கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,490 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்தில் வந்து அவ்வளவு நேரமாக நின்ற தன்னைக்கூடக் கவனிக் காமல், தன் புருஷன் எதையோ வாசித்துக்கொண்டிருந்தது மீனாக்ஷிக்குக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அதை அடக்கிக்கொண்டு. ‘என்ன வாசிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

‘என்னவா? தெரியவில்லையா?’

‘கதைதானே?’

‘ஆமாம்!’

‘புஸ்தகக் கதைதான் நன்றாயிருக்குமோ? நான் ஒரு கதை சொல்லு கிறேன், கேளுங்களேன்’ என்றாள் மீனாக்ஷி.

‘உன் அத்தைப் பாட்டி கதையெல்லாம் எனக்குத் தெரியும்’.

‘அத்தைப் பாட்டி கதை ஒன்றும் அல்ல. உங்கம்மா மத்தியானம் எனக்குச் சொன்ன கதை-நிஜமாக நடந்ததாம். சொல்லட்டுமா?’

சீனிவாசன் பார்த்தான். அதற்குமேல் அவளை அலட்சியம் செய்யக் கூடாதென்று அவனுக்குப்பட்டது. புஸ்தகத்தை மூடி மேஜைமேல் போட்டான். மின்சார விளக்கை அணைத்துவிட்டு ஜன்னலருகே இந்த கட்டிலில் போய்ச் சாய்ந்து கொண்டான்.

‘சரி, இங்கே வா. உன் கதையைச் சொல், பார்க்கலாம்’ என்றாள். அவளை இழுத்துப் பக்கத்தில் சாய்த்துக்கொண்டு.

‘எள் கதையைக் கேட்க வேண்டுமே தவிர, பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. இஷ்டம் இருந்தால்

‘இதுதானே? – ஒஹோ!”

‘சோழ தேசத்தில் ‘சங்கர துர்க்கம்’ என்ற பேர் கொண்ட ஒரு பழைய காலத்து ஊர் இருக்கிறதாமே?’

‘இப்படிக் கேள்விகள் போட்டேதான் நீ கதை சொல்லப் போகிறாயோ?’

‘அந்த ஊர் மலையடிவாரத்தில் ஒரு சிவன் கோவிலாம். அதைச் சுற்றி ஒரு சின்னக் கோட்டையாம். ஒரு காலத்திலே சண்டைகள்கூட அங்கே நடந்ததாம். அந்தக் கோட்டைக்குள்ளேயே அந்தப் பிராந்தியத்தின் ஜமீன்தார் மாளிகையும் நூறு இருநூறு வீடுகளும் இருந்தன. இந்தக் கதை நடந்த காலத்திலே அங்கே இருந்த ஜமீன்தார்தான் இதற்குக் காரண புருஷனாக இருந்தவன். நல்ல செல்வாக்கு உடையவன். ஆனால் ரொம்ப துஷ்டன்’.

‘உம் சரி: துஷ்டன், இல்லாவிட்டால் கதை ஏது? அப்புறம்?’

‘அந்தக் கோவில் குருக்கள் ஒரு சிறு பிள்ளையாண்டான். தெய்வ சிகாமணி என்று பேர். அவனும் அவன் அகமுடையாளுந்தான். குழந்தை இல்லை. அவள் பேர் மதுரம். அந்த பேர் அவளுக்குத்தான் தகுமாம். அவ்வளவு அழகு அந்த ஊரிலேயே யாரும் இல்லை. இத்தச் சமாசாரம் ஜமீன்தாருக்குத் தெரியும்’.

‘அது வழக்கந்தானே’

‘ஆனால் அவனைப் பார்ப்பதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை’.

‘கதைக்காக ஒரு சத்தர்ப்பம் வாய்த்தாக வேண்டுமே: எப்பொழுது வாய்த்தது?’

‘இது கதையல்ல, பரிகாசம் செய்யாமல் கேட்டால் சொல்லுகிறேன்’.

‘சொல்லு; சொல்லு.’

‘மார்கழி மாசம், திருவாதிரை, கோவிலில் ஸ்வாமி புறப்பாடு. தெய்வசிகாமணி அன்று விசேஷமாக விக்கிரகத்தை அலங்கரித்துத் தானும் அலங்காரம் செய்துகொண்டான். மதுரமும் அதிகாலையில் எழுந்து, வாசலில் சாணி தெளித்துப் பெருக்கிக் கோலமிட்டுப் பரங்கிப் பூக்களை வைத்துவிட்டு ஸ்நானம் செய்து மடியாகக் களி சமைத்து வைத்துவிட்டு ஸ்வாமி தரிசனத்திற்காகக் கோவிலுக்குப் போனாள்.

‘காவை எட்டு மணிக்குப் புறப்பாடு. அதிர் வெடிகள் அடுக்கடுக்காக வெடித்தன. ஜமீன்தார், தனது அந்தஸ்தைக் காட்டும் அங்கிகளுடன் ரதத்திற்குமுன் நின்று கொண்டு உத்தரவுகள் போட்டுக் கொண்டி ருந்தான். பக்கத்தில் காரியஸ்தன் கைகட்டிக்கொண்டு நின்றான். திடீரென்று எதையோ பார்த்தவன். வாயில் பாதி சொன்ன வார்த்தை யுடன் அப்படியே கண்கொட்டாமல் நின்றான். காரியஸ்தன் எட்டிச் சென்ற அவள் கண்களைக் கவனித்தான்’.

‘அது யார் ஓய்?’ என்று ஜமீன்தார் காரியஸ்தனைக் கேட்டான்.

‘எஜமான், அதுதான் தம்ம குருக்கள் சம்சாரம்’ என்ற பதிலைக் கேட்டு ஜமீன்தார் அந்த நிமிஷமே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டான்போல் இருக்கிறது. இன்னும் அஞ்சு நிமிஷம் மதுரம் அந்த இடத்திலிருந்தால் என்ன ஆகியிருக்கமோ – ஆனால் மதுரத்தை அவன் பார்த்த நிமிஷமே, அவளும் அவனைப் பார்த்துவிட்டாள்.

‘கண்டதும் காதலோ?’

‘சீ என்னத்தையாவது அசட்டுப் பிசட்டுனு சொல்லாதேயுங்கள். அந்தப் பார்வையிலிருந்த துஷ்ட எண்ணத்தைக் கண்ட அந்தக் கணமே அவள் உடம்பு நடுக்கம் எடுத்தது’-

‘அப்படியா அது!’

‘மறுவிநாடி வீட்டுக்கு வந்துவிட்டாள். காலையில் எவ்வளவு ஆசை, ஆஸ்தையுடன் தன்னை ஆலங்கரித்துக் கொண்டானோ அவ்வளவும் பறந்தது. புதுப் புடைவையையும் ரவிக்கையையும் களைந்துவிட்டுப் பழையதை உடுத்திக்கொண்டாள்’.

‘கதை நன்றாயிருக்கிறது; உம்’

‘வேணுமென்றே பின்னலைக் கலைத்துக்கொண்டாள். துக்கத்தால் நெஞ்சு குமுறிற்று. கண்ணீர் தாரை மடமடவென்று பெருகியது.

‘பாதகமில்லை; உனக்கும் கொஞ்சம் கவிதா சக்தி இருக்கிறது. அப்புறம்?’

‘ஏதோ ஒருவிதமான பயம் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. வாசற் கதவைத் தாழிட்டுக்கொண்டாள். ‘இன்று விடிந்தவேளைதான் என்ன வேளை? இவன் கண்ணில் பட்டுக் கருகவா இன்று பைத்தியம் போலே இப்படி அலங்காரம் செய்துகொண்டேன்? அவர்கூட என்னைப் பார்க்க வில்லையே; ஐயோ’ இந்த மாதிரி புலம்பிக் கொண்டிருந்தானென்று வைத்துக்கொள்ளுங்களேன்.

‘அன்று தெய்வசிகாமணி வீட்டிற்கு வருவதற்கு மணி நாலாகி விட்டது. கதவைத் தட்டினான். திறக்கப்படவில்லை.

‘கோபத்துடன் ஓங்கித் தட்டினான். மதுரம் தூங்கிள கண்களுடன் வந்து கதவைத் திறந்தாள். மனக்கவலையால் ஏற்பட்ட அசதியில் தன்னை அறியாமல் தூங்கிவிட்டாள். அது துக்க காலங்களில் சகஜந்தானே? தெய்வசிகாமணிக்குக் கோபம் அதிகரித்தது. ‘தரித்திரக் கழுதை, தாளும் கிழமையுமாய்ப் படுத்துத் தூங்கினாயோ?’ என்றான். எப்படி இருக்கும் அவளுக்கு! அதுவும் இதுவுமாக வாசற்படியிலேயே அழுதுவிட்டாள்.

‘போ உள்ளே – சனியனே, உனக்கென்ன பிசாசு பிடித்துவிட்டதா?’ என்று அவளை உள்ளே தள்ளிக் கொண்டுபோனான். உள்ளே போனதும், முதல் வார்த்தையாக அவள், ‘ஊருக்குப் போய்விடுவோமே; இந்த வேலை வேண்டாம்” என்றாள் வெறிபிடித்தவள்போல.

தெய்வசிகாமணிக்கு அந்த நேரத்தில் கோபத்தான் மேன்மேலும் அதிகரித்தது’.

‘உங்கப்பன் சோறு போடுவானோ?’ என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

‘நான்செத்துப்போய்விட்டால் என்ன செய்வீர்கள்?’

‘இந்த மனஸ்தாபத்தால் இருவரும் அப்படியே படுக்கைக்குச் சென்றுவிட்டார்கள். விடிய நாலு நாழிகைக்குத் தெய்வசிகாமணி எழுந்து ஒரு வேஷ்டி சவுக்கத்தை மூட்டையாகக் கட்டினான். இரவு பூராவும் நூக்கமில்லாமல் கிடந்த மதுரம் அதைப் பார்த்துப் பயந்து போய்விட்டாள். எழுந்து தன் புருஷனிடம் வந்து, ‘நேத்திக்கு நான் ஏதோ உளறினேன்னு கோபமா’ என்று தணிவாகக் கேட்டாள்.

‘கோபமென்னடி அசடு! ஒன்றுமில்லை. இப்பொழுது நாள் ஒரு ஊருக்குப் போக வேண்டும். நாளைக்குத்தான் வருவேன்’.

‘என்ன விசேஷம்?

‘ஜமீன்தார் அவசரமான ஒரு விஷயத்திற்காக வேறு நம்பிக்கையான ஆள் இல்லாமையால், என்னை ஓர் இடத்திற்குப் போகச் சொல்லி யிருக்கிறார்’.

‘மதுரம் பெண் அல்லவா? உடனே அவளுக்கு அர்த்தமாகிவிட்டது.

‘நீங்கள் போக்கூடாது’ என்றாள்.

‘இதென்னடி, அபசகுனமாட்டமா? இப்படி ஏதாவது பேசினால் தான் எனக்குக் கோபம் வருகிறது. உனக்கு என்ன அதனால்? உன் துணைக்கு ஜமீன்தார் ஒரு ஸ்திரீயை நகரியிலிருந்து அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்’.

‘வேண்டாம். உடம்பு சரிப்படவில்லை என்று சொல்லிவிடுங்கள்’.

‘உன் பெண்புத்தியைத்தானே காட்டுகிறாய்? அது நன்றாயிருக்குமா? நாளைக்கு அவர் முகத்திலே விழிக்க வேண்டாமா?’

‘விழிக்க வேண்டாம். அதற்குத்தான் நேற்று ஊருக்குப் போய் விடுவோம் என்றேன்’.

‘சரி எனக்கு நாழிகையாகிவிட்டது’.

‘என் தெய்வமோன்னோ? என் பேச்சைக் கேளுங்கள். இப்பொழுது என்னைவிட்டுப் பிரியக்கூடாது’ என்று அவள் தோளில் கைகளைக் கோத்துக்கொண்டு மன்றாடிக் கெஞ்சினாள்.

‘பேஷாக் கதை சொல்லுகிறாயே! இத்தனை நாள்’

‘நீ என்ன இப்படி ஆகிவிட்டாய் ? எவ்வளவோ கெட்டிக்காரி என்றல்லவோ நான்’ – என்று அவள் தலைமயிரைக் கோதிக்கொண்டே. ஒரு பகல், ஓர் இரவு, நாளைக்கு வந்துவிடுகிறேன். உனக்கு என்ன வேண்டும். சொல்லு’ என்றான் தெய்வசிகாமணி.

‘எனக்கா? நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும்’.

‘சரி, சரி, உன்னோடு பேசுவதில் பிரயோஜனமில்லை’ என்று சொல்லி விட்டு அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே போக முயன்றான்.

‘எங்கே. முகத்தை ஒரு தரம் பார்க்கிறேன். ஒரு வேளை…’ என்று அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். அவனுக்கு அர்த்தமாகவில்லை! போய்விட்டான்.

சீநிவாசன் உண்மையிலேயே கொஞ்சம் திகைப்படைந்து போனான். தன் மனைவி அவ்வளவு அழகாகக் கதை சொல்லக்கூடியவள் என்று அவனுக்குத் தெரியாது.

‘மதுரம் என்ன செய்வாள் பாவம்! அதற்குப் பிறகு அவளுக்குத் தூக்கம் வருமா? ஜன்னலின் வழியாக வந்த நிலவைப் பார்க்கக்கூட அவளுக்குப் பிடிக்கவில்c. கதவுகளை மூடினாள். படுக்கையில் படுத்துக்கொண்டு யோசித்தாள். அடுத்த வீட்டில் சாணி தெளிக்கிற சத்தம் கேட்டு எழுந்து விடியற்கால வேலைகளைச் செய்யப்போனாள்.

‘அன்று, தன் தகப்பனாரிடமிருந்து அரண்மனைக்கு, தோட்டி கிஸ்திப் பணம் கொண்டு வரவேண்டிய நாள். அந்த வாசல் வழியாகத்தான் போவான். அவன் மூலமாகத்தன் தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி யனுப்புவது என்று தீர்மானித்தாள்.

‘பகல் மூன்று மணி இருக்கும். ஜமீன்தார் அரண்மனையில் மனக்கோட்டைகள் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். வாசலில் கிருஷ்ணாபுரம் கிராம முனிசீப் வந்திருப்பதாக ஆள் வந்து சொன்னான். உள்ளே அழைத்துவரச் சொல்லி, ‘என்ன விசேஷம்?’ என்று கேட்டார்.

‘ஒன்றுமில்லை. ஓர் அவசர காரியமாக இங்கே வந்தேன். தங்களைத் தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாமென்று வந்தேன். மாப்பிள்ளையை ஏதோ காரியமாகத் தாங்கள் அனுப்பியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்’.

‘ஆமாம், என்ன விசேஷம்?’

‘என் சிறிய பெண்ணுக்குத் திடீரென்று கல்யாணம் நிச்சயமாகியிருக் கிறது. இன்று மாப்பிள்ளை அழைப்பு. பெண்ணையும் மாப்பிள்ளை யையும் அழைத்துக்கொண்டு போகலாமென்று வந்தேன். மாப்பிள்ளை இங்கே இல்லை போல் இருக்கிறது. பெண்ணை மட்டுமாவது அழைத்துக் கொண்டு போக வேண்டும்’.

‘ஜமீன்தார் அசடு தட்டிய முகத்துடன், ‘இல்லை – ஒருவேனை மாப்பிள்ளை’ என்றார்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை; என் பெண் இல்லாமல் நான் முகூர்த்தத்தை நடத்த முடியுமா?’

‘அது சரிதான்’ என்று கையிலிருந்த புறாவைத் தப்பியோட விட்டவன்போல் ஜமீன்தார் விழித்தார்.

சீநிவாசன் தான் மெய்ம்மறந்து, கேட்டுக்கொண்டிருந்ததைத் திடீரென்று உணர்ந்தான்.

‘இனிமேல் உன் கதையை நிறுத்து; எனக்குத் தெரியும். மாப்பிள்ளை திரும்பிவருகிறான். மாமனார், கதை முழுவதையும் சொல்லி மருமகனை அங்கேயே தன் ஊரில் நிறுத்திக்கொள்ளுகிறார்! ‘கோவில் பூசை’ போனால்போகிறது. என் வீட்டிலேயே இரு’ என்கிறார். அப்படித் தானே?’ என்றார் சீநிவாசன்.

‘ஆமாம் பின்னே?’

‘ரொம்ப உபயோகமில்லாத முடிவு; எல்லாம் சுபம், சுபம் – தூ! என்ன கதை! நவீனச் சிறுகதை எழுதுகிறவன் பேனா பிடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா?’

‘சொல்லுங்கள். அது உங்களுக்குத்தானே தெரியும்?’ என்று மீனாட்சி கேட்டாள்.

‘ஜமீன்தார் தன்னை இம்சிக்க வருவான் என்று அறிந்த மதுரம் தூக்குப் போட்டுக் கொண்டோ, கொல்லைக் கிணற்றில் விழுந்தோ, இறக்கத் தயாராக இருப்பாள்’.

‘ஜமீன்தார் வருவார். அப்பொழுதும் மதுரம் கடைசிப் பிரயத்தனமாக நல்ல வார்த்தை சொல்லுவாள். ஜமீன்தார் திடீரென்று பாய்ந்து அவளை பிடிக்க முயல, மதுரம் ஓடிக் கிணற்றில் விழுவாள். அதே நிமிஷம் தெய்வசிகாமணி உள்ளே ஓடிவருவான் – இந்தச் சூழ்ச்சியைப் பாதி வழியில் ஊகித்தவனாய்த் திரும்பி – ஆனால் மதுரம் அதற்குள் உயிர் துறந்திருப்பாள்.

‘ஐயோ!அவ்வளவு சொன்னாளே?’ என்று கதறுவான்.

‘சீ!- இந்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ நாம்தான் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம். கதையில் வருகிறவர்களுமா கஷ்டப்பட வேண்டும்? கதையிலாவது மனத்துக்கு ஒரு மாற்று வேண்டாமா’

‘கதை. வாழ்க்கையின் உண்மையை அப்படியே எடுத்துக் காட்டுகிறது’.

‘பின் என் கதை என்கிறீர்கள்? என் கதை உங்களுக்குப் பிடிக்க வில்லை. அவ்வளவுதானே?’

‘உன் கதையா? அம்மா சொன்ன கதை என்றாயே?’

‘சும்மாச் சொன்னேன்’ என்று குறும்பாகச் சிரித்தாள் மீனாக்ஷி.

– மணிக்கொடி. 28.04.1935

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *