கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 3,619 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்ன வயதின் விளையாட்டு ஒன்று இப்போது ஞாபகம் வந்தது.

“தட்டாமாலை தாமரைப் பூ
தட்டாமாலை தாமரைப் பூ
சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பூ -“

தலையின் தனிக் கிறுகிறுப்பில் அவனைச் சுற்றி இருந்தவையும் இருந்தவரும் பொங்கி வடியும் அலைபோல் மேலும் கீழும் மிதந்து ஆடினர்.

அவன் சிநேகிதர்கள் கூத்தும் கொம்மாளமும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்ட்டி’ ஒரு தினுசான கட்டத்துக்கு வந்து விட்டது. வாயிலிருந்து வார்த்தைகளில் உப்புப் புளி இருக்காது. இதற்கா இவ்வளவு சிரித்தோம் என்று வெட்கமாய்க்கூட இருக்கும். ஆனால் இப்போதோ –

“என்னாப்பா , மிஸஸ்ஸைக் கூப்பிடூப்பா! கட்டிண்ட வுடனே அடுப்பங்கரையில் பூந்தூட்டாங்களா?”

இதுக்கு ஒரு அவுட்டுச் சிரிப்பு.

“அவங்க ஜாதியிலேயே அதானே ஒரு நியூஸென்ஸ்!” உடனே ஒரு கொக்கரிப்பு.

இதற்குள் ஒருவன் ஆக்ஷேபிப்பது போல், “நல்லா இருக்கையா! நம்ம எல்லாம் என்ன வேற்று மனுசங்களா? ஆபீஸ்தானே?”

“யாருக்கு”

“ரெண்டு பேருக்குந்தான் சொல்றேன்”

“எப்பவும் அப்படியே இருக்குமா? இனிமே ‘மிஸஸ், ஆபிஸுக்கு வருவாங்களா?”

“ஏன், ரெண்டு பேருமா சம்பாதிச்சா நோவுமா?”

“இதென்ன, கல்யாணமா, கூட்டு வியாபாரமா?”

ஒரே ஆரவாரம். இம்மாதிரிப் பேச்சு வாய்க்கு வாய் பந்தாடியவண்ணமிருந்தது. அவன் வாயில் சிரிப்புக் கலையவில்லை; கழுத்தில் கட்டிய டை’, நெற்றியிலிட்ட பொட்டு மாதிரி , வாய்க்குத் தரித்த அணியாகப் பதிந்து. போயிருந்தது.

“தட்டாமாலை தாமரைப் பூ, சுற்றிச் சுற்றி …”

அப்புறம் எல்லாம் முடிந்து அவன் சிநேகிதர்கள் ஒவ்வொருவராக வந்து செலவு பெற்றுக்கொள்ளும் முறையில் கையைப் பிசைகிறார்கள்.

“ரொம்ப நேரமாய்ப் போச்சு. சந்தோஷமாய்ப் போச்சப்பா -“

“பாதம் கீர் ஏ ஒன்!”

“அட, எது சோடையாயிருந்தது? ரஸம் -?”

“சரி சரி, இவன் வாயிலே புனல் வெச்சு இன்னும் ரெண்டு அண்டா கொண்டு வந்து ஊத்தடா -“

“போயிட்டு வரோம். நீயும் மிஸஸ்ஸும் ரொம்ப நாள் சௌக்கியமாய் இருக்கணும். Good Luck!”

எல்லோரும் போக இன்னும் ஒருத்தன் தான் பாக்கி அப்பா! மழை பெய்து விட்டாற்போல்…

“சரி, ஒரு வகையாக எல்லாம் முடிந்தது!”

“ஆரம்பித்தது என்று சொல்லு!”

அவன் நண்பன் சிரித்தான். “வாஸ்தவந்தான். ஆரம்பித்ததா?”

“ஏதோ உன் புண்ணியத்திலே -“

“என்னிடம் என்ன இருக்கிறது? உங்களிருவர் எண்ணத்திலேயும் என்று சொல்லு புண்ணிய பாவம் முக்கியமில்லை. எண்ணம்தான் முக்கியம்”.

“அதுவும் சரி.”

“இருந்தாலும் எல்லோரும் சட்டென்று செய்யாத காரியத்தை செய்து விட்டாய். நீ தைரியசாலிதான். நான் என்னவோன்னு நினச்சேன்.” அவன் நண்பனின் புகழ்ச்சி குளிர்ச்சியாய் இருந்தது. மனம் பெருமிதம் கொண்டது.

நான் யாருக்கப்பா பயப்படணும்? என்னை குற்றஞ் சொல்ல சுற்றுமுற்று எந்த உறவு தட்டுக் கெட்டுப் போச்சு? அத்தோடு இந்தக் காலத்தில் இது அதிசயமா?”

“அதுவும் சரிதான், இது மாதிரி நோக்கங்கள் இருப்பதும்.”

“நோக்கங்கள் மாத்திரம் இருந்து என்ன பிரயோ சனம். காரியத்தில் காண்பிக்காமல்?”

அவன் நண்பன் புன்னகை புரிந்தான்.

“நோக்கம் வேறு. காரியம் வேறு. இன்னும் பார்த்தால் ஒன்றுக்கொன்று சம்பந்தங் கூட இல்லை என்று சொல்வேன்.”

“அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய்?”

“இப்போ என்ன அதைப்பற்றி? ரொம்ப நேரமாய் விட்டது. பஸ் கூட அகப்படாது என்று நினைக்கிறேன். கால் நடைதான். நாளைக்கு என்ன , ஆபீஸ் மட்டமா?”

“இல்லை இல்லை -“

வாசற்கதவைத் தாளிட்டு கூடத்துக்கு வந்தான். தண்பர்கள் அவனுக்கு அளித்த பரிசுகள் மேஜைமீது கொலுவிருந்தன. அவைகளைச் சிந்தித்தபடி சற்று நேரம் நின்றான். ஒன்றிரண்டில், அளித்தவனின் குறும்பு மிளிர்ந்தது.

சந்நேக ரஸம் தட்டு ஒன்றிரண்டு புத்தகங்கள். ஒரு ‘க்ளாக்ஸோ ‘ பீடர் புட்டி வெள்ளித் தகடு அடித்த சங்குப் பாலாடை இப்பவே!

ஒவ்வொன்றாய்க் கண் பாய்கையில் ஒரு வெள்ளிக் கிண்ணம் கவனம் கவர்த்தது. கையில் எடுத்தான். நல்ல கனம். அடியில் பாதம் வைத்து, விளிம்பில் எதிருக்கெதிர் இரண்டு வாய்கள். வெளிப்பக்கத்தில் நல்ல வேலைப்பாடு கள். வாயில் ஊன்றிப் போன சிரிப்பு மாறாது, அதைக் கையில் எடுத்துக்கொண்டு மாடியேறினான்.

ஜன்னல் கம்பிகளின் மேல் சாய்ந்து ஜன்னலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். அவன் அரவம் கேட்டு, முகம் திரும்பி அவனைக் கண்டு மலர்ந்த புன்னகையில் யோசனை தயங்கிற்று.

மேஜை மேல் கிண்ணத்தை வைத்து விட்டு அவளிடம் வந்தான். அவன் முகத்தைச் சிரிப்பு இன்னமும் அழுந்த உழுதது. அவள் மௌனமும் முறுவலும் கலையாது எழுந்து நின்றாள்.

“எப்படி இருக்கிறது?” அர்த்தமற்ற அசட்டுக் கேள்வி யைக் கேட்ட பிறகுதான் தெரிந்தது, எவ்வளவு அர்த்த மற்ற அசட்டுத்தனமானது என்று. அதை மறைக்க. மேஜையண்டை போய், அதில் எரிந்து கொண்டிருந்த ஊதுவத்தியின் தணல் மேல் சாம்பலைத் தட்டினான். உடனே அவன் கையோடு கொண்டு வந்த கிண்ணம் பார்வையை ஈர்த்து, கூஜாவிலிருந்த பாலை அதில் விளிம்பு கட்ட ஊற்றினான்.

“இங்கே வா.”

அசைந்தாடி அவனை நோக்கி வந்தாள். மேஜை ‘யொட்டிச் சாய்ந்தாற்போல் உட்கார்ந்து இடுப்பில் ஒரு கையை ஊன்றி இன்னொரு கையால் கிண்ணத்தின் செதுக்கல்களை வருடினாள். இன்னமும் ஏதோ யோசனை யில் தான் இருந்தாள்.

“நன்றாயில்லை?”

ஆமெனத் தலை ஆட்டினாள்.

“எதிரும் புதிருமாய் இரண்டு மூக்குகள் ஒரே சமயத்தில் எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று -“

அவன் முகம் சிவந்தது; “போதுமே -!”

“நான் விளையாடவில்லை – ” உணர்ச்சிப் பெருக்கில் அவன் முகம் சிவந்தது “புரியவில்லையா? வாழ்க்கையின் கோப்பையிலிருந்து ஸ்திரியும் புருஷனும் ஒரே சமயத்தில் பருக…”

பேசிக் கொண்டிருக்கையிலேயே தொடர் மறைந்தது, அவள் முகத்தில் கவிந்த சிந்தனையைப் பார்த்ததும்; ஏன், இருவருமே இதற்கு முன்னரே வாழ்க்கையின் கோப்பை யில் பருகியவர்தானே! அதே எண்ணம் அவளுக்கும் தோன்றி விட்டது என அவள் முகத்தை மின் வெட்டிய சுளிப்பில் அறிந்தான். தன் அசம்பாவிதத்தை உடனே உணர்ந்தான். அதை மறைக்க, அவளைத் தழுவினான். அவன் அணைப்பில் அவள் உடல் குலுங்கிற்று. ஒரு விம்மல் கிளம்பிற்று.

“சே, சே, இப்போ என்ன நேர்ந்து விட்டது?”

“ஒண்ணுமில்லை – ” என்று விக்கினாள்.

வெள்ளப் பெருக்கில், மேல் அடித்துக் கொண்டு வரும் குப்பைக் கூளம் போல், மனம் கரைந்து ஓடுகையில், வாயில் என்ன வார்த்தைகள் தாம் வந்தன தெரியவில்லை.

“என் மனைவியே – “

“இல்லை இல்லை -” பதறி, அவன் பிடியினின்று விடுவித்துக் கொண்டு எட்ட நின்றாள். அவள் முகம் வெளுத்தது.

“என்ன இல்லை?”

“ஒன்றுமில்லை; என்னை பேரிட்டே கூப்பிடுங்கள்.”

எட்ட எட்ட, ஒருவரை ஒருவர் பார்த்துப் பதுங்கி நிற்கும் நிலை அவனால் சகிக்க முடியவில்லை. தலை கிறுகிறுத்தது.

“தட்டாமாலை தாமரைப்பூ
சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பு
கிட்ட வந்தால் குட்டுவேன்
எட்டப் போனால் துப்புவேன்.”

மறு நாள் ஆபிஸுக்குப் போய் தன் இடத்தில் அமர்ந்தான். எதிரே தான் அவள் ”ஸீட்’ காலியாக இருந்தது. இன்றிலிருந்தே காலிதான், அந்த இடத்துக்கு வேறு யாரையேனும் வைக்கும் வரை.

பள்ளிக்கூடத்துச் சிறுமி போல், தலையை ஒரு பக்க… மாகச் சாய்த்துக் கவிழ்ந்தபடி அவள் வேலை செய்யும் உருவம் நினைவுபடுத்திக் கொள்கையில் சிரிப்பு வந்தது.

ஒரு நாளும் ஆபிஸுக்கு அவள் நேரத்தில் வந்ததில்லை. ஐந்து நிமிஷமாவது தாமதித்து தான் வருவாள். அப்பழக்கத்தை அவனால் குணப்படுத்த முடியவில்லை. வந்த புதிதில் அவளிடம் இதைப்பற்றிச் சுறுசுறுப்பாய்த் தான் பேச நேர்ந்தது. எதிர் வார்த்தையே பேசாது, சமாதானமும் செல்லாது. கண்ணீருங் கம்பலையுமாக அவள் நின்ற காட்சி இப்போது கண்முன் நின்றது. வெள்ளை மேலாக்கியின் ஓரத்தில் மசிக்கரை. அப்புறம் அவள் நேரம் கழித்து வருவதற்கு தானே அவளை மன்னிப்புக் கோரும் தினுசில் சமாதானப்படுத்துவதே பாடாகி விட்டது.

“பொம்மனாட்டிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று சொன்னாலும் நம் முதலாளிகள் கேட்க மாட்டேன் என்கிறான்கள். இவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், இவர்களை ஒன்றும் சொல்லவும் முடியாது.

அப்போது அவனுக்கு அப்படித் தோன்றினாலும், அவளை அலுத்துக் கொள்ளும்படி நேரவில்லை. அவள் வேலை சுத்தம்தான். இருக்கும் வரை இடத்தைவிட்டு நகராமல், சாயங்காலம் மணி வேளைக்கு குடையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். சில சமயங்களில் தான் சிற்றுண்டி வரவழைத்துச் சாப்பிடுகையில் எதிரே அவள் உட்கார்ந்திருப்பதால் அவளுக்கும் வரவழைக்கும் படி நேரும் அப்போதும் ‘வேண்டாம்’ என்று வீண் ‘பிகு’ பண்ணிக்கொண்டதுமில்லை.

வேலை நேரம் தவிர, அவளை அங்கு, இங்கு, தெருவில் . சினிமாவில் என்று வேறு எங்கேனுமோ பார்த்த நினைவு இல்லை. ஏதோ வருவாள், வேலையை அமைதியாகக் கவனிப்பாள், போவாள்; அவ்வளவுதான் அவளைப்பற்றி அவனுக்குத் தெரியும். ஆனால் ஐந்து நிமிஷமோ, பத்து நிமிஷமோ, எப்பவும் ‘லேட்’.

ஒரு நாள், பஸ் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. டிராம் வண்டி நடுவழியில் நின்றுவிட்டது. இன்னொரு நாள், ஏதோ சின்ன எதிர்பாராத வேலை.

ஒரு நாள், இத்தனையும் சேர்ந்து இருக்கும், ”சரி. இன்னிக்கென்ன?” என்று சிரித்துக் கொண்டே கேட்பான். வேடிக்கையாய் சளைக்காமல் அவளும் ஏதாவது பதில் சொல்வாள். அம்மாதிரி சமயங்களில் அவள் முகத்தின் சிந்தனை குறைந்து அதில் இளமை கூடத் தோன்றும் சந்தோஷமாக இருக்கவே அஞ்சினாளோ?

ஆனால் அவளைப் பற்றி அவனுக்கு என்ன?

அப்புறம் ஒரு நாள் அவன் இடத்திற்கு வந்தாள். நேர்ப் பார்வையாக அவனைப் பார்க்காமல், மேஜைமேல் ஒரு பேனாக் கட்டையை நிற்க வைத்துக் கொண்டே:

“எனக்குப் பத்து நாள் லீவு வேணும், தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது. ஆபரேஷன் பண்ணிக் கொள்ளணும் என்று டாக்டர் சொல்கிறார். ஆஸ்பத்திரியில் பத்து நாளாவது இருக்கவேண்டி வருமாம்” என்றாள்.

லீவை வாங்கிக் கொடுத்தால் மட்டும் ஆகிவிட்டதா? மரியாதைக்கு ஒரு தரமேனும் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்க்க வேண்டாமா? அத்துடன் அவனுக்குந்தான் ஆபிஸ் விட்டதும் வெட்டி முடிக்கும் வேலைதான் என்ன இருக்கிறது? வீட்டில் எவள் காபியும் டிபனுமாய்க் காத்துக் கொண்டிருக்கிறாள்? எந்தக் குழந்தை ‘எனக்கு பிஸ்கோத்து வாங்கிண்டு வந்தையாப்பா?’ என்று காலைக் கட்டப்போகிறது?

அவள் லீவு எடுத்த இரண்டு நாட்களுக்கெல்லாம், ஆஸ்பத்ரி விலாசத்தை லீவு மனுவிலிருந்து தெரிந்து கொண்டு ஆபீஸ் விட்டதும் அவளைக் காணச் சென்றான். அவள் இருந்த ஸ்பெஷல் வார்டைக் கண்டு பிடிக்கவே நேரமாயிற்று. கடைசியாக அந்த அறையுள் நுழைகையில், அவளை அப்போதுதான் ‘ஆபரேஷன் வார்டி’ லிருந்து ‘ஸ்ட்ரெச்சர்’ வண்டியில் கொண்டு வந்திருந்தார்கள். மயக்க மருந்தின் போதை இன்னும் தெளியவில்லை. இரண்டொரு வேலைக்காரர்கள் அவளைச் சுற்றி நின்றிருந்தார்கள்.

அவனைப் பார்த்தும் அவர்களில் ஒருவன் “என்னாங்க? இவங்களை பார்க்கத்தானே வந்தீங்க? அப்படின்னா ஒரு கை கொடுங்க. என்ன மயங்றீங்க? இங்கே அதெல்லாம் பார்த்தா ஆவுங்களா? தலையையும் இடுப்பையும் சேர்த்தாப் போலப் பிடீங்க! தலையைத் தொங்கவிடாதீங்க… ஆ!… அப்படித்தான்!”

அவன் உதவியுடன், அவளைப் படுக்கையில் கிடத்தினார்கள். “இந்த ஐஸ்” தண்ணியை அப்போதைக் கப்போ ஒரு ஒரு ஸ்பூனாய் வாயிலே விடுங்க, நாக்கு, வறட்டாமே – நாங்க போறோம்!”

அவள் இன்னமும் கண் விழிக்கவில்லை. ஜலத்தை அவள் வாயுள் உட்ட முயன்றான். அரை மயக்கத்தில், “டாக்டர், டாக்டர்! ஊசியைப் போட்டுக் குத்தாதேயுங்களேன்” என்று தேம்பினாள்.

அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. காது, மூக்கு, கழுத்தில் இருந்தவையெல்லாம் கழற்றிவிட்டு, முகமும் வெளுத்து, வசமுமிழந்து இப்பொழுது அவள் கட்டிலில் கிடக்கும் நிலையில், அவளைவிட அபலை உண்டா ? ஜன்மத்தின் அகதிக்கே அடையாளமாய்.

அந்நிலைமை தூண்டியேதானோ, அவனாவே மறு நாளும் ஆஸ்பத்திரிக்குச் சென்றான். பலஹீனம் தெளியவில்லை; முகம் தெளிந்திருந்து கட்டிலில் சாய்ந்திருந்தாள். அவள் கண்கள் அவனை வரவேற்றன. தொண்டைப்புண் பேசவொட்டவில்லை. மடியில் ஒரு நோட்டுப் புத்தகமும் பென்சிலும் கிடந்தன.

நாற்காலியை நகர்த்திப் போட்டு அவளருகே உட்காந்தான். சுபாவத்திலேயே சற்று ஒட்டிய கன்னங்கள். ஆனாலும் முகத்தில் எடுப்பான நெற்றியிலிருந்து கீழிறங்கும் அவைகளின் தீர்மானமான கோடுகள் சிறப்பாயிருந்தன. கண் ரப்பை மயிர்கள் நீண்டு , நுனி சுருண்டு , விழிகளுக்கு ஒரு அழகுச் சோகத்தையும் கனவுப் பார்வையையும் அளித்தன. மூக்கு சற்று நீளம் தான். பற்கள் வரிசையாய்ப் பளீர் வெண்மையுடன் பிரகாசித்தன. இத்தனை நாள் பழகியும், இந்த வசீகரம் ஏன் இதுவரை புலப்படவில்லை? அதற்கு வெளிப்பட சமயம் சந்தர்ப்பம் இடம் எல்லாம் வேணும் போலும்! ஆபீசில் எல்லோரும் ஒரே யந்திரமாய் நகருகையில் என்ன தெரிகிறது? கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் , உணர்விருந்தும் கட்டையாய் …. புன்னகை யுடன் நோட்டுப் புத்தகத்தை அவனிடம் நீட்டினாள். அதில் ஏதோ எழுதி இருந்தது.

“நீங்கள் தானே நேற்று என்னைக் கட்டிலில் எடுத்துப் போட்டீர்கள்?”

அதைப் படித்ததும் அவனுக்கு அதிர்ச்சி கண்டது. ஏன் தெரியவில்லை. வாய் வார்த்தையாக அவள் கேட்டிருந்தால் கூட கேள்விக்கு அவ்வளவு வேகம் இருந்திருக்குமோ? ஆனால் எழுத்துப் பூர்வமாக அக்கேள்வி அவனை எட்டிப் பார்த்ததும் அது பல பூட்டுக்களின் ஒரு சாவி போல், பல கேள்விகளின் ஓர் உருவாய்த் திகழ்ந்தது. திடீரென்று அவனை சாட்சிக் கூண்டில் ஏற்றியது போல் ஒரு பயம் உண்டாயிற்று.

அவ்வினா நன்றி அறிவித்ததா? அல்லது கண்டித்ததா? அல்லது அவளை அவன் தொட்ட உரிமையை அறிய முயன்றதா? அல்லது அந்தக் காரியத்தின் சரிதத்தை ஆராய முனைந்ததா? இத்தனை அர்த்தங்களும், இதற்கப்பாலும், மனம் கண்டும் காணாதும் உணரும் கேள்விகளும் அவைகளுக்குப் பதில்களும் தன்னுள் அடக்கிய வினா.

அவனுள் கிளர்ந்த எழுச்சியை மடக்கவோ, தனக்குத் தானே அறிந்து கொள்ளக்கூட அவன் அறிவும் பலமும் பயன் அற்றுப்போயிற்று அவனையே தகர்த்துக் கொண்டு அவனுள் புரண்ட புரட்சி அவனுக்கே பயங்கரமாக இருந்தது. ஆயினும் அவனால் செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. இந்த வெள்ளத்துக்குமப்பால் உள்ளம் புலருவது போல் இன்னொரு உணர்வு.

அவள் கைகளை இறுகப் பற்றித் தன் கழுத்தைச் சுற்றி வைத்துக்கொண்டான். அவள் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அவள் விழிகள் திடீரென நிறைந்தன. இரு துளிகள் விழியோரம் திரண்டு உருண்டு, கன்னங்களில் வழிந்து, அவன் புறங்கை மேல் விழுந்து, விழுந்த இடத்தைச் சுட்டு எரித்தன.

அவனைப் பிடித்த வெறியும் சட்டென விட்டது. அவளைப் பிடித்த பிடி தளர்ந்தது. கீழே விழுந்த நோட்டுப் புத்தகத்தையும் அத்துடன் நூலோடு கட்டிய பென்சிலையும் குனிந்து எடுக்க முயன்றாள். அவன் எடுத்துக் கொடுத்தான். அவள் எழுதினாள்.

“நான் விதவை.”

அவனைக் கன்னத்தில் அறைந்தாற் போலிருந்தது. வெளித் தாழ்வாரத்தில் ஓர் ஆள் மணியை அடித்துக் கொண்டே கூவிக்கொண்டு போனான்.

“எல்லாரும் வெளியே போகலாம்.”

நம்மை நாம் சும்மா விடுவதேயில்லை. நம்மையே நாம் சுற்றிக் கொண்டேதான் இருப்போம். எத்தனை தடவை அடிப்பட்டுக் கீழே விழுந்து புரண்டாலும், மண்ணைத் தட்டிக்கொண்டு, மறுபடியும் எழுந்து கொண்டுதான் இருப்போம். நம்பிக்கை என்னும் சிறு பொறிக்கு அவ்வளவு வேகம்.

மிருகக்காட்சி சாலையில் மாலையில் இருவரும் ஒரு கல்பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். உட்கார்ந்த இடத்துக்கு அருகே, மடக்கி விட்டிருந்த ஜலத்தில், மரப்பாலத்தின் கமானுக்கு அடியில் ஓடங்கள் ஊர்ந்தன. கட்டடங்களின் தடங்கல்கள் இல்லாது வானவிசலாம் அங்கே கவிந் திருந்தது. இடமும் வேளையும் ஓசைகளும் இன்பமாய் இதமாக இழைந்தன

அருகே பாகன் யானையை நடத்திச் சென்றான். அதன் துதிக்கை ஒரு கணமேனும் சும்மா இல்லை. பூமியில் எதையாவது தேடிக்கொண்டே இருந்தது. ஒன்றுமே அகப்படாவிட்டாலும் ஒரு குத்து மண்ணையேனும் தன், மேல் இறைத்துக் கொண்டு சென்றது.

அவன் மெதுவாக அவளைப் பேரைச் சொல்லி அழைத்தான். அவள் மடிமேல் சேர்ந்திருந்த அவள் கைகளை அவன் கைகள் நாடின.

“நம் வாழ்க்கை நம்மிடந்தான் இருக்கிறது. எனக்கு உற்றார் உறவினர் குற்றம் சொல்வோர் ஒருவரும் இல்லை. உனக்கும் இல்லை. நீ எனக்குத் துணை, நான் உனக்குத் துணை. நமக்கு யாரால் ஆகவேண்டியது என்ன? நம். வாழ்க்கை நம்மிடந்தான், ஏன் சும்மா இருக்கிறாய்? ஏதாவது சொல்லேன்.”

அவள் கைகள் எழுந்து தவித்து செயலற்று மறுபடியும் மடியில் விழுந்தன. முகத்தில் வேதனை ஆடியது. அவன் குரலின் அவசரம் அவளுக்குச் சகிக்க முடியவில்லை.

“சொல்லேன் -“

அவள் ஒன்றுமே சொல்லவில்லை. பெருமூச்சு அவனிடமிருந்து கிளம்பியது, போராட்டத்தின் அசதி தாங்காது. அவள் முகம் அவன் தோள் மேல் சாய்ந்தது. அவன் அவளை அணைத்துக்கொண்டான், அந்தப் பக்கமாகச் சென்ற இருவர் அவர்களைப் பார்த்துவிட்டு, முழங்கையோடு முழங்கை இடித்துக் கொண்டு கிசுகிசு வென்று பேசிக்கொண்டு சென்றனர். பாலத்தின் இறக்கத்தி லிருந்து அவர்களின் கேலிச் சிரிப்பு எட்டிற்று. ஆயினும் அவன் சட்டை செய்யவில்லை.

“நம் வாழ்க்கை நம்மிடந்தான் இருக்கிறது.”

இராச் சாப்பாட்டுக்குப் பின் இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தனர். இரவின் அமைதியில் வாடைக் காற்றின் குளுமை கலந்தது. மௌனம் தனி இன்பமாக இருந்தது.

அவள், “நேற்று இரவு நடந்ததை நீங்கள் மன்னித்து விடவேண்டும்” என்றாள்.

“இப்போ என்ன அதுபற்றி?”

“உங்களை நான் விரும்பவில்லை என்று நினைக்க வேண்டாம்.”

“சே!” அவள் தன் உள்ளுணர்ச்சிகளை அப்படி வெளிப்படுத்துகையில் அவனுக்கு உடல் குறுகுறுத்தது.

“இதுமாதிரி நான் விட்டுப் பேசுவதால், நான் வெட்கம் கெட்டவள் என்று நினைக்கறேளா?”

“நமக்குள் என்ன வெட்கம்?”

பேச்சின் போக்கிலேயே, நாடகத்தில் போல் ஒரு பொய்மை நடுநூல் ஓடுவது தெரிந்தது. அவர்களை அறியாமலே அது புகுந்தது ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் அவர்களிடையில் ஏதோ ஒரு வெட்கம் இல்லாமல் இல்லை. அதை ஒருவருக்கு ஒருவர் மறுத்துக் கொள்வதிலேயே அது இன்னும் ஊர்ஜிதமாயிற்று, ஆயிரம் கட்டுக் கட்டினாலும் ஒடிந்த உறுப்பிலிருந்து முண்டி நிற்கும் எலும்பு போல்.

“இம்மாதிரி நீங்கள் சொல்வது எனக்கு எவ்வளவு தைரியமாயும் சந்தோஷமாயும் இருக்கிறது தெரியுமா?”

“எனக்கும் அப்படித்தான் -” அடுத்த நிமிஷமே அவனுக்குத் தன் நாக்கைத் துண்டித்துக் கொள்ளலாம் போல் இருந்தது. ஏனோ தெரியவில்லை, சில எண்ணங்கள் மனத்துள் அடங்கியிருக்கும் வரை உருவாயிருக்கின்றன. பேச்சாய் வெளிவந்ததும் கொப்புளம் உடைவதுபோல் உருவெடித்துப் போய் விடுகின்றன.

“க்றீக் க்றீக்” ஒரு பாச்சை சப்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கரும்பலகையில் ஆணியால் கிழிப்பது போல் வேதனையாக இருந்தது.

‘எனக்கு நீ , உனக்கு நான்’ என்று வாய் சொல்கிறது. ஆனால் மனம் ஏன் நம்பமாட்டேன் என்கிறது? ‘ யாருக்கு யார்?’ என்று ஏன் மறுப்புக் கேள்வி போடுகிறது? ஒரே இடத்திலிருந்து வரும் இந்த இரட்டைப் பேச்சுத்தான் ஆளைப் பைத்தியமடிக்கிறது.

அப்புறம் பேச்சு ஓடவில்லை. “நேரமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே உடம்பில் இல்லாத சோம்பலை முடித்துக்கொண்டு எழுந்தான். வேஷம் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சம் போலும்!

இருவரும் மாடியேறுகையில், சாமான்கள் அவைகளின் வழக்கமான அலங்கோலத்தில் இல்லாது ஒழுங்குபட்டிருப்பது கண்டான்.

“ஒ, மத்தியானமெல்லாம் வேலையாத்தான் இருந்திருக்கிறாய்!”

அவன் முகம் மலர்ந்தது.

ஆம், ஒரு பெண்பிள்ளை வீட்டில் இருந்தால் எவ்வளவு இதவாயிருக்கிறது!

சுத்தத்திற்கே ஓர் அழகு அது அது அதன் அதன் இடத்தில் அதுவே சத்தியத்தின் ஒரு கோட்பாடு. சாமான் களைச் சரியாக வைப்பதில் இவ்வளவு இடம் கூடி வருவதால் இன்னும் நாலைந்து நாற்காலிகள் வாங்கலாம். இப்படித் தாறுமாறாய்க் கிடக்கும் புத்தகங்களை அடுக்க ஒரு ஷெல்ப், இன்னமும் சில புத்தகங்கள் –

“இது என்ன?”

அவள் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண் டிருந்தாள். அதனுள்ளிருந்து ஒரு படம் நழுவிக் கீழே விழுந்தது. இருவரும் அதை எடுக்கக் குனிந்து முட்டிக் கொண்டனர். அவன் கையில் தான் அது அகப்பட்டது. அது என்ன என்று அவனுக்கு அப்போதே தெரிந்து விட்டது.

ஒரு புகைப்படம். காயிதப்பூவைத்த ஒரு மேஜை விளிம்பைப் பிடித்து நின்று கொண்டு ஒரு ஸ்திரி புன் முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தாள். கண்களில் ஒரு தனி அசதி, உடலிலேயே நீர் வைத்தாற்போல் ஒரு சிறு ஊதல். கர்ப்பிணி.

“யாரது?”

மனமில்லாத பதில் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டது.

“என் மனைவி.”

“ஓ!”

அவர்களிடையில் தேங்கிய மௌனத்தில் ஸ்புடமானாற் போல அந்தப் படம், அவனுக்குக் கையில் ஏந்திய தணல் போலாகிவிட்டது அதை வைக்க இடம் கிடைக்காது தவித்தான். கடைசியில், அங்கு மாட்டியிருந்த கோட்டுப் பையுள் திணித்தான். அவன் உள்ளங்கையில் வேர்வை பிசுபிசுத்தது. அந்தச் சமயம் அவன் முதல் மனைவியை எவ்வளவு பயங்கரமாக வெறுத்தான்!

அவள் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். ஆயினும் அவளுடைய வெறிச்சிட்ட நோக்கிலேயே தெரிந்தது. அவளுக்கு ஒரு எழுத்தில் கூடக் கவனம் அழுந்த வில்லை. ஆயினும் மனத்தின் அவஸ்தையை மறைக்க செயல் அவசியமாயிருக்கிறதே! அவன் போய் ஜன்னலண்டை நின்றான்.

“என்ன ஒரு மாதிரியாயிருக்கிறாய்?”

“யார்? நானா?”

அவனுக்கு மூச்சு சற்றுத் திணறிற்று.

“அவள், என் சென்று போன வாழ்க்கையின் அம்சம், நாங்கள் கல்யாணமாகி ஒரு வருஷங் கூடச் சரியாக சேர்ந்து வாழவில்லை. இருந்த வரையில் சதா ஏதாவது நோய், பாதி நாள் அது உடம்பு இது உடம்பு என்று பிறந்த வீட்டுக்குப் போய் விடுவாள். கடைசியில் பிரசவக் கோளாறில் இறந்து போனாள். அந்தக் குழந்தையும் தங்கவில்லை. அவள் நினைவே, எனக்கு இரவு கண்டு, காலையில் சொல்ல மறந்து போகும் கனவு போல் இருக்க கிறது. அதனால் தான் நான் இதுவரை உன்னிடம் கூடச் சொல்லவில்லை.”

அவன் ஒன்றும் பதில் பேசவில்லை . அவசரமாகச் சொல்லிக் கொண்டே போனான்.

“நான் அவளைப் பற்றிச் சொல்லத்தான் என்ன இருக் கிறது? அவளைப் பற்றித்தான் நாம் பேசுவானேன்? அவள் இறந்த காலம் நமக்கு இப்பொழுது நிகழும் நிமிஷம் இருக்க கிறது; நம்முடைய எதிர்காலம், நம்முடைய ராஜ்யம். அவளைப் பற்றி நமக்கென்ன?”

மறுபடி மௌனம் இருவரிடையிலும் திரையிறங்கிற்று.

“எனக்குத் தூக்கம் வருகிறது” என்று சொல்லிக் கொண்டே அவள் நழுவினாள்.

“இதுதானா உன் பதில்?”

“நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? முதல் தாரம் இறந்து மறுதாரம் கொள்வது புதிதா? முதல் தாரம் இருக்கையிலேயே இளையாள் பண்ணிக் கொள்வது உண்டே!”

அவள் பதில் அவனுக்கு நிம்மதியை அளிக்கவில்லை. அவள் போன பிறகு வெகுநேரம் அங்கேயே உலாவினான்… மனம் தவித்தது.

திடீரென ஒரு பெரும் சீற்றம் அவனைப் பிடித்துக் கொண்டது. கோட்டுப் பையிலிருந்து போட்டோவை எடுத்துச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தான்.

தெருச்சத்தம் ஓய்ந்து விட்டது. விளக்குக் கம்பங்கள், மௌன சாட்சிகள் போல் வரிசையாக நின்றன. எதற்கு?

திடீரென்று – மிகவும் புழுக்கமாக இருந்தது. அடேயப்பா! இப்படி வெந்தால், இது மழைக்குத்தான் அறிகுறி.

இப்போது தூங்கியிருப்பாளா? தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு எப்படிப் படுத்துக் கொண்டிருப்பாள்? தன்னந்தனியாக, அநாதை மாதிரி; இருளில் தட்டித் தடவிக் கொண்டு படுக்கையறையுள் சென்றான்.

மெதுவாகப் பெயரைக் கூப்பிட்டு அவளைத் தொட்டான். “ஓ, நீங்களா?” அவள் குரலில் துளிக் கூடத் தூக்கமில்லை.அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டியணைத்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்? அன்பு இருக்கிறது. ஒருவரை ஒருவர் நம்பியிருக்கிறோம். ஆனால் ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் இருக்க முடிய வில்லை. இப்படி உடலோடு உடல் குழைந்தும் உள்ளத்துக்கு உள்ளம் ஏன் தொடக் கூட முடியாது தவிக்கிறோம்?

திடீரெனப் புழுதிக் காற்று கிளம்பி இன்னல் கதவுகள் படபடவென அடித்துக் கொண்டன; காற்றில் மண் வாசனை, கூடத்திலிருந்து குப்பை பறந்து வந்து முகத்தில் மோதியது ஜன்னலுக்கு வெளியே மின்னல் படபடத்தது. எங்கேயோ மழை பெய்கிறது. எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது?

அவள் முகத்தைப் பார்க்க வேண்டும்; அடக்க முடியாத அவா அவனைத் தூண்டிற்று. மேஜையண்டை போய், நெருப்புக் குச்சியைக் கிளித்து விளக்கை ஏற்றினான். அவள் படுக்கையில் சாய்ந்தபடி சிரித்துக் கொண் டிருந்தாள். வெகு அழகாக இருந்தாள். அவளண்டை சென்றான். அவன் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு. கடிதாசுத் துண்டை எடுத்தாள். காற்றில் அலைந்து வந்த குப்பை. அதை உற்று நோக்கியதும், அச்சத்தில் அவள் புருவங்கள் நெரிந்தன.

அவளிடமிருந்து வாங்கினான். ஒரு கண், ஒரே கண். அசதியுடன் சிரிக்க முயன்று கொண்டிருக்கும் ஒரு கண் அவனை நோக்கியது. அவன் மனைவியின் புகைப் படத்தைக் கிழித்த சுக்கல்களில் ஒன்று. விடாத சாபம் போல் ஏன் இப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறாள்?

இவள் படத்தைக் கிழித்தெறிந்ததால் இவளை அழித்தேனோ? ஏன் இவள் கண் இப்படி எங்களைக் காவல் காக்கிறது? இவளுக்கே என்ன, செத்தபின் தான் உயிரா?

இன்று எல்லாமே ஏன் சதி செய்கிறது? தப்பைத் தவிர வேறு எதுவுமே நம்மால் செய்வதற்கு இல்லையா?

காலை வருகிறது. தூக்கத்தினின்று விழிக்கவில்லை. படுக்கையினின்று எழுகிறேன். ஒரே கூட்டில் அடைத்த விலங்குகள் போல் ஒருவரை ஒருவர் சுற்றி வருகிறோம். அவரவர் சிந்தனையில் அவரவர்மூழ்கியபடி, பண்ணினதையே பண்ணிக்கொண்டு, எண்ணினதையே எண்ணிக்கொண்டு, நினைத்துக் கொள்கிறோம், என்னவோ ஒரொரு தடவையும் புதியதாய் உண்டாக்கு வதாய். ஆனால் எதிருக்கெதிர் இரு நிலைக்கண்ணாடி களை வைத்து விட்டு அவற்றில் உள்ளுக்குள் உள்ளாய்த் தெரியும் எண்ணற்ற பிம்பங்கள் போல் தான், நம்முடையம் எல்லையற்ற புதுமைகளும்!

இதோ வேலைக்குப் போகும் வேளை வந்துவிட்டது. போகிறேன். வயிற்றுப் பிழைப்பில் மனம் முனைவதில் வீட்டுக் கவலையை மறக்க மாட்டேனோ?

வீட்டில் இப்போது அவள் என்ன செய்து கொண் டிருப்பாள்? என்னத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாள்? என்னைப்பற்றியா, என் மனைவியைப் பற்றியா? அல்லது …

இப்பொழுது என் புது வாழ்வில், இறந்து போனவள் ஏன் புகுகிறாள்? நான் இருப்பவளை விட்டு இறந்து போனவளை ஏன் நினைக்கிறேன்? அவள் எந்த விஷயத்தில் இவளைவிட உயர்ந்தவள்? மெய்ம்மறக்கும் நிலையில் வைக்கும் விஷயங்களைப்பற்றி அவளோடு பேசினால், ஏதாவது சம்பந்தமில்லாமல் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று முணுமுணுப்பாளே ! இறந்து போன பின்னர் அவளுக்கு என் மனத்தில் ஆடிக் கொண்டிருக்கும்படி என்னிடம் என்ன அவ்வளவு அக்கறை? ஒரு வேளை அவள் இறந்தபோது அவளை நான் அறியாமல்; இப்பொதுதான் எனக்குப் புரிந்து கொண்டிருக்கிறாளா?

இதோ மாலை வருகிறது. நான் வீடு போய்ச் சேர வேண்டும். இவள் முகத்தில் விழித்தாகவேண்டும். இவள் முகம் திருப்தியாக இல்லை. இன்றைய பொழுதை இவளும் என்போல் குருட்டுச் சிந்தனையில் தான் போக்கி யிருக்கிறாள். நான் என் மனைவியைப் பற்றி நினைப்பது போல் இவளும் தன் கணவனைப் பற்றிய நினைவுகளைப் பட்டுக் கொண்டிருந்திருப்பாள்.

ஆயினும், எப்படி, எதைக் கேட்க முடிகிறது? ஓயாமல் ஒருத்தருக்கொருத்தர் மௌனமாய்ப் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஒருவரை ஒருவர் விட்டுத் தனியாகவும் இருக்க முடியவில்லை. கிட்டவும் இருக்க முடியவில்லை.

தட்டாமாலை தாமரைப்பூ
கிட்டவந்தால் குட்டுவேன்
எட்டிப்போனால் துப்புவேன்

சொட்டுச் சொட்டென வண்டல், மனத்தில் சொட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு நாள் சட்டென அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. ஆபிசிலிருந்து சீக்கிரமே திரும்பி வந்து விட்டான். அவள் ஜன்னலண்டை முகத்திற்குக் கையை முட்டுக்கொடுத்து உட்காந்திருந்தாள். அவள் முகம் சோபையிழந்திருந்தது. அவன் கோட்டைக் கழற்றிக் கொண்டே, ‘சட் சட், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே” என்றான்.

“என்ன, சீக்கிரம் திரும்பிவிட்டீர்கள்? உடம்பு சுகந்தானே?”

வந்து கிட்ட உட்காந்தான்.

“பத்து நாள் லீவு போட்டுவிட்டேன். நாம் எங்கேயாவது வெளியூர் போய், குஷியாக இருந்து விட்டு வருவோம். வண்டி காடி சத்தமும் இந்தப் புழுதியும் புழுக்கமும் இல்லாமல் எங்கேயாவது கிராமாந்தரம் போவோம், மாற்று உடைக்கு ஒரு பெட்டி தவிர வேறே மூட்டை முடிச்சு வேண்டாம். நிம்மதியாக , இடமாற்ற மாக இருப்போம். என்ன?”

அவள் புன்னகை புரிந்தாள்.

அவர்கள் தீர்மானித்த இடம் போய்ச் சேருகையிலேயே அந்தி மந்தாரை பூத்துவிட்டது. இரவு வரப்போகும் மழைக்காக வானத்தில் மப்பு. வயற் பரப்புகளைத் தாண்டிக் கொண்டிருக்கையிலேயே கிராமத்தைச் சுற்றிய வாய்க்காலின் நெளிவு அழகாகத் தெரிந்தது.

ஓர் அம்மையார்ப் பாட்டி’ வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து அதில் தங்க ஏற்பாடாயிற்று. அதைக் குடிசை என்பதா வீடு என்பதா? ஒரு கூடம். ஓர் அறை. அவ்வளவு தான். கதவைத் திறந்து கொண்டு அறையுள் நுழைகையி லேயே உப்பு மண் தலைமேல் உதிர்ந்தது. சுவர்களில் மழை ஜலம் வருஷக்கணக்கில் வழிந்து, விசித்திரமான கறைகளை எழுதியிருந்தது. சுவரில் விட்டிருக்கும் ஓட்டை யொன்றை பாட்டி ஜன்னல் என்று காண்பித்து, காற்று பிய்த்துக்கொள்ளும் என்று சிபாரிசு செய்தாள். அதன்வழி நோக்குகையில் மாடுகள் மந்தையிலிருந்து கழுத்து மணிகள் கிண்கிணிக்க வந்து கொண்டிருந்தன.

தினப்படிக்குக் கையாளும் சாமான்களை அவன் பெட்டியிலிருந்து எடுத்து வைக்கயில் அதனுள் துணிகளுக்கு அடியில் கைக்கு ஏதோ கெட்டியாகத் தட்டுப்படுவதை உணர்ந்தான். எடுத்துப் பார்க்கையில் அவனுக்குப் பரிசாக வந்த இருமூக்குக் கிண்ணி என்ன ஆச்சரியம்! இது இங்கு பிரத்தியட்சமாவானேன்? ஆ. இப்போ ஞாபகம் வந்தது. எங்கேயாவது பத்திரப்படுத்துவதற்காகப் பயணப் பெட்டியில் வைத்துவிட்டு பயணம் நேரவே, பெட்டியுடன் அதுவும் வந்துவிட்டது. இதுவும் ஒரு சகுனந்தான். அதை எடுத்துத் துடைத்துப் பெட்டிமேல் வைத்தான்.

பாட்டி சாப்பிடுவதற்கு இட்ட தாமரை இலைக்கு முதற்கொண்டு, ‘பில்’ பண்ணினாள். ஆனால் அன்றிரவு குத்துவிளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்ட வற்றல் குழம்பும் கீரை மசியலும் தேவாம்ருதமாகத்தான் இருந்தன.

கிராமத்தில் ஊரோசை எவ்வளவு சுருக்க அடங்கிவிடு கிறது! சுவரில் விட்டிருக்கும் ஓட்டைவழி தெருவில் ராந்தல் கம்பத்தில் எரியும் முறை விளக்கு ‘மினுக் மினுக்’ கென்றது.

பாட்டி எப்பவோ சாமானையெல்லாம் ஒழித்துப் போட்டுவிட்டுக் கட்டையைக் கூடத்தில் நீட்டிவிட்டாள். வெகு சீக்கிரத்தில் ஒரு சிறு குறட்டை அவள் மூலையினின்று கிளம்பியது.

அவர்களுக்கு அவள் ஒரு சிறு அகல் விளக்கு கொடுத்திருந்தாள். ஆடும் சுடரில், அறையில் சுவரின் மேல் ஒரு மூலை ஒரு சமயம் இருண்டது. மறு சமயம், இருண்ட இடம் சற்று வெளிச்சமாயிற்று. பரணியில் எலிகள் பிராண்டி கீச்சிட்டன.

ஒரு மூலையில் நெற்குதிர். வெளியே, மேலே இடி குமுறியது. சப்தமே சப்திக்கச் சோம்பிற்று.

பட்டணத்துக்கும் இவ்விடத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த வேளையின் லாகிரியில், இப்படியே, மெழுகிய மண் தரையில் நாள் கணக்கில் எழுந்திராது படுத்திருக்கலாம் போலிருக்கிறது.

கூரைமேல் படபடவென்று மழை இறங்கிவிட்டது. கண்ணில் உறுத்தும் துரும்பை எண்ணெய் ஒதுக்குவது போல், அவனுள் அந்த மழை புகுந்து எதோ செய்தது. உள்ளம் நெகிழ்ந்தது.

இந்தச் சூழ்நிலை அவளையும் ஏதோ அவஸ்தைப் படுத்துவது அவள் முகத்தைப் பார்க்கையிலேயே தெரிந்தது. அவள் கண்களில் ஜலம் துளித்திருந்தது. உதடுகள் நடுங்கின. மனங்கள் ஒன்றை ஒன்று துணை நாடும் வேளை காணும் வேதனை இன்பத்தின் வேதனையா? வேதனையின் இன்பமா?

அவள் பெயர் அவன் வாயில் அசைந்ததுமே. அவளுக்குப் பஞ்சில் பொறி வைத்த மாதிரி ஆகிவிட்டது. ஒரு தாவு தாவி அவன் மார்மேல் விழுந்து கதறினாள். ஏன்? புரியவில்லை . ஆயினும் அவள் கண்ணீரில் அவன் மார்பு நனைகையில், எலும்பு உருகிற்று. அவளை இறுக. அணைத்து கொண்டான்.

திடீரென்று அவள் கண்கள் பயங்கரத்தில் வெறித்துச் சுழன்றன. ‘வீல்’ என அலறி, அவனிடமிருந்து உதறிக் கொண்ட வேகத்தில் பின்னுக்கு வீழ்ந்தாள். பயத்தில் அவள் முகத்தில் குழுமிய அவலக்ஷணம், அருவருப்பை விளைவித்தது. அவள் பார்வை சென்ற வழி அவன் நோக்கும் சென்று சுவரிலிருந்து எட்டிப் பார்க்கும் ஒரு முகத்தில் நிலைத்தது.

முகமென்றால் முகமில்லை. முகத்தின் பிண்டம். எண்ணற்ற தடவைகள், பல மழைகளின் ஜலம் வழிந்து, நாளடைவில் உருவான கறை, ஆயினும் அகலின் சுடர் குதிக்கையில் அது அமானுஷ்யமான ஜீவனுடன் அவர்களை யும் அவர்களுடைய காரியங்களையும் கவனித்துக் கொண் டிருந்தது. கண்கள் ஒருமுறை சிமிட்டின.

சீ, பிரமை! தூரத்தில் ரயிலின் ஊதல் காற்றில் மிதந்து வந்தது. அதைக் கேட்டதும் க்றீச்’ என்று மறுபடியும் அவள் கத்தினாள். நல்ல வேளையாகத் தெருவில் அடிக்கும் மழைக்காற்று அந்தக் கத்தலை அடித்துக் கொண்டு போயிற்று. கூடத்தில் பாட்டி முணகிப் புரண்டாள். மேலும் மேலும் பீறிட்டு வரும் பேய்க் கூச்சலை அடக்க, வாயில் முன்றானையைத் திணித்துக் கொண்டாள். பொறியில் மாட்டிக் கொண்ட எலிபோல், அவள் உடல் வெடவென உதறிற்று.

“என்ன இது?”

“இல்லை, என்னைத் தொடாதேயுங்கள் ! என்னிடம் வராதேயுங்கள் -” அவள் குரலின் தீர்மானமும் கட்டளை யும் கேட்டதும் அவனுக்கு ஆச்சரியமும் கோபமும் உண்டாயின. அச்சங்கூடக் கண்டது. என்ன புத்திக் கோளாறா? திடீர் திடீரென்று.

“சரி, உன்னைத் தொடவில்லை. படுத்துக்கொள் -“

“இல்லை, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.”

“நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்.”

“இல்லை, நாளைக்கு வேளை கிடையாது. நாம் இங்கு விட்டுப் போய் விடவேண்டும். எப்படியும் நான் போய் விடுவேன். நாம் பிரிந்து விடவேண்டும்.”

“என்ன உளறுகிறாய்! ஒரு புருஷன் பொறுமைக்கும் எல்லை இல்லையா?” அவன் பேச்சு அவள் காதில் ஏறவில்லை .

“இல்லை என் புருஷனைப் பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும் -“

அவன் புகைச்சிரிப்பு சிரித்தான். “நீ உன் புருஷனைப் பற்றியும், நான் என் மனைவியைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கும், பேசாத வேளைக்கு யோசனை பண்ணிக் கொண்டிருப்பதற்குந்தான் கல்யாணம் செய்து கொண்டோமா?”

“இல்லை. நீங்கள் என் கணவரைப்பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்போதே. ரொம்பவும் சுறுசுறுப்பான மனிதர். நின்ற இடத்தில் நிமிஷம் நிற்கமாட்டார். உடலில் எப்போதுமே துடி துடிப்பு. எல்லாமே அவருக்கு அவசரம். சாவதானத்தைச் சற்றுக் கூடப் பொறுக்க மாட்டார் . நானோ சுபாவத்திலேயே மெது. எப்படித்தான் இப்படி ஒருவருக்கு ஒருவர் வாய்த்தோமோ! தெருவில் நாங்கள் இருவரும் சேர்ந்து போனால், என்னால் சேர்ந்தே போக முடியாது. பின்னால் தங்கிவிடாமல் இருப்பதற்காக அவர் பக்கத்தில் ஓடிக் கொண்டேயிருப்பேன். அவர் நடையின் வீச்சும் வேகமும் அப்படி. எல்லாவற்றிலுமே அப்படித்தான். வாழ்க்கையில் அவர் நீந்திய வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. சதா திணறிக் கொண்டிருந்தேன்.

“எங்களிருவருக்கும் இவ்வளவு குணபேதங்கள் இருந்தும் என்னிடம் அவருக்கு வாஞ்சை அதிகம்.

“ஒரு நாள் மாலை அவர் ஆபீஸிலிருந்து திரும்பி வரவில்லை. எனக்கு அன்றைக்கு மறக்கவே முடியாது. அன்றைக்கு இரண்டு பேரும் சினிமா போவதாகப் பேச்சு. வேளையோடு சமைத்து வைத்து விட்டு, நான் வாரிப் பின்னி, உடுத்து, கண்ணுக்கு மையிட்டு, வெற்றிலையை வாயில் குதப்பிண்டு, அவர் வருகிற வரை பொழுது போக்குக்கு, பக்கத்து வீட்டுக் குழந்தையை வைத்துக் கொஞ்சிண்டிருந்தேன். அப்போ அவசர அவசரமாக ஆபீஸ் பியூன் சைக்கிளில் வந்து இறங்கினான். அவன் முகம் பார்க்கச் சகிக்கவில்லை.

“என்னடா?”

“அம்மா, ஐயர் வீடு திரும்ப எலெக்ட்ரிக் வண்டி பாஸானப்புறம் ஓடிப் பிடிச்சு கால் வழுக்கி, வண்டிக் கடியிலே பூட்டாரம்மா”

அவனுக்குப் பிடரி குறுகுறுத்தது. இறந்து போனவனின் ஆவியே, இப்போது அந்த அறைக்குள் வந்து அவனைத் தொட்ட மாதிரி இருந்தது. சாரல் அறைக்குள் கூட அடிக்க ஆரம்பித்து விட்டது. மண் தரையில் அங்கங்கு ஜலம் கசிந்தும் குழிகளில் தேங்கவும் தலைப்பட்டது.

“வீட்டுக்குக் கொண்டு வந்தது அவர் உடம்பில்லை. மாமிசப் பிண்டந்தான்.”

சுவரில் முகம் சிரித்தது.

அவன் அவளைப் பார்க்கக்கூட இல்லை. அவன் தலை. கொஞ்சம் கொஞ்சமாகத் தோள்களுக்கு இடையில் குனிந்து கவிழ்ந்தது. தோள்கள் குலுங்கின. அவள் அவனிடம் நகர்ந்து பரிவுடன் தலையைத் தன் தோள் மேல் சாத்திக் கொண்டாள்.

“என் அன்பே -” என்றாள்.

ஆனால் அவள் செய்கையிலும் வார்த்தையிலும் அவன் விரும்பிய அர்த்தம் காணவில்லை. அவள் தன் எல்லைகளை உணர்ந்து கொண்டபின், அந்த எல்லைகளுக்குள் அவன் மனக்கனம் குறைவதற்காகச் செய்யும் வெறும் உபசரிப்பு.

வெளியில் மழை நின்று விட்டது. தெருவில் சிறு சிறு அருவிகள் தெளிவாக தெருவிளக்கில் பளபளத்து ஓடிக் கொண்டிருந்தன.

– பச்சைக்கனவு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *