சாமத்திய வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 3,256 
 

காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது. தொணதொணப்பு ஓய்ந்தது..

அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து. அவள் கணவன் சபாவின் குறட்டை ஒலியில் இருந்து அவன் அயர்ந்து தூங்குவது தெரிந்தது. பாவம் அவன் லண்டன் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து இரவு வேலையே செய்து வந்ததால் இவ்வாறான ஒரு சில இரவுகளே அவனால் இரவு நித்திரை கொள்ள முடிந்தது. சபா மட்டுமா? இவனைப்போல புலம்பெயர்ந்த தமிழர் பலரின் நிலை இப்படித்தானே!!..

மீண்டும் ஒலித்தது….

புறுபுறுத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து- கூந்தலைக் கைகளால் வாரி முடிந்தபடி தொலைபேசிக்குக் கிட்டப்போனாள் சிந்து. வசீகரம் அவள் முகத்தில் தெரிந்தது. என்ன இருந்தாலும் இலவசத் தொலைபேசிகள் வந்ததால் ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் தான்.

தொலைபேசியைக் கையில் எடுத்தாள்… மறுமுனையில் வனஜா…

‘துவங்கிவிட்டாள்…. அது இருக்கா… இது இருக்கா…எண்டு நேற்று முழுக்கக் கேட்டு….’

மனதுக்குள் சபாவின் நித்திரை குழம்பி விடுமே என்ற ஆதங்கத்துடன்..

‘அக்கா நாளைக்கு மட்டும் நாலைந்து பேர் உங்கடை வீட்டை படுக்க விட வேண்டும். எல்லாம் சுவிஸ்கார உறவினர்தான். பெரிய உதவியாய் இருக்கும். எங்கடை வீடு நிறைந்து விட்டது…அதோடையக்கா அண்ணையிட்டைச் சொல்லி கொட்டலில் இரு குடும்பத்திற்கும் றூம் புக் பண்ண வேண்டும். பிரான்ஸ் கார உறவினர்கள் வந்து கொண்டிருக்கினமாம். எல்லாம் முடியுமட்டும் தலைவெடிக்குது….’

‘எதற்கும் அவரோடை கதைத்து விட்டு கொஞ்ச நேரத்தாலை நான் எடுக்கிறன். சாமத்திய வீட்டிற்கான மற்ற அலுவல்களைக் கவனியுங்கோ….’ தொலைபேசியை வைத்துவிட்டு ஹீட்டரைப் போட்டாள் சிந்து.

வனஜா நல்லவள் தான். ஆனாலும் பெரிய எடுப்புக்காரி. அவள் கணவன் சந்திரன் பல ஏஜன்ட் இடம் காசுகளைக் கொடுத்து ஏமாந்த பின் சிரமத்தின் மத்தியில் லண்டன் தனிய வந்து கடன் குறைத்த பின்னர் வனஜாவையும் இருபிள்ளைகளையும் ஏஜன்ட் மூலம் எடுப்பித்தான்…. இன்னமும் விசா கிடைக்கவில்லை.

வந்த காலம் தொடக்கம் பெனிபிட் எடுத்தபடி களவாக இரு இடங்களில் சந்திரன் வேலைக்கும் செல்லுகின்றான். ஒரு பிள்ளை இங்கு பிறந்தால் பெனிபிட் பணமும் கூடக் கிடைக்கும், விசாவும் கிடைக்கும், கையெழுத்து வைக்கப்போகும் போதும் பிடித்து அனுப்பமாட்டார்கள், என்று வழக்கறிஞர் கூறியதால் மூன்றாவது பிள்ளையையும் இங்கு பெத்தனர். இருந்தும் விசா கிடைக்கவில்லை.

வனஜா காசு சேர்ப்பதில்கெட்டிக்காரி. பெனிபிட் காசு, கணவனின் சம்பளப்பணம் எல்லாவற்றிலும் மிச்சம் பிடித்து தானே சீட்டுப்பிடித்து தன் சேமிப்பைப் பெருக்கிக் கொண்டாள். மாமனாரையும் ஏஜன்ட் மூலம் எடுப்பித்தாள். வீட்டுக்குக் காவலும் ஆயிற்று. வயது முதிர்ந்தவருக்கு பெனிபிட் கூடக் கிடைக்கும் என்பதால் மாமனார் வந்தது காசுமாயிற்று.

அதுவும் திருப்தியளிக்காமல் ‘சிங்கிள் மதர்’ திட்டம் அதாவது கணவனைப் பிரிந்து வாழ்தல் என்னும் திட்டத்தில் தன்னையும் இனைத்துக்கொண்டாள். சந்திரன் தன்னைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறி அதற்குப் பொய் ஆதாரங்களைக்காட்டி அதிகளவு பெனிபிட் பணம் பெற்றுக்கொண்டனர். புலம் பெயர்ந்த நாடுகளில் வனஜா போன்ற பலர் இவ்வாறுதான் வாழ்க்கை நடத்துகின்றனர். இப்படியான சிலரால் தான் தமிழனின் கலை, கலாச்சாரம் என்ற சொற்களும் அர்த்தமற்றுப்போகின்றன. மனிதரை மட்டுமல்ல அரசாங்கத்தை ஏமாற்றினாலும் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.

‘பெனிபிட் ஒப்பீஸில் இருந்து ஆட்கள் வீட்டிற்கு வந்துபார்க்கும் போது சந்திரன் வீட்டில் நின்றால் வனஜா என்ன கானா புனா என்றா?… சொல்லுவா?’ என்று சபா கேட்டபோது சிந்து சிரித்துக்கொண்டாள். ஏனெனில் கனாபுனா என்பது அவனது பாசையில்… ‘கள்ளப்புருசன்’.

சிந்து தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவள். அயலில் இருப்பவர்களுடன் அந்நியோன்யமாக வந்த இடத்தில் வாழவேண்டும் என நினைப்பதால் வனஜாவின் நட்பை விலக்கிக் கொள்ளாமல் சமாளித்து வந்தாள். ஒருவர் எத்தனை தீமை செய்தாலும் ஒருவர் எமக்குச்செய்த நன்மையை கருத்தில் கொண்டு தீமையை மறந்துவிடவேண்டும். கூடியவரை நேர்மையாக வாழவேண்டும். எம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்றிருப்பவள். இதே கருத்துக்களை சபாவும் உடையதால் இருவருக்கும் எல்லா விடயங்களிலும் ஒத்துப்போயிற்று.

அதேபோல் வனஜாவிற்கும் சந்திரனுக்கும் பணம் எப்படியாயினும் சேர்த்தால் சரி என்ற கொள்கை உடையதால் இருவருக்கும் ஒத்துப்போயிற்று. பெனிபிட் பணம,; களவாக வேலை செய்து வந்த பணம், சீட்டு பிடித்தபணம், என்றெல்லாப் பணமும் பெருக வங்கியில் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் வைத்திருந்தால் பெனிபிட் பணம் பெறமுடியாது என்பதால் எல்லாருடைய கழுத்து, கைவிரல்கள், மணிக்கட்டு, காது போன்றவற்றில் நிறை அதிகமான தங்க நகைகளாக மின்னின. ஊரில் இருக்கும் போது எவ்வளவு கஸ்டப்பட்டதையும் மறந்து தமது சிறுபிள்ளைக்குக் கூட ‘நகை போடாட்டி மதிக்கமாட்டினம், ஏழை எண்டு சொல்லுவினம்’ என்று கூறுமளவிற்கு மனதில் பதியவைத்துள்ளனர். ‘காணாததைக் கண்டவர்கள் இப்படித்தான்.’ சபா சிந்துவிடம் கூறிக்கொள்வதுண்டு.

வனஜா நகைக்கடை வைக்குமளவிற்கு நகைகளாகச் சேர்த்துவைத்தாலும் பணத்தைப் பெருக்கவும் அறிந்து அதனை நடைமுறைப்படுத்தினாள். அதாவது உறவினர், தெரிந்தவர்க்கெல்லாம் வேறு யாரோவிடம் வேண்டிக் கொடுப்பது போல் ஐந்துவட்டிக்குக் கடன் கொடுப்பது. ஐந்து வட்டிக்குக் கொடுத்தாலும் வட்டி சரியான நேரத்தில் கறப்பதிலும் அவளுக்கு நிகர் அவள்தான்.

இத்தனைக்கும் ஊரில் சைவப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை தான் படித்தவள். ஆனால் உலகத்து அனுபவங்கள் எல்லாம் அத்துப்படி. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாவிடினும் ஆங்கிலம் தெரிந்தது போல் நடித்துக்கொள்வாள். பெனிபிட் , வீட்டுக்காசு, வங்கி அலுவல்கள், பிள்ளைகளின் பாடசாலை அலுவலகள் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடல் அவசியம் என்றால் ஆரம்பத்தில் சபா மூலமாகவும் இவைகளின் கள்ள வேலைகளுக்கு சபா மறுத்துவிட தற்போது கெஞ்சிக் கூத்தாடி சிந்து மூலமும் தன் அலுவல்களை முடித்துக்கொள்வார்கள். எனவே அவர்கள் சபா, சிந்து குடும்பத்தவரோடு சுயநலத்துடன் கூடிய நட்பை வைத்துக்கொண்டனர்.

என்ன காசு, நகை சேர்த்தாலும் விசா கிடைக்காதது வனஜா குடும்பத்தவருக்கு பயத்துடன் கூடிய கவலையே. அதனால் அடிக்கடி சிந்துவிற்கு தொலைபேசியில் புலம்பிக்கொள்வாள்.

‘அக்கா! விசா இல்லாதவையை பிடித்து அனுப்பப் போகினமாம். மத்தியானச் செய்தியிலை சொன்னதாம். நீங்கள் கேட்டனீங்களே? உங்களுக்கு விசா இருக்குத்தானே எங்களுக்கு தான் இந்தக்கண் கெட்ட கடவுள் கண்ணைத்திறக்குது இல்லை!…’ தனக்குக் கஸ்டம் என்றால் கண்டபடி கடவுளைத் திட்டுவாள். செய்தி போறநேரத்தில் தான் அவர்கள் சினிமாப்படம் டிவிடியில் பார்ப்பதால் சிந்துவிடம் தான் செய்திச் சுருக்கம் கேட்பாள். மற்ற நேரங்களில் எல்லாம் சின்னத்திரைதான். ஓவ்வொரு சின்னத்திரையிலும் தானும் அந்தப் பாத்திரமாக மாறி பேசிப்பேசி சின்னத்திரை பார்க்கும் போது அவளைப்பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.

தற்போதைய அவளுடைய பிரச்சனை வயதுக்கு வந்த தன் ஒரே மகளான சத்தியாவின் சாமத்திய வீடு பெரிதாகச் செய்து முடிப்பது… அதுவும் அவளது ஒன்றுவிட்ட சகோதரியை விடப் பெரிதாகச்செய்து முடிப்பது தான் முக்கியம்… அவர்கள் பல வருடங்களாக இங்கிருந்து பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றவர்கள்.
அவர்களுடன் தான் போட்டி… இதனால் தற்போது வனஜா கஸ்டப்படுத்துவது சிந்து, சபா குடும்பத்தவரைத்தான். தெலைபேசியிலும் சரி அலைக்கழிப்பதிலும் சரி. கொஞ்சம் இடம் கொடுத்தால் மிஞ்சுவாள் இந்த வனஜா….

சத்தியா வயசுக்கு வந்து பன்னிரன்டு நாட்களாக பாடசாலைக்கும் விடவில்லை. சத்தியாவின் வகுப்பாசிரியை ஒரு வெள்ளைக்கார பெண்மணி. ‘அவவிடம் ஆலாத்தி கழிப்புக் கழித்தபின்தான் பாடசாலைக்கு அனுப்பமுடியும்’ என்று கூறும்படி சிந்துவை வற்புறுத்தினால் வனஜா. அப்படியெல்லாம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது என்பதால் எமது தமிழ்க்கலாசாரத்தின்படி ஒரு வைபவம் முடித்தபின்பு அனுப்பிவைப்பதாக வனஜா சார்பாக ஆங்கிலத்தில் விளக்கினால் சிந்து. அதற்கு அந்த வகுப்பாசரியைக்கு கோபம் வந்துவிட்டது. ‘இது கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு இயற்கைச் சம்பவம். இதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அசிங்கப்படுத்தவேண்டும். உங்கள் நாட்டில் தானே உலகமே வியக்கும் வண்ணம் பெண்கள் பேராட்டத்திலும் ஆண்களுடன் சரிசமமாக இணைந்துள்ள போது நீங்கள் இப்படிச்செய்வது பெண் இனத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது.’

பரீட்சை வருவதால் பிள்ளைக்கு இப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிப் பாடசாலைக்கு அனுப்பிவைக்கும் படி எச்சரித்தாள். சிந்துவுக்கு அவமானமாகப் போய்விட்டது… வனஜா காதில் விழுத்தியதாகத் தெரியவில்லை….

அவளுக்கு நாட்டுப்பற்றும் இல்லை. நாட்டுப்பிரச்சனை காரணமாக எம்மவர் சாப்பாடும் இல்லாமல் அங்கு கஸ்டப்படுவதும் கவலையில்லை. அவளது பிரச்சனை முதல் சாமத்திய வீடு… அடுத்தது விசா….

‘அக்கா வெள்ளைக்காரிக்குத் தெரியுமே! எனக்கு ஒரு பெண்பிள்ளை தான் என்டு. அவளுக்கு சாமத்தியவீடு செய்துபார்க்காமல் நான் உயிரோடை இருந்து என்னத்திற்கு…? அதோடை நான் கொடுத்து வைத்த காசு, நகை எல்லாம் வாங்கவெல்லே வேணும்….’ என்று அலுத்துக்கொண்டாள் வனஜா.

சிந்து எரிச்சலுடன் மௌனமாய் இருந்தாள். வனஜா தொடந்தாள்.

‘கழிப்புக் கழிக்காவிட்டால் ‘பே’ பிடித்தால் பின்பு நான் என்ன செய்ய?..’ தான் சாமத்திவீடு செய்வது சரி என்பதை நியாயப்படுத்துவதில் தான் குறியாக இருந்தாள்…

‘காசுப்பே’ பிடித்தது உண்மையில் வனஜாவிற்குத்தான் என சிந்து மனதிற்குள் எண்ணியபடி வனஜாவோடு தொடர்ந்து பழகுவதில் கவனமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

தான் நினைத்தது போல் ஆடம்பரமாக ‘சாமத்தியவீடு’ செய்து முடித்தாள் வனஜா…

மிகவும் பிரபல்யமான மண்டபம், அழகான மணவறை, மண்டப அலங்காரம், விலை அதிகமும் ‘ருசி’ அதிகமுமான பலகாரம், மதியபோசனம், மிகப்பிந்திய நாகரீகத்தில் புடவை, தலை அலங்கார நிபுனர்கள் மூலம் தேவலோகரம்பை போல் சத்தியா வெளிக்கிடுத்தி நகைக்கடைப்பொம்மை போல் நகைகளை அடுக்கி, டிஜிற்றல் வீடியோ, டிஜிற்றல் கமராவில் புகைப்படங்கள் என சாமாத்தியவீடு தடல் புடலாக முடிந்தது.

சாமத்தியவீடு நடந்ததால் பொருட்களாகவும், சரீர உதவியாலும், மனதாலும் சங்கடப்பட்டது சிந்துவும் சபாவும் தான். சாமத்தியவீட்டிற்கு முதல் நாள் இரவு சிந்து வீட்டு சாப்பாட்டறை தொடக்கம் வரவேற்பறை வரை வனஜாவின் உறவினர் தங்கினர். ஊரில் கிணற்றில் அள்ளிக் குளித்துவிட்டு வெளிக்கிடுவது போல் இலண்டனில் கடும்குளிரில் செய்ய முடியாது தானே?… சாதாரண நாட்களில் சுடுநீர்க்குளியல் முடித்து வெளிக்கிடுவது பெரும்பாடு…
சாமத்தியவீடு அன்று அவ்வளவு பேரும் குளித்து வெளிக்கிட்டு மண்டபம் போகவே போதும் என்றாகிவிட்டது.

அத்துடன் வனஜாவின் சாமத்தியவீட்டின் பின்பு சிந்துவுக்கும் சபாவிற்கும் இன்னொரு பயமும் தொற்றிக்கொண்டது. தங்களது எட்டுவயது மகளும் தனக்கும் இப்படிச் சாமத்திய வீடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால்….??

தொலைபேசி ஒலித்தது…

மறுமுனையில் வனஜா….

‘அக்கா ஆயிரம்பேரை சாமத்தியவீட்டிற்கு எதிர்பார்த்தோம்…. ஆனால் வந்தது ஜநூறுக்குக் கிட்டத்தான். அதனால் சாப்பாடுகளும் மிஞ்சிவிட்டது. காசும் நட்டமாகிவிட்டது. ஆறாயிரம் பவுண்ஸ் வரையில் செலவாகியது. ஆனால் சேர்ந்தது காசு, நகையாக மூவாயிரம் பவுண்ஸ் வரைதான்…’ தொடர்ந்து வராமல்விட்டவர்களுக்கும், தான் கூட கொடுத்து கொஞ்சம் போட்டுவிட்டுப்போனவர்களுக்கும் திட்டுவது தொடர்ந்தது……….?’

சிந்துவுக்கு வனஜாவும், சந்திரனும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நிற்பது போல் தெரிந்தது…

சிந்துவின் மகன் பழைய சாறி ஒன்றை பிழையாகத் தனக்குச் சுற்றிக்கொண்டு அப்பா இப்படித்தான் அக்காவின்ரை சாமத்தியவீட்டிற்கு அக்கா நடந்து வருவா என அன்ன நடை நடந்துகாட்டினான்…?

சபாவும் உண்மையாகவே தலையில் துவாய்த் துண்டைப் போட்டுக்கொண்டான்…சிந்து விக்கித்து நின்றாள்…

– 05.03.2007

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)