சிக்கந்தர் அப்பச்சி வீட்டு முற்றத்தில் இருக்கும் வெள்ளைப் புறாக்கள், என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. அப்பச்சியும் அப்பச்சியின் அம்மாவும், புறாக்களுக்கு அரிசிமணிகளைத் தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி புறாக்கள் பறப்பதும், தரை இறங்கி எங்களின் கால்கள் இடையே நடப்பதுமாக இருந்தன. குட்டியான நீலக்கண்கள் கொண்ட புறா ஒன்று, என் கால்களைக் கொத்தியது. வலி தாங்க முடியாமல் நான் கத்துகிறேன். பயத்தில் கண்விழித்துப் பார்த்தேன்… கனவு.
பேருந்து, செங்கல்பட்டைக் கடந்துவிட்டது. எனக்கு அருகில் தூங்கிக்கொண்டு இருந்தவரைப் பார்த்தேன். அவர் தன் கையில் செல்போனை இறுக்கிப் பிடித்திருந்தார். சென்னையில் இருந்து பகல் வேளையில் ஊருக்கு பஸ் ஏறி வருவது இதுதான் முதல் முறை. சிக்கந்தர் அப்பச்சி இறந்துபோனதை நைனா எனக்குத் தகவல் சொன்னதும், செய்துகொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு, கான்டிராக்ட்காரரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.
சிக்கந்தர் அப்பச்சியும் அப்பாவும் சிறுவயதில் இருந்தே தோஸ்த். அப்பா போனில் தாக்கல் சொல்லும்போது அழுதுவிட்டார். பள்ளியில் அவர்கள் படிக்கிற காலத்தில் கபாடி விளையாடுவார்கள். ஐந்தாம் வகுப்பு படிப்புக்குப் பிறகு, அவர்களுக்கு ரேஷன் கடையில் வரிசையில் நின்று அரிசி வாங்குவதற்கு பொழுது சரியாக இருந்தது. பெரிய பள்ளிக்கு நேரம் தவறி வந்ததால், பள்ளிக்கு வர வேண்டாம் என பெரிய வாத்தியார் அனுப்பிவைத்துவிட்டார். அதற்குப் பிறகு அவர்கள் படிக்கப் போகவில்லை. அப்பா, தச்சு வேலைக்குப் போய்விட்டார். அப்பச்சி, மாந்தோட்டத்துக்கு உர மருந்து அடிப்பதற்கும், வண்டிமாட்டை ஓட்டிக்கொண்டு தோப்புக்குப் போகவும் கிளம்பிவிட்டார்.
சுமையா அக்கா, சரோஜா அக்கா, பாத்திமா, மீனா, பானு, முத்து… ஆகியோருடன் நானும் பள்ளிக்குப் போகும்போது, சுமையா அக்கா இந்த விஷயத்தைச் சொல்வாள். சிக்கந்தர் அப்பச்சியும் முத்தெலிப் ராவுத்தரும் ஒரே வீட்டில் அண்ணன்-தம்பிகளாக சந்தோஷமாக இருந்தனர். திருமணம் முடிந்ததும் சண்டையிட்டு பாகவஸ்திரம் செய்துகொண்டு சொத்தை விற்று, பள்ளிவாசல் தெருவுக்கு ஒருத்தரும், கீழத்தெருவுக்கு ஒருத்தரும் குடியேறிவிட்டார்கள். சிக்கந்தர் அப்பச்சியின் வீட்டுக்குப் பக்கத்தில்தான், ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற பாதை இருக்கிறது. வீட்டில் இருந்து ஸ்டேஷனுக்குப் போகும் பாதை நெடுக தேன் பூக்கள் பூத்திருக்கும். ரயில் வரும்போதும் ரயில் புறப்பட்டுப் போகும்போதும், அப்பச்சியின் வீடு கிடுகிடுவென ஆட்டம் காணும். கொல்லைக் கதவைத் திறந்துவைத்தால், ரயில் வருவதைப் பார்க்கலாம்.
ரயில் வரும்போது, அப்பச்சியின் வீட்டுக்குள் இருக்கும் பெத்தாவுக்கு பற்கள் ஆடும். காய்ந்து சுருங்கிய பழம் போன்ற அவளது முகத்தை, வெள்ளைச்சேலை தலைமுக்காட்டில் மறைத்து வைத்திருப்பாள். இரண்டு கன்னங்களிலும் வரிவரியான கோடுகள், பழுத்துச் சுருங்கிய மாம்பழத்தை ஞாபகப்படுத்தும். அவள்தான் எங்களுக்குக் கதைகள் சொல்லிப் பயமுறுத்துபவள். ராத்திரியில் அவள் பிசாசுக் கதைகள் சொல்வாள். பெத்தா, ‘மீன் எலும்பை ராத்திரியில் யாருக்கும் தெரியாம எறும்பு எங்கே இழுத்துக்கிட்டுப் போகுதுனு தெரியுமா?’ என எங்களிடம் கேட்பாள். எங்களுக்கு எதுவும் தெரியாது. சிக்கந்தர் அப்பச்சியின் இரண்டாவது பிள்ளை பாத்திமாவுக்கு பயத்தில் அழுகை முட்டிக்கொண்டு நிற்கும். மூத்தவள் சுமையா அக்கா, கொஞ்சம் தைரியமானவள். அவள்தான் சரோஜாவையும் மீனாவையும் முத்துவையும் தன்னுடன் உட்காரவைத்திருப்பாள்.
‘பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் பெரிய எறும்பு புத்து இருக்குது பாருங்க. அங்கேதான் இழுத்துக்கிட்டுப் போகுது. அந்தப் புத்துக்குள்ளே பெரிய பிசாசு ஒண்ணு இருக்குதுனு அத்தா எங்கிட்டே சொல்லியிருக்கார்’ என, கதையை ஆரம்பிப்பாள். இதைக் கேட்டதும் முதலில் பானுவும் முத்துவும் பயந்துபோய் மூத்திரம் வருகிறது என ஓடிவிடுவார்கள். இல்லையென்றால், தூங்குவது மாதிரி கண்களை மூடிக்கொள்வார்கள். நானே இரண்டொரு தடவை கத்தி அழுதிருக்கிறேன். பிள்ளைகள் பயப்படுகிறார்கள் என, அலிபாபா கதைக்கு மாறிவிடுவாள்.
பெத்தா, ராத்திரியில் கதை சொல்வாள். பகல் எல்லாம் புகையிலையை மென்றுகொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பாள். இன்னைக்கு சாயங்காலம் மழை வரும் எனச் சொன்னால் மழை வந்து வெள்ளம் ஓடும். ‘நீங்க பள்ளிக்கூடம் விட்டு வர்றப்போ மழையிலே நனைஞ்சுட்டுத் தான் வருவீங்க’ எனச் சொல்வாள். அது மாதிரியே நடந்துவிடும். ஊரில் மழை வந்தால், ஒரு நாள் முழுக்கப் பெய்து ஓயும். ரயில் வரும் பாதை முழுக்க நீர் வெள்ளமாக ஓடுகிறது என பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள். அந்தப் பேச்சு, பேச்சாகவே இப்போதும் இருக்கிறது. ஊரில் மழை பெய்ததைப் பார்த்து ஐந்தாறு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. ஒரு தூறல் போட்டதும் பஞ்சாரத்தில் ஒளிந்துகொள்கிற கோழிக்குஞ்சுகளைப்போல, மழை மேகங்கள் ஓடி ஒளிகின்றன. மழை தப்பிவிட்டது. பிழைப்பதற்கு வேறு தொழில் தேடி ஓடுகிறார்கள். வாங்கிய கடனைத் தர முடியாமல் ஒளிகிறார்கள். மழை வரும் என மந்திரம் சொல்வதற்கு, பெத்தாகூட இப்போது உயிரோடு இல்லை. அவள் இறந்துபோனாள்.
சென்னை மழையில், பிறந்த ஊர் மழையை நினைத்து நனைந்துகொண்டு சென்றிருக்கிறேன். அப்பச்சி வீட்டுப் பிள்ளைகள் இப்போது ஆளுக்கு ஒரு திக்கில் இருக்கிறார்கள். பெரியகுளத்தில் மூத்தவளும், கம்பத்தில் இரண்டாவது பெண்ணும், கடைசிப் பிள்ளை பாளையத்திலும் திருமணம் முடிந்து மச்சான்மார்களோடு இருக்கிறார்கள். முத்துவுக்குத் திருமணம் முடிந்து மண்டபத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, ‘உனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தை முடிச்சு வெச்சுட்டா, எனக்கும் ஒங்கப்பனுக்கும் எந்தக் கவலையும் இல்லை’ – அவர் என்னிடம் சொன்னார்.
‘கான்ட்ராக்ட்காரன்கிட்டே வாங்கின அட்வான்ஸ் பணத்துக்கு, நான் இன்னமும் இருபது வருஷம் உழைக்கணும் அப்பச்சி’ எனச் சொன்னதற்கு, ‘இன்னமும் நான் பத்துப் பதினைந்து வருஷமாவது உயிரோடு இருப்பேன். நீ பொண்ணைப் பாரு. மெட்ராஸ்லயே கல்யாணத்தை முடிச்சுருவோம்’ என ரகளை செய்வார்.
அப்பச்சிக்குத் திடீரென உடம்பு சௌகரியம் இல்லாமல்போனதை நைனா சொன்னதும் என்னால் நம்ப முடியவில்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என ராத்திரி போன் செய்த மனுஷன், காலையில் விடிந்ததும் விடியாததுமாக மாரடைப்பு வந்து செத்துப்போனார் எனச் சொன்னால், என்ன செய்வது? போன வருஷம் அப்பச்சி அம்மா அதிகாலையில் குளிப்பு ரூமுக்குப் போய் வரும்போது கால் இடறி விழுந்து, தலையில் அடி. நினைவு தப்பி, படுத்தபடுக்கையாகிவிட்டாள். சிக்கந்தர் அப்பச்சி இறந்துபோனதை நம்பித்தான் ஆக வேண்டும்.
மதியப்பொழுதில் அப்பச்சியின் பிரேதத்தைப் பார்க்கப்போகிறேன் என நினைக்கும்போது உடல் நடுங்குகிறது. அப்பச்சி, உயரமான ஆள்; ரோஜாப் பூ நிறம்; முன் பற்கள் மட்டும் எத்திக்கொண்டிருக்கும். அவரை ‘பல்லப்பச்சி’ எனக் கேலி செய்திருக்கிறோம். அப்பச்சியைப்போல அவர் வீட்டில் பாத்திமாவுக்கும் முன் பற்கள் எத்திக்கொண்டிருக்கும். அதனாலேயே அவர் மீது அவளுக்குக் கோபம் வரும். கண்ணாடி பார்க்க மாட்டாள். பவுடர் பூசும்போதுகூட கண்களை மூடிக்கொண்டு பூசுவாள். அப்பச்சி சிரித்துக்கொள்வார்.
சென்னைக்கு 10 நாள் வேலை எனப் புறப்பட்டு வந்து, போன தீபாவளியோடு ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. கான்ட்ராக்டரிடம் பணத்தை வாங்கி இங்கேயே தங்கி, முழுமையாக சென்னைவாசியாக மாறியாகிவிட்டது. பெரிய கட்டடங்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கார்பென்டிங் வேலைக்குப் போகிறோம் என்றுதான் பெயர், சிமென்ட் மூடையும் தூக்கியாற்று. மண் லாரியும் ஏறி இறங்கியாயிற்று. முதன்முதலாக சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஊர் திருவிழாவுக்கு வந்தபோது, ‘என்னையும் உங்க நைனாவையும் மெட்ராஸுக்கு ஒரு தடவை கூட்டிட்டுப் போ. எல்லாத்தையும் சுத்திப்பார்த்துட்டு வர்றோம்’ எனச் சொன்னார். அப்பச்சிக்கு ரயில் ஏறி சென்னைக்கு வர வேண்டும் என்கிற ஆசை.
சிக்கந்தர் அப்பச்சியின் மூத்த பெண் சுமையாவுக்கும் ரயிலில் போக வேண்டும் என்கிற ஆசை. ஸ்டேஷனுக்கு விளையாடப் போகும்போது, அவள் என்னிடம் சீனிக்கல் எடுத்து வரச் சொல்வாள். கொண்டுவந்து கொடுத்ததும், அதை வீட்டைச் சுற்றி விதையை நட்டுவைப்பதுபோல, நட்டுவைப்பாள். ‘எதற்கு?’ எனக் கேட்டால், ‘கூழாங்கற்கள் பூமியில் வேர்விட்டு, பெரிய கூழாங்கல் மரமாக வளர்ந்து நிற்க வேண்டும்’ எனச் சொல்வாள். சுமையாவுக்கு, தன் வீட்டின் முன்பாக சீனிக்கல் மரம் வளர வேண்டும் என்ற ஆசை. கூழாங்கல் மரமாக வளர்ந்ததும் அந்த மரத்தில் இருந்து அவளுக்கு நாற்காலியும் மேஜையும் செய்ய வேண்டும் எனச் சொல்வாள். சீனிக்கல் வெயிலில் பளபளவென மின்னுவதை அவள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள். சில சமயம் அது அவளுக்கு விளையாட்டாக மாறிவிடும். சுமையா அக்கா, வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்வது இல்லை. பள்ளிக்குப் போகாமல் நிறுத்திவைத்திருந்தார்கள்.
‘நாற்காலியும் முக்காலியும் செய்றதுக்கு உனக்கு தச்சுக்கூலி எல்லாம் கிடையாதுடா அப்பச்சி மகனே. மூணு வேளை சோத்தைத் தின்னுட்டு செய்து குடுத்துட்டுப் போ’ என அவள் பேசியது, இப்போதும் நினைவில் இருக்கிறது. மெட்ராஸில் ‘தச்சுக்கூலி’ என்ற வார்த்தையே கேலியான ஒன்று.
அந்த வருஷம், மார்கழி மாதப் பனிக்கு ஊரே கம்பளியைப் போத்திக்கொண்டு ராத்திரி நேரத்தில் நெருப்புப் போட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருந்தது. சிறுவர்களுடன் இளந்தாரிப்பயல்களும் சேர்ந்துகொண்டு பழைய சைக்கிள் டயரைக் கொளுத்தி வேடிக்கைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அன்றுதான் சுமையா அக்கா குமரி ஆனாள். அவளுக்கு தலைக்கு நீர் ஊற்றி பட்டுச்சேலை உடுத்தி, கல்யாணப் பெண்போல சிங்காரித்தனர். மல்லிகைப் பூவை வாங்கி தலை நிறைய வைத்துவிட்டார்கள். காலுக்குப் புது கொலுசு மாட்டிவிட்டார்கள். வீதியில் எரியும் நெருப்பு ஜுவாலையின் நிறத்தைப்போல் இருந்தாள் சுமையா அக்கா. ஏழு நாட்கள் ஏழு நிறப் பட்டுப்புடவையில் ஏழு அலங்காரம் செய்து, சுமையாவுக்குக் கறிச்சோறும் பலகாரமும் கொடுத்துவந்தார்கள். நான், அப்பா, அம்மா, சரோஜா அக்கா, முத்து, மீனா ஆகியோர் அவளைப் பார்க்கச் சென்றிருந்தோம். சுமையா அக்கா, அதற்குப் பிறகு வாசலுக்குக்கூட வந்து நிற்பது இல்லை.
பெரியகுளத்தில் இருந்து வந்த பிச்சையா ராவுத்தர் தன் மருமகளுக்குச் சரம்சரமாக மாங்காய் மாலைகளும், ‘நாடோடி மன்னன்’ குச்சி நெக்லெஸ்ஸும் சீதனமாகக் கொண்டுவந்து கொடுத்தார். மைதீன் மச்சானுக்கும் சுமையாவுக்கும் திருமணம் பேசி முடித்தார்கள். திருமணம் முடிந்ததும், சுமையா பெரியகுளத்துப் பெண்ணாகிவிட்டாள். குதிரை வண்டியில் ஏறி பஸ் ஸ்டாண்டுக்குப் போகும்போது, அவள் அழுதுவிட்டாள். அவளுக்குத் திருமணம் முடிந்த அடுத்த மாதமே, சரோஜா அக்காவுக்கு நைனா மாப்பிள்ளை பார்த்துவிட்டார். திம்மைநாயக்கன்பட்டியில் தச்சுவேலை செய்கிற மாப்பிள்ளை, ‘ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை’ என, பழமொழி சொல்லிக்கொண்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் குதிரை வண்டி கட்டி ஊருக்கு அனுப்பிவைத்தார். சரோஜா அக்காவுக்கு ஒரே ஒரு கவலை. ‘நாடோடி மன்னன்’ நெக்லெஸ் தனக்கு நைனா செய்து தரவில்லை எனக் கோபத்துடன் சென்றாள்.
பேருந்து, விழுப்புரம் கடந்து அத்துவானமான ஓர் இடத்துக்குள் நுழைந்தது. மூத்திர வாடையும் பாட்டுச் சத்தமும் நினைவுகளில் இருந்து என்னை உசுப்பிவிட்டன. பஸ்ஸில் அமர்ந்திருந்தவர்கள் அவசரமாக இறங்கிக்கொண்டார்கள். தண்ணீர் பாட்டிலும் பிஸ்கட்டும் என்னிடம் இருந்தன. வெறுமனே பஸ்ஸைவிட்டு இறங்கிச் செல்ல மனம் இல்லை. பாட்டுச் சத்தம் நின்றது, காது வலி நின்றதுபோல் இருந்தது. கடையில் வரிசையாக கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள் அடுக்கி வைத்திருந்தார்கள். எந்த இடத்தில் கலர் பாட்டிலைப் பார்த்தாலும், பாத்திமாவின் ஞாபகம் வந்துவிடும். அவள் நன்னாரி சர்பத்தில் டபுள் கலர் சர்பத் போட்டுத் தருவாள். கண்ணாடி டம்ளரில் முதலில் சிவப்பு கலரும், அதற்கு மேல் பச்சை கலரும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தருவாள். அது அவளுக்கு எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. ஒரு வித்தையைப்போல செய்வாள். டபுள் கலர் வித்தை.
சுமையா அக்கா திருமணம் முடிந்து ஏழு எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் விஜயா ஹோட்டலில் காபி சாப்பிட நைனாவும் அப்பச்சியும் போயிருந்தார்கள். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். ஒரு நாளாவது மொறுமொறுவென ஸ்பெஷல் தோசை வாங்கித் தர மாட்டார்களா என டேபிளில் உட்கார்ந்திருந்தேன். ‘டிக்காக்ஷன் ஸ்ட்ராங்காக ரெண்டு காபி’ எனச் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார்கள். சிக்கந்தர் அப்பச்சி, ‘அணைக்கரப்பட்டி வயலை குத்தகைத் தொகையில் இருந்து காபந்துசெய்ய முடியலை அப்பச்சி மகனே. குத்தகைக்குப் பணம் கொடுத்தவன் பணத்தைக் கேட்டிருக்கிறேன். பணத்துக்கு நான் தவணை கேட்டிருக்கிறேன். தவணை மீறினா, வாய்தா தர மாட்டானாம். கிரயம் செய்து பணத்தைக் குடுனு வாசற்படியிலே நின்னு சத்தம்போடுறான்’ என்றார்.
டம்ளரில் இருந்த காபியில் ஈ விழுந்து சுற்றியது. அந்த ஈயினால் மேலெழுந்து வர முடியவில்லை. அதை நான் அப்போது விளையாட்டுபோல பார்த்துக்கொண்டிருந்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு அப்பச்சியினால் கடனில் இருந்து மீள முடியவில்லை. நைனா முத்தெலிப் ராவுத்தரிடம் பேசிப்பார்த்தார். அவரும் நைனாவைப்போல விரலுக்குத் தக்கன வீக்கம் என பழமொழி சொல்லி பணம் இல்லை என அனுப்பிவைத்துவிட்டார்.
சுமையா அக்கா, பேறுகாலத்துக்காக ஊருக்கு வந்தாள். ஐந்து ராந்தலில் குதிரை வண்டி பிடித்து அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அவளுக்கு தினந்தோறும் ஒரு பலகாரம் செய்துகொடுத்தார்கள். ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனார்கள். அவளுக்கு இன்னமும் வெட்கம் போகவில்லை. தெருவில் நடப்பதற்கு வெட்கப்பட்டாள். ஆனால், டாக்டரம்மா தினமும் நடக்கணும் எனச் சொல்லிவிட்டார்கள். சுமையாவினால் அவளது வயிற்றில் இருக்கும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு நடக்க முடியவில்லை. உஸ்… புஸ்… என, மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்.
சுமையாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. வெள்ளை நிறத்தில் மைதீன் மச்சானின் மூக்கையும் ஏறுநெத்தியையும் வாங்கிக்கொண்டு இருந்தது. காலையில் பிள்ளைகள் யாரும் பள்ளிக்குப் போகவில்லை. மிட்டாய் கொடுப்பதும், ஆஸ்பத்திரிக்குள் ஓடுவதுமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். சுமையாவும் அவளது பிள்ளையும் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, பாத்திமா பள்ளிக்குப் போகவில்லை. பாத்திமாவுக்கு வேலை சரியாக இருந்தது. அவளது அம்மாவுக்குத் துணையாக இருட்டு சமையலறைக்குள் உட்கார்ந்து வேலை செய்தாள். பாத்திமா பள்ளிக்குப் போகாததால், அவளுடன் படிக்கும் பிள்ளைகள் அவளைத் தேடி வந்தார்கள்.
‘சுமையா அக்காதான் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்லியிருச்சு. அம்மாவும் வீட்டு வேலை செய்து பழகுனு சொல்லிட்டாங்க’ எனப் பிள்ளைகளிடம் சொன்னாள்.
அதற்குப் பிறகு பள்ளியில் இருந்து யாரும் அவளைத் தேடி வரவில்லை. பானு பள்ளிக்குப் போகும்போது, அவள் அணிந்திருக்கும் சீருடையையும் இரட்டை ஜடையையும் பார்த்துக்கொள்வாள். பிறகு, அவளுக்கு வீடும் தெருவும் வீட்டின் இருட்டு சமையலறையும் பழகிவிட்டன. வீட்டுக்குள் இருந்தபடி ரோட்டில் நடந்துபோகிறவர்களின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டாள். பாத்திமாவை பள்ளியில் இருந்து நிறுத்தியதும், நைனா மீனாவை வீட்டில் இருக்கச் செய்துவிட்டார். மீனாவும் பாத்திமாவும் ஒரே வயதுப் பிள்ளைகள்.
சிக்கந்தர் அப்பச்சியை, தினமும் யாராவது ஒருத்தர் தேடிவந்துகொண்டிருந்தார்கள். அத்தா வயலை விற்கப்போகிறார் என பாத்திமாவுக்குத்தான் முதலில் தெரிந்தது. அதை ரகசியமாக மனதுக்குள்ளாக வைத்துக்கொண்டாள். பேறுகாலத்துக்கு வந்த சுமையாவிடம்கூட அவள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆடி பதினெட்டுக்குப் பிறகு அணைக்கரப்பட்டி வயலை கிரயம் பேசி முடித்தார்கள். சுமையா, ஆறு மாதங்களுக்குப் பிறகு பெரியகுளத்துக்குப் புறப்பட்டுச் சென்றாள். அத்தா, சுமையாவின் பிள்ளைக்கு இடுப்புச்சலங்கையும், கால் கொலுசும் வாங்கிக்கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்.
சுமையா அக்கா ஊருக்குச் சென்ற பிறகு, பாத்திமாவுக்கு வீட்டு வேலைகள் முழுக்கப் பழக்கமாகியிருந்தது. சமையல் செய்யப் பழகிவிட்டாள். பாத்திமா சமைந்த குமரி ஆனாள். சுமையாவுக்குத் தண்ணீர் ஊற்றி உட்காரவைத்த இடத்தில் அவளையும் உட்காரவைத்து அழகுபார்த்தார்கள். பட்டுப்புடவை உடுத்தி சிங்காரித்தார்கள். புடவை உடுத்தியதும் அவள் இன்னும் உயரமானவளைப்போல தோற்றம் தந்தாள். உதடுகளை மூடி தனது முன் பற்களை மறைப்பதற்குப் பெரும்பாடுபட்டாள்.
பாத்திமாவுக்கு கூடலூரில் இருந்து மாப்பிள்ளை வந்தது. அவர்கள் வீட்டில் டிராக்டர் வண்டியும் தென்னந்தோப்பும் இருந்தன. சுமையா அக்கா, திருமணத்துக்கு வரவில்லை. அவளுக்கு இரண்டாவது குழந்தை உண்டாகியிருப்பதாகத் தாக்கல் வந்தது. பாத்திமாவுக்குத் திருமணத்தை முடித்துவிட்டு அவர்கள் பெரியகுளத்துக்குப் போய் அவளைப் பார்த்தார்கள். ஊரில் இருந்து வந்ததும் அப்பச்சி யாருடனும் பேசவில்லை. இரண்டு நாட்களாக அமைதியாக இருந்தார். தினமும் சந்தித்துப் பேசும் நைனாவுடன்கூட அவர் பேசிக்கொள்ள காபி கடைப் பக்கம் வந்து போகவில்லை. நைனா பெரிய ஆற்றுக்குப் போய்த் திரும்பும்போது, அவரைப் பார்க்கச் சென்றார்.
‘மூத்தபிள்ளை ‘வா’னுகூட என்னையைக் கூப்பிடலை அப்பச்சி மகனே. இன்னும் நான் எந்தச் சொத்தை வித்து அவங்களுக்குத் தர்றதுனு தெரியலை.’
‘இன்னமும் அவளுக்குக் கோபம் குறையலை. நீயென்ன வெச்சிக்கிட்டா தர மாட்டேன்னு சொன்னே. இருந்தா, கழுதை குடுத்துட்டு வர்ற ஆளுதானே. கழுதைகளுக்குத் தெரியலையே.’
பாத்திமாவின் திருமணத்துக்கு முன்பு மைதீன் மச்சான் தனது தோட்டத்துக்கு அருகில் இருக்கிற தோப்பை குத்தகைக்கு வாங்குவதற்கு அப்பச்சியிடம் பணம் கேட்டிருக்கிறார். கடன்காரர்களுக்குத் தரவேண்டிய பணத்தையே தரமுடியாத மனுஷனுக்குப் புது சோதனை. ‘பணம் இல்லை’ எனச் சொன்னதால், சுமையா கோபப்பட்டுக்கொண்டாள். பெரியகுளத்துக் காரர்கள் யாரும் திருமணத்துக்கு வரவில்லை. சுமையாவைப் போலத்தான் எங்க வீட்டுப் பெரிய அக்காவும். திம்மையில் சோளக்காட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற பேராசையில், வீட்டுக்கு வந்து சண்டை போட்டுவிட்டுப் போனாள். நைனா, ‘இந்தக் கழுதைகள் நடக்கிறதை விட்டுட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்படுது. என்ன நிலமைக்கு ஆகப்போகுதுனு தெரியலை’ எனப் புலம்பினார்.
பேருந்து, திடீரெனத் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நின்றது. வெயில், கண்களைக் கூசச் செய்தது. நடுரோட்டில் ஒரு விபத்து நடந்திருந்தது. ரத்தமும் சதையுமாக இரண்டு பேர் வண்டியில் இருந்து கீழே சரிந்துகிடந்தார்கள். பேருந்து வரிசையாக நின்றிருந்தது. ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் பாதையானது மாறிப்போய் இருந்தது. குளறுபடிகளுக்கு இடையே பேருந்து நின்று இருந்தது. ஒரு பேருந்து நேராக சென்றால் போதும், அதன் பின்பு அத்தனை பேருந்துகளின் பாதையும் பயணமும் நேராகிவிடும். அப்பச்சியின் வாழ்க்கையில் இப்படியாகத்தான் சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு, குளறுபடியாகி திசை திரும்பிவிட்டன. அப்பச்சி வீட்டில் மட்டுமா… எங்கள் வீட்டிலும்தான். யார் சிக்கு எடுப்பது?
பாத்திமா கூடலூரில் இருந்து வாரத்துக்கு ஒருமுறை வந்துபோனாள். அவளுக்கும் அவள் மச்சானுக்கும் தினமும் சண்டை வருவதாக முறையிட்டாள். அவளால் இனிமேற்பட்டு கூடலூரில் இருக்க முடியாது என அழுதாள். கூடலூருக்குப் போனதற்குப் பிறகு அவள் கறுப்பாகிவிட்டாள். அவளை சாணம் தட்டச்சொல்கிறார்கள். கூடை நிறையச் சாணத்தை அள்ளிப்போட்டு டிராக்டரில் கொண்டுபோய் போடச் சொல்கிறார்கள் என முறையிட்டாள்.
‘சாணம் அள்ளுறதுக்கு இஷ்டம் இல்லைனா, பேசாம கூப்பிட்டு வீட்டோட வெச்சிக்கிடுங்க. மாப்பிள்ளைக்கு வண்டி ஓட்டத் தெரியும். ஆட்டோ ஓட்டட்டும். இல்லைனா, டிரைவர் லைசென்ஸ் வெச்சிருக்கான். கவர்மென்ட் வேலை வாங்கிக் குடுங்க’ – கூடலூர் ராவுத்தர் கோபத்தில் பேசினார். அவர்கள் ஒருவரையொருவர் அதட்டிப் பேசிக்கொண்டார்கள். பாத்திமா தனது துணிகளை அள்ளியெடுத்து பையில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள். புருஷனையும் பொண்டாட்டியையும் அழைத்துக்கொண்டு ஊர் திரும்பினார்கள். அவர்களை, பட்டு ராவுத்தர் தெருவில் வாடகை வீடு ஒன்றைப் பிடித்துக் குடிவைத்தார். அவர்களுக்குத் தினமும் அப்பச்சியின் வீட்டில் இருந்து சாப்பாடு சென்றது. மாப்பிள்ளைக்கு வேலை வேண்டும் எனத் தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு வந்தார் அப்பச்சி. டிராக்டர் ஓட்டுவதைத் தவிர, வேறு எதுவும் பாத்திமாவின் மச்சானுக்குத் தெரியாது. ‘மச்சானுக்கு ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்தால் சவாரி போய் வந்து பிழைத்துக்கொள்வோம்’ என பாத்திமா தனது நகைகளை கழற்றிக் கொடுத்தாள். அவளது நகைகளை ரொக்கமாக்கியதுபோக, மீதிப் பணத்துக்குக் கந்துவட்டிக்காரனிடம் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கிக் கொடுத்தார் அப்பச்சி.
‘இனி ஊர் பக்கமே வர மாட்டேன்’ எனச் சொன்ன சுமையா, வயிற்றுப்பிள்ளையோடு ஊருக்கு வீட்டுக்கு வந்தாள்.
‘பக்கத்துத் தோப்பை குத்தகைக்கு வாங்குறதுக்கு பணம் கேட்டப்போ ‘பணம் இல்லை’னு சொன்னீங்க. இப்போ ஆட்டோ வாங்குறதுக்கு மட்டும் எப்படி காசு வந்துச்சு?’ என அத்தாவிடம் சண்டைபோட்டாள். ஊரில் இருந்து வந்தவள் ஒருவாய் தண்ணீர்கூட குடிக்காமல் இந்தச் சுடுசொல்லைச் சொல்லிவிட்டு, அடுத்த வண்டி ஏறி ஊருக்குப் போனாள். அன்றில் இருந்துதான் அப்பச்சியின் நடமாட்டம் குறைந்துபோனது. சிக்கந்தர் அப்பச்சி தன் பிள்ளைகள் தன்னைப் பற்றி புகார் சொல்வதைக் கேட்டும் கேட்காமல் இருந்தார். மனம் ஒடிந்து பழுத்த கால் தடத்தில் நொறுங்கிக்கிடப்பதுபோல திண்ணையில் கிடந்தார்.
அணைக்கரப்பட்டி வயலைக் கிரயம் பேசி முடித்து, பிறகு குத்தகைக்கு விட்டிருந்த மேக்காட்டு வயலையும் கிரயம் பேச முடிவு செய்துவிட்டார். விவசாய வங்கியில் இருக்கிற அடமான நகையும், கந்துவட்டிக்கு வாங்கிய பணத்தையும் தவிர, கடனாக வேறு எதுவும் இல்லை. வட்டிக்கு மாதா மாதம் பணத்தைப் புரட்டித் தருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. மாந்தோப்பில் பூச்சி பிடிக்காமல் இருக்க வேண்டும். சுருட்டையும் புள்ளிப்பூச்சியும் விழுகாமல் இருந்தால், தப்பிப் பிழைத்துவிடலாம் என நினைத்தார். பள்ளிவாசலுக்குப் போய் நெற்றி தரையில் படிய கண்ணீர்விட்டார்.
கடனுக்குக் கொடுத்தவன் நடுத்தெருவில் இருந்து, ‘உங்க தோஸ்த்து ரெண்டு மாசமா வட்டி தரலை. அண்ணே உங்ககிட்ட சொல்லச் சொன்னார்’ என சைக்கிளைத் திருப்பி நிறுத்தினான். கந்துவட்டிக்காரன் சைக்கிளைத் திருப்பி நிறுத்தினால், தன்னையும் அவனுடன் கடைக்கு அழைக்கிறான் என அர்த்தம். அவனுடன் கடைக்குப் போய் திட்டு வாங்கிக்கொண்டு வந்தார் அப்பா. அதற்குப் பிறகுதான் ஊரில் இருந்து புறப்பட்டவர்களுடன் என்னையும் மெட்ராஸுக்கு அனுப்பிவைத்தார். 10 நாட்கள் வேலையும் அவர்கள் தந்த சம்பளமும் மனதுக்குள் ஆசையை வளர்த்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள், இன்னும் ஒரு மாதம், அடுத்த மாதம் ஊருக்குப் போய்விடலாம் என வாழ்க்கையை நகர்த்தி நகர்த்தி, கடன்காரர்களுக்கும் கட்டிக்கொடுத்த பிள்ளைகளுக்கும் தச்சுக்கூலி சரியாகப் போய்விட்டது. கடற்கரை மணலில் படுத்துக்கிடந்ததுதான் மிச்சம்.
திருச்சி பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் நுழைந்ததும் முதல் ஆளாக இறங்கிக்கொண்டேன். முதலில் சிறுநீர் கழித்துவிட்டு சூடாக டீ சாப்பிட்டேன். மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. பசி இல்லை. ஆனால், காது அடைத்துப்போய் இருந்தது. சூடான டீ, கைவிரல் எனப் பிசுபிசுப்பாக ஒட்டியது. கைகழுவிவிட்டுத் திரும்பும்போது, முத்துவின் மாப்பிள்ளை நின்றிருந்தார்.
”மாமா வாங்க. எங்க இந்தப் பக்கம்?”
”லாட்ஜ் வேலை மாப்பிள்ளை, ஊரில் இருந்து 10 பேர் பெட்டியைக் கட்டிட்டு வந்திருக்கோம். கான்ட்ராக்டர் வெளியூர்காரன். சம்பளத்துல இருபது பெர்சன்ட் கமிஷன் குடுக்கிறதா பேச்சு.”
”ஊர்ல சிக்கந்தர் அப்பச்சி இறந்துட்டாரு… தாக்கல் வந்துச்சா?”
”முத்துவை ஊர்லவிட்டுட்டு, அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வந்து இறங்குறேன்… நீ நிக்குற. மெட்ராஸு வேலை எப்டியிருக்கு?”
அவருக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டு நின்றிருந்தேன்.
”அப்பச்சி வீட்டை வித்து பணத்தைப் பங்கு கேக்குறாங்களாம். அவங்க அண்ணன் வீட்டை வாங்குறதா பேச்சு” எனத் தகவல் சொன்னார். அவரை அனுப்பிவைத்துவிட்டு, ஊருக்கு வண்டி ஏறினேன்.
மாந்தோப்பில் சுருட்டைப் பூச்சிக்கு மருந்தடித்துக்கொண்டிருந்த சமயம் ஊருக்குச் சென்றிருந்தேன். பூ வைத்திருந்தது. இலைகளின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள், மருந்தைக் குடித்துவிட்டு இடம் மாறி வளர்ந்தன. பூச்சிக்குப் புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும். ஊரில் இருக்கிற மாந்தோப்பு சம்சாரிகள் மருந்துகளை மாற்றி மாற்றி ஊற்றி கை மெஷின் வைத்து அடித்தார்கள். 10 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் அடியில் மருந்து தூவினார்கள்; தண்ணீர் கட்டினார்கள். பூவைக் காப்பாற்ற போராடினார்கள். பூ வைத்துவிட்டால், காய்த்துவிடும் எனக் காத்திருந்தார்கள்.
அப்பச்சிக்கு நான் சேர்த்துவைத்திருந்த பணத்தைக் கொடுத்தேன். வாங்கிக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் முன்பாக நின்றேன். கோபமும் இல்லை, சந்தோஷமும் இல்லை. பணத்தையும் வாங்கிக்கொள்ளவில்லை. நானும் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கூத்தாடிவிட்டேன். மனுஷன் வைராக்கியத்துக்குக் கட்டுப்பட்டு தோப்பில் மருந்தடித்துக் கொண்டிருந்தார்.
‘ஆண்டவன் சுமக்கிற அளவுக்குத்தான் வலியைத் தருவான்டா மகனே. என்னோட வலியை நான்தான்டா சுமக்கணும். தோள் மாத்திவிட்டேன்னா, களவாணிப்பயலேனு மேற்கொண்டு சோதனையைத் தந்துடுவான். என் கஷ்டம் என்னோடு இருக்கட்டும். உன் அக்கா-தங்கச்சிக்குக் குடுத்து நீ நல்ல பிள்ளையா இரு’ என அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. பஸ்ஸைவிட்டு இறங்கியதும் தெருவுக்குச் சென்றேன்.
வீட்டுக்குள் நுழைந்தபோது, ஊதுபத்தியின் வாசமும் பன்னீரின் வாசமும் முகத்தில் அடித்தது. ஹோவென அழுகைச் சத்தம் அறை முழுவதும் நிறைந்திருந்தது. அப்பச்சியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம், என் கண்களில் நீரை வரவழைத்தது. வாய்விட்டு அழ நினைத்தேன். கர்சீஃப்பை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டேன். சிக்கந்தர் அப்பச்சியின் முகம், ரோஜாப் பூவைப்போல் இருந்தது. அவருக்கு அருகே சுமையா அழுதுகொண்டி ருந்தாள். அவளது கண்களில் நீர் இல்லை. ஆனாலும் அவள் வாய்விட்டு ஒப்புக்கு அழுவதுபோல் அழுதாள். சற்றுத் தள்ளி பாத்திமாவும் அவள் அருகே பானுவும் அமர்ந்து, அழுதுகொண்டிருந்தார்கள். ஊரில் இருந்து சரோஜா அக்காவும் மீனாவும் முத்துவும் வந்திருந்தனர். அவர்களது கண்கள் சிவந்து இருந்தன. நைனா வெளியே அப்பச்சிமார்களோடு உட்கார்ந்திருந்தார்.
மரக்காப் பெட்டியும், அதன் அருகே ஜாதிக்காய் பெட்டியும் முற்றத்துக்கு நடுவே இருந்தன. அங்கு வந்து அமர்ந்துகொண்டேன். அப்பச்சியைப் பார்த்ததும் என் கவலையும் வேதனையும் குறைந்தன எனத்தான் சொல்ல வேண்டும். மூன்று பெண்களும் விட்டது பாரம் எனக் கைகழுவிக்கொள்வார்கள். வீட்டை விற்று பணத்தைக் கொடுத்தால் போதும், கிளம்பிவிடுவார்கள்.
நான் மெதுவாக நடந்து முற்றத்துக்கு கிழக்குப் பக்கத்தில் இருக்கிற அறைக்குச் சென்றேன். அங்குதான் முன்பு பெத்தா படுத்துக்கிடந்தாள். இப்போது அப்பச்சி அம்மா படுத்துக்கிடக்கிறாள். அறையின் கதவு திறந்து இருந்தது. அவள் கட்டிலில் படுத்துக்கிடந்தாள். அவளுக்கு அத்தா இறந்தது தெரியாது எனத்தான் சொல்ல வேண்டும். அத்தா இறந்தது மட்டும் அல்ல, உலகத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட அவளுக்குத் தெரியாது. நினைவு தப்பியிருந்தது. கூடவே ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்து இருந்தன. அவளது படுக்கையின் கீழே மூத்திரம் இருக்கவும் கக்கூஸ் போகவும் கோப்பை ஒன்று இருந்தது. சுத்தம் செய்யாமல் கழுவப்படாத அந்தக் கோப்பையில் இருந்து எலிகளும் கரப்பான் பூச்சிகளும் குதித்தோடின.
நான் அப்பச்சி அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டேன். நான் மெதுவாக அவளது காதருகே ‘நான் திரவியம் வந்திருக்கேன். ஆத்தா’ எனச் சொன்னேன். அவளது மூடிய இமைகளுக்குள் கண்கள் அசைவதை என்னால் பார்க்க முடிந்தது. அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், மூச்சு விடுவதால் நெஞ்சு அசைவது தெரிந்தது. அவளது கையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். அப்பச்சி அம்மாவுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. கோப்பையை எடுத்துக்கொண்டு போய் கழிப்பறையில் கொட்டிவிட்டு, சுத்தம் செய்துவிட்டு வந்தேன். அப்பச்சிமார்கள் ‘துஆ’ செய்துகொண்டிருக்கிற சத்தம் முற்றத்தின் வழியாக, என் காதில் கேட்டது. நானும் மனதார வேண்டிக்கொண்டேன்.
‘அப்பச்சி நல்ல மனுஷன்னா, ஆத்தாவையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிறணும்.’
முற்றத்தில் வெள்ளைப் புறாக்கள் சிறகடித்து பறந்து வந்து அமர்ந்துகொண்டன. தானியங்கள் இடுவதற்கு யாரும் இல்லை. இருந்தாலும் புறாக்கள் வழக்கம்போல அப்பச்சியையும் அப்பச்சி அம்மாவையும் பார்க்க வந்துவிட்டன. என் அருகே புறாக்கள் வந்து நிற்கும் என முற்றத்துக்கு வந்து நின்றேன். பருத்த உடலும் உப்பிய முகமும் இளம்ரோஜா நிறத்தையும் கொண்ட புறா ஒன்று, பறந்து வந்து என் காலடியில் நின்றது. ‘கூவக்… கூவக்’ என்ற அதன் சத்தம், ‘அப்பச்சி மகனே, அப்பச்சி மகனே’ என, சிக்கந்தர் அப்பச்சி என்னை அழைப்பதுபோல் இருந்தது. என்னையும் அறியாமல் அழுதேன். அப்பச்சிமார்கள் துஆ செய்து முடித்திருந்தார்கள்!
– ஏப்ரில் 2015