்க.”

சீதாவின் முகத்தைக் கண்டு அஞ்சினார் அவர். இந்த முகத்துடன் இந்த வேளையில் சீதா வீட்டிற்குப் போனால் சுவாமிநாதய்யர் தம்மை உயிரோடு விட்டு வைப்பாரா?

“விடிஞ்சதும் போய் கொள்ளலாம் அம்மா.”

“நான் போய் விடுகிறேன். நீங்க டாக்ஸி கொண்டு வராவிட்டால் நடந்தே போகிறேன்.’ சீதா செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

“இரு இரு. நில்லும்மா. நானே கூட்டிண்டு வருகிறேன்.” செருப்பு போட்டுக் கொள்ளவும் மறந்து போனவராய் தெருவில் இறங்கி ஓடினார்.

அரைமணியில் டாக்சி வந்தது. சீதா நாய்களை, கிளியை, முயல்களை மட்டும் எடுத்துக் கொண்டாள். மாமியாரிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. டாக்ஸியில் ஏறி அமர்ந்தாள். கொண்டுவிட்டு வருவதற்காக மூர்த்தியும் டாக்ஸியில் ஏறிக் கொண்டார்.

வெளிச்சோடிக் கிடந்த வீட்டில் சுபத்ரா தனியாய் நின்று விட்டாள்.

அத்தியாயம்-12

வாசற்கதவை யாரோ தட்டியதும் கட்டிலில் படுத்திருந்த இந்திரா திடுக்கிட்டாள். ஒரு மணி நேரமாக கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். உறக்கம்தான் வந்த பாடிலில்லை. அக்காவும், அத்தானும் இல்லை. வெளி ஊருக்குப் போயிருந்தார்கள். அக்காவின் மாமியார் தூக்கமாத்திரையை போட்டுக் கொண்டு குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

இந்திரா மாலையிலிருந்து நெருப்பில் இருப்பது போல் தகித்துக் கொண்டிருந்தாள். மாற்றல் உத்தரவு வந்ததும் லீவ் போட்டாள். ஒரு வாரமாக வீட்டிலேயே இருந்ததால் பைத்தியம் பிடித்தாற்போல் இருந்தது. தெரிந்தவர்கள் வீட்டில் குழந்தையின் பிறந்தநாள் என்று அழைத்ததால் பொழுது போகும் என்று பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

அங்கே கூடியிருந்த பெண்கள் இந்திராவைப் பார்த்ததும் குசுகுசுக்கத் தொடங்கினாளர்கள். ஒருத்தி “எப்போ கல்யாணம்?” என்று கேட்டாள்.

“கடவுள் வழி காட்டிய போது.” சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள் இந்திரா.

அதற்குள் வேறொருத்தி அங்கே வந்து சேர்ந்தாள். “இந்திரா! உனக்கும் வித்யாபதிக்கும் கல்யாணம் நடக்கப் போவதாக உங்க அக்கா சொல்லிக் கொண்டிருந்தாள். பின்னே அவன் சுவாமிநாதய்யரின் மகளைப் பண்ணிக் கொண்டிருக்கிறானே? என்ன காரணம்?”

“பண்ணிக் கொள்வேன்னு அவன் சொன்னானா? இல்லையே. ஆனாலும் இந்த ஆண்கள் நண்பர்களாக ஊர் சுற்றுவார்களே தவிர கல்யாணம் பண்ணிக் கொள்வார்களா என்ன? பெண்களுக்குத்தான் புத்தியிருக்க வேண்டும். என் தம்பியிடம் இந்திராவைப் பற்றி கேட்டபோது அந்தப் பெண்ணா? வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.” அந்தம்மாளுக்குக் கொஞ்சம்கூட தயக்கம் இல்லை. சொல்ல நினைத்ததை முகத்திற்கு நேராகவே சொல்லி விடுவாள். பொழுது போவதற்காக போன இந்திரா மனம் முழுவதும் எரிச்சலை, வேதனையை நிரப்பிக் கொண்டு வந்தாள்.

‘நான் ஒன்றும் திருமணத்திற்காக ஏங்கவில்லையே? அவர்களுக்கு என்னைப் பற்றிய அக்கறை ஏன்?”

இந்திராவுக்கு திடீரென்று வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டாற்போல் இருந்தது வித்யாபதியை மறுத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்தது. அவனுடைய குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் தன் நலனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியில் அவன் கிடைக்காமல் போனதோடு ஊராரின் பழிச்சொற்களும் வந்து சேர்ந்துகொண்டன. இப்போ வருந்தி என்ன பயன்?

இரண்டாவது முறை கதவைத் தட்டிய சத்தம் கேட்டதும் இந்திரா எழுந்துகொண்டு விளக்கைப் போட்டாள். மணி பத்தரை ஆகியிருந்தது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள்?

ஊருக்குப் போயிருந்த அக்காவும் அவள் கணவரும் திரும்பி வந்து விட்டார்களா என்ன?

இந்திரா போய் கதவைத் திறந்தாள்.

எதிரே வாசலில் வித்யாபதி நின்றிருந்தான். இந்திராவால் தன் கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை.

“நீயா!” என்றாள்.

அவன் பதில் சொல்லாமல் உள்ளே வந்தான்.

”இந்த நேரத்தில் வந்திருக்கிறாயே? என்ன விஷயம்?” வியப்புடன் கேட்டாள். வித்யாபதி உள்ளே வந்து கைகளை பின்னால் நீட்டி கதவைச் சாத்தினான்.

“இந்திரா என்னுடன் வருவாயா மாட்டாயா?”

”உன்னுடனா? எங்கே?”

“எங்கேயோ ஓரிடத்திற்கு. நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன். இந்த ஊரைவிட்டு எங்கேயோ தொலைவிற்கு போகப் போகிறேன். என் வீட்டாருடன் உறவை முறித்துக் கொண்டு விட்டேன். நீ என்னுடன் வருவாயா?”

இந்திரா அவனை சரியாக நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஒரடி முன்னால் வைத்தாள். அப்படியே அவன் கழுத்தைச் சுற்றிலும் கைகளை பிணைத்தாள். அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அடுத்த நிமிடம் ஹோவென்று அழுது தீர்த்துவிட்டாள்.

ஒரு நிமிஷம் அவன் திகைத்துப் போனவனாய் நின்றுவிட்டான். இந்திரா ரொம்பவும் சுயநம்பிக்கை உள்ளவள். அடிக்கடி கண்கலங்கும் சுபாவம் இல்லை. இந்திராவை புயலாய் இத்தனை துக்கம் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் ஏதோ விபரீதமாக நடந்திருக்கும்.

அவன் இந்திராவின் தலையை மார்போடு அழுத்திக் கொண்டான். அவன் விரல்கள் இந்திராவின் கேசத்தை பரிவோடு தடவிக் கொடுத்தன. “இந்தூ! என்னவாகிவிட்டது? என்ன இது?’ கவலையுடன் தடுமாறிக் கொண்டே கேட்டான்.

இந்திரா பதில் சொல்லும் நிலையில் இருக்கவில்லை. இறுதியில் வித்யாபதி இந்திராவின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அழைத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, பக்கத்தில் உட்கார வைத்தான். இந்திரா சோபாவில் உட்கார்ந்த மறு நிமிடமே அவன் மடியில் சரிந்துவிட்டாள்.

”இந்தூ! இந்தூ! என்ன இது? என்ன நடந்தது? யாராவது ஏதாவது சொன்னார்களா?” தோள்களைப் பற்றி உலுக்கினான்.

“எனக்கு வாழ்க்கையே நரகமாக இருக்கு. என்னால் தாங்க முடியவில்லை.” அழுகையினூடே தெளிவற்ற குரலில் சொன்னாள்.

அவன் ஒரு வினாடி மௌனமாக இருந்துவிட்டான். “நீயாகவே வரவழைத்துக் கொண்டதுதானே?” கடினமாக கேட்டுவிட வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே இந்திராவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. இந்திரா ரொம்ப நல்லவள். சுயநலம் கருதாமல் அவனுடைய நன்மையைக் கருதி, அவன் குடும்ப சாதக பாதகங்களைப் பற்றி யோசித்தாள். ஒரு விதமாகச் சொல்லணும் என்றால் தன்னுடைய சுகத்தையும் சந்தோஷத்தையும் தியாகம் செய்திருக்கிறாள். இந்திராவைத் தான் எதுவும் சொல்லக் கூடாது. அவன் இந்திராவின் தோளைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி உட்கார வைத்தான். கண்ணீர்க் கோடிட்டிருந்த கன்னத்தைத் துடைத்தான்.

“காரணம் சொல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும்? உன்னை எப்படித் தேற்ற முடியும்? ப்ளீஸ், என்ன நடந்தது என்று சொல்லேன்?”

“எல்லோரும்… எல்லோரும்… நீ என்னை விட்டுவிட்டு பணக்கார வீட்டுப்பெண்ணைப் பண்ணிக்கொண்டாயாம். நான்தான் உன்னை அந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகச் சொன்னால் ஒருத்தருமே நம்பவில்லை. நான் உன்னுடன் ஊர் சுற்றினேனாம். கெட்டுச் சீரழிந்து விட்டேனாம். உன்னுடன் இஷ்டம் போல் சுற்றியதற்கு எனக்கு நல்ல தண்டனை கிடைத்துவிட்டதாம். வித்யா! என்னால் இந்த குத்தல் மொழிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” பேதையைப் போல் இந்திரா மொழிந்ததைப் பார்க்கும் போது ரொம்ப அப்பாவியாய், அபலையாய் காட்சி தந்தாள் வித்யாபதிக்கு. சட்டென்று குனிந்து அவள் கண்கள் மீது முத்தம் பதித்தான்.

“உலகம் ரொம்பப் பொல்லாதது. தன் வழியில் போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட வம்புக்கு இழுத்து வேடிக்கைப் பார்க்கும். அதுகூட தெரியாதா உனக்கு?”

“தெரியும். ஆனால் உண்மையைச் சொன்னால் பரவாயில்லை. ஆனால் இல்லாத பழியை ஏன் என்மீது போடணும்? மாற்றல் உத்தரவு வந்தும் நான் போகாமல் லீவ் போட்டு வீட்டில் இருப்பதால் மேலும் மேலும் பேசுகிறார்கள். நான் உனக்காகத்தான் இந்த ஊரில் இருக்கிறேனாம். எத்தனை வேண்டாத பேச்சு இது?”

அவன் ஒரு நிமிடம் இந்திராவை உற்றுப் பார்த்தான். “இந்தூ! உலகத்தாரின் பழிச்சொல்லை நாம் உண்மையாக்கிவிட்டால்?”

“எப்படி?”

“நீ வேலையில் சேர வேண்டிய ஊருக்கு நாமிருவரும் போய் விடுவோம். அது ஒரு பட்டிக்காடு. திருமணம் ஆகிவிட்டதாக சொல்லிவிடலாம். உண்மையிலேயே நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டு விடுகிறேன்.”

இந்திராவின் கண்கள் பயத்தால் படபடத்தன. “எப்படி முடியும் வித்யா?”

“ஏன் முடியாது?”

“சட்டம் எப்படி சம்மதிக்கும்? நீ கல்யாணம் ஆனவன்.”

”சட்டத்தை எதிர்த்து எத்தனைபேர் வாழவில்லை? சட்டத்தின் எல்லைக்குள் நமக்கு சந்தோஷமான வாழ்க்கை இல்லை. சட்டத்தை தாண்டி வெளியில் போய் வாழ்வோம்.

இந்திரா எழுந்து உட்கார்ந்துகொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். சுயநினைவு வந்தவள் போல் பதற்றத்துடன் வாசற்கதவு பக்கம் பார்த்தாள். அது தாழிடப்பட்டிருந்தது.

“உன் அக்காவின் மாமியார் எங்கே?” அவனும் இந்த உலகத்திற்கு மீண்டவன் போல் கேட்டான்.

“தூங்கிக் கொண்டிருக்கிறாள். தினமும் தூக்க மாத்திரை போட்டுக் கொள்வாள். பார்த்து விட்டு வருகிறேன்.” இந்திரா எழுந்து உள்ளே போய் ஐந்து நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தாள். முகம் அலம்பி பொட்டு வைத்துக் கொண்டு வந்திருப்பது தெளிவாக தெரிந்தது.

“அக்காவின் மாமியார் நல்ல உறக்கத்தில் இருக்கிறாள்” என்றாள். இந்திரா சற்று தொலைவிலேயே நின்றாள். வித்யாபதி அவளை ஏறிட்டு நோக்கினான். அவளிடம் படிந்திருந்த துக்கத்தின் திரை அகன்று விட்டாற்போல் இருந்தது. அந்தப் பார்வையில் அவளிடம் எப்போதும் குடிகொண்டிருக்கு சுயநம்பிக்கை சுடர்விட்டது.

“காபி டீ ஏதாவது குடிக்கிறாயா?” என்று கேட்டாள். சற்றுமுன் தான் இருந்த நிலைக்கு வெட்கியவளாய் தென்பட்டாள்.

“இப்போ எதுவும் வேண்டாம். இப்படி வா.” கைகளை விரித்து அழைத்தான். இந்திரா வரவில்லை. தொலைவிலேயே நின்றிருந்தாள். அவன் எழுந்து வந்து இந்திராவின் கையைப் பிடித்து இழுத்து வந்து சோபாவில் உட்கார வைத்தான்.

”சாரி.” தெளிவற்ற குரலில் சொன்னாள்.

“எதற்கு சாரி?”

“பைத்தியம் போல் அழுதுவிட்டேன். கோழையாய் நடந்துகொண்டேன்.”

அவன் இந்திராவை மார்போடு அழுத்திக் கொண்டான். “உன் துணிச்சலை எல்லாம் உலகத்தின் முன்னால் காட்டு. என்னிடம் வேண்டாம். இப்பொழுதாவது நாமிருவரும் இழந்தது எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று உனக்குப் புரிந்ததா?”

இந்திரா அவன் தோளில் தலையைப் புதைத்துக் கொண்டாள். “இப்போ புரிந்து என்ன பயன்? நானாகவே வரவழைத்துக் கொண்டதுதானே? வாயை மூடிக் கொண்டு அனுபவிக்க வேண்டியதுதான்.”

“வேண்டாம். அப்படிச் சொல்லாதே. யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் என்னுடைய கையாலாதத்தனம் என்று தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீ சொன்னால் நான் எதற்கு தலைவணங்கினேன்? அப்பா அம்மாவின் முன்னால் ஏன் தயங்கினேன்? போகட்டும். இப்பொழுதும் ஒன்றும் மிஞ்சி விடவில்லை. அந்த சீதாவை நான் கல்யாணம் செய்து கொண்டேனே தவிர எனக்கும் அவளுக்கும் இடையே எந்த உறவும் இல்லை. நான் அந்தப் பெண்ணை விட்டுவிடுவதில் எந்தத் தவறும் இல்லை. நான் சீதாவிடம் உன்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”

இந்திரா பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் பேச்சில் இருந்த அன்பும், நெருக்கமும் அவளிடம் சகஜமாக இருக்கும் உலகஞானத்தின் மீது மயக்க மருந்தை தெளிக்கத் தொடங்கின. அவன் மடியில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். அவனுடைய தொடுகையும் நெருக்கமும் ரொம்ப சுகமாக இருந்தது. தனிமை பூண்டோடு அழிந்துவிட்டாற்போல் இருந்தது. இவனைப் போய் வேண்டுமென்றே கை நழுவவிட்டேனே என்ற வேதனை இந்திராவை தகிக்கத் தொடங்கியது.

கால் மேல் காலை போட்டுக் கொண்டு இந்திராவின் தலையை முழங்காலில் சரித்துக் கொண்டு அவள் கன்னத்தை, தலையை வருடிக் கொண்டே சொன்னான். “நாம் எங்கேயாவது தொலைவிற்குப் போய்விடலாம். சின்ன வீடாக வாடகைக்கு எடுத்துக் கொள்வோம். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருப்போம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்காமல் போகாது.”

“உடனே கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. என்னிடம் நகைகள் இருக்கு. வங்கியில் பணம் இருக்கு. அவற்றுடன் இரண்டு வருடங்களாவது நிம்மதியாக வாழமுடியும்” என்றாள் இந்திரா.

அவன் குரல் மிருது கம்பீரமாக இருந்தது. அவன் வாயிலிருந்து உணர்ச்சிப் பூர்வமாக, கனவு காண்பது போல் ஒலித்துக் கொண்டிருந்த சொற்கள் உண்மையிலேயே அப்படியெல்லாம் நடக்கிறதோ என்ற பிரமையை இந்திராவின் மனதில் தோற்றுவித்துக் கொண்டிருந்தன. அவன் தாழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“காலையில் எழுந்ததும் நீ காபி கொண்டு வருவாய். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு நான் காபியைக் குடிப்பேன். நீயும் நானும் சேர்ந்து ஒரே கப்பில் காபி குடிப்போம். நீ சமைக்கும் போது நான் பக்கதில் இருந்து உதவி செய்வேன். இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. சமைப்பது உன்னுடைய பங்கு என்பதால், தட்டில் பாரிமாறி உனக்கு ஊட்டுவது என்னுடைய பங்கு. சாப்பாடு முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து ரேடியோ கேட்போம். மதியம் குட்டித் தூக்கம் போடுவோம் இல்லையா பேசிக் கொண்டிருப்போம். இரவு மறுபடியும் சாப்பாடு. பிறகு இரவு…” வித்யாபதி இந்திராவை மார்ப்போடு அழுத்திக் கொண்டான்.

“இந்த கனவு எவ்வளவு நன்றாக இருக்கு?” மயக்கத்தில் இருப்பவள் போல் சொன்னாள் இந்திரா.

“இது கனவு இல்லை மேடம். நிஜம்.”

“வித்யா! இது எப்படிச் சாத்தியமாகும்?” பேதையாய் நோக்கினாள் இந்திரா.

“சாத்தியம் ஆவது போல் செய்கிறேன் நான். முதலில் நாம் இருவரும் இங்கிருந்து வேறு ஊருக்குப் போய் விடுவோம். அதற்குப் பிறகு அம்மா அப்பாவுக்கு கடிதம் பொடுகிறேன். சீதாவுக்கும் போடுகிறேன். நீயும் நானும் சிநேகிதர்கள் என்ற விஷயம் சீதாவுக்கும் தெரியும். தன்னைப் பிடிக்காத என்னுடன் அவள் மட்டும் எப்படி குடித்தனம் நடத்துவாள்?”

“உலகம் உன்னை கெட்டவன் என்று பழிக்கும்.”

“பழிக்கட்டும்.”

“சீதாவுக்கு துரோகம் செய்ததாக நினைப்பார்கள்.”

“இந்திராவுக்கு நியாயம் செய்ததாக நான் நினைப்பேன்.”

”எல்லோரும் என்னைக் குற்றம் சாட்டுவார்களோ என்னவோ?”

“இப்போ மட்டும் நீ வேண்டாத பழிச்சொற்களைக் கேட்டுக் கொள்ளவில்லையா? இதை விட அது மேல் இல்லையா?”

உண்மைதான் என்பது போல் இந்திரா தலையை அசைத்தாள். “எல்லோரும் நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்னவோ?”

“அப்படி நடந்தால் மட்டும் என்ன? நாமிருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம். அது போதாதா?”

போதும் என்பது போல் பார்த்தாள். “உன் மாமனார் பகை கொண்டு ஏதாவது செய்தால்?” பயந்தபடி இந்திரா மேலும் அவனை நெருங்கினாள்.

“அவரால் என்ன செய்ய முடியும் என்னை? நீ தேவையற்ற பயங்கள் வைத்துக் கொள்ளாதே. நீ பக்கத்தில் இருந்தால் எதை வேண்டுமானாலும் என்னால் எதிர்த்து நிற்க முடியும்.”

“ஆனால் உனக்குத் திருமணம் ஆன பிறகு…”

வித்யாபதி சட்டென்று இந்திராவின் வாயைப் பொத்தினான். “நீ இனி எதுவும் பேசாதே. ஒரு முறை உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துத்தான் வாழ்க்கையில் இவ்வளவு சிக்கல் ஏற்படுத்திக் கொண்டு விட்டேன். இப்பொழுது கேட்பதாக இல்லை. இந்தூ! எனக்குத் திருமணம் ஆன விஷயத்தையே மறந்து விடுகிறேன். மறந்து போகும்படியாக செய்கிறேன்.”

இந்திரா பெருமூச்சு விட்டாள். “என் முட்டாள்தனத்தால் உனக்கு தண்டனை.”

“பரவாயில்லை. என்னால் தாங்க முடியும்.”

இந்திராவுக்கு அந்த நிமிடத்தில் அவனைக் கண்டால் ரொம்ப அபூர்வமாகத் தோன்றியது. வித்யாபதி எவ்வளவு நல்லவன்? தான் எவ்வளவு முட்டாள்? அவனுக்கு அவளிடமிருந்த அன்பை சரியாக உணர்ந்துகொள்ள முடியாமல் போய்விட்டாள். தன்னைப் பற்றி யோசிக்காத அவனுடைய பெற்றோருக்காக தான் கவலைப்பட்டது எவ்வளவு மூடத்தனம்? இதனால் இருவருக்குமே வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் போய் விட்டது. அவன் சீதாவிடம் இருக்கும் பணத்தினால் ஈர்க்கப் படவில்லை. அந்தப் பெண்ணுடன் திருமணம் ஆன பிறகும் தனக்குத்தான் முக்கியத்துவம் தருகிறான். இந்திராவின் மனதில் இருந்த சந்தேகங்கள் விலகி விட்டன. உலகம் என்ன சொல்லும் என்ற பயம் போய் விட்டது. இத்தனை அபூர்வமான ஆண்மகனின் முன்னால் உலகம் ஒரு பொருட்டே இல்லை என்று தோன்றியது.

“ஊம். அப்பொழுது நம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லு?” என்றாள் இந்திரா கனவுலகிலிருந்து யதார்த்தத்திற்கு வருவதற்கு விருப்பம் இல்லாதவள் போல்.

வித்யாபதி சொல்லிக் கொண்டிருந்தான். இந்திரா கேட்டுக் கொண்டிருந்தாள். கடியாரத்தில் முள் நகர்ந்து கொண்டிருந்தது. மூன்று.. நான்கு… ஐந்து மணி நெருங்கிக் கொண்டிருந்தது. இந்திரா வித்யாபதியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள். இருவருக்கும் இரவு முழுவதும் விழித்திருந்த களைப்பு தெரியவில்லை.

அதற்குள் வாசற்கதவைத் தட்டிய சத்தம் கேட்டது.

“பால்க்காரனாய் இருக்கும். இரு.” இந்திரா எழுந்து போனாள்.

வித்யாபதி சோபாவில் பின்னுக்குச் சாய்ந்து படுத்துக் கொண்டான். அவன் தன்மயக்கத்தில் இருந்தான். இருவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தார்கள். இனி வித்யாபதி வீட்டிற்குப் போக மாட்டான். விடிந்ததும் பஸ்ஸையோ ரயிலையோ பிடித்து இந்த ஊரைவிட்டு எங்கேயாவது போய் விடுவது. ஒரு வாரம் கழிந்த பிறகு எதிர்காலத்தைப் பற்றி திட்ட மிடுவது. இந்த முடிவுக்கு வந்த பிறகு அவனுக்கு நிம்மதியாக இருந்தது. செய்த தவறைத் திருத்திக் கொண்டாற் போல் திருப்தி ஏற்பட்டது.

கதவைத் திறந்த இந்திரா ஓரடி பின் வாங்கினாள். வெளியே யாரோ புது ஆள் நின்றிருந்தான்.

“வித்யாபதி இருக்கிறானா?” என்று கேட்டான்.

இந்திரா என்ன பதில் சொல்வது என்று தடுமாறினாள்.

“நான் அவனுடைய நண்பன். நேற்று இரவு அவனுடைய தந்தை காலமாகிவிட்டார். வித்யாபதிக்காக நாங்கள் இரவு முதல் தேடிக் கொண்டிருக்கிறோம்.”

அதற்குள் வித்யாபதி சோபாவிலிருந்து எழுந்து வந்துவிட்டான். வாசலில் நின்ற நபரைப் பார்த்ததும் “என்னடா கிரி?” என்றான்.

”வித்யா! நேற்றிரவு அப்பா போய்விட்டார். சீக்கிரமாக வீட்டுக்கு வா.”

வித்யாபதி சிலையாக நின்றுவிட்டான்.

“இரவு பதினோரு மணிக்கு இருட்டில் உன் தங்கை எங்க வீட்டுக்கு ஓடி வந்தாள். நான் போய் சேருவதற்குள் உயிர் போய் விட்டது.”

வித்யாபதி அவசரமாக செருப்பை மாட்டிக் கொண்டான். “நான் போய் வருகிறேன் இந்திரா” என்றான்.

இந்திரா தலையை அசைத்தாள்.

மறுபேச்சுக்கு வாய்ப்பு இல்லாதவன் போல் போய்விட்டான். நகரவும் மறந்து போனவள் போல் இந்திரா ரொம்ப நேரம் அப்படியே நின்றிருந்தாள்.

பிறகு சோபாவில் வந்து சரிந்தாள். மனம் முழுவதும் மரத்துவிட்டாற்போல் இருந்தது, காதில் இன்னும் வித்யாபதியின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அத்தியாயம்-13

நான்கு வாரங்களுக்குப் பிறகு…

வித்யாபதி மேஜைக்கு அருகில் நின்றிருந்தான். அவனுக்கு எதிரில் சமையலறை வாசலில் உட்கார்ந்திருந்த சுபத்ரா புடவைத் தலைப்பால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

வித்யாபதி மௌனமாக நின்றிருந்தான். கைகால்களை சங்கிலியால் கட்டிப் போட்டு அசைய முடியாமல் செய்துவிட்ட கைதியின் நிலை அவன் முகத்தில் பிரதிபலித்தது. மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளில் போராட்டத்தை தாடையை இறுக்கி சகித்துக் கொண்டிருப்பது போல் தென்பட்டான்.

சுபத்ரா கண்களை துடைத்துக் கொண்டே சொன்னாள். “வித்யா! நீ எங்களை விட்டுவிட்டு போகணும் என்று நினைத்தால் போய்க்கொள். நானோ குழந்தைகளோ உன் சந்தோஷத்திற்கு குறுக்கே வரப் போவதில்லை. ஆனால் நீ போகும் முன்னால் எங்க எல்லோருக்கும் கொஞ்சம் விஷத்தைக் கொடுத்துவிட்டுப் போ. உங்க அப்பாதான் என்னை அநியாயம் செய்துவிட்டுப் போய்விட்டார். இருந்த வரையிலும் அவர் என் பேச்சை கேட்டதே இல்லை. சீட்டாட்டத்தைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தேவையில்லாமல் போய்விட்டது. ஆனாலும் உன்னைப் பார்த்துதான் அவர் செய்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டிருந்தேன். இப்போ உன் வழியை நீ பார்த்துக் கொண்டு போவதாகச் சொல்கிறாய். இந்தக் குழந்தைகளை என்ன செய்வது? என்னால் முடியாதுடா. உன் கையால் விஷத்தைக் கொடுக்க முடியாது என்றால் நானே அந்தக் காரியத்தை செய்கிறேன். நீ வீட்டை விட்டுப் போன அடுத்த நிமிடம் அதுதான் நடக்கப் போகிறது. அதை மட்டும் தெரிந்து கொள்.”

“அம்மா!” அவன் வேதனையுடன் அழைத்தான்.

“நான் என்ன பாவம் பண்ணியிருக்கிறேன் என்று தெரியவில்லை. நீ பெரியவன் ஆனதும் கவலையின்றி இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். இப்போ உன் வாயிலிருந்து இந்தப் பேச்சை கேட்டதும் எனக்கு முதுகெலும்பு உடைந்து விட்டாற்போல் இருக்கு.”

அவன் பெருமூச்சு விட்டான்.

சுபத்ரா முறத்தை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனாள். அடுப்பைப் பற்றவைத்து உலையில் அரிசி களைந்து போட்டபடி அழுது கொண்டே இருந்தாள். திருமணமானது முதல் ஒருநாளும் சந்தோஷமாக இல்லாத தலையெழுத்தை நினைத்து புலம்பினாள்.

அவனுக்கு தாயிடம் எல்லையில்லாத அன்பு, கௌரவம். பெரியவன் ஆனதும் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ளணும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அந்த எண்ணத்திற்கு நேரமாறாக நடந்து வருகிறது.

செருப்பை மாட்டிக் கொண்டு வெளியில் வந்தான். தெரு முனையில் பஸ்ஸ்டாப்பில் பஸ் இருந்தது. அதில் ஏறிக் கொண்டு பூங்காவில் இறங்கிக் கொண்டான். நடந்து வந்து பெஞ்சியில் உட்கார்ந்தான். அவன் மனதில் எண்ணங்கள் கடல் அலைகள் போல் கொந்தளித்துக் கொண்டிருந்தன.

அன்று இரவு அவன் இந்திராவுடன் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு விடியற்காலை கிரி வந்து தந்தை காலமாகி விட்ட செய்தியை சொன்னதும் உடனே அவனுடன் கிளம்பிவிட்டான். மறுபடியும் இந்திராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

வீட்டுக்கு வந்தது முதல் அவனுக்கு மூச்சு விடவும் நேரம் இருக்கவில்லை. தந்தை போனது தெரிந்ததும் உறவினர்கள் வந்து சேர்ந்தார்கள், பதிமூன்றாவது நாள் சுபஸ்வீகாரத்தன்று மாமனாரின் முன்னிலையில் உறவினர்களின் அறிவுரைகள், தாயின் அழுகை எல்லாமாகச் சேர்ந்து அவனை திக்கு முக்காடச் செய்தன. அவன் மனம் சுழற்காற்றில் சிக்கிய சருகைப் போல் இருந்தது. எந்தப் பக்கமாக அடித்துச் செல்லப் போகிறது என்று தெரியவில்லை.

உறவினர்களில் முன்னிலையில் சுவாமிநாதய்யர் யாரும் கேட்காமலேயே சுபத்ராவிடம் வாக்குக் கொடுத்துவிட்டார். “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க. உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்ற கவலை உங்களுக்கு வேண்டியதில்லை. எனக்கு மட்டும் யார் இருக்கிறார்கள்? ஆண்வாரிசு இல்லாத குறையைத் தீர்த்து வைப்பான் என்றுதானே எத்தனை பணக்கார வரன்கள் வந்தாலும் வேண்டாமென்று உங்களிடம் வந்து உங்க மகனைப் பண்ணிக் கொண்டது. இன்று முதல் உங்க மகன் பேக்டரிக்குப் போகட்டும். சம்பளம் வரும். அந்தச் சம்பளம் உங்களுக்குத்தான். இதில் நான் உங்களுக்கு எதுவும் தானமாக கொடுத்து விடவில்லை. உங்களுடைய மகனின் உழைப்பில் நீங்க சாப்பிடுவதாகத்தான் அர்த்தம்.”

வித்யாபதி மாமனாரின் பேச்சை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு கூண்டுக்குள் சிக்கிக் கொள்வது போல் வேதனையாக இருந்தது.

அவன் பணத்தை விரும்பவில்லை. சுதந்திரத்தைத்தான் விரும்பினான். சுவாமிநாதய்யர் வார்த்தைக்கு வார்த்தை பணக்கார வரன்களை மறுத்துவிட்டு உங்க மகனை மாப்பிள்ளையாக்கிக் கொண்டேன் என்று சொல்வதும், ஏழை வீட்டுப் பையனாக இருந்தாலும் என்று குறிப்பிடுவதும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தாயிடம் குறைப்பட்டுக் கொன்டால் “அதில் என்ன தவறு? உண்மை தானே?” என்றாள் அப்பாவியாக.

அவன் இவர்களை எல்லாம் விட்டு ஒதுங்கி இந்திராவுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளத் தயாரான போது கடவுள் அதை விரும்பாதவர் போல் லகான் போட்டு பின்னால் இழுத்ததோடு மட்டும் அல்லாமல் கழுத்திற்கும் சுருக்குப் போட்டு விட்டார்.

நாளை முதல் பேக்டரிக்கு வரச்சொல்லி ஆணையிட்டு விட்டு மாமானார் போய்விட்டார். வித்யாபதி போகவில்லை. தந்தை போன துக்கத்தில் இருக்கிறான் என்று அவர்கள் சமாதானப்படுத்திக் கொண்டார்கள். மேலும் இரண்டு வாரங்கள் கழிந்தன.

தாய் பேக்டரிக்குப் போகச் சொல்லி நினைவுப் படுத்தினாள். அவன் மனதில் இருந்ததைச் சொல்லிவிட்டான். சுவாமிநாதய்யரின் பேக்டரிக்குப் போகப் போவில்லை” என்றான். “ஏன்?” என்றாள் வியப்புடன்.

“வேறு இடத்தில் வேலை பார்க்கப் போகிறேன்.”

“எங்கே?”

”இன்னும் கிடைக்கவில்லை. முயற்சி செய்யப் போகிறேன்.”

“வேறு இடத்தில் எதுக்கு? சொல்லு.”

வித்யாபதி சொல்லிவிட்டான். “அம்மா! நான் சீதாவுக்கு டைவோர்ஸ் கொடுப்பதாக இருக்கிறேன். இந்திராவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”.

அவள் அதிர்ந்து போய்விட்டாள். கணவர் இறந்து போனதைக் காட்டிலும் அதிகமாக அழத் தொடங்கினாள். அந்த அழுகையைக் கண்டு அவன் தத்தளித்துவிட்டான். எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

“சுயநினைவு இருந்துதான் பேசுகிறாயா? உனக்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டதா? எங்களை என்ன செய்யப் போகிறாய்? கொன்று விடப் போகிறாயா?”

“அம்மா!”

சுபத்ரா வித்யாபதியை நன்றாக ஏசினாள். எந்த அளவுக்கு ஏசினாளோ அதற்கு இருமடங்கு அழத் தொடங்கினாள். “சரி, உன் சந்தோஷத்தை நீ பார்த்துக்கொள். நாங்கள் எக்கேடு கெட்டுப் போகிறோம்” என்றாள்.

அவனால் மேற்கொண்டு வாதாட முடியவில்லை. நயமாக எடுத்துச் சொல்லவும் முடியவில்லை அவனால்.

இப்பொழுது என்ன செய்வது? அவனுக்கு எந்த வழியும் தெரியவில்லை. சீதாவை விட்டுவிட்டால் விஷம் அருந்தப் போவதாக தாய் சொல்கிறாள். அந்தப் பக்கம் இந்திராவுக்கு தான் வேண்டாத ஆசைகளை கிளப்பிவிட்டு வந்திருக்கிறான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியாதோ என்னவோ. எவ்வளவு ஆசைகளை தூண்டிவிட்டான்? எங்கேயாவது போய் விடலாம் என்றான். அன்று காலையில் இருவரும் கிளம்பியும் போயிருப்பார்கள். அப்படி போன பிறகு இந்தச் செய்தி வந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

அவன் வலது கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். “கடவுளே! காதலித்தப் பெண்ணை மணக்க முடியாத துரதிர்ஷ்டம் யாருக்குமே வரக்கூடாது.” அவனுக்கு அந்த நிமிடம் இந்திரா தன் மார்பில் சாய்ந்து கொண்டிருப்பது போலவே தோன்றியது. அந்தத் தொடுகைதான் எவ்வளவு அபூர்வமானது? பணம்தான் உலகம் என்பவர்களுக்கு அதன் மதிப்பு தெரியாது. ஆனால் இந்த உலகத்தில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு பணம் திருணத்திற்கு சமம். தேவைக்கு மேல் வேண்டியதில்லை.

காதலித்த நபர் துணையாக நிற்கும் போது ஏற்படும் சுகம் மானஸ சரோவரம் போன்றது. பணத்தால் வரும் சுகம் கானல் நீர் போன்றது. அந்தக் காணல் நீரை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதிலேயே பலரின் வாழ்க்கை முடிந்து போய்விடும்.

அவனுக்கு பதவியின் மீது மோகம் இல்லை. சொத்தால் ஏற்படும் சுகம் தேவையில்லை. ஆடம்பரங்களுக்கு எப்போதும் தொலைவிலேயே இருப்பான்.

அவனுக்கு உண்மையான அன்பைப் பகிர்ந்து அளிக்கும் துணைதான் வேண்டும். வாழ்க்கையை எளிமையாக சந்தோஷமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சுபாவம் அவனுடையது. அவனுக்கு ஏற்ற துணை இந்திராதான். இந்திராவின் சுபாவமும் அவனைப் போல்தான். இருப்பதில் சந்தோஷமாக வாழ வேண்டும். அது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு ரொம்ப சாமர்த்தியம் வேண்டும். அவனுக்குத் தெரியும் இந்திராவுடன் வாழ்க்கை இணைந்தால் ரொம்ப சந்தோஷமாக நிம்மதியாக கழியும் என்று.

அவனுக்கு தைரியம் இருந்தது. துணிச்சலுடன் இந்திராவுக்காக கையை நீட்டப் போனான். அந்தக் கையை நீட்ட முடியாமல் கடவுள் விலங்கை போட்டுவிட்டார்.

சுயநலமாக இருந்துகொண்டு இந்திராவை அடைந்து தாயை, கூடப் பிறந்தவர்களை விட்டு விலகுவதா? இல்லை சயநலம் கருதாமல் தாயை சந்தோஷமாக வைத்துக் கொண்டு இந்திராவுக்கு வேதனை தருவதா? இருதலைக் கொள்ளி எரும்பாக இருந்தது அவன் நிலைமை.

அவன் யோசித்தான். நன்றாக யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தான்.

சட்டைப் பையிலிருந்து சிறிய டைரியை எடுத்து அதில் எழுதினான்.

இந்திரா,

மன்னிக்கும்படி கேட்கும் தகுதியோ துணிச்சலோ எனக்கு இல்லை. இந்த நேரத்தில் தந்தை இறந்தது என்னுடைய துரதிர்ஷ்டம். இந்த ஜென்மத்தில் சந்தோஷமாக இருக்கும் யோகம் எனக்கு இல்லை போலும். அன்று சீதாவைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்ன போது நீ என்னை பெற்றோர் பக்கம் தள்ளிவிட்டாய். இன்று நான் அவர்களை மீறிக் கொண்டு வர வேண்டும் என்று முயன்ற போது கடவுளே என்னை சிறைப்படுத்தி விட்டார். அன்று இரவு உன்னுடன் பேசியது நான்தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது.

இந்தூ! அந்த இரவை ஒரு கனவாக நினைத்து மறந்துவிடு. ஒன்றை மட்டும் நினைவு வைத்துக்கொள். எனக்கு சந்தோஷமோ, சுகமோ கிடைக்கும் என்றால் அது உன்னிடம்தான். என்னுடைய சந்தோஷத்தை, சுகத்தை துறந்துவிட்டேன் என்று என்றாவது ஒருநாள் நீயே புரிந்துகொள்வாய்.

வித்யாபதி

எழுதி முடித்தப் பிறகு அந்தப் பக்கத்தைக் கிழித்து மடித்தான். அன்றிரவு வீட்டிற்கு வரும் முன் கவரை வாங்கி கடிதத்தை வைத்து தபாலில் சேர்த்துவிட்டான்.

வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். அவன் மனம் சூனியமாக, உணர்ச்சியற்று இருந்தது. தங்கை அருகில் வந்து கையைப் பற்றி இழுத்தாள். ‘”அண்ணா! நீ போனது முதல் அம்மா அழுதுகொண்டே இருக்கிறாள். இரவு எங்கள் யாருக்கும் சாப்பாடுகூட போடவில்லை. சாப்பாடு போடும்மா என்று கேட்டால் “எல்லோரும் போய் செத்துத் தொலையுங்கள்” என்று திட்டினாள்.” தொய்ந்து போன முகத்துடன் சொன்னாள்.

அவன் ஒரு நிமிடம் தங்கையின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அந்தக் கண்களில் ஊமை வேதனை மற்றும் பயம் படபடத்துக் கொண்டிருந்தன.

எழுந்து உட்கார்ந்துகொண்டான். தங்கையை அருகில் இழுத்துக் கொண்டான். “நான் உயிருடன் இருக்கும் வரையில் உங்களுக்கு எந்த துன்பமும் வரவிட மாட்டேன்” என்று நினைத்துக் கொண்டான்.

தங்கையை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். சமையலறை கதவைத் திறந்தான். தம்பி, தங்கைகளை அழைத்து தட்டுகளை போடச் சொன்னான். எல்லோருக்கும் தானே உணவை எடுத்துப் பரிமாறினான். இன்னொரு தட்டில் உணவை எடுத்து வைத்துவிட்டு தாயை அழைத்தான். “அம்மா சாப்பிட வாம்மா.”

தாய் மௌனமாக இருந்தாள்.

“இனி ஒருநாளும் உனக்கு வேதனை தரமாட்டேன். நாளைக்குப் போய் சவாமிநாதய்யரின் பேக்டரியில் சேர்ந்து விடுகிறேன்”.

சுபத்ரா நிமிர்ந்து பார்த்தாள். “சாப்பிட வாம்மா. காலையில் கூட நீ சாப்பிடவில்லை” என்றான்.

அவள் கண்களில் குபுக்கென்று கண்ணீர் பொங்கி வந்தது. கண்களை ஒற்றிக்கொண்டு எழுந்துவந்தாள்.

அத்தியாயம்-14

சீதா வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு முயலுக்கு புல்லை ஊட்டிக்கொண்டிருந்தாள். அதற்குள் கூண்டில் இருந்த கிளி “சீதா சீதா புருஷன் வந்துட்டான்” என்று கத்தியது.

“மூடு வாயை.” கோபமாக சொல்லப் போன சீதா வார்த்தையை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாள். வித்யாபதி உண்மையிலேயே வந்துவிட்டான்.

ஒரு நிமிஷம் அவனைப் பார்த்த சீதா வாயில் வார்த்தை வராதவளாக அப்படியே நின்று விட்டாள். வித்யாபதி தயங்கிக் கொண்டே நின்றான்.

“சீதா உன் புருஷன் வந்துட்டான்” மறுபடியும் கத்தியது கிளி.

சீதா கிளியை முறைத்துப் பார்த்தாள். “வாயை மூடு. கழுத்தில் தாலி கட்டிவிட்ட மாத்திரத்தில் யாரும் புருஷனாகி விட முடியாது. வந்திருப்பவர் எங்க அப்பாவுக்கு மாப்பிள்ளை. என்னுடைய கணவன் இல்லை. அவருக்கு எங்க அப்பாவின் பணத்தின் மீதுதான் ஆசை. என்மீது இல்லை.” நாற்காலியை விட்டு எழுந்தவள் பின்னலை பின்னால் தள்ளிவிட்டபடி வேகமாக போய்விட்டாள்.

வித்யாபதியின் முகம் சிவந்துவிட்டது. ஒரு நிமிஷம் விருட்டென்று திரும்பி அந்த வீட்டிலிருந்து தொலைவிற்குப் போய் விடலாமா என்றுகூடத் தோன்றியது.

அதற்குள் சுவாமிநாதய்யர் அங்கே வந்துவிட்டார். வித்யாபதியைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்துவிட்டது. “வாப்பா. வா வா. செய்தி சொல்லிவிட்டிருந்தால் காரை அனுப்பியிருப்பேன் இல்லையா? அம்மா எப்படி இருக்கிறாள்?”

“நன்றாகத்தான் இருக்கிறாள்.”

‘வா உள்ளே. சீதா .. சீதா யார் வந்திருக்கிறார்கள் என்று பார்?”

“பார்த்தேன். உங்க மாப்பிள்ளை வந்திருக்கிறார்.”

அந்த வாரத்தையிலிருந்த பழிப்பை அவர் உணரவில்லை. “டேய் ரங்கா காபி கொண்டுவா.”

“இப்போ எதுவும் வேண்டாம். குடித்துவிட்டுத்தான் வந்தேன். பேக்டரிக்குப் போவோமா?” என்றான். அவன் முகம் சிறையிலிருந்து தப்பி ஓடித் திரும்பவும் சிறைக்கு வந்துச் சேர்ந்த கைதியைப் போல் இருந்தது.

மாப்பிள்ளை வாயிலிருந்து அந்த வார்த்தை வந்ததுமே சுவாமிநாதய்யருக்கு தலைகால் புரியவில்லை. “டிரைவர் எங்கே?” என்று கத்தினார்.

டிரைவர் வந்ததும் சுவாமிநாதய்யர் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு பேக்டரிக்குக் கிளம்பிப் போனார்.

சீதா மாடியிலிருந்து கார் கண்ணிலிருந்து மறைவாகும் வரையிலும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் வந்ததும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது? “சீதா சௌக்கியமாக இருக்கிறாயா?” என்று ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டால் முத்து உதிர்ந்துவிடுமா என்ன? அவன் பார்வை? ஏதோ எதிரியை பார்ப்பது போல் அல்லவா இருந்தது. நான் என்ன செய்தேன்? என்னை எதற்காக திருமணம் செய்து கொள்ளணும்? பண்ணிக் கொண்ட பிறகு மனைவியாய் எனக்கு சில உரிமைகள் இருக்கக் கூடாதா? அந்த நேரத்தில் இந்திராவின் நினைவு வந்தது. அந்த இந்திராவிடம் என்ன இருக்கிறது? வேலைக்குப் போகாவிட்டால் காலம் தள்ள முடியாது. சாப்பிட உணவுகூட இருக்காது. தான் அப்படி இல்லை. எல்லா விதமான ஐஸ்வரியத்தையும் பிறவிலேயே கடவுள் தனக்கு வழங்கியிருக்கிறார். இதுவரையிலும் துன்பம் என்றால் என்னவென்று கூடத் தனக்குத் தெரியாது. இந்தத் திருமணம் ஆனதிலிருந்துதான் தொடங்கிவிட்டது. வித்யாபதியைப் பார்த்ததும் இஷ்டப்பட்டாள். அவனுடன் தன் திருமணம் நிச்சயமானதும் பூரித்துப் போய்விட்டாள்.

ஆனால் அந்தச் சந்தோஷம் நீர்க்குமிழியாய் கரைந்து விட்டது. அவன் மனம் இந்திரா என்ற பெண்ணின் மீது இருப்பதாய் தெரிய வந்ததுமே அவனைக் கொன்று விட வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்தது. அப்படி இருக்கும் போது தன்னை ஏன் மணக்க வேண்டும்? இந்திராவிடம் வித்யாபதிக்குக் காதல் இருப்பதால் சீதாவுக்கு என்ன வேதனை? ஆனால் தன்னை ஏன் மணக்க வேண்டும் என்று தான் அவளுக்குக் கோபமும், எரிச்சலும். ஒரு பெண்ணிடம் உள்ளத்தைப் பறிக் கொடுத்துவிட்டு இன்னொருத்தியுடன் வாழ்வதா? சீதாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத விஷயம் இது.

தந்தை இறந்தபோது வித்யாபதி இந்திராவின் வீட்டில் இருந்ததாக சீதாவுக்குத் தெரியவந்தபோது மனம் முழுவதும் கசப்பு பரவியது. சில சமயம் தான் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், எப்படியாவது அவனை வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று தோன்றும். ஆனால் இது போன்ற செய்திகளைக் கேட்க நேர்ந்தால் மனம் தீயாய் பற்றி எரியும். வித்யாபதியிடம் சீதாவுக்கு இப்பொழுது மதிப்பு போய்விட்டது. அவன் இந்தத் திருமணத்தைப் பண்ணிக் கொண்ட காரணம் அவளுக்கு நன்றாகத் தெரியும். பணத்திற்காக மட்டும்தான். சீதாவால் இதை கொஞ்சம் கூட மன்னிக்க முடியவில்லை. தன் செயல்களால், பேச்சால் அவனைப் பழி வாங்க வேண்டும் போலிருந்தது.

பெண் என்றால் என்னவென்று நினைத்துவிட்டான்? விளையாட்டு பொம்மை என்று நினைத்துவிட்டான் போலும். பணக்கார வீட்டுப் பெண்ணைப் பண்ணிக் கொன்டு அந்த இந்திராவுடன் சுகமாக வாழ்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த சீதா வெறும் பணக்காரி மட்டுமே இல்லை. அவளுக்கும் ஒரு மனம் இருக்கிறது என்று அவனுக்குப் புரியவைக்க வேண்டும். சீதா தலையை சிலிர்த்துக் கொண்டாள். இந்த உலகத்தில் பணம் இல்லாமல் செத்துப் போகிறவர்கள் இருக்கிறார்களே தவிர ஆணின் அன்பு இல்லாமல் உயிரை விட்டவர்கள் யாரும் இல்லை. ஒருக்கால் அப்படி யாராவது உயிரை விட்டாலும் வெறும் முட்டாள்கள் என்று அர்த்தம்.

சீதா என்றால் யார் என்று வித்யாபதிக்குப் புரியவைப்பாள்.

சீதாவுக்கு மாமியாரிடம் நெருக்கம் இருந்தது. அன்று மதியம் மாமியாரிடம் சென்ற சீதா பணிவு கலந்த குரலில் சொன்னாள். “அத்தை! நீங்களும் குழந்தைகளும் இங்கே தனியாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே எங்க அம்மாவின் உடல்நலமும் சரியாக இல்லை. நான் இங்கே வந்துவிட்டால் அம்மாவைப் பார்த்து கொள்ள யாரும் கிடையாது. நீங்களும் குழந்தைகளும் அங்கேயே வந்து விடுங்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கலாம்.”

மருமகளின் நல்ல குணத்தைக் கண்டு சுபத்ராவின் கண்களில் நீர் வந்தது. “அவன் என்ன சொல்லுவானோ? கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள்.

“அவர் என்ன சொல்லப் போகிறார்? இது போன்ற விஷயங்களை கேட்காமலேயே செய்யணும். கேட்டால் தன்மானம் குறுக்கிடுவதால் மறுத்து விடக் கூடும். இந்த வீட்டுக்கு மருமகள் நான். இந்த உரிமை கூடவா எனக்குக் கிடையாது?”

“அய்யோ ஏன் இல்லை?” என்றாள் சுபத்ரா கலவரத்துடன்.

அன்று மாலை வித்யாபதி வீட்டுக்கு வந்த போது அந்த வீட்டிற்கு முன்னால் “வாடகைக்கு விடப்படும்” என்ற பலகை தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.

வீட்டுக்காரர் வந்து சொன்னார். பிற்பகல் சீதா வந்தாளாம். வீட்டைக் காலி பண்ணப் போவதாகச் சொல்லிவிட்டு வாடகை மொத்தத்தையும் கொடுத்துவிட்டாளாம். வித்யாபதியின் தாயை, குழந்தைகளை அழைத்துச் சென்று விட்டாளாம். வேலைக்காரர்கள் வந்து சாமான்களை லாரியில் எடுத்துக் கொண்டு போனார்களாம்.

காலை பத்துமணியிலிருந்து மாலை ஆறுமணிக்குள் இத்தனை பெரிய மாறுதலா? அவனுக்குத் தாயின் மேல்தான் கோபம் வந்தது. தன்னிடம் சொல்லணும் என்ற ஞானம் கூடவா இல்லை?

வேறுவழியில்லாமல் மாமனாரின் வீட்டிற்குக் கிளம்பினான். தாய்க்கும் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு அறையை ஒழித்துத் தந்திருந்தார்கள். குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தாயின் முகம் தெளிவாக இருந்தது.

“என்னம்மா இது? என்னிடம் ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்க வேண்டாமா?” கோபமாகச் சொன்னான்.

“நான் சொல்வதாகத்தான் சொன்னேன். ஆனால் சீதாதான் பரவாயில்லை என்றாள். அவள் ஒன்றும் நமக்கு வேற்று மனுஷி இல்லையே?”

“என்னைக் கொன்றுவிட்டாய் அம்மா. ஏற்கனவே முதுகெலும்பு உடைந்திருக்கும் என்னை நடைபிணமாக்கி விட்டாய்.” நாற்காலியில் சரிந்துகொண்டே சொன்னான்.

சமையற்காரன் வந்து சாப்பிடக் கூப்பிடுவதாகவும் சின்னம்மா காத்திருக்கிறாள் என்றும் சொல்லிவிட்டுப் போனான். தாயின் வற்புறுத்தலின் பெயரில் அவன் எழுந்து சென்றான்.

சமையல்காரன் பரிமாறப் போனபோது சீதா தடுத்துவிட்டாள். “நீ போய் கொள். நான் பரிமாறுகிறேன்.”

சமையற்காரன் போய்விட்டான். சீதா அவனுக்கு பரிமாறத் தொடங்கினாள். அவனுக்குச் சாப்பிட பிடிக்கவில்லை. தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது அவனுக்கு பழக்கமில்லை.

சீதா பரிமாறிக் கொண்டே சொன்னாள். “பேக்டரியை இனி என்னுடைய பொறுப்பில் விடப் போவதாக அப்பா சொல்லிவிட்டார். இனமேல் பேக்டரி பற்றி எல்லா விவரங்களையும் நீங்க என்னிடம் சொல்லணும். அம்மாவும் அப்பாவும் ரொம்ப நாளாக பதிரிநாத், ரிஷிகேஷ் போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். போய் விட்டு வரச் சொல்லிவிட்டேன்.”

வித்யாபதி மௌனமாக கேட்டுக் கொண்டான். பெயருக்குக் கொறித்து விட்டு எழுந்து கொண்டவன் சொன்னான். “நாளை முதல் அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுகிறேன். தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது எனக்கு பழக்கம் இல்லை.”

சீதா கவனமாக கேட்டுக் கொண்டாள். பிறகு கண்டிப்பான குரலில் சொன்னாள். “அது முந்தைய பழக்கம். இப்பொழுது நீங்க இந்த வீட்டுக்கு மருமகன். அந்த மாதிரி பழக்கங்களை எத்தனையோ மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.”

சீதா சொன்ன தோரணைக்கு அவன் திகைத்துப் போனான். அறைக்குள் வந்து படுத்துக் கொண்டான். இதற்கு முன் ஏற்கனவே அவனுக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறைதான். அவனுக்கு மூச்சுத் திணறுவது போல் இருந்தது. அந்த வசதிகளும், ஐஸ்வரியமும் அவனைப் பழிப்பது போல் தோன்றியது.

அவனுக்கு இந்திரா நினைவுக்கு வந்தாள். எழுந்து சோபாவில் வந்து படுத்துக் கொண்டான். தலையணையை எடுத்து மார்பின் மீது வைத்துக் கொண்டான்.

”இந்தூ! இந்தூ!” அவன் மனம் புலம்பிக் கொண்டிருந்தது.

சீதா அந்த அறைக்குள் வருவாளோ என்று அவன் பயந்தான். ஆனால் சீதா வரவே இல்லை.

விடியற்காலையில் அவனுக்கு உறக்கம் வந்துவிட்டது.

அத்தியாயம்-15

சீதா மதிய நேரத்தில் மாமியாரிடம் உட்கார்ந்து வித்யாபதிக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்துகொண்டாள். வித்யாபதிக்கு பெரிய பெரிய பூக்கள் போட்ட புடவைகள், கோடுகள் போட்ட புடவைகள் பிடிக்காது. சீதா அன்று மாலையே கடைக்குப் போய் கோடு போட்டவை, பெரிய பூக்கள் இருப்பவை தேர்ந்தெடுத்து அரைடஜன் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தாள். அவனுக்கு பாகற்காய் பிடிக்காது. சாப்பாட்டு மெனுவில் அடிக்கடி அந்த ஐடம்தான் இருந்தது. அவனுக்கு வீடு நிசப்தமாக இருந்தால்தான் பிடிக்கும். மாலையில் அவன் வரும் போது டேப்ரிகார்டரில் உச்சஸ்தாயில் ஏதாவது பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஒருவிதமாகச் சொல்லப் போனால் வலுக்கட்டயமாக தாய் தந்தையரை தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தாள் சீதா. பேக்டரி விஷயத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் வித்யாபதி சீதாவிடம் சொல்லி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

சில நாட்களிலேயே வித்யாபதி பெயருக்குத்தான் யஜமானி என்றும், அதிகாரம் முழுவதும் சின்னம்மாவுடையதுதான் என்று எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது.

முதல் தேதி வந்ததும் வித்யாபதி ஊழியர்கள் எல்லோருக்கும் சம்பளத்தைப் பட்டுவாடா செய்துவிட்டுத் தானும் ஐயாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டான்.

வீட்டுக்கு வந்ததும் கவரில் வைத்து சீதாவிடம் கொடுத்தான்.

”என்ன இது?” என்றாள்.

“பணம்.”

“எதற்கு?”

“அம்மா மற்றும் குழந்தைகள் இந்த வீட்டில் இருக்கிறார்கள். நானும் இங்கே இருக்கிறேன். எங்களுடைய சாப்பாட்டுக்காக செலவாகிறது இல்லையா? அதற்காக.”

சீதா நெற்றிப் புருவம் சுளித்து எளனமாகச் சொன்னாள். “அது எங்களுடைய பணம்தான். அதையே திருப்பிக் கொடுத்தால் எங்களுடைய கடன் எப்படித் தீரும்?”

என்றுமில்லாதவாறு வித்யாபதியின் முகத்தில் கோபம் வெளிப்பட்டது. “உங்கள் பணமா? உங்கள் பணம் எப்படி ஆகும்? நான் பேக்டரி ஊழியர்களில் ஒருத்தன். அவர்களுக்குச் சமமாக வேலை செய்கிறேன். சம்பளம் வாங்கிக் கொள்கிறேன். அது என்னுடைய பணம்.”

“ஏன் இப்படி இறைந்து பேசுறீங்க? நீங்க என்னிடம் பணம் கொடுப்பது வேலைக்காரர்கள் எல்லோருக்கும் தெரியணும் என்றா?”

“நான் ஒன்றும் சத்தமாக பேசவில்லை. நீதான் அனாவசியமாக என்னை தூண்டிவிடுகிறாய்.” சீதா உடுத்தியிருந்த கோடு போட்ட புடவையைப் பார்த்தால் அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

“நானா?” வியப்புடன் கேட்டாள் அவள்.

“ஆமாம். நீயேதான். போனவாரம் கோவிந்தன் தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதற்கு நான் லீவ் கொடுத்தால், உன்னிடம் சொல்லாமல் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தைக் கட் செய்திருக்கிறாய். எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்ளும் போது நான் எதற்கு அங்கே?”

“உலகத்தாரின் பார்வையில் உங்களுக்கு வேலைவெட்டி எதுவும் இல்லை என்று நினைக்காமல் இருப்பதற்காக, உங்க அம்மா மருமகளின் வீட்டில் சும்மா உட்கார்ந்து சாப்பிடுகிறோம் என்று வருத்தப்பட்டுக் கொள்ளாமல் இருப்பதற்காக.”

“ஒஹோ” ஆவேசத்தில் அவன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். சீதாவை கைநீட்டி அடிக்க வேண்டும் என்ற அளவுக்குக் கோபம் வந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டான். “சரி, இப்போ புரிந்துவிட்டது” என்று வேகமாகத் திரும்பப் போனான்.

“நில்லுங்கள்.” சீதா அழைத்தாள்.

அவன் நின்றான்.

“இந்த ஐயாயிரம் உங்கள் எல்லோரின் செலவுகளுக்காக. பின்னே என் செலவுக்கு?”

அவன் வியப்புடன் திரும்பிப் பார்த்தான். “உன் செலவிற்கா?”

“ஆமாம். நீங்க என்னைக் கல்யாணம் செய்திருக்கீங்க. உங்க அம்மா மற்றும் கூடப் பிறந்தவர்களைக் காப்பாற்றும் போது என்னையும் போஷிக்க வேண்டாமா? நீங்க தெம்பாக உழைத்து சம்பாதிக்கும் நிலையில் இருக்கும் போது நான் மட்டும் எதற்காக அப்பாவின் சொத்தை சாப்பிடணும்?”

அவன் தாடை எலும்பு இறுகியது. “எவ்வளவு வேண்டும் உனக்கு?”

சீதா கையில் இருந்த பணத்தைப் பார்த்தாள். “இந்த ஐயாயிரம் என் செலவுகளுக்குச் சரியாக இருக்கும். உங்க அம்மாவுக்காக, உடன் பிறந்தவர்களுக்காக இன்னும் கொஞ்சம் சம்பாதியுங்கள்.”

அவன் கோபத்தை விழுங்கிக்கொண்டு அவளை நோக்கினான்.

“இதோ பாருங்கள். உங்கள் மனைவியாக நான் எந்த சுகத்தையும் பெறா விட்டாலும் சமுதாயத்தில் உங்கள் மனைவியாகத்தான் அழைக்கப் படுகிறேன். இல்லற சுகத்தை கொடுத்து வாங்கும் விஷயத்தில் நான் எந்த புகாரும் செய்யவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கு ஒரு விலை இருக்கத்தான் செய்யும். உங்களுடைய மனைவி என்று அழைக்கப் படுவதால் சில விஷயங்களில் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் எங்க அம்மா அப்பாவின் மான மரியாதைக்காக உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்வது என்று சமாதானத்திற்கு வந்திருக்கிறேன். என் கணவர் என்ற முறையில் நீங்களும் சில மரியாதைகளைக் காப்பாற்றியாகணும். அந்த எல்லைக்குள் நீங்கள் இருக்கும் வரையில் உங்கள் ஜோலிக்கு நான் வர மாட்டேன்.”

“நீ சொல்ல வந்ததுதான் என்ன? தெளிவாகச் சொல்லு.” கடுமையாகக் கேட்டான்.

சீதாவும் தீவிரமாக பார்த்துக் கொண்டே சொன்னாள். “நேற்று ரத்னா என்ற பெண் பேக்டரிக்கு எதற்காக வந்தாள்? உங்களுக்கு சிநேகிதிகள் இருந்தால் வெளியில் சந்தித்துக் கொள்ளுங்கள். எனக்கு சம்பந்தப்பட்ட எல்லைக்குள் மட்டும் வரக்கூடாது. ஆபீஸில் நீங்க என்ன செய்தாலும் எனக்குத் தெரிந்துவிடும். அதை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

வித்யாபதியின் முகம் சிவந்துவிட்டது. ஒரு நிமிடம் பதில் சொல்ல முடியாதவன் போல் பார்த்தான்.

சீதா அங்கிருந்து போய்விட்டாள்.

அவன் மெதுவாக தாயின் அறைக்குள் வந்தான். குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாய் மிஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள்.

நேற்று ரத்னா ஆபீசுக்கு வந்தது உண்மைதான். இந்திராவுக்கு ஜுரம் அதிகமாக இருக்கிறதாம். படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே இல்லையாம். அதைக் கேட்டதிலிருந்த இந்திராவைப் போய் பார்க்க வேண்டும் என்று உயிர் துடித்தது. போனால் நன்றாக இருக்குமா?

இந்திராவுக்கு உடம்பு சரியாக இல்லை என்றதுமே அவன் குன்றிப் போய் விட்டான். இயற்கையிலேயே இந்திரா ஆரோக்கியமானவள். என்னவாகியிருக்கும்?

அன்ன ஆகாரமில்லையாம். இளைத்து துரும்பாகிவிட்டாளாம். யாராவது பேச வந்தால் அழுது கொண்டிருக்கிறாளாம். வேலைக்கு லீவ் போட்டிருப்பதால் சம்பளம் வருவது நின்றுவிட்டது. வீட்டில் கவனித்துக் கொள்பவர்கள் யாரும் இல்லை. ஏற்கனவே நோயாளி மாமியாருடன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் போது இது வேறு என்ற அக்கா சலித்துக் கொள்கிறாளாம். வித்யாபதி இந்திராவை ஆஸ்பத்திரியில் சேர்க்கச் சொன்னான்.

“சேர்க்கலாம்தான். ஆனால் யார் பார்த்துக் கொள்வது?” என்றாள் ரத்னா.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ரத்னாவையே கவனித்துக் கொள்ளும்படி திரும்பத் திரும்ப சொல்லியனுப்பினான்.

இந்திராவின் உடல் நிலையைப் பற்றி அவனுக்கு ரொம்பவும் கவலையாக இருந்தது. இந்திராவிடம் போனால் சீதா செய்யப் போகும் ரகளை அவனுக்குத் தெரியாதது இல்லை.

வித்யாபதி தன்னிடம் சரியாக பழகுவதில்லை என்று சீதாவுக்கு ரொம்ப ரோஷமாக இருந்தது. எல்லையில்லாத ஆத்திரமும், பொறாமையும் ஏற்பட்டன. “அந்தப் பெண்ணிடம் என்னத்தான் இருக்கிறது? பணமா? அழகா?” தன்னுடைய நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு தாழ்த்த வேண்டும் என்று நினைப்பாள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அவள் மனமே அவளுக்கு எதிராக வாதாடும். “எதுவும் இல்லாமல் போவானேன்? வித்யாபதி இந்திராவைச் சேர்ந்தவன்தானே?” என்று குத்திக் காட்டும். அத்துடன் சீதாவுக்கு தான் நிறுத்துக் கொண்டிருந்த துலாபாரமானது அப்படியே இந்திராவின் பக்கம் சாய்ந்துவிட்டது போல் தோன்றும்.

வித்யாபதி இந்திராவை ஆஸ்பத்திரில் சேர்த்தான். ஆஸ்பத்திரியிலிருந்து சீதாவுக்கு போன் செய்தான். “இந்திராவுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நான் இங்கே இருக்கிறேன். வீடு திரும்புவதற்கு தாமதமாகலாம்.”

அவன் துணிச்சலைக் கண்டு சீதா வியந்து போனாள். அவன் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விட்டாற்போல் போனை வைத்துவிட்டான். சீதாவுக்கு ஆவேசம் பொங்கி வந்தது. எப்போதும் இல்லாத விதமாக கால்மாட்டில் வந்து வாலை ஆட்டிய நாய்க்கட்டியை ஒரு உதைவிட்டாள். அது கிறீச்சிட்டபடி வாலை சுருட்டிக் கொண்டு ஓடியது.

“சீதா… சீதா பசிக்கிறது” என்ற கிளியைப் பார்த்துக் கோபமாக முறைத்துவிட்டு “எங்கேயாவது போய் செத்துத் தொலை” என்று கூண்டின் கதவைத் திறந்துவிட்டாள்.

ஆனால் கூண்டிற்குள்ளேயே பழக்கப்பட்டுவிட்ட கிளி உள்ளேயே ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டதே தவிர பறந்து வெளியே செல்லவில்லை.

சமையல்காரன் வந்து “இரவுக்கு என்ன சமைக்கட்டும்” என்று கேட்டான்.

“போ அந்தப் பக்கம். என்னிடம் எதுவும் கேட்காதே” என்று கத்தினாள்.

கையோடு டிரைவரை அழைத்து உடனே வித்யாபதி சொன்ன ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினாள். அந்த இடத்திலேயே வித்யாபதியிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கேட்டு விட வேண்டும் என்ற அளவுக்கு ஆவேசத்துடன் புறப்பட்டாள்.

சீதா ரொம்ப ஆவேசமாக, வெடிக்கப் போகும் எரிமலையைப் போல் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தாள். ஆனால் அங்கே தென்பட்ட காட்சியைப் பார்த்ததும் வாயடைத்துப் போய் நின்றுவிட்டாள். இந்திரா ரொம்பவும் இளைத்து விட்டிருந்தாள். சொன்னால் தவிர அடையாளம் புரிந்துகொள்வது கஷ்டம். அப்படி இருந்த இந்திராவை ஒரு தாய் கைக்குழந்தையை அணைத்துக் கொள்வது போல் வித்யாபதி பிடித்துக் கொண்டு மருந்தை குடிக்க வைத்துக் கொண்டிருந்தான். ஜன்னியில் இருப்பவள் போல் இந்திரா ஏதோ புலம்பிக் கொண்டிருந்தாள். “இந்தூ! இந்தூ!” அவன் அழைத்துக் கொண்டிருந்தான்.

சீதா வித்யாபதியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் வார்த்தைகளில்தான் எத்தனை கனிவு? கண்களிலும் முகத்திலும் எவ்வளவு பதற்றம்? அந்த நேரத்தில் அவனைப் பார்த்த யாருமே சொல்லி விடுவார்கள், அவன் கையில் துவண்டு கொண்டிருந்த எலும்புக்கூடு போன்ற அந்தப் பெண் அவனுக்கு உயிருக்குச் சமம் என்று. தான் வந்த காரியத்தையே மறந்து விட்டாற்போல் சீதா நின்று கொண்டிருந்தாள். வித்யாபதியைப் பார்க்கும் போது சண்டை போடுவதற்கும் வாயில் வார்த்தை வரவில்லை.

நிசப்தமாக கனவில் நடப்பள் போல் வெளியே வந்துவிட்டாள். காரில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். எத்தனை நேரமாகியும் சீதாவின் கண்களுக்கு முன்னால் அந்தக் காட்சி அகல மறுத்தது. சலனமற்ற புகைப்படம் போல் அப்படியே நிலைத்துவிட்டது. அவனிடம்தான் எத்தனை அன்பு செலுத்தும் இதயம் இருக்கிறது? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததுபோல் தான் வித்யாபதியை அக்னிசாட்சியாக மணந்து கொண்டும் அவனுடைய அன்பைப் பெறமுடியாதவாளாக இருக்கிறாள். திருமணத்தால் உடல்கள் ஒன்று சேரலாமோ என்னவோ. உள்ளங்கள் சேராது என்பதற்கு தன்னுடைய வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டு. இந்திராவிடம் பணம், அழகு, ஹோதா எதுவும் இல்லாவிட்டால்தான் என்ன? அவளைக் காதலிக்கும் வித்யாபதி இருக்கிறான். அததான் அவளுடைய மிகப் பெரிய சொத்து. இந்திராவிற்கு முன்னால் தான் எவ்வளவு ஏழை? வித்யாபதி இந்திராவுக்கு தான் செய்யும் உதவி ஒன்றையுமே மறைக்கவில்லை. ஆபீசில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டான்.

“எதுக்கு இது?” சீதா கேட்டாள்.

“இந்திராவின் வைத்தியச் செலவுக்கு” என்றான் அவன்.

சீதா நிமிர்ந்து பார்த்தாள். அவன் பயமோ, தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் சொன்னான். “இது போன்ற விஷயங்களை நானே உன்னிடம் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். யாரோ வந்து உன்னிடம் ஏதாவது சொல்லி நீ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.” அன்றிலிருந்து அவன் வீட்டிற்குத் தாமதமாகவே திரும்பிக் கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரியில் வித்யாபதியைப் பார்த்து விட்டு வந்ததிலிருந்து சீதாவின் மனதில் இரு நேரமாறான எண்ணங்கள் தலைத் தூக்கின. இதுநாள் வரையில் வித்யாபதியிடம் கோபம் மட்டும்தான் இருந்தது. இப்பொழுது அவளையும் அறியாமல் ஒருவிதமான பிரியம் அவனிடம் ஏற்படத் தொடங்கியிருந்தது. எத்தனை கனிவுடன் அந்தப் பெண்ணை உபசரித்துக் கொண்டிருந்தான்? திரும்பத் திரும்ப அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் காதல் செலுத்தும் இதயம் இருக்கிறது. அது தனக்கு வேண்டும். வித்யாபதி இந்திராவை உயிருக்கும் மேலாக எண்ணுகிறான் என்று பொறாமைப்பட்டாலும் அவனிடம் ஏதோ ஒரு அபிமானம் ஏற்பட்டது. தான் மணந்து கொண்டிருக்கும் இந்த நபர் எல்லோரையும் போல் இல்லை.

இவனிடம் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. பணம் அவனுக்கு ஒரு பொருட்டு இல்லை. அனாவசியமான வெளிவேஷங்கள் இல்லை. வெளித் தோற்றத்தில் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறானோ அவன் உள்ளம் அவ்வளவு உயர்வானது. யோசிக்க யோசிக்க சீதாவுக்கு தானே இந்திராவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

– தொடரும்…

– பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனராணி அவர்களின் படைப்பு “Sithapathi” தமிழில் “சீதா(வின்)பதி” என்ற தலைப்பில்.

– சீதா(வின்)பதி (நாவல்), தெலுங்கு: யத்தனபூடி சுலோசனா ராணி, தமிழில்: கௌரி கிருபானந்தன், முதற்பதிப்பு: 2015, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *