சிந்து மனவெளி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 11,787 
 
 

மனம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக்கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம். இதுவரை தப்பாய் நினைக்காத ஒன்றைத் தப்புத் தப்பாய் நினைக்கவும் வைக்கலாம். எப்போதாவது நேரம் கிடைத்து, நல்ல திரைப்படம் என்று யாராவது சொன்னால், அல்லது ஒரு படத்தைப்பற்றி நல்ல விமர்சனம் எழுதப்பட்டிருந்தால் நான் திரையரங்கத்திற்குச் சென்று அந்தப் படத்தைப் பார்ப்பதுண்டு. இதைக்கூட ஒரு நண்பன் தான் நல்ல கலைப்படைப்பு என்றான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை பிடிப்பதால், இவனது ரசனை எப்படிப் பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அவன் இந்தப் படத்தைக் கட்டாயம் போய்ப்பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தான். சில மலையாளப் படங்கள் போல யதார்த்தமாய் இருக்கிறது என்றும், குழந்தைகளோடு சென்று பார்க்கமுடியாத திரைப்படம் என்றும் வேறு சொல்லிவைத்தான். அவனுக்கு இது கலைப்படைப்பாகத் தெரிந்திருக்கலாம். அது கலையா இல்லையா என்பது ஒவ்வொருவரின் பார்வையையும், ரசனையையும் பொறுத்தது. குழந்தைகள் பற்றிய அந்தக் கவலை எனக்கு இல்லாததால்தான், தனியே சென்று அந்தத் திரைப்படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். மனைவியோடு கூடச் சென்று அந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு எனக்கு இருக்கவில்லை. அவளுக்கோ திரையரங்கத்திற்கு வந்து திரைப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கவில்லை. பெரியதிரைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தால் வாந்தி வருவது போல் இருக்கிறது என்பாள். என்ன காரணமோ தெரியவிலிலை, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதிலேயே அவளது அதிகமான நேரம் செலவானது.

‘தேவையில்லாமல் என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டானே நண்பன்’ என்று மட்டும் சொல்ல மாட்டேன். அது கொஞ்சம் ஆழமான தாக்கத்தைத் தரும் படம்தான் என்பதைப் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நான் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட படங்கள் என்றால் அது கொஞ்ச நாளைக்குப் படம் பார்த்தவர்களின் மனதைக் குழப்பிக் கொண்டுதானிருக்கும். அது போலத்தான் நண்பன் சிபாரிசு செய்த இந்தப் படமும் மனசைக் குழப்பிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.

மாமனுக்கும் மருமகளுக்கும் இடையே தற்செயலாக, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நெருங்கிய உறவு பற்றியதாக அந்தப்படம் அமைந்திருந்தது. அவர்களின் அந்த உறவு தொடர்வதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வப்போது காரணமாய் அமைந்திருந்தன. பெண் என்பவள் கொஞ்சம் அழகாகவும், இளமையாகவும் இருந்து விட்டால் ஈர்ப்பும் அதிகமாகத்தான் இருக்குமோ தெரியாது. ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயமாயிருந்தால், தெரிந்தோ தெரியாமலோ ஆழ்மனசில் எங்கேயாவது காயப்பட்டிருந்தால் மனசு ஒரேயடியாய்க் குடைஞ்சு கொண்டேதானிருக்கும். அப்படி ஒரு சம்பவம் என்னுடைய மனசிலும் புகுந்து என்னையறியாமலே என்னைக் குடைந்து கொண்டு இருந்திருக்கலாம். அல்லது சின்னவயதில் இருந்தே அப்படி ஒரு பிரேமை எனக்குள் ஏற்கனவே இருந்திருக்கலாம். சந்தேகம் பொல்லாதது, சந்தேகம் வரக்கூடாது, வந்தால் குடும்பத்தையே அழித்து விடும் என்று புத்திமதி சொல்வார்கள். அதற்காகப் பொறுமையாக இருந்தாலும், கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக் கொண்டு எப்பொழுதுமே இளிச்சவாயனாக இருந்துவிட முடியுமா?

சின்ன வயதிலே இப்படித்தான் ‘தி பேர்ட்ஸ்’ என்ற ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். படம் வெளியாகிப் பல வருடங்களின் பின் உள்ளுர் சினிமாவில் அந்தப் படம் ஓடியது. பறவைக் கூட்டங்கள் மனித இனத்தைத் தாக்குவது போன்ற படம். டப்னி டியு மொரியர் என்பவரால் எழுதப்பட்ட கதை, திகில்பட மன்னன் அல்பிரெட் ஹிக்காச் என்பவரின் நெறியாள்கையில் வெளிவந்தது. மறுநாள் காலையில் எழுந்து பின் வளவில் உள்ள கிணற்றடிக்குக் குளிக்கப் போனபோது காகம் ஒன்று வேலியில் உட்கார்ந்து தலை சாய்த்து என்னைப் பார்த்தது. எனக்குத் தி;க்கென்றது. தாக்குதலுக்கான எடுப்புப்போல என்னைப் பார்த்தபடி ‘கா கா’ என்று அடித்தொண்டையில் கத்திக் கூக்குரலிட்டது. கழுத்தைச் சிலிர்த்து, செட்டையை மெதுவாக விரித்து தாக்குதலுக்குத் தயாராகுவது போல அதன் நடவடிக்கை இருந்தது. அவ்வளவுதான், முதல்நாள் பார்த்த படத்தின் ஞாபகம் வரவே ஒரே ஓட்டமா ஓடி வீட்டிற்குள் மறைந்து கொண்டேன். புலம் பெயர்ந்து இந்த மண்ணுக்கு வந்த பின்பும் அந்தப் பயம் இங்கேயும் தொடர்ந்தது. இப்பொழுதும் அப்படிப் பறவைகளைக் கூட்டமாகக் கண்டால் சிலசமயங்களில் உடம்பு சிலிர்க்கும். ஏனென்றால் இந்த மண்ணில் காகங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், அதற்குப் பதிலாக எங்கே பார்த்தாலும் அந்தப் படத்தில் வந்தது போன்ற நிஜப்பறவைகள் இருந்தன. அதைப் போலத்தான், இந்தப் படத்தைப் பார்த்த போதும் என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் இருந்ததால் சந்தேகம் என்ற பிசாசு என்னைத் தாவிப் பிடித்துக் கொண்டது. படத்தைப் பார்த்ததால் தான் அந்த சந்தேகம் வந்ததா, அல்லது என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் பதுங்கி இருந்ததா தெரியவில்லை. ஆனாலும் புகைந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியது போல அந்தப் படத்தைப் பார்த்ததும் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.

கண்ட கண்ட குப்பை எல்லாம் வாசிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும், புலம் பெயர்ந்த மண்ணில் மாற்றுக் கருத்துச் சொல்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒருசாரார் தங்களுக்கு ஏற்ற சில கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வைக்கின்றார்கள். ‘ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் யாரோடு உறவு வைத்துக் கொண்டார்கள் தெரியுமா?’ என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள். எகிப்திய இளவரசியாக இருந்த கிளியோபட்ராவும் எகிப்திய மன்னனும் சகோதர உறவு கொண்டவர்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்கள் இருவரும் அரசியல் தேவைகருதி மணந்து கொள்ளவில்லையா, அந்த நாட்களில் அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தானே என்கிறார்கள். அரச பரம்பரைக்குள்ளேயே சந்ததி பெருக வேண்டும் என்பதால் இன்று தகாதஉறவு என்று சொல்லப்படுவதைக்கூட அவர்கள் அன்று நியாயப்படுத்தி ஏற்றுக் கொண்டார்களாம். அரச குடும்பம் என்பதால் சரிபிழை சொல்லாமல், வாயைத் திறக்காமல் எல்லோரும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்கள், இதுவே ஒரு சாதாரண குடும்பத்தில் நடந்திருந்தால் ஒரு பிரளயமே நடந்திருக்காதா?

திரைப்படம், சின்னத்திரை என்று அதன் பாதிப்பு கொஞ்ச நாட்களாக மண்டையைக் குடைந்ததில், மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தது. போதாக் குறைக்கு இந்தப் படம் என் மனநிலையை மேலும் குழப்பிவிட்டது. இப்படித்தான் சென்ற வாரத்தில் ஒருநாள் எங்கள் மாலைநேர விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்த பாடம் தலைக்குள் ஏறவில்லை. அனேகமான பெண்கள் அவர்களது குடும்பத்தோடு நெருங்கிப் பழகுபவர்களால் தான் பாலியல் நெருக்கடிக் குள்ளாக்கப் படுவதாக விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல, தப்புச் செய்தால் அதை மூடிமறைப்பதற்காக அவர்கள் பெண்களுக்குப் பிடித்தமான ஏதாவது பரிசுப் பொருளை வாங்கிக் கொடுத்தோ அல்லது அவர்களை மிரட்டியோ சமாளித்து விடுவார்களாம். வெளியே தெரிந்தால் குடும்பத்துக்குள் பூகம்பமே வெடிக்கும் என்ற பயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விடுவார்களாம். ஒரு முறை தப்பு செய்தவர்கள் தொடர்ந்தும் தப்புச் செய்ய இந்தப் பயம் வழிவகுத்து விடுமாம். தப்பித் தவறிப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரியவந்தால், அவர்களின் பலவீனத்தை மற்றவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கி விடுவார்களாம். விரிவுரையாளரின் இந்த வார்த்தைகள் சும்மா இருந்த மனதில் சந்தேகம் என்ற புகையை மெல்லக் கிளப்பி விட்டது. நிஜவாழ்க்கையில் அப்படி எல்லாம் இருக்காது என்று உள்மனம் மறுத்தாலும் நெருப்பில்லாமல் புகையுமோ என்ற ஒரு கேள்வியும் உடனேயே தலைதூக்க, மறுப்புச் சொல்ல முடியாத மனசோ நெருப்பை ஊதி வேடிக்கை பார்த்தது.

அந்த விரிவுரையாளரின் விரிவுரை, எங்க வீட்டில் தினசரி நடப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற ஒரு மாயையே எனக்குள் உருவாக்கி விட்டிருந்தது. தைப்பொங்கல் தீபாவளி என்றால் சிந்துவின் மாமாவும் துணிமணிகள் வாங்கித் தருவார். சிந்துவிற்குப் பிடித்தமாதிரியே அவரது செலக்ஷன் இருக்கும். முன்கூட்டியே சிந்துவிடம் கேட்டுத்தான் அவளுக்குப் பிடித்தமானதை வாங்கிக் கொண்டு வருகிறாரோ அல்லது அவருடைய மனம் நோகக்கூடாது என்று சிந்து அவர் கொண்டு வந்ததை எல்லாம் தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறாளோ தெரியவில்லை. நான் ஆசைப்பட்டு எதையாவது வாங்கிக் கொண்டு வந்தாலும் அது அவளுக்குப் பிடித்தமாதிரி இருப்பதில்லை. குற்றம் குறை கண்டு பிடித்து முகத்தில் அறைந்தது போல நேரடியாகவே சொல்லிவிடுவாள். என்னிடம் குறை கண்டு பிடிப்பற்கென்றே காத்திருப்பது போல, அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திற்காக எப்பொழுதும் காத்திருப்பாள். ரொம்ப நாளாய் இவளது இத்தகைய செய்கை என் மனதைப் புண்படுத்திக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல எதற்கெடுத்தாலும் என்னை அசட்டை செய்வதும், வேண்டுமென்றே மாமாவைப் புகழ்ந்து பேசுவதும் தினசரி நிகழ்வாகிக் கொண்டிருந்தது.
வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தால் எப்போதுமே சிகரட்புகை நாற்றம் குப்பென்று மூக்கைத் துளைக்கும்.

‘இதென்ன வீடெல்லாம் சிகரட் புகை மணக்குது.’ பொறுக்க முடியாமல் ஒருநாள் கேட்டேன்.
‘சொன்னால் மாமா கேட்கிறார் இல்லை. சிகரட் குடிச்சுக் குடிச்சே அவருடைய உடம்பு பழுதாப் போகுது.’ என்றாள் சிந்து.
அவருடைய உடம்பு பழுதாகிறதே என்கிற கரிசனை அவளுக்கு வேறு!
‘நான் இப்போ அதைக் கேட்கவில்லை. வீடெல்லாம் நாறுது என்றுதானே சொன்னேன்.’
‘அதற்கு நான் என்ன செய்யிறது’ என்றாள் சிந்து.
‘சிகரட் பிடிக்கிறதென்றால் வெளியே போய் நின்று பிடிக்கச் சொல்லு, வீட்டுக்குள்ள பிடிக்க வேண்டாம்.’ குரலை உயர்த்தினேன்.
‘நான் எப்படி அவரிட்டைச் சொல்லுறது?’ என்றாள்.
‘ஏன்?’ என்றேன்.
‘அவரை நம்பித்தானே நாங்க இருக்கிறோம்.’
‘என்ன சொல்லுறாய்?’
‘இல்லை, அவர் தர்ற பணத்திலதானே நாங்க வீட்டிற்கு மோட்கேஜ் கட்டிறோம் என்று சொல்ல வந்தேன்’ என்றாள்.
அதற்காக வீட்டு மோட்கேச் கட்டக்கூட வக்கில்லாதவன் இவன் என்று என்னைச் சொல்லிக் காட்டுகின்றாளா?
‘பார்க்கப்போனால் இது அவருடைய வீடுதானே, நாங்க எப்படி அவரை வெளியே நின்று சிகரட் பிடிக்கச் சொல்கிறது.’
‘அப்போ நாங்க வெளியே போகணும் என்கிறியா?’ என்றேன் கொஞ்சம் கடுப்பாக.
‘மாமா அப்படிச் சொல்லவில்லை, நாங்க அவருக்கு மதிப்புக் கொடுக்கணும்?’
‘என்னைவிட மாமாதான் உனக்கு உசத்தியா?’
‘ஏன் அப்படி எல்லாம் நினைக்கிறீங்க?’
‘அப்படித்தானே நீ நடக்கிறாய்!’

மாமா மீதிருந்த வெறுப்பை அவளிடம் உமிழ்ந்து விட்டு நடந்தேன். எடுத்ததற்கெல்லாம் மனைவி ஏதாவது பதில் சொல்வதும், மாமாவிற்காகப் பரிந்து பேசுவதும் எனக்கென்னவோ இதெல்லாம் வேண்டா விவாதம் போலத்தான் இருந்தது. அவளுக்கு மாமாமீது ஏன் இவ்வளவு பாசம் என்பதுதான் எனக்குப் புரியாமல் இருந்தது. ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்தபின் சிந்துவை அவளுடைய இந்த தாய்மாமன்தான் எடுத்து வளர்த்தாராம். சொற்ப காலத்தில் மாமி நோய் வாய்ப்பட்டடு இறந்த போதும் சிந்துவை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாமா மறுமணம் செய்து கொள்ளவில்லையாம். இந்த மாமா மருமகளிடம் காட்டுவது பாசமா, அல்லது அளவிற்கு மிஞ்சிய அன்பா, என்ன என்பதில்தான் எனது சந்தேகம் ஆரம்பித்தது. தப்பாக எதையும் நினைக்கக்கூடாது என்றுதான் இதுவரைகாலமும் இருந்தேன், ஆனால் நான் பார்த்த இந்தப் படத்தின் ஆளுமை என் மனசைக் குழப்பிக் கொண்டே இருந்தது.

இரவுக் காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்குத் தாமதமாக வந்தபோது, படத்தில் வந்த சில காட்சிகளின் தாக்கத்தால் மனம் குழம்பிப்போய்க் கிடந்தது. வாசல் மணியடித்து சற்று நேரம் சென்றுதான் சிந்து வந்து கதவைத் திறந்தாள். மாடியில் இருந்து அவள் கீழே இறங்கி வருவதற்குச் சற்று நேரம் எடுத்திருக்கலாம். சாதாரண நாளாக இருந்திருந்தால் பொறுமையோடு காத்திருந்திருப்பேன். நான் பார்த்த படத்தின் பாதிப்பு என்னைப் பொறுமை இழக்க வைத்தது. கதவைத் திறந்ததும் வழமையாக குப்பென்று அடிக்கும் சிகரட்வாசம் அன்று அடிக்கவே இல்லை.

ஒருவேளை மாமா வீட்டில் இல்லையோ என்று நினைத்தேன். மாடிப்படி ஏறும்போது குளியல் அறையில் தண்ணீர்ச் சத்தம் கேட்டது. வேறுயாராக இருக்கும், அது மாமாவாக இருக்கலாம். படுக்கை அறையில் சட்டையைக் கழற்றி மாட்டும் போதுதான் அவதானித்தேன், வாசலில் மணக்காத சிகரட்புகை படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு திடீரென எனக்கு ஏற்பட்டது. மனசுக்குள் படம் ஓட, வேண்டாத கற்பனையால் மனம் சஞ்சலப்பட்டு மனைவியை நிமிர்ந்து பார்க்கவே கூசியது. படுக்கையில் சரிந்தபோது, எதையோ முணுமுணுத்தபடி கழற்றிப் போட்ட எனது சட்டைக்கருகே நகர்ந்த மனைவி மூக்கை உறுஞ்சி மோப்பம் பிடிப்பதையும், முகத்தைச் சுழிப்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. சிகரட்புகை எனது சட்டையில் மணத்ததா அல்லது அறைக்குள் மணத்ததா என்பதில் இப்போ எனக்குள் குழப்பமாக இருந்தது.

நன்றி: கூர்கனடா

Print Friendly, PDF & Email

1 thought on “சிந்து மனவெளி

  1. மனவியலில், Paranoid Personality Disorder என்ற ஒரு வகை உண்டு. இது போல இயற்கைக்கு மாறான எந்த ஒன்றையும், ஒருவன் அல்லது ஒருத்திப் பார்த்து மனதில் வாங்கிவிட்டால், மனசு அதைப் பற்றிச் சந்தேகிக்கக் துவங்கிவிடும். அதனால்தான் வக்ரமாக எதையும் உருவகப்படுத்தக்கூடாது என்பார்கள். Oedipus Complex Electra Complex என்றெல்லாம் Psycho Analysis என்ற Sigmund Fread ன் கோட்பாடுகளில் உண்டு. அந்தக் கருத்தை வலியுறுத்தும் கதைதான் இது.
    ஆசிரியர் இது போன்ற சிறுகதைகளை தவிர்க்கலாம். மனசு வீக்’காக இருப்பவர்கள், இது கதை என்பதை அறியாமல், உண்மை என்று எண்ணி, குடும்ப உறுப்பினர்கள்மீது தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்திவிடும்.
    இது ஒரு விதமான disorder என்பதை வலியுறுத்தத்தான் இதுபோன்ற கதைகளை எழுதவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *