கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 6,167 
 
 

கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர யோசனை.

எல்லாம் மாப்பிளையாக வந்த திவாகர் போட்ட போடு. அவன் இப்படி எல்லோரையும் கதிகலங்க வைப்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்தான் நடந்தது.

ஓய்வு பெற்ற தேசிய நெடுஞ்சாலை தலமைப் பொறியாளர் தணிகாசலம், அவர் மனைவி, மகள்கள்… சிம்ரன், மாலா ஆகியோர் மாப்பிள்ளை வீட்டாரை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தார்கள்.

பத்து நிமிடங்களில். ….

திவாகர்…. தன் அம்மா, அப்பா, தம்பி, தரகருடன் வந்து மாருதியின் இறங்கினான்.

” வாங்க. .. வாங்க. ..” தணிகாசலம் அவர்களை ஆவலாய் ஓடிப்போய் வரவேற்றார்.

மாலா புன்னகையுடன். …அனைவருக்கும் பூச்செண்டு கொடுத்து வரவேற்றாள்.

வந்தவர்கள் சோபா, நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

விருந்து உபசரிப்புக்குப் பிறகு பெண் பார்க்கும் படலம்.!

சிம்ரன் தழைய தழைய பட்டுப் புடவை கட்டி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து, மணப்பெண்ணிற்கே உரிய கூடுதல் அலங்காரத்துடன் கையில் காபி தட்டுடன் வந்து எல்லோருக்கும் குனிந்து பணிவாய்க் கொடுத்து வந்தவர்கள் சரியாகப் பார்க்க கொஞ்சம் தனித்து தனியே நாற்காலியில் அமர்ந்தாள்.

வந்த எல்லோர் முகங்களிலும் திருப்தி. பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது. !!

” அடுத்து பேசலாமா. .? ” தாய் அருகில் அமர்ந்திருந்த மகனிடம் கிசுகிசுத்தாள்.

‘ பேசலாம் ! ‘ என்பதற்கு அடையாளமாக திவாகர் தலையசைத்தான்.

பிள்ளையைப் பெற்றவர் தொண்டையைக் கணைத்தார்.

ஆனால் தாய் அம்புஜவள்ளிதான் வாயைத் திறந்தாள்.

” பொண்ணுக்கு ஒரு கிலோ தங்கம் பூட்டிடுங்க. அஞ்சு லட்சத்துக்கு வெள்ளி, வெண்கலப் பாத்திரங்கள், சீர்வரிசை செய்ஞ்சிடுங்க. இருபது லட்சத்துல ஒரு கார். பெரிய திருமண மண்டபத்துல நாலு பேர் மெச்சறாப்போல திருமணம் போதும். .! ” முடித்தாள்.

கேட்ட தணிகாசலத்திற்குத் தலை கிர்ரடித்தது.

பெண்ணைப் பெற்றவளுக்கு மயக்கம் வந்தது.

‘ போங்கய்யா வெளியில. கொள்ளைக் கும்பல் ! ‘ மாலாவிற்குச் சொல்ல வாய் வந்தது.

ஆனால் எவரும் பேசவில்லை.

தணிகாசலம்தான். ……

” இ. … இது எங்க சக்திக்கு அதிகம். ..” மெல்ல சொன்னார்.

” எங்க தகுதிக்கு இது கம்மி. ..! ” மாப்பிள்ளையாக வந்த திவாகர் நேரடியாக களத்தில் குதித்தான்.

” என்ன தகுதி. ..? ” சிம்ரனும் சளைக்காமல் பதிலுக்கு இறங்கிவிட்டாள்.

” அம்மா. ..! ” தணிகாசலம் பதறி மகளை அதட்டினார்.

” நீங்க சும்மா இருங்கப்பா. இது என் வாழ்க்கைப் பிரச்சனை. யாரும் தலையிட வேண்டாம் ! ” கடுமையையாக சொன்னாள்.

இது தலைக்கு மேல் வெள்ளம். பெண்ணை அதிகம் படிக்க வைத்ததற்கு வேதனை. .! – அவரும் அதற்கு மேல் பேசாமல் வாலைச் சுருட்டிக்கொண்டார்.

” சொல்லுங்க என்ன உங்க தகுதி. ..? ” சிம்ரன் திவாகரை நேருக்கு நேர் பார்த்தே கேட்டாள்.

” நான் எம். பி. ஏ . மாசம் எழுபதாயிரம் சம்பளம். வீடு, வாசல்ன்னு சொத்துப்பத்து ஏகப்பட்ட வசதிகளிருக்கு. நான், தம்பி ரெண்டே பேர்தான் வாரிசு ! ” நிறுத்தினான்.

” நானும் சாதாரணப் பெண்ணில்லை. பி. இ. ஐ. டி. கம்பெனியில வேலை மாசம் அம்பதாயிரம் சம்பளம். ! ” சொன்னாள்.

” இந்த தகுதிக்குத்தான் இந்த வரதட்சணை. .! ” திவாகர் அவள் மூக்குடைப்பது போல சொன்னான்.

சிம்ரனுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.

” அப்படின்னா. . இந்த தகுதியும் எனக்கு இல்லேன்னா. .. உங்க வரதட்சணை இன்னும் எகிறுமா. .? ” கோபமாக கேட்டாள்.

திவாகரம் சளைக்கவில்லை.

” அதுல சந்தேகமே இல்லே. .! ” கறாராய்ச் சொன்னான்.

‘ பேச்சுக்குப் பேச்சு இது எங்கு கொண்டு விடுமோ. .?! ‘ பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் கலக்கம்.

‘இடையில் நுழைந்தால் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் ! ‘ இரு தரப்பாருக்குள்ளும் பயம். கலவரமாக இருந்தார்கள்.

” மன்னிக்கணும். நாங்க உங்களுக்குத் தகுதி இல்லாத இடம் ! ” சிம்ரன் உடனே சொல்லி அவர்களை எழுப்பிவிட நினைத்தாள்.

வீட்டிற்கு வந்த விருந்தாளியை அப்படி அவமானப்படுத்தி அனுப்புவது அநாகரீகம். ! என்று பொறுமையைக் கடைப்பிடித்தாள்.

திவாகருக்கு இது வாய்ப்பாகப் போய்விட்டது.

” சிம்ரன்! நீங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. .? கொள்ளைக்கூட்டம் வெளியில போங்கடான்னு சொல்லுங்க போறோம். ! ” சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்து சொன்னான்.

‘இது வம்பு ! ‘ சிம்ரன் மனதுக்குள் பல் கடித்தாள்.

தணிகாசலத்தைப் பார்த்தாள்.

அவரிடம் எந்த அசைவும் இல்லை.

” சிம்ரன் ! இன்னைக்கு வரதட்சணை விஷம்போல ஏறி, தலைக்கு மேல் கொடுமையாய் தலை விரித்தாடுறதுக்குப் பெண்ணும், அவளை பெத்தவங்களும் ஒரு காரணம். ஒத்துக்குறீங்களா. .? ” கேட்டு நிமிர்ந்து அமர்ந்தான் திவாகர்.

சிம்ரன், தணிகாசலம் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

” ஒத்துக்கோங்க. அதுதான் நிசம். பெத்தவங்க பெண்ணைப் படிக்க வச்சாலும், படிக்க வைக்காவிட்டாலும் தன்னைவிட நல்ல இடத்துல அவளைக் கட்டிக் கொடுக்கணும். அங்கே…அவள் எந்த கஷ்டமும் இல்லாம வசதியாய் வாழனும் என்கிற ஆசை தன்னைவிட உசந்த இடமாய்ப் பார்க்குறாங்க. அதனால் மாப்பிள்ளை வீடு கேட்கிற வரதட்சணை கொடுத்து கடனாளியாகி கஷ்டப்படுறாங்க சரியா. .? ” கேட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.

‘ சரி ! ‘ சொல்ல சிம்ரனுக்கு வாய் வந்தது. சொல்லவில்லை.

” அடுத்து பெண்.! பெத்தவங்க தான் இப்படி முட்டாள்தனமாய்ப் போய் விழறாங்களே, வாழ்க்கைக்குத் தேவை துணை. ஆண் தன்னைவிட மேலானவனாக இருந்தால் என்ன, கீழானவனாய் இருந்தால் என்னன்னு தடுக்குறாங்களா. ..? இல்லே.! காரணம்…. தனக்குக் கண் நிறைந்த கணவன் வேணும், அவனால தனக்கு மதிப்பு மரியாதை வேணும் என்கிற எண்ணம். சரியா. .? ”நிறுத்தினான்.

‘சரி ‘ சொல்ல சிம்ரனுக்கு வாய் வரவில்லை.

” ஆனா. .. ஆண். .? எல்லா வகையிலும் தன் தகுதிக்கு குறைவான பெண்ணைத்தான் பார்க்கிறான். முடிக்கிறான்.இது நிசம். சரியா. .? ”

” இது சரி இல்லே திவாகர். நியாயம் வளையுது. ஆண் , பெண்ணை இப்படி தகுதிக்கு குறைவாய்ப் பார்க்கிறதுக்கு காரணம். .. பெண் தன்னை மிஞ்சிடக் கூடாது, அடிமையாய் இருக்கனும் என்கிற ஆணாதிக்க எண்ணம். ” சிம்ரன் சீறினாள்.

” சரி. ஆணுக்கு அந்த எண்ணம். பெண் சுதாரிக்கலாமே. .!? பெண் வேலை இல்லாதவனைக் கட்டிக்கலாம். பெண் டாக்டர் வார்டு பையனை முடிக்கலாம். ஐ. ஏ. எஸ். பெண், பியூனைத் திருமணம் முடித்து ஆணுக்குப் பெண் சளைத்தவளில்லை. வாழ்க்கையில் பெண்ணும் உசத்தின்னு காட்டலாம். இதுவரைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அவளவுக்குக்கூட இந்தப் பெண்ணும் செய்யல. ஏன். .? ”

கேட்டான்.

சிம்ரனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. விழித்தாள்.

திவாகர் தொடர்ந்தான். ….

” ஒரு மாற்றத்துக்காகவாவது பெண் இப்படி செய்திருந்தால் இந்த வரதட்சணையே வந்திருக்காது. பெண்ணும், பெத்தவங்களும் கூடி…. ஆணால்தான் தான் பெண்ணுக்கு வாழ்க்கை, வாழறாள்ன்னு ஆணை உசத்தி, அவனுக்கு ஒரு மதிப்பு மரியாதையை உருவாக்கி சரணாம்ன்னு கால்ல விழுறீங்க. ஆண் எகிறிப்போறான். வரதட்சணை கொடுமை. ஆடறான். ” நிறுத்தினான்.

சிம்ரனுக்குப் புரிந்தது .

” வாழ்க்கையில் ஆண் – பெண் சமம் சிம்ரன். ஆண்ணில்லாம பெண் வாழ முடியாது. பெண்ணில்லாம ஆண் வாழ முடியாது. திருமண ஏற்பாட்டில் ஆண் மனசு பெண்ணுக்கு வரணும். ஆண் எவளையும் ஏத்துக்கிற மாதிரி பெண் எவனையும் ஏத்து வாழனும். பெண்ணுக்குள் இந்த மாற்றம் வந்தால்தான் வரதட்சணை மட்டுமல்ல, ஆண் பெண்ணை வதைக்கிற கொடுமையும் மாறும். .” நிறுத்தினான்.

சிம்ரன் தெளிவானாள்.

” இவ்வளவு தெளிவாய் நியாயம் பேசிட்டு நானும் தப்பு செய்தா தப்பு தப்புதான் சிம்ரன். என் தம்பி வேலையில்லாத பட்டதாரி. அவனை முடிக்க உனக்கு சம்மதம்ன்னா படிச்சு முடிச்சு வீட்டில இருக்கிற உன் தங்கை மாலாவை நான் முடிக்க தயார். வரதட்சணை வேணாம். ” சொன்னான்.

இதுதான் எல்லோருக்கும் இடியை இறங்கியது. வாயடைத்தது. அமைதி.!!!

எல்லோரும் இப்போது சிம்ரனையே பார்த்தார்கள்.

ஐந்து நிமிட யோசனை மௌனத்திற்குப் பின். …

” எனக்குச் சம்மதம் ! ” சொன்னாள்.

” அம்மா. ..ஆஆ. ..” வாயையைப் பிளந்து தணிகாசலம் மெல்ல அதிர்ந்தார்.

” வரதட்சணை வரதட்சனைன்னு இதுநாள் வரைக்கும் ஆண்கள் மேலே குறை சொல்லிக்கிட்டிருந்தோம். அது தப்பு. பெண்ணும், பெத்தவங்களும், அதுக்கு மறைமுகமாய் உதவி செய்துக்கிட்டுருங்காங்க என்பதை நினைச்சுப் பார்க்க வருத்தமாய் இருக்குப்பா. ஒரு ஐ . ஏ. எஸ். பெண் ஏன் ஒரு கடை நிலை ஊழியனைத் திருமணம் செய்யல…? டாக்டர் ஏன் சாதாரணப் பெண்ணைத் தேடலை. மாதர் சங்கம், பெண் விழிப்புணர்வெல்லாம் ஏன் இதை பத்தி யோசனை செய்யல, நெனைச்சுப் பார்க்கல. வேதனையை இருக்குப்பா. திவாகர் கண்ணைத் திறந்துட்டார். இவர் சொல்றதுதான்ப்பா சரியான முறை. .” சொல்லி சிம்ரன் எதிரில் அமர்ந்திருந்த திவாகர் தம்பியைக் காதலாய்ப் பார்த்தாள்.

” அட. .! கட்சி, காட்சி மாறியாச்சி.! நம்ம ஆளு எங்கேப்பா. ..? ” திவாகர் உரக்கக் கேட்டு மாலாவைத் தேட…..

அங்கு நின்ற அவள் முகம் சிவந்து ஓட. …

மொத்த வீடும் சட்டென்று கலகலப்பானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *