என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை.
என் பதினெட்டாவது வயதில் கல்லூரியில் சேர்ந்து ஓரிரு மாதங்களே கடந்திருந்த ஒரு சாயங்காலத்தில் வழக்கம் போல என்னை அடிப்பதற்கு அப்பா கை தூக்கியபோது, தடுத்து நிறுத்தி அவர் கையைப் பிடித்து முறுக்கி, அவர் அலறலில் தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்ததும், பலபேர் என் திமிறலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதும், அத்தனை ஆண்டுகளாய் அவரிடமிருந்து கேட்டு, கேட்டு ஊறிப்போயிருந்த மொத்த கெட்ட வார்த்தைகளையும் அவருக்கெதிராய் தெருவில் நின்று நான் பேசியதும்தான் என் மீதான அப்பாவின் இறுதித் தாக்குதல்.
வீட்டுக்குள் விழும் அடிகளைப் பொறுக்க முடியாமல் தெருவுக்கு ஓடியதும் எப்போது என நினைவுபடுத்த முடியவில்லை. பத்துக்குப் பத்து அறையில் விழும் அடிகள் அபாயகரமானவை. கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்து என் மீது வலுவாகப் பிரயோகிப்பதைப் பொறுக்க முடியாமல்தான் வாசல் தாண்டி தெருவுக்கு ஓடிவந்தது. என்னைத் துரத்திக்கொண்டு ஓடிவரும் அப்பாவிடமிருந்து தப்பிப்பது என் இளவயது கால்களுக்குச் சுலபமாக்கப் பட்டிருந்தது. என் மறைவின் உறுதிப்படுத்தலோடு, முனகிக் கொண்டே வீட்டுக்குத் திரும்புவார்.
சரியாக வளர்க்கவில்லையென கெட்ட வார்த்தைகள் அம்மா பக்கம் திரும்பும். அம்மாவின் மறுபேச்சுக்கு அடியோ, அல்லது கால் மிதிகளோ கிடைப்பதும் வழக்கமாகி விட்டிருந்தது எங்கள் வீட்டில்.
அப்பாவிடம் தப்பித்து ஓடி மறைந்து விட்டபின் மீண்டும் வீடு திரும்பலுக்காக நான் பட்ட பிரயத்தனங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதிரியான அவஸ்தைகளும், அவமானங்களும். என் +1, +2 காலத்தில் கவிதைத் தனத்தோடு காதல் கடிதங்களை எழுதி கொடுத்து, வாங்கிக் கொண்டிருந்தபோதும் இது தொடர்ந்தது.
அடிபட்ட உடம்போடு நண்பர்கள் வீட்டுக்குப் போவதும், அவர்களின் அப்பா அம்மாவின் அறிவுரைகளால் உடம்பு இன்னும் வீங்குவதும் தாங்கமாட்டாமல் இனி நண்பர்களின் வீடு நம் பதுங்குகுழி அல்ல என முடிவு செய்தபிறகு, கட்டி முடிக்கப்படாத வீடு, வாழ்ந்து இற்று விழுந்த, வாழ்வின் அடையாளமான குட்டிச்சுவர்களின் கொஞ்சம் சுமாரான பகுதிகள், என் வீட்டுக்குப் பின்னாலேயே அப்பாவுக்குத் தெரியாத மறைவுப்பிரதேசங்கள். யாரோ ஒரு பெயிண்டரோடு ஓடிப்போனபின் எப்போதும் பூட்டிக் கிடக்கும் ஜூலி அக்காவின் வீடு… இது எல்லாமும் அப்பாவால் சுலபமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவரால் யூகிக்க முடியாத ஒரு மறைவிடத்திற்கு மனதால் திட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தத் தாக்குதலும், துரத்தலும் நிகழ்ந்தது.
தெருவிலேயே விழுந்த இரண்டு மூன்று அடிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து பிடிநழுவி நாலுகால் பாய்ச்சலில் அடுத்த தெருவுக்குள் நுழைந்து தார் ரோட்டைக் கடந்து, பூட்டியிருந்த சர்ச் கேட்டின் மீதேறி, கீழே குதித்து வெளிச்சத்தில் பார்த்த போதுதான் லேசான ரத்தக்கசிவின் பிசுபிசுப்பை உணர முடிந்தது. அதுவரை உள்ளடங்கியிருந்த வலியும் மெல்ல மெல்ல தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. சர்ச் படிக்கட்டில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் யோசித்தபோது, பிரிக்க முடியாத வலைப்பின்னல்கள் போல என் வாலிபப் பருவம் என் அப்பாவின் கைகளில் மாட்டிக் கொண்டு விட்டதே என்ற துக்கம் என்னைச் சூழத் தொடங்கியது.
ஆனால் பல நேரங்களில் அவர் என் மீது செலுத்தின பேரன்பின் நினைவுகள் வெடித்த இலவம்பஞ்சுபோல என் முன்னே காற்றில் பறந்துகொண்டிருந்தன. நான் மூணாம் வகுப்பு முடிக்கும்வரை தன் தோளில் போட்டுக் கொண்டு தெருவில் நடந்து நடந்து எனக்குக் கதைகள் சொன்ன மனதும் அப்பாவுடையதுதான் என்பதும், எனக்கு இரண்டு காலிலும் கடுவான் வந்து கால்களை அசைக்க முடியாமல் பாயில் படுக்க வைத்திருந்தபோது, குதிரைச்சாணத்தைப் பையில் கொண்டு வந்து சூடாக என் கால்களின் மீது தடவித்தடவி விட்டதும், என்னை ஜட்காவண்டி பிடித்து சந்தப்பேட்டை மிஷன் ஆஸ்பத்திரிக்கு ஒருமாதமாய்க் கூட்டிக்கொண்டு அலைந்ததும் இதே அப்பாதான். வன்முறைக்கும் பேரன்புக்கும் இடையில் நின்று கொண்டிருக்கிற ஒரு திடகாத்திரமான ஹெட்மாஸ்டர் தான் அவர். இந்த ஜென்மத்துக்கும் அடி வாங்காமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும் என, சர்ச் லைட் வெளிச்சத்திலிருந்து விலகிப் போய் வேப்ப மரத்துக்குக் கீழே பரவியிருந்த இரவின் அடர்த்தியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்த வாக்கில் அப்படியே தூங்கிவிட்டிருந்தேன்.
அந்த அடர்ந்த இருட்டைச் சுக்கு நூறாக்கிய தேவாலய மணி ஓசையின் சப்தம், குளிரில் முடங்கிக் கிடந்த என் உடலில் மின்சார ஒயர்கள் பாய்ச்சப்பட்டது போலப் பிடித்து எழுப்பியது. பயமும், உடலில் ஒட்டியிருந்த மீதி வலியும், நான் எங்கிருக்கிறேன், நேற்றிரவு என்ன நடந்தது, இப்போது என்ன ஆனது என்பதையெல்லாம் உடலில் பரவும் காய்ச்சல்போல உணர்த்தியது.
எழுந்து சப்ளாங்கோல் போட்டு உட்கார்ந்து கொண்டேன். சப்தம் என்னிடமிருந்து அறவே அகற்றப்பட்ட ஒன்று போல விலகிவிட்டிருந்தது. கூர்மையாக்கப்பட்டு, சகல கவனத்தோடும் உற்று நோக்கப்படும் ஏதாவதொரு கண்களுக்குத் தவிர்த்து என் இருப்பை அறிய சாத்தியமேயில்லை.
மணி ஒலித்துக் கொண்டேயிருந்தது. விட்டு விட்டு இரட்டை இரட்டையாக ஒலித்த அதன் ஓசை யாருடைய மரணத்தையோ சபைக்குச் சொல்லிக்கொண்டிருந்தது. இப்படியே நான் இந்த வேப்பமரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டாலும் இந்த மணி இப்படித்தான் ஒலிக்குமோ என்ற யோசனை வந்துபோனது. என் மீது ஒட்டிக்கிடக்கும் இந்தத் தனிமையை நான் துடைக்க முயன்ற நேரம், தாஸ் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு சர்ச் படிக்கட்டில் உட்கார்ந்தான். அந்த இரவைப் பிளப்பதற்கு அவனுக்கு ஒரு பீடி நுனியின் கங்கு போதுமானதாய் இருந்தது.
ஒரு நொடியில், அந்தப்படிக்கட்டின் மத்தியில் உட்கார்ந்து அவனை நெருங்கியிருந்தேன். என்னை பார்த்த நிமிடம் அவன் அதிர்ச்சிக்குள்ளாகி மீளுவது எனக்கு உறைத்தது.
இந்த அகாலம், இந்த இடம், தேவாலயத்திலிருந்து ஒரு சின்ன கேட்டை திறந்தால் விரியும் பழைய கல்லறை. அதனுள்ளிருந்து வந்த என் வருகை அவனை நிலைகுலைய வைத்து, வார்த்தைகள் வெளிவராமல் மௌனத்தால் உறைந்திருந்தான். நானேதான் பேச ஆரம்பித்தேன்.
“ஒண்ணுமில்லே, வழக்கம் போலதான் … ராத்திரி அப்பா செமத்தியா அடிச்சிட்டார்”
“வயசாச்சேன்னு அந்தாளுக்கும் அறிவில்லை, வயசு ஏறுதேன்னு உனக்கும் புத்தியில்லை”
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன் என் அப்பாவை அறிவில்லாதவன் என்று சொன்னது அவன் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தக் கோயில்பிள்ளை வேலையே அப்பா அவனுக்குப் போட்ட பிச்சை என்பது எனக்குத் தெரியும். பேச்சை மாற்ற,
“யாரு செத்துட்டாங்க?”என்றேன்
“தேவஇரக்கம் அய்யாவோட அம்மா”
இன்னொரு பதட்டத்துக்கு நகராமல் மனம் சமாதானம் அடைந்தது.
“நான் வீட்டுக்கு போறேண்ணா”
என்று அங்கிருக்கப் பிடிக்காமல் அவன் பேச ஆரம்பிக்கும்முன் அங்கிருந்து அகன்றேன். எகிறி குதிக்க அவசியமின்றி சர்ச் கேட் திறந்து கிடந்தது.
பனியில் லேசாக நனைந்திருந்த தார் ரோட்டில் வெறும் கால்களோடு நடப்பது கொஞ்சம் சுகமானதாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருட்டு அடர்ந்திருந்தது. தெரு ட்யூப் லைட்டுகளில் எங்கோ ஒன்றுக்கு மட்டும் தான் உயிர் இருந்தது. அந்த இருட்டு இந்த என் மனநிலைக்கு ரொம்பவும் அவசியப்பட்டது. திசை எதுவாகிலும் இலக்கில்லாமலே நடக்கவே விரும்பினேன். எதுவுமற்றவனாகி எல்லாவற்றின் மீதும் வெறுப்பு மேலோங்கியது. ஆனாலும், வேட்டவலம் சாலை சந்திப்பை நோக்கியே நடக்க ஆரம்பித்தேன். எனக்கு நானே துணையில்லாத தருணமது.
எல்லா இரவுகளுமே இப்படியான அமைதியில்தான் மூழ்கியிருக்குமோ என நினைத்தேன். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே வாசலில் படுத்து கதை கேட்ட இரவுகள் ஞாபகத்துக்கு வந்துபோனது.
அஞ்சு நிமிஷ இலக்கற்ற என் நடை, அந்தப் புளியமர இருட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய ஒரு சைக்கிளால் நின்றது. அந்த ஆள் தன் முகம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், என்னைத் திரும்பி பார்க்காமல் வேகமாக மிதித்துக் கடந்தான்.
பருத்தகன்ற புளிய மரத்தின் பின்னாலிருந்து ஒரு குச்சியை சுற்றியடி அவள் வெளிப்பட்டாள்.
விஜயா.
அவள் உண்மையான பெயரே கூட அதுவாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயரில்தான் சமீப நாட்களில் எங்கள் பகுதியில் அவள் இரகசியமாக அறியப்பட்டாள். வசீகரமான உடல்வாகு அவளுக்கு வாய்த்திருந்தது. கண்கள் மட்டும்தான் எந்நேரமும் வெளியில் வந்து விழுந்துவிடலாம் என பயமுறுத்திக் கொண்டிருந்தது.
தன் குடிசை வீட்டில் மூன்றாம்தரமான பெண்களை வைத்துத் தொழில் நடத்திக்கொண்டிருந்த டில்லி அம்மாவுக்கு விஜயாவின் வருகை லாட்டரிதான் என்று தெருவில் பேசிக்கொள்வார்கள். ஆறேழு மாதங்களாக எங்கள் பகுதியில் விஜயாவின் நடமாட்டம் வயது பேதமின்றி ஆண்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. பொழுது மங்கும் சில சமயங்களில் யாராவது ஒரு சின்னப்பையனை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்துக்கொண்டுச் சத்தமாகப் பாடிக்கொண்டே அவள் சைக்கிள் ஓட்டுவதைத் திருட்டுத்தனமாகவேனும் பார்க்கும் கண்களை நானறிவேன். மடிப்பு மடிப்பான அவள் இடுப்புச்சதை ஆண்களின் ஏக்கப் பெருமூச்சுகளாலும், நிறைவேறாத கனவுகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அடிக்கடி வந்த என் தொடர் கனவில், விஜயா சைக்கிள் ஓட்டும் காட்சியும், கேரியரில் நான் உட்கார்ந்திருப்பதும், அவள் பழைய காதல் பாடல்களை பாடிக்கொண்டே யாருமற்ற ஒற்றையடிப் பாதையைக் கடப்பதும், சுகமான அவஸ்தையாக வளர்ந்து கொண்டிருந்தது.
“இந்த நேரத்துல எங்கேருந்து வர்ற …” என்ற அவள் கேள்விக்கு நான் முகம் திருப்பிக் கொண்டேன்.
“என் மேல கோவமா?”
நான் மௌனமாகத்தான் நின்றேன்.
“இந்த வயசுல நீ கெட்டுப்போய்டுவேன்னுதான் அன்னிக்கி அப்படிச் சொன்னேன்.”
நான் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தேன். புளியமர இருட்டு என் மௌனத்தை அடைகாத்தது.
கார்த்திகை திருவிழாக் காலங்களில் ஊரின் முகமே மாறும். புதுப்புது மனிதர்கள், புதுப்புது விளையாட்டுகள், ரங்கராட்டினம், வித்தை காட்டுபவர்கள், மூணுசீட்டாடுபவர்கள், சிங்கம், புலி, கரடி படம் வரைந்து காசு வைக்கச் சொல்லி ஏமாற்றுபவர்கள் என ஊர் பலவித மனிதர்கள், பலவித வேடிக்கைகளால் நிறையும்.
டியூஷன் முடிந்து பிரபாகரனோடு வந்து கொண்டிருந்த ஓர் முன்னிருட்டில் முனிசிபல் ஸ்கூலுக்கருகில் சுற்றி நின்றிருந்த கூட்டத்திற்கு முன்னால் ஒருவன் தன் மொழியால் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். சாணி மெழுகப்பட்ட மூங்கில் கூடை ஓர் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. தன் வார்த்தைகளால் அவன் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தான். அவன் நெற்றியில் தீட்டப்பட்டிருந்த கறுப்பு மையும், அதன் மீதே அப்பப்பட்டிருந்த குங்குமமும், துணியால் தைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மைக்கு அவன் செய்திருந்த அச்சமூட்டும் அலங்காரமும் ஒருவரையும் நகரவிடாமல் செய்து விட்டிருந்தது. கூட்டத்திற்குள் நுழைந்து திரும்பிப் பார்த்தேன். பிரபா விடுபட்டிருந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்தக் கூட்டத்தின் அச்சம் எனக்குள்ளும் அப்பிக் கொண்டிருந்தபோது, முழுக்க வண்ண வண்ண வளையல்கள் அணிந்த ஒரு கையால் என் கை பிடிபடுவதை உணர்ந்தேன். முரட்டுத்தனமான பிடி அது.
“தள்ளி நில்லுடா”
பதட்டமாகி விலகினேன். அவள் பார்வை கீழிறங்கி என் கால் சட்டையில் நின்றது.
“படிக்கிற வயசுல …” என முனகிக் கொண்டே அவள் அங்கிருந்து நகர்ந்ததும், என் மீது விழுந்த அற்பப் பார்வைகளைப் பிடுங்கிக் போட்டுக் கொண்டே மிகுந்த அவமானமுற்று நானகன்றதும் தான் அவளுடைய இன்றைய விசாரிப்பு.
“சொல்லு என் மேல கோபம்தானே …”
இப்போது என் கன்னத்தைத் தொட்டு முகத்தை நிமிர்த்திக் கேட்டாள்..
என்னை மிக நெருங்கியிருந்த அவள் மீதிருந்து பரவிய மணம் நானறியாதது. மயக்கத்தைக் கோருவது.
“இல்லை …. ஆமாம் …”
பளீரெனச் சிரித்தாள். மிருதுவான விரல்கள் என் கன்னத்திலிருந்து விடுபடாமலே “டீ குடிக்க வர்றீயா?” என்றாள்.
மறுத்துத் தலையாட்டினேன்.
‘ஆமாம் எங்கூட வரமுடியாதுதான். நீ முன்னாலே போ, நான் கொஞ்ச நேரம் சென்னு வர்றேன்’ என்ற வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு வேட்டவலம் சாலைச் சந்திப்பை நோக்கி நடந்தேன்.
ஏ.பி.கே. ரைஸ்மில்லைத் தாண்டும்போது இரண்டாம் ஆட்டம் முடிந்து யாரோ இரண்டுபேர் சத்தமாகப் பேசிக் கொண்டே என்னைக் கவனிக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இந்த ரைஸ்மில்லிலிருந்து ஆரம்பித்து பெட்ரோல் பங்க்வரை ரோட்டின் மேற்கே அழகழகான குடிசைகள் நிறைந்திருந்தபோது இத்தனிமையின் அவஸ்தை இல்லை. குளிர்காலங்களில் கூட போர்வைப் போர்த்திய நெருங்கிய உடல்களின் தெருவோர உறக்கம் காணக்கிடைக்கும். ஸ்கூலுக்கு சைக்கிளில் போகும்போது தென்னந்தட்டி மறைப்பில் குளித்து, மார்புவரை உயர்த்திக் கட்டிய பாவாடையும், தோள்மீது கிடக்கும் புடவையுமாக அவசர கதியில் மறையும் அன்னக்கிளி அக்காவின் தோற்றத்திற்காக தவிக்கும் மனசு பல நேரம் பீடிப்புகை பெருகும் உதட்டோடு வெளிப்படும் அவள் புருஷனின் உருவம் கண்டடங்கும்.
நெடுஞ்சாலைத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஜே.சி.பி. மொத்த வீடுகளையும் சில மணி நேரங்களில் துடைத்து, மனிதர்களை திசைகளின் இடுக்குகளில் தூக்கி எறிந்து, சாலையின் இரு பக்கங்களையும் துடைத்தடங்கிய போது நிரந்தர இருட்டும், பயமும் குடிசைகளுக்குப் பதில் குடியேறிருந்தது.
டீக்கடைக்குப் போகலாமா? இப்படியே வீட்டிற்கு ஓடிவிடலாமா? என்கிற இரண்டு சிந்தனைகளுக்கிடையில் நடந்து கொண்டிருந்தேன்.
அவளோடு பேசினதும், அவள் என்னைத் தொட்டதும், அது விவரிக்க முடியாத அவஸ்தையைக் கொடுத்ததும், பிரக்ஞை திரும்பி, சகஜ நிலையில் அதை யாராவது பார்த்திருந்தால் தன் குடும்பத்திற்கு எத்தனை பெரிய அவமானமென்றும் நினைத்தேன். ஆனால் சகஜ நிலைக்குத் திரும்பாமல் இருப்பதையே மனம் விரும்பியது. என்னென்னமோ யோசனைகளின் மீதான நடை டீக்கடைக்கு கொண்டு போய் நிறுத்தியது.
விஜயா எனக்கு முன்னமே அங்கு வந்துவிட்டிருந்தாள். அந்தக் கடைக்கே அவள்தான் எஜமானி போல அங்கிருந்தவர்களிடம் சத்தமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு அந்த பின்னிருட்டைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். டியூப் லைட் வெளிச்சத்தில் அவளை உற்றுப்பார்த்தேன். அவள் பிருஷ்டம்வரை தொங்கிய மல்லிகைச் சரம், அப்போதுதான் வைத்த மாதிரி கலையாமல் இருந்தது. நான் பார்ப்பதை யாரும் பார்க்கிறார்களோ என்ற பதட்டமே அவளுக்கு என்னைக் காட்டிக் கொடுத்தது. இந்த முறை தனக்குள் ஆழமாய்ச் சிரித்துக் கொண்டு, எனக்கு ஒரு டீ ஆர்டர் தந்தாள். அவளைத் தொட முயன்று அவள் பார்வையின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் அவளைத் திட்டிக் கொண்டே நகர்ந்த டிரைவர் ஒருவன் என்னையும் முறைத்தான்.
டீக்கடைக்காரன் என்னைச் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே டீ கொடுத்தான். என் அப்பாவிடம் இந்த இரவைப் பற்றி இவன் சொல்லக்கூடுமோ என்ற பயம் எனக்குத் தொத்திக் கொண்டது.
“எனக்கு வேண்டாண்ணே” என்று மறுத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். யாருமே இல்லாத அந்தத் தார்ச்சாலையில் கண்ணன் ரைஸ்மில்லைத் தாண்டுவதற்குள் அவள் இவனை சமீபித்து “ஸ்கூல் கிரவுண்டுக்கு வரமுடியுமா, கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“உங்கூட நான் எதுக்கு வரணும்”
சொல்லும் போதே அவளோடு போனால் என்ன? என நினைத்தேன்.
“புடிக்கலைன்னா வேணாம்” என்று நின்று கொண்டாள்.
இப்போது எனக்கேற்பட்டிருந்த தைரியம் என்னை என் வீட்டிற்கனுப்பியது. யாருமற்ற இது போன்ற இரவுகள் என்னை எங்கெல்லாமோ கொண்டு போய்விடுமோ என்றும், கொண்டு போக வேண்டும் என்றும் நினைத்தேன்.
உறங்கும் தெரு மீது இருட்டு ஒரு போர்வை போல மூடியிருந்தது.
என் வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தது என்னை பதட்டப்படுத்தியது. மெல்ல உள்நுழைந்து எட்டிப் பார்த்தேன். பாட்டி மட்டும் கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு, சின்ன உரல் உலக்கையால் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
இரகசியமான குரலில் “ஆயா அப்பாவும், அம்மாவும் எங்க?” என்றேன்.
அதிக பதட்டப்படாமல், “ஏண்டா எங்க போயிருந்த, அந்த மனுசன் இந்த பொம்பளைய கூட்டிக்கிட்டு ராத்திரியெல்லாம் உன்னை தேடிக்கிணுகீறான்” என்றாள்.
‘சாப்டயா’ என்ற தளர்ந்த குரல் கவனப்பாரின்றி கரைந்தது.
சத்தம் போடாமல் கட்டிலுக்குக் கீழே ஒரு பாயைப் போட்டு படுத்துக் கொண்டேன். விஜயாவின் உலகம் குறித்துப் பொறாமையாக இருந்தது. அவள் சைக்கிள் ஓட்டுவதும், நீளும் இரவுகளின் வெளிகளில் சுத்துவதும், டீக்குடிப்பதும், யாரோடு வேண்டுமானாலும் ஸ்நேகித்திருப்பதும் எத்தனை சுதந்திரமானவள் என்ற நினைவின் நீடிப்பினூடே ..
தெருவில் துரத்தி, துரத்தி அடிக்கிற அப்பா அவளுக்கு வாய்க்காமல் போனது எவ்வளவு அதிர்ஷ்டவசமானது என்பதோடு கூடவே …
அவள் திரும்பிப் போக, வீட்டில் இது மாதிரி பின்னரவில் விளக்கெரியாமல் இழுத்து மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் குறட்டை விட்டு நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த ஓரு கணவனின் முகம், அந்தப் பின்னரவில் கெட்ட வார்த்தைகள் சொல்லி என்னைத் திட்டிக் கொண்டே உள்ளே நுழைந்த அப்பாவின் குரலில் சிதைந்தது.
– வெளியான தேதி: 22 அக்டோபர் 2006
பவா செல்லத்துரையின் சிதைவுகள் என்ற கதையை படித்தேன். வழக்கம் போல அவர் ஒரு கதைசொல்லி. அவரது உரையாடலை யூடியூபில் நிறைய பார்த்திருக்கிறேன். அவர் கதை சொல்லும் பாங்கும் நேரடியாகப் பேசுவது போலவே இருந்தது. ஒரு விலைமாதுவிடம் சின்னப்பையன் மாட்டிக் கொண்டபோது பதின்பருவத்தில் வரக்கூடிய அந்த ம்இயற்கையானது. ஒரு மோசமான அப்பாவிடம் நிறைய கதைகள் கேட்டு உள்ளார். Vilaimaathuvin நினைவில் இருக்கும்போதே அப்பாவின் அதட்டல் கனவை சிதைதுவிடுகிறது. கதை அருமை.