சித்தி தான் அம்மா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,488 
 
 

டூவீலரில் ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தான் மோகன். ஆபீஸ் புறப்பட நேரமாகி விட்டது. வேகமாக டூவீலரை ஓட்டி வந்தான்; மனம் வேறு சரியில்லை.
முன்னே போய் கொண்டிருந்த ஒரு காரின் மீது, மோத இருந்தான் மோகன். “சட்’டென்று வண்டியின் வேகத்தைக் குறைத்து, வண்டியை நிறுத்தினான்; பெரிய விபத்திலிருந்து தப்பினான். விபத்து நிகழ்ந்திருந்தால், கதி என்னவாகியிருக்கும் என எண்ணி, அவன் கை, கால் எல்லாம் நடுநடுங்கியது.
சித்தி தான் அம்மா!தன் மனைவிக்கு கணவனும், தன் பெண் குழந்தைக்கு அப்பாவும், கிராமத்திலிருக்கும் அம்மாவுக்கு பிள்ளையும், போன இடம் தெரியாமல் போயிருப்பான்.
ஆபீசுக்கு வந்து சேர்ந்தான் மோகன்; பத்து நிமிடம் லேட். நல்லவேளை, எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் மேனேஜர் வரவில்லை; ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தார்.
வாஷ்பேசினில் முகத்தை கழுவி, நான்காக மடித்திருந்த கைக்குட்டையை பிரித்து, முகத்தில் படிந்திருந்த தண்ணீரை துடைத்துக் கொண்டான். பின் பாக்கெட்டில் வைத்திருந்த சீப்பை எடுத்து, தலையை வாரி, நிகழவிருந்த பயங்கர விபத்திலிருந்து தான் மீண்ட அதிர்ச்சி முகத்தில் தெரிகிறதா என பார்த்தான்.
முகம், இயல்பான நிலைக்கு வந்திருந்தது.
சீட்டில் உட்கார்ந்தான். மேஜையில், ஏழெட்டு கோப்புகள், அவன் ஒப்புதலுக்கும், கையெழுத்துக்கும் தயாராக இருந்தன; அதில், ஒரு கோப்பை திறந்தான்.
அதில், வரிக்கு வரி, எழுத்துக்களும், எண்களும் நிறைந்திருந்தன. ஆனால், அவை ஏதும் மோகனின் கண்ணுக்குத் தெரியாமல், நித்யாவின் முகமே தெரிந்தது. அவளின் கலங்கிய கண்களும், அதில் பளபளக்கும் கண்ணீருமே, விழி நிரம்ப தெரிந்தது.
“ஏங்க… என் ஆசை நிறைவேறாதா?’ என்று, ஏக்கமும், பரிதாபமுமாக கேட்டது அவள் முகம்.
நித்யாவுக்கும், மோகனுக்கும் திருமணமாகி, இரண்டு மாதங்களே ஆகியிருந்தன; ஆனால், அவர்களுக்கு நான்கு வயதில், பிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. ஆம்… மோகனின் இரண்டாவது தாரம் நித்யா.
முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை பிரியா. ரொம்ப சுறுசுறுப்பு; புத்திசாலித்தனம்.
மோகனை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு, குழந்தை பிரியாவை கொஞ்சுவது தான், முதல் மனைவியின் பிரதான வேலை.
பிரியாவுக்கு, இரண்டரை வயதாகும் போதே, அவளை, “ப்ளே ஸ்கூல்’ ஒன்றில் சேர்த்து விட்டனர். காலையில், பள்ளியில் விட்டுச் செல்வான் மோகன்; 11:30 மணிக்கு தன் ஸ்கூட்டியில் வீட்டிற்கு அழைத்து வருவாள்.
கடைகளுக்கு அழைத்துச் சென்றால், கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம், இரண்டு கைகளிலும் வாரி எடுத்துக் கொள்வாள்.
“அது வேண்டாம்… இது வேண்டாம்…’ என்றெல்லாம் குழந்தையிடம் சொல்ல மாட்டாள். ஒரே குழந்தை, செல்லமான குழந்தை, அறிவான குழந்தை. இப்படி கண்டதை எல்லாம் வாங்கி தள்ளுவது, ஒரு நாள் அதற்கே அலுத்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், தின்பண்டங்களை வாங்குவதை பிரியா நிறுத்தவே இல்லை. எதையும் முழுதாக தின்ன மாட்டாள்; பாதி தின்று, குப்பைக் கூடையில் போட்டு விடுவாள். சாப்பிடுவதை விட, குப்பைக் கூடையில் எறிவது தான் அதிகம்.
ஒரு நாள் கோபம் வந்து, பிரியாவை, இரண்டடி அடித்து விட்டாள். அடி கொஞ்சம் பலமாக பட்டுவிட்டது. “ஓ’வென அழுதாள் பிரியா. அம்மாவிடமிருந்து தனக்கு அன்பு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்க, இப்போது அம்மா தன்னை அடிக்க ஆரம்பித்து விட்டாளே என்ற மனக்கஷ்டத்தில், ஓரிரு மணி நேரமாகியும், அழுகை நிற்கவில்லை.
அவள் அழுவதை பார்த்து, கதி கலங்கிப் போனாள் அம்மா. அழுது அழுதே, குழந்தை உயிரை விட்டு விடுவாளோ என்று பயந்தாள்.
“பாவி… உன்னை இப்படி அழற மாதிரி அடித்து விட்டேனே. எனக்கு நானே ஒரு தண்டனை கொடுத்துக்கணும்…’ என்று, புலம்பியபடி அருகிலிருந்த சுவற்றில் தன் தலையை, “ணங்… ணங்’கென்று மோதிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில், கபாலம் பிளந்து விட்டது போல, அவள் தலையிலிருந்து, ரத்தம் ஆறாக பெருகி ஓடியது.
விஷயம் தெரிந்து, ஆபீசிலிருந்து ஓடி வந்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்துப் போனான் மோகன்.
எவ்வளவோ தையல் போட்டும், ரத்தம் வருவதை டாக்டர்களால் நிறுத்த முடியவில்லை. அது போல, உடலை விட்டுப் போகத் துவங்கிய உயிரையும் பிடித்து நிறுத்தவோ, தடுத்து நிறுத்தவோ டாக்டர்களால் முடியவில்லை.
அம்மா இல்லாத குழந்தையானாள் பிரியா. அவளை யார் பார்த்துக் கொள்வது?
மோகனின் அம்மா, பெயருக்கு தான் உலகில் இருந்தாளே தவிர, குழந்தை பிரியாவை ஒரு நாள் பார்த்துக் கொள்ளக் கூட உடம்பில் தெம்பும், பலமுமின்றி இருந்தாள். இந்நிலையில், நித்யா, மோகனின் மனைவியானாள்.
ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பது தெரிந்தே அவனை கல்யாணம் செய்து கொண்டதால், இந்த கல்யாணம், குழந்தையை கவனித்து, வளர்க்கத் தான் என்பதை நன்கு புரிந்து கொண்ட நித்யா, தன் வயிற்றில் பிறந்த குழந்தையாகவே பிரியாவை எண்ணி, அன்பு செலுத்தினாள்.
குழந்தையிடம் அவள் எவ்வளவோ நெருக்கமாகவும், பிரியமாகவும், அன்பாகவும் நடந்து கொண்டாலும், நித்யாவை, “அம்மா…’ என்று பிரியா கூப்பிடவேயில்லை; “சித்தி…’ என்று தான் அழைத்தாள்.
“அம்மான்னு கூப்பிடணும்…’ என்றான் மோகன் குழந்தையிடம்.
“மாட்டேன் போ… சித்தின்னு தான் கூப்பிடுவேன்…’ என்றாள் பிரியா.
நாளடைவில் தான் காட்டும் அன்பிலும், அரவணைப்பிலும், பிரியா தன்னை, “அம்மா…’ என்று கூப்பிட ஆரம்பித்து விடுவாள் என எதிர்பார்த்தாள் நித்யா; அது நடக்கவில்லை.
குழந்தையை அதட்டி, மிரட்டி, “அம்மான்னு கூப்பிடு…’ என்றான் மோகன்.
கோபத்தில் குழந்தையை அடிக்க, கையைக் கூட ஓங்கிவிட்டான் மோகன்; கூப்பிடவில்லை குழந்தை.
நித்யாவுக்கோ, பிரியா தன்னை அம்மா என்று கூப்பிடவில்லையே என்ற ஏக்கத்தில், மன வியாதி வந்துவிடும் போலிருந்தது. தன் ஏக்கத்தை மோகனிடம் சொல்லி, அழுது புலம்புவாள்.
“பொறு நித்யா… குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடற காலம் வரும்!’ என்பான் மோகன்.
கோப்பில் கவனம் செல்லவில்லை மோகனுக்கு. காலையிலிருந்தே நித்யா சோகத்துடனும், ஏக்கத்துடனும் இருப்பதை கவனித்திருந்தான் மோகன். அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி இருப்பதும், அவள் பார்வை ஏக்கமுடன், பிரியாவின் மீதே படிவதையும் அவன் அறிந்திருந்தான்.
அவன் மொபைல் போன் ஒலித்தது.
அதை, “ஆன்’ செய்தபடி, தன் இருக்கையை விட்டு எழுந்த மோகன், ஸ்டோர் ரூம் நோக்கிச் சென்றான்.
“”ஹலோ!” என்ற அவன், போனில் தெரியும் நம்பரைப் பார்த்தான். நித்யாவின் மொபைல் போன் நம்பர்.
“”என்ன நித்யா?” என்றான் மோகன்.
“”உடனே வீட்டுக்கு வாங்களேன்!” என்றாள் நித்யா; குரலில் சந்தோஷம் தெரிந்தது.
“”என்ன நித்யா?”
“”என் காதையே நம்ப முடியலீங்க!”
“”விஷயத்தை முதல்ல சொல்!”
“”நம்ம பிரியா இல்ல, பிரியா!”
“”ஆமாம்… அவளுக்கென்ன?”
“”என்னை அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க!”
“”பிரியாவா?”
“”ஆமாம்!”
“”உன்னை அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாளா?”
“”ஆமாங்க… “அம்மா… என்னை குளிப்பாட்டு, அம்மா எனக்கு டிரஸ் போடு, அம்மா எனக்கு சாதம் போடு, அம்மா என் கூட விளையாடு, அம்மா, “டிவி’யிலே கார்ட்டூன் சேனலை வை…’ன்னு, வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மான்னு சொல்லிட்டே இருக்காங்க. சந்தோஷம் தாள முடியலேங்க!” என்றாள் நித்யா பரவசமாக.
“”நிஜமாகவா நித்யா?” என்று கேட்டான் மோகன்; அவனாலும் இதை நம்ப முடியவில்லை. பிரியாவிடம் எப்படி இந்த மாற்றம் உண்டானது?
வீட்டிற்கு ஓடினான் மோகன்.
வாசலிலேயே, குழந்தை பிரியாவை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தாள் நித்யா. அவள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம். அவள் இடது தோளில் சாய்ந்து, நித்யாவை கட்டிக் கொண்டிருந்தாள் பிரியா.
அருகில் வந்ததும், குழந்தை பிரியாவிடம் நித்யாவைக் காட்டி, “”இது யாரு?” என்று கேட்டான் மோகன்.
“”அம்மா!” என்றாள் பிரியா.
“”யாரோட அம்மா?”
“”என்னோட அம்மா?”
“”உனக்கு சாதம் போட்டது யாரு?”
“”இந்த அம்மா!”
“”குளிப்பாட்டினது, டிரஸ் போட்டதெல்லாம்?”
“”இந்த அம்மா!”
“”இந்த அம்மா யாரோட அம்மா?”
“”என்னோட அம்மா!”.
“”சித்தி இல்லையா பிரியா?”
“”சித்தி இல்ல… அம்மா, என் அம்மா!”
“”எனக்கு சந்தோஷமா இருக்குங்க. ஆனால், எப்படி இது நடந்ததுன்னு மட்டும் புரியலைங்க!” என்றாள் நித்யா, குழந்தையை கட்டியணைத்தபடி.
“”நான் ஆபீஸ் போயிட்டு சீக்கிரமா வர்றேன் நித்யா. நாமெல்லாம் பீச்சுக்கு போகலாம்!” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான் மோகன்.
பத்து வீடு தாண்டியிருக்க மாட்டான்.
“”மோகன் தம்பி!” என்று, தன்னை யாரோ கூப்பிடுவது கேட்டு, திரும்பிப் பார்த்தான்; பர்வத பாட்டி!
“”தம்பி… பிரியா, நித்யாவை, “அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடிச்சா?” என்று கேட்டாள் அவள்.
“”ஆமாம் பாட்டி… அது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டான் மோகன்.
“”நான் தான் குழந்தையை அப்படி கூப்பிட வைச்சேன்!”
“”நீயா?”
“”ஆமாம் தம்பி… பிரியாவை பெத்த அம்மா இல்ல நித்யா. தனக்கு ஒரு குழந்தை பொறக்கற வரை வேணும்னா, அவள் பிரியாகிட்டே பாசம் காட்டலாம், பிரியம், அன்பு காட்டலாம். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துட்டா, அப்புறம் எல்லாம் தலைகீழா மாறிவிடும் இல்ல. அதனால, இப்பவே நீ உன் சித்தியை, அம்மான்னு கூப்பிட ஆரம்பி. அப்ப தான், உன் சித்திக்கு, உன்கிட்டே பாசம் உண்டாகும். உன்னையும், அவளையும் அது பிரிக்காது.
“”உன் சித்திக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், இப்ப உண்டாகற பாசம், உன் மேலே குறையாதுன்னு, குழந்தை பிரியாக்கிட்ட, அவளை பார்க்கிற போதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன். அவதான் புத்திசாலி குழந்தையாச்சே. நான் சொன்னதை, “கப்’புன்னு பிடிச்சுக்கிட்டா. நித்யாவை அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா,” என்றாள் பர்வதம் பாட்டி.
“”உங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி!” என்று சொல்லி, ஆபீசுக்கு புறப்பட்ட மோகன்…
“பாட்டி… நித்யாவுக்கு தாயாகும் பாக்கியம் கிடையாது; அவள், பெரிய மனுஷியாகவே இல்லை. ஆனா, ஒரு ஆணுக்கு மனைவியாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் தானிருக்க விரும்பினாள். நான் மனைவியை இழந்து, ஒரு குழந்தையோட இருக்கிறது தெரிஞ்சதும், அவள் என்னை கட்டிக்க சம்மதிச்சா. தனக்கு குழந்தையே பிறக்காது என்பது தெரிஞ்சதால, பிரியாக்கிட்டே ரொம்பவும் அன்பும், பாசமும் காட்டறா. குழந்தை பிரியா, அவளை அம்மான்னு கூப்பிடாததால, அவளுடைய ஆசை, நிராசையாயிடுமோன்னு பயந்துகிட்டிருந்தேன். அது, குழந்தை மேல வெறுப்பாக கூட மாறலாம்’ன்னு பயந்தேன். ஆனால், நீங்க ஒரு நல்ல முயற்சி எடுத்து, நித்யாவை, “அம்மா…’ன்னு பிரியாவை கூப்பிட வைச்சுட்டீங்க!’ என்று, தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

– ஜூலை 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *