கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 96,670 
 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.

நிலைமை ரொம்பவும் ரசாபாசமாகிவிட்டது. கீழேயிருந்து கிளம்பிய திடீர்ச் சந்தடியில் – அப்பாவின் உரத்தக் குரலைக் கேட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்து எழுந்திருக்கப் பயந்து கொண்டு, இந்த சமயத்தில் அப்பாவின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று – எழுந்து பார்க்காமலே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, கீழே கும்பல் கூடி நிற்கிற அவர்கள் முகத்தில் விழிக்க விரும்பாத தர்ம சங்கடத்தில் கால்மணி நேரமாய் நான் படுத்துக் கொண்டேயிருக்கிறேன். இதோ, என் தலைமாட்டிலிருக்கிற ஜன்னல் வழியாகப் பார்த்தால் எல்லாம் தெரியும்.
அபவாதத்துக்கு ஆளாகி நிற்கிற மங்களம் – சீதாராமய்யரின் மனைவி – பரிதாபகரமான அழுகைக் குரலில் தெய்வத்திடம் முறையிடுகிற மாதிரி எல்லோரையும் சபித்து அலறுகிற குரல் கேட்கிறது:
“நீங்களெல்லாம் நன்னா இருப்பேளா?… இப்படி அபாண்டமா சொல்றேளே… அவர் வரட்டும்… கை நிறைய நெருப்பை அள்ளிண்டு நான் சத்தியம் பண்றேன்…”
அவள் அலறியபோது வார்த்தைகள் தௌ¤வாகக் கேட்காமல் ஆங்காரமும் கோபமும் கிறீச்சிட்டு அழுகையில் குழம்புகிறது.
ஏதோ கைகலப்பு மாதிரி, யாரையோ யாரோ பிடித்து இழுக்கிற மாதிரி, கொண்டுபோய்ச் சுவரோரமாகத் தள்ளுகிற மாதிரியெல்லாம் சத்தங்கள் கேட்கின்றன.
“ராஸ்கல்! எங்கேடா ஓடப் பாக்கறே? சீதாராமய்யர் வரட்டும். அவர் கையிலே செருப்பைக் குடுத்து உன்னை அடிக்கச் சொல்லலேன்னா என் பேரை மாத்தி வச்சுக்கோ. அவர் வீட்டில் தண்டச்சோறு திங்கறதுமில்லாமல்… துரோகிப் பயலே! நானானா வெட்டிப் போட்டுடுவேன் உன்னை, இப்போவே” – அப்பா, சாமி வந்த மாதிரி குதிக்கிறார். அப்பாவுக்குத்தான் சாமி வருமே அடிக்கடி. காலையிலிருந்து இது மூணாவது தடவை. இப்போ அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டாள்.
“ஐயோ! உங்களுக்கு ஏன்னா தலையெழுத்து? அந்தப் பிராமணர் மொகத்தைப் பார்த்து நாம்ப இடம் கொடுத்தோம். கண்ட செனிகளையும் இழுத்துண்டு வந்து ஆத்திலே விட்டுட்டு அவரானா கார்த்தாலே போயிட்டு ராத்திரி வரார். இங்கே நடக்கற கண்றாவியெல்லாம் நாம்பன்னா பார்க்க வேண்டி இருக்கு… அவர்கிட்டே சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோன்னு சொன்னா… உங்களை யார் இப்படி வந்து நிக்கச் சொன்னா? கர்மம்! வாங்கோ உள்ளே.”
“நீ போடி உள்ளே” – இந்த உறுமல் போறும். அம்மா இத்தனை நேரம் உள்ளே போயிருப்பாள்.
“ஸார், நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கோ; சீதாராமய்யர் வரட்டும். அவா எப்படிப் போனா நமக்கென்ன?…” எதிர் போர்ஷன் நாராயணன் அப்பாவைச் சமாதானம் பண்றார்போல இருக்கு.
“நமக்கென்னவா? நாலு சம்சாரிகள் குடி இருக்கிற இடத்தில் இந்த அக்கிரமம் அடுக்குமாங்காணும்? பசு மாதிரி அந்த மனுஷனுக்கு இவா பண்ற துரோகத்துக்கு நாமும் துணை போற மாதிரின்னா ஆயிடும்?” வீடே இடிந்து போகிற மாதிரி அப்பா கத்துகிறார். வீட்டுக்காரர் இல்லையா! எல்லாக் குடித்தனக்காரர்களும் வாசலில் கும்பல் கூடி நிற்கிறார்கள் போல் இருக்கிறது. நல்ல வேளை! சின்னப் பசங்கள் யாரும் இல்லை. எல்லாம் பள்ளிக்கூடம் போயிருக்கும். இந்த அப்பாவுக்குக் கொஞ்சம்கூடப் புத்தி கிடையாது. சீ! மனுஷன் சுத்த அல்பம். காலையிலேயே எனக்குத் தெரியும், இப்படி என்னமோ நடக்கப் போறதுன்னு. கொஞ்ச நாளாகவே பொம்மனாட்டிகள் எல்லாம் ஒத்துமையாக் கூடிண்டு – இதிலே மங்களத்தை மட்டும் சேர்த்துக்காமல் – ரகசியம் பேசினா. அப்புறம் காலையிலே அம்மா போயிப் போயி அப்பாவோட ரகசியம் பேசினா. அப்பா மூக்கை வெடச்சிண்டு, செருமிச் செருமி உறுமிண்டு, முற்றத்தில் போய் நின்னுண்டு சீதாராமய்யர் வீட்டை மொறைச்சுப் பார்த்தார். அப்பவே எனக்குத் தெரியும், என்னமோ ரகளை நடக்கப் போறதுன்னு. நான் ஒரு மடையன். பத்து மணிக்கிச் சாப்பாடானதும் வழக்கம்போல் எங்கேயாவது வெளியில் போய்த் தொலைந்திருந்தால் இந்தக் கர்மத்தையெல்லாம் காது கொடுத்துக் கேட்க நேர்ந்திருக்காது. பேப்பரிலே ‘வான்டட் காலம்’ பார்த்துண்டே தூங்கித் தொலைத்தேன்.
காலையிலே நான் சாப்பிடும்போதே தட்டிலே சாதத்தைப் போட்டுட்டு அம்மா அப்பாகிட்டே ஒரு தடவை ஓடி என்னவோ கையையும் காலையும் ஆட்டிண்டு ரகசியக் குரலிலே பேசிண்டிருந்தாள். அப்போவே, அவா ரகசியம் அசிங்கமா இருந்தது; அல்பமா இருந்தது.
நான் சாதத்தைத் தட்டில் பிசைந்துகொண்டே மோருக்காகக் காத்திருந்தேன். யார் எப்படிப் போனால் இவாளுக்கென்னவாம்? எதுக்காக யாரைப் பத்தியாவது அபாண்டமா ஏதாவது சொல்லணும்? இதிலே இவாளுக்கு ஒரு சந்தோஷம் இருக்குன்னு தெரிஞ்சப்போ இவாளுக்குப் பிள்ளையாய் பிறந்ததுக்காகச் சுவத்திலே முட்டிக்கலாம் போலிருந்தது.
“அம்மா…”ன்னு பல்லைக் கடிச்சிண்டு கத்தினேன். “எனக்கு மோரை ஊத்தித் தொலைச்சுட்டு அப்புறமாப் போயி ஊர் வம்பு அளக்கலாம்.”
அவ்வளவுதான்; அப்பாவுக்குச் சாமி வந்துடுத்து; “துரைக்கு ஆபிசுக்கு நேரமாயிடுத்தோ?”ன்னு ஆரம்பிச்சவர் நான் சாப்பிட்டு எழுந்திருக்கறதுக்குள்ளே நூறு ‘தண்டச் சோறு’ போட்டுட்டார். நான் தலையைக் குனிஞ்சிண்டு, இன்னும் நன்னா தட்டிலே கவிழ்ந்துண்டு – கண்ணிலேருந்து தண்ணி முட்டிண்டு வந்து சாதத்திலே விழறது – எல்லாத்தையும் சேர்த்துக் கரைச்சுக் குடிச்சுட்டு மாடிக்கு வந்து விழுந்தது தான்.
‘தண்டச் சோறு, தண்டச் சோறு’ன்னு வார்த்தை கேட்டுண்டே வயத்தை நிரப்பிக்கிறது எனக்கு வழக்கமாப் போச்சு. எங்கேயாவது ஓடிடலாமான்னு தோண்றது. எங்கே ஓடறது? எவ்வளவு அப்ளிகேஷன்தான் போடறது? எத்தனைப் பேரைத்தான் பார்த்துப் பல்லைக் காட்டறது? உடம்பாவது வாட்ட சாட்டமா இருக்கா? மிலிட்டிரிக்குப் போகலாம்னு போனா ‘வெய்ட்’ இல்லேன்னு அனுப்பிச்சுட்டான். எஸ்.எஸ்.எல்.சி படிச்சவனுக்கு என்ன உத்தியோகம் கிடைக்கும் இந்தக் காலத்திலே. பி.ஏ., எம்.ஏ., எல்லாம் திண்டாடறான். என்ன வேலையானாலும் நான் செய்யத் தயார்தான். நம்ம சீதாராமய்யர் கிட்டே கூடத்தான், ‘உங்க கான்டீன்லே வந்து சர்வர் வேலை செய்யறேன்’னு சொல்லி வச்சிருந்தேன். ஆனால் அவா கான்டீன்லே போன வாரம் ‘ரிட்ரெஞ்ச்மெண்ட்’ ஆயித்தானே அந்த மணி வந்து இவாத்திலே உட்கார்ந்துண்டு இப்போ இவ்வளவு ரகளையும் ரசாபாசமும் ஆகி இருக்கு.
“சீதாராமய்யர் ஆத்திலே மணி தண்டச்சோறு தின்னால் இந்த அப்பாவுக்கு என்னவாம்? என்னை இவர் ‘தண்டச்சோறு’ன்னு சொல்றப்போதெல்லாம் அந்த மணியையும் சேர்த்துக்கறார்னு எனக்குத் தெரியும். இவர் மட்டும் என்னவாம்! உடம்பு வளைஞ்சு எங்கேயாவது ஒரு மாசம் வேலை செய்திருக்காரா? தாத்தா கட்டிப்போட்ட வீடு. அஞ்சறைப் பெட்டி மாதிரித் தடுத்து நானூத்தி எண்பது ரூபாய் வாடகை வரது. சீட்டாடிண்டே இவர் காலத்தைத் தள்றார். இவரே சம்பாதிச்சு இந்த வீட்டைக் கட்டி இருந்தார்னா, ஒருவேளை கூட இந்த வீட்டிலே நான் சாப்பிட மாட்டேன். இதெல்லாம் கேக்கறதுக்கு ரொம்ப நாழியாகுமா? சில சமயங்களில் கேட்டே விடலாமானு கூடத் தோண்றது. கேட்டுடறது ஒண்ணும் கஷ்டமில்லே. கேட்டுட்டு அப்புறம் என்ன பண்றது? அப்புறமும் இங்கேயே உட்கார்ந்து தண்டச் சோறு தானே திங்கணும்? நான் தண்டச் சோறு திங்கறது உண்மைதானே? இதுக்கு நீங்க திங்கறதும் தண்டச் சோறுதான்னு சொல்றது பதில் ஆயிடுமா? இந்த வீட்டைத் தாத்தா கட்டி இருந்தால் என்ன, முப்பாட்டன் கட்டி இருந்தால் என்ன? இப்போது இந்தக் குடும்பத்துக்கு அதிகாரி அப்பாதானே? அவர் எவ்வளவு முரடனாக இருந்தாலும், முன்கோபியாக இருந்தாலும், அல்பமாக இருந்தாலும், அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவரை நேரில் முகத்துக்கு முகம் பார்த்துட்டா ‘ஆகட்டும்’ ‘சரி’ ‘உண்டு’ ‘இல்லே’ன்னு ஒவ்வொரு வார்த்தைத்தான் பேச முடியறது. அவர் சத்தம் போட்டுட்டால் அதுகூட வரமாட்டேனென்கிறது. இப்போ கொஞ்ச நாளாத்தான் அப்பா என்னை அடிக்கிறதில்லை. ஆனால் அடிச்சுடுவாரோ என்கிற பயம் இப்போதும் இருக்கு. அப்பா இருக்கிற வரைக்கும் அந்தப் பயம் இருக்கும் போல இருக்கு …”
அதோ, அப்பா கூப்பிடறார்.
“இதோ வந்துட்டேன்… இங்கேதான் இருக்கேன்…” வேஷ்டியை இழுத்துச் செருகிண்டு படபடன்னு மாடிப்படியிலே இறங்கி ஓடறேன்.
நான் நினைத்தது போலவே விஷயம் ரொம்ப முற்றித்தான் போய்விட்டது. முற்றத்திலே எல்லாரும் கூட்டமா நிக்கறா. மங்களம் என்னைப் பார்த்துட்டு முறையிடற மாதிரி உதடு பிதுங்க அழறாள். மணி பயந்துபோய் முழங்காலைக் கட்டிண்டு குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்தான். யாரோ பிடிச்சு உலுக்கின மாதிரி அவன் தலை மயிர் கலைந்திருக்கு. சட்டை கூட காலர் கிட்டே கொஞ்சம் கிழிந்திருக்கு. தன் உடம்பு பலத்தாலே அவனை ஒரு பக்கம் அடக்கி உட்கார வைத்துவிட்ட திமிரில் அப்பா மடித்துக் கட்டிய வேஷ்டியோடு காலை அகட்டிக்கொண்டு இடுப்பிலே ஒரு கையை வைத்து நெப்போலியன் மாதிரி நிற்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு பீரங்கிப் படை வரிசை இல்லை. அவ்வளவுதான். அப்பாவின் அட்டகாசத்தில் எல்லாரும் கிலியடித்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிகிறது. யார் என்ன பேசினாலும் இப்போது அவர் எடுத்தெறிந்து பேசிவிடுவார் என்கிற பயத்தால் நியாய அநியாயம் தெரிந்தவர்கள் கூட – பயம் வந்துவிட்டால் நியாய அநியாயம் எங்கே தெரிவது? – என்னை மாதிரியே அப்பாவைச் சார்ந்தவர்கள் மாதிரி அடங்கி இருக்கிறார்கள்.
மங்களம் அழுவது ரொம்பப் பாவமாக இருக்கிறது. மணியை அடித்தோ இழுத்தோ, அவன் மீது கை நீட்டி இருக்கிற அப்பாவின் செய்கை, இவர் எவ்வளவு ரவுடித்தனமானவர் என்று கண்ணெதிரே நிரூபணமாகுகிறபோது அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது.
இவருடைய கோபத்துக்கும் இந்தக் காரியங்களுக்கும் உண்மையிலேயே நியாயமிருந்தாலும், இவரே தன் வாயால் பசு என்றும், நல்லவர் என்றும், யோக்கியர் என்றும் சொல்லுகிற அந்த சீதாராமய்யருக்கு இவரது செய்கையால் ஏற்பட்டுவிட்ட அவமானம் புரியாத இவரது அறியாமை எனக்கு இன்னும் வருத்தமாக இருக்கிறது. இந்த அப்பாவின் குணம் எனக்குத் தெரியும். இவர் வெட்டிவிட்டுக் கட்டிக்கொண்டு அழுவார்.
மாடியிலிருந்து இறங்கி வருவதற்குள் ஆத்திரம் தாங்காத அப்பா என்னை மேலும் இரண்டு தரம் கூப்பிட்டு விட்டார். முதல் குரல் ‘டே அம்பி’ இரண்டாவது என் பெயரைச் சொல்லி; மூன்றாவது பல்லைக் கடித்துக் கொண்டு ‘ ஏ, தடியா?’
நான் எதிரே வந்து நிற்கிறேன். உள்ளுக்குள் என்னமோ நடுங்கிற்று.
“அந்தக் கேன்டீனுக்குப் போய்க் கையோட சீதாராமய்யரை இழுத்துண்டு வா… போடா”
அவ்வளவுதான்; ‘இந்த அளவுக்குத் தப்பித்தேன்’ என்று நான் வெளியே ஓடுகிறேன். தெருவுக்கு வந்த பிறகு மெதுவாக நடக்க ஆரம்பித்து நிதானமாக யோசிக்க ஆரம்பிக்கிறேன்.
எவ்வளவு பயங்கரமான, சிக்கலான, ‘ஸென்ஸிடிவா’ன, இன்னொருவர் பெண்டாட்டி சம்பந்தமான விஷயத்தில் முன்யோசனை இல்லாமல் முரட்டுத்தனமாக இந்த அப்பா தலையிட்டு விட்டாரே! இது எங்கே போய் நிற்கும், என்ன ஆகும்? என்று எனக்குப் பயமாக இருக்கிறது.
சீதாராமய்யர் ரொம்ப சாது; நல்லவர். நான் சின்னக் குழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவரைத் தெரியும். அவருக்குக் கோபம் வந்து நான் ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை. எப்போதும் சிரிச்சிண்டே இருப்பார். இல்லேன்னா யாரையாவது சிரிக்க வச்சுட்டு வாயை மூடிண்டு பேசாமல் இருப்பார். அவர் ‘ஜோக்’ அடிச்சு யாரும் சிரிக்கலேன்னா அவரே சத்தம் போட்டுச் சிரிச்சுடுவார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே வரைக்கும், இப்போ நான் இருக்கேனே இந்த மாடி ரூமிலேதான் அவர் ஒண்டிக்கட்டையா இருந்தார். ‘வெயிட் லிப்ட்’ பண்றமாதிரி, கர்லாக்கட்டை சுத்தற மாதிரியெல்லாம் போட்டோ பிடிச்சு ரூம் நிறைய மாட்டி வச்சிருப்பார். நான் சின்னப் பையனா இருக்கிறபோது அந்த விவேகானந்தா உடற்பயிற்சிக் கழகத்துக்கு என்னையும் கூட அழைச்சிண்டு போவார். ஊற வைத்த பச்சைக் கடலையை எனக்கும் ஒரு பிடி அள்ளித் தருவார். அவருக்குக் கல்யாணம் ஆன பிறகு அதையெல்லாம் விட்டுட்டார்.
நாற்பது வயது வரைக்கும் பிரம்மச்சரியம் ரொம்ப உசத்தி என்று கடைப்பிடித்துக் கொண்டு வந்தவர் திடீரென்று ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டு மங்களத்தோடு வந்து நின்றார். அந்தக் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைக் கதை மாதிரி எல்லாரும் பேசிப் பேசி எல்லாருக்கும் அது தெரியும். அவரே சில சமயம் முற்றத்திலே வந்து நின்று கொண்டு குழாயடியிலே தண்ணி பிடிக்கிறவாகிட்டே சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார். மங்களம் வீட்டுக்கு உள்ளே இருந்தே சிரிச்சுக்குவாள்.
கான்டீனுக்கு இன்னும் ஒரு பர்லாங்கு இருக்கு. அது ஒரு ட்யூடோரியல் காலேஜ்லே இருக்கிற கான்டீன். அந்த பிரின்ஸிபால் இவரோட கூடப் படிச்சாராம். அதனாலே இவருக்கு இங்கே ரொம்ப சலுகை. ஆனாலும் சலுகை தருகிறார்கள் என்பதற்காகப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பார் இவர்.
இப்போது அவர்கிட்டே போய் நான் என்னன்னு சொல்லி அழைச்சிண்டு வரது? என் வாயாலே நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை. நான் சின்னப் பையன் தானே… ‘மாமா, அப்பா உங்களைக் கையோட அழைச்சிண்டு வரச் சொன்னார். ஏதோ அவசரமாம்’னு சொல்லப் போறேன்.
சீதாராமய்யரை நான் நேரிலே பார்க்கும்போது ‘மாமா’ன்னுதான் கூப்பிடுவேன். ஆனால் மனசிலே நினைச்சுக்கறது ‘சீதாராமய்யர்’ தான்.
சீதாராமய்யர் இரண்டு வருஷத்துக்கு முன்னே பாலக்காட்டுக்குப் போனார். அவர் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம்னு பத்திரிகை வந்தது. அந்த அக்காவுக்கு இவர் மாசாமாசம் ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் பண்ணுவார். கலியாணத்தன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுக்காராளோட ஏதோ தகராறாம். தாலி கட்டப் போற நேரத்திலே, ‘கட்டப்படாது’ன்னு தடுத்து அந்த மாப்பிள்ளையோட அப்பா அவனை இழுத்துக் கொண்டு போயிட்டாராம். அந்த மாப்பிள்ளை என்னை மாதிரி சோப்ளாங்கியா இருப்பான் போலிருக்கு… என்ன பண்றது? இவரோட அக்கா வந்து ‘என் மானத்தைக் காப்பாத்துடா தம்பி’ன்னு இவர் கிட்டே அழுதாளாம். உடனே அதுவரைக்கும் எல்லாரையும் உபசாரம் பண்ணிண்டிருந்த பெண் வீட்டுக்காரரான சீதாராமய்யர் ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’னு கத்திண்டே ஓடிப்போய் மணையிலே உட்கார்ந்து மங்களத்தின் கழுத்திலே தாலியைக் கட்டிட்டாராம். இதை அவர் சொல்லும்போது எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அவர் வீட்டிலே இருக்கிறபோது இந்த மாதிரி எதையாவது சொல்லி மங்களத்தையும் மற்றப் பேர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். அவர் கிட்டே ஒளிவு மறைவே கிடையாது. அன்னிக்கு ஒருநாள் எல்லார் எதிரிலேயும் மங்களத்தைக் கேட்டார்:
“சுயம்வரத்திலே யாரையோ நினைச்சிண்டு யார் கழுத்திலேயோ மாலையைப் போட்ட மாதிரி தாலி கட்டற முதல் நிமிஷம் வரைக்கும் யாரையோ புருஷன்னு நினைச்சுண்டு இருந்துட்டு, நீ எனக்குப் பெண்டாட்டி ஆய்ட்டே.” அப்போ மங்களம் குழாயடியில் தண்ணீர் பிடிச்சிண்டிருந்தாள். இவர் விளையாட்டாக அப்படிச் சொன்னது அவளுக்குச் ‘சுருக்’னு தைத்து விட்டது போலிருந்தது. ஆனாலும் அவள் சிரிச்சுண்டே சொன்னாள்:
“நான் யாரையும் நினைச்சுண்டு இல்லே. ‘எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் குடு’ன்னு பகவானைத்தான் நினைச்சுண்டு இருந்தேன். எனக்கு எது நல்லதோ அதை பகவான் நடத்தி வச்சுட்டார்னு நான் சந்தோஷமா இருக்கேன்.”
இதோ, இந்த ட்யூடோரியல் காலேஜ் வந்தாச்சு. கான்டீன் பின்னாலே இருக்கு. கான்டீன் உள்ளே நுழைகிறபோது அவர் அந்தச் சுவர் மூலையிலே மாட்டி இருக்கிற கண்ணாடி முன்னாலே நின்னு தலை வாரிக்கறார். ஆணியிலே தொங்குகிற அரைக்கை சட்டையை எடுத்துச் சட்டைப் பையைக் காலி பண்ணிட்டு, இரண்டு தடவை உதறுகிறார். மணிபர்ஸ், வெத்தலை சீவல் பொட்டலம், தலை வாரிக் கொண்டாரே அந்தச் சீப்பு எல்லாத்தையும் பாக்கெட்டிலே வச்சுண்டு மறுபடியும் கண்ணாடியிலே பார்த்துக்கிறபோது பின்னாடி நிற்கிற என்னைப் பார்த்து விட்டார். திரும்பி என்னைப் பார்த்து சிரிக்கிறார்; சிரிச்சிண்டே கேட்கிறார்.
“வா, காபி சாப்பிடறயா?”
“வேண்டாம். உங்களை அப்பா அவசரமா கையோட அழைச்சிண்டு வரச் சொன்னார்.”
“உங்கப்பாவுக்கு எப்போதான் அவசரம் இல்லே? நீ ஆத்திலே காபி சாப்பிட்டியோ?”
“இல்லே. தூங்கிண்டு இருந்தேன். என்னை எழுப்பி உஙளை அழைச்சிண்டு வரச் சொன்னா, அப்பா.”
“சரி, சரி, உக்காரு” – என்னை உட்கார வைத்துவிட்டு உள்ளே போய் ஒரு தட்டிலே ஒரு கரண்டி கேஸரியும் காராபூந்தியும் கொண்டு வந்து வைத்துவிட்டு, “குண்டுமணி, ஒரு காபி கொண்டு வா” என்று குறுக்கே போகிற யாரிடமோ சொல்கிறார். கேஸரி நன்றாக் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கிறபோதே வயிற்றுக்குள் என்னமோ ‘திக்திக்’ என்று ஒரு பயம். குண்டுமணி காபி கொண்டு வந்து வைக்கிறான். இவர் கல்லா அருகே போய் ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்து தனது பக்கத்தைப் புரட்டி ஏதோ கணக்கு எழுதுகிறார். இப்போது நான் சாப்பிடுகிற கணக்கோ? திரும்பி வந்து நான் உட்கார்ந்திருக்கிற பெஞ்சியில் பக்கத்திலே உட்கார்ந்து வெற்றிலை போடுகிறார். நான் அவசரம் அவசரமாக காபியை விழுங்குகிறேன்.
அங்கே வீட்டிலே இருக்கிற பதட்ட நிலையும், அப்பாவின் சாமியாட்டமும், மங்களத்தின் பரிதாபகரமான அலறலும், மணியின் அவமானமும், மற்றவர்களின் லஜ்ஜை கெட்ட மௌனமும், அப்பாவுக்காகப் பரிந்து கொண்டு பேசுகிற அம்மாவின் புலம்பலும் ஒரு பக்கம் மனசில் வந்து கவிகிறது. இன்னொரு பக்கம் இதெல்லாம் தெரியாத சீதாராமய்யரின் நிதானமும், என்னிடம் அவர் காட்டுகிற அன்பும், இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகிற களேபரமும் மனத்தில் படர்கிறபோது இவர் காட்டுகிற நிதானத்தில் நானும் பங்கு கொண்டு, இவர் அன்போடு தருகிற இவற்றையெல்லாம் சாப்பிடுவது ஒரு குற்றமோ, ஒரு துரோகமோ என்று நினைக்கும்போது எனக்கு நெஞ்சில் அடைக்கிறது.
நான அவசரமாக ஓடிக் கை கழுவிக் கொண்டு வந்து “வாங்கோ மாமா… போகலாம்”னு பறக்கறேன்.
“இரேண்டா… ஒண்ணும் அவசரமிருக்காது. சீட்டாட்டத்திற்கு ஒரு கை குறையுமாயிருக்கும். நானும் ஆத்துக்குத்தான் புறப்பட்டுண்டு இருக்கேன். அது போகட்டும்… நீ என்னமோ மிலிட்டிரியிலே சேரப் போனாயாமே? ஏண்டா அசடே! உன்னை மாதிரி ஆளையெல்லாம் மிலிட்டிரியிலே எடுத்தால் தேசம் உருப்பட்டாற் போலத்தான். ஒரு துப்பாக்கியை உன்னாலே தூக்க முடியுமா? எக்ஸர்ஸைஸ் பண்ணுடா, பண்ணுடான்னு அடிச்சிண்டேனே, கேட்டாயோ…” என்று சொல்லிக் கொண்டே தன் முண்டாவைத் திருகிக் கொள்கிறார். சீதாராமய்யர் இப்போதெல்லாம் ‘எக்ஸர்ஸைஸ்’ செய்வதில்லையென்றாலும் அந்த உடம்பு வாகு அப்படியே இருக்கிறது.
“புறப்படுங்கோ மாமா. அப்புறம் அப்பா என்னைத் திட்டுவார்…” என்று நான் கெஞ்சுகிறேன். செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டவர் அந்த காலேஜ் காம்பவுண்டைத் தாண்டுவதற்குள் ஒரு நாலைந்து பேரிடம் நின்று ஏதேதோ பேசி, எல்லோரும் இவரைத் திரும்பிப் பார்க்கிற மாதிரி அவுட்டுச் சிரிப்புச் சிரித்து வெளியே வருவதற்குள், இந்த நல்ல மனிதருக்கு வீட்டிலே காத்துக் கொண்டிருக்கிற அதிர்ச்சியை எண்ணி எண்ணி எனக்கு அடிக்கடி வயிற்றிலே என்னவோ செய்கிறது. அங்கே படிக்கிற பையன்களுக்கெல்லாம் இவர் மேல் ரொம்பப் பிரியம் போலிருக்கிறது. காம்பவுண்டுக்கு வெளியிலே வந்த பிறகு “மாமா! ஆத்துக்குக் கிளம்பியாச்சா?” என்று ஒரு குரல் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் மாடி வராந்தாவில் நாலு பையன்கள் நின்று கொண்டு நோட்டுப் புத்தகத்தோடு கை ஆட்டுகிறார்கள். இவரும் திரும்பிப் பார்த்து “ஆறு மணிக்கு வந்துடுவேன்” என்று சொல்லிக் கை ஆட்டுகிறார்.
வருகிற வழியில் அந்த மாணவர்களைப் பற்றி ஒரேயடியாகப் புகழ்கிறார்: “எல்லாம் பெயிலான பசங்கள்… இந்தக் குழந்தைகளெல்லாம் ஏன் பெயிலாயிடறது தெரியுமா? அவாளெல்லாம் உன்னை மாதிரி மண்டு இல்லை; மகா புத்திசாலிகள்; அதனாலேதான் பெயிலாயிடறதுகள். நீ ஒரு கிளாஸ்லே கூட பெயிலாகாமத்தான் படிச்சே, என்ன புண்ணியம் சொல்லு? படிச்சுப் பாஸாகிற ஒரு காரியத்தைத் தவிர மத்த எல்லாக் காரியத்திலேயும் மகா கெட்டிக்காரன்கள் இந்தப் பசங்கள். ஆமா, நிஜத்துக்குச் சொல்றேண்டா, மறந்துட்டேனே… அந்த பிரின்ஸிபால் கிட்டே உன்னைப் பத்திச் சொல்லியிருக்கேன். ‘நல்ல பையன்… கான்டீனீலே சர்வர் பணிக்காவது வரேன்ங்கிறான். நம்ம ஆபிஸ்ல ஏதாவது வேகன்ஸி இருந்தால் மறந்துடப்படாது’ன்னு சொல்லி வச்சிருக்கேன். பார்க்கலாம் என்று என்னென்னவோ பேசிக் கொண்டே வருகிறார். எனக்கு எதுவுமே மனசில் தங்கவில்லை.
அதோ வீடு தெரிகிறது.
“எதுக்காக்கும் உங்க அப்பா இவ்வளவு அவசரமா என்னை அழைச்சிண்டு வரச் சொன்னாராம்? என்ன விஷயம்?” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு கேட்கிறார். நான் அழுதே விடுவேன் போல் இருக்கிறது.
“என்னை ஒண்ணும் கேட்காதேங்கோ. நான் தூங்கிண்டு இருந்தேன். எனக்கு ஒண்ணுமே தெரியாது.” நான் இப்படிச் சொன்னது எதனால் என்று அவருக்கு விளங்கவில்லை. சிரித்துக் கொள்கிறார். எல்லாத்துக்கும் எப்போதும் இந்தச் சிரிப்புத்தான்.
“அம்மா சொன்னதும், அப்பா கண்டுபிடித்ததும் ஒருவேளை நிஜமாகவே இருக்கலாமோ என்று இப்போதுதான் நானும் முதல் தடவையாக நினைக்கிறேன். இதுவரை இந்த விஷயத்தில் சம்பந்தப்படாதவனாய் இதற்கு வெளியே நின்று பார்த்த அனுபவம் நீங்கி நானும் இதற்குள் சிக்கிக் கொண்ட மாதிரி எனக்கும் மனசில் ஓர் ஆவேசம் வந்தது. மங்களம் இவருக்கு துரோகம் செய்வாளா? இந்த மணி ஒரு காலிப்பயலா? அப்படியானால் அவனை அப்பா அடிச்சது நொம்ப சரிதானே? அப்பா சொன்ன மாதிரி இந்த மாமா கையிலே செருப்பைக் கொடுத்து அவனை அடிக்க வச்சா அதுவும் நியாயம் தானே?… சரி மங்களத்தை என்ன பண்றது? இந்த மாமாவுக்கும் அவளுக்கும் இருபது வயசு வித்தியாசம்னா… அதுக்காக ஒரு பெண் தப்புப் பண்ணுவாளோ?… என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு துரோகத்தை இந்த மாமாவாலே தாங்கிக்க முடியுமோ… சாது மிரண்டால் காடு கொள்ளாதும்பாளே… அது மாதிரி ஏதாவது நடக்கப் போறதோ…” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு குனிந்த தலையுடன் நான் வேகமாக நடக்கிறேன். என் வேகத்தால் மாமாவின் நடைவேகமும் அதிகரிக்கிறது.
“மணியும் மங்களமும் மத்தியானமெல்லாம் தாயம் விளையாடுவார்கள். மணி நன்றாகப் பாடுவான். மாமாகூட அவனைப் பாடச் சொல்லி கேட்பார். மங்களத்திற்கு ஒத்தாசையாக எல்லா வேலைகளும் செய்வான். அவனுக்கும் பாலக்காடுதான் சொந்த ஊராம். மங்களத்திற்கு அவனை அங்கேயே தெரியுமாம். ஒருவேளை அங்கேயே அவர்களுக்குள்…? இந்த நல்ல மனுஷர் இந்தத் துரோகத்தை எப்படித் தாங்கிக் கொள்வார்? இவருக்கு இப்படி நடந்திருக்க வேண்டாமே…”
வீடு வந்தாச்சு.
இவரைக் கண்டவுடனேயே இவர் பார்வையிலே படறதுக்கு முன்னே ஒளிச்சிக்கணும்னு பயந்து ஓடுகிற மாதிரி, இந்நேரம் வரைக்கும் முற்றத்திலே கூடி நின்று வேடிக்கை பார்த்திண்டிருந்தவா எல்லாரும் அவாவா வளைக்குள்ளே சரசரன்னு நுழையறா. அப்பாதான் தைரியமா அங்கேயே நின்னுண்டு திரும்பிப் பார்க்கிறார். அப்பாவோட அந்தத் தைரியம் எனக்கு ஒரு நிமிஷம் பெருமையாக்கூட இருக்கு.
“வாரும்…வாரும்”னு என்னமோ சொல்ல வரார் அவர். அதுக்குள்ளே மங்களம் அலறி அழுதுகொண்டு ஓடிவந்து சீதாராமய்யர் காலில் விழறாள். அவள் அழுது கொண்டே என்னென்னமோ சொல்வது ஒன்றுமே புரியவில்லை. மணி வெட வெட என்று நடுங்கிக்கொண்டு எழுந்து நின்றான். அப்பாதான் பெரிய குரலில்,
“நாலு குடித்தனம் இருக்கிற இடத்திலே…” என்று சொல்வதற்குள் சீதாராமய்யார், “சித்த வாயை மூடிண்டி இருங்கோ” என்று கடுமையாகச் சொன்னவுடன் அப்பாவுக்கு வாயடைத்துப் போகிறது. ஆனால் கோபத்தால் பல்லைக் கடிக்கிறார். சீதாராமய்யர் அதைக் கவனிக்காமல் மங்களத்தை ஒரு குழந்தையைத் தூக்குவது மாதிரி தூக்கி நிறுத்தி, “என்னத்துக்கு இப்படி அழறாய்? அழாமல் சொல்லு. என்ன நடந்தது?” என்கிறார். மங்களத்துக்கோ அழ முடிகிற மாதிரி எதையும் சொல்ல முடியவில்லை. அதையும் கேட்க விடாமல் இந்த அப்பா கத்த ஆரம்பித்து விட்டார்.
“எனக்கு என்னங்காணும் போச்சு? உம்ம நல்ல மனசுக்கு இவா பண்ற துரோகம் தாங்க முடியாமல் நான் ஓடி வந்தேன். நான் பொய் சொல்றேனான்னு இந்த ஆத்திலே இருக்கிறவாளை யெல்லாம் கேளும். எங்கே யாரையும் காணோம்? இப்படி ஒரு பொய் சொல்லி எனக்கென்ன ஆகணும்? உம்மை எனக்கு இருபது வருஷமாத் தெரியும்… உமக்குப் பண்ற துரோகம் எனக்குப் பண்ற மாதிரி இருக்கு… வயிறு எரியறது…”
இந்தச் சமயத்தில் அம்மாவும் சேர்ந்து கொள்கிறாள்: “உங்களுக்கு என்ன தலையிலே எழுத்துன்னு அடிச்சிண்டேனே, கேட்டேளா…?” என்று அலறுகிறாள் அம்மா. இரண்டு பேருக்கும் தாங்கள் பொய் சொல்லி விட்டோமா என்ற பயம் வந்து விட்டது. சீதாராமய்யர் கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல்,
“ராஜாமணி அய்யர்வாள் – நீங்க என் மேல வெச்சிருக்கிற மரியாதை எனக்குத் தெரியாதா? மாமியை அழைச்சிண்டு உள்ளே போங்கோ…” என்று சொல்லி, அப்பாவுக்கு அது காதில் ஏறாமல் போகவே, “மாமி, நீங்களாவது அவரை அழைச்சிண்டு போங்கோ” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, மங்களத்தைத் தோளில் தட்டிக்கொண்டே கேட்கிறார்: “அழாமல் சொல்லு, இங்கே என்ன நடந்தது?” மங்களம் பொங்கிப் பொங்கி இப்பொழுது அதிகமாகவே அழுகிறாள். அழுது அழுது தேம்பிக்கொண்டே சொல்கிறாள்.
“நானும் – நம்ப மணியும்… இதோ அங்கே உட்கார்ந்துண்டு-” வீட்டுக்குள் கூடத்தைக் காட்டிக் கொண்டு அதற்கு மேல் சொல்ல முடியாமல் – கூடத்தைக் காட்டிய கை அப்படியே நிற்கிறது; குரல் விம்மி அடைக்கிறது. அந்த இடத்தில் சற்று முன் நிகழ்ந்த காட்சி அவள் மனசில் வர மறுபடியும் ஒரு பெரிய அழுகை.
“ஸ்.. அழப்படாது… அழாமல் சொல்லு” என்று ஒரு குழந்தையைத் தேற்றுவது மாதிரித் தேற்றுகிறார் சீதாராமய்யர்.
“அங்கே உட்கார்ந்துண்டு தாயம் விளையாடிண்டிருந்தோம்… நேரா வெய்யில் அடிக்கிறதேன்னு நான்தான் வாசக் கதவைச் சாத்தினேன். ஜன்னல் கதவெல்லாம் திறந்துதான் இருக்கு… மணி, தலையை வலிக்கிறதுன்னு படுத்துண்டான். நான் காயெல்லாம் எடுத்து டப்பாவிலே வைக்கிறச்சே… இந்த வீட்டுக்கார மாமா… மாமா… வந்து… வந்து…”
அதற்குமேல் அவளால் சொல்ல முடியவில்லை. அந்தச் சமயம் சுவரோரமாக நின்று கொண்டிருந்த மணியும் அழுகிறான்.
“மண்டு மண்டு! நீ எதுக்காக்கும் அழறாய்? போறும்! நம்ப ராஜாமணி ஐயருக்கு என் மேலே இருக்கிற அன்பு உன்மேலே இன்னும் வரலே… நான் இருபது வருஷம் அவாளோட பழகி இருக்கேன். நீ இப்பத்தானே வந்திருக்காய்…” என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். மங்களம் ஓய்வதாக இல்லை. தொடர்ந்து சொல்கிறாள்: “மணியைப் பிடிச்சுத் தரதரன்னு இழுத்துண்டு வந்து… என்னைப் பத்தி அநியாயமா என்னென்னமோ சொல்றா… நான் கையிலே நெருப்பை அள்ளிண்டு வேணாலும் சத்தியம் பண்றேன்.” என்று அவள் அழுது அழுது சொல்லிக் கொண்டிருக்கும்போது சீதாராமய்யர் சிரிக்கிறார்.
“போறுமே… நெருப்பைப் போய் அள்றாளாம், நெருப்பை; ராஜாமணி அய்யர்வாள், இதெல்லாம் என்ன கூத்து? மங்களம் என் பெண்டாட்டி… மணி எங்க ஆத்துப் பையன். எனக்கு அவாளையும் தெரியும், என்னையும் தெரியும், உங்களையும் தெரியும். மங்களம் இன்னிக்கு வந்தவள் தானே! நான் இருபது வருஷமா இங்கே இருந்து நீங்க சம்சாரம் நடத்தும் அழகை எல்லாம் பார்த்துண்டு இருக்கேனே… எவன் தன் பெண்டாட்டியை நம்பறானோ அவனாலேதான் ஊரிலே இருக்கிறவன் பெண்டாட்டிகளையும் நம்ப முடியும். மாமி, சாயங்காலம் கதை கேட்கப் போறேளே… மகாபாரதம் சொல்றாளாமே. துரியோதனன் பெண்டாட்டியும் கர்ணனும் சொக்கட்டான் விளையாடிண்டிருந்தாளாமே… பாதி ஆட்டத்திலே அவள் எழுந்திருக்கறச்சே கர்ணன் அவள் மேகலையைப் பிடிச்சு இழுத்துட்டான். அதெல்லாம் கேட்டு இருப்பேளே – துரியோதனன் ரொம்பக் கெட்டவன்னு பேர்… ஆனாலும் அவன் ஆம்பளை… அதனாலே தான் பெண்டாட்டி மேலே சந்தேகம் வரலே. பெண்டாட்டியை நம்பாதவன் என்ன பெரிய ஆம்பளை? ராஜாமணி அய்யர்வாள்! இந்த ஆத்திலே இருக்கிறவாளை யெல்லாம் வேற கூப்பிட்டுக் கேட்கச் சொல்றேள். என் பெண்டாட்டியைப் பத்தி… ரொம்ப நன்னாயிருக்கு என்னைப் பத்தி நீங்க வச்சிருக்கிற அபிப்பிராயம்!” என்று சொல்லி “ஓ” வென்று சிரிக்கிறார். சிரித்துவிட்டுச் சொல்கிறார்: “இந்த ஆத்திலே இருக்கிறவாளுக்கெல்லாம் நான் சொல்றேன்; ‘அவனவன், அவனவன் பெண்டாட்டியை நம்பினால் போறும்.’ அதைச் செய்யுங்கோ.”
“ஏண்டா, அழுதுண்டு இருக்கே நீ? நீ போய் முகத்தை அலம்பிக்கோ” என்றதும் மணி குழாயடிக்குப் போகிறான். ஆனால் மங்களம் இன்னும் நின்று அழுது கொண்டிருக்கிறாள்.
“இதோ பார், இவாளெல்லாம் உன்னை நம்பி உனக்கு என்ன ஆகணும் சொல்லு? நான் நம்பறேன். உள்ளே வா” என்று மறுபடியும் சமாதானம் சொல்லிக் கைத்தாங்கலாக மங்களத்தை அழைத்துக்கொண்டு போகிறார்.
“நேக்கு இந்த ஆத்திலே பயமா இருக்கு… வேற ஏதாவது வீடு பார்த்துண்டு நாம்ப போயிடலாமே” என்று மங்களம் உள்ளே போகையில் அவரிடம் சொல்லி இருப்பாள் போலிருக்கிறது. சீதாராமய்யர் சொன்ன பதில் மட்டும்தான் எனக்குக் கேட்டது.
“அடி அசடே, எங்கே போனாலும் லோகம் இப்படித்தான் இருக்கும்” என்று அவர் உரக்கச் சிரித்தார்.
“சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள்” என்று படித்தது என் நினைவுக்கு வந்தது. மங்களம் எப்படிப்பட்டவளாயிருந்தால் என்ன, சீதாராமய்யர் சீசர்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *