சரளா என்றொரு அக்கா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 14,758 
 
 

அலுவலக வேலையாக சென்னைக்கு போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது. “அப்படியே சரளாவைப் போய்ப் பார்த்துட்டு வா” என்று சொல்லி விட்டார்.

இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகிவிட்டேன். என்றாலும், பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச முடியாது. அப்பாவே இன்று வரை பேசியதில்லை. பெரியப்பா, கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர்.

அவர் என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்துவிடலாம். சரளாவைப் போய்ப் பார்ப்பது… மெத்தக் கடினம். மனசு கரித்தது.

பஸ்ஸில் ஏறி, ஓரத்து ஸீட்டில் உட்கார்ந்து கையசைத்த சமயத்திலும், “சரளாவைப் பார்த்து விட்டு வா” என்றார் மறக்காமல்.

“சரி” என்றேன்.

“அட்ரஸ் இருக்குல்ல..?”

“டைரியில்ல குறிச்சு வச்சுருக்கேன்.”

“நான் வரேன்…”

நடந்தார்.

பஸ்சும் புறப்பட்டது.

சாலையோர மரங்களைப் போல், மனசும் பின்னோக்கி ஓடியது…

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்டெல்லா டீச்சர் சர்ச்சுக்கு போன கையோடு வீட்டுக்கு வந்தார். அப்போது நான் பதின்மூன்று வயது பாலு.

“குட்மார்னிங், டீச்சர்.”

“உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். படிக்கிறியா, விளையாடறியா?”

“படிக்கிறேன் டீச்சர்.”

அதற்குள் உள்ளேயிருந்து சரளா வந்தாள்.

“வாங்க, டீச்சர்… உட்காருங்க.”

டீச்சரும் சரளாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.

“எங்கே டீச்சர் இவ்வளவு தூரம்?”

“சர்ச்சுக்கு போயிட்டு வரேன். வழியில உங்களைஎல்லாம் பார்த்துட்டுப் போகலாமேனு…”

“ரொம்ப சந்தோஷம் டீச்சர். ரவி எப்படி படிக்கிறான்?”

“உன் தம்பிகள்ல ரவி ஆவரேஜ்தான்! பாலுதான் இன்டலிஜென்ட்!”

“டீச்சர்… ஆக்சுவலா, ரவிதான் என் தம்பி. பாலு எங்க சித்தப்பாவோட பையன்.”

சரளாவின் அந்த பதில், என் மனதை அறைந்தது. டீச்சருக்கும் எப்படியோ இருந்திருக்க வேண்டும். வேறு விஷயங்களைப் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

திடீர் பிரேக்கில் அதிர்ந்து நின்றது பஸ். பின் மண்டை ஸீட்டில் மோதி வலித்தது. நிறைய பேர் என்னைப் போலவே இடித்துக் கொண்டார்கள். வலி தாங்க முடியாமல் மண்டையைத் தடவிக் கொண்டு அரற்றினார்கள். எனக்கு மண்டை மரத்துப் போய்விட்டது. அதுவும் சரளாவின் உபயம்தான்!

“டேய் ரவி, தட்டை ஒழுங்கா கழுவணும்டா. இதோ பாரு நீ கழுவின தட்டில சரியாவே பத்து போகலே…”

“உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போடா…”

ரவி சுத்த சோம்பேறி. சாப்பிட்ட தட்டைக்கூட சரியாக கழுவவில்லை. அதனால்தான் சொன்னேன். அதுகூட இப்போது என்றால் சொல்லியிருக்க மாட்டேன். சின்ன வயதின் பரபரப்பில் சொல்லிவிட்டேன். குடும்பத் தூணின் பிள்ளையென்பதை அவனும் அலட்சியமான பதிலில் நிரூபித்துவிட்டான்.

விஷயம் அதோடு நின்றிருந்தால்கூட பரவாயில்லை. எங்கள் பேச்சு சரளாவின் காதில் விழுந்துவிட்டது. உள்ளறையிலிருந்து வந்தாள்.

“டேய் பாலு, உன் தட்டைக் காட்டுடா…”

எனக்கு வியர்த்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.

“குடுடா…”

கையிலிருந்து தடலாடியாக பறித்து, இப்படியும் அப்படியுமாக திருப்பித் தேடினாள். கிடைத்துவிட்டது ஒற்றை பருக்கை.

“ஏண்டா, நீயே தட்டை ஒழுங்கா கழுவல. நீ என்னடா அவன் தப்பைக் கண்டுபிடிக்கறது?”

“இல்லேக்கா வந்து… வந்து… நான் ஒழுங்காதான் கழுவினேன். எப்படியோ ஒரே ஒரு…”

அவள் குட்டிய குட்டில் ‘ணங்’கென்று என் தலையில் இறங்கிய வலி, உடம்பு முழுவதும் உறுத்தியது. பேச்செல்லாம் நின்று போக, கண்ணே கரைந்து போக, அழுதேன் துளியும் சத்தமில்லாமல். சத்தம் போடக் கூடாதென்பது சரளாவின் கண்டிஷன். சத்தமாக அழுதால் நான் ஓயும்வரை அவள் ஓயாமல் குட்டுவாள்.

சரளா, வீட்டிலிருந்தவரை இளவரசி மாதிரி இருந்தவள். அவள் வைத்ததுதான் சட்டம். பெரியப்பாவின் பிரிய மகள் என்பதால், எவரும் எதிர்க்க மாட்டார்கள். தெருவையடைத்து பந்தல் போட்டுத்தான் அவள் திருமணம் நடந்தது. புகுந்த வீடு போன பிறகு, அவ்வப்போது வீட்டு விசேஷங்களில் பார்த்ததுதான்! படிப்பை முடித்து வேலைக்கு போனபிறகு குடும்பத்திலிருந்தே தனித்திருந்ததால் சரளாவைப் பார்க்க வேண்டிய துர்பாக்கியம் இதுவரை இல்லாமலிருந்தது. இப்போது ஏற்பட்டுவிட்டது.

சரளாவின் வீட்டை அடைந்தபோது வாசலில் நின்றிருந்த சரளாவின் நாத்தனார் என்னைப் பார்த்து விட்டு, சட்டென்று உள்ளே போனாள். உள்ளே நுழைந்தேன். நகரின் கட்டட நெரிசலில் குறுகிப்போன வீடு. அகலத்தில் ஒடுங்கி இருந்தது. நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த சரளாவின் மாமியார், கண்களுக்கு மேலே கையை வைத்து உற்றுப் பார்த்துக்கொண்டே, “யாரது?” என்றாள்.

“நான் பாலு?”

“பாலுனா?”

உறவை ஞாபகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் நான். உள்ளறையில் இருந்து தூக்கிச் செருகிய புடவையும் துடைத்துக் கொண்ட கையுமாக வந்தது… சரளாதான்! இளைத்து, அழகுமின்றி, கன்னத்தில் கவலைக் குழியுடன் இருந்தாள்.

சரளாவின் கணவர் கைநிறைய சம்பாதிக்கிறவர்தான்! என்றாலும்… பெரிய குடும்பி. தம்பி, தங்கைகள் என்று வாழ்க்கை யைப் பங்கு கொள்ள நிறைய பேர். எப்போதோ ஒருமுறை பெரியப்பா, ‘வசதி குறைவா இருந் தாலும் பரவாயில்லேனு பிக்கல் புடுங்கல் இல்லாத குடும்பமா பார்த்து சரளாவைக் கொடுத்திருக்கலாம்’ என்று நொந்து கொண்டது இப்போது நினைவு வந்தது.

“வா, பாலு…”

“யார் சரளா, இந்தத் தம்பி?”

“என் தம்பிதான் அத்தை… பாலு.”

“அடடே… இப்பத்தான் ஞாபகம் வருது. உங்க சித்தப்பா பிள்ளை இல்லே..?!”

அவள் அந்த கேள்விக்கு ‘ஆம்’ சொல்லவில்லை.

“உட்காருப்பா…”

உட்கார்ந்து கொண்டேன்.

“சரளா, தம்பிக்கு காபி கொண்டு வா…”

“பாலு காபி, டீயெல்லாம் சாப்பிடமாட்டான். ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.”

உள்ளே போய்விட்டாள்.

“ஊர்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று மாமி சம்பிரதாய விசாரணைகளைத் துவக்கினாள். ரோபோ மாதிரி எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன். மனசெல்லாம் அந்தக் கேள்விதான்.

சரளாவா இவள்… ‘என் தம்பிதான் அத்தை…. பாலு’ என்று சொல்பவள் சரளாவா? ‘ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்’ என்று பரபரப்பாகச் செல்பவள் சரளாவா?

“அண்ணி, அப்படியே எனக்கும் ஒரு ஹார்லிக்ஸ்…” என்று டி.வி. பார்த்துக்கொண்டே ஆர்டர் கொடுத்த அவள் நாத்தனார், “அண்ணி… எனக்கு ஒரு டீ…” என்று தன் பங்குக்கு கேட்டுவிட்டு, என்னிடம் ஒரு சம்பிரதாய ‘ஹலோ’ சொல்லிவிட்டு அமர்ந்த அவள் கொழுந்தனார், “சரளா… எனக்குகூட ஒரு சுக்குமல்லி காபி குடிச்சா தேவலாம் போல இருக்கு…” என்ற அவள் மாமியார்… அவள் ஹார்லிக்ஸ் போடச் சென்றிருக்கவே வேண்டாம் என்று சங்கடமானது எனக்கு. ஆனாலும், சில நிமிடங்களில் அவரவர் விரும்பியவற்றை அவரவரிடம் சேர்த்து விட்டு, என் அருகில் அமர்ந்தாள் சரளா.

“ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாடா..? எனக்கு கல்யாணமாகி இந்த ஒரு வருஷத்துல இப்போதான் நீ என் வீட்டுக்கு முதன் முதலா வர்ற. மதியம் சாப்பிட்டுதான் போகணும். உனக்குப் பிடிச்ச பருப்பு உருண்டை குழம்புதான் வச்சுருக்கேன். வைக்கும்போதுகூட உன் ஞாபகம் வந்துச்சு…” என்றாள்.

சாப்பிடும்போது இன்னும் ஏதேதோ பேசினாள். ஆனால், ஏனோ என் மனது

கனத்தது.

“போயிட்டு வர்றேன் அக்கா!”

– அங்கிருந்து கிளம்பியபோது என் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து வெளிப்பட்டன வார்த்தைகள்.

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *